Wednesday, April 18, 2018

கோட்டையும் கொடியும்! (@அமெரிக்கா.... கனடா 26)

கண் முழிச்சவுடன் பேரருவிப் பக்கம் எட்டிப் பார்த்து, அடர்த்தியான புகையை வச்சு   'ஆஹா.... அது அங்கேதான் இருக்கு'ன்னு உறுதிப்படுத்திக்கிட்டேன் :-)
அறை மேஜையின் ஓரத்தில் இந்த மைக்ரோவேவ் ஏன் உக்கார்ந்துருக்குன்னு  தெரியலை. அதுக்காக அதை விட முடியுமா? க்ளிக் க்ளிக்....    :-)
கடமைகள் முடிச்சுக் காலை உணவு டோனிரோமாவில்.  அறை வாடகையுடன் இதுவும் சேர்த்திதான்.

கொஞ்சம் நல்லா சாப்பிட்டுக்கோ.... கொஞ்சம் அதிகமாச் சுத்த வேண்டி இருக்கும்னார் 'நம்மவர்' :-)

எதிரில் இருக்கும் சர்ச் அசப்பில் நம்மூர் கதீட்ரல் மாதிரி இருக்கு என்பதால்  மனதில் சின்னதா ஒரு ஏக்கம்.....   ப்ச்.....  எங்கூர் நிலநடுக்க அழிவில் இதுவும் ஒன்னு.....  எப்போ  திரும்பக்  கட்டுவாங்களோன்னு  தெரியலை....   தனிப்போராட்டம் செஞ்சு ஓய்ஞ்சு போயிட்டோம்.....  ஹூம்....

உள்ளூர் அட்ராக்‌ஷன் என்னன்னா ....  பேரருவிதான்!  அதுதானே இங்கே மெயின் ரோல் :-)  சாயங்காலம் வேணுமுன்னா ஒரு நடை போய் வரலாம். அதுக்கும் ஒரு கிமீ தூரம் நடக்கணும்......    கனடாப் பகுதிபோல,  இருந்த இடத்தில் இருந்தே அனுபவிக்க முடியலைன்றது பெரிய மைனஸ் பாய்ன்ட்டாத்தான் எனக்கு இருக்கு :-(
மேலே படம்: நம்ம மாடியில் இருந்து.... இடதுபுறம் இருக்கும் வெள்ளைக் கட்டடம்தான் விஸிட்டர்ஸ் சென்ட்டர்.

நம்ம ஹொட்டேல் வாசலில் இருக்கும்  பஸ் ஸ்டாப்புக்கு வந்துருந்தோம்.  கோட்டைக்குப் போகணுமே....   அதுவும் பழைய கோட்டை!  பெயரே அதுதாங்க....  ஓல்ட் ஃபோர்ட்! ஓல்ட் ஃபோர்ட் நியாகரா !

இங்கிருந்து சுமார் பதினைஞ்சு மைல்.  நியகரா கவுன்ட்டி ஃப்ரீ   ஷட்டில் பஸ்  விடுது!   டிஸ்கவர் நியாகரா ஷட்டில்....ஃபால்ஸ் டு த ஃபோர்ட்!

கண்டதெல்லாம் இலவசம் கொடுக்கற தமிழ்நாடு, அதையெல்லாம் நிறுத்திட்டு இந்த மாதிரி செய்யக்கூடாதோ?  எல்லோரும் வேலைக்குப்போய் சம்பாரிச்சுத் தன் குடும்பத்துக்கு வேண்டியதை வாங்கிக்க மாட்டாங்களா?  அப்பதானே சுய கௌரவம் இருக்கும்!

