Wednesday, April 25, 2018

ஃபிலடெல்ஃபியாவும் ப்ரெஷர் குக்கரும்.... (@அமெரிக்கா.... கனடா 29)

சரித்திரம் நிறைஞ்ச நகரம். 1682 ஆம் வருஷம் வில்லியம் பென் என்றவர் இந்த ஊரை நிறுவினாராம்!  ஊருக்குத் தன்னோட பெயரை வச்சுக்காம,  ஃபிலடெல்ஃபியான்னு  வச்சதுக்குக் காரணம்.... சகோதரப் பாசமாம்!  அப்ப நகரும், இவரும் பாய் பாயா?  ஹே.....  க்ரீக் மொழியில்  ஃபிலடெல்ஃபியான்னா.... 'ப்ரதர்லி லவ்' என்றுதான் பொருள்.  இவர் இந்த நகரத்தை நிர்மாணிக்கறதுக்கு முன்னால் இங்கே அமெரிக்கப் பூர்வகுடிகள் இருந்துருக்காங்க.
பென்ஸில்வேனியா காலனின்னு  முதல்லே ஆரம்பிச்சு,  நட்புக் கரம் நீட்டி பூர்வகுடிகளோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, கொஞ்சம் நிலத்தை அவுங்ககிட்டே இருந்து வாங்கியிருக்கார். அதான் ஊருக்குப் பெயர் வச்சப்ப நீயும் நானும் ப்ரதர்ஸ்ன்னு சொல்லிட்டார். எல்லாம் ஒத்துமையா இருக்கலாமுன்னு முடிவு! இது பென்ஸில்வேனியா காலனியின் தலைநகர் ஆச்சு!
1701 வது ஆண்டுதான்  ஊருக்கு நகர அந்தஸ்து கிடைச்சது! அதுக்கப்புறம் எல்லாம் ஏத்தம்தான்!  ஒரு காலகட்டத்தில் (1790 முதல் 1800 வரை)  அமெரிக்கக்குடியரசின் தலை நகரமாகவே இருந்துருக்கு! அதே காலக்கட்டத்தில்தான் வாஷிங்டன் நகரத்தைத் தலைநகராக அறிவிச்சதும்கூட....   இங்கிருந்து எல்லாத்தையும்  அங்கே எடுத்துப்போக பத்து வருசம் ஆகிருச்சு போல....

இதோ நகரத்துக்குள் நாமும் நுழைஞ்சுட்டோம். பார்க்கிங் தேடிப்போன மருமான், எங்களை ஒரு பார்க்காண்டை இறக்கிவிட்டுட்டுப் போனார்.  முதல்முதலா கெமெராக் கண்ணில் பட்டது வார்மெமோரியல்!
ஏகப்பட்ட சரித்திர சம்பந்தமுள்ள இடங்கள் இருக்குன்னாலும் முக்கியமாப் பார்க்க வேண்டியது 'லிபர்ட்டி பெல்' என்பதால்  அப்படியே நடந்து போறோம். போற வழியிலேயே இன்டிபென்டன்ஸ் ஹால் கம்பீரமா நிக்குது! வளாகத்தில் ஜியார்ஜ் வாஷிங்டன்னும் கம்பீரமா நிக்கறார்!
வாஷிங்டன் சதுக்கத்தை வாசலிலேயே நின்னு பார்த்துட்டு போறோம். இதே பார்க்கின் அந்தாண்டைதான் நாம் வண்டியைவிட்டு இறங்குனதும்:-)


உள்ளூர் வெளியூர் மக்கள்ஸ் கூட்டம் நிறைய !  'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' கோச் வண்டிகள்  பயணிகளை ஏத்திக்கிட்டுப்போறதுலே பிஸி!


(நாமும் போயிருக்கலாமோ? )
அங்கங்கே சில க்ளிக்ஸ் ....  சுவர்ச்சித்திரங்கள் நல்லாவே இருக்கு!
லிபர்ட்டி பெல் சென்டருக்குப் போயிட்டோம். நேஷனல் ஹிஸ்டாரிகல் பார்க் !  வாசலிலேயே    பெரிய வரிசை நிக்குது.  நம்ம ஹேண்ட் பேக் முதக்கொண்டு எல்லாம் ஸ்கேன் செஞ்சுதான் உள்ளே அனுப்பறாங்க.
மணியின் சரித்திரத்தைப் படங்களுடன் விஸ்தாரமா எழுதி வச்சுருக்காங்க. படம் எடுக்கத் தடை ஒன்னும் இல்லை!

ஹப்பா.... நிம்மதி!


