Friday, March 16, 2018

யானைக்குக் குதிரைக்கால்..... (@அமெரிக்கா.... கனடா 17)

ஏதோ மார்கெட் பகுதிக்கு வந்துட்டோமா என்ன? இங்கெல்லாம் மார்கெட்ன்னா நம்ம ஊர் போல் காய்கறிக் கடை, மீன்கடை போலெல்லாம் இல்லை.  தனித்தனிக் கூடாரங்களோ, ஷெட்டுகளோ போட்டு  வரிசையா இருக்கும். முக்கியமா கைவினைப்பொருட்கள்.  நினைவுப்பரிசாக் கொண்டுபோகும் வகைகள், ஆன்ட்டீக் பொருட்கள், நகைநட்டு இப்படித்தான்  இருக்கும்.  இதைப் பார்த்தால் சன்டே மார்கெட் போலத்தான் இருக்கு. இன்றைக்கு சன்டேதானே!

ஓவியக் கலைஞர்களும்  தங்கள் கைவேலையைக் காட்டிக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு மணி நேரம் நம்மிடம் இல்லை.....ப்ச்.... வரைஞ்சு வாங்கி இருக்கலாம்....

இந்தப் பகுதியைக் கடந்து தெருக்களுக்குள் போறோம்.  கடைகள் வாசலில் அழகுப்பூக்கள் அங்கங்கே!   கரடியார் 'வா'ன்னு கூப்பிட்டு அணைச்சுக்கிட்டார் :-) கனடா முழுக்கக் கரடிதான்!




கடைகளில் க்றிஸ்மஸ் தீம் கடை ஒன்னு பார்த்துட்டு அதுக்குள்ளே நுழைஞ்சுட்டேன்.  இதே போல  கடைகள் எங்கூரிலும் இருக்குன்னாலும்,  அது  நவம்பர் டிசம்பரில் மட்டுமே.  இங்கே வருசம் முழுசும் இப்படி!  நம்ம யூரோப் பயணத்தில் Swarovski show Room, Austria போனப்ப, ஒரு பகுதி முழுசும் இப்படி க்றிஸ்மஸ் அலங்காரப்பொருட்கள்தான். எல்லாம் க்றிஸ்டல் ஐட்டம் வேற! வாங்கற விலையில் இல்லைன்னு ச்சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு வந்தேன் :-)

அப்ப, இங்கே வாங்கினேனான்னு கேட்கப்டாது, கேட்டோ!  இங்கேயும் வேடிக்கைதான் !

'நம்மவர்' வேற  பசிக்குது, வா போகலாமுன்னு  சொல்லிக்கிட்டே இருந்தார். சரி,மொதலில் வயித்துக்கு ஏதாவதுன்னு தேடித் தேடிக் கடைசியில் ஒரு  சீனக்கடைக்குள் போனோம்.  ஒரு ஃப்ரைட் ரைஸ், ஒரு ப்ளேட்  வெஜ்  ஸ்ப்ரிங் ரோல்ஸ்.  பச்சைப்பயறு முளைகட்டிக் கிட்டத்தட்ட செடியாகவே வளந்துருக்கு!  ஸ்ப்ரௌட் :-)

சாப்பாட்டுக்குப்பின்  ச்சும்மா  ஊரைச் சுத்திக்கிட்டு இருந்தோம்.  கடைத்தெருதானே! இங்கேயும் ஒரு நாட்டர் டேம் பாஸிலிக்கா இருக்கு!  உள்ளே போகலை.....    இது நாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னே பார்த்த நாட்டர்டேம் சர்ச்சைவிடப் பழசு. 1647 லேயே கட்டுனதாம்.   போர் முற்றுகை, தீ விபத்துன்னு  ரெண்டுமுறை  அழிஞ்சு போய் திருப்பித் திருப்பிக் கட்டி இருக்காங்க. இப்போ மூணு வருசத்துக்கு முன்னே முன்னூத்தியம்பது  வயசுன்னு கொண்டாட்டம் நடந்துருக்கு!