ச்சும்மாக்கிட மனசேன்னேன். எப்பப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும்  நம்மூரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் துளைச்செடுத்துரும்........... இதோடு பெரிய தொல்லை....
நாம் நிக்கும் இந்த பஸ் நிறுத்தம்தான் இங்கத்து விஸிட்டர் சென்டரில் இருந்து ரொம்பவே கிட்டக்க. இங்கிருந்துதான் ஆரம்பமே!   பஸ் எதிர்வாடையில் போச்சு. நமக்கு  அதுவே திரும்பி வரும் போல!  ஆனால் பழைய பஸ் ஒன்னு  வந்துருச்சே:-)
என்னடா இது எதோ  மொபைல் பள்ளிக்கூடத்துக்குள்ளே வந்துட்டோமோ?  ஹிஹி.... இருக்கைகள் எல்லாம் அப்படித்தான் இருக்கு!
மக்களே  .... இலவச சவாரின்னு சும்மா இருந்துறாதீங்கன்னு 'குறிப்பால்' உணர்த்திக்கிட்டு இருந்தார் ஓட்டுனர்!

உள்ளூர் மக்களும் இந்த  சேவையைப் பயன்படுத்திக்கிறாங்க என்பது  கொஞ்ச நேரத்தில் புரிஞ்சது. அக்வேரியம், ஆர்ட் சென்டர், ரயில்வே ஸ்டேஷன்,  ஆர்ட் ம்யூஸியம், நியாகரா பவர் ஸ்டேஷன் இப்படிக் கிட்டத்தட்டப் பதினாறு நிறுத்தங்கள். மக்கள்  ஏறுவதும் இறங்குவதுமா  இருக்க, கோட்டைக்குப்போக ஒரு மணி நேரம் ஆச்சு!
பஸ்ஸுக்குள்ளே ஃப்ரீ வைஃபை இருக்குன்னதும் உள்ளம் துள்ளியது உண்மைதான்:-) ஆனால் அதைப் பார்த்துக்கிட்டு இருந்தால் வெளியே இருக்கும் காட்சிகளை யார் க்ளிக்குவாங்க? அதுக்காகச் சும்மாவும் இருக்க  முடியாது பாருங்க.... மகளுக்கு மட்டும் ஒரு படம் அனுப்பி 'ஹை' சொன்னேன். வைஃபை வேலை செய்யுதான்னு செக் பண்ணிக்கணுமே!  செஞ்சது :-)

கோட்டை   வளாகத்துக்கு முன்னால் இருக்கும் விஸிட்டர்ஸ் சென்டர் வாசலுக்குப் போனதும், பீரங்கி வா வான்னது. இந்தாண்டை கலங்கரை விளக்கம்!  ரெண்டுக்கும் இடைப்பட்ட இடம் கார் பார்க்!


விஸிட்டர் சென்டருக்குள் நுழைஞ்சு, டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளே போனால்..... ஹிஸ்டரி ம்யூஸியம்.  அங்கே பயணிகள் கூட்டத்துக்கு  தலவரலாறு சுருக்கம் சொல்லல், நடந்துக்கிட்டு  இருந்ததுன்னு நாங்களும் போய் கலந்தோம். ஒரு பெரிய கொடி அங்கே ஃப்ரேம் போட்டு வச்சுருக்காங்க.  Garrison Flag of Old fort Niagara.
அமெரிக்கக்கொடிதான். ஆனால் இப்போ நாம் பார்க்கும்  வகை இல்லை. பதினைஞ்சு பட்டைகளும், பதினைஞ்சு நக்ஷத்திரங்களுமா இருக்கு,    இருபத்தியெட்டு அடி நீளமும், இருபத்தினாலு அடி  அகலமுமா !

 இந்தக் கொடிக்கே ஒரு சுவையான சரித்திரம் இருக்கு!
கோட்டை, முன்னூத்தி நாப்பது  வருசத்துக்கு முந்திய சமாச்சாரம்!
முதலில் ஃப்ரான்ஸ், அப்புறம் க்ரேட் ப்ரிட்டன்,  கடைசியா அமெரிக்கான்னு மூணு நாடுகள்  இந்தக் கோட்டைக்குச் சொந்தம் கொண்டாடி இருக்காங்க.  கடல் போல பரந்து விரிஞ்சு போகும்அன்டாரியோ ஏரியும்   நியாகரா நதியும்,  சேரும் இடத்தில் கட்டி இருக்கும் கோட்டை இது!
ஆரம்ப காலத்தில் (1678 ஆம் ஆண்டு )  ஃப்ரெஞ்சுக்காரர் கட்டிய கோட்டை இது.