மணி வீறல் விட்டுருக்கு!   க்ளிக்கும் மக்கள் கூட்டத்தின் ஜோதியில் நாமும் கலந்தோம் :-)


சுதந்திரம் என்ற சொல்லுக்கு அடையாளமாத்தான் இந்த லிபர்ட்டி பெல் இருக்காம்!  வேற நாடுகளுக்கு அடிமையா இருப்பது முதல் தனி மனித சுதந்திரம் வரை....  அடிமை வாழ்க்கையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.....    மனசு எப்படியெல்லாம் துக்கப்படும்? பட்டுருக்கே.....

  அடிமைநாடாக இருந்து  போராடிப் போராடி சுதந்திரம் அடைஞ்ச நாட்டு மக்களுக்கு இந்த சுதந்திரம்  என்ற சொல்லின் அருமை பெருமை புரியாம இருக்குமோ.....

பிலடெல்ஃபியாவுக்கு நகர அந்தஸ்து கிடைச்ச அம்பதாவது வருசம் நகரசபைக் கட்டடத்து மேலே ஒரு மணிக்கூண்டு கட்டி அதில் ஒரு மணியைத் தொங்கவிடலாமுன்னு பிரிட்டனில் இருக்கும் ஒரு  வார்ப்புக் கம்பெனிக்கு மணி செய்யச் சொல்லிக் கேட்டுருக்காங்க. அந்தக் காலத்துலே இதுக்கு ஆன செலவு நூறு பவுண்டு காசு !

அவுங்களும் இவுங்க கேட்டபடி பெரிய மணி செஞ்சு அனுப்பிடறாங்க. மணியின்  வாய்ப்பகுதி சுத்தளவு பனிரெண்டு அடி !  கூம்புப்பகுதி சுத்தளவு  ஏழரை அடி. மணியின் மொத்த உயரம் மூணு அடி.  மணியின் 'நாக்கு' மூணடி ரெண்டு இஞ்ச்.

மணி கனமான கனம்.... 2080 பவுண்ட் (900 கிலோ!)   இதைத் தொங்க விடணுமே... இவ்ளோ கனத்தைத் தாங்கும் மரக்கட்டை 100 பவுண்டுன்னு சரித்திரம் சொல்லுது!

மணியை முதல் முதலா அடிச்சுப் பார்த்தவுடனே லேசா வீறல் விட்டுருச்சாம்.  கலவை சரி இல்லைன்னு  அதை முழுசா இங்கேயே  உருக்கி எடுத்து இன்னும் கூடுதலா செம்பு சேர்த்து திருப்பி வார்த்து எடுத்துருக்காங்க.

ஸ்டேட் அசெம்ப்ளி கூடும் சமயம், முக்கியமான சேதியை ஊர் மக்களுக்குச் சொல்லும் சமயம்னு மணி அடிச்சுச் சொல்றது அப்போதைய வழக்கம்.  (1776 இல் ஜூலை 8 ஆம் தேதி இப்படித்தான் மணி அடிச்சு ஊர்மக்களைக் கூட்டி, அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் வாசிச்சாங்களாம்! ஆமாம்.... ஜூலை நாலு இல்லையோ இவுங்க சுதந்திரதினம்?


பிரிட்டன் இங்கே படையெடுத்து வந்த சமயம்,  மணியைக் காப்பாத்தணும்னு  ஒரு சர்ச்சுக்குள்ளே ஒளிச்சு வச்சுருந்தாங்களாம். மணிக்கு  முதல்முதல்  வீறல் விட்டது  எந்தநாள்னு தொடங்கி,  எவ்ளோ இரும்பு, எவ்ளோ செம்பு,  மணிச்சத்தம் எப்படி இருந்துச்சு,  சனத்துக்கு  மணிச் சத்தம் பிடிக்காதது  ஏன், கலவையில் கலப்பு சரியில்லை  இப்படி மணிக்குக் கதைகள் நூறு !  ஹேர்லைன் வீறல்தானாம்  முதலில்.... அதுவும்  இந்தக் கதைகளைப்போலவே வளர்ந்து இப்ப பெருசாவே ஆகி இருக்கு!

 கட்டக் கடைசியா இந்த மணி ஒலிச்சது  1846 லே!  அன்றைக்கு ஜியார்ஜ் வாஷிங்டன் அவர்களின் பொறந்தநாள்!
அமெரிக்க சுதந்திரம் கிடைச்ச இருநூறு வருஷக் கொண்ட்டாட்ட சமயம், இந்த மணியைத் தனிக் கூடாரத்துக்கு மாத்தியிருக்காங்க.

