Friday, March 09, 2018

முக்கொடியின் பின்னால்....(@அமெரிக்கா.... கனடா 14)

உண்மையில் இவர் கையில் மூணு கொடிகள் இருக்கே!  ஒன்னு கனடா நாட்டு தேசியக்கொடி, ஒன்னு  மான்ட்ரியல் நகரத்துக்கான கொடி, இன்னொன்னு Quebec மாநிலத்துக்கான கொடி.  மான்ட்ரியல் இருக்கும் மாநிலம் இதுதான். க்யூபெக்ன்னு சொல்லப்டாதாம்.  கெபாக் என்பதுதான் சரியாம்!  சொல்லிப் பார்த்துக்குங்க......  அங்கெயும்தான் போகப் போறோமே!  ப்ரெஞ்ச் பெயர்களை உச்சரிப்பது  எப்படின்னு கவனிச்சு வச்சுக்கணும், இல்லே?  நம்ம கைடு இருக்காரே அவரை  Pee Airனு  கூப்பிடணும்.  ஆய்க்கோட்டே................  பீஏர் !
'மான்ட்ரியல் நகரக்கொடியிலே ஒரு மாற்றம் செஞ்சுருக்காங்க. இன்னும் ரெண்டு வாரத்துக்குத்தான் இப்ப நான் கையிலே வச்சுருக்கும் கொடி இருக்கும். கடையிலே கிடைச்சா வாங்கிக்குங்க'ன்னார் !  இது கலெக்ட்டர்ஸ் ஐட்டம் ஆகிருமாம் :-)
பஸ்ஸின் முன்பக்கத்துலே பயணிகளைப் பார்த்து நின்னுக்கிட்டு, இடது பக்கம் பார். அது இது. வலதுபக்கம் வர்றது இதுன்னு சொல்லிக்கிட்டே போறார்.  என்னதான் இருந்தாலும் மினிமம் ஸ்பீடுலேயே வண்டி ஓட்டமுடியுமா?  பின்னாலே வர்ற ட்ராஃபிக் நம்மாலே தடைப்படாதா?  நம்ம டிரைவர்  நகரத்துக்குள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கார்.
பீஏர் கையில் மேப் வச்சுக் காமிச்சுக்கிட்டு இருந்தாரா, அதுலே குறிச்சுருந்த இடங்களுக்கெல்லாம் போகப்போறோம்.
தெருக்களைப் பொறுத்தவரை, சட்னு பார்த்தால் எங்கூர்மாதிரிதான் இருக்கு. எங்கே பார்த்தாலும்  ஸ்ட்ரீட் ஆர்ட் என்ற வகையில் சிலைகளும், சுவர் ஓவியங்களுமாத்தான். இந்தக் கலாச்சாரம் (அதான் சுவர் சித்திரங்கள்) கடந்த  மூணுநாலு வருசங்களா எங்கூரில் அதிகமாயிருச்சு. நிலநடுக்கத்தில் இடிஞ்சுபோன கட்டடங்களை அகற்றினதால் அங்கங்கெ வெற்றிடமும், பக்கத்துலே விழாம நிக்கும் கட்டடங்களின் சுவர்களும் கிடைச்சுருச்சே!  என்ன ஒன்னு...  இது பெரிய நகரம். மக்கள் தொகை பதினேழரை லக்ஷம். எங்க ஊர் அளவில் சின்னது..... மொத்தம் நாலு லக்ஷம்பேர்தான்

வண்டியில் உக்கார்ந்துக்கிட்டே  ஊரைச்சுத்தி வர்றப்ப, ஒரு சிலை (!) கண்ணைக் கட்டி இழுத்துச்சு. இல்லுமினேட்டட் க்ரௌட் என்ற பெயராம். தெருவைப்பார்த்து நிக்கும் பக்கம்தான் நம்ம கண்ணில் பட்டது. ஆனால் பெரிய  அமைப்பு. 65 பேர் கூட்டமா நிக்கறாங்களாம். அப்புறம் இதைப் பற்றி விசாரிச்சதில் கிடைச்ச படங்களை இங்கே போட்டுருக்கேன். மானிடத்தின் இருண்டபக்கம்!  (இப்ப சிரியா சமாச்சாரங்கள் பார்க்கும்போது....  மனிதம் செத்துப்போச்சுன்னுதான் நினைப்பு வருது)


கீழே  நாலு படங்கள் கூகுளார் அருளியது!



