Tuesday, January 05, 2010

டொனேஷன் கொடுத்தா பதிலுக்குக் காசு கொடுப்பாராம்!

நாம் டொனேஷனா ஒரு பொருள் கொடுத்தா, அதுக்குப் பதில்(மரியாதை?) காசு கொடுப்பேன்னு சொன்னவரைப் பார்த்தேன்.அட! பதிவுலக நண்பர்களுக்கு 'இந்த சமயத்தில்' இப்படி ஒரு நற்செய்தி கிடைச்சதைச் சொல்லாம விடமுடியுதா?

இன்றைக்கு(ம்) புத்தகத் திருவிழா வேடிக்கைப் பார்க்கப்போனேன். கூட்டு நம்ம நாச்சியார். நம்ம சங்கர்வேற அஞ்சுமணிக்குமேல் அங்கே வரேன்னு சொல்லி செல் எண்ணும் கொடுத்துருந்தார் பாருங்க. அவரையும் பார்த்தாப்போல இருக்கட்டுமே.

நாங்க போய்ச் சேரும்போது நாலே முக்கால். புதியதலைமுறை அரங்கத்துக்குப் பின்னால் போய் வண்டியை நிறுத்திட்டு உள்ளே நடந்தோம். அங்கே இடதுபக்கம் உணவுக்கான பெரிய ஹால் இருக்குன்றதை இன்னிக்கு, இப்போதான் கவனிச்சேன்!

அரங்கில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். சில சொற்கள்தான் காதில் விழுந்தன. சினிமாவைப் பற்றிச் சொல்லிக்கிட்டு இருந்தார் போல.அங்கங்கே நம்ம லூமியர் சகோதரர்கள், நம்ம தாமஸ் ஆல்வா எடிஸன்ன்னு சொல்லிக்கிட்டே போனார். அட இவர் 'நம்ம' ஆளு! நானும் நம்ம கம்பர், நம்ம தாடிக்காரர், நம்ம முண்டாசுன்னுதான் எப்பவும்(!) சொல்றது வழக்கம்.

மேடையில் எனக்குத் தெரிஞ்ச முகமா நம்ம தமிழச்சி இருந்தாங்க. க்ளிக்கிட்டு, கையை ஆட்டினேன். அவுங்களும் அங்கிருந்தே 'ஹாய்' (மனசுக்குள்)சொல்லிக் கையை ஆட்டுனாங்க.

ஒரு பத்துரூபாயை நாச்சியார் கையில் வச்சேன். அவுங்க அதை வாங்கிக்கிட்டேத் தலையைத் திருப்பி நாங்க நின்னுக்கிட்டு இருந்த மரத்தடியில் ஸ்டைலா உக்கார்ந்துருந்த சாமியார் 'வேடம்'அணிஞ்சவரை ஏறிட்டாங்க. எச்சரிக்கை மணி என் மண்டையில் அடிச்சது. அந்தக் காசு டிக்கெட் எடுக்கன்னேன். ஒருவிநாடி சாமியார் முகம் வாடினமாதிரி தோணல்.

நாலு பூத் இருந்தும் ஒன்னில் மட்டுமே டிக்கெட் கொடுக்க ஆள் இருக்கு. பத்தை நீட்டி 'தோ' என்றேன். 'இந்தாங்க'ன்னவரிடம் 'அச்சா. ஷுக்ரியா'ன்னேன். உள்ளே போனோம். சங்கருக்கு செல்லடித்தேன். இப்போதான் வேலையில் இருந்து கிளம்பறேன். வந்ததும் கூப்பிடறேன்னார். வலது கைப்பக்கம் முதலில் இருந்து(வேடிக்கை) பார்க்கத் தொடங்கினோம். இடப்பக்கம் இருந்த ஒரு சின்ன ஸ்டாலில் நாச்சியார் நுழைஞ்சுட்டாங்க. அங்கே ஒரு பக்கமா உக்கார்ந்துருந்தவர் முக்தா ஸ்ரீனிவாசனாம்.

