Saturday, April 28, 2018

வந்ததே வால் பார்க்கத்தான் !!! சீனதேசம் - 5

டிக்கெட் புக் பண்ணும்போது நாம் போகும் சமயம் காலநிலை எப்படி இருக்கப்போகுதுன்னு கவனிச்சதுலே   22 - 24ன்னு  போட்டுருந்தாங்க. கிளம்பறதுக்கு ரெண்டு மூணு நாட்களுக்கு  முன்னால் பார்த்தால்.... குளிர் வருதுன்னு ஒரு தகவல். உடனே ஜாக்கெட், தொப்பின்னு  எடுத்துப் பொட்டிக்குள் போட்டார் 'நம்மவர்'.  எனக்கு எப்பவும் இந்த குளிர்கால உடைகள் மேல் வெறுப்புதான். ஒன்னுமேலே ஒன்னா லேயர்ஸ் போட்டுக்கிட்டுக் கையைக் கூடத் தூக்கமுடியாமல் ஆகிரும்.  பார்க்கறதுக்கும் உருண்டையாத் தெரிவேன்....   போதுமடா சாமின்னுதான் குளிர் எப்போ விடுமுன்னு இருக்கறது....

நேத்து சாயங்காலம், நாம் புக் பண்ணி இருக்கும் டூர் கம்பெனிக்கு ஃபோன் போட்டு,  மறுநாள் நேரத்தை உறுதிப்படுத்துனப்பக் 'காலநிலை எப்படி ? குளிரா'ன்னு கேட்க, ரொம்பவே குளிர்னு பதில் சொல்றாங்க.  காலை ஆறேமுக்காலுக்குப் பிக்கப், நம்ம ஹொட்டேலில் இருந்து!

அஞ்சே காலுக்கெல்லாம் எழுந்து குளிச்சு ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்ட் காபியையும் முடிச்சுக்கிட்டு, ஆறே முக்காலுக்கு லாபிக்கு வந்தோம். டூர் டைரக்டர்ன்னு சொல்லி  அறிமுகப்படுத்திக்கிட்டார் வில்ஸன்.  வெளியே பஸ் நிக்குது.  நாம்தான் போணி!
அப்புறம் ஒவ்வொரு  ஹொட்டேலா ஊர்வலம் போய் இன்றைக்கு நம்ம கூட வரும் எல்லோரையும் பிக் பண்ணிக்கிட்டு, சிடி லிமிட்டை விட்டு வெளியே வரவே இன்னும் ஒன்னேகால் மணி நேரம் போயிருச்சு.  இன்னும் ஒன்னரை மணி நேரப் பயணத்தில் நாம் போக வேண்டிய இடம் இருக்குன்னார் வில்ஸன். நேராப் போயிருந்தா இந்நேரம் அங்கே போயே சேர்ந்துருப்போம்.... போகட்டும்.... ஊரையும் உக்கார்ந்துக்கிட்டே சுத்திப் பார்த்தாப்லெ ஆச்சு....
போ....
நம்ம சீனப் பயணமே  இதைப் பார்க்க வந்ததுதான்!  சீனப்பெருஞ்சுவர்!   க்ரேட் வால் ஆஃப் ச்சைனா! இதென்ன வெறும் கட்டைச் சுவரா?   ஊஹூம்... கட்டை இல்லே... கோட்டைச் சுவர்.  அங்கங்கே  காவல்காப்போர் தங்கறதுக்கு  பெருசா அறை (!) கூடக் கட்டிவிட்டுருக்காங்க.

இந்த  பெருஞ்சுவருக்கும் ஏராளமான  (கட்டுக்) கதைகள் இருக்கு!    உண்மையில் எப்போ கட்டுனாங்க? எதுக்குக் கட்டுனாங்க? யாரை வச்சுக்கட்டுனாங்க? எம்மாந்தூரம் கட்டுனாங்க.... இப்படி....

கிறிஸ்து பிறப்புக்கு  ஏழேமுக்கால் நூற்றாண்டுக்கு முன்னேயே கட்டுனதுன்னு ஒரு பேச்சு.  அண்டை நாட்டு எதிரி  படையெடுத்து வர்றான்னு  சேதி கிடைச்சதும், அவனை நாட்டுக்குள்ளே வரவிடாம வழியை எல்லாம் மறிச்சு இதைக் கட்டுனாங்களாம். (இதுலேகூட....  எதிரி வர்றான்னு வந்த தகவல் கூட, எதோ ஃபேக் ஐடி சொன்னதாமே !   போலித்தகவல். ஸோ போலிகள் அப்போதும் இருந்துருக்காங்க, இல்லே?)

அங்கங்கே அரண்மனையைச் சுத்திக் கோட்டைச்சுவர் எழுப்புனா.... இங்கே நாட்டைச் சுத்தியே கோட்டைச் சுவர் கட்டியிருக்காங்க.... இது என்னாடி அதிசயமா இருக்குன்னா...  அதிசய லிஸ்ட்டுலே(யும்) சேர்ந்து போச்சுல்லே!

ஆர்க்கியாலஜி சர்வே சொல்லுது இருபத்தியோராயிரத்து நூத்தித் தொன்னூத்தியாறு  கிலோ மீட்டர் நீளமாம். நெசமா இருக்குமோ? இருக்கும், இருக்கும்.... அப்படியே  ஆரம்பிச்ச வேலையை நிறுத்தாமக் கட்டிக்கிட்டே..... போயிட்டாங்க போல!

