Monday, March 05, 2018

நம்ம இலக்கு, இன்றைக்கு மான்ட்ரியல் ! (@அமெரிக்கா.... கனடா 13)


லாரன்ஸ் நதியையொட்டியே சாலை போகுது. கடலைப்போய்  நதின்னு பொய் சொல்றாங்க.....!!!!
என்னவோ ஒரு சினிமாவைப் போட்டுவிட்டாங்க எலனா.  எனக்குப் பார்க்க வேணாம்.  முன்ஸீட் தோழிகள் முதல் அஞ்சு நிமிட் படத்தைப்பத்தி ஆஹா  ஓஹோன்னு  கத்திக் கத்தி ரசிச்சுட்டு அப்புறம் கொர்கொர்.....

இவுங்க ரெண்டுபேரும் எப்பவும் தனி உலகத்தில். சின்னச்சின்ன ஸ்டாப்புகளில் எல்லாம் இறங்கறதே இல்லை.....   வண்டியில்  உக்கார்ந்தபடியே   பேசிக்கிட்டே இருக்காங்க. வெளியேகூட  வேடிக்கை பார்க்கறதில்லை.....   எனக்குத்தான் அடடா.... இந்த முன் ஸீட் கிடைச்சுருந்தா.... படங்கள் இன்னும் நல்லா வருமேன்னு........
கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரப்பயணத்துலே  ஒரு ரெஸ்ட்ரூம் ஸ்டாப்.  பத்து நிமிட். விஸிட்டர்ஸ் சென்ட்டர்தான்.  மாண்ட்ரியல் மேப் எல்லாம் கிடைச்சது. ஆனா... எல்லாம் ஃப்ரெஞ்ச் மொழியில்.  அப்ப இங்லிஷ்? தற்சமயம் கைவசம் இல்லை.....   ஙே... 
கனடாக்கண்ணன் குழலூதிக்கிட்டு இருக்கார் !

 மூணரைக்கு மான்ட்ரியல் போயிடணுமாம்.  சீக்கிரம் வந்து வண்டியில் ஏறுங்க.....
ஹைவேயில்  எல்லாம்  ஃப்ரெஞ்சு  மொழிதான். எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கி வச்சேன் :-)
வண்டி போகும் வேகத்திலும்  எதிர்திசையில் போகும் சாலையில்  ஒரு விபத்து  நடந்து, அங்கே ஆம்புலன்ஸ், வீல்சேரில் இருக்கும் பயணிக்கு உதவறதைப் பார்த்தேன்.  பெருமாளே... உயிர்ச்சேதம் ஒன்னும் ஆகாமல் இருக்கட்டுமே....  (இங்கும் ரைட் ஸைட் ட்ரைவிங்தான்!  லெஃப்ட் ஸைட் ட்ரைவிங்குக்குப் பழக்கப்பட்டுப்போன மனசு, அப்பப்ப  ஏதோ  ராங் சைடுலெ போறோமோன்னு நினைச்சு திடுக் திடுக்குன்னு நடுங்க வைக்குதே....   ) 
நகரம் சமீபிக்குதுன்னு  ட்ராஃபிக்  நின்னு நின்னு மெள்ளப்போகும்போதே தெரிஞ்சுருது :-)   Bombay இருக்கு. மும்பை இல்லை !
நாஞ்சொல்லலை....  கடலைப்போய் நதின்னுட்டாங்கன்னு.....  அதேதான் போல....  அந்த லாரன்ஸ் நதியில் இருக்கும் ஒரு தீவில்தான் இந்த மான்ட்ரியல் நகரமே கட்டப்பட்டுருக்கு!  கனடாவில் மிகப்பெரிய நகரமும் இதுதான். அப்ப அந்த லாரன்ஸ் நதி சைஸ்,  என்னவா இருக்குமுன்னு பாருங்க !!!!!

மவுன்ட் ராயல்னு இருந்ததுதான் இப்போ மான்ட்ரியலா மருவி இருக்காம். ரொம்பப் பழமையான ஊர் இது.   வயசு  நானூறு வருஷத்துக்கு மேலே......

