Thursday, April 26, 2018

வெண்ணெய் டான்ஸ் :-) சீனதேசம் - 4

மற்ற நாடுகளில், ஊர்களில் எல்லாம் சைனா டவுன்னு ஒன்னு பார்த்துருக்கோமில்லையா....  சென்னையில் சைனா பஸார்னு கூட ஒன்னு  இருக்கு!

சீனாவில் சைனா டவுன் இருக்குமா?  ஹாஹா....
'நடக்கும் தெரு'வில் நடந்துக்கிட்டு வேடிக்கை பார்க்கும்போது  நாம் நிற்கும் இடத்துக்கு எதிர்வாடையில்  சைனா டவுனுக்கான கூரையும் முகப்புமா ஒரு நுழைவு  வாசல் கண்ணில்பட்டது. 'தைரியமா வா'ன்னார் 'நம்மவர்'!
வாசல் வரவேற்பு ரெண்டுசின்னப் பெண்கள் :-) பொட்டு வைத்த முகமோ..... 

 இது  Wangfujing Snack Street.  'வாங்க,  ஃபுட் ஸ்ட்ரீட் கூட்டிப்போறேன்'னு  கையில் கொடி பிடிச்ச ஒரு கைடு, அவருடைய குழுவுக்குச் சொல்லிக்கிட்டு இருந்தார்.  அங்கங்கே சின்னதும் பெருசுமா பயணிகள் குழுக்களும்,  ஒவ்வொரு குழுவுக்கான கொடிபிடிச்ச கைடுகளுமாக் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்காங்க.  அந்தக் கொடியில் கூட, மீன், பூ, வெறும் கலர்த்துணி இப்படி எதாவது அடையாளம் இருக்கு.  காணாமப் போகாமல் இருக்கணுமுன்னா கொடியில் ஒரு கண்ணு வச்சுக்கணும் :-)


வெளிநாட்டுப் பயணிகள்னு இல்லை.... உள்நாட்டுப் பயணிகளே கூட்டங்கூட்டமா வர்றாங்க. அவுங்க கைடுக்கு சிரமமே இல்லை. அவுங்க மொழி மட்டும் தெரிஞ்சால் போதும்!  பயணிகள் கூட்டத்திலும் அம்பது ப்ளஸ் வயதினர்தான்  முக்கால்வாசி. அதிலும் பெண்கள்  எண்ணிக்கை அதிகம்.

சீனதேசத்தில் ஆண், பெண் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள் என்பது தெரியும்தானே?  தொழிற்சாலைகளில் வேலை செய்யற பெண்கள் அம்பது  வயசிலும்,  மத்த அரசு, பொது நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் அம்பத்தியஞ்சிலும்  பணி ஓய்வு செஞ்சுக்கலாம்.  அரசாங்கம் ஓய்வூதியம் கொடுக்குது.

ஆண்களுக்கு அறுபது வயசுவரை வேலைன்னு வச்சுருக்காங்க. அதை இப்ப அறுபத்தியிரண்டா ஆக்கப் போறாங்களாம்.  வேலை, குடும்பம், புள்ளைவளர்ப்புன்னு இருந்தவங்க, பணி ஓய்வுக்குப்பிறகு  கொஞ்சம் ஊரைச் சுத்திப் பார்க்க வெளியே வர்றாங்க.  சின்னச் சின்ன கிராமங்கள், நகரங்கள்னு அங்கிருந்து   கூட்டமாத்தான் கிளம்பறாங்க. சாப்பாடு பிரச்சனை இல்லை, மொழிப்பிரச்சனையும் இல்லை! சுற்றுலா ஏற்பாடு பண்ணும் சின்னக் கம்பெனிகளும் ஏராளமா இருக்கு. இதுலே   சில கம்பெனிகள் ஒரே மாதிரி தொப்பி, இல்லை ஜாக்கெட்னு  கவர்ச்சிகரமான பரிசுகள் வேற கொடுத்துருது.  ஆரஞ்சுத் தொப்பிக் கூட்டம் , மஞ்சத்தொப்பிக் கூட்டம்னு  கொத்துக்கொத்தாப் போறாங்க.