 பிரிட்டிஷார்,  1607 இல் அமெரிக்கா என்னும் நாட்டுக்கு (இந்தியான்னு நினைச்சுக்கிட்டும், இங்கிருந்த பூமிபுத்திரர்களை இந்தியர்கள்னு நினைச்சுக்கிட்டும்) வந்து குடியேறி,  ப்ரிட்டிஷ் அமெரிக்கா என்னும் பெயரை வச்சு  புது பூமி கிடைச்ச மகிழ்ச்சியில் இருந்துருக்காங்க. பூமி புத்திரர்கள் கொஞ்சம் சிவந்த மேனியா இருக்கக்கண்டு, அவுங்களை ரெட் இண்டியன்ஸ்னு சொல்லவும் ஆச்சு.  அவுங்களுக்கு ஆகி வந்த வேலையா, பூமி புத்திரர்களை மிரட்டி அடக்கி கொஞ்சம் அழிச்சுன்னு காலம் போகுது!

ப்ரிட்டிஷ்காரர்களுக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் எப்பவுமே....  ஆதி காலத்துலே இருந்தே ஆகாது.  பிரமாண்டமா  ரெண்டு பெரிய  சமுத்திரத்துக்கிடையில் பரந்து விரிஞ்சுருக்கும் நாட்டைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆசை வராது சொல்லுங்க.  அதிலும் பகையாளியோ பங்காளியோன்னு இருக்கும் ரெண்டு நாட்டுக்கும் போட்டி பொறாமை இருந்துருக்கே!  ப்ரெஞ்சுக்காரர்களும் கிளம்பி வந்து நியூ ஃப்ரான்ஸ்ன்னு ஒரு நிலப்பகுதியைப் பிடிச்சுக்கிட்டு எதிராளிகிட்டே இருந்து  தன்னைக் காப்பாத்திக்கக் கட்டுன கோட்டை இது!  எதிரி கனடாவிலெ இருந்து  தண்ணி வழியா ஏரிக்கடலில் வரும்போது  குண்டு போட்டுக் கவுத்துடணும்னு திட்டம்.
போட்டி பொறாமைன்றது ரொம்பச் சரி.   பல நாடுகளில்  துண்டு போட்டு இடம் பிடிச்சதும்,   நம்ம இந்தியாவிலும் சரி,  நியூஸியிலும் சரி  ஒரு பகுதியை இவுங்க பிடிச்சுக்கிட்டது உண்மைதானே!  நம்ம பாண்டிச்சேரியைப்போல, நியூஸியிலும் எங்கூரில் இருந்து ஒரு எம்பத்தியொரு கிமீ தூரத்தில் இருக்கும்   அகரோஆ  என்னும் பகுதியை (கடலையொட்டிய ஊர்) ப்ரெஞ்சுக்காரர்கள் பிடிச்சுக்கிட்டு ப்ரெஞ்சு காலனியா உருவாக்கி செட்டில் ஆகத் திட்டம் போட்டு ஊரைக் கட்டி, தெருக்களுக்கு ப்ரெஞ்சு பெயரெல்லாம் கூட வச்சுட்டாங்க. இதெல்லாம் நடந்தது 1838 ஆம் ஆண்டு! 

