Monday, March 26, 2018

" என்னங்க அருவியைக் காணோம்...." (@அமெரிக்கா.... கனடா 21)

பூட்டுப் பாலம் கடந்தால்,   லேண்டிங்  நம்ம ஹொட்டேல்:-)
அறைக்குள் போனதும்  ஜன்னலில் ஒட்டிக்கிட்டேன். (இதைப் பார்க்கத்தான்  வந்தேன், பார்த்துக்கிட்டேதான் இருக்கப்போறேன்!) ஹிஹி...
'நம்மவர்'  காஃபி தயாரிச்சார். சும்மாச் சொல்லக்கூடாது....  இந்த ஹொட்டேலில் அருமையான காஃபி மெஷீனும்,  நாலைஞ்சு வகை காஃபி கேப்ஸ்யூலுமா வச்சுருக்காங்க.   பால் சுட வச்சுக்க மைக்ரோ வேவ் இருப்பதால்  பிரச்சனை இல்லை :-)
பேரருவியைப் பார்த்தபடியே 'நல்ல' காஃபி குடிக்கும் சுகமே தனி !  :-)



ஒரு மணி நேரம் போனதே தெரியலை! இடப்பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தால்  கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் ரெயின்போ ப்ரிட்ஜ்!
ரெண்டு நாட்டுப் படகுக் கம்பெனிகளும் அயராது உழைக்குதுங்க ! மெய்ட் ஆஃப் த மிஸ்ட் என்ற பெயரோடு அமெரிக்கக்கொடியுடனும், ஹார்ன்ப்ளோயர் நியாகரா, கனடாக் கொடியோடும்  படகுக்கப்பல்கள்  நடமாடிக்கிட்டே இருக்குதுங்க.  ரெண்டுமே மெள்ளப்போய் குதிரை லாடத்தை நோக்கி நிக்குது.   கிட்டக்கிட்டப் போய், பெரும் புகைக்குள் நுழைஞ்சதும் இருக்குமிடமே தெரியலை.  ஒரு அஞ்சாறு நிமிசங்களில் மெள்ள நம்ம கண்ணுக்குப் புலனாகுது.  அப்படியே திரும்பி  அமெரிக்கா நியாகரா பக்கம் போகும்போது   வேகமாத்தான் போகுதுங்க!

'இருட்டானதும்  வண்ண விளக்குப் போடுவாங்களாமே'ன்னு காத்துக்கிடந்தேன். எட்டு மணி சமீபிக்கும்போது நீலமாச்சு !   அஞ்சாறு நிமிட் நீலிச்சுக் கிடந்தது மெள்ள   வயலெட் ஆனதும்  வானவில் நிறங்கள் ஒவ்வொன்னா வருமுன்னு புரிஞ்சது.

இதுக்குள்ளே ராச்சாப்பாட்டுக்கு  ஒரு இடத்தைக் கண்டுபிடிச்சுட்டார் 'நம்மவர்'  அதான் வலையும் வைஃபையும் இருக்கே :-)
Passage to India (Buffet Restaurant) ராபின்ஸன் தெரு.  நம்ம ஹொட்டேலில் இருந்து  850 மீட்டர் தூரமாம். கூகுளார் சொன்னதைக் கேட்டு மெள்ள நடக்க ஆரம்பிச்சோம்.  வலப்பக்கம் திரும்பி நேராப்போய்  இடப்பக்கம் திரும்பணும். சாலையில் அவ்வளவா வெளிச்சம் இல்லைன்னு  எதிர்வாடையில் போய்  அந்தாண்டைத் தெருவழியாப் போயிட்டோம். அந்தத் தெரு வண்ண வண்ண விளக்குகளும், நீரூற்றுமா கலகலன்னு இருக்கு!

ரொம்பநாளாச் சரியா சாப்பிடாத மாதிரி எனக்கொரு தோணல். பஃபே எப்பவும் எனக்குப் பிடிக்கும். நமக்கு எது வேணுமோ அதை மட்டும் சாப்பிட்டாலும் ஆச்சு. எப்படியும் கடைசியில் டிஸ்ஸர்ட் இருக்கும்தானே....