ஸ்நாக் ஸ்ட்ரீட்டுக்குள் நுழைஞ்சாலும் இந்தக் கூட்டங்கள்தான். நாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்தப் பள்ளிக்கூடப் பசங்கள் நிறைய கடைகளில் நின்னு எதோ வாங்கிக்கிட்டு இருந்தாங்க.
எனக்கு முதலில் கண்ணில் பட்டது வரிசையா அழகா அடுக்கி வச்சுருந்த   ஆவி பறக்கும் உருண்டைகள்.  பார்த்தால்.... செஸ்ட் நட் போல இருக்கேன்னு  கடைக்காரரை  இது என்னன்னு விசாரிச்சால்... முப்பதுன்னு எழுதி வச்சுருக்கும் அட்டையைக் காமிச்சார்.  ஒன்னு எடுத்துக் கையில் கொடுத்தார். செஸ்ட் நட்டேதான்.  வெறுமனே வேகவைச்சதுதானாம். 100% வெஜிடேரியன்!  எனக்கு செஸ்ட் நட் பிடிக்கும். எங்கூர் கடைகளில் இவ்ளோ பெருசாக் கிடைக்கறதில்லை.   முப்பதுக்கு எவ்ளோன்னு தெரியலை. ஒரு பேப்பர் கவரில் வாரிப்போட்டு எடை மெஷினில் வச்சுட்டுக் கொடுத்ததை வாங்கிக்கிட்டேன். அரைக்கிலோ இருக்கலாம்.  கையில் பிடிக்க முடியாம பயங்கரச் சூடு!  கொஞ்சம் ஆறட்டும், தின்னு பார்க்கலாம்.....
இந்தாண்டை எதிர்வாடைக் கடைக்குமுன்னால் பயங்கரக்கூட்டம். எட்டிப் பார்த்தேன். அடப்பாவிகளா?   மாண்டவ்ய மகரிஷி நினைவுக்கு வந்தார்.  மஹாபாரதத்தில் வருது இவரது கதை!  தெரியாதவர்களுக்காக ஒரு 'சுருக்' இங்கே :-)

யோகத்தில் ஆழ்ந்துருக்கும் முனிவரிடம்,  இந்தப் பக்கம் ஒரு திருடன் வந்தானான்னு  அரசன் கேட்க, அவர் நிஷ்டையிலேயே தொடர்ந்து இருந்துருக்கார்.  அரசன் சொன்னதைக் கவனிக்கலைன்னு அரசனுக்குக் கோபம் வந்து , கழுவில் ஏத்தச் சொல்லிட்டுப் போயிட்டான். அப்படியே ஆச்சு. அப்பவும் அவர் நிஷ்டையிலேயே இருந்தபடியால்  கழுமரம் குத்தித் துளைச்சும்  அவருக்கு ஒன்னும் ஆகலை.  சேதி கேட்ட மற்ற முனிவர்கள் எல்லோரும் வந்து இவரை தரிசிக்கிறாங்க.  அரசனுக்கு விஷயம் தெரிஞ்சதும் பயம் வந்துருச்சு.  ஓடிவந்து   முனிவரைக் கழுவில் இருந்து இறக்கிவிடச் சொல்றான். 