இந்த ஏரியாவை விட்டு ரொம்பதூரம் விலகிப்போகாமல் கவனமாவே  சுத்திக்கிட்டு இருந்தப்ப, ஒரு ஐஸ்க்ரீம் கடை கண்ணில் பட்டது. பகல் சாப்பாடு சரியா இல்லை... ஒரு ஐஸ்க்ரீம் வாங்கி உள்ளே தள்ளலாம்.
 கோனில் வாங்கி நக்கிக்கிட்டுப்போகாம, கப்பில் வாங்கிக்கிட்டேன்.
தின்னுக்கிட்டே போகும்போது நடைபாதியில் சின்ன மேடை பார்த்துட்டு அங்கே தற்செயலா உக்கார்ந்தேன்.  ஒரு ஃபொட்டாக்ராஃபர் அருமை இன்னொரு ஃபொட்டாக்ராஃபருக்குத்தான் தெரியும் (!) என்பது உண்மையாச்சு!  ஐஸ்க்ரீமை முழுங்கிக்கிட்டேத் தலையைத் திருப்பினால் தலைக்கு மேலே  சில உருவங்கள்.  யாருக்கு இந்த நினைவுச்சின்னமுன்னு பார்த்தால்.....  Livernois  a family of  Photographers!
மூணுதலைமுறையா படம் எடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க. 1854 இல் முதல் ஃபொட்டொ ஸ்டூடியோ வச்சவர்,  தன்னுடைய  34 வது வயசுலே சாமிக்கிட்டே போயிட்டார். அதுவரை அவருக்கு  உதவியா இருந்து  புகைப்படக்கலையை நல்லாவே கத்துக்கிட்ட அவர் மனைவி, ஸ்டூடியோவைத் தொடர்ந்து நடத்தறாங்க. குடும்பத்தைக் காப்பாத்தணுமே!

இப்போ உதவிக்கு வந்தவர் அவருடைய மருமகன். அப்புறம்  மகனே வளர்ந்து பொறுப்பெடுத்துக்கிட்டார். இப்ப மாதிரி நவீன மெஷீன்கள் எல்லாம் அப்போ ஏது?  இருட்டறையில், இளம் சிகப்பு வெளிச்சத்தில்  ஃப்ல்ம் கழுவி எடுப்பாங்க. கருப்பு வெள்ளைப் படங்கள்தான்.  கெபாக்கின் முன்னூறாவது பொறந்தநாளுக்கு (1908 ஆம் ஆண்டு)  இவர்தான்  படங்கள் எடுத்துக் கொடுத்துருக்கார்.   இவர் மறைவுக்குப்பின்னும் தொடர்ந்து ஸ்டூடியோ நடந்துக்கிட்டுத்தான் இருந்து, சமீபத்துலே 1974 இல்  மூடிட்டாங்க.
இதுவரை மூணு லக்ஷம் படங்கள் எடுத்துருக்காங்க இந்தக் குடும்பத்தினர்.  முக்கால்வாசி எண்ணிக்கை, அப்போதையக் காலக்கட்டத்தின் சரித்திரம் சொல்லும் ஆவணங்கள். அதை இப்போ பாராட்டித்தான் இந்த நினைவுச்சின்னத்தை வச்சுருக்கு நகரம்.

எல்லாஞ்சரி. ஆனா இதை ஏன் இங்கே வச்சுருக்காங்க? இப்ப நான் உக்கார்ந்துருக்கும் மேடைக்குப் பின்னால் இருக்கும் கட்டடம்தான் இவுங்க ஸ்டூடியோ !   செயின்ட் ஜீன்ஸ் தெரு!

மாடர்ன் கெமெரா, அதுக்குண்டான மற்ற மெஷீன்ஸ் எல்லாம் வந்ததும், ஸ்டூடியோவில் போய் படம் எடுத்துக்கும்  ஆட்கள் குறைஞ்சுட்டாங்க. ஃப்ல்ம் ரோல் காலம் போய், இப்போ டிஜிட்டல்  கெமெரா வந்தபின் எல்லாம் ஈஸிபீஸி ஆகிருச்சு. அதுவும் செல்ஃபோன் கெமெரா வந்துட்டதால்,  உலகமக்கள் யாவரும் ஃபொட்டாக்ராஃபரா மாறிட்டது உண்மை :-)
இப்போ இங்கே வெவ்வேற கடைகள் வந்துருக்கு.  அதுலே ஒன்னு இசைக்கருவிகள் கடை. மகளுக்கு எதாவது வாங்கலாமேன்னு போய்ப் பார்த்தேன்.  தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி.....  வகையில் இது ஒன்னு. நம்மூர் சிப்ளாக்கட்டை ஞாபகம் வந்தது உண்மை :-)
பாய்மரக்கப்பல் சின்னம் பதிச்ச  குடிநீர் ஃபௌன்டெய்ன்.  கெபாக் நகரத்துக்கான கொடியில் இந்தப் பாய்மரக்கப்பல் சின்னம்தான் இருக்கு. நம்ம கைடு கூட வச்சுருந்தாரே!
இதுக்குள்ளே மழை ஆரம்பிச்சுருச்சு. (அதானே... நல்லவங்க வந்துறக்கூடாதே....   ஹிஹி )

இந்த க்ராஃபிட்டிக் கலாச்சாரம்  எப்போ ஒழியுமோ......  
விண்டோ ஷாப்பிங்காச் செஞ்சுக்கிட்டுப் போறேன். ஒரு கடையில் உள்ளே போய்ப் பார்க்கத்தான் வேணுங்கறாப்போல் அலங்காரம்.    'நம்மவர்'  பயந்து போய்,  நீ போய்ப் பார்த்துட்டு வா.....ன்னுட்டு ஓரங்கட்டிட்டார்.   ச்சும்மா சொல்லக்கூடாது....   எல்லாமே அட்டகாசம்!   சரவிளக்கு ஒன்னு பிரமாதம்!