வகைகளைப் பார்த்ததுமே வயிறு நிறைஞ்சாப்லெ! பால் பாயஸம் ஒன்னு அட்டகாசம்!   கூடவே  ஒரு குலாப்ஜாமூன் :-) விலையும் ரொம்பவே மலிவு!  இங்கே எங்கூரில் இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகளில்  பஃபே இல்லவே இல்லை.  இங்கே ஒரு மெயின் ஐட்டம் வாங்கும் காசு கூட இல்லை, கனடா பஃபே! எதுக்கும் இருக்கட்டுமுன்னு நல்லாவே சாப்பிட்டேன் :-)
திரும்பப் பொடிநடையில் வேடிக்கைபார்த்துக்கிட்டே அறைக்கு வந்துட்டோம்.  எங்கே என் ஜன்னல்?
ரெண்டு நீர்வீழ்ச்சிகளிலும் வெவ்வேற நிறமா சில சமயம், ஒரே நிறமா சிலசமயமுன் னு வண்ண வண்ண வெளிச்சம் மாறிமாறி வந்துக்கிட்டு இருக்கு!


ஜன்னலாண்டை உக்கார்ந்தவள்,  பதினொன்னரைக்குப் பக்கம் தூங்கி விழ ஆரம்பிச்சேனா.... 'நம்மவர்'  மிரட்டினார்....  '  அது எங்கேயும் போகாது...பேசாம வந்து  படுத்துத் தூங்கு'
தூக்கத்திலும் நடுநடுவே முழிச்சுக்கிட்டு ஃபால்ஸ் எப்படி இருக்கோன்னு   நினைப்பு. அப்பதான் கவனிக்கிறேன்.... கால் மாட்டாண்டை  சுவத்தில் ஒரு நிலைக்கண்ணாடி!  அதுலே பார்த்தால்  குதிரைலாடம் தெரியுது!  வாவ்.... வாட்  ட... க்ரேட் ஐடியா!!!
அதுக்கப்புறம்  படுத்தபடியே   அப்பப்பக் கண்ணைத் திறந்து கண்ணாடியில் பார்த்துக்கிட்டே தூங்கினேன். ரெண்டரை மணிக்குப் பார்த்தால்.... அருவியைக் காணோம்!

ஐயோ.....   எங்கேயும் போகாதுன்னாரே..... போயிருச்சே........

"என்னங்க.... அருவியைக் காணோம்!"

எழுந்து உக்கார்ந்து எட்டிப் பார்த்தவர் ......லைட்டை அணைச்சுட்டான்னு சொல்லிட்டுத் திரும்பப் படுத்து தூங்கிட்டார்.

எழுந்து ஜன்னலாண்டை  போய்ப் பார்த்தால்  அருவிக்கரையில் அங்கங்கே மினுக் மினுக்னு விளக்கு எரியுதே தவிர..... அருவி இருக்குமிடத்தில்  வெளிச்சம் இல்லை!  லைட்ஸ் ஆஃப் !  ஓக்கே.... அருவி தூங்குது ! தூங்கட்டும்..... காலையில் சீக்கிரமா எழுந்து, இருக்கான்னு பார்க்கணும்.....

பொழுது விடிஞ்சதுன்னு கண்ணைத் திறந்தால் மணி ஏழு!  தூங்கிப்போயிட்டேன்....  'நம்மவர்' சொல்றார்  ராத்ரியெல்லாம் தூங்காம இருந்தியேன்னு எழுப்பலை'

"ப்ச்.....  சூர்யோதயத்துலே எப்படி இருக்குமுன்னு பார்க்க நினைச்சேன்...."

"அதான் சூர்யனே வரலையே.... மழை....... இப்பதான் கொஞ்சம் விட்டுருக்கு...."

சோகத்தோடு  கடமைகளை முடிச்சு ரெடியானேன்.  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போனோம்.   (அறை வாடகையில் சேர்த்தி!)  டைனிங் ஹால் ரொம்பவே பெரூசு.
இங்கே ஜன்னாலாண்டை உக்கார்ந்து அருவி பார்த்துக்கிட்டே சாப்பிடணுமா?  ரெண்டு  ஆளுக்குப் பத்து டாலர் கொடு.
இது என்னடா அக்ரமம்?  இதே வரிசையில் மேலே  அறையில் நமக்கே 'சொந்த ஜன்னல்' இருக்கே..... அது போதும்னு சொன்னேன். (அதுவுமல்லாமல் தலையைத் திருப்பிப்பார்த்தால்  அதோ.... அருவிதான் தெரியுதே :-) இன்னும் அங்கெதான் இருக்கு!!)
வறுத்த நிலக்கடலையும், கட்டித்தயிரும் நல்லா இருக்குமோ?  இருந்ததே!!!     கூடவே பொறிச்ச உருளைக்யூப்ஸ் !!!