(இந்த வருசம் 2017, கனடா 150ன்னு கொண்டாடுறதையும் இதையும் போட்டுக் குழப்பிக்கக்கூடாது.... கனேடிய அரசு கூட்டமைப்பு  (Confederation) செஞ்சு நூத்தியம்பது வருசமாச்சுன்னு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. )
நகருக்குள் நுழைஞ்சு நேராப்போய் நின்னது டார்செஸ்ட்டர் சதுக்கத்தில்தான். நல்ல பெரிய இடம். 2.1 ஹெக்டேர் (கிட்டத்தட்ட அஞ்சேகால் ஏக்கர்!)  அழகான புல்வெளிகள், மரங்கள், நடக்கும் பாதைகள், சிலைகள், ஓய்வா உக்கார இருக்கைகள்னு இது ஒரு பொதுவெளி!
வெள்ளைக்காரனுக்கு  இந்த சதுக்கங்கள் மீது ஒரு  அபிமானம் இருக்கு போல!  ஐரோப்பிய நாடுகள் உட்பட வெள்ளையர் இருக்குமிடங்களில் எல்லாம் ஊருக்கு ஒன்னாவது இருக்கும்.  எங்கூர்லே நகரத்தைக் கட்ட திட்டம் போட்ட காலத்துலேயே   ஊருக்கு நடுவிலே ஒரு  பெரிய சதுக்கமும்,  (அதுலே ஒரு கதீட்ரல்!)  இன்னொரு  பக்கம் நாலு சதுக்கங்களுமா இருக்கே!!

ரொம்பப் பழைய காலத்தில் நம்ம தமிழ்நாட்டில் கூட சதுக்கங்கள்  இருந்துருக்குன்னு  சிலப்பதிகாரத்தில் வருதுல்லே! சதுக்க பூதம் நினைவிருக்கோ?

இங்கத்துப் பறவைதான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. எங்கூர் ஸீகல் மாதிரி இல்லாம அதைப்போல ஒன்னு!

இவ்ளோ அழகா இப்போ இருக்கும் இந்த இடம், ஒருகாலத்துலே இடுகாடுன்னு சொன்னா நம்பறது கஷ்டம்தான். அப்போ இதுக்கு டொமினியன் ஸ்கொயர்னு பேர் இருந்துருக்கு. மேரி- க்வீன் ஆஃப் த வொர்ல்ட் என்ற பெயரில்  ஒரு கத்தோலிக்க சர்ச்  இங்கே பக்கத்துலே   (இப்பவும்) இருக்கே! அதைச் சேர்ந்த  இடுகாடுதான்போல. அதுக்கப்புறம் உள்ளே இருந்தவங்க பலரை  நாட்டர்டேம்  பேராலயத்துக்கு, இடம் மாத்திட்டாங்களாம்.  ஒருசிலரை மட்டும் இடம் மாத்த முடியலை. அதனால்  இடத்தை நிரவிட்டு, அங்கே சின்னச்சின்ன  சிலுவைகள், பூச்செடிகள்னு வைச்சுருக்காங்க. 

( அவுங்க குடும்ப வாரிசு கிட்டே சொல்லி அனுமதிக் கையெழுத்து வாங்கினால்தான்  எதுவும் செய்ய முடியும். அரசாங்கமே கூட அவுங்களுக்குத் தோணியபடி செஞ்சுட முடியாது. பல குடும்பங்கள்  இடம் மாறி எங்கெங்கியோ போயிட்டாங்க பாருங்க.  வாரிசைக் கண்டுபிடிப்பது கஷ்டம்....   இது என்னவோ   உண்மைதான். எனக்கெப்படித் தெரியும்? )

எங்க வீட்டாண்டை இருக்கும் ஒரு சர்ச்சுலே, அதையொட்டி  இருக்கும் சமாதிகளை அப்புறப்படுத்திட்டு, அங்கே சின்னதா  பளிங்குப்பலகை வைக்கறதா ஒரு ஏற்பாடு.  நிலநடுக்கத்துலே இடிஞ்சு போன சர்ச்சை, இப்போ திருப்பிக் கட்டும் வேலை ஆரம்பிக்கப்போகுது. அப்போ கொஞ்சம் பெருசாக்கட்டலாமேன்னா, சுத்திவர சமாதிகள்.  அதை என்ன செய்யப்போறீங்கன்னு நான்  கேட்டப்பதான்  பளிங்குப்பலகை பத்திச் சொன்னாங்க. 