முனிவர், தன் தவ வலிமையால் தருமதேவனிடம், தனக்கு நேர்ந்த அநீதிக்குக் காரணம் கேட்க.....   தருமதேவன் சொல்றான் 'நீர் சின்னப்புள்ளையா இருந்தப்ப பூச்சி பொட்டுக்களைப் பிடிச்சு இம்சை செய்தீர். அதன் காரணமாத்தான் இப்போ இந்த  தண்டனை'

முனிவருக்குக் கோபம் வந்துருச்சு. 'அறியாப்பிள்ளையா இருந்தகாலத்தில் செய்ததையும் பாவக்கணக்கில் சேர்த்துக்கலாமா'ன்னு  கேட்க,  'எந்த வயசானாலும் பாவம், பாவம்தான்'னுட்டான் தருமதேவன். உடனே முனிவர் தருமதேவனை சபிச்சுட்டார், கொஞ்சம் கீழ்க்குடியில் பிறப்பாய்னு!    அப்படிப் பிறந்தவர்தான்  மஹாபாரத்தில் வரும் விதுரர்!   

தெரியாமச் செஞ்சதுக்கே அந்தக் கொடூர தண்டனைன்னா.... தெரிஞ்சு செஞ்சுக்கிட்டு இருக்கும் பாவங்களுக்கு  இந்த கடைக்காரர்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோன்னு நினைச்சேன்....   இவுங்க  எல்லாத்தையும் பிடிச்சுத் தின்னுடறாங்க.. அவுங்க உணவுப் பழக்கம் அப்படின்னாலும்... சமைக்குமுன் கொன்னு தின்னப்டாதா?  விருச்சிகங்களைக் கழுவிலேத்தி வச்சுருப்பதைப் பார்த்தால் ரொம்பவே பாவமா இருந்துச்சு.  ஒரு சில விருச்சிகங்கள் உயிரை விட்டுருச்சுன்னாலும்,  இன்னும் பலதும் உயிர் போகாமல் கையையும் காலையும் வாலையும் ஆட்டிக்கிட்டு வலியில் துடிப்பதைப் பார்த்து  மனசு கஷ்டப்பட்டது.... ப்ச்....
அந்தாண்டை நகர்ந்து போனப்ப, விதவிதமா சாப்பாடு! என்ன ஏதுன்னு பெயர் தெரியாது.  எதுவும் உயிரோடு இல்லை. ஆக்கி முடிச்சவைகள்.   மக்களும்  வாங்கித் தின்னுக்கிட்டு இருக்காங்க. நல்ல கூட்டம்.


நூறு கடைகள் இருக்கலாம்..... ஈஸி... இந்தத் தெருவுக்குள்ளே இடதும் வலதுமா இன்னும் சின்னத் தெருக்கள்  வேற பிரிஞ்சு போகுது!  ரெஸ்ட்டாரண்டும்,  நகைக் கடைகளுமா.....

அங்கங்கே ரெண்டு எட்டு இடைவெளியில் குப்பைக்கூடைகள்.   நடந்துக்கிட்டே சாப்பிட்டு முடிச்சுட்டு, ஒழுங்கா குப்பைக்கூடையில்  தட்டு, கிண்ணம், சொப்ஸ்டிக்கை போட்டுட்டுப் போறாங்க.
எதோ கிஃப்ட் ஷாப் போல ஒன்னு தெரியுதேன்னு உள்ளே போயிட்டேன்.  பொம்மைகள், பரிசுப்பொருட்கள், அலங்காரச் சாமான்கள், நகை நட்டுகள்  இப்படி!  நம்மவர் எனக்கொரு மயில் வாங்கித் தந்தார். பேரம் பேசத்தெரியாம நிறைய கொடுத்துட்டார்னு எனக்கு மனக்குறை!
சங்கிலி, ப்ரேஸ்லெட் பகுதியில்  மகளுக்கு எதாவது வாங்கலாமான்னு பார்த்த நம்மைப் புடிச்சுக்கிட்டாங்க.. இங்கேயும் சரியா பேரம் (எல்லாம் கால்குலேட்டர் பேரம்தான்!) பேசாமல்  மகளுக்குச் சில பொருட்கள் வாங்கிட்டார்.  இது சரிப்படாதே... இனி நம்ம திறமையைக் காமிக்கத்தான் வேணும்.....

