Friday, April 27, 2018

தாயினும் சாலப்பரிந்து.....(@அமெரிக்கா.... கனடா 30)

காலையில் எட்டரைக்கு வரேன்னு சொன்ன தோழி பத்மாவோடு சேர்ந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாமுன்னு எங்க  ஐடியா!  அவுங்களும்  குறித்த நேரத்துலே வந்துட்டாங்க. போற வழியில் எங்காவது சாப்பிடலாமேன்னு தோணுச்சு. இதோன்னு கிளம்பிட்டோம்.  எனக்கு இங்கே பார்க்க வேண்டிய கோவில்கள் ரெண்டு.  ஆன்மிகப் பயணமாப் போய்க்கிட்டு இருக்கோம் :-)
வேலைநாளில்  தோழியைத் தொல்லைப்படுத்தறோமோன்னு சின்னதா ஒரு குற்ற உணர்வு வந்தது உண்மை.  சொல்லவும் செஞ்சேன். அவுங்க மீட்டிங்ஸ் எல்லாம் கொஞ்சம் ஒத்தி வச்சுட்டு வந்ததாகவும்,பெரிய பிரச்சனை எதுவும் இல்லைன்னு சொன்னாலும்....  'நம்மவருக்கு'த்தான்  கொஞ்சம் யோசனையா  இருந்தது....
ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு  எங்கியாவது போகலாமான்னு  இவர் கேட்டப்பதான், பதறிப்போய் ' அடடா.... ஒன்னுமே சாப்பிடாமக் கிளம்பிட்டீங்களா?  நாம் போற இடத்துலே  கிடைக்கும்'னு  சொன்னதும் ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நினைச்சேன்.
எழுபது நிமிட் பயணத்துலே  கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.

ஸ்ரீஸ்வாமிநாராயண் மந்திர்!  உலகம் முழுசும் கட்டி வச்சுருக்கும் இந்த வகைக் கோவில்களில் இதுவே மஹாப் பெருசு!  இங்கே நியூஸியில் எங்கூரிலும் இந்தக் கோவில் இருக்கு! நாங்களும் கடந்த  ஏழு வருசமா ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவிலுக்குப் போய் வர்றோம்.  எங்க ஊரில் இது இரண்டாவது  ஹிந்துக்கோவில்.

அப்ப முதல் கோவில்?

இஸ்கான் ஹரே க்ருஷ்ணா  கோவில்தான்  நாங்க இங்கே வந்த நாள்முதல்!  அது ஆச்சு முப்பது வருசம்!  2011 ஃபிப்ரவரி  நிலநடுக்கத்தில்  ஹரே க்ருஷ்ணா கோவில் இடிஞ்சு விழுந்தபிறகு  கோவிலே இல்லாத ஊராகவே எங்க ஊர் இருந்துச்சு. இது ஒரு அஞ்சு மாசத்துக்குத்தான்.  அப்புறம் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில்  வந்தாச்.  ஒரு பழைய ஹாலைப் புதுப்பிச்சு வெறும் படங்கள் மட்டும் வச்சு ஆரம்பிச்சாங்க.  அடுத்த ஏழாவது மாசம் சாமி சிலைகள் எல்லாம் வந்ததும் பிரதிஷ்டை பண்ணி, அந்தக் கோவில் நல்லாவே நடந்துக்கிட்டு இருக்கு!

இதுக்கிடையில் இடிஞ்சு போன இஸ்கான் கோவிலைத் திரும்பக் கட்டி எழுப்பும் முயற்சி மெள்ள ஆரம்பிச்சுப் போன வருசம் அந்தக் கோவிலையும் திறந்துட்டாங்க, ஒன்னுமே இல்லாத  எங்களுக்கு இப்ப ரெண்டு கோவில்னு கொண்டாடிக்கிட்டு இருக்கோம். இங்கே அமெரிக்காவில் என்னன்னா... ஏகப்பட்ட ஹிந்துக்கோவில்கள்!!!

இங்கே  ராபின்ஸ்வில்லில்  சமீபத்திய வரவான  ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில்  ரொம்பவே பெருசா கலை அழகோடு கட்டி இருக்காங்கன்னு   இங்கத்துத் திறப்பு விழா சமயத்துலே  எங்கூர் ஸ்வாமிநாராயண் கோவிலில் ஒளிபரப்பில் பார்த்தோம்.