கொண்டு வர்றது கஷ்டம்.... வந்ததுக்கு எதாவது சின்னதா வாங்கலாமேன்னு பார்த்தால் யானைஸ் இருக்காங்க. அதுலே ஒரு கண்ணேறு கழிக்கும் சார்ம்  வாங்கினேன்.  துருக்கி நாட்டுச் சமாச்சாரம் (அநேகமா சீனத் தயாரிப்பா இருக்கணும்!)
இதுக்குள்ளே மழை வலுக்கவே  கொஞ்ச தூரத்தில் இருந்த விஸிட்டர்ஸ் சென்டருக்குள் போயிட்டோம். பயணிகளுக்கான தகவல்கள், ஓய்வா     உக்கார்ந்து படிக்க இருக்கைகள்,     வெவ்வேற காலநிலைகளில் உள்ளூர் படங்கள் காமிக்கிறது, ரெஸ்ட்ரூம் இப்படி நல்லா இருக்கு.




குளிர்காலம் இங்கே விசேஷம்!  நான் அப்போ இங்கே வரமாட்டேன் :-)  போதும் குளிருன்னு ஆகிப்போச்சு இந்த முப்பது வருச நியூஸி வாழ்க்கையில்.
கொஞ்சம் மழை நின்னதும் வெளியே அந்தாண்டை இருக்கும்  வாட்டர்ஃப்ரன்ட் பார்க்கக் கிளம்பினோம். பெரிய பரந்த வெளி!  பயணிகள் கூட்டம் ஏராளம்.   எல்லா டூர் பஸ்களும் வந்து  ஓரங்கட்டி நிக்குதுகள்.  ஏறக்கொறைய டூர் கம்பெனிகள் எல்லாம் ஒரே மாதிரி பயணத்திட்டம் போட்டுருக்குங்க போல!


இப்ப நாம் உயரத்தில் இருக்கோமில்லையா.... கீழே நதி அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்கு!    இந்த  இடத்துக்கு Dufferin Terrace னு பெயர்!  பனி விழும் காலத்தில் முழுக்க முழுக்க பனி கொட்டிக்கிடக்குமாம். பனி விளையாட்டுக்கு அப்போ பஞ்சமில்லை. (எனக்கு பனி வேணாம்.... போதும் போதும்.....) உண்மையில் அப்போதான் பயணிகள் வருகை ரொம்ப அதிகம்னு சொல்றாங்க.

கெபாக் நகரின் ஸ்தாபகர் Samuel Champlain அவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னமா சிலை வச்சுருக்காங்க. 1898 லே வச்சு  இப்ப சிலைக்கே நூத்தி இருவது வயசாகிருச்சு! பீடத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் தேவதைகள் கொண்டாட்டம் அழகு!
அப்பதான் பார்க்கறேன்.... நம்ம யானை அங்கெ  ஸ்டில்ட் வாக்கிங் பண்ணிக்கிட்டு இருக்கு!  திருவிழாவில் கட்டைக் காலில் ஏறி வருவாங்க பாருங்க அப்படி! குச்சிக்குப் பதிலா குதிரைக்கால்!   ஸ்பேஸ் எலிஃபன்ட்ன்னு பெயராம் !!

ஸால்வடோர் டாலியின் அதீத கற்பனைகளில் ஒன்னு இது!  பாவம்.... நம்ம யானைக்குக் கால்வலி இருக்காதோ? ப்ச்.  வெங்கலச்சிலைதான். கனமும் பயங்கரமா இருக்குமே!

டாலியின் சித்திரங்களில் வரைஞ்சதை இப்போ சிற்பமா வடிச்சுட்டாங்க . நல்ல உயரம் . நாலு மீட்டர்!  போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு  முதுகுலே ஒரு பிரமிடைச் சுமந்துக்கிட்டு இருக்கு! கற்பனைக்கு எல்லையே இல்லை !  டாலியின் மீசையைப் பார்த்துதான்  நம்ம இம்சை அரசனுக்கு மேக்கப் செஞ்சுருப்பாங்கன்றது என் தோணல்.
நாம் கிளம்ப வேண்டிய நேரமும் வந்துருச்சுன்னு காத்துக்கிட்டு கிடந்த பஸ்ஸுக்குப் போயிட்டோம்.