பில்லுக்குப் பணம் கட்டப் போனவர், அங்கிருந்து 'வா வா'ன்னு கை அசைச்சு என்னைக்கூப்பிட்டதும்  என்னமோ ஏதோன்னு அங்கே போனால்.....   அவருக்குப் பரிசாக் கிடைச்ச சுரண்டல் அட்டையில் தொளாயிரம் ஆரெம்பி கிடைச்சுருக்காம்.  கொஞ்சம் கொஞ்சம் இங்லிஷ் பேசத் தெரிஞ்ச கடைக்காரப் பெண், அதுதான் ஏற்றவும் விலை மதிப்புள்ளதுன்னு சொல்றாங்க.   நம்மவர் திகைச்சு நிக்கறார் !

அப்ப பில் பணம் போக மிச்சம் நமக்குக் கிடைக்குமான்னா....

 ஹேய்.... அதான் இல்லை!  அங்கே ஜேடும் தங்கமுமா சேர்த்து சில நகைகள், பென்டன்ட்டுகள் வச்சுருக்காங்க.  அந்தப் பகுதியில் இருப்பவைகளை மட்டும் வாங்கினால்  அந்தக் காசைக் கழிச்சுக்கிட்டு மீதி கொடுத்தால் போதுமாம்!  டீல் நல்லா இருக்கேன்னு ஒரு சின்ன பென்டன்ட்டைத் தேர்ந்தெடுத்துட்டு,  மீதித் தொகையில்   நல்லாவே   அடிவிலைக்குப் பேரமும் பேசி வாங்கிட்டேன்.

ஜேடு & தங்கத்தின் நம்பகத்தன்மைக்கு  அந்த குறிப்பிட்ட நகையின் படத்துடன் ஒரு சான்றிதழ் வேற !  எல்லாம் சீனத்தில் எழுதி இருக்கு. நல்லதுன்னு சொல்லுதா... இல்லை போலின்னு சொல்லுதான்னு தெரியலையே....  ஙே....

முத்துச்சிப்பிகள் வச்சுருக்கும் கடையில்  நாம் காசு கொடுத்து ஒரு சிப்பி வாங்கித் திறந்து பார்த்தால் அதுலே இருக்கும்  முத்துக்கள் எல்லாம் நமக்கேவாம்.  அவ்ளோ அதிர்ஷ்டம் இருக்குமா நமக்கு? ஏற்கெனவே இருந்த கொஞ்சநஞ்ச அதிர்ஷ்டம் இப்ப ஜேடு பென்டன்ட்லே செலவாகிருச்சுல்லே?

ஆமாம்.... சிப்பிக்குள் ஒன்னும் இல்லேன்னா?  கடையில் இருக்கும் முத்துக்களில் ஒன்னு தருவாங்களாம். இருக்கட்டும்  இருக்கட்டும்....
ஒரு கடையில் தண்ணி பாட்டிலும்,  தயிரும் வாங்கிக்கிட்டோம்.  எனக்குக் கொஞ்சம் வெண்ணை வேண்டி இருக்கு.  Bபட்டர்னு சொன்னால் புரியலை.  நாம்தான் அபிநயசரஸ்வதியாச்சே !  இடது உள்ளங்கையைக் காமிச்சு (அதுதான் ப்ரெட்!) வலது கையால் ரொட்டிக்கு வெண்ணை தடவறேன். கடைக்காரருக்குப் புரிஞ்சு போச்சு. விடுவிடுன்னு என்னைக் கூட்டிப்போய் பிஸ்கெட் இருக்கும் ஷெல்ஃபைக் காட்டறார்!  பட்டர் பிஸ்கெட்!
அடுத்து  இருக்கும் கடைகளில் எல்லாம்  போய் 'அபிநயிச்சும்'  வெண்ணை கிடைச்ச பாடில்லை. போடா.... வெண்ணைன்னு ஆகிப்போச்சே....  என்ன ஒன்னுன்னா.... இந்த வெண்ணை டான்ஸில்  நல்ல முன்னேற்றம் வந்து ரொம்ப நளினமாவே ரொட்டியில் வெண்ணை தடவிக் காமிக்கிறேன்.  'ப்ராக்டிஸ் மேக்ஸ் பெர்ஃபெக்ட்'னு சும்மாவாச் சொல்றாங்க :-)

