Friday, March 23, 2018

ஏக்கம் தீர்ந்ததா............. (@அமெரிக்கா.... கனடா 20)

மற்ற இடங்களைப்போல் இல்லாமல் 'யார்க்டேல்' ஹாலிடெ இன்னில் செக்கவுட் பகல் பனிரெண்டுக்குத்தான் என்பதால்  கொஞ்சம் நிதானமாவே எழுந்து கடமைகளை முடிச்சுட்டு, ப்ரேக்ஃபாஸ்ட் வேறெங்கியாவது போய் வாங்கிக்கலாமுன்னு  கிளம்பினோம்.  மார்னிங் வாக் நல்லதாமே!  :-)
இங்கே எங்கூர்  கே எஃப் சி, மெக்டோனால்ட்ஸ் மாதிரி  டிம் ஹொர்டன்ஸ்  கனடாவில் ஃபேமஸ் போல. அங்கங்கே  அந்த மூணுநாள் டூரிலும் கண்ணுலே பட்டுக்கிட்டே இருந்துச்சு. அங்கெ போய்  மஃப்பின், டோநட்ஸ்ன்னு கொஞ்சம் பேஸ்ட்ரீஸ் வாங்கிக்கிட்டு நிதானமா நடந்து அறைக்கு  வந்து சாப்பிட்டாச். காஃபி இங்கேயே நல்லதாக் கிடைச்சது.

நேத்து இரவே இன்றைக்கான  வண்டியை  வலையில் பார்த்து புக் செஞ்சுட்டதால் பதினொன்னரை வரை  நமக்கு ஃப்ரீ டைம்தான்.  ஆனால்  எதிரில் இருக்கும் ஹட்ஸன் பே மாலுக்குப் போய் வர நேரம் பத்தாது.  நம்ம  பால்கனி வழியே  பார்த்தால்  அடுத்தாப்லே இருக்கும் எக்ஸ்ப்ரெஸ்வேயில்  பறக்குது வண்டிகள். ஒரு ரயில் வேற !

பதினொரு மணிக்குப்பக்கம், நேத்து புக் பண்ண வண்டியின் ட்ரைவர்,  வேறெங்கியோ இருந்து  கூப்பிட்டு,  'இங்கே  ஒரு வேலையில் மாட்டிக்கிட்டேன். மத்யானம்  மூணு மணிக்குத்தான்  வர முடியும்.  பரவாயில்லையா'ன்னார்'

ஊஹூம்.....

பனிரெண்டுக்கு செக் அவுட் பண்ணிட்டு ச்சும்மா லாபியில் உக்கார்ந்துருக்க முடியாதுன்றதால்  கேன்ஸல் செஞ்சுட்டோம். வேறொரு டாக்ஸி கம்பெனிக்குக் கூப்பிட்டுப் பேசுனதில்  அவுங்க  'பதினொன்னெ முக்காலுக்கு வரேன்'னு சொன்னாங்க.

நாம் இப்போ போறது  நியாகராஃபால்ஸ் என்ற ஊருக்கு. நயாக்ரான்னு  நாம்  சொல்லிக்கிட்டு இருக்கோமுல்லெ....

 இங்கிருந்து 134 கிமீ.   கூடி வந்தால் ஒன்னரை மணி நேரம்....

ஷட்டில் சர்வீஸ் இருக்கு.  அதைப் பிடிக்க நாம் ஏர்ப்போர்ட் வாசலுக்குப் போகணும். அதுக்கொரு டாக்ஸி.  ஷட்டில் எடுத்துட்டு, நியாகராஃபால்ஸ் ஊருக்குப்போனதும் நம்ம ஹொட்டேல் போக இன்னொரு டாக்ஸின்னு  எல்லாம் கணக்குப் போட்டால்... அப்படி ஒன்னும் ரொம்பப் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை கூட்டுத்தொகையில்.
அதான் இந்த ஹொட்டேலில் இருந்து அந்த ஹொட்டேல்னு டாக்ஸி எடுத்தது.

