Friday, April 20, 2018

த்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)

பொதுவாக பஸ்ஸில் வழக்கமா இருக்கும் இருக்கைகளோடு ஷட்டில் பஸ் வந்ததும் அதுலே ஏறிக்கிட்டோம்.  ஓட்டுநர் 'தன்னைக் கவனிக்கும்படி'  சொல்லலை!  போனவழியாகவே திரும்பி வரும்போது....  ஒரு பெரிய  ஷாப்பிங் சென்டரைப் பார்த்துட்டு, அங்கே எதாவது  ஃபுட்கோர்ட் இருக்கலாம்னு 'நம்மவர்' சொன்னார்.  என் கண்ணில் முதலில் பட்டது ஒரு மருந்துக் கடை.
மருத்துவர்தோழி, நம்ம கால் வலிக்கு ஒரு மருந்து சொல்லி இருந்தாங்க. நியூஸியில் கிடைக்காது. இங்கே கிடைக்குமான்னு பார்க்கணும்.  தேடியும் கிடைக்கலை. சாப்பிட இடம் தேடியதில் கண்ணில் பட்டது ஃப்ரான்கீஸ். இதுவும்  ஒரு செயின் ஸ்டோர்தான். பல இடங்களில் பார்த்த நினைவு.
ஒரு   வெஜ் பீட்ஸா வாங்கிக்கலாமேன்னு  ஆர்டர் செஞ்சோம்.  மேலே என்ன டாப்பிங்க்ஸ்  வேணுமுன்னதுக்கு நாலைஞ்சு  அவுங்க நீட்டுன ஆர்டர் ஃபார்மில் குறிச்சுக் கொடுத்தாச்சு.
ஒரு அரைமணி நேரக் காத்திருப்பில்  பெரூஸா ஒன்னு  மேசைக்கு வந்தது.  பில் அதைவிடப் பெருசு!
அப்புறம்தான் தெரிஞ்சது நாம் சொன்ன ஒவ்வொரு டாப்பிங்ஸுக்கும் ரெண்டு டாலர் எக்ஸ்ட்ரான்னு!   ஙே......   இங்கே நியூஸியில்  பொதுவா பீட்ஸாக்கள் எந்த வகையோ அதுக்குண்டான டாப்பிங்க்ஸ் சேர்த்தேதான் விலை!   அதைவிட இன்னும் அதிக அளவில் வேணுமுன்னா மட்டும் கூடுதலாச்  சேர்க்கச் சொல்லி   அதுக்குத் தனியா காசு கொடுக்கணும்.

ஆனா   சும்மாச் சொல்லக்கூடாது.... அருமையான ருசியில் கவனமாச் செஞ்சு கொண்டு வந்துருந்தாங்க. வெஜ் என்பதால்  புதுசா காய்கறிகள் வாங்கி நறுக்கிச் சேர்த்தாங்களாம். அதான் கொஞ்சம் கூடுதல் நேரம் காக்க வைக்கும்படி ஆச்சுன்னாங்க, கடைப்பெண்மணி.

 அது சரி......  இத்தனை பெருசைத் தின்ன முடியுமா? பாதியைக் கஷ்டப்பட்டு முடிச்சோம். மீதி?  ஆஹா..... த்ரிகால ஞானி,  அந்த  ஹாலிடே இன் ஊழியர்!  'அவன்' கொண்டு வச்சது இதுக்குத்தான்!  பேசாம மீதியைப் பேக் பண்ணி எடுத்துப்போனால் ராத்ரிக்கு ஆச்சு!  இத்தனாம் பெரிய அட்டைப்பெட்டியோடு கொண்டு போறது தொந்திரவுன்னதும்  சின்னப் பையில் போட்டு அழகாப் பேக் பண்ணிக்கொடுத்தாங்க, கடைப்பெண்மணி.