ஏற்கெனவே  மேலும் இடிஞ்சு விழும்போது  ஆபத்துன்னு  அங்கே  கிட்டக்க யாரும் போகக்கூடாதுன்னு கம்பித் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  அதுக்குள்ளே  ஒரு அம்பதறுவது சமாதிகள் மாட்டிக்கிச்சு. 
உறவுக்காரங்க, ஒரு நல்லநாள், நினைவுநாளுன்னு அவுங்கவுங்க  ஆட்களுக்கு பூ கொண்டுவந்து வச்சுட்டுப்போகும்போது, தடுப்புக்குள்ளே மாட்டிக்கிட்ட  சமாதியினருக்கு எவ்ளோ துக்கமா இருக்குமுன்னு நான் நினைச்சுக்குவேன். 

ராத்திரியில் அவரவர் சமாதிக்கு வெளியே வந்து உக்கார்ந்து காத்து வாங்கிக்கிட்டே அக்கம்பக்கம் இருக்கும் மக்களிடம் பேசிக்கிட்டே இருப்பாங்கன்னு கற்பனை செஞ்சுக்குவேன்.  பாவம்....

இது இந்த ஊரின் ரொம்பப் பழைய சர்ச்சும் சமாதிகளும். ஊருக்கு எத்தனை வயசோ அத்தனை வயசு இதுக்கும். 

'நம்மவர்' சொல்வார்,  'அதான் செத்துப் போயாச்சுல்லே.... அப்புறம் எதுக்கு யாரும் பூ கொண்டு வந்து வைக்கலைன்னு உள்ளெ உக்கார்ந்து அழுவாங்களா? போனாப் போனதுதான்!  நீ ரொம்ப வியர்டு.....'  

ஆமாம்லெ...   ஹிஹி.....  சதுக்கத்தைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருக்கும்போது  பேச்சு வேறெங்கெங்கியோ  போயிருச்சு  .....  போகட்டும்...


இங்கே நம்மையெல்லாம் சந்திக்க ஆவலோடு காத்திருந்தார் Pierre   (Official guide)   
மூணுமணி நேரம் இவர் நம்ம கூடவே வந்து ஊரைச் சுத்திக் காட்டப்போறார்.
பெரும்பாலான நகரங்களில் அரசாங்க அனுமதி பெற்ற வழிகாட்டிகள்தான்  நமக்கு நகரத்தைச் சுத்திக் காமிப்பாங்க. கைடுவேலைக்குப் பயிற்சி எடுத்துக்கிட்டு லைசன்ஸ் வாங்கிக்கணும்.

 இதை நாம் யூரோப் டூரில் அனுபவிச்சு இருக்கோம். நம்ம பஸ்ஸில் நம்மகூடவே வரும் டூர் டைரக்டருக்கு நகரின் விவரங்கள் தெரிஞ்சுருந்தாலுமே  பொது இடங்களில் வாயைத் தொறக்கக்கூடாது.  இதுக்காகவே இருக்கும் நகர வழிகாட்டிகள்தான் அந்தந்த நகரின் சிறப்புகளை விவரிச்சுச் சொல்லணுமாம். இந்த வழிகாட்டிகள் சங்கம் ரொம்ப ஸ்ட்ராங்க்.  குழுவாப் போகும்போது.... நகரத்தைச் சுத்திக் காமிச்சதும், ஒரு பயணி இவ்ளோ காசுன்ற கணக்கில் வசூலிச்சு  வழிகாட்டியிடம் கொடுக்கணும். தனிப்பட்ட வழிகாட்டி வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். அவரவர் வசதியைப் பொறுத்து.