நம்ம ரசனை ஸ்ரீராமுடன், அன்றைக்குப் பேசிக்கிட்டு இருக்கும்போது,  ஒருநாள்  பொறுத்தால், அவரே ஒரு வேலையா அங்கே போறதாவும், நம்மையும் பிக்கப் பண்ணிக்கறதுலே அவருக்குப்  பிரச்சனை இல்லைன்னும் சொன்னார்தான். ஆனால் நமக்கு அங்கே ஹொட்டேல் புக்கிங் ஏற்கெனவே இருக்கு.  இங்கே கூடுதலா ஒருநாள் தங்கற திட்டமும் இல்லைன்னதும்,  எங்கே தங்கப் போறோமுன்னு கேட்டதுக்கு  ஹொட்டேல் பெயரைச் சொன்னதும், நல்ல வசதி. அங்கிருந்தே ஃபால்ஸ்க்கு இறங்கிப் போகலாமுன்னும் சொன்னார். நல்ல  இடமுன்னு தெரிஞ்சதும் ஒரு திருப்தி வந்தது உண்மை.
நாங்க பதினொன்னரைக்குக் கீழே வந்து செக்கவுட் பண்ணிக்கிட்டு இருக்கும்போதே டாக்ஸி வந்துருச்சு. ஏஸ் டாக்ஸி கம்பெனி. ட்ரைவர் இந்தியர்தான். பெயர் அம்ரித்ன்னு  நினைவு.
ஊருக்குள் நுழையும்போது மணி,   ஒன்னு பத்து. எங்கியாவது நீர்வீழ்ச்சி தெரியுமான்னு எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டே வரேன்.  ஊஹூம்........  ஒளிச்சு வச்சுட்டு ஊரைக் கட்டி இருக்காங்க :-)
எம்பஸி ஸ்யூட்ஸ் வாசலில் வந்து இறங்கியதும்  மனசு பரபரங்குது! ரொம்ப எதிர்ப்பார்ப்புடன் இதுக்காகவே இங்கே வந்துருக்கோம்!

வரவேற்பில் நல்ல வியூ வேணுமுன்னதும், 'பெஸ்ட் வியூ உங்களுக்கு'ன்னு சொல்லி (எல்லாருக்கும் இப்படித்தான் சொல்வாங்க, இல்லே!) இருபத்தியொன்பதாவது மாடின்னார்:-)
அரக்கப்பரக்க அறைக் கதவைத் திறந்து  உள்ளே போய்  முதலில் இருக்கும் சிட்டிங் ரூமைத் தாண்டி படுக்கை அறை ஜன்னலுக்கு  ஓடினேன். ஹைய்யோ......  ஹைய்யோ.........
எப்பப் பார்த்தாலும் 'மூச்சடைச்சு நின்னேன்'னு  சொல்வேன் பாருங்க....   அதே அதே............  ஜன்னலோடு ஜன்னலா ஒட்டிக்கிட்டேன் :-)
ஹார்ஸ்ஷூ ஃபால்ஸ் கனடா வலப்பக்கம் (குதிரை லாடம் போல  முக்கால் வட்டத்துலே இருக்கே), இடப்பக்கம்   எதிர்க்கரையில் அமெரிக்காவோட நியாகரா!
"எவ்ளோ நேரம்தான் அங்கெயே இருக்கப்போறே?  வா... போய் எதாவது லஞ்ச் முடிச்சுக்கிட்டு, கீழே  ஃபால்ஸ் கிட்டே போகலாம்"
மனசே வரலை. மனசு நிறைஞ்சதால் பசியும் இல்லை.  அதுக்காக  'நம்மவரை' பட்டினி போடமுடியுமோ? கீழே இறங்கிப்போய், நம்ம ஹொட்டேலுக்கு எதிரில் தெரியும்  தெருவில் நடக்கறோம்.
எங்கே பார்த்தாலும் அழகழகான பூச்செடிகள், சுத்தமான சாலைன்னு அருமை.  ஆனாப் பாருங்க.... இவ்ளோ கிட்டே இருந்தும் தண்ணீர் பாயும் ஓசை கேக்கவெ இல்லை...  இல்லே  எனக்குத்தான் காது அவுட்டா?
ஒரு விநாடிக்குக் கிட்டத்தட்ட இருபத்தியாறு லக்ஷம் லிட்டர் தண்ணி, அம்பத்தியொரு மீட்டர் உசரத்தில் இருந்து பாயுதே............