நான் முன்னாலே போறேன்.... நீங்க பின்னாலே வாங்கோ....
முதல்லே  ஜஸ்ட்  ஊரைச் சுத்திப் பார்க்கப்போறோம், வண்டியில் இருந்தேன்னதும் எனக்கு அப்பாடான்னு இருந்தது உண்மை. ஆனா....   ஒரு முக்கியமான   இடத்தை இறங்கிப்போய்ப் பார்க்கணுமுன்னு  பீ ஏர்  சொன்னதும், ரொம்ப நடக்கணுமான்னு கேட்டேன்.   ரெண்டு தெருதான்னவர், கொஞ்சம்    நீளமான தெருன்னு சொல்லலை பாருங்க !
 நாட்டர்டேம் பேராலயத்துக்கு முன்னால் போய் நிக்கறோம். உள்ளே போக முடியாதாம். வேறேதோ தனியார் விழா நடக்குது.  இன்றைக்கு முஹூர்த்த நாள் போல.....  ஏகப்பட்ட  ஜோடிகளை  அங்கங்கே பார்த்துக்கிட்டேதான் வர்றோம்.  மோதிரம் மாத்துன கையோட ஃபோட்டோ ஷூட் ஊரின் முக்கிய பகுதிகளில்!



இதே பெயரில்   இதேமாதிரி ஒரு பேராலயம் (பாஸிலிக்கா) நம்ம பாரிஸ் டூர்லே பார்த்துருக்கோமே...  அதனாலே  உள்ளே போகலைன்னா பரவாயில்லேன்னு  நினைச்சேன்.  உண்மையில் இந்தப் பெயரில் ஏராளமான தேவாலயங்கள் உலகம் பூராவும் இருக்கு! ஃப்ரான்ஸ்லே எண்ணிக்கை அதிகம்.  ரெண்டாவது இடம் கனடாவுக்குத்தான் !

பேராலயத்துக்கு முன்னால் கல்பாவிய பெரிய சதுக்கம். நடுவிலே ஒரு  செயற்கை  நீரூற்று. இதன் தலையில் ஒரு சிலை!      Founder of Montreal,  Paul Chomedey de Maisonneuve. 1895 லே நிறுவினாங்களாம்!

பயணிகள் கூட்டம் அதிகம்!  சதுக்கத்தின் இந்தாண்டை ஒரு பெரிய கட்டடத்துக்கு   ரெண்டு ஓரத்திலும் விசித்திரமான ரெண்டு சிலைகள்.

ஒரு சிலை....  மனிதர், தன்னுடைய  பக் நாயைத் தூக்கி வச்சுக்கிட்டு பேராலயத்தைப் பார்த்தபடி நிக்க,  இந்தப் பக்கம் ஒரு லேடி, தன்னுடைய ஃப்ரெஞ்ச் பூடில் நாய்க்குட்டியைத் தூக்கிவச்சுக்கிட்டு பேங்க் ஆஃப் மான்ட்ரியல் கட்டடத்தை பார்த்துக்கிட்டு நிக்கறாங்க. மூக்கு வானத்தைப் பார்க்குது!  அலட்சியமான பார்வை. மேட்டிமையின் சின்னம் :-)  நீயா நானா ? :-)
ஆனா ரெண்டு நாய்களும் தலையைத் திருப்பி ஒன்னையொன்னு பார்த்துக்குதுகள். நட்பு. நண்பேன்டா....