எது எப்படியோ...  இப்ப 2003 இல் இந்த மணிக்காகவே ஒரு கட்டடம் கட்டி அங்கே மக்கள் பார்வைக்குத் தொங்கவிட்டுருக்காங்க.
சனம் எப்பவும்.... 'வீறல் விட்டது எங்கேன்னு தேடும் மனசுள்ளதால்  அந்தப் பக்கம் நமக்குத் தெரியறாப்படித் தொங்கவிட்டதைப் பாராட்டத்தான் வேணும்.   பின்பக்கம் கண்ணாடி சுவர் என்றதால் தெருவிலே இருந்தும், தோட்டத்தில் இருந்தும் பார்த்தாலே மணி தெரியறமாதிரி  அமைப்பு!

இப்ப இன்டிபென்டன்ஸ் ஹால் மேலே  கடிகாரம் வச்சுருக்காங்க. மணி காட்டிக்கிட்டு இருக்கு!

வெளியே அழகான பூந்தோட்டம். இதையெல்லாம் பார்க்கும்போதே....  மணி நாலாகப்போகுது.... கிளம்பலாம்னு சொல்லிட்டார் 'நம்மவர்'.  நம்மை எடிசனில் கொண்டு போய் விட்டுட்டு அவுங்க திரும்பி வீட்டுக்குப் போகணுமே!
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ப்ரிட்ஜ் வழியா திரும்பிப் போறோம். அவரும் இந்த ஊர்க்காரர்தான்!  எப்படி?   கடைசியா  இங்கேதான்   இருந்து சாமிகிட்டே போனவர்!


 எடிஸனுக்கு வந்துக்கிட்டு இருந்தோமா....  இதுக்கிடையில்  'ஷாப்பிங் எதாவது  செய்யணுமா'ன்னு (மரு)மகள் கேட்டதும்.... 'இல்லையா பின்னே'ன்னேன்:-)  ஒரு ரெண்டு லிட்டர் ப்ரெஷர் குக்கர் வாங்கிக்கணும்.

சமீபகாலமா அதிகம் புழங்கிக்கிட்டு இருக்கற ஒன் பாட் ஒன் ஷாட்ன்னு சொல்லும் OPOS சமையல் முறைக்கு இது அத்யாவசியமா  இருக்கு! அவுங்க என்னென்னமோ தைரியம் கொடுத்தாலும், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் குக்கர் வாங்கிக்க ஒரு தயக்கம்.  துளியூண்டு தண்ணீர் விட்டு சமைக்கும்போது பாத்திரம் அடிபுடிச்சுட்டா?

அதனால்   ப்ரெஸ்டீஜ் அலுமினியம் குக்கர் தேடிக்கிட்டு இருக்கேன்னு சொன்னேன்.  (மரு)மகளுக்கு  இந்த சமையல் முறை தெரியாதாமே! விட முடியுமா? லெக்சர் ஆச்சு :-)

அப்படியே அச்சார் மசாலா சேர்த்து ஊறுகாய் செய்யற ஈஸிபீஸி இண்டியன் குக்கிங் சொல்லிக் கொடுத்தேன்!

ஒரு இண்டியன் கடைக்குப்போனோம். அங்கே இருக்கும் குக்கர் வகைகளில் நம்ம நிபந்தனைகளுக்கு உட்பட்டதா ஒரு மூணு லிட்டர் கிடைச்சது.  அப்படியே செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வச்சுக் குடிச்சா நல்லதாமே....  (இதுக்குத்தான் நெட்டே கதின்னு இருக்கப்டாதுன்றது......)  பாத்திரமா வேணாம்... ஃப்ளாஸ்க் போல ஒன்னு இருக்கேன்னு அதையும்..... ஹிஹி...  இதெல்லாம் ஹெல்த் சம்பந்தப்பட்டது.....   கண்டால் விடப்டாது.... :-)







இங்கேயும் பலாக்காய்,  முருங்கைக் கீரை எல்லாம் ஃப்ரெஷா கிடைக்கறதைப் 'பார்த்துட்டு 'இன்னொரு பக்கம்போனால் 'என்னைக்கூட' விக்கறதுக்கு வச்சுருக்காங்க. குளிரைத் தாங்குவேனா என்ன?   ஙே.....  வீட்டுக்குள்ளே வச்சுக் கும்பிடுவாங்களோ?

நல்ல பெரிய கடை! கடைவீதியும் பெருசுதான்! கலகலன்னு இருக்குபா!
(மரு)மகளுக்கு அச்சார் மசாலாவை வாங்கியாச்.  (செஞ்சு பார்த்துட்டு ரொம்ப நல்லா வந்துருக்குன்னு சேதி அனுப்புனாங்க)

அப்படியே ஒரு காபியோ இல்லை டீயோ குடிக்கலாமேன்னு  சௌப்பாத்திக்குள்ளே போனோம்.  மும்பைவாலாக்கடை போல!