அவுங்கவுங்க ஒரு அடையாளச்சின்னம் குச்சியில் மாட்டி, தலைக்குமேல்  கையுயர்த்திப் பிடிச்சுக்கிட்டு நம்மைக் கூப்புட்டுப் போவாங்க. நாம்  'தொலைஞ்சுபோயிடாம'  இருக்கத்தான் இந்த ஏற்பாடு!  கூட்டத்துலே பிரிஞ்சுட்டாலும்.....  பொம்மையைப்பார்த்துட்டு அங்கே ஓடிப்போய் சேர்ந்துக்கலாம்.  பாரிஸ் டூரில் கைடுகள் பத்தாக்குறைன்னு  மூணு வெவ்வேறு குழுவுக்கு ஒரு கைடுன்னு ஆனதில் பெரிய கஷ்டப்பட்டுட்டோம்.


கம்போடியாப் பயணத்துலே நமக்குத் தனி வழிகாட்டி இருந்தது  துளசிதளம் வாசகர்களுக்கு நினைவு இருக்குமே!  பெயர் வீரா !

வழிகாட்டின்னதும் இன்னொரு ஞாபகம். முதல்முதலா  1994 வது ஆண்டு, தில்லியில் இருந்து  ஆக்ராவுக்கு  ஒரு டூர் பஸ்ஸில் போறோம். கைடு சார்ஜ்ன்னு  டிக்கெட்டில் தனியா ஒன்னும் சொல்லலை. 'நம்மவர்'தான்  ( இந்த மய்யத்தால் நம்மவரை கொம்புக்குள் அடைக்கவேண்டியதாப்போச்சுப்பா! )   டூர் முடிஞ்சு  ராத்திரி திரும்பிவரும் சமயம் (வண்டி ப்ரேக்டவுன் ஆகிப்போய் ரிப்பேர் செஞ்சு முடிக்க ரெண்டு மணி நேரம் ஆனது தனிக்கதை.) டூர் கைடுக்கு  தலா அஞ்சு ரூ என்ற  கணக்கில் வசூலிச்சுத் தரலாமுன்னு  ஆரம்பிச்சார்.  ஒரு சின்னப் பையை மக்கள் மத்தியில் அனுப்புனதில், அம்பத்தி மூணு பயணிகள் இருந்த பஸ்ஸில் ஒரு பத்துப்பேர் மட்டும் எதோ போட்டுருந்தாங்க. அடராமான்னு  நாமே  பார்க்க ஒரு மரியாதையா இருக்கும் அமௌன்ட்டை அந்தப் பையில் சேர்த்து கைடு கிட்டே கொடுத்தோம்.  அவருக்கு பேசமுடியாம நாக்கு தழுதழுத்துப் போச்சுல்லெ :-)

அதெல்லாம் ஒரு காலம்..... ப்ச்.

இப்ப எதுக்கு இதைச் சொல்றேன்னா..... நம்மூர்களில்  பார்க்க ஏராளமான சமாச்சாரங்கள், கோவில்கள் இப்படிக் கொட்டிக்கிடக்குன்னாலும்.....  இப்படி வழிகாட்டிகள் இருந்தால்  சுத்திப் பார்க்கிறவங்களுக்கு  வசதியா இருக்கும்.  இங்கே மாதிரி ரொம்பப்படிப்பெல்லாம் கூட இல்லாம (இதுக்குன்னு படிச்சுருந்தா நல்லாத்தான் இருக்கும்!) சும்மா ஊரைச்சுத்திக்கிட்டு இருக்கும் ஓரளவு படித்த இளம்வயதினர்,  நல்ல வேலை கிடைச்சுப் போகும்வரையில்   கைடு 'வேலை' செய்ஞ்சால் நல்லா இருக்குமேன்னு ஒரு ஆதங்கம்தான் !

இப்ப நம்ம கைடு, கையில் ஒரு  மூணு கொடி வச்சுக்கிட்டு  வண்டிக்குள் ஏறி வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.
வாங்க .... அவர் எங்கெங்கே கூட்டிப்போறாருன்னு பார்க்கலாம்.....

