Monday, April 02, 2018

எல்லாத்துக்கும் நேரமுன்னு ஒன்னு இருக்குல்லே! ..... (@அமெரிக்கா.... கனடா 24)

நாளைக்கு இங்கிருந்து கிளம்பணுமுன்னு நினைக்கும்போதே....  பகீர்னு இருக்கு! மிச்சம் இருக்கும் அரை நாளில் ஒரு நிமிட் கூட வீணாப் போகக்கூடாதுன்னு.... துடிப்பு. நெனப்புதான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு பெரியவங்க யாரோ(!) சொல்லி வச்சுட்டுல்லே போயிருக்காங்க.
சின்ன ஓய்வு போதுமுன்னு கிளம்பிக் கீழே வந்து பக்கவாட்டு வழியா, ரெஸ்ட்டாரன்டுகள் இருக்கும் பகுதி கடந்து லாக் ப்ரிட்ஜ் தாண்டி இன்க்ளைன் ரெயிலடிக்கு வந்து முழுநாளைக்கான டிக்கெட்டை வாங்கியாச்.  கீழே போய் எதாவது லஞ்ச் முடிச்சுக்கலாம் முதலில்.


நெட்டுக்குத்தலா இறங்கி வரும்போது, காலையில் நம்ம ரெக்ஸ் காமிச்ச காட்சிகள் எல்லாம் நல்லாவே புரிஞ்சது!

படகின் அடிப்பாகம் நல்லத்தான் மாட்டிக்கிட்டு இருக்கு, இல்லே?  முழுசா நகர்ந்து வந்தா, கீழே விழும்போது என்ன ஆகும்....  சுக்கு நூறு....

துருப்பிடிச்சுச் சின்னச்சின்னதாக்  கரைஞ்சு,  இப்போ இவ்ளோதானாமே....

டேபிள்ராக் வெல்கம் சென்ட்டர் எப்பவும் போல கலகலன்னு பயணிகள் கூட்டத்தால் நிறைஞ்சுதான் இருக்கு.  இங்கே மேற்கூரையில் இருந்து தொங்கும் விளக்குலே நம்ம யானை.....

கல்கடை அட்டகாசம்.... என்னா நிறமப்பா.....
டிம்ஹார்ட்டனில் க்ரில்டு ச்சீஸ் ஸான்ட்விச் முடிச்சுட்டு,  ரெயின்போ ப்ரிட்ஜ் வரை போகலாமுன்னு  நடை....
இடப்பக்கம் பூராவும் பசுமை...... வலப்பக்கம் பூராவும்  சுழித்தோடும் நியாகரா நதி....
கப்புச்செல்லம்.....  Black Chipmunkபட்டுச்செல்லம் :-)
ஏற்கெனவே சொன்னாப்ல    மனுஷன் த்ரில்லுக்கு அலையறான்பா.... அதுக்குன்னு புதுசு புதுசா எதாவது கண்டுபிடிச்சு வியாபாரம் கனஜோரா நடக்குது.  Zipline travelனு ஒன்னு..... துணித் தொட்டில்போல ஒன்னுலே உக்கார்ந்துக்கிட்டு  சர்னு நதிக்கு மேலாக நீர்வீழ்ச்சியை நோக்கி அந்தரத்துலே போறது.


ஒருக்கா நாம் இட்டாலிப் பயணத்தில் காப்ரித் தீவுக்குப் போயிருந்தப்ப இப்படித்தான் Mount Solaro என்ற இடத்துலே ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து மலை உச்சிக்குப் போறோம். வெறும் பலகை மாதிரி ஒன்னு, அதுலே நடுவிலே ஒரு இரும்புக்குழாய். குழாய்க்கு ரெண்டுபக்கமும் கால்களைத் தொங்கப்போட்டுக்கிட்டு உக்கார்ந்து, அந்தக் கம்பிக்குழாயைப் பிடிச்சுக்கணும். அதுபாட்டுக்கு ஐநூத்திஎம்பத்தியொன்பது மீட்டர் உயரத்துலே போகுது. கீழே பார்க்கவே பயமா இருக்கு.  ஆனாலும் சமாளிச்சு எப்படியோ போயிட்டோம் :-)  

அப்போ சின்ன வயசு.  வியாதி இல்லாத உடம்பு. இப்போ இதெல்லாம் நினைச்சுப் பார்க்கவும் முடியுமோ?  சமீபத்துலே இதே சேர்லிஃப்ட் யூ ட்யூபில் பார்த்தேன். வசதியா உக்கார்ந்து போறமாதிரி பண்ணி இருக்காங்க.மேம்படுத்தப்பட்ட வகை! 

கொஞ்ச நேரம் நின்னு தொட்டில்களையும் வேடிக்கை பார்த்துட்டுத்தான் போனோம் :-) விடமுடியுதா? நாலு கம்பி போட்டுருக்காங்க. ஒரே சமயம் நாலுபேர் போகலாம்!