வெண்ணைக்குச் சீனத்தில் என்னன்னு சொல்றது?
 ஸ்நாக் தெருவில் நடந்து போயே அடுத்த வாசலுக்கு வந்துட்டோம். அங்கிருந்து பார்த்தால் நம்ம ஹொட்டேல்  ரெண்டு  நிமிச நடையில்! ஆஹா....

அறைக்குப்போய்  பாவ்பாஜி  (ரெடி டு ஈட் வகை) பாக்கெட் திறந்து ரெண்டு சின்ன கப்பில் ஊத்தி மைக்ரோவேவில் சுடவச்சு  பன்னோடு சேர்த்து  லஞ்ச் முடிச்சுட்டு,  பயணக் களைப்பு இருக்கே,  கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமேன்னு படுத்தால் அப்படியே தூக்கம் இழுத்துக்கிட்டுப்போய் சாயங்காலம்தான் கண்ணை முழிச்சோம்.  இனிமே எங்கே கிளம்பிப் போறது? 
ஹொட்டேலின் பக்கவாட்டில் ஒரு நிமிச நடையில் ஒரு ஃபேமிலி ஸ்டோர் இருக்கே அங்கே போய் வெண்ணையை மட்டும் தேடிவரப்போனால்.... அங்கேயும் வெண்ணை கிடையாது. ஆனால் பால்  அரைலிட்டர் பாக்கெட் கிடைச்சது.

திரும்ப ஹொட்டேலுக்கு வந்து நேரா வரவேற்பில் போய் Bபட்டர்  எங்கே கிடைக்குமுன்னு விசாரணை.  எங்கேயும் கிடைக்காதுன்னு பதில்!  அடராமா....  பருப்புப்பொடிக்கு நெய்க்கு பதிலா பட்டர் வாங்கிக்கலாமுன்னு போட்ட ப்ளான்... போச்சா?   என் முகம் போன போக்கைப் பார்த்துட்டு,  யாருக்கோ  ஃபோன் செஞ்சு என்னவோ பேசிட்டு, நீங்க மாடி ரெஸ்ட்டாரண்டுக்குப் போய் பட்டர் வாங்கிக்குங்கன்னார்.

அங்கெ போனா ப்ரேக்ஃபாஸ்டுக்கு வச்சுருக்கும்  குட்டியூண்டு வெண்ணை பேக் இருக்குமே அதில் ரெண்டு கையில் வச்சுக்கிட்டு ஒருத்தர் நமக்காகக் காத்திருந்தார். அடராமா... ரெண்டு ஸ்பூன் வெண்ணையை வச்சுக்கிட்டு என்ன செய்யறது?  இன்னும் ரெண்டு கொடுங்கன்னு  (வெட்கப்படாமல்) கேட்டு வாங்கிக்கிட்டுக் கையோடு வெண்ணைக்கு சீன மொழியில் என்னன்னு  சொல்லணுமுன்னும் கேட்டேன். அவுங்க சொன்ன உச்சரிப்பு   நாலு தடவை சொல்லிப் பார்த்தும் எனக்கு வரலை. எதுக்கு வம்புன்னு  அதை எழுதி வாங்கியாச்!

அரைக் கப் அரிசி எடுத்துக் களைஞ்சு, கொண்டுபோயிருந்த ரைஸ்குக்கரில்  சாதம் சமைச்சு, பருப்புப்பொடி & வெண்ணையோடும் தொட்டுக்க உருளைக்கிழங்கு சிப்ஸ்ன்னும் (இதுவும் நியூஸியில் இருந்து கொண்டு போனதே!) டின்னரும் ஆச்சு. டிஸ்ஸர்ட்க்கு தயிர்.