ஒரு இடத்துலே கிடைச்ச தகவலின்படி மூணு லட்சம்  படைவீரர்களும், அஞ்சு லட்சம் சாதாரணக் குடிமகன்களுமா இந்தச் சுவர் கட்டும் வேலையில் ஈடுபட்டுருந்தாங்க!  குளிரும் பனியும், கடினமான உழைப்பும்  கட்டுமான வேலை நடந்துக்கிட்டு இருக்கும்போதே பலரையும் பலி வாங்கியிருக்கு.  அந்த உடல்களையும்  சுவத்துக்குள்ளேயே போட்டுட்டுக் கட்டிக்கிட்டே போயிருக்காங்க.

சாதாரண மக்களைக்கூட  வீடுவீடா வந்து பார்த்து  ஆண்களையெல்லாம்  இழுத்துக்கிட்டுப் போயிருவாங்களாம்.  ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆன மூணாம்நாள் புது மாப்பிள்ளையை இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.  பொண்ணுக்கு மகா துக்கம். கொஞ்சநாள் கழிச்சுப் புருசனைப் பார்க்கக்கிளம்பிப்போய், காடு மலைன்னு எல்லா இடத்திலும் (அதான் சுவர் எல்லா இடத்திலும்  போய்க்கிட்டே இருக்கே!)தேடிக்கிட்டே போய்க் கடைசியில்  அவனைப் பத்துன தகவல் தெரிஞ்சவங்களைச் சந்திக்கிறாள்.  அப்பதான் கெட்ட செய்தி  சொல்றாங்க.  'வேலையின் கடுமையைத் தாங்க முடியாம அவன் வந்து கொஞ்ச நாளிலேயே மண்டையைப் போட்டுட்டான்'னு!  தாங்க முடியாத துக்கத்தாலே  அழறா... அழறா ... அப்படி ஒரு அழுகை அழறாள்.  இந்த  அழுகைச் சத்தம்  தாங்காம  அந்தப் பகுதியில் இருந்த கட்டுன சுவரே  பல மைல் தூரத்துக்கு இடிஞ்சு விழுந்துருச்சுன்னும், அரசன் இதைக் கேட்டுக் கோவப்பட்டு, அவளைக் கொல்றதுக்கு  வந்தான்னும் கதை போகுது.... ஐயோ... அப்புறம்?

வந்தவன், இவள் அழகைப் பார்த்துட்டுக் கொல்ல மனசு வராமல், தன்னைக் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லிக் கேக்கறான். இவளும் சரின்னுட்டு மூணு நிபந்தனை போட்டாள்.  முதலாவது,  புருஷன் பொணத்தைத் தோண்டி எடுக்கணும்.   ரெண்டாவது அதுக்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்யணும். மூணாவது  அரசனே துக்கத்துக்கு அடையாளமான கருப்பு உடை போட்டுக்கிட்டு அந்த  சவ அடக்கத்துலே கலந்துக்கணும்.

மொதல்லே  அரசனுக்கு ஒரு மாதிரி இருந்தாலும், பொண்ணோட அழகு தூக்கலா இருக்கவே சரின்னு ஒத்துக்கிட்டு அதே போல மூணு கண்டிஷனையும் நிறைவேத்திடறான்.  நீ கேட்டதைச் செய்ஞ்சாச்சு. இனி நம்ம கல்யாணம்னு சொல்லி அவளை நெருங்கும்போது , அவள் கடலில் குதிச்சுத் தற்கொலை பண்ணிக்கிறாள்!
இப்போ அவளுக்கு ஒரு கோவில் கட்டி, அதுலே அவளோட சிலை செஞ்சு  வச்சுருக்காங்க!
இப்படியெல்லாம் சுவாரஸியமான கதைகள் இருக்க.........  நம்ம கைடு வில்ஸன், நம்ம குழுவினர் எல்லோரையும் பிக்கப் பண்ணின பிறகு  மைக்கைப் புடிச்சுக்கிட்டு, எல்லோரையும் வரவேற்று வணக்கம் சொல்லிட்டு,  அவர் எப்படி கிராமத்துலே இருந்து பள்ளிப்படிப்பு முடிச்சுக்கிட்டு நகரத்துக்கு வேலைதேடி வந்தார். காசுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டார்,  தானே தன் முயற்சியால் இங்கிஷ் கத்துக்கிட்டுக் கைடு வேலை பார்க்கிறார்னு  சொல்லிக்கிட்டு வந்தார்....

சுவர் சமாச்சாரம் சொல்வாரோன்னு பார்த்தால்....  ஊஹூம்.... வாயைத்திறக்கலையே.... அப்புறம் நாங்களா.... சுவத்தைப் பத்திச் சொல்லுன்னு கூவுனப்புறம்.... அஞ்சாயிரம் கிமீ தூரத்துக்கு சீனச்சுவர் இருக்கு. இதை  மிங்  அண்ட் Qing பேரரசுகள்  காலத்துலே  பதினேழாம் நூற்றாண்டுலே கட்டுனதுன்னு முடிச்சுட்டார்....

அடடா.... முக்கியமான சமாச்சாரத்தைச் சொல்லாம 'கோட்டை' வுட்டுட்டேனே.......   பெய்ஜிங் ஊர் எல்லையைத் தாண்டிக் கொஞ்ச தூரத்துலே இருந்து  எங்கே பார்த்தாலும் பனி விழுந்து கிடக்கு! இது சீனத்து இலை உதிர் காலம் என்றதால்  முக்கால்வாசி மரங்களில் இலைகளே இல்லை. எவர்க்ரீன் மரங்களான பைன் வகைகளில் மட்டும் இலைகள் (!) இருக்கு. நேத்து நல்ல  மழையும் குளிருமா வந்து  பனிப்ரதேசமா ஆகிப்போச்சாம். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம்....  பனியில் சுவர் பார்க்கலாமுன்னு(ம்)  சொன்னார் வில்ஸன்.