தொடரும்...........  :-)

      முக்கிய அறிவிப்பு :  துளசிதளம் புதன்கிழமை லீவு எடுக்குது!   அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை, வழக்கம்போல் :-)

16 comments:

said...

Montreal is a beautiful city. Went on a business trip 18 years ago. Should visit again

said...

மாண்ட்ரியல் நகரம் உங்கள் மூலம் பார்க்கப் போவதில் மகிழ்ச்சி.

கைடு பற்றி சொன்னது 100% உண்மை. நம் ஊரில் நிறைய இதற்கு வாய்ப்பு இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்த வேலைக்கு வருவதில்லை. நம் ஊர் வாசிகளுக்கு கைடாக இருப்பதும் கஷ்டம். வெளிநாட்டவர்கள் வரும்போது கைடாக இருப்பவர்கள் உண்டு.

தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

உண்மையில் கனடா ஒரு அழகான இனிமையான நாடு .ஆங்கிலமும் பிரெஞ்சும் தேசிய மொழிகள் .ஆங்கிலம் பேசுபவர்கள்தான் அதிகம் அனாலும் பிரேன்சுக்கும் சம மரியாதை எங்கும் இருக்கும் .மொன்றியல் போனால கண்ணை காட்டில் விட்டது மாதிரி இருக்கும் எங்கும் எதிலும் பிரெஞ் தான் .அதில் அவர்கள் சமரசம் செய்யமாட்டார்கள் .பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எல்லாம் அங்கு நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் பிரெஞ்சில் தான் பதில் சொல்வார்கள் .இப்பொது நகர பகுதிகளில் ஓரளவு ஆங்கிலம் கதைப்பார்கள் ,குபெக் என்ற மாநிலத்தில் தான் இந்த மொன்றியல் நகரமா வரும் .

இதன் தலைநகரம் குபெக் சிட்டி இன்னமும் அழகாக இருக்கும் .கனடாவின் தலைநகரம் எங்கு அமைப்பது தொடர்பாக பிரச்சனை நடந்தபோது தெரிவு செய்யபட்டது ஒட்டாவா .இது ஒன்ராறியோ ,குபெக் இரண்டுக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது.
ஒரு பகுதி ஆங்கில மொழி கலாச்சாரம் மறு பகுதி பிரெஞ் மொழி ,கலாச்சாரம் பார்க்க நன்றாக் இருக்கும் .

said...

உடன் வந்துகொண்டிருக்கிறேன். நன்றி.

said...

மான்டிரியல்லாம் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது கேள்விப்பட்ட பெயர்.

உங்கள் இடுகையின் மூலமாக இடங்களைப் பார்த்துக்கொள்கிறேன். படங்களும் நல்லா இருக்கு. தொடர்கிறேன்.

said...

கனடாவில் குடி புகுவது எளிது என்று ஒரு பதிவில் படித்தேன்

said...

தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

நன்றி .
தமிழ்அருவி திரட்டி

said...

வாங்க தெய்வா,

சரியாச் சொன்னீங்க. எனக்கும் இன்னொருமுறை போகணும் என்ற ஆசைதான்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்க சொல்றதிலும் ஒரு பாய்ன்ட் இருக்கு! நம்மவர்கள் வழிகாட்டியையே ஒரு வழி ஆக்கிடுவாங்க :-(

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

வாங்க கரிகாலன்.


அருமையான பின்னூட்டம்!

நன்றிகள் பல !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர்வருகைக்கு நன்றி!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நானும் ஒலிம்பிக்ஸ் நடந்தப்பக் கேள்விப்பட்ட இடம்தான் !

இப்பதான் எட்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எல்லாப் பொருத்தமும் இருந்தால் குடிபுகுவதும் எளிதாக இருக்கலாம்!

said...

வாங்க தமிழ் அருவி.

நன்றி.

இந்தப்பெயரில் இங்கே எங்க தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு மலர் வெளி வந்துகொண்டு இருக்கிறது!