Monday, March 19, 2018

ஆட்டவா..... (மா) ஆட்டவா...... (@அமெரிக்கா.... கனடா 18)

மறுநாள் காலையில் வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும் பொட்டிகளை எடுத்துப்போய் வாசலில் நிக்கும் பஸ்ஸில் வச்சாச்சு. மணி ஏழே முக்கால்தான். எட்டுமணிக்குக் கிளம்பறோம்.
இதுவரை பஸ்ஸுக்குள் படம் எடுக்கலையே.... எல்லோரும் வருமுன் எடுக்கலாமுன்னு பின் வரிசைக்குப்போனால்......   இந்த வண்டியில் 'ஆத்திர அவசரத்துக்கு'  ஒரு டாய்லெட் கூட இருக்கு!
எல்லோரும் வந்து சேர்ந்ததும் மான்ட்ரியலுக்கு டாடா சொல்லிட்டுக் கிளம்பியாச்.  லாரன்ஸ் நதியை ஒட்டியே பயணம்.  இப்போ ஒட்டாவான்னு நாம் சொல்லும் ஆட்டவாக்குப் போறோம்.  நூத்தித் தொன்னுத்தியெட்டு கிமீ. ரெண்டு மணி நாலு நிமிட்னு கணக்கு :-)  எலனாதான் இன்றைய ப்ரோக்ராமைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
பத்தடிக்க அஞ்சு நிமிட் இருக்கும்போதே ஊருக்குள் நுழைஞ்சாச்சு. நேராப்போய் இறங்குனது ஒரு ம்யூஸியம் வாசலில். இங்கேயும் ஏகப்பட்ட ம்யூஸியம்ஸ் இருக்கு. இது கனேடியன் ம்யூஸியம் ஆஃப் ஹிஸ்டொரி.  சரித்திரமான்னு கொஞ்சம் பரபரப்பானேன்.


அங்கே நமக்காகக் காத்திருந்தது  மேரி எலிஸபெத்!  அப்படியே கடந்தகால சரித்திரத்தில் இருந்து இறங்கி வந்துருக்காங்க !   எலிஸிபெதன் ட்ரெஸ்! இவுங்கதான் நம்ம கைடு.  ஒன்னரை மணி நேரம் இவுங்களோடு சுத்தப்போறோம்.  என்னமோ முதல் பார்வையிலேயே இவுங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு :-)
ரெஸ்ட் ரூம் போறவங்க எல்லாம் போயிட்டு வந்துருங்கன்னு  சொன்னாங்க. தாயுள்ளம்.

கையிலே கொடி ஒன்னும் இல்லை!  மேரி பாப்பின்ஸ் போல ஒரு குடை :-)

மழைவேற நசநசன்னு ஆரம்பிச்சது!  இந்தப்பக்கம் அது,  அந்தப்பக்கம் இதுன்னு  வண்டிக்குள் நின்னு விளக்கம் சொல்லிக்கிட்டு வர்றாங்க.....  ஆனால் மழையில் ஒன்னும் சரியாத் தெரியலை....  :-(
நாட்டர்டேம் கதீட்ரல் மட்டும் சொல்லாமலேயே தெரிஞ்சுபோச்சு எனக்கு.  இந்த மூணு நாள் பயணத்தில்   இதே பெயரில் இது மூணாவது பேராலயம் ! 
வார் மெமொரியல் ரொம்ப அழகு!  கீழே இறங்கிக் கிட்டக்கப்போய்ப் பார்க்க முடியலை.  (இதுக்குதான்  இடங்களைச் சுத்திப் பார்க்கத் தனியாப் போகணுங்கறது!)
நேஷனல் கேலரிக்கு முன்னால் ஒரு  ராக்ஷஸ சிலந்தி. ஆறாயிரம் கிலோ எடையில் வெங்கல சமாச்சாரம்!  3.2 மில்லியன் டாலர் செலவாம். இருபத்தியாறு பளிங்கு முட்டைகளை வயித்தில் வச்சுப்பிடிச்சுக்கிட்டு இருக்கும் 'அம்மா' !   அழகுன்றது பார்க்கறவங்க கண்பார்வையிலே இருக்குமுன்னு சொல்றது உண்மை.....  எனெக்கென்னவோ.....   ப்ச்....
கனடா  150 கொண்டாட்டம் , அலங்காரம் எல்லாம்  சாலையில் அங்கங்கே....
கனடாவின் தலைநகரம் இந்த ஆட்டவா !  பார்லிமென்ட் வளாகத்துக்கு முன்னால் சாலையில் டூரிஸ்ட் வண்டிகள்  நிக்குது.  வண்டிகளில் யாரும் இல்லை..... எல்லோரும் வளாகத்துக்குள்ளே!
நம்ம ஐட்டி'நரி' பிரகாரம் பத்துமணிக்கு  'சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ் 'பார்த்திருக்கணுமேன்னு  எலனாவிடம் கேட்டால்.....    ஜூன் முதல் ஆகஸ்ட் வரைதானாம். இப்போ செப்டம்பர் பொறந்து நாலுநாளாயிருச்சே....
( ஆ... செப்டம்பர் நாலு,  நமக்கும் ரெண்டு சரித்திர முக்கியம் இருக்கே!  ஒன்னாவது மகளின் பிறந்தநாள். ரெண்டாவது  எங்கூரில் நிலநடுக்கம் வந்து எட்டிப் பார்த்து எல்லாக் கட்டடங்களையும்  கொஞ்சம் இளக்கி வச்சுட்டுப்போன நாள்.  அப்போ ஒன்னும் இடிஞ்சு விழாததால் நல்லவேளை நம்ம ஸிட்டி தப்பிச்சதுன்னு (அல்ப) சந்தோஷப்பட்டோம்! )