அப்ப என்னன்னா பிரிட்டிஷாருக்கும் உள்ளூர் மவொரி இனத்துக்கும்  சண்டையான சண்டை. போராட முடியலை.....  பேசாம ஒப்பந்தம் போட்டுக்கிட்டு நண்பர்கள் ஆகிடலாமான்னு  இருந்த சமயம், இந்த  ப்ரெஞ்சுக்காரர்கள் சேதி தெரிஞ்சது.  அடடா..... கைமீறிப்போயிட்டால் என்ன செய்யறதுன்னுதான் ப்ரிட்டிஷ் அரசு அரக்கப்பரக்க மவொரிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கிச்சு!  வைடாங்கி ஒப்பந்தம்னு பெயர்!  ஃபிப்ரவரி 6,  1840 ஆம் வருசம்!   (எங்களுக்கு அரசு விடுமுறை நாள் !)

அமெரிக்காவைச் சொல்லிக்கிட்டு இருக்கும்போது  பாருங்க....ப்ரான்ஸ் எப்படி கதைக்குள் வந்துருச்சுன்னு..... இப்படித்தாங்க.....  எல்லாத்துலெயும் மூக்கை நுழைச்சுருவாங்க  :-)

 1756 முதல் 1763 வரை நடந்த  ஃப்ரெஞ்சு & இந்தியன் போரில் கடைசியில்  ப்ரிட்டந்தான் ஜெயிச்சதுன்னாலும் பாரிஸ் நகரில் வச்சு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு எல்லைகளைப் பிரிச்சுக்கிட்டாங்க. இவுங்க ப்ரிட்டிஷ் அமெரிக்கான்னு பெயரையும் வச்சுக்கிட்டு,   சண்டைக்கு மட்டும் ஃப்ரெஞ்சு அண்ட் இண்டியன் வார்னு  பெயர் சூட்டுனது என்ன நியாயமோ!!!   ஙே.....

 (இதுலே பாருங்க.....   உண்மை இந்தியா அப்பெல்லாம் எங்கியோ பாவமாக் கிடந்துருக்கு. ஈஸ்ட் இண்டியா கம்பெனின்னு மூக்கை நுழைச்சு வியாபாரம் பண்ணற சாக்கில் நம்மைப் பிரிச்சு ஆளும் சூழ்ச்சி செஞ்சுக்கிட்டுல்லே பிஸியா  இருந்தாங்க.   )

அந்த  பாரிஸ் ஒப்பந்தம் ஆன சில வருசங்களில்  அமெரிக்கப்புரட்சி  நடந்து  ஐக்கிய அமெரிக்கா உருவாச்சு 1776  ஜூலை 4 ஆம் தேதி!  இனி பிரிட்டனுக்கும் ப்ரிட்டிஷ் அமெரிக்காவும் சம்பந்தமே இல்லைன்னு  ஆச்சு! இனி நீ யாரோ நான் யாரோ..... நீ என் கோட்டுக்குள்ளே வரப்டாது.... நானும் உன் கோட்டுக்குள்ளே வரமாட்டேன்.

அஃபீஸியலா அமெரிக்க நாடு பதினைஞ்சு மாநிலங்களோடு பட்டையும்  ஸ்டாருமா டிஸைன் பண்ண கொடியுமா  அவுங்க வேலையை அவுங்க பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

இப்படியே இருந்துருந்தா பிரச்சனை வந்திருக்குமோ? மனுசன் சும்மா இருக்கமாட்டானே....

1812 ஆம் ஆண்டு ப்ரிட்டிஷ் படைகள்  திரும்ப சண்டைக்குன்னே வந்து   இந்த அமெரிக்கக் கோட்டையைக் கைப்பற்றிய சமயம்,  கோட்டைக்கான கொடியைக் கழட்டி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. தோத்தவன் தலையை வெட்டி எடுத்துக்கிட்டுப் போறதுக்கு சமானமாம் இந்த செய்கை!  கொடியைக் கொண்டுபோய், பட்டத்து இளவரசர் Prince Regent, காலடியில் விரிச்சு வைக்கணுமாம்!   'அந்த நாடு இனி உமக்கடிமை! ' இவர்தான் பின்னாளில் பட்டம் சூட்டிக்கிட்ட பின்னே அரசர்  நாலாம்  ஜியார்ஜ் ஆனார்.