'பார், ஜாக்கெட்டெல்லாம் எதுக்குன்னு மொணங்குனியே.... இப்ப என்ன செய்வே?' ன்னு 'நம்மவர்' வெற்றிப் பார்வையோடு சொல்றார். இனி என்ன செய்ய? பெருமாள் விட்ட வழி....  கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா....
சாலையில் பயங்கர ட்ராஃபிக். சில இடங்களில் ஊர்ந்துதான் போறோம்.  சின்ன சின்ன கிராமங்களைக் கடக்கும்போது நாலைஞ்சு கடைகள் கண்ணுலே பட்டது. சொல்லி வச்சாப்லெ எல்லா வீட்டுக் கூரைகளிலும் வெள்ளைப்பனி !
பஸ்ஸில் இருக்கும்   ஜன்னல் கண்ணாடியில் எல்லாம்  புகை படிஞ்சாப்லே ஃப்ராஸ்ட். வண்டிக்குள் ஹீட்டர் ஓடுது பாருங்க!   ட்ரைவருக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியில் வைஸர் ஒன்னு இறக்கி விட்டுருக்கார்.  அதைக் கொஞ்சம் தூக்கினால் நமக்கு ரோடாவது தெரியும்.
நாங்க முதலில் ஏறுனபடியால்  ட்ரைவருக்குப் பின்பக்கம் இருக்கும் இருக்கைகளில்  ரெண்டாவது வரிசையில் இருக்கோம். முதல்வரிசையில்.... ஒரு எலெக்ட்ரிக் கெட்டிலில் காஃபியோ டீயோ  ஏதோ  ஒன்னு உக்கார்ந்துருக்கு.  தரையில் என்னென்னவோ  அட்டைப்பொட்டிகள்.... ப்ச்.. போதாக்குறைக்கு ஒரு பொட்டி வேற !  இங்கெல்லாம்  சாலையில்  ரைட் ஸைடு ட்ரைவிங் வேற.  நான் பழக்க தோஷத்துலே  வண்டியின் இடதுபக்கத்துலே இடம் புடிச்சுட்டேன்..... என்னவோ போங்க...
'சுவத்துலே  ஏறிப்போய்ப் பார்க்க, நடந்தும் போகலாம். கேபிள் காருலேயும் போகலாம்.  உங்களில் யாரு நடந்து போகப்போறீங்க'ன்னதும்....  வண்டி முழுக்க சைலண்ட் ஆகிருச்சு :-)  மணி பத்தாகப்போகுது இப்போ....   இன்னும் எவ்ளோ தூரமோன்னு  கேக்கறதுக்குள்ளே வண்டியை   ஓரங்கட்டுனார் ட்ரைவர்.
வில்ஸன் இறங்கினதும் நாங்க எல்லோரும் இறங்கி அவரைப் பின் தொடர்ந்து போறோம்.  கொஞ்சதூரத்துலே இருக்கும் விஸிட்டர்ஸ் சென்டர் & டிக்கெட்டிங் ஆஃபீஸுக்குள் போனதும்,  பாஸ்போர்ட்டும் கேபிள் காருக்கான பணமும் எங்ககிட்டே இருந்து வாங்கிப்போய்  அதைக் காமிச்சு டிக்கெட் வாங்கி வந்தார் கைடு வில்ஸன்.  உள்ளூர் பயணிகளும் எக்கச் சக்கமா இருக்காங்க. அவுங்களும் எங்கே போனாலும்  அவுங்க ஐடி கார்ட் எடுத்துக்கிட்டுத்தான் போகணுமாம்.  அதைக் காமிச்சுத்தான்  பஸ் டிக்கெட் முதல் எதுவுமே வாங்க முடியும். ஆதார்கார்ட் ?
வெளிநாட்டு மக்கள், பாஸ்போர்ட்டை எப்பவும் கையோடு கொண்டு போகணும்.  எந்த நிமிஷம் வேணுமானாலும் நம்மை நிறுத்திக் கேப்பாங்களாம். அதேபோல  நாம் தங்குமிடத்தின் பெயர், விலாசம் இருக்கும் அட்டையும் கையோடு இருக்கணும்.
இந்தக் கட்டடம் நல்லா பெருசாவே இருக்கு!  இருக்கைகளும் போட்டு வச்சுருக்காங்க. ரெஸ்ட் ரூம்களும் உண்டு.  மேலே ஏறிப்போனால் அங்கே இந்த வசதிகள்  இருக்குன்னாலும்.... அங்கே சுமாரா இருக்கும் என்பதால் இங்கேயே பயன்படுத்திக்கிட்டால்  நல்லதுன்னு  ..... சீனர்கள் எப்பவும் முகத்துலே வாயையும் மூக்கையும் மூடிக்கிட்டு ஒரு மாஸ்க் போட்டுக்கறது ஏன்னு அப்பத்தான் புரிஞ்சது!
ரெஸ்ட் ரூம் ஓரளவு சுத்தம் என்றாலும் அந்த ஏரியாவே   ஆளைக் கொன்னுடும் போல.... யக்.....