ஒரு இடத்தில் வட்ட அமைப்பில் தீ எரிஞ்சுக்கிட்டே இருக்கு.  அக்னிபுத்ரியானேன் :-)
முதலில் இது வார் மெமோரியலுன்னு நினைச்சுட்டேன். ஆனா இது  நூற்றாண்டு விழா சம்பந்தப்பட்டது.  Centennial Flame, 1967 ஜனவரி முதல்தேதி அப்போதையப் பிரதமர் ஏற்றி வச்சுருக்கார்.  வட்டமான அமைப்பில் நடுவில் நீரூற்று வச்சுத் தண்ணீர்  வழிஞ்சோட அதுக்கு மேல் தீ!  அம்பது வருசமா எரிஞ்சுக்கிட்டே இருக்கு. இப்போ  அந்த நூறைத் தொடர்ந்துதான் நூத்தி ஐம்பதாவது ஆண்டு விழா கனடா150 ன்னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.
பாராளுமன்ற வளாகத்துலே  இருக்கும் பழைய கட்டடங்களின் அழகும் கம்பீரமும் சொல்லி முடியாது.  இதைப்போலத்தானே நம்மூரிலும் க்ளாஸிக் பில்டிங்க்ஸ் இருந்தது....   இப்போ  நிலநடுக்கத்தால் எல்லாம் போயே போச்சேன்ற எண்ணம் வந்ததும், என்னையும் அறியாமல் கண்களில் வெள்ளம் பொங்கியது உண்மை..... ப்ச்.... இனி நினைச்சாலும் அதைத் திரும்பக் கட்டமுடியுமா?
நகரை புனர்நிர்மாணம் செய்யறோமுன்னு எங்க ஊரை  நவநாகரிகக் கட்டடங்களால் நிறைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனாலும் பழைய அழகுக்கு இதெல்லாம் ஈடாகுமா என்ன?  (இயலாமையில் அப்பப்ப இப்படிப் புலம்புவேன், கண்டுக்காதீங்க!  எண்ண ஓட்டத்தை நிறுத்த முடியுதா? )
ஆட்டவாவிலும்  இடைக்கிடையே புதுமாதிரிக் கட்டடங்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்குதான் என்றாலும்,  கண்ணை உறுத்தும் அளவுக்கில்லை....
நம்ம பஸ் ட்ரைவர்,  எல்லா நிறுத்தங்களிலும்   நமக்குக் குடிதண்ணீர்  வித்துக்கிட்டு இருந்தார். நல்ல சேவைதான்.  ஆனால்.... நம்ம க்ராண்ட் கேன்யன் டூரில்  குடிதண்ணி இலவசம் இல்லையோ :-)