கொடி என்னமோ அங்கேயே பிரிட்டனில் தங்கிருச்சு. 1930 லே அமெரிக்காவும் பிரிட்டனும்,  'சண்டை ஒத்து நைனா.... சமாதானங்கா போத்தே மஞ்சிதி'ன்னு  எல்லை பிரிச்சுக்கிட்டு நிம்மதி ஆகிட்டாங்க. ஆனாலும்  கொடி அங்கே  தங்கிட்டது  அமெரிக்காவின் மனதில்  ஒரு உறுத்தலா மாறித்தான் போயிருந்துச்சு.  இங்கே அதுக்குள்ளே புதுப்புது மாநிலங்கள் உருவாகி கொடியும் மாறித்தான் போச்சுன்னாலும் நம்ம பொருள் ஒன்னு ஊரான்கிட்டே இருக்கேன்னு தோணாதா?

கால ஓட்டத்துலே என்னென்னவோ நடந்து போயிருந்துச்சு.  காலடியில் கொடியை விரிச்சுப் போட்டதைப் பார்த்த பட்டத்து இளவரசர்,  'இதை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யறது'ன்னு  கொடியைக் கொண்டுவந்த தளபதிக்கே அதைக்  கொடுத்துட்டார். அது பாட்டுக்கு  பிரபுக்கள்  வம்சாவழிக் குடும்பத்தில்  இருந்துருக்கு. ஒருமுறை வாஷிங் மெஷின்லே போட்டுத் துவைச்சுக்கூட ஆச்சாமே! கலர் எல்லாம் கொஞ்சம் வெளிறிப்போனது அப்போதான்.

இங்கே கொடியைத் தேடித் துப்புத் துலக்குனப்போ, அது ஒரு  சீமாட்டி வீட்டுலே இருக்குன்னு  உளவு பார்த்தவங்க சொல்லிட்டாங்க. 'கொடியைத் தாரீங்களா'ன்னதும்,  ஓ... இதுக்கு இன்னும் மதிப்பு இருக்கு போலன்னு  'காசு கொடுத்தாக் கொடுக்கறேன்'னு சீமாட்டி சொல்லிட்டாங்க.  அவுங்க மாளிகைக்கு  கூரை பழுது பார்க்கும் வேலை பாக்கி இருக்காம்! 

(அய்ய....  அப்ப எல்லாம்  காலிப் பெருங்காயப் பாண்டம்தான் போல !  காலியா இருக்கும். ஆனா வாசனை தூக்கல் !)

ஒரு லக்ஷத்து அம்பதாயிரம் டாலர்னு விலை படிஞ்சது.  அதைக் கொடுத்துட்டு 1994 இல்  கொடியை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்ததா சரித்திரம் சொல்லுது! பாவம்... அந்தக் கொடி.... இருநூறு வருசத்துக்கும் மேலே அந்நியநாட்டில் சீரழிஞ்சுக்கிட்டு இருந்துருக்கு பாருங்க.....  விதியாகப்பட்டது  வலியது!    அது கொடியையும் விடாது !
அந்தக் கொடியைத்தான் இங்கே நம்ம பார்வைக்கு வச்சுருக்காங்க. பழைய நிறத்தை மீட்டு எடுக்க என்ன வழின்னு பார்த்து  அந்த நிறங்களை கொடிக்கு அடியில்  அங்கங்கே வச்சு அதுக்கு மேலே கொடியை விரிச்சு வச்சுருக்காங்களாம்.
யாரும் தொட முடியாத இடத்தில் இருக்கு இப்போ. பெரிய கொடின்றதால்  நம்ம பார்வையில் பளிச்ன்னு நல்லாவே தெரியுது!
அப்புறம்  இந்த ஹிஸ்டரி ம்யூஸியம் ஹாலுக்கு வெளியில் எங்களைக் கூட்டிப்போனவர்,  இந்தாண்டை அந்தாண்டையெல்லாம் கை காமிச்சு இடத்தை விளக்கிட்டு, 'வாங்க கோட்டைக்குள்ளே போகலாமுன்னு  சொன்னதும் அவர்கூடவே போறோம்.  அகழிப் பாலம் கடந்து கோட்டை வாசலுக்கு வந்தவுடன், கோட்டை கட்டுன வருசத்து அடையாளத்தைக் காமிச்சுட்டு 'உள்ளே போய் பாருங்க'ன்னுட்டு திரும்பி  விஸிட்டர் சென்ட்டர் கட்டடத்துக்குப் போயிட்டார். அடுத்து வரும் மக்களுக்கு  விளக்கம் கொடுக்கணுமுல்லெ?