ஊர் முழுசும்  சிலைகளோ சிலைகள்தான்.  தெருமூலையில் மூணு பெண்கள் உக்கார்ந்து  கதைபேசிக்கிட்டு இருக்காங்க. ஒருத்தர் 'அப்புறம் என்னாச்சுன்னா நான் என் வாயாலே எப்படிச் சொல்வேன்'னும்போது, நானும் போய்  கதைகேக்க நின்னேன். இன்னொரு கதைசொல்லி வந்துட்டாளேன்னு  திறந்தவாயை மூடலை அந்தம்மா :-)
ரகசியம்... பரம ரகசியம்.... அது நமக்குள் இருப்பது  அவசியம்.......  2002 ஆம் வருசம் ஸ்தாபிச்ச இந்த  சிற்பத்துக்கு    Les chuchoteuses னு பெயர்.  இதுக்குப் பொருள்?  ஹாஹா..... ஊர்வம்பு .
பீ ஏர் முன்னால் நடக்க நாங்கள் பின்னாலே ஓடறோம். கல்பாவிய  தெருக்கள்தான். ஆனாலும்  கொஞ்சம் கரடுமுரடா இருக்கு. இங்கெல்லாம் நடக்க நம்ம செருப்பு லாயக்கில்லை.  தெரிஞ்சுருந்தால் ஷூ போட்டுக்கிட்டு வந்திருக்கலாம். ஒரு செட் கொண்டு வந்துருக்கேனே....  ஆனா   அது டொரொன்டோவில் வச்சுட்டு வந்த பெட்டியிலே இருக்கே.....    :-(


மான்ட்ரியல் நகருக்கான கொடியில் மாற்றம் வரப்போகுதுன்னு அப்போதான் சொன்னார் கைடு.  நடுவிலே  இருக்கும்  சிகப்பு சிலுவையில், இங்கே இருக்கும் பதினொரு பழங்குடி இனங்களைக் குறிப்பிடும் வகையில்  வெள்ளை பைன் மரம்  (மஞ்சக்கலரில்) வரப்போகுதாம்.






கடற்படை தளபதி நெல்சன் நினைவுச் சின்னமா நிறுவி இருக்கும் தூண்      பார்க்கப்போய்க்கிட்டு இருக்கோம். வழியெல்லாம் மார்கெட் போல  தெருவோரக் கடைகளும்,  ரெஸ்ட்டாரண்டுகளும், கலைப்பொருட்களுமா இருக்கு!   நம்ம புள்ளையார் கூட இருந்தார் !!!
எனக்குக் கல்யாணம் வேணாம்.... பயமா இருக்குன்னு மரத்தைக் கட்டிப்புடிச்சுக்கிட்டு இருந்த அணிலாரை  சில க்ளிக்ஸ்  :-)


திரும்ப நாங்கெல்லாம் பஸ்ஸுக்கு போனோம். 'இனி இறங்க வேணாம். அப்படியே ஊர் சுத்தலாம்'னு சொன்னார்  பீஏர் :-)

பயணிகள் பயன்படுத்திக்க மின்சார ஸ்கூட்டர் வாடகைக்குக் கிடைக்குது !  இதைப்போலவே  சாதாரண சைக்கிள்களும் வாடகைக்கு எடுக்கலாம்.  ஊர் முழுக்க  அங்கங்கே சைக்கிள் நிறுத்தங்கள் இருக்கு....   அங்கே விட்டுட்டுப் போகலாம்.  சுத்திப் பார்த்தபிறகு, வேறெ இடம் போகணுமுன்னா.... முந்தி நிறுத்துன இடத்தைத்தேடி வரவேண்டியதில்லை. அங்கே இருக்கும் இன்னொரு  சைக்கிள் ஸ்டேண்டில் இருக்கும் சைக்கிள்களில் ஒன்னு எடுத்துக்கிட்டுப் போகலாம்.  எல்லாம் கார்டு மூலமா சார்ஜ் என்பதால்  சில்லரை தேடிக்கிட்டு இருக்க வேணாம்.
(இது  இப்போ சில வருசங்களா எங்கூருக்கும் வந்துருச்சு. ஊரைச் சுத்திப் பார்க்க எளிது. இப்போ எங்கூரில்   ஏற்கெனவே இருந்த சைக்கிள் பாதைகளை, மேம்படுத்தறோமுன்னு 292 மில்லியன் டாலர் பட்ஜெட் போட்டு வச்சுருக்கு சிட்டிக் கவுன்ஸில்.   கார்லே போறவனை விட, பைசைக்கிளில் போறவனுக்குத்தான் மரியாதை ! வசதி எல்லாம்.....   இதுக்காக ஒரு கூட்டம் சிட்டிக் கவுன்ஸிலைக்  காறித்துப்பிக்கிட்டு இருக்கு! நானும் அந்தக் கூட்டத்தில் இருக்கேன்!  எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியலையேன்னு  இப்ப என்  கவலை எனக்கு :-)


சைனா டவுன் கடந்து போறோம். சீனர்களைச் சும்மாச் சொல்லக்கூடாது.  ஒரு நகரில், ஒரு பகுதியை எப்படியாவது பிடிச்சுக்கிட்டு,  சைனீஸ் ஸ்டைல் கூரையோடு நுழைவு வாசலும், ரெண்டு பக்கமும் சிங்கங்களுமா வச்சுடறாங்க. இதுலே எல்லாம் அவுங்க ஒத்துமையைப் பார்த்தால்.... எனக்குக் கொஞ்சம் பொறாமைதான்.....