நிதானமா அங்கங்கே உக்கார்ந்து, க்ளிக்ஸ் முடிச்சுக்கிட்டு ரெயின்போ ப்ரிட்ஜ் வரை போயிட்டோம்.   இதுலே நடந்துபோய் பார்க்க ஆசையா இருக்கு. விசாரிச்சால்....  பாஸ்போர்ட்  காண்பிச்சால் போக விடுவாங்களாம். அட ராமா.....    அறையிலே  வச்சுட்டுல்லே வந்துருக்கோம். (இரும்புப்பெட்டி இருக்கு, அறையில்!)


கொஞ்ச நேரம் அங்கேயே நின்னு பார்த்தால்  வண்டிகள் பறக்குது.  பாதசாரிகளுக்குத் தனிப்பாதை ! பாலத்துக்கு மேலே நடந்துபோய்ப் பார்க்கும் ச்சான்ஸை இப்படிக் கோட்டை விட்டுட்டோமேன்னு   மன வருத்தம்தான்..... ப்ச்......
இந்த பாலம் கட்டுனது 1941 லே.  கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம். முந்தி இதே இடத்தில் ஒரு பாலம் இருந்துருக்கு. ஹனிமூன் ப்ரிட்ஜ்ன்னு பெயர்.  1938லே அந்தப் பாலம் உடைஞ்சு விழுந்துருச்சு....                (யாரும் அப்போ அதுமேலெ நின்னு தேனிலவைக் கொண்டாடலை என்று நம்புவோம்!)

அதுக்குப்பிறகு  1940லே  புதுப் பாலம் கட்ட ஆரம்பிச்சு ஒன்னரை வருசத்துலே கட்டி முடிச்சு 1941 லே திறந்துருக்காங்க.  மொத்த நீளம் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா  அரை கிமீ கூட இல்லை. நானூத்தி நாப்பத்தியிரண்டு மீட்டர்னு கணக்கு. இதுலே பாலம் மட்டும்  இருநூத்தித் தொன்னூறு மீட்டர்.  வில்போல வளைஞ்சு இருக்கும் அமைப்பு.  கீழே தண்ணியில் இருந்து அறுபத்தியிரண்டு  மீட்டர் உசரம்.
இந்தப் பாலத்துக்குக் கொஞ்சம் முந்தி அமெரிக்கப்பகுதி நியாகரா வ்யூவிங் டெக், தண்ணிக்கு மேலே   நீட்டிக்கிட்டு இருக்கு. சட்னு பார்த்தால் பாதிப் பகுதி உடைஞ்சு கிடக்கோன்னு தோணும். (படம்: காலை  நம்ம படகு டூரில்  எடுத்ததுதான்!)

  கனடாப் பகுதியில் ரெயின்போ ப்ரிட்ஜ் ஆரம்பிக்கும் இடத்துக்கு முன்னால்  க்ரௌன்ப்ளாஸா ஹொட்டெல். கீழ்தளம் பூராவும் கடைகள். அதை வேடிக்கை பார்த்துட்டு, ஒரு கோகோகோலா கடைக்குள் போய் ஆரம்பகாலத்து கோலா பாட்டில்களின் அழகையெல்லாம் ரசிச்சுக்கிட்டே ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் ஆச்சு!
நம்மவர் ஒரு காலத்தில் கோகோகோலா கம்பெனியில் வேலை செஞ்சுருக்கார். அந்த அபிமானம்தான்.... ஹிஹி....


திரும்ப ஹொட்டேலுக்கு நடந்து போகணுமேன்னு நினைக்கும்போதே கால் ரொம்ப வலிக்க ஆரம்பிச்சது. சரியான திருடு அது!   பஸ் இருக்குமான்னு தெரியலை... டாக்ஸி கிடைக்குதான்னு பார்த்தால் ஆப்ட்டது.  அஞ்சே நிமிசத்துலே கொண்டுவந்து விட்டுட்டார் அலி.

அந்த அஞ்சு நிமிசத்துலே அடுத்த நாளுக்கான திட்டம் உருவாகிருச்சுன்னு சொன்னா நம்புவீங்களா?

ரெயின்போ ப்ரிட்ஜ் வழியா அமெரிக்கப் பகுதிக்குப் போக  பஸ் இருக்கான்னு அலிகிட்டே விசாரிச்சதுக்கு, 'டூரிஸ்ட் பஸ்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனா நடந்தே போகலாம். டாக்ஸி சர்வீஸும்  உண்டு'ன்னார். நாப்பது  கனேடியன் டாலர் சார்ஜ்.  டாக்ஸி எங்கே புக் பண்ணிக்கணும்? இல்லே நீங்களே வரமுடியுமான்னா..... சரின்னுட்டார்!  பழம் நழுவி.....   பாலில்.....   ஹிஹி.

மறுநாள் பத்தரைக்கு வரச்சொன்னோம்.  நியாகரா பயணத்திட்டம் உருவாகும்போதே  ரெண்டு நாடுகளில் இருந்தும் பார்க்கணும் என்பதுதான் முடிவு. ரெண்டு நாள்  கனடாப்பக்கம், ரெண்டு நாள் அமெரிக்காப் பக்கம்.  அதுக்குத்தான் நாம் கனடா போனதே. ஹொட்டேல்களையும்  நியூஸியில் இருந்தே புக் பண்ணியும் ஆச்சு.

