Monday, April 16, 2018

எதிர்க்கரையில் இருந்து..... (@அமெரிக்கா.... கனடா 25)

அஞ்சரைக்கு விழிப்பு வந்தவுடன் பார்த்தால் அருவியைத் தவிர மற்ற  இடங்கள் எல்லாம் ராத்திரி பார்த்தமாதிரியே  மின்விளக்குகளால் ஜொலிக்குது. சூரியனும் கொஞ்சம் லேட்தான் போல! (இங்கேயும் அந்தப் பாழாப்போன டே லைட் ஸேவிங்ஸ் இருக்குல்லெ!) அவன் வந்தால்தான் அடர்த்தியான நீராவி,  இடத்தை விட்டு அகலும்.
அப்புறமும் ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு ஏழுமணிக்கு எழுந்து 'க்ளிக்ஸ்' கடமையை முடிச்சுக்கிட்டு மற்ற வேலைகளைக் கவனிச்சு ப்ரேக்ஃபாஸ்டுக்கு எட்டரைக்குத்தான் போனோம். நேத்துப்போலவே இன்றும்.... 

 இந்த  எம்பஸி ஸ்யூட்ஸ், நம்ம ஹில்ட்டன் ஹொட்டேலோடதுதான் என்பதால் எல்லாம் தரமாகத்தான் வச்சுருக்காங்க.  என்ன ஒன்னு.... ஜன்னலுக்கு எக்ஸ்ட்ரா காசுன்றதுதான் எனெக்கென்னமோ  அநியாயமா இருந்துச்சு.


அறைக்கு வந்து பேக்கிங் எல்லாம் முடிச்சுட்டு,  இன்றே இப்படம் கடைசின்னு ஜன்னலாண்டை உக்கார்ந்தேன். நம்மவரும்  உக்கார்ந்து பார்த்தார் :-)

பத்தேமுக்கால் ஆகும்போதே அலியிடமிருந்து  ஃபோன். வாசலுக்கு வந்தாச்சாம். நாங்களும் செக்கவுட் செஞ்சுக்கிட்டுப் புறப்பட்டோம். அதே 'நியாகரா பார்க்வே' வழிதான்.
பாலத்துக்குள் நுழைஞ்சதும்.... யம்மா.... எவ்ளோ அகலமுன்னுதான் தோணுச்சு. ரெண்டுநாளில் ட்வின்டவர் துக்க சம்பவம் நினைவுநாள் வருதுன்னு நினைவூட்டல்.... ப்ச்... ஆனாலும்....  அது ரொம்பவே அநியாயம்தான் இல்லே..... எப்படி பொலபொலன்னு அப்படியே நின்னவாக்குலே சரிஞ்சு விழுந்துருச்சுன்னு....   ஐயோ.....     ஒரு பயணத்துலே (1999லே)  அந்த ரெட்டை கோபுரத்துலே ஏறிப் போய் பார்த்தது இன்னும் பசுமையாத்தான் நினைவில் இருக்கு!
\நடந்து போகும் மக்கள்ஸ்  அதுக்குன்னு போட்டுருக்கும் நடைபாதைப் பகுதியில் ஜாலியாப் போய்க்கிட்டு இருக்காங்க.

பாஸ்போர்ட் கன்ட்ரோல், பார்டர் க்ராஸிங்  சமாச்சாரங்களுக்காக  நிறைய ஆப்பீஸருங்க ட்யூட்டியில் இருக்காங்க. நம்ம டாக்ஸி போற லேனில்  செக்கிங் பூத்தில் போய் வண்டியை நிறுத்தினார் அலி.  நாம் யாரும் வண்டியை விட்டு இறங்க வேண்டியதில்லை. கூடவும் கூடாது.
நம்ம பாஸ்போர்ட்டுகளையும், அமெரிக்க விஸாக்களையும் சரிபார்த்த ஆப்பீஸர்,  ரெண்டு கேள்விகள் கேட்டார். எந்த ஊரில் இருந்து வந்துருக்கீங்க? (கையில் நம்ம பாஸ்போர்ட் வச்சுருக்கார்!)  நியூஸிலாந்துன்னு சொன்னதும்   அழகான ஊர் என்றார். அடுத்து அமெரிக்காவில் வேறெங்கெல்லாம் போகப்போறீங்க?  பதில் சொல்லிட்டோம். கடைசியா ஒரு கேள்வி.  சாப்பாட்டுச் சாமான்கள் எதாவது இருக்கா?  இருக்கே. இதோ இந்த ஆப்பிள்!  அவ்ளோதான்.
பாஸ்போர்ர்ட்டில் ஸ்டாம்ப் அடிச்சுக் கொடுத்துட்டு, நம்ம அலியிடம், 'சீக்கிரம் திரும்பி வந்துருவீங்கதானே?'