வளாகத்துக்குள் நுழைஞ்சது முதல் பிரமிப்புக் கூடிக்கிட்டே போனது உண்மை !  ஹைய்யோ.....  அக்ஷர்தாம் !  பூரணகும்பம் வச்சு வரவேற்கறாங்க !!!
கார்பார்க்கிங், கோவிலுக்குப் பக்கவாட்டில் இருப்பதால் கோவிலின்  சைட் வியுதான் முதலில் கண்ணுக்குப் படும்.  உயரமான சுவர்! புதுசா என்ன அழகாம்?
கீழே சின்னச்சின்ன மண்டபங்கள் ஒன்னோடொன்னு கைகோர்த்து நிக்குது. எதிரில் பெரிய  குளம்!   (கோவில் தீர்த்தம்!)

குட்டிமண்டபங்கள் வழியா நடந்து கோவில் முன்வாசலுக்குப் போகணும்! ஸ்ரீப்ரமுக் மஹராஜ் அவர்களின் (தங்கச்) சிலை,   முன்னால் கோவில் வாசலைப் பார்த்தபடி!   இவருடைய ஆட்சி (!)யில்தான் உலகம் பூராவும் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில்கள்  கட்டப்பட்டன!  குட்டியூண்டு நாடான நியூஸியில் கூட இப்ப அஞ்சு கோவில்கள் இருக்குன்னா பாருங்களேன்!  அமெரிக்காவில் மட்டுமே நூறு கோவில்கள், உலகம் பூராவும் இப்போதைக்கு ஆயிரத்து இருநூறு கோவில்கள். இன்னும் அங்கங்கே கட்டிக்கிட்டே இருக்காங்களாம்!
முந்தி ஒரு காலத்துலே செவ்வாய்கிரஹம் போனாலும் அங்கே ஒரு நாயர் டீக்கடை இருக்குமுன்னு கிண்டல் செய்வாங்க.  அதெல்லாம் நம்ம தெரியாத்தனம். உண்மையில் பார்த்தால் அங்கே குஜராத்தைச் சேர்ந்த மக்கள்தான் இருக்கணும் !  குஜராத்தியர்கள் இல்லாத நிலப்பரப்பே பூமியில் இல்லையாக்கும்!   இந்த வகைக் கோவில் இவுங்களுக்கானது என்பதால் ரொம்ப ஆர்வமா இதுலே ஈடுபடறாங்க. ஏகப்பட்டபேர்,  முக்கியமாக இளம்வயதினர் கோவில் வேலைகளைப் பாய்ஞ்சு பாய்ஞ்சு செய்யறதைப்பார்த்தால் எனக்கு ஆச்சரியம்தான்!  நல்ல ஒழுங்குமுறையில் எல்லாமே! (கடந்த ஆறேழு வருசங்களா இந்தக் கோவிலோடு நமக்கும் ஒரு சின்னத் தொடர்பு இருக்குல்லெ!)
வாங்க கோவிலுக்குள் போகலாம். முகப்பே அட்டகாசமா இருக்கு!  எல்லாமே வெண்பளிங்கு. அலங்காரம் அப்படியே ஆளை அசத்தும் வகை. ரொம்ப நுணுக்கமான வேலைப்பாடு!

கோவிலில் எல்லோருக்கும் அனுமதி உண்டு. ட்ரெஸ் கோடும் உண்டு. இது தெரிஞ்சுக்காம வர்றவங்களுக்கு உதவியா ஸராங், ஷால்னு அடுக்கி வச்சுருக்கும் அறை முகப்பு வாசலுக்குப் பக்கத்துலேயே இருக்கு! எடுத்துப் போர்த்திக்கிட்டு உள்ளே வரலாம்.
நுண்ணிய செதுக்கல்களோடு இருக்கும் அலங்காரத்தூண்கள் மட்டும் தொன்னுத்தியெட்டு!  (இன்னும் ரெண்டு சேர்த்திருக்கப்டாதோ?)  வச்ச கண்ணை மீட்டு எடுப்பது சிரமம், நமக்கு!

கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அதுக்காக விடமுடியுமா? அவுங்க பக்கத்துலே இருந்தும் சில படங்களை எடுத்துப் போட்டுருக்கேன்.... ஜெய் ஸ்ரீஸ்வாமிநாராயண் !
அஞ்சு வருசம் ஆகி இருக்கு கோவில் பகுதி மட்டும் முடிக்க. இதுமட்டுமே பனிரெண்டாயிரம் சதுரஅடிக் கட்டடம்! நான் ஆ....ன்னு வாய்பிளந்து பார்த்துக்கிட்டு இருக்கும்போதே..... மூலவர் சந்நிதிக்குத் திரை போடப்போறாங்கன்னு ஒருத்தர் குரல் கொடுத்தார். சட்னு ஓடிப்போய்ப் பார்த்தேன். கண்பார்க்கக் கதவு மூடன்னு டைமிங் சரி!! தரிசனம் கிடைச்சது.... ஆனால் நின்னு கவனிச்சுப் பார்க்கலையே.....
பகல் பத்தரை முதல் பதினொன்னரை வரை சந்நிதியை மூடி வைக்கிறாங்க. சாமி சாப்பிடும் நேரம் அது!  சாயங்காலமும் ஆறேகால் முதல் ஏழுவரை சாப்பாட்டு நேரம். ரெண்டு வேளை சாப்பாடு!  மத்த நேரங்களில் சந்நிதி திறந்தே வைக்கிறாங்க.