அவுங்களுக்கு விசேஷ நன்றியைச் சொல்லிட்டு நடையைக் கட்டுனோம். அடுத்தாப்லெயே பைன் அவென்யூ லிட்டில் இடாலி! திரும்ப ஷட்டிலுக்காகக் காத்திருந்தோம்.
இந்த முறை வந்த பஸ் உள் அமைப்பு வேற மாதிரி.  நடுவில் மேஜை எல்லாம் போட்டு ரெண்டு பக்கமும் இருக்கைகள்!  அட! நம்ம கையில்  சாப்பாடு இருக்குன்னு தெரிஞ்சுருச்சு போல  :-)
அறைக்கு வந்து சேர்ந்தப்ப மணி நாலடிக்க அஞ்சு நிமிட்!   கெஞ்சும் கால்களுக்கு ஓய்வு கொடுத்தே ஆகணும்.  லேசாக் குளிரும் ஆரம்பிச்சுருக்கு.   கொஞ்ச நேரம் கழிச்சு, பேரருவி பார்க்கப் போகலாமேன்னு நினைச்சுக்கிட்டே  அசதியில் தூங்கிட்டேன்.  அஞ்சரை மணி ஆகிருச்சு.  ஒரு கிமீ நடக்கணுமேன்னு சோம்பல்......
அறையிலிருந்தே  அருவிக்கரையை கிட்டக்க வரவழைச்சுப் பார்த்தே பொழுதும் போயிருச்சு.  மாலைச்சூரியன் இப்போ கனடாவில் இருக்கான்!  ஹைய்யோ..... என்ன அழகு!
நேரம் ஆக ஆக அந்தாண்டை விளக்கலங்காரம்   அருமையாத் தெரிஞ்சதா.... பேசாம ரெண்டு நாள் அங்கேயே இருந்துட்டு வந்துருக்கலாம்னு தோணியது உண்மை.

மறுநாள் இங்கிருந்து கிளம்பறோமேன்னு கொஞ்சம் பேக்கிங் முடிச்சுட்டு, 'அவன்' கொண்டுவந்தவருக்கு நன்றின்னு சொல்லிட்டு  பீட்ஸாத் துண்டுகளைச் சூடாக்கி  ராச்சாப்பாட்டை முடிச்சோம். பின்னே ஒரு நல்ல காஃபி!  போதாதா என்ன?

பொழுது புலர்ந்தது :-)

மறுநாள்  காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப்பின் எதிரில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சு வளாகத்துக்குள் போய்  சுத்திப் பார்த்துட்டு சில க்ளிக்ஸ்.கொஞ்சம் தூரம் நடந்தால் இன்னொரு சர்ச்சும்  இருக்கு.  இங்கிருந்தே பார்த்து க்ளிக்கியதே போதும்.... போ ன்னு சொல்லிக்கிட்டேன்.
ஹொட்டேல் கார்பார்க்கில்  மூணு சக்கர மோட்டர்ஸைக்கிள் இருந்தது.....  'இதை உன்னால்  ஓட்டமுடியும், இல்லே?'ன்னார் 'நம்மவர்'.  கீழே விழ ச்சான்ஸே இல்லை, பாருங்க..... 'எஸ்'ன்னேன்:-)

எட்டரைக்கு வண்டிக்குச் சொல்லி இருக்கோம்.  பஃபெல்லோ போகணும். என்னப்பா... இது  இப்படியெல்லாம் ஊருக்குப் பெயர் வச்சுருக்காங்க....   கிட்டத்தட்ட இருபத்தியஞ்சு மைல் தூரம்.  அரைமணி நேரப் பயணமாம்.

கடைசி க்ளிக்!  பை பை நியாகரா நதியே!
செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பியாச்சு. நாப்பது நிமிட்டில் ஏர்ப்போர்ட்.  வழிநெடுக  கார்க்காரர், நியூஸியைப் பத்தி விசாரிச்சுக்கிட்டே வந்தார்:-)