"இல்லையா பின்னே.... இவுங்களை ஹொட்டேலில் இறக்கி விட்டுட்டுத் திரும்ப வேண்டியதுதான்."

எல்லாம் ஆச்சு.
கனடாவில் குடியிருந்துக்கிட்டு,   தினமும் அமெரிக்காவில் வேலைக்குப் போய்வரும் மக்கள்ஸ் நிறையப்பேர் இருக்காங்களாம்.  அவுங்களுக்குன்னு தனியா ஒரு கார்ட் கொடுத்துருக்காங்க.. அதைக்  காமிச்சுட்டுப் போய்ப்போய் வரலாமாம். அலி சொல்லிக்கிட்டு இருந்தார்.

கஸ்டம்ஸ் & பாஸ்போர்ட் செக்கிங் முடிச்சதும் பாலமும் முடிஞ்சுருது!  இடதுபக்கம் திரும்பி நாலாவது நிமிட்லே நாம் தங்கும் 'ஹாலிடே இன்' ஹொட்டேல் வாசலுக்கு வந்துருந்தோம்.  அந்தாண்டை ஹொட்டேலில் இருந்து இந்தாண்டை ஹொட்டேல் வர்றதுக்கு  அரைமணிதான்! சொன்னால் நம்பணும்....வெறும் மூணரை கிமீ :-)
அலிக்கு நன்றி சொல்லிட்டு உள்ளே போனோம்.


இங்கெல்லாம் செக்கின் டைம் பகல் மூணுமணிக்குத்தான். ஆனாலும்  நல்ல வேளையா  நமக்கு உடனே ரூம்  கிடைச்சது. இல்லேன்னா மூணரை மணி நேரம்  தேவுடு காத்திருக்கணும்.  அப்பதான் தோணுச்சு.... நாம் எதுக்கு இவ்ளோ சீக்கிரம் கனடாவில் இருந்து கிளம்புனோம்? மணி இப்போ பதினொன்னரைதானே ஆச்சுன்னா.... நம்மவர் சொல்றார் எம்பஸிஸ்யூட்லே செக்கவுட் பதினொரு மணிக்காம். ஓ.... அப்ப சரியாத்தான் கிளம்பி இருக்கோமா?

செக்கின் பண்ணும்போது என் வழக்கமான வேண்டுகோளை முன்வைத்தேன். 'ரூம் வித்  வ்யூ, அதுவும் ஃபால்ஸ் வ்யூ வேணும்'.  சிரிச்ச முகத்தோடு, கவுன்ட்டரில் இருந்தவர் சொல்றார்....  'இங்கே எந்த ஹொட்டேலிலும் ஃபால்ஸ் வ்யூ என்ற சமாச்சாரமே கிடையாது...'  ஹா........

ஆறாவது மாடியில் அறை. ஜன்னலின் திரைச்சீலையைத் திறந்தால்.......  அதோ..... அந்தாண்டை  கனடா தெரியுது. அம்புட்டுதான்.... கிட்டக்கக் கொண்டுவந்து பார்த்தால் அருவியில் இருந்து மேலெழும் ஆவியின் அடையாளம்....  ஹூம்......
சகல வசதிகளோடும் அறை நல்லாப் பெருசாவே  இருக்கு. ரெண்டு வருசத்துக்கு முன்னால்தான் ஏராளமா செலவு செஞ்சு புதுப்பிச்சுருக்காங்களாம் !   தெருவைப் பார்த்தாப்போல இருக்கும் டோனிரோமா ரெஸ்ட்டாரண்டு வழியாகவும்  அறைக்குப் போகலாம்.  எதுத்தாப்லெ ஒரு சர்ச். செயின்ட் பீட்டர்ஸ்.