எனக்கு நடந்து போக ஆசை. ஆனால் பெட்டிகள் இருக்கே.  உருட்டிண்டே  போகப்டாதா? போகலாம்....  ஆனால் நாம் தங்கப்போகும் ஹொட்டேல்வரை பொட்டிகளை உருட்ட முடியுமோன்றது நம்மவர் வாதம்.

"மொதல்லே  இங்கிருந்து ப்ரிட்ஜுக்கு எப்படிப்போவே?" 

" ஙே......."

அறைக்குப் போனவுடன், அருவி இருக்கான்னு ஜன்னலில் பார்த்து கன்ஃபர்ம் செஞ்சுக்கிட்டேன் :-)

 " நாளைக்கு இந்த ஊரில் இருக்கமாட்டோமே.... இன்னொருக்கா பேரருவியைக் கிட்டக்கப்போய் பார்க்கலாமா? "

'கொஞ்சம் இருட்டட்டும் போகலாம்'னு நம்மவர் சொன்னார். அதுவுஞ்சரிதான். லைட்ஸ் பார்க்கலாமே!  அதுவரை? இருக்கவே இருக்கு ஜன்னல் :-)

காஃபி ஒன்னு தயாரிச்சுக் குடிச்சுட்டு கீழே இன்க்ளைன் ரெயிலடிக்குப் போறோம். நாள் முழுக்கப் போய் வர்ற டிக்கெட்  மத்யானம் வாங்குனது வேற கையில் இருக்கு. வேஸ்ட் பண்ணலாமா?

இருட்ட ஆரம்பிச்சதும் விளக்கொளியில் அருவி அட்டகாஸம்.

எட்டரை வரை அங்கேயே சுத்திக்கிட்டு இருந்து திரும்ப  ரெயிலில் மேலே  வந்தாச்சு. இனி ராச்சாப்பாடுன்ற கடமை ஒன்னு இருக்கே......  அவ்ளோதூரம் நடந்து இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் போக வேணாமுன்னு  Applebee's  ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்டு முடிச்சு அறைக்கு  வந்து ஜன்னலில் இடம் பிடிச்சேன்.
'இவளிடம் சொல்லிப் பயன் இல்லை'ன்னு இவர் தூங்கிட்டார். நான் மட்டும் வலையில் ஒரு கண்ணும் அருவியில் ஒருகண்ணுமா இருந்துட்டு, எப்பதான் லைட்ஸ் ஆஃப் ஆகுதுன்னு  பார்த்துக்கிட்டே இருந்தேனா....   ஒன்னே முக்காலுக்கு  அருவி காணாமப்போயிருச்சு :-)

சரி. போய்த் தூங்குங்க. நாளைக்கு அமேரிக்கா...............

தொடரும்........:-)


PINகுறிப்பு :  மக்களே!    பயணம் ஒன்று அமைந்துள்ளது.  பத்து நாள் துளசிதளத்துக்கு லீவு.  சித்திரையில் சந்திப்போம்!  


11 comments:

said...

அப்பாடி... இரவு ஒண்ணேமுக்கால் வரை தூங்காம காத்திருந்து லைட் அணைச்சப்புறம் தான் தூங்கி இருக்கீங்க! என்ன ஒரு கடமை உணர்வு! :) பாராட்டுகள்.....

விளக்கொளியில் அருவி - அற்புதம்.

தொடர்கிறேன்.

said...

புதிய பயணம் சிறக்க வாழ்த்துகள். சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

said...

வழக்கம்போல அருமையான பயணம். அழகான புகைப்படங்கள். நாளைக்காகக் காத்திருக்கிறோம்.

said...

பின்னூட்டம் தொடர்ந்து போடமுடியலை. ஆனால் தொடர்ந்து இன்டெரெஸ்டிங் ஆக இருக்கு. படித்துக்கொண்டு வருகிறேன். பார்க்க முடியாத்தைப் பார்க்கும் வாய்ப்பு. தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

இன்றைக்கு நேரம் ஒதுக்கி மொத்தமாக ஏழெட்டு பதிவுகளை படிக்க உள்ளே வந்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

'போனா வராது....பொழுது போனாக்கிடைக்காது' ன்ற நிலையாச்சே! அதான் தூக்கத்தை விட்டொழிச்சேன் :-)

said...

வாங்க ஜிரா,

உங்களுக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்து(க்)கள்!

பயணம் நன்றாகவே (!) அமைந்தது :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!

நாளை வந்தே விட்டது :-) பயணக்கதையைத் தொடரலாமா !

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பின்னூட்டம் இல்லையென்றாலும் படித்தால் சரி !

said...

வாங்க ஜோதிஜி.

நேற்று இங்கே வருஷப்பிறப்புக்கான பூஜையில் உங்க திருப்பூர் குடும்பம் ஒன்றை சந்தித்தேன்.