இதே கட்டடத்தின் எதிரே இன்னொரு கட்டடம் இருக்கு. அங்கே எதோ அரசாங்க அலுவலகம் போல ஒன்னு.   'சீனப்பெருஞ்சுவர் ஏறி பார்க்காதவன் உண்மையான மனிதனே இல்லை'ன்னு சேர்மன் மாவோ சொல்லிட்டாராம்.  'நான் போய்ச் சுவர் ஏறிப் பார்த்துட்டு வந்தேன்' னு  நமக்கு ஒரு சான்றிதழ் தருவாங்களாம்.
போர்டைக் கிளிக்கும்போது 'வாங்க... உள்ளே வந்து சான்றிதழ் வாங்கிக்குங்க' இலவசம்தான்னு  அங்கே இருந்த அலுவலர் சொன்னார். இங்லிஷில்தான். நான் இன்னும் போய்ப் பார்க்கலையேன்னேன். அப்போ திரும்பி வரும்போது வாங்கிக்குங்கன்னார்.

உண்மையான மனுஷி சான்றிதழ் வாங்கிக்கணுமுன்னு நினைச்சேன்.
இங்கிருந்து கொஞ்சதூரம்,  இதே வளாகத்தில்தான் நடந்தால் ஷட்டில் பஸ்களுக்கான ஸ்டேஷன்.  அதுலே ஏறிப்போனால்   கேபிள்கார் ஸ்டேஷன் வரை போகலாம். வளாகத்துக்குள் ஏகப்பட்ட கடைகள். எல்லாம் நினைவுப்பொருட்கள், தீனி இப்படித்தான்!
பனி விழுந்த காரணத்தால் பல கடைகளைத் திறக்கவே இல்லை.

நம்ம வில்ஸன், எங்களையெல்லாம் திரும்ப நம்ம பஸ்ஸுக்குக் கூட்டிப்போனார். நிறுத்துன இடத்தில் பார்த்தால் நம்ம பஸ்ஸைக் காணோம்!  ஓட்டுநருக்கு ஃபோன் செஞ்சு கேட்டால், அதிக நேரம் அங்கே நிறுத்த அனுமதி இல்லைன்னு   வண்டிப்பாதைக்கான செக்யூரிட்டி சொல்லி உள்ளே அனுப்பிட்டாராம்.
சரி. வாங்க. அங்கே போகலாமுன்னு எங்களை செக்யூரிட்டி கூண்டு  வழியில் கூப்ட்டுப்போனால், அந்தப் பாதையில் வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி. பாதசாரிகளுக்கு அனுமதி இல்லைன்னுட்டாங்க. திரும்ப டிக்கெட் வாங்குன இடத்துக்கு வந்து அந்த வளாகத்துக்குள்ளே நடந்து  அந்த ஷட்டில் ஸ்டேஷன்  வரைப்போய் அங்கிருந்து ஷட்டில் பஸ்கள் வெளியே போகும் பாதையில் போனால் கொஞ்சதூரத்துலே நம்ம பஸ் நிக்குது.

முதலிலேயே வண்டி எங்கே நிக்குமுன்னு தெரிஞ்சுக்கிட்டு எங்களை நேரா அங்கே கூட்டிப்போயிருக்கலாம். தேவையில்லாம இங்கேயும் அங்கேயும்னு இந்தக் குளிரிலும் பனியிலும் நடக்க விட்டுருக்க வேணாம். இதுலே நம்ம ஆஸ்த்மா வேற... 'நான் இருக்கேன். பார்த்துக்கோ'ன்னு எட்டிப் பார்க்குது.
ஒருவழியா பஸ்ஸில் ஏறி உக்கார்ந்தபிறகு பார்த்தால், பயணி ஒருத்தரைக் காணோம். அவரைத் தேடிக்கிட்டு வில்ஸன் ஓட, கொஞ்ச நேரம் கழிச்சு ஓட்டுநரும் வில்ஸனைத் தேடி ஓடன்னு நேரம் போய்க்கிட்டு இருக்கு. வண்டியில் ஹீட்டர் ஓடிக்கிட்டு இருந்ததால்  குளிரில்  விரைக்காமல்  இருந்தோம்.   மொத்தப் பயணிகளில்  நாலைஞ்சு பேரைத் தவிர  பாக்கி எல்லாம் வெளிநாட்டு மக்கள்தான். கொஞ்ச நேரத்தில் வில்ஸனும் ஓட்டுநருமாத் திரும்பி வந்து வண்டியை எடுத்தாங்க.

ஏத்ததில் வண்டி முக்கி முனகி ஏறுது.  ஒரு கிலோ மீட்டர் போனதும்..... பாதைக்கு இடதுபக்கம் இருக்கும் ஒருபெரிய கார்பார்க்கில் நுழைஞ்சோம். இங்கே வண்டியைப் பார்க் பண்ணிட்டாங்க.  இந்த இடத்தையொட்டி இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரண்டில்தான் நமக்குப் பகல் சாப்பாடு. 'சரியா ரெண்டு மணிக்கு எல்லோரும் இதே இடத்துலே சந்திக்கலாம்.  மூணுமணி நேரம் நீங்க போய் சீனப்பெருஞ்சுவரைச் சுத்திப் பார்த்துட்டு வாங்க'ன்னார் வில்ஸன்.
பஸ் திரும்புன இடத்துலே மிஸ்டர் யாங்னு ஒரு கல்லில் எழுதி இருக்கு.  இவர்தான் நமக்குப் பகல் சாப்பாடு போடப்போறார்!
நல்ல ஏத்தம் என்பதால் மெள்ளமெள்ள ஏறிப்போறோம்.  அப்பப்ப ஷட்டில் பஸ்கள் மட்டும் நம்மைக் கடந்து மேலே போகுது. நாமும் பேசாம ஷட்டில் பஸ்ஸில் வந்துருக்கலாமோ...  டூர்   சிஸ்டம் ஒன்னும் சரி இல்லையே......