சின்ன ஓய்வுக்குப்பின்  அடுத்தாப்லே இருக்கும் விஸிட்டர்ஸ் சென்ட்டருக்குப் போனோம். இங்கே அருவியைத் தவிர்த்துப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கத்தான்.....

ஒரு ஆறுமாசத்துக்கு நியாகராத் தண்ணீரை நிறுத்தி வச்சுருந்தாங்களாமே!   அட!
நியாகரா கவுன்ட்டியின் வரைபடமும் மற்ற  சுவாரசியமான இடங்களின் தகவல்களும் கிடைச்சது.  அப்படியே இன்னும் கொஞ்சம் நடந்து  டாக்ஸியில் வரும்போது பார்த்த பெரிய ஷாப்பிங் சென்டருக்குப் போறோம். இன்னும்  பத்தெட்டு  வச்சால்  ரெயின்போ ப்ரிட்ஜாண்டையே போயிடலாம் :-)
இங்கே வர்ற வழியிலேயே  கையேந்திபவன் ஒன்னு!  பெயரைப் பார்த்ததும் நம்மவர் முடிவு பண்ணிட்டார் அங்கேதான் லஞ்சுன்னு!  ஷாப்பிங் சென்டர் வாசலில் இன்னொரு கையேந்திபவன். ஆனால்  முதல்லே பார்த்ததுதான் பெஸ்ட்டாம்!  நெசமாவா? யாரு சொன்னா? அதான் சௌத்ன்னு போட்டுருந்துச்சே  :-)
ஷாப்பிங் சென்ட்டரில் மேட் இன் அமெரிக்கான்னு  கடைகள். கடைகளின் அமைப்பு, கட்டடங்கள், ஒரு சில பொருட்கள் இப்படி இவைகளைத்தான் குறிப்பிட்டு இருக்காங்கன்னு  அப்புறம் புரிஞ்சது!   கடைப்பலகையைக்கூடக் குறிப்பிட்டு இருக்கலாம்தானே?  :-)

கடைகளைப் பார்த்தது போதுமுன்னு தோணுச்சு. திரும்ப ஹொட்டேலுக்கு வர்ற வழியில்   தோஸா ஹட்.  பளபள வண்டி.  பஞ்சாபி நடத்தும் கடை.  ஆகவே 'நம்மவர்' ஆசைப்பட்ட தோஸா வேணாமுன்னு முடிவு பண்ணிட்டு, எனக்கொரு பேல் பூரியும், இவருக்கொரு காம்போ மீல்ஸுமா வாங்கினோம்.  தெருவோரமே ரெண்டு மேஜை போட்டு வச்சுருக்காங்க. அங்கேயே உக்கார்ந்து சாப்பிட்டோம். நான் தப்பினேன் :-)  விதியாகப்பட்டது வலியதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க !!!!  பாவம்.... 'நம்மவர்'

நல்ல வெயில் வேற....  நடக்கவே  கஷ்டமா இருக்குன்னு அறைக்கு வந்துட்டோம்.  நாலுமணிக்கு ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டு (நல்ல காஃபி மெஷீனும் நல்ல காபியும் வச்சுருந்தாங்க !) நிதானமா அமெரிக்க நியாகராவை நோக்கிப் போனோம். ரிவர் வே!

ஃப்ளோ கன்ட்ரோல் செய்யுமிடத்திலே தண்ணீரைப் பிரிச்சு ரெண்டு நீர்வீழ்ச்சிகளுக்கும் (குதிரை லாடம் & அமெரிக்க நியாகரா) அனுப்பறாங்க பாருங்க..... அதுவே பெரிய நதியாட்டம்  கரைபுரண்டு ஓடி வருது இந்தப்பக்கம்.
இதுக்குமேலே ஒரு பாலம்!  ஆட்டுத்தீவுக்குப் போகலாம் அதுலே!  நாங்க நதியையொட்டியே  போறோம். இந்த வெள்ளக்காடு அப்படியே  மேலே இருந்து  நீர்வீழ்ச்சியா விழுது! 