ஒரு இடத்தில் ஒரு தெரு முழுக்கக் குறுக்கே  தோரணம் கட்டுனாப்போல ஒரு கிலோமீட்டர்  நீளத்துக்குக்   கலர் பல்ப் போட்டு வச்சுருக்காங்க.  முந்தி வெறும் பிங்க் கலரில் மட்டும் இருந்ததை, இப்போ வானவில் போல  பல வண்ண  பல்புகளால்  அலங்கரிச்சு வச்சுருக்காங்க.  இப்போ பகல் நேரம் என்பதால்  லைட்ஸ் எரியலை. ராத்திரியில் ஒரே கோலாகலமா இருக்குமாம்!  வண்டிப் போக்குவரத்து நிறுத்திடுவாங்களாம்.  நடந்து போய் அழகை அனுபவிக்கலாம்!  நாம் தங்கப்போகும் ஹொட்டேலுக்குப் பக்கம்தான்னா, ராத்திரி வந்து பார்க்கணுமுன்னு சொன்னேன்.  அதுக்கு..... இது  LGBT community (  lesbian, gay, bisexual, and transgender) ஏரியான்னதும்,  'நம்மவர்' நடுங்கிட்டார் :-)

மேலே படம்: இரவு நேரம்!  வலையில் சுட்டது!

ஊரைச்சுத்துக்கிட்டே இப்போ ஒரு பெரிய கேன்டிலீவர் பாலத்தாண்டை வந்துருந்தோம். Jacques Cartier Bridge னு பெயர். இதுக்கு அந்தாண்டை கை காமிச்ச நம்ம பீஏர், அது ஒலிம்பிக் ஸ்டேடியம்னு சொன்னாரா.......  முழு பஸ்ஸும் அந்தப் பக்கம் ஜன்னலுக்குப் பாய்ஞ்சது  :-)
1976 வது வருசம், 21வது  ஒலிம்பிக்ஸ் இங்கேதான் நடந்துச்சு. அப்ப  ஊர்ப்பெயரைக் கேள்விப்பட்டதோடு சரி.   அது கிழக்கா, மேற்கான்னு கூடத் தெரியாது. அட்லஸ் எடுத்துவச்சுப் பார்த்த நினைவு. இப்படி வேறொரு நாட்டுக்கு வரப்போறோமுன்னு கனவு கூட வரலை!

உள்ளே போய் சுத்திப் பார்க்க தனி டூர் எல்லாம் இருக்காம். அதுக்கெல்லாம் நேரம் வேணும். சில நாட்கள் இங்கே தங்கினால் உண்டு.  போயிட்டுப்போகுது....  போங்க....   இங்கிருந்தே சில க்ளிக்ஸ்தான் நமக்கு வாய்ச்சது!  அதுகூட அவ்ளோ க்ளியரா வரலை :-(

மேலே படம்: எக்ஸ்போ 1967 யூஎஸ் பெவிலியன். இப்போ ம்யூஸியம் ஒன்னு இருக்காம் உள்ளே! 
கன்வென்ஷன் சென்டர், ம்யூஸியம், ஆர்ட் கேலரின்னு  வர்ற வழியில்  கை காமிச்சதைப் பார்த்துக்கிட்டே  நாம் தங்கப்போகும் ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். மூணு மணி நேரம்  நம்மோடு இருந்த பீஏர், குட்பை சொல்லிட்டுக் கிளம்பினார்.  கைடுக்குன்னு தனிக் கட்டணம், நாம் கொடுக்கணும். இது டூர் சார்ஜில் சேர்த்தியில்லை என்பதால்  எலனா, ஒரு பையை அனுப்புனாங்க. அதுலே  ஆளுக்கு ரெண்டு டாலர்னு  போடணும். போட்டோம்.