நமக்கு 11 மணிக்கு ஃப்ளைட்.  Newark போறோம். யுனைட்டட் ஏர்லைன்ஸ்  கவுன்ட்டருக்குப்போய் செக்கின் செஞ்சுட்டு உள்ளே போயாச்.  பஃபெல்லோ ஏர்ப்போர்ட் நல்லா பெருசாவே இருக்கு! இன்னும் நேரம் இருக்கேன்னு  அதைக் கொல்றதுக்குச் சுத்திக்கிட்டு இருந்தேன்:-)
ஃபிஜின்னு தண்ணீர் பாட்டில்கள்!  அது எங்கெயோ கிடக்கு..... அமெரிக்காவில் தண்ணீர் இல்லையா என்ன? அம்மாம்பெரிய நியாகரா நதி  இருந்துமா?  ஙே....
சும்மா சொல்லக்கூடாது..... நியாகரா நல்லாவே சம்பாரிச்சுக் கொடுக்குது ரெண்டு நாடுகளுக்கும்!!
எருமை ஊரில்  செல்லக்கன்னுக்குட்டிகள் அழகோ அழகு!  வாங்கிக்கலை....  அப்பதான் கடைக்கு வெளியே இன்னொரு செல்லத்தைப் பார்த்தேன். போலிஸ் வேலையில் இருக்கார்.  குண்டு வச்சுருந்தால் புடிச்சுக்கொடுத்துருவார்.  வெடிமருந்து வாசனை எல்லாம் அத்துப்படி :-)  பெயர் ஸாம்.  அவரோட அப்பாகூட ரெண்டு நிமிட் பேசிட்டு ஒரு ரெண்டுமூணு க்ளிக்ஸ் ஆச்சு!

சரியான நேரத்துக்கு ஃப்ளைட் கிளம்பி அஞ்சு நிமிட் முன்னாலெயே நிவார்க் போய்ச் சேர்ந்துட்டோம். எடிஸன், க்ரௌன் ப்ளாஸா ஹொட்டேலுக்கு டாக்ஸி பிடிச்சுப்போய்ச் சேர்ந்தப்ப மணி சரியா ஒன்னு!  கிட்டத்தட்ட இருவது  மைல். அரைமணி நேரப் பயணம்.

முதல்வேலை முதலில்னு தோழிக்கு, வந்து சேர்ந்த விவரம் அனுப்பினேன்.  அவுங்க சொன்ன  முதல் பதில் .....   'லஞ்சுக்கு நான் வந்து கூட்டிட்டுப்போறேன்'

ஐயோ அதெல்லாம் வேணாம். நாங்க பார்த்துக்கறோம்.... நீங்க  இன்றைய ஆஃபீஸ் வேலையை முடிச்சுக்கிட்டு வந்தாப் போதும்னேன். பெரிய பதவியில் இருக்காங்க....   அதுக்குண்டான பணிச்சுமைகள் இருக்கும்தானே.....

நாங்க ஹொட்டேலுக்கு எதிர்வாடையில் இருக்கும் ஷாப்பிங் பகுதிக்குப்போனோம். ஸ்பைஸ் ஸோன், அஞ்சு வகை சமையல் செய்யறாங்களாம்!  ஒரு வெஜ் பிரியாணி.  இதுவே ரெண்டுபேருக்குத் தாராளம்!  சுவையும் நல்லாவே இருக்கு.
அடுத்தாப்லே சின்ன சுத்தல் கடைகளில். பூக்கடையில் ஒரு பூங்கொத்து வாங்கப்போனால், அங்கே  இருந்தவர் ஓடிவந்து காலாண்டை நின்னார்:-)  பட்டுச் செல்லம்!கடை ஓனரும் தோழியுமா இருந்தாங்க. பூனைப்ரேமிகளாம்.  ஆஹா.... நம்ம இனம். செல்ஃபோனில் வச்சுருந்த ரஜ்ஜு படம் காட்டினேன். அவ்ளோதான்....  பேச எங்களுக்கு விஷயங்கள் கிடைச்சுருச்சு :-)

தொடரும்.........  :-)

16 comments:

said...

அடடே... அங்கேயும் ஒரு கவனிப்பாரற்ற சிலை!

மாலைச் சூரியன் படம் அழகு.

said...

மதியமும் பீட்சா, இரவும் பீட்சா... இட்லி தோசைக்கும் ஒரு மோர் சாதத்துக்கு நாக்கு ஏங்கலையா?!!

said...

பட்டுச்செல்லம் அழகு. புதிய பூனைகள் என்னைக் கண்டால் விலகி ஓடிவிடுகின்றன. உங்களிடம் அவை நட்பு பாராட்டுகின்றனவே...

said...

மாலை நேரப் புகைப்படங்கள் மிகவும் அருமையாக ரசனையோடு உள்ளன.

said...