மால் மாதிரி இருக்கும் ஷாப்பிங் சென்டருக்குள் நுழைஞ்சு போனால்..... அது பாட்டுக்கு எங்கெங்கியோ போகுது... கால் போன போக்கில் நடந்து போய், ஒரு இடத்தில் லஞ்ச் முடிச்சுக்கிட்டு,  ஃபால்ஸ்னு அம்பு போட்டுக் காமிச்ச பாதையில் போனோம்.  ஸ்கைலான் டவர் இந்தப்பக்கம் இருக்கு.
வழக்கம்போல் நம்மவருக்கு மேலே ஏறிப்பார்க்க ஆசை!  நான் எதுக்குக் கூடவே இருக்கேன்? நானும் வழக்கம்போல் 'தடா' போட்டு வச்சேன் :-) அதெல்லாம் அப்புறம்.....
ரொம்ப தூரம் நடந்துக்கிட்டே இருக்கோமோ.....   கொஞ்சம் சரிவான தெரு என்றதால் சரசரன்னு ஒரு நடை.  திரும்பி இதே வழின்னால் என்னால் ஆகாது..... ஏத்தம்.....கஷ்டம்....
நியாகரா பார்க்ஸ்க்கு வந்துருந்தோம். க்வீன் விக்டோரியா பார்க்னு பூர்வாஸ்ரமப் பெயர் :-)
கண்ணெதிரே அமெரிக்கா !

அடுத்த நாடு கண்ணெதிரேன்னதும், மனசுக்குள் இன்னொரு நினைவு. ஒருமுறை த்வார்க்கா பயணத்தில் பெட் த்வார்க்காவுக்குக் படகில் போறோம். அப்போ யாரோ ஒரு குசும்பன், அதோ பாகிஸ்தான் தெரியுது'ன்னதும் பார்க்கணுமே  ....  முழுப்படகு மக்களும் எந்திரிச்சு நின்னு 'தெரியுதா தெரியுதான்னு உத்து  உத்துப் பார்த்தோமே... தெரிஞ்சதோ?  இல்லையே... :-)

நடுவில் நியாகரா நதி!  கீழே நல்ல அகலமா ஓடுது!  இந்தக் கரையில் மேட்டுலே நிக்கறோம்.  நல்லதா  கைப்பிடிக்குக் கம்பித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  இதை ஒட்டியே இருக்கும் விஸ்தாரமான பாதையில் வலதுபக்கம் போனால்  கட்டக்கடைசியில் ஹார்ஸ் ஷூ ஃபால்ஸ்.  ஒரு கிமீ தூரத்துக்கும் அதிகம்தான்.
பயங்கரக்கூட்டம், அதுலே ஊடுருவிப்போறோம். அங்கங்கே படம் எடுக்க உதவி செய்யறதும்,  பதில் உதவி வாங்கிக்கறதுமா  சின்னச் சின்ன நிறுத்தங்கள் :-)

நீங்க என்னதான்  பத்தடிக்கு ஒரு குப்பைத் தொட்டின்னுவச்சு இடத்தைப் பராமரிச்சாலும் அதெல்லாம் எங்களுக்குத் தூசு.... நாங்கெல்லாம் தோணியபடிதான் நடந்துக்குவோம். 
கூடாதுன்னு சொல்றதைச் செஞ்சால்தான் திருப்தின்னு  ஒரு சில பீடைகள். (உங்களுக்குத் தெரிஞ்ச கடுமையான வசவுச் சொற்களைச் சேர்த்துக்குங்க!) 
எந்த இடத்தில் நின்னு, எந்தக் கோணத்தில் எடுத்தாலும் ஒவ்வொன்னும் ஒரு அழகு!  எதைச் சொல்ல எதை விட என்ற  நிலை..........