(இந்த வழிபாட்டு முறைகள், பூஜா நேரங்கள்,  ஸ்வாமி அலங்காரம்,  ஆர்த்தி, மற்ற சமாச்சாரங்கள் எல்லாம்  எல்லா ஸ்ரீ ஸ்வாமிநாராயண்  கோவில்களிலும் ஏறக்கொறைய ஒரே மாதிரி தான்!)

நல்லவேளையா சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம் என்ற நிம்மதி வந்தது உண்மை!  இன்னும் ஒரு மணி நேரம் காத்திருக்க சுணக்கம். கோவிலைச் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்பி முகப்பு  வாசலுக்கு வரும்போது, இடதுபக்க சந்நிதியில் சின்னதா ஒரு கூட்டமும் நகரும் வரிசையும்.
ஸ்ரீகன்ஷ்யாம் மஹராஜுக்கு அபிஷேகம். (இது எங்கூர்க் கோவிலில் இல்லை!) நாமே அபிஷேகம் செய்யலாமாம்!
நான்மட்டும் வரிசையில் போய்ச் சேர்ந்துக்கிட்டேன். கைப்பிடி உள்ள சின்ன லோட்டாவில் இளம்சூடான வெந்நீர் கொடுக்கறாங்க. அதை வாங்கிப்போய்,   சின்ன உருவமா நிற்கும்  ஸ்ரீகன்ஷ்யாம் மஹராஜுக்கு நாம் அபிஷேகம் செய்யணும். மூணு மாசமானச் சின்னக்குழந்தைக்கு நாம் எப்படி கவனமாகத் தலையில் தண்ணீர் ஊத்துவோமோ அதே போல நிதானமா தண்ணீர் ஊத்தணுமுன்னு பட்டர்(!) சொன்னார்!  அதே போல் ஆச்சு...  தங்கச்சிலை !
தன்னார்வத்தொண்டு செய்யும்  'மக்கள் சேனை' ஒன்னு எப்பவும் கோவிலுக்குள் இருந்து எல்லா உதவியும் செய்யறாங்க!  க்ரேட்!

கோவிலில் சின்னதா  ஒரு ஆஃபீஸ் போல... புக் ஸ்டாலுன்னும் சொல்லலாம். கோவில் உள் அலங்காரப் படங்கள் ஒரு செட் வாங்கிக்கிட்டோம். ஏஃபோர் சைஸ். ப்ளாக் & வொயிட்!
கோவில் பத்துன விவரங்கள் அடங்கின புத்தகம் ஒன்னும் கொடுத்தாங்க. பதிவில் இருக்கும் கோவில் விவரங்கள் எல்லாம் இந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்தவைதான்!
இன்றைக்குன்னு பார்த்து  கேன்டீன்  திறக்கலையாம்!  இறைவனின் திருவுளம் அப்படி!  போயிட்டுப் போகட்டுமுன்னு கிளம்பிட்டோம்.  பத்மாவுக்குத்தான் சரியான கவலை.... இப்படி  நாங்க வெறும்வயத்துலே இருக்கோமேன்னு.....   மனம் நிறைஞ்சு போய், பசி இல்லைன்னு சொன்னாலும்.....
இன்னொரு கோவிலுக்குப் போகலாமுன்னு  சொல்லிப் போகும் வழியில்,  ஒரு காஃபியாவது குடிங்கன்னு ஒரு கடைக்குக் கூட்டிப்போனாங்க.

வா வா.....வாவ்...வாவ்.....

தாயினும் சாலப்பரிந்து....  நன்றி பத்மா ! 

தொடரும்.............:-)


13 comments:

said...

எவ்வளவு பிரம்மாண்டம்! கோவில் என்கிற உணர்வு குறைந்து 5 * ஓட்டல் நினைவுக்கு வருகிறது!

said...

இதனைப் பார்த்தபோது வட இந்தியாவில் சில சமணக் கோயில்களைப் பார்த்த நினைவு வந்தது.

said...

It’s strange—- Ladies cannot seat together with a gent in this temple! When the Guru walks around the praharam ladies are not allowed! Somehow I am not ease with their outdated practices. Did you notice the same?
Rajan

said...