நாளைக்கு ஒரு டூரில் போறோம்.  சீக்கிரம் எழுந்து ரெடி ஆகணும்.  நல்லா ரெஸ்ட் எடுங்க. நாளைக்குப் பார்க்கலாம் :-)

தொடரும்.......  :-)


19 comments:

said...

படங்கள் அருமை !!
நகைச்சுவை தூவிய ரசிக்கத்தக்க அனுபவங்கள் .
நல்லா இருக்கு!!

said...

//மஞ்சத்தொப்பிக் கூட்டம்னு கொத்துக்கொத்தாப் போறாங்க.// ஆவுன்னா மஞ்சக்கொடிய தூக்கிட்டு கெளம்பிடறாங்க - ன்னு ஒரு (வெடிவேலு) ஜோக் வரும், ஹிஹிஹி

//பேரம் பேசத்தெரியாம நிறைய கொடுத்துட்டார்னு எனக்கு மனக்குறை!// உங்க ட்ரைனிங் பத்தலே போலிருக்கே;

said...

தங்கள் அருமையான‌ பதிவுகளை இங்கேயும் பதியலாமே http://tamilblogs.in/

said...

படங்களும் நல்லா இருக்கு. நீங்க சொல்றதைப் பார்த்தால் சாப்பாடை எடுத்துக்கிட்டுதான் சீன டூர் போகணுமா?

நான் தாய்வானில் பழங்களை மட்டும் உண்டு காலம் கழித்தேன்.

said...

கோபால் சார் என்னோட செட்டுன்னு நெனைக்கிறேன். பேரம் பேசுறது ரொம்பக் கஷ்டம். நீங்க சாமர்த்தியமாப் பேசி வாங்கீட்டீங்க. அந்த மயில் ரொம்பவே அழகு.

செஸ்ட்நட் ரொம்ப நல்லாயிருக்கும். ஐரோப்பால நெருப்புல வாட்டி வித்துக்கிட்டிருப்பாங்க. பாத்தா வாங்காம விட மாட்டேன். சீனாவுல வேக வெச்சிருக்காங்க போல. செஸ்ட் நட் பிரியத்துல நீங்களும் என்னோட செட்.

தேள் ஓரமா ஓடுனாலே நம்மூர்ல எல்லாரும் ஒவ்வொரு பக்கம் ஓடுவோம். அந்தத் தேளையும் பிடிச்சு குச்சியில குத்தி வெச்சி வாட்டிச் சாப்பிடுற சீனர்களோட துணிச்சலைப் பாராட்டியேஎ ஆகனும். நெளிநெளியா என்னவோ இருக்கே. அதென்ன பாம்பா?

வெண்ணைக்கு இவ்வளவு சிரமப்பட வேண்டியதாப் போச்சே. சீனாவுல மாடுகள் கிடையாதா? இல்ல வெண்ணெய் சாப்புடுற வழக்கம் இல்லையான்னு தெரியலையே.

said...

பேரம் பேசறதுன்ன உடனே எனக்கு என் சிங்கப்பூர் அனுபவம் ஞாபகத்துக்கு வந்தது. தேசிய டிரெஸ் என் பெண்ணுக்கு வாங்க, பேரம் பேசினேன். கடைக்காரர் 20$ என்று சொல்லி நான் 10$ல் ஆரம்பித்த ஞாபகம். அவர் கடைசியில், உனக்கு நான் விற்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவர் கடைசியாகச் சொன்ன பணத்தைக் கொடுத்து டிரெசை வாங்கினேன். என்னைக் கேட்டால் ஃபிக்சட் விலை இருப்பது நமக்கும் நிம்மதி. இல்லைனா, இன்னும் குறைத்து வாங்கியிருக்கணுமோ என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.

said...