கீழே படுவேகமாப் பாயும் நதியில் பெரிய பெரிய படகுக் கப்பல்கள். (சின்னப்படகிலும் சேர்க்க முடியாது, பெரிய பிரமாண்டமான கப்பலும்  இல்லை என்பதால் இவை இனி படகுக் கப்பல்கள் என்ற பெயரில்தான் !)
மேல்மாடி  பூராவும் சிகப்பா ஒன்னிலும் நீலமா ஒன்னிலும்.......   என்னவா இருக்குமுன்னு சொல்லுங்க... பார்க்கலாம்.  ரெயின் கோட்டுகளோடு சனம் . ஒவ்வொரு படகுக்கப்பல்  கம்பெனியும் ஒவ்வொரு நிறத்தை எடுத்துக்கிட்டு இருக்கு!
நடந்து நடந்து கடைசிக்குப் போயிட்டோம்.  குதிரைலாட வடிவில்.....  யம்மாடி....  எவ்ளோ பெரிய குதிரையா இருக்கணும், இப்படி லாடங்கட்டிக்கிட்டு இருக்கணுமுன்னால்.....  (கல்கி அவதாரக் குதிரை !!)
முக்கால் வட்டம்.....  ரெண்டாயிரத்து எழுநூறு அடியாம்! (நான் அளக்கலைப்பா!)

 அந்தாண்டை  சாலையில் 'ராஜாவின் பார்வை... ராணியின் பக்கம்'  (ப்ச்... இங்கேயும் சவாரிக்குச் சான்ஸ் கிடைக்கலை)

செல்லக்குட்டி தண்ணி பார்க்க  ' வாக்கிங்'  வந்துருக்கு :-)

டேபிள்ராக் வெல்கம் சென்டர் கட்டடம் ! இதுதான் நம்ம அறையில் இருந்து பார்க்கும்போது வட்டமாத் தெரிஞ்சது.  உள்ளே போனால் கடையும் கண்ணியுமா...... பயணிகளுக்குத் தேவையான அத்தனை சமாச்சாரங்களாலும் நிறைஞ்சு வழியுது:-)
மாடியில் இருந்து(ம்) தண்ணி பார்க்கலாம்.

எதுக்கு இப்படி ஒரு 'மேஜைக்கல்லு'ன்னு பெயர்?  அவுங்களே போட்டு வச்சுருக்காங்க, பாருங்க !
அப்போ எப்படி இருந்துச்சுன்னு ஒரு படம் கூட....
இப்படி ஒடைஞ்சு விழுந்துருச்சாமே.......  ஐயோ...
நீர்வீழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமா பின்னாலே போய்க்கிட்டு இருக்காம். இப்படியே போனா இன்னும் இருபத்திமூணு ஆயிரம் வருசத்தில்  இல்லாமலே போயிருமாமே!  நெசமாவா? ரியலி?
இயற்கையின்  படைப்பு.  மனுசன் உண்டாக்குனதில்லை.  ஆனால்   கோடிக்கணக்கான மனிதர்களை வாழவைக்குது!  ஜீவநதி, ஜீவனை வழங்கிக்கிட்டு இருக்கே!  எத்தனை வியாபாரம் இந்த நீர்வீழ்ச்சியை வச்சே!

எல்லாம் இப்ப ஒரு நூறு வருஷமாத்தானாம்..... அதுக்கு முந்தி ஊரே ஜிலோன்னு இருந்துருக்கும்!

வருசத்துக்குக் கோடி மக்கள் வந்து பார்த்துட்டுப் போறதா ஒரு கணக்கு. இந்தக் கோடி சனத்துக்காக தங்குமிடம், சாப்பாட்டுக் கடைகள்னு தொடங்கி, அப்புறம் தின்னு தூங்குனா மட்டும் போதாது..... இன்னும் பலதும் பார்க்கட்டுமுன்னு  எல்லாவிதப் பொழுது போக்குகளுமா.... (புதுசு புதுசாக் கண்டுபிடிக்கிறாங்கப்பா!)

இருபத்திமூணாயிரம் வருசத்துக்குப்பிறகு, இவுங்கெல்லாம் பொழைப்புக்கு வேறெதாவது தேடிக்குவாங்கன்னு நம்பறேன். போகட்டும்.... இதெல்லாம் நம்ம கையிலா இருக்கு, ஐ  மீன்  நீர்வீழ்ச்சி காணாமப்போறது.....