சூரியன் எட்டிப் பார்க்கிறான்,  கொஞ்சம் மேலே இருந்து!

கீழே வரவேற்பில் இருக்கும் ட்ராவல் கவுன்ட்டருக்கு ஒன்பதே முக்காலுக்குப் போயிடணும்.  நேத்தே சாப்பாடு முடிச்சுத் திரும்பும்போது, ஒரு   மூணரை மணி டூர் ஒன்னு புக் பண்ணியிருக்கோம்.

இன்னும் ஒருமணி நேரம் இருக்கு.... அதுவரை..........?

வேறென்ன? அருவிதான். பேரருவி க்ளிக்ஸ்.........
அருவியில் இருக்கும் தண்ணியெல்லாம் நீராவியா மாறி மேலே போய்க்கிட்டு இருக்கு அடர்த்தியான புகையா !
சூரிய ஒளியில் தண்ணீர் வெள்ளியை உருக்கி விட்டாப்போல தகதகன்னு   ஒரு மினுக்கலா.......   நிலா வெளிச்சத்தில்  மெர்க்குரியை உருக்கி விட்டாப்போல்     மினுங்கும் கடலைப்  படிக்கும் காலத்தில் ஹாஸ்டல் மாடியில் இருந்து பார்த்த நினைவெல்லாம்  அனாவசியமா இப்போ ஏன்  வருதுன்னு.....
நதியில்  படகுப் போக்குவரத்து, காலையில் இருந்தே ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு!

வாங்க நேரமாச்சு.... கீழே போகலாம்.

தொடரும்....... :-)


14 comments:

said...

தூங்கும் அருவி - ஸூப்பர்.

படங்கள் அட்டகாசம்.

அவ்வளவு நீர் நீராவியா மாறி கண்ணுக்குத் தெரியுமளவு மேலே போனாலும் எவ்வளவு நீர் வந்து கொண்டே இருக்கிறது, மிச்சம் இருக்கிறது? பொறாமையாய்த்தான் இருக்கிறது!

said...

பார்க்கப் பார்க்கப் பரவசம். என்னவொரு அனுபவம் - உங்கள் மூலம் நாங்களும் ஜன்னல் வழியே பரவசம் கண்டோம் - கொண்டோம்!

தொடரட்டும் பயணம்.

விடுபட்ட பகுதிகளைப் படிக்கணும்....

said...

உலகின் அழகிய இடங்களில் ஒன்றை எங்களுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

said...

அருமை

said...

அருமை நன்றி அடுத்தென்ன என்ற ஆர்வத்துடன் .....

said...

பின்னூட்டமிட விட்டுப்போயிடுது. பார்க்கவும் படிக்கவும் பரவசம்தான். படகுல ஏறி நீர்வீழ்ச்சிக்கிப் பக்கத்துலலாம் போல போலிருக்கு.

said...

என்னங்க அருவியை காணோம்...ஹா ஹா உங்க ஆர்வம் அப்பா செம்ம...


எல்லா படமும் அழகு..அதிலேயும் அந்த ஆவியாகும் இடம் ஆஹா...

said...

என்னங்க அருவியை காணோம்...ஹா ஹா உங்க ஆர்வம் அப்பா செம்ம...


எல்லா படமும் அழகு..அதிலேயும் அந்த ஆவியாகும் இடம் ஆஹா...

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்தத் தண்ணியையே ஒருபக்கம் ஃப்ளோ கன்ட்ரோல்னு ஒழுங்குபடுத்தி அனுப்பறாங்க. அப்படியே விட்டுட்டால்.... எப்படி இருக்கும், இல்லே !!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்களுக்கும் இந்த அனுபவம் விரைவில் கிடைக்கட்டும் என்று எம்பெருமாளை வேண்டிக்கறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர்வருகைக்கு நன்றிகள்!

said...

வாங்க விஸ்வநாத்.

மூணுநாள் அங்கேயேதானே சுத்தப்போறோம் :-)

said...

வாங்க நெ.த.

எல்லாம் வருது, ஒவ்வொன்னா :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

அதிகாலையில் பார்க்கும்போது ஆவி அதிகமாத்தான் இருக்கு!