இனி எம் வழி தனி வழின்னு நாங்களே கோட்டைக்குள்ளே புகுந்துட்டோம் :-)

நல்ல ப்ரமாண்டமான வளாகம்தான் . இருநூத்தியம்பது ஏக்கராம்!  பெரிய பெரிய  மண்மேடுகள் புல் முளைச்சுக்கிடக்கு. இதெல்லாம் பதுங்கி இருந்து எதிரியைத் தாக்கும் இடங்களாம். பாதாள அறைகள்! ஹா....

ஒரு பாதாள அறைக்குள் போய்ப் பார்க்க முடிஞ்சது!  வாசலில் ராணுவம் அந்தக் காலத்துச் சீருடையில்!  அவருடன் உடனே ஒரு க்ளிக் :-)
இந்தக் கோட்டையை, லிவிங் ஹிஸ்டரின்னு  சொல்றதை உண்மையாக்கிட்டாங்க.   ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் எல்லாம் இல்லை.....   அது அங்கேயே காலங்காலமா உறைஞ்சு கிடைக்கு! அப்போ எப்படி இருந்ததோ அதேபடிக்கு இப்பவும்....

இன்னும் கொஞ்ச நேரத்தில் Musket demo இருக்குன்னார்.  ஆஹா.... என்னமாத்தான் சுடறாங்கன்னு பார்த்துடலாமே!

சுட்டாங்க,  சுட்டாங்க.....
சின்னதா ஒரு கேன்டீன் போல..... இருந்ததில்,    ஏற்கெனவே ஒரு குழு அங்கே பகல் சாப்பாட்டுக்கு  புக் பண்ணி இருக்காங்கன்னு அவுங்களுக்கான லஞ்சு.  மற்ற பயணிகள், சிறுதீனியா எதாவது வாங்கிக்கலாம்....

கொடிக்கம்பங்கள் மூணு!  கொடிகளும் மூணு!  வெள்ளைக்கொடியைப் பார்த்ததும் சமாதானம் சொல்றாங்கன்னு நினைச்சேன்:-)  இல்லை(யாம்!) ஃப்ரான்ஸ் (நேவி) அமெரிக்கா, பிரிட்டன் கொடிகள்தான்!

கோட்டைக்குள்ளே மொத்தம் ஆறு கட்டடங்கள்.  நடுநாயகமா நின்றதுக்குள் போனோம்!

ஆப்பீஸர்கள் கோட்டைக் காவலையும், மற்ற அன்றாட அலுவலையும் உக்கார்ந்து பேசி, கூடவே கொஞ்சூண்டு தாகசாந்தி செஞ்சுக்கும் இடம்  மாடியில்!


இதுக்குள்ளே ஒரு சின்ன,  சாமி அறை!  தேவனே என்னைப் பாருங்கள்......   பெருமாளே!
படைவீரர்கள் படுத்துத் தூங்கும் பங்க் பெட்ஸ், ஸ்டோர் ரூம், ட்ரேட் ரூம்  இன்னபிற !

கோட்டைத் தலைமைக்கான படுக்கை அறை  தனி!
பீரங்கிகளுக்கான  வெடிமருந்துகள்  சேர்த்து வைக்கன்னே ஒரு தனிக் கட்டடம்!