இப்போதைக்கு  அகலமான ஆத்துலே இருந்து தண்ணி  கனமா  ஓடிவந்து  அப்படியெ பொத் னு சரியுது!  மேலே நின்னு பார்க்கும்போது அதிசயமாத்தான் இருக்கு!இந்த இடம்தான்  மேஜைக் கல் இருந்த இடம். இப்போ விஸிட்டர்ஸ் சென்டர். இதன் பின்வாசலுக்குப் பக்கம் சாலையின் அந்தாண்டை  உசரத்தில்  நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல்.  மேலே ஏறிப்போக இன்க்ளைன் ரெயில்வேன்னு ஒரு விஞ்ச்.
இதுகூட  1966 ஆம் வருசத்துலே இருந்துதான் ஆரம்பம்.

அதுலே ஏறிப்போனா ஒரு நிமிட்லே 'மேலே' போயிறலாம்.
கீழே போகும் சாலையைக் கடக்க சின்னதா ஒரு மேம்பாலம். இதுக்கு பெயர் லாக் ப்ரிட்ஜ்.  இணைகள், இணை பிரியாமல் இருக்க இங்கெ வந்து   ஒரு பூட்டை மாட்டிப் பூட்டிட்டால் போது(மா)ம்! \

அட!


தொடரும்..........  :-)


11 comments:

said...

அருவி விழும் இடத்தில் படகிலிருந்து பார்ப்பவர்களுக்கு இன்னும் த்ரில்லாக இருந்திருக்கும்.

லாக் பிரிட்ஜ் - இணை பிரியாமலிருக்க = அங்கேயும் இது போன்ற நம்பிக்கைகள்!

said...

நானும் முச்சடைத்து போனேன்..

என்னா அழகு...


அட...so excited...

said...

seen Nayagara with your help. Thanks.

said...

வாங்க ஸ்ரீராம்.

நம்பிக்கைதான் வாழ்க்கை! எப்படியோ பிரியாமல், அன்போடு வாழ்ந்தால் சரி.

இது வெறும் அருவியா.... பேரருவி! இங்கத்து மஹாராஜாவும், ஹீரோவும் இதுதான்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஹைய்யோ!!!

said...

வாங்க குமார்,

சந்தர்ப்பம் கிடைச்சால் நழுவ விட்டுடாதீங்க.......

said...

இந்த குதிரைலாட நயகாரா அருவியைப் பாக்கவாவது கனடாவுக்கு சுத்தப் போகனும். பாப்போம் என்னைக்குன்னு.

ஒரே வானம் ஒரே பூமி படத்துல கே.ஆர்.விஜயா மலைராணி முந்தானை சரியச் சரியன்னு வாணி ஜெயராம் குரல்ல எம்.எஸ்.வி இசைல பாடுவாங்க. https://www.youtube.com/watch?v=TtNF9vvE4ZA தமிழ் படத்துல நயாகாரா வந்தது அதுதான் மொதல்னு நெனைக்கிறேன்.

சாப்பாட்டுக் கடையும் மத்த எடங்களும் வெறிச்சுன்னு இருக்கே. ஆள் அரவமே காணலையே.

குப்பை போடும் கிறுக்குகள் கூட்டம் குப்பை போட்டுக்கொண்டேயிருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. ம்ம்ம்ம். ஒன்னும் பண்றதுக்கில்ல.

said...

நான் அப்பிடியே ஷாாக்ஆய்ட்டேன் இவ்ளோ தண்ணி எங்கூர்ல இருந்தா எவ்ளோ தென்ன மரம் வைக்கலாம்

said...

@ Malaikottai Mannan,

Please send your email ID here. Won't be published. Will contact you then.

said...

லாக் ப்ரிட்ஜ்.... எங்கேயும் இப்படி சில நம்பிக்கைகள்..... நம்பிக்கை தானே வாழ்க்கை....

பிரம்மாண்டம்... எவ்வளவு தண்ணீர் பார்க்கும்போதே குதூகலம்.

said...

கழுகுப் பார்வைக்கு அனுமதி கொடுத்திருந்தால் குதிரையேற்றம் கிடைத்திருக்குமோ என்னவோ