எல்லோரையும்  அங்கிருந்து கிளப்பி பஸ்ஸில் ஏத்தி ஒரு ஒன்னரை கிமீ தூரத்தில் இருக்கும் பைவார்ட் மார்கெட் என்ற இடத்தில் கொண்டு விட்டாங்க. நம்ம கைடு மேரி எலிஸபெதின் வேலை முடிஞ்சது.  அதே ரெண்டு டாலர்தான் தலைக்கு!
இந்த மார்கெட் ஏரியாவில்  இருக்கும்   'பூமிபுத்திரர்களின் குலச்சின்னம் செதுக்கிய மரத்தூண்' (Totem Pole) கிட்டே சரியா ஒரு மணிக்கு வந்துருங்கோ. அதுக்குள்ளே சுத்திப் பார்த்துட்டுப் பகல் சாப்பாட்டையும் முடிச்சுக்குங்கோன்னு சொல்லிட்டாங்க எலனா.

ByWard Market is the name!

இங்கத்து உழவர் சந்தைதான் இது!  ஒரு அறுநூறு கடைகண்ணிகள், நடுவில் இருக்கும் திறந்த வெளியில் உழவர்கள் கொண்டு வந்து விற்கும் காய்கறிகள்னு பார்க்கவே பரவசம்!


காய்கறிகளின் வரிசையைப் பார்த்துட்டு மனசு நிறைஞ்சே போச்சு! வரிசை வச்சது போல....  ஒவ்வொரு வகையும்..... ஹம்மா......
மேலே இருக்கும் பழவிதைகள் நம்ம வீட்டில் போட்டு செடிகள் முளைச்சுருச்சு.  அதுக்குள்ளே குளிர் ஆரம்பிச்சதால்....  நோ பழம் இதுவரை. நம்ம தோழி ஆக்லாந்துலே இருந்து விதைகளை அனுப்புனாங்க.

பூச்செடிகள் ரொம்பவே விலை மலிவு!  இப்படி  நியூஸியில் மட்டும் கிடைச்சா, நம்ம வீட்டையே ஒரு பிருந்தாவனமா ஆக்கி இருப்பேன்:-)
எங்கூர் காசுக்கும் கனடாக் காசுக்கும் ஏறக்கொறைய ஒரே மதிப்பும், ஒரே நிறமும்,  அதே  மாட்சிமை தாங்கிய மஹாராணியம்மாவும்!


ரொம்பவே பூண்டு திங்கறாங்களோ........

நல்லவேளையா.... மழை கொஞ்சம் ஓய்ஞ்சுருக்கு. அன்னாடம் கொண்டுவந்து விக்கும் புத்தம்புது காய்கறிகளுக்குத் திறந்த வெளி!  மற்ற கடைகண்ணிகள்   சுத்திவர இருக்கும் கட்டடங்களுக்குள்ளே!  மாடியும் கீழேயுமா..... எனக்கென்னவோ சட்னு நம்ம மூர்மார்கெட் ஞாபகம் வந்தது.  அங்கே போயே வருசம் நாப்பத்தியஞ்சு ஆச்சு. ஒவ்வொரு சென்னைப் பயணத்திலும் போகணுமுன்னு நினைக்கறதுதான்.... அதுக்கென்னவே வேளையே வரலை..... தீயில் எரிஞ்சு போச்சுன்னு சொன்னாங்க. திருப்பிக் கட்டி இருக்கமாட்டாங்களா? 

விதானத்தில் இருந்து தொங்கும் ஒரு கலைப்பொருள்! எந்தக் கோணத்தில் இருந்து எடுத்தாலும் முழுசா வர வாய்ப்பே இல்லை....   McClintock's dream  என்ற பெயரில்,  மார்கெட் சமாச்சாரங்களைச் சொல்லுது! நல்ல பெருசுதான்   கிட்டத்தட்ட எட்டரை மீட்டர் நீளம்!  1978 லே  தொங்கவிட்டுருக்காங்க!
சட்னு ஒரு சுத்து சுத்திட்டு, சாப்பிட இடம் தேடுனதில்  ஒரு இண்டியன் உணவகம். பார்க்கவே நல்லா இல்லை. நம்மவர்தான்  எதையாவது உள்ளே தள்ளிட்டு ஒரு மணிக்கு டோட்டம்போல் போயிடணுமுன்னார்.  சோறும் குருமாவும் சகிக்கலை....