எந்த நாடாக இருக்கட்டும்.... கடைவீதிக்குப் போனாலே நேரம் ஓடிப்போகுது, இல்லே?  ஒரு ஏழேமுக்கால் ஆகிருச்சு நாங்கள் ஹொட்டேலுக்கு வந்து சேர !  'பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேருங்க'ன்னு வழி அனுப்பிட்டு அறைக்குப் போனோம்.

இனி எப்போ பார்க்கக் கிடைக்குமோன்னு....



போனதும் முதல்வேலையா.... நம்ம Vidya Pinto (இவுங்கதான் அடிப்பிடிச்சுருமோன்னு படுத்துனதுக்கு, 'அடியே பிடிக்காது, நான் சமைச்ச பாத்திரத்தைப்பார்'னு  படமெல்லாம் காமிச்சுக் கேரண்ட்டி கொடுத்தாங்க) கிட்டே போய் குக்கர் வாங்கியாச். ஜோதியில் கலக்கப்போறேன்'னு பெருமை அடிச்சேன்.

நீ மூணு லிட்டர் வாங்கினது, செல்லாது. ரெண்டு லிட்டர் வாங்கி இருக்கணுமுன்னு 'அடிச்சு'ச் சொல்லிட்டாங்க.....

ஹூம்.... பல்பு வாங்கிக்க அமெரிக்காவரை போயிருக்கேன், பாருங்க  :-)

அடுத்த சென்னை விஜயத்தில் ரெண்டு லிட்டரை விடப்போறதில்லையாக்கும், கேட்டோ!

போகட்டும்.....  நாளைக்குத் திங்கள் :-)

தயாரா இருங்க....  ஊர்கோலம் போகலாம்!

தொடரும்........:-)


14 comments:

said...

இடங்கள்... படங்கள்... ரசித்தேன். அருமை.

said...

I don’t know whether you get instant pot in NZ. It is an electric pressure cooker very popular in US. Some of OPOS recipes can be tried there. There is a big cult following for instant pot in US

said...

படங்களும் இடங்களும் ரசித்தேன்.

said...

மகாலக்ஷ்மி தாயார், பெருமாளோடு நாளை நகர்வலம் வர நாங்கள் தயார்.

said...

அனைத்தையும் ரசித்தேன். சுதந்திரம் என்ற சொல்லுக்கான அடையாளம் மணி. அருமை.

said...

பிலடெல்பியாங்குற பேருக்கு இப்படியொரு பொருள் இருக்கா.

ஒரு ஒடஞ்ச மணிக்கு ஓராயிரம் வரலாறு. அதையும் பாதுகாப்பா வெச்சு மக்களையும் பாக்க வெச்சுன்னு அருமையா பராமரிக்கிறாங்க.

ஒன் பாட் ஒன் ஷாட்னா என்னது? எல்லாத்தையும் மொத்தமாப் போட்டு கதம்பமாச் சமைக்கிறதா?

said...

Independence day was July 4th, but, those days, no phone, no telegram and no internet. People have to travel by horse every where. So It took another 4 days to announce publicly that they got Independence.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசித்தமைக்கு நன்றி!

said...

வாங்க தெய்வா.

இங்கேயும் இன்ஸ்டன்ட் பாட் கிடைக்குது. இப்போதைக்குத் தேவை இல்லைன்னு வாங்கிக்கலை.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்.

ஒரு வகையில் நீங்க(ளும்) தீர்க்கதரிசி !!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சுதந்திரத்தின் அருமை தெரிஞ்சவங்க அவுங்க !

said...

வாங்க ஜிரா.

பழைய பொருட்கள் ஆனாலும் அதுலேயும் ஒரு சரித்திரம் இருப்பதால் பாதுகாத்து வைக்கிறாங்க.

நம்மூர்களில்..... பழசுன்னா .... நேராக் குப்பைக்குத்தான்..... சரித்திரத்துக்கு ஒரு முக்கியவத்துவமும் இல்லை.... புது சரித்திரம் அவரவர் ஆட்சிக்குத் தகுந்தபடி எழுதிக்குவாங்க :-(

யூ ட்யூப்லே பாருங்க. செய்முறைகளோடு கொட்டிக்கிடக்கு இந்த வகைச் சமையல்!

said...

வாங்க ஜான் கென்னடி.

நீங்க சொன்னது ரொம்பச் சரி!

முதல் வருகைக்கு நன்றி.