ஆரம்பத்துலேயே இவ்ளோ நடக்க வச்சுட்டு, இப்போ மூச்சிறைக்க ஏறுன்னா.....  ஹொய்ய்ய்ங்.... ஹொய்ய்ய்ங்.....   பயப்படாதீங்க. ஆஸ்த்மாதான். கொஞ்சம் இழுக்குது.  இன்ஹேலரை ரெடியாக் கையில் வச்சுக்கிட்டு நின்னு நின்னு  மேலே ஏறிப்போகும் சமயம் அப்பப்ப ஒரு க்ளிக்ஸ் வேற....
வழியெல்லாம் எப்படி இருக்குன்னு....இந்தப் படங்களைப் பாருங்க....
இன்னும் கொஞ்ச தூரம் போனதும் இடதுபக்கம் ஷட்டில் பஸ்களுக்கான ஸ்டேண்ட்.  குறைஞ்சபட்சம், இதுவரை நம்மைக் கொண்டு வந்து இறக்கிட்டு அப்புறம் வண்டியை மிஸ்டர் யாங் பார்க்கிங்கில் விட்டுருக்கலாம்..... ச்சே.... சிஸ்டமே சரி இல்லைப்பா....
இனி வண்டிகளுக்கு மேலே போக அனுமதி இல்லை. கல்பாவிய பாதை மேலே போகுது. நல்ல கூட்டம் வேற ! போற வர்ற மக்கள் அதிகம். கொஞ்சதூரம் போனபிறகு  கேபிள் கார் ஸ்டேஷனுக்குப் படி ஏறணும். நடந்து போறவங்களுக்குப் படிக்கட்டுகள் இங்கே இருந்து பிரியுது!

இந்தச் சரிவிலே ஏறமுடியாமத் தவிக்கிற மக்களுக்காக ஒரு சின்னக் கை ரிக்‌ஷா. அதுலே பயணியை உக்காரவச்சு ரிக்‌ஷாக்காரர் இழுத்துக்கிட்டு மேலே போறார். இது பேட்டரியில் ஓடும் வகை. பார்க்கிறதுக்கு ஆள் இழுக்கறமாதிரியே தெரியுது!

பயணிக்குத் தலையில் ஒரு  க்ளௌன் தொப்பி வேற உண்டு. வண்டிக்கூரையில் பலநாட்டுக் கொடிகள் !  அந்த வண்டியைக் க்ளிக்கும்போது அதுலே உக்கார்ந்துருக்கும் முகம் பரிச்சயமாத் தெரியுதேன்னு நினைச்சால்.....  அட! நம்ம பஸ் பயணிகளில் ஒருவர்!

கேபிள் காருக்குப் பெரிய க்யூ! ரெண்டு மாடி உயரம் படியில் ஏறி, வரிசையில் நகர்ந்து  கடைசியாக் கேபிள்கார்  கூண்டுக்குப் போறோம்.  நல்ல  உயரம்தான். எங்கே  பார்த்தாலும் வெள்ளைப் பனி. இன்னும் பனி லேசா பெய்ஞ்சுக்கிட்டுத்தான் இருக்கு.  ஆறேழு நிமிஷத்தில் கூண்டைவிட்டு இறங்கியாச்சு. வெளியே வந்தால் ஒரு டீக்கடை! வாசலில் ரெண்டு செல்லங்கள் விளையாடிக்கிட்டு இருக்காங்க.


இங்கிருந்து இன்னும் மேலே படிகளில் ஏறிப் போகணும்.  ஆள் நடமாட்டத்தால் பனி உருகி , ஐஸாக மாறிக்கிடக்கு.  ப்ளாக் ஐஸ். அப்படியே வழுக்கி வுட்டுரும்.  அகலம் மூணடி கூட இல்லாத படிகள்.  ஏறும் ஆட்களும் இறங்கும் ஆட்களுமா இருக்காங்க. இறங்கறவங்களுக்கு வழிவிட்டு நாம் வலப்புறம் ஒதுங்கினால்  கைப்பிடிக்கு ஒன்னும் கிடையாது. நோ ரெய்லிங்.  எங்கியாவது விழுந்து வைக்கப்போறோமோன்னு  உள்ளுக்குள் பயம் வந்தது உண்மை.


படிகளேறி மேலே போனால் மொட்டைமாடி போல தரை.  பெரிய முற்றமுன்னும் சொல்லலாம்.  ஒரு பக்கம் சாமி மரம் ஒன்னு. வேண்டுதல் செஞ்சுக்கிட்டுச் சிகப்புக் கயிறைக் கட்டித் தொங்கவிட்டுருக்காங்க.  வடநாட்டுக் கோவில்களில் இப்படி இருக்கும்.
நேஷனல் டூரிஸ்ட் அட்ராக்‌ஷன்னு  கல் சொல்லுது!

இங்கிருந்து  ஒரு படிவரிசையில் ஏறிப்போகணும் நாம்.  நல்ல உயரமான படிகள். ரெண்டு படி உயரம் இங்கே ஒரு படிக்கு!  சீனர்கள் உயரம் கொஞ்சம் குறைவுதானே? எப்படி முழங்காலைத் தூக்கி வச்சு ஏறி இருப்பாங்க அந்தக் காலத்துலே?