அந்தாண்டைப் பக்கம்  இருக்கும் 'பார்க்வே' தோட்டத்தைப்போல இந்தாண்டையும்  புல்வெளியும், தோட்டமுமாத்தான் (நியாகரா ஃபால்ஸ் ஸ்டேட் பார்க் ) வச்சுருக்காங்க.   சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிப்போய்ச் சுத்திக்காட்டும் வண்டிகளும் இருக்கு.  நியாகரா ஸீனிக் ட்ராலி. சின்னதா ஒரு  மூணு டாலர் கட்டணம்  கட்டி டிக்கெட் வாங்கிக்கணும்.
நாங்க  தோட்டத்துக்குள்ளேயே வேடிக்கை பார்த்துக்கிட்டு, சிரமம் இல்லாம பொடிநடையில் வந்துக்கிட்டு இருக்கோம். அப்போ ஒரு 'க்ரவுண்ட்ஹாக்' பிஸியா டின்னர் சாப்புட்டுக்கிட்டு இருக்கார். அணில் குடும்பம்தான். ஆனால் பெருசு!  கைவிரலைப் பாருங்களேன்!  ஹைய்யோ!மெய்ட் ஆஃப் த மிஸ்ட் படகுத் துறைக்குப் போகுமிடத்துக்கு அடுத்தாப்லே  அப்ஸர்வேஷன் டவர்னு  ஒரு வ்யூவிங் டெக் இருக்கு.  இங்கே போகவும் ஒரு சின்னக்கட்டணம் இருக்காம். நாம் போனப்ப  உள்ளே இறங்கிப் பார்க்கும் நேரம் முடிஞ்சுருச்சு. ஆனால் டெக்வரை போய்ப் பார்க்க  அனுமதி இருந்தது.முந்தி இதுக்குமேலே இருந்த கட்டடம் தொன்னூறு அடி உயரமா இருந்துச்சுன்னும்,  பறவைகள் , பறக்கும் வேகத்தில் அதன்மேல் இடிச்சுக்கிட்டு சாமிகிட்டே கூட்டங்கூட்டமாப் போயிருதுன்னு  உயரத்தை இப்போ முப்பத்தியஞ்சு அடியாக் குறைச்சுக் கட்டி இருக்காங்க. முந்தி இருந்த கண்ணாடிச்சுவர்களும் பறவைகள் உயிருக்கு எமனா இருந்துச்சுன்னு இப்ப வேற முறையில் ஸ்ட்ரைப்டு க்ளாஸ் போட்டுருப்பதா ஒரு விவரம் கிடைச்சது அங்கே!
இந்த டவரில் இருந்து பார்த்தால்  முழு நியாகராவும் மூணு பேரருவிகளும் நல்லா பளிச்ன்னு தெரியுது!   இந்தாண்டை நமக்குப் பின்புறம் ரெயின்போ ப்ரிட்ஜ்! க்ளிக்ஸ் முடிச்சுக்கிட்டு, தோட்டத்தின் வேற வழியில் போனோம்.
அங்கேயும் ஒரு விஸிட்டர்ஸ் சென்டர் இருக்கு.  நியாகரா அட்ராக்‌ஷன்களுக்கு டிக்கெட்ஸ் இங்கே வாங்கிக்கலாம்.
நாம்தான் ஏற்கெனவே ஹார்ன்ப்ளோயரில் போயிட்டோமேன்னு மெய்ட் ஆஃப் த மிஸ்ட்டுலே போகலை.


தோட்டத்தின் ஒரு பகுதியில்  செவ்விந்தியரின் அழகான சிற்பம் வச்சுருக்காங்க. இவர் ஸோஃபி மார்ட்டின்.   Wolf Clan னு போட்டுருப்பதைப் பார்த்ததும் 'ஓநாய் குலச்சின்னம்' புத்தகம் நினைவுக்கு வந்துச்சு. 
கொஞ்சம் தள்ளி வார்மெமோரியல் !