இத்தனை களேபரத்திலும், படை வீரர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டுக்குவாங்களாம். சின்னச்சின்ன பாத்திகள் ! முற்றுகை சமயத்துலே சாப்பாட்டுக்கு அல்லாட வேணாம் !  க்ரேட்!
ஆயுதங்களைப் பழுதுபார்த்துக்கும் இரும்பு உலைகள், சம்மட்டி இன்ன பிற !



கோட்டை வாசல் அகழிப் பாலத்தை இப்படித்தான் கஷ்டப்பட்டு மூடணும் !

வருசம் முழுசும் ஒரு சில நாட்கள் (ஜனவரி 1, தேங்க்ஸ் கிவிங் டே, க்றிஸ்மஸ் டே) தவிர திறந்துதான் வைக்கிறாங்க.  ஜனவரி முதல் ஜூன்,  அப்புறம்  செப்டம்பர் முதல் டிசம்பர்வரை  காலை ஒன்பது மணி முதல்  மாலை அஞ்சு வரையும்   நடுவிலே ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்  மட்டும்  மாலை ஏழு வரையும், திறந்து வைக்கிறாங்க. உள்ளூர் மக்களுக்கு அப்போ கோடை விடுமுறை காலம்  என்பதால்  கூட்டம் அதிகமாகவே இருக்குமாம்!

சில விசேஷ நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும் இருக்கும். Artillery Demo  இருக்குமாம். நாம் போன நாள் சாதாரண நாள்தான். பீரங்கியில் குண்டு வச்சு வெடிக்கறதைப் பார்க்க முடியலையேன்னு.... என் கவலை.

சரித்திரத்துக்குள்ளே புகுந்து புறப்பட ஆசை இருந்தால் இங்கே ஒருமுறை  போய் வரலாம்.

மணி ஒன்னேகால் ஆச்சேன்னு கிளம்பிட்டோம்.  ஒருமணி நேரம் ஆகுமே  ஊருக்குள் போக......

ஷட்டில் பஸ் வரணும்....

தொடரும்.........:-)

6 comments:

said...

பஸ்ஸுக்குள் பெஞ்ச் போல சீட் அமைப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

அழகிய இடம். அழகிய படங்கள்.

said...

படங்கள், தகவல்கள் என அனைத்தும் சிறப்பு.

இந்தக் கோட்டைகள் தங்களுக்குள் எத்தனை எத்தனை விஷயங்களை புதைத்து வைத்திருக்கின்றன. எத்தனை விஷயங்களுக்கு இவை மௌன சாட்சிகள்!

தொடர்கிறேன்.

said...

கோட்டை மிக அழகாக இருக்கு. காய்கறிச் செடிகளும் அருமை. பஸ்ஸில் பெஞ்ச் போட்டிருப்பது, தண்ணீர் பக்கம் அந்த பஸ் செல்வதாலா அல்லது ஒரு அட்ராக்‌ஷனா?

கனடா நியகாரா மாதிரி இந்த இடம் இல்லையோ? அது ரொம்ப அழகா இருந்தது. அதிலும் ஹோட்டலிலிருந்து தெரியும் காட்சி எக்சலண்ட்.

தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த இலவச பஸ்ஸே வகைவகையா இருக்கு என்பது இன்னும் விசேஷம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோட்டை என்பதே பரம ரகஸியங்களின் இருப்பிடம்தானே!

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெ.த.

நல்ல பசுமையான தோட்டம். தண்ணீர் பஞ்சம் இல்லையே :-)


சுற்றுலாப்பயணிகளுக்கான இந்த இலவச பஸ் பல மாடல்களில் இருக்கு. அதுலெ பெஞ்சு வகை ஒன்னு. நாங்களே அன்றைக்கு மூணுவித பஸ்ஸில் போய் வந்துருதோம் :-)