கேசவா நாராயணா, கோவிந்தா சொல்லிக்கிட்டே  கைப்பிடிக்கு ஒன்னும் இல்லாததால் படிகளையே பிடிச்சு ஏறிக்கிட்டுப் போறேன். படிகள் முடியும் இடத்தில் ஒரு கல் பெயர்ந்து பள்ளமா இருக்கு. இதை சரி செய்யப்டாதோ?  'நம்மவர்' மேலே போய் அங்கிருந்து கைகொடுத்து உதவினார்.
ஹப்பா..... சீனப்பெருஞ்சுவர் மேல் ஏறியாச்சு!  உண்மையான மனுஷி ஆனேன்!  இடதும் வலதுமா  சுவர் போகுது.  வலதுபக்கம்  பனி கொட்டிக்கிடக்கு. மக்கள்ஸ் எல்லாம்  இடதுபக்கமாப் போறாங்க. நாமும் போறோம். கூடிவந்தால் ஒரு பதினைஞ்சு அடி அகலம் இருக்கலாம். ஒரு பக்கம் மட்டும் மக்கள் நடமாட்டத்தால் பனி உருகி இருக்கு.  டேஞ்சர். மெள்ள நடந்து போறோம்.  ஒரு அறை போல காவல்மாடம்.

காவல் மாடம் கடந்தால் அந்தப் பக்கமும் சுவர் நீண்டு போகுது. இப்படியே அஞ்சாயிரம் கிலோமீட்டருக்கு இடைக்கிடையே காவல் மாடங்களோடு நீண்டு போகுதாம். பனியில்  ஒரு அம்பது மீட்டருக்கு அப்பால் ஒன்னும் தெரியலை....  அந்தப்பக்கம் போகலை. படியில் இறங்கிப் போகணும்.  காவல் மாடத்துலேயே உள்பக்கம் சின்னதா பால்கனி.  அங்கிருந்து பார்த்தாலும் போதும்தான்.
காவல்மாடத்துலே நகரமுடியாமல் அப்படி ஒரு கூட்டம்.  சுவர் முழுக்க ஆட்டோக்ராஃப் போட்டு வச்சுட்டுப் போயிருக்காங்க.
இவ்ளோ கஷ்டப்பட்டுத்  திருப்பதி மலை ஏறி இருந்தால் அட்லீஸ்ட் பெருமாளின் குட்புக்ஸில் இருக்கலாம்.
பரவாயில்லை.... அவன் இங்கேயும்தான் இருக்கான். 'சுவர்களுக்குள் நான் பெருஞ்சுவராக இருக்கிறேன்' !
திரும்ப அதே மாதிரி மெள்ள மெள்ளப் படியில் இறங்கி வர்றேன். நாராயணான்னு கொஞ்சம் சத்தமாச் சொல்லிட்டேனோ?  'கேசவாவை விட்டுட்டே' என்றார் இவர்.  மனசுக்குள் சொல்லியாச்சுன்னேன். எந்தப் படியைப் பார்த்தாலும் போதும்....  ஏறும்போதும் இறங்கும்போதும் துவாதசநாமங்கள்தான். மனசு அப்படி பழக்கப்பட்டுருக்கு.

பனி இல்லாமல் இருந்தால்   கண்பார்வை எட்டும் தொலைதூரம்வரை சுவர் போய்க்கிட்டு இருப்பதைப் பார்த்திருக்கலாம்.  வீட்டுக்குப்போய் யூ ட்யூபில் பார்த்தால் ஆச்சு.

இவ்ளோ நீண்ட சுவரில்  சுற்றுலாப் பயணிகளுக்காக  முக்கியமா மூணு இடங்கள் சரியாக்கி வச்சுருக்காம் அரசு.  அதுலே ரெண்டு இடங்கள் இங்கே பெய்ஜிங் பக்கம்தான். எழுபத்தியஞ்சு கிமீ தொலைவில். ஒன்னு இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் 'Mu Tian Yu'   இதைப் பொதுமக்கள் வந்து பார்க்க வசதி செஞ்சு வச்சுருக்கறது 1988 முதல்.
இன்னொன்னு  Badaling. இதுவும் கொஞ்சம் அந்தாண்டை ஒரு எழுபது கீமீ தொலைவில்தான். இதைத்தான் முதலில் பார்வையாளர்களுக்காகச் சரி செஞ்சுருக்காங்க. பனிரெண்டு கிமீ சுவரும் அதுலே நாப்பத்திமூணு  காவல்மாடங்களுமா இருக்காம்! இதுலே சுமார் மூணரை கிமீதூரம்  பார்வையாளர்களுக்கு அனுமதி.   இந்த இடத்தை 'நம்மவர்' ஏற்கெனவே போய்ப் பார்த்துருக்கார் என்பதால் கொஞ்சம் கஷ்டமானதை எனக்காகத் தெரிவு செஞ்சுருக்கார்னு நான் நம்பறேன் :-)

நிறைய சுற்றுலாப்பயணிகள்  Badaling பகுதிக்குத்தான் வர்றாங்களாம். இதை 1958 இல் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துருக்காங்க.  ஆனால் அதுக்கும் முந்தி 1954 இல்  இந்தப் பகுதிப் பெருஞ்சுவரைப் பார்வையிட்ட  முதல் வெளிநாட்டவர் யார் தெரியுமோ?  இந்தியாவின் முதல் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு!  அதுக்குப்பிறகுதான் வெளிநாட்டுத் தலைவர்கள், விருந்தினர்கள், அதிபர்கள்னு  யார் வந்தாலும் அவுங்களை இந்த   Badaling பகுதிக்குக் கூட்டி வந்து காண்பிக்கறதே   ஒரு மரபாகிப் போச்சு. கடைசியா இங்கே சுவர் பார்க்க வந்தவர்  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா!  சமீபத்தில்  அதிபர் ட்ரம்ப்பின்  மனைவி வந்து சீனப்பெருஞ்சுவரைப் பார்த்துட்டுப் போயிருக்காங்க.