நோவோடெல்லில் தங்கறோம். ரெண்டு நைட்டும் இங்கேதான்.  செக்கின் ஆச்சு. மறுநாள் காலையில் ஆறரைக்கு  நம்மை எழுப்புவாங்களாம். இங்கேயே ப்ரேக்ஃபாஸ்ட் கொடுக்கறாங்க. எல்லாம் முடிச்சுக்கிட்டு எட்டு மணிக்குக் கிளம்பிடணும்னு நம்ம டூர் டைரக்டர் எலனா சொன்னாங்க.   அதுவரை நமக்கு ஃப்ரீ டைம் :-)

அறை நல்ல வசதியோடுதான் இருக்கு.  மணி இப்போ ஆறரை.   கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து, ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு நாம்  போய்  அக்கம்பக்கம் பார்க்கலாமா?


தொடரும்............ :-)


12 comments:

said...

அழகிய படங்கள். சிலை நகரம் போலும்... எவ்வளவு சிலைகள்! இந்த அணில்கள் யாசகம் செய்வதில்லை போல! மேட்டிமை அணில்கள்! இல்லுமினேட்டட் கிரௌட் கவர்ந்தது. எவ்வளவு ஒழுங்கான, அழகான கட்டிடங்கள், தெருக்கள்!

said...

இந்தப் பதிவுல எனக்கு ரொம்பப் பிடிச்சது எது தெரியுமா? கதை பேசுற மூனு பொண்ணுங்க சிலைதான். ஒவ்வொரு முகத்திலும் என்னவொரு பாவம். கதை பேசுற ஆர்வம். அச்சுப் பிசகாத சிலைகள்.

டீச்சர் போற எடத்துல எல்லாம் பிள்ளையார்(ஆனை) வந்துர்ராரு. இன்னொன்னு கவனிச்சீங்களா, பிள்ளையாக்குப் பின்னால ஒரு பூனையாரும் தவத்துல இருக்காரு. டீச்சருக்குப் பிடிச்ச ஆனையும் பூனையும் ஒரே எடத்துல. ஒரே படத்துல.

said...

மிக அருமை. நன்றி

said...

இந்த மாதிரி கைடட் டூரில்நிறைய இடங்கள் பார்க்கலாம் ஆனா டைம் மேனேஜ்மெண்ட் அவசியம்

said...

உள்ளூர்காரர் ஒருவர் கூடவே வந்து எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பிப்பது நல்ல வசதி. ஒரு பயணத்தில் எங்களுடன் வந்து சுற்றிக் காண்பித்தவர் இப்போது நல்ல நண்பர்!

படங்கள் அழகு. சிலைகள் அசத்தல்.

தொடர்கிறேன்.

said...

சிலைகள் மிகவும் அழகாக உள்ளன. அவை கதை சொல்லும் விதம் மிகவும் அருமை.

said...

வாங்க ஸ்ரீராம்.

எல்லாமே அருமையா இருக்கு இங்கே! நமக்கு நேரம்தான் போதலை.....
ரொம்பவே அழகான ஊர்!

said...

வாங்க ஜிரா.

யாராவது கவனிப்பாங்களான்னு இருந்தேன். பூனையை நீங்க பார்த்துட்டீங்க :-)

அந்த லேடீஸ் எனக்கும் பிடிச்சவங்கதான். ரொம்ப உணர்ச்சிமயமான முகம் !

ம்.... அப்புறம்? :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கைடட் டூரில் ஒருமுறை போயிட்டு, அப்புறம் நாம் தனியாகவும் சுவாரசியமான இடங்களைச் சுத்திப் பார்க்கணும். என் விருப்பம் இப்படித்தான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வண்டி நாம் ஏற்பாடு செஞ்சுக்கிட்டு, வழிகாட்டியைக் கூட்டிப்போவது தான் சிறப்பு. உங்க பயணங்கள் எல்லாம் இப்படி அருமை! பொதுவா டூர் கம்பெனி பண்ணில் போனால்.... அவுங்க கொண்டு போகும் இடங்கள் மட்டும்தான் பார்க்க முடியும். இது எனக்கு ஒரு குறைதான்.

பாரீஸ் பயணத்துலே பல இடங்கள் விட்டுப்போனது இப்படி.... இன்னொருக்கா போகத்தான் வேணும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆஹா.... கதை கேக்க நீங்களும் ரெடியா!!! :-)