ஆஹா வெண்ணைக்காக அபிநயம்! :)

எதையும் சாப்பிடுவோம் என்ற கொள்கை அவர்களுடையது! விருச்சிகத்தினை எதற்கு விட்டு வைக்க வேண்டும்!

said...

எனது சின்ன வயதில் சீனாவில் பாம்பு, பல்லி சாப்பிடுவார்கள் என்று நண்பர்களுக்குள் பேசிக் கொண்டது நினைவில் வந்தது.

said...

ரீச்சரே தப்புப் பண்ணினா எப்படி?

வெண்ணெய். 20 தடவை எழுதுங்க. வெண்ணெய். வெண்ணெய்ன்னு சொல்லிக்கிட்டே எழுதுங்க.

க்ர்ர்ர்

said...

ம்ம்ம் வீதி வலம் வந்தாச்சு,,...

said...

வாங்க ரமேஷ்.

ரசித்தமைக்கு நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்,

இதையெல்லாம் பக்கத்துலே நின்னு கவனிச்சுக் கத்துக்கணும். எங்கே? நாம் கடைக்குப்போனால் புள்ளி எஸ்கேப் ஆகறதுதான் வழக்கம். இங்கே மொழி தெரியாமல் கஷ்டப்படுவேனோன்னு..... கூடவே வந்து குழப்பம் .

said...

வாங்க தமிழ்ப்ளொக்ஸ்.

பாஸ்வேர்டெல்லாம் கேக்குதேன்னு தயக்கமா இருக்கு.

said...

வாங்க நெ.த.

எல்லாம் சாப்பிட முடியும் என்பவர்களுக்குப் பிரச்சனை இல்லை. வெஜ் என்பதால் .... சாப்பாடு கொண்டு போனால் வயிறு வாடாமல் தப்பிச்சுக்கலாம்.

எனக்குத் தெரிஞ்சு சிங்கையில் பேரம் இல்லையே....

எங்கூர் மார்கெட்டில் சில சமயம் பேரம் பேசிக்குவேன். கிடைக்கவும் செய்யும் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

முதுகை வானத்துக்குக் காட்டினால் தின்னுருவாங்களாம்! அதனால் நாம் குனியவே கூடாதுன்னு சொல்லி இருக்காங்க :-)

said...

வாங்க தமிழ் இளங்கோ.

அது என்னவோ உண்மைதான்! ஒரு படத்துலே ஜனகராஜ் சொல்வார், 'சீனாவுக்குப் போனால் பாம்பு நடுத்துண்டம் எனக்குதான்'னு !

said...

வாங்க கொத்ஸ்.
டீச்சரை மிரட்டும் மாணவரை என்ன செய்யலாம்?

வெண்ணெய்.

நான் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்னதுக்குச் சமம் :-) இதுலே இருபது கழிச்சுக்கிட்டுப் பாக்கியை எடுத்து வையுங்க. பிறகு எப்பவாவது பயன்படலாம்.

said...

வாங்க அனு ப்ரேம்

நன்றி :-)

said...

வாங்க ஜிரா.

சொல்லும் விலையில் சரிபாதியைக் கழிச்சுட்டு, அதுலேயும் ஒரு பத்து சதமானம் குறைச்சுக் கேக்கணும். பேரத்தில் கொஞ்சம் கூட்டி அந்த பாதிவிலைக்கு வந்துடலாம். இதை நான் 1982 லேயே ஹாங்காங்கில் ஆரம்பிச்சுட்டேன் .

ஆனால் இங்கே அறுபது சீன ரூபாய் சாமானை எட்டு நூறு சொல்லும் கடைக்காரரிடம் என்னன்னு பேரம் பேசறது?

இங்கே பொதுவா யாருமே வெண்ணெய் பயன்படுத்தறதே இல்லை. ஆனால் தயிர் நிறைய சாப்பிடறாங்க !