எப்பவோ கட்டுன சுவர் சத்தம்போடாம சம்பாரிச்சுத் தருது!  வருசத்துக்கு அஞ்சு கோடி  சனம் வந்து பார்த்துட்டுப் போகுதாம். விவிஐபிக்களை விட்டுருங்க.... அவுங்களுக்கு அரசு செலவு பண்ணிடும் :-)
படிகள் இறங்கி வந்து, திரும்பவும் கேபிள்கார் கூண்டில் ஏறி, பிறகு நடையான நடை நடந்து  மிஸ்டர் யாங் ரெஸ்ட்டாரண்டுக்கு வந்து சேர்ந்தோம்.  மணி ரெண்டாகப்போகுது! இறக்கத்தில் வர்றதால் அவ்வளா மூச்சு வாங்கலை.
நம்ம குழுவுக்கு ரெண்டாவது மாடியில் சாப்பாடு.  வில்ஸன் கூட்டிப்போய் உக்கார்த்தி வச்சார். வெஜ் சாப்பாடுன்னு சொல்லி இருந்தோம். வெஜ் இருக்கு இருக்குன்னு தலையாட்டினார். முதலில் வெறுஞ்சோறு  ஒரு பெரிய தட்டில் வந்துச்சு.
அப்புறம்   நாலைஞ்சு வகைக்கறிகள் . இதுலே எது வெஜ்ன்னு தெரியலை. வில்ஸனையும் காணோம்.

சாப்புடற தட்டுக்குப் பதிலா சின்னதா ஒரு கிண்ணம். இதுலே சோறு போட்டுக்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சம் கறி சேர்த்துத் தின்னணுமாம்.

நான் போன ஜென்மத்தில் சீனத்தில் பிறந்ததால் வெறுஞ்சோறு ரெண்டு கிண்ணம் எடுத்துக்கிட்டேன். போதும். நம்மவர் எது வெஜ்ன்னு தெரியாமல் முழிச்சுட்டு,   வில்ஸனைப்போய்க் கூட்டிவந்தார்.  அவரும் பணியாளரைக் கேட்டுட்டு  'அந்த முட்டைக்கோசு வெஜ்'ன்னு சொன்னார்.   இதுக்குள்ளே  மற்றவர்கள்  எல்லோரும் நான்வெஜ்லே முக்கி எடுத்த  சொப்ஸ்டிக்குகளை  வெஜ்ஜுலேயும்  முக்கி எடுத்துத் தின்னுக்கிட்டு இருந்தாங்க.   விளம்பறதுக்குத் தனிக்கரண்டி வைக்கப்டாதோ? என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது.   நம்ம டேபிளில்  இருந்தவங்க நல்லாவே சாப்பிட்டாங்க.
மூணு இருபதுக்குக் கிளம்பி  அஞ்சேகாலுக்கு  பெய்ஜிங் ஊருக்குள் வந்துட்டோம்.  நம்ம ஹொட்டேல் இருக்கும் பகுதியில் மாலை நாலு முதல்   எந்த வண்டிகளுக்கும் அனுமதி இல்லையாம்.  நாலைஞ்சு தெருவுக்கு முன்னாலேயே இறங்கி நடந்து வர வேண்டியதாப் போச்சு. அஞ்சு மாடு பார்த்துக்கிட்டே நடந்து வந்துட்டோம்.

அறைக்கு வந்ததும்  கால்வலி தாங்கலை.  குளியலறைக்குந்தம்தான் உதவிக்கு வந்தது. வெந்நீர் நிரப்பி, பாத் ஸால்ட் போட்டு அதுலே ரெண்டு கால்களையும் இறக்கி வச்சுருந்தேன் ஒரு  முக்கால் மணி நேரம் :-)
இப்படியாக நம்ம க்ரேட் வால் ஆஃப் ச்சைனா  சுற்றுலா 'இனிமையாக' முடிஞ்சது. பார்த்தவரை போதும். பெருமாளுக்கு நன்றி.

சுவர் நீளத்துக்குப் பதிவும் நீண்டு போயிருச்சு போல.... அடடா....

நாளைக்குப் பொழைச்சுக்கிடந்தால் பார்க்கலாம். ஓக்கே!

தொடரும்.......  :-)

26 comments:

said...

வில்சன் வேஸ்ட்ஸன்னாக இருப்பார் போல... நீங்களே மேக்கப் பிதுங்கி உங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லி விட்டு, அவரவர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த விவங்களைச் சொல்லுங்கள்... எல்லோரும் தெரிந்து கொள்வோம் என்று சொல்லி இருக்கலாம்!

said...

//கொஞ்ச நேரத்தில் வில்ஸனும் ஓட்டுநருமாத் திரும்பி வந்து வண்டியை எடுத்தாங்க.//

அப்போ அந்தப் பயணி?

said...

சீனப்பெருஞ்சுவரைப் பார்த்தத்தினால் ரெண்டு செல்லங்களும் உயர்பிறவி ஆயிட்டாங்க!

said...

படங்களுடன் பகிர்ந்த விதம் நேரடியாகப் பார்க்கிற அனுபவம் தந்தது. நீளம் ஒரு பொருட்டாய்இல்லை சொன்னவிதம் அப்படி..வாழ்த்துக்களுடன்

said...

பெருஞ்சுவர் - வசதிகள் இன்னும் சரியாக இருக்கலாமோ....

பல தகவல்கள் உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிறய ஒற்றுமைமைகள் இருக்கும் போல ...!

said...

என்னால் சீனப் பெருஞ்சுவர் பக்கம் போக முடியாது என்றாலும், உங்கள் பயணக் கட்டுரை அனுபவத்தினை நானும் உணர்ந்தேன். நன்றி. தொடர்கின்றேன்.

said...