அருமை நன்றி

said...

நாய்களையாவது பொறுத்துக் கொள்வேன் பூனகள் என்றால் அலர்ஜி கோபிக்கக் கூடாது

said...

மாலைச் சூரியன் படங்கள் ரொம்பவே அழகு.

செல்லம் - ஹாஹா... பேச நிறையவே விஷயம் கிடைச்சிருக்குமே.....

said...

தங்கள் பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

said...

ஒவ்வொரு டாப்பிங்சுக்கும் ரெண்டு டாலர். அடேங்கப்பா. மக்கள் கிட்ட இருந்து எப்படி காசு எடுக்குறதுன்னு அமெரிக்காக்காரன் கிட்ட இருந்துதான் கத்துக்கனும். ஆனாலும் அங்க வேலை செஞ்சவங்க நிறைய காயெல்லாம் போட்டுக் கொடுத்த விதம் அருமை.

பஃபலோன்னு பேர் வைக்கிற வழக்கம் நம்ம ஊர்லயும் உண்டு. எருமையூர்னு ஒரு பழைய ஊர். எம்மே ஊருன்னு திரிஞ்சி... மகிஷூர்னு பேரை மாத்தி... மைசூர்னு இப்போ கூப்டுக்கிட்டிருக்கோம். சிங்கம்புணரி புலியூர் குரங்காடுதுறை மயிலாடுதுறை கரடிமலை ஆடுதுறை இதெல்லாம் நம்ம ஊர்ப் பெயர்கள்.

அந்த எருமை பொம்மை ரொம்ப அழகு.

உங்களப் பாத்ததும் பூனக்குட்டி வந்துருது பாருங்க. அதான் விட்ட குறை. தொட்ட குறை.

said...

வாங்க ஸ்ரீராம்.

சிலையா இருந்தாலும் மக்கள் வந்து போகும் இடத்தில் இருந்தால்தான் பெருமை, சுதந்திரதேவி போல !!!!

மாலைச்சூரியன் அழகுதான்! எனக்கும்ரொம்பவே பிடிச்சுருந்தது!

பயணகாலங்களில் சாப்பாடு வசதிகள் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை.

செல்லங்கள், நண்பர்களை சுலபமாக் கண்டு பிடிச்சுரும். அதிலும் பூனைகள் இருக்கே..... பாஸிடிவ் வைப்ரேஷனைக் கவனிக்குமாம். நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தால்.... அவுங்க பக்கத்தில் பூனை போய் நின்னுச்சுன்னா... அந்த நபர் நம்பகத்துக்கு உரியவராம்! எப்படி பூனை ஜோஸியம்!!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றிகள் பல !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நம்ம ரஜ்ஜுகிட்டே உங்களுக்குப் பூனை அலர்ஜின்னதும், நோ ஒர்ரீஸ்ன்னு சிரிச்சுக்கிட்டே போயிருச்சு :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அந்த மாலைச் சூரியன் அழகோ அழகே!

சட்னு பேச்சை ஆரம்பிக்கப் பொதுவா காலநிலை பயன்படும். ஸ்மால் டாக் :-)

செல்லங்கள் வச்சுருக்கறவங்களுக்கு அதெல்லாம் ரெண்டாம்பட்சம். நேரமே போதாது :-)

said...

வாங்க tamilblogs.in திரட்டி.

உள்ளே வந்து சேரலாமுன்னு பார்த்தால் பாஸ்வேர்டெல்லாம் கேட்குதே..........

said...

வாங்க ஜிரா.

ரெண்டு வேளைக்கு வந்துருச்சுன்றதால்..... போகட்டுமுன்னு விடவேண்டியதுதான் :-)

ஊர், மலை, துறைன்னு பின்னால் விகுதி சேர்த்துடறோம். ஆனால் இங்கே வெறும் 'எருமை'ன்றதுதான் புதுமை :-)

கன்னுகுட்டி அழகே!

நாங்க மட்டுமில்லை... நம்ம வீட்டு மாப்பிள்ளையும் பூனைப்ரேமிதான்! விட்டகுறை தொட்டகுறை என்பது சரிதான் போல !