ஒரு வணக்கம் போட்டுட்டு, ஒரு படம் எடுத்துக்கவான்னா? எதுக்குன்னார். நீங்க எத்தனை பேரைப் படம் புடிச்சுருப்பீங்க. அதான் பதிலுக்கு எடுக்கணுமுன்னு க்ளிக்கினேன். (பக்கத்து இருக்கையில் இன்னொருத்தர் இருந்தார் பச்சைச்சட்டையில்) படத்தைக் காமிச்சால் 'பச்சைச் சட்டை நிறம் சரியா விழலை. நான் போட்டோகிராஃபர்'ன்றார் முக்தா ஸ்ரீ . இன்னொரு க்ளிக். இது பரவாயில்லையாம்! அவருடைய வீட்டு லைப்ரரியைப் பத்திக் கேட்டேன்.

நாலாயிரத்து எண்ணூறு புத்தகங்கள் இருக்காம். நாலு புத்தகத்தை எடுத்துக்கிட்டுப்போய்ப் படிச்சுட்டுத் திருப்பித்தரலாமாம். எல்லாம் இலவசமாம். திருப்பிக் கொடுக்காமலும் இருக்கலாமான்னேன். தாராளமா! அது புத்தகம் எடுப்பவரின் உரிமைன்னார் பச்சைச் சட்டை:-)
இதுவரை அப்படி ஒன்னும் நடக்கலைன்னார் முக்தா ஸ்ரீ. இனிமேல் நடக்கும் பாருங்க. நான் வரப்போறேன்னேன். கொஞ்சம் சுயவிவரம் அவர் இதுவரை எழுதிய புத்தகங்கள், சாதனையாளர்கள் விவரம் உள்ள புத்தகங்கள்பற்றியெல்லாம் பேச்சு ஓடுச்சு. திமுக முக்கியஸ்தர்கள் பற்றியும் அதுலே இருக்காம். 'சரித்திரத்தில் இடம் கொடுக்கலை'ன்னு புலம்பியவருக்கு இதைச் சொல்லணும் முதலில்!

புத்தகங்கள் வாங்கறோம். படிச்சு முடிச்சதும் அதுவே இடம் புடிச்சுக்குது. எடுத்துக்கிட்டுப்போக முடியாமல் எடைப்பிரச்சனை. உங்க நூலகத்துக்கு டொனேஷனாக் கொடுத்துட்டுப் போகப்போறேன்னேன். நான் வாங்கிக்குவேன் காசு கொடுத்துன்னார். இது என்னங்க அநியாயம். நான் ச்சும்மாத் தரேன்றேன், காசு கொடுப்பேன்னா என்ன அர்த்தம்?

இலவசமாக் கிடைச்சப் புத்தகங்களை வச்சு நூலகம் நடத்தறேன்னு பேர் வந்துறக்கூடாது. புத்தகங்களுக்கு அரைவிலை கொடுப்பேன். நீங்க வாங்கிக்கணும்ன்றார். (எனக்கு 450 கிடைக்கும்!)
விழா முடியட்டும் ஒருநாள் வரேன்னேன். பதிவர்கள் குறிச்சு வச்சுக்குங்க. இப்படி ஒரு சேதி வந்தபின்.....இன்னும் கொஞ்சம் அதிகமாகவே புத்தகம் வாங்கி மகிழலாம்.