கனடா ஸ்பெஷல்னு  மிட்டாய் செய்யற கடையில் ஒரு பஞ்சாப் இளைஞர்  பாகை உருக்கி வால்நட் கலந்துக்கிட்டு இருக்கார். கனடாவில் ஏகப்பட்ட பஞ்சாபிகள் இருக்காங்க. அஞ்சு லக்ஷத்துக்கும் அதிகமாவாமே!   அவுங்க போயே இப்ப அஞ்சு  தலைமுறை ஆகி இருக்கும்! நூத்தியொரு வருசமாச்சு 2017 இல்!  எங்க மொத்த ஊரின்  ஜனத்தொகையே  நாலரை லக்ஷம் என்பதால் பிரமிப்பு வந்தது  உண்மை!   கடின உழைப்பாளிகள் என்பதை ஒத்துக்கத்தான் வேணும்!   எந்த வேலைன்னாலும் சரி......

செஞ்சுக்கிட்டு இருந்த முட்டாயில் கொஞ்சம்  வாங்கிக்கிட்டு திரும்ப காய்கறி இடத்துக்குப் போனோம்.  தக்காளியைப் பார்த்தாலே ஆசையா இருக்கு. ஆனால் ஒரு பக்கெட் வாங்கி என்ன செய்ய?  ஒரு தக்காளி வேணும், கிடைக்குமான்னதுக்கு ரொம்ப சந்தோஷமா எடுத்து நீட்டுனார்
கடைக்காரர்!  இதுவே முக்கால் கிலோ!   அதுக்குண்டான காசைக் கொடுத்துட்டு, அங்கேயெ கழுவி, துண்டம் போட்டு வாங்கியாச். ஹம்மா.... என்ன ருசி!  கொஞ்சம்கூட புளிப்பே இல்லை!
இருக்கற பழங்களையெல்லாம் விட்டுட்டுத் தக்காளியை ஆசைப்படுவாங்களோ?  பட்டேனே.... ஹாஹா....


நம்ம பஸ் வந்துருச்சு.  சரியா ஒரு மணிக்குக் கிளம்பிட்டோம். ஒன்னே முக்கால் மணி நேரப் பயணம் இருக்காம்.  மூணு மணிக்கு முன்னால் அங்கெ இருக்கணுமுன்னு  எலனா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

தொடரும்.........  :-)


9 comments:

said...

சில வருஷங்களுக்கு முன் நம்மூர்லயும் பஸ்ல டாய்லெட் வச்சாங்க... பஸ்ஸோட ஆட்டத்த்துல மூச்சா போச்சா ன்னு ஆனது! இப்போ என்ன முன்னேற்றமோ... பார்க்கவில்லை! எலிசபெத் தத்ரூபம்!

படங்களையும், அதன் வழியாக இடங்களையும் ரசித்தேன்.

said...

அருமையான வழிகாட்டி. உங்களுடன் நாங்களும் பார்த்தோம், ரசித்தோம்.

said...

Dream nation...once upon a time.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.

நம்மூருக்கு பஸ் டாய்லெட் சரிப்படுமா என்ன? உள்ளே போறவங்க கதி அதோகதிதான்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர்ந்து வருவதற்கு நன்றி !

said...

வாங்க குமார்.

உண்மை ! ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தது ! ஃபிஜியில் ராணுவப்புரட்சி நடந்த சமயம் ஏகப்பட்ட ஃபிஜி இந்தியர்கள் கனடாவுக்குப் போனாங்க. விஸா முன்கூட்டி வாங்கத் தேவை இல்லை என்பது முதல் காரணம். அப்போ ஃபிஜியும் ராணியம்மாவின் குடையின் கீழ்தான்!

ஆனால் நிறையப்பேர் ஆறு மாசத்தில் திரும்பி வரவும் செஞ்சாங்க. இது நடந்து வருசம் முப்பது ஆச்சு !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றிகள் பல !

said...

நம்ம ஊர் பஸ் - க்ளாசிக் பஸ் - திருவரங்கத்திலிருந்து சென்னை செல்லும் பஸ் ஒன்றில் இப்படி பாத்ரூம் பார்த்திருக்கிறேன் - படு மோசம்! :)

பெயர் தான் க்ளாசிக் - படு பயங்கர மோசம்....

மார்க்கெட் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு. நம்ம ஊர் மார்க்கெட் என்றால் குப்பையும் சேறுமா இருக்கும்.