சிலைகளுக்கு இங்கேயும் பஞ்சமே இல்லை!   இதெல்லாம் நின்னு நிதானமா சுத்திப் பார்க்கவேண்டிய ஊர். நம்மைப்போல  ஒருநாள் பயணத்துலே வந்துட்டுப்போறது....  ப்ச். அதுலே மூணும் மூணும் ஆறுமணி நேரம் பயண நேரம். மூணு மணி நேரம், அங்கே பார், இங்கே பார்னு கைடு சொல்றதை முக்கால்வாசி வண்டிக்குள் உக்கார்ந்தே பார்த்து ஊர் சுத்திடறோம். என்னமோ போங்க.....  ஒரு ஊர் பார்த்தோம் என்ற கணக்குதான்.

மழையும் நல்லாவே பிடிச்சுருச்சு....  ஒரு வழியா மான்ட்ரியல் ஊருக்குள் நுழைஞ்சதும்,  பழைய மான்ட்ரியல், சைனா டவுன் இருக்கும் பகுதியில் இறங்கிக்க விருப்பம்  இருந்தால் இறங்கிக்கலாமுன்னு ஒரு சின்ன நிறுத்தம்.  பாதி பஸ் காலி.  இங்கிருந்து நம்ம ஹொட்டேல் ஒரு ரெண்டு கிமீ தூரம்.
சரியா எட்டுமணிக்கு நம்மை ஹொட்டேல் வாசலில் இறக்கிவிட்டாங்க.

காலையில்  இங்கிருந்து கிளம்பிப்போய் திரும்ப வந்துன்னு பனிரெண்டு மணி நேரம் ஆகி இருக்கு!

நாளைக்கும்  காலையில் இதேமாதிரி  எட்டுக்குக் கிளம்பணுமுன்னு சொன்னதோடு எலனாவின் இன்றையக் கடமை முடிஞ்சது.

நாங்க  அறைக்குப்போய் கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிட்டு,  சாப்பிடக் கிளம்பினோம்.  மழையில் சென்னை எக்ஸ்ப்ரெஸ் வரை போக மனம் இல்லை. அஞ்சு நிமிட் நடையில் இருக்கும் தேவியே போதும்னு முடிவு.
குடையுடன் பொடிநடையில் போய்  சாப்பிட்டு வந்தோம். வழக்கமான நார்த் இன்டியன் மெனுதான்.  கூட்டமே இல்லை.

நல்லாத் தூங்கணும்.  நடந்து நடந்தே கால்வலி,  கெபாக்லெ ஒரு குதிரைவண்டி வாங்கியும் கூட..... :-)
போன பதிவை படிச்சுட்டு, மான்ட்ரியலில் தஞ்சை ரெஸ்ட்டாரண்ட் னு ஒன்னு இருக்கு. அருமையான சாப்பாடுன்னு தகவல் அனுப்பினார் நம்ம   இலவசக் கொத்தனார். இவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கான சிறு குறிப்பு: இவர்தான் நம்ம சரித்திர வகுப்புக்கு க்ளாஸ் லீடர்!

 அப்புறம் கூகுளில் தேடிப்பார்த்தால் நம்ம ஹொட்டேலில் இருந்து ஆறேகால் கிமீ தூரம்!

எதுக்கும் இருக்கட்டுமுன்னு  குறிச்சு வச்சுக்கிட்டேன். இன்னொருக்கா அந்தப் பக்கம் போனால் அங்கே போய் சாப்பிட்டால் ஆச்சு. சேதி உங்களுக்கும்தான், கேட்டோ!

 தொடரும்.....  :-)


7 comments:

said...

சண்டே மார்க்கெட் - நீண்ட நெடிய கட்டிடங்களும், அகலமான அழகான தெருக்களும் ரசிக்க வைக்கின்றன. அங்கே சிலைகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால் சிலையை வைத்துச் செய்யும் அரசியலுக்குத்தான் பஞ்சம்!

said...

ippo enga irukkeenga ? I am in Toronto. Are you coming here?

said...

வாங்க ஸ்ரீராம்.

குரங்கணிக்கு ராணுவ ஹெலிக்காப்டர் அனுப்பும் கனேடியன் பிரதமர், சிலை அரசியலை எப்படிக் கண்டுக்காம விட்டுருக்கார்?

:-) ஆதாயம் இருப்பதைக் கவனிக்கலையோ?

said...

வாங்க ராமதுரை,

முதல் வருகைக்கு நன்றி.

இந்தப் பயணம் போன ஆகஸ்ட்- செப்டம்பரில் நடந்தது. துளசிதளத்தில் அப்போ வேற ஒரு படம் ( இந்தியப்பயணம்) ஓடிக்கிட்டு இருந்ததால் அதை முடிச்சுட்டு, இதைக் கையில் எடுத்தேன்.

said...

அருமை நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

said...

தகவல் பகிர்வு - நன்றி.

படங்கள் மூலம் நாங்களும் சுற்றி வருகிறோம் உங்களுடன்....