இவர்களின் கோவில்களின் பிரம்மாண்டம் வாவ்.. எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள். நானும் சில இடங்களில் - இந்தியாவில் இருக்கும் சில கோவில்கள் பார்த்திருக்கிறேன்.

தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ப்ரமாண்டம் உண்மைதான். ஆனால் ஃபைவ் ஸ்டாரெல்லாம் கிடையாது.... அதுக்கும் மேலே!

போகட்டும்.... எந்த ஃபைவ் ஸ்டாரில் சாமி சந்நிதிகள் எல்லாம் வச்சு மணிக்கணக்கா பூஜை செய்யறாங்க? :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்கும் கூரைக்குள் விதானப் பகுதிகளைப் பார்த்தவுடன், ராஜஸ்தான் பயணத்தில் நாம் போன ரணக்பூர் தர்ணாவிஹார் நினைவு வரத்தான் செய்தது!

said...

வாங்க ராஜன்.

எனக்கும் இப்படி பெண்களை நடத்துவது பிடிக்கத்தான் இல்லை. ஒரு எட்டு வருஷங்களுக்கு முன் எழுதுன பதிவின் சுட்டி இது. நேரம் கிடைக்கும்போது பாருங்க.....


http://thulasidhalam.blogspot.com/2010/02/26.html

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நான் பார்த்த முதல் கோவில் உங்க தில்லி அக்ஷர்தாம்தான்! பிரமிச்சு வாயடைச்சு நின்னேன். அப்பெல்லாம் இங்கே நம்மூருக்கு ஸ்வாமிநாராயண் கோவில் வரும் என்று கூட நினைச்சுப் பார்த்ததில்லை!

இதில் மட்டும் குஜராத்திக்களின் ஒற்றுமை அபாரம்!

said...

மிக அருமை, நன்றி.

said...

கோவில் தரிசனம், பார்த்த காணொளி, படங்களை நினைவுபடுத்தியது. குஜராத்திகள், அதுவும் பெரிய வியாபாரிகள், செலவுக்குக் கேட்கவேணுமா?

அதைவிட, கோவில் பராமரிப்பில், உதவியில் ஈடுபடும் நண்பர்கள் மனத்தைக் கவர்ந்தனர்.

இறைவன் உங்களுக்கு இன்னும் ஒரு விசிட் இந்தக் கோவிலுக்கு வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. இல்லைனா, பிரசாதத்தைப் பற்றி வேறு எங்கு நாங்க படிக்கறது?

said...

கோயில் ரொம்ப பிரம்மாண்டமாகக் கட்டியிருக்காங்க. குஜராத்தியரும் பஞ்சாப் சீக்கியர்களும் மதவுணர்ச்சி அதீதமா காட்டுறதுக்கு காரணமிருக்கு. ஏன்னா... இந்தியாவுக்கு படையெடுத்து வந்தவங்கள்ளாம் அந்த வழியாத்தான் வந்தாங்க. அதுனால வந்த எல்லார் கிட்டயும் சண்டை போட்டு அடிச்சு அடிவாங்கின்னு அவங்களோட குணமே மாறிப்போச்சு. அதுதான் பல எடங்களுக்கும் போறாங்க. பணம்னா குறியா இருக்காங்க. சமீபத்துல இந்தியால இருந்து காச சுருட்டீட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போன எல்லாருமே குஜராத்திகள்தான்.

கோயில்ல இவ்வளவு பிரம்மாண்டமும் அழகும் இருந்தா எனக்கு பக்தி பொதுவா வர்ரதில்ல. எளிமையா இருக்க இருக்கதான் உள்ளம் உருகுது. வெளிநாட்டுல இருக்குறதால இந்த மாதிரி கோயில்கள்தான் உங்களுக்குப் போகக் கிடைக்கும். அதுனால உங்களுக்கு இந்த மாதிரி பார்த்தாலும் கோயில் உணர்வு வந்துருதுன்னு நெனைக்கிறேன். எல்லாமே பழக்கத்துல வர்ரதுதானே. சரியா டீச்சர்?

said...

வாங்க நெ.த.

ஸ்வாமிநாராயண் கோவில் பிரஸாதத்துலே நம்ம பெயரை எழுதலையாம். நமக்கான அரிசி வேற இடத்தில் வெந்துக்கிட்டு இருந்தது :-)

said...

வாங்க ஜிரா.


நீங்க சொன்னது ரொம்பச் சரி! பழக்கத்தால் வரும் உணர்வுகள்தான்!

கோவில்னு ஒன்னு இருந்தால் போதாதான்னுதான் எங்களுக்கெல்லாம்!

அதுவுமில்லாமல்... இந்தக் காலத்துலே பழங்காலத்துக்கோவில்கள் மாதிரியெல்லாம் கட்டமுடியுமா என்ன?