விரங்கள் அருமை. பனி விழுந்த பாதை ரம்யமீ இருக்கு. கபைசிவரை வில்லன் என்றுதான் வில்சனைப் படித்தேன் தொடர்கிறேன்

said...

சீனப்பெருஞ்சுவர் உண்மையிலேயே அதிசயம் தான். அதோட கட்டுமானத்துக்குப் பின்னாடி இருக்கும் உழைப்பு இழப்பு பிழைப்பு அதிகாரம்னு அளவிடமுடியாம சாப்பிட்டிருக்கே. அத்தனையையும் மறந்து போய் வெறும் சுவர் மட்டும் இரத்த சாட்சியா நின்னுக்கிட்டிருக்கு.

சீனாவுல டூர் ஏற்பாடுகள் சுற்றுலாத்தலங்கள்ளாம் இந்திய போலத்தான் போல. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கே.

எல்லாரும் குச்சிய சட்டிக்குள்ள விட்டுச் சாப்பிட்டுக்கிறது சீனமுறை. நீங்க சொல்றப்போ எனக்கே ஒரு மாதிரி இருக்கு. நானும் வெறும் சோத்தைத்தான் தின்னிருப்பேன்னு நெனைக்கிறேன். இந்த மாதிரி எடங்கள்ள கைல எதாவது கொண்டு போறது நல்லது.

said...

இன்னோன்னு சொல்ல மறந்துட்டேன். “சுவர்களில் நான் பெருஞ்சுவராக இருக்கிறேன்”. அடடா... உங்களோட எளிமையான ரசனையையும் நாராயண பக்தியையும் ரசிச்சேன். பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் உங்களுக்கு எப்போதும் துணையிருக்கட்டும்.

said...

அம்மா.. கருப்பு கண்ணாடி , ஜாக்கெட்ல பாக்கும்போது அசப்புல MGR மாதிரி தக தகன்னு இருக்கிங்க...😀😀

said...

Nice write up!! I also want to visit here—- what are the best months to visit? — Rajan

said...

Nice write up!! I also want to visit here—- what are the best months to visit? — Rajan
///
சுவர்களில் naan perunchuvarai iruppen!,, // excellent🙏

said...

வாங்க ஸ்ரீராம்.

கொஞ்சம் இங்லிஷ் பேசத்தெரிஞ்சாப்போதும் என்ற நிலமைதான் இங்கே! வேலை கிடைச்சுருது. சரியான ஸ்பெல்லிங் கூட ரெண்டாம் பட்சம். ஒரு அரசு அலுவலகத்தில் வெளியே போர்டு Food and Grug administration னு போட்டிருக்கு. Food and Drug .

காணாமப்போன பயணி, நடந்து போறேன்னு போயிட்டாராம்.

சீனப்பெருஞ்சுவரைப் பார்த்தால் உயர்பிறவி. செல்லங்கள் அங்கேயே வசிப்பதால் தெய்வப்பிறவி ! தேவதைகள் !

said...

வாங்க ரமணி.

இவ்ளோ பனி விழும்போது சுவரில் நிக்க வைக்கத் தயக்கமா இருந்துச்சுன்னுதான்.... முழுக்கச் சொல்லி முடிச்சுட்டேன் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

படாலிங் பகுதியில் வசதிகள் நல்லாவே இருக்கு. விஐபிக்களைக் கூட்டி வந்து காட்டும் இடமாச்சே!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

முதல் ஒற்றுமை...மக்கள் பெருக்கத்தில் :-)

said...

வாங்க தமிழ் இளங்கோ.

நம்ம பயணக்கட்டுரை ஆர்ம் ச்சேர் ட்ராவலர்களுக்குப் பயன் தரும் வகை :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பனி பார்க்க அழகுதான். ஆனால் பயணத்தில் வேணுமான்னு இருக்கே.....

said...

வாங்க ஜிரா.

பயங்கரக்கூட்டமா பயணிகள். உள்ளூர் மக்கள் மட்டுமேன்னாலும் நல்ல பிஸினஸ். அவுங்கதான் பட்டி தொட்டிகளில் இருந்து கூட்டம்கூட்டமா வர்றாங்க. அதனால் இவ்ளோ செஞ்சாப் போதுமுன்னு இருக்காங்க போல!

சோகத்தைச் சுமந்து நிக்கும் பெருஞ்சுவர்களே அவை! ராத்ரியில் அந்த ஆவிகள் நடமாடுமோ என்னவோ!!!

ஒரு பிஸ்கெட் பாக்கெட்டையாவது பைக்குள் போட்டுருந்தா நல்லா இருந்துருக்கும்..... ப்ச்...

said...

@ஜிரா.

பெருமாள், கருணைக்கடல்.... விஸ்வரூபமும் காமிச்சான்! அதை அப்புறம் சொல்றேன் :-)

said...

வாங்க ஆனந்த்.

ஹைய்யோ.... பேசாம 'புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது' பாடியிருக்கலாமோ!!! கோட்டை விட்டுட்டேனே :-)

said...

வாங்க ராஜன்.

மே ஜூன் மாசம் நல்லது. வெய்யில் இருந்தாலும் கோட்டை மீது கொஞ்சம் உலா வர முடியும்!

கூட்டம் அதிகம்னு சொல்வாங்க.... இங்கே எப்பதான் கூட்டம் இல்லே? ஒன்னரை பில்லியன், நினைச்சுப் பாருங்க!

said...



பனி விழும் மலர் வனம்..


ஆஹா

ஆஹா..

என்ன அழகு..

ரொம்ப அழகாக தெரிது...எல்லாமே... பார்க்கவே வெகு பரவசம்...