இங்கெ இருக்கும் ஸீகல்ஸ் எல்லாம்  வேறமாதிரி.  எங்கூர்மாதிரி ப்ளெயினா இல்லாம ப்ரின்ட்டட் சட்டை போட்டுருக்கே!
 முயலார், அணிலார்னு எல்லோரையும் பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டுத்தான் அறைக்கு வந்தேன் :-)வேற வழியில் வந்துட்டதால்  ஸீனரி  மாறிப்போய் ஒரு தெரு முழுக்க சாப்பாட்டுக் கடைகளும், பயணிகள் ஊரைச் சுத்திப் பார்க்கும் விதமா  சைக்கிள் ரிக்‌ஷாவுமா  இருக்கே !
இருட்ட ஆரம்பிச்சதும்  எதிர்க்கரையில்தான் விளக்கொளி ஜாமாய்ச்சது!    இந்தாண்டை 'எல்லாமே' கொஞ்சம் சுமார்தான் .....

வலையில் தேடி,  அடுத்த தெருவில் எதிர்வாடையில்  கோஹினூர் இருக்குன்னு தெரிஞ்சு அங்கே போய் ராச்சாப்பாடு ஆச்சு.  பஃபேதான். விலை மலிவுன்னு தனியாச் சொல்ல வேணாம்தானே!

மூணு நிமிட் நடையில் அறைக்கு வந்தாச்சு.

நாளைக் கதையை, நாளை பார்க்கலாம். சரிதானே?

தூங்கப்போகும்போது யாரோ அறைக் கதவைத் தட்டறாங்களேன்னு பார்த்தால், ஹொட்டேல் பணியாளர், ஒரு  'மைக்ரோவேவ் அவன்' கொண்டுவந்து அறையில் வச்சுட்டுப்போனார்!

எதுக்காம்?

ஙே......

குட்நைட்!

தொடரும்..........:-)

11 comments:

said...

ஆஹா கனடாவிலிருந்து அமெரிக்கா வந்தாச்சு!

இந்தப் பக்கத்திலும் நீர்வீழ்ச்சி பார்க்க தொடர்கிறேன்.

said...

நியாகரா அமெரிக்காவிலிருந்து... எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன்.

கோபால் சார் ரொம்ப இளைத்துவிட்டாரா அல்லது அந்த நாற்காலி ரொம்பப் பெரிசா (ஹி ஹி ஹி)

இங்கு நீர்வீழ்ச்சி எப்படி இருந்தது என்று பார்க்கிறேன்.

said...

கனாடாவைக் கானடான்னுட்டு அடுத்து அமெரிக்கா போயிட்டீங்களா.

ஏன் ஆறுமாசம் தண்ணியை நிறுத்தி வெச்சாங்களாம்?

எனக்கொரு ஐயம்? இவ்வளவு தண்ணி விழுகுதே. அருவி தேஞ்சு தேஞ்சு நாள்பட பின்னாடி போயிறாதா?

நிலக்கடலை போட்டு என்னவோ சாப்டிருக்கீங்களே? என்னது அது?

தூங்கப் போறப்போ எதுக்கு அவன்? காலைல எதுவும் சூடு செஞ்சிக்கவா?

said...

அணிலாரின் நடை வித்தியாசமா ராஜநடையா இருக்கே...

said...

அருமை நன்றி

said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கனடா பக்கம் இருக்கும் சுவாரஸியங்கள் அமெரிக்கப்பக்கம் இல்லை... :-(

ரொம்ப சுமார்தான் ....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பீமனுக்காக செஞ்ச நாற்காலி அது! ஒரு ஓரமா நாங்க முடங்கிக்கிட்டோம் :-)

said...

வாங்க ஜிரா.

நீர்வீழ்ச்சியின் தேய்வை அளக்கத்தான் தண்ணீரை நிறுத்தி வச்சாங்களாம். அவுங்க கணக்கில் இன்னும் 2300 வருசத்தில் அருவியே இல்லாமல் போயிருமாம்!

நிலக்கடலையும் தயிரும் சேர்ந்தால் ருசி எப்படி இருக்குமுன்னு பார்த்தேன் :-)

அவன்..... அவனுக்குத்தான் தெரியும்!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி

said...

வாங்க Tamil US.

இணைச்சுடலாம். பிரச்சனை இல்லை.

உங்கள் வாசகர் வட்டம் எவ்வளவு பெரியது ? தெரிந்துகொண்டால் கூடுதல் மகிழ்ச்சி!