இங்கே அங்கே சுத்தி காலச்சுவட்டில் போய் நின்னோம். கிருஷ்ணன்நம்பியின் ஆக்கங்கள் முழுசாத் தொகுத்துவந்துருக்கு. நல்ல எழுத்துன்னு பரிந்துரை கிடைச்சது இன்னிக்குக் காலையிலே! வாடிவாசல் கண்ணில் பட்டது. அதையும் எடுத்தேன். மூணு வாங்கினால் ஒன்னு இலவசமாம். இன்னும் ஒரு புத்தகம் எடுங்கன்றார்.மூணில் விலை குறைஞ்சது இலவசம். அதுக்குள்ளே நம்ம எஸ்.ரா.வைப் பார்த்தேன். கொஞ்சம் பேச்சு. படிக்கிறீங்களா? ஆமாம்ன்னார்.இன்னிக்குச் சமையல் ஒன்னு போட்டுருக்கேன் பாருங்க. நானே 'நல்லா' சமைப்பேன். மூணுநாளா வலைப்பக்கமே போகலை. புத்தக விழாவில் பிஸி. லேட்டா வீட்டுக்குப் போறேன். இரவு எழுத்து வேலை சரியாப் போயிருதுன்னார். பிறகு சந்திப்போமுன்னு கிளம்புனா..... புத்தக வெளியீடு இருக்கு இருங்கன்னார். எப்போ? இப்பத்தானாம். புத்தகத்திருவிழாவில் புத்தகவெளியீடு பார்க்கவே இல்லையே.....ஆஹா....ச்சான்ஸ் கிடைச்சதுன்னேன்.
என் பெயர் சிகப்பு. மொழி பெயர்ப்பு நூல். ஃப்ரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு வந்து இப்போ அங்கிருந்து தமிழுக்கு. மூலம் நோபல் வாங்கியதாம்.Ferit Orhan Pamuk துருக்கிய மொழியில் எழுதியிருக்கார். அது My Name Is Redன்னு ஆங்கிலத்தில் வந்துருக்கு. இன்னும் 15 வெவ்வேறு மொழிகளிலும் வந்துருக்கார். அங்கங்கே பரிசு வாங்கிக்கிட்டே போய்க்கொண்டிருக்கு. இப்போ தமிழிலும் வந்தாச்சு.
பாமுக் வரப்போறாரான்னு கேட்டு பல்ப் வாங்கினேன். ஜி.குப்புசாமி மொழி பெயர்த்து இருக்கார். எஸ்.ரா. புத்தகத்தை வெளியிட்டார். எழுத்தாளர் இந்திரன் பெற்றுக்கொண்டார். புத்தகம் ரொம்ப அருமைன்னு எஸ்ரா பாராட்டினார். வாங்கிக்கலாமுன்னு எடுத்துக் கையில் வச்சுக்கிட்டேன். இந்திரன் பேசும்போது மொழி பெயர்ப்பின் அவசியம், குறிப்பாக இதில் குப்புசாமி எடுத்தாண்ட மொழி, நடை எல்லாத்தையும் பாராட்டிச் சொன்னார் எ.காட்டுக்கு மினியேச்சர் ஓவியத்தை சிறு ஓவியம் என்றே பலரும் மொழிபெயர்க்க, இவர் அதை நுண்ணோவியமுன்னு குறிப்பிட்டதை வெகுவாகச் சிலாகித்தார். அட! ஆமாம் .

குப்புசாமி அவர்கள் 2004 முதலே இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப்பதிப்பை பலமுறைகள் வாசிச்சு, எப்படி எழுதனும் என்ற எண்ணத்தை மனசுலே வச்சு வளர்த்து அதை இன்னிக்கு வெளிக்கொண்டுவந்துட்டார். அஞ்சு வருசத் தவம்!


குப்புசாமி அவர்களின் மனைவியைச் சந்தித்தேன். டீச்சராம். நான் வலைடீச்சர்ன்னு அறிமுகம் ஆச்சு. கவிதை எழுதுவாங்களாம். அனுப்பிவைக்கிறேன். உங்க பதிவில் போடறீங்களான்னு கேட்டாங்க. த்தோடா.....
ப்ளொக்லே போடப்போறென்னதும் குப்புசாமியின் நண்பர் கேத்தி( பொருள்விளக்கி, மொழிபெயர்ப்பில் உதவி செஞ்சுருக்காங்களாம். ) சடார்ன்னு கூலிங் க்ளாஸை எடுத்துப்போட்டுக்கிட்டாங்க. அயர்லாந்திலே இருந்து வந்துருக்காங்களாம். நாம் மட்டும் சும்மவா? நியூஸிலாந்துலே இருந்து வந்துருக்கொம்லெ:-) லாந்துக்கு லாந்து சரியாப் போச்சு.

ஏங்க இப்படி? சொந்தமா நீங்களே ஒரு வலைப்பூ தொடங்கிருங்க. 1 2 3 மாதிரி ரொம்ப சுலபம். சூட்சமமெல்லாம் சொல்லித் தாரேன்னேன். மெயில் ஐடி கொடுத்துட்டு வந்தேன். தமிழ்ச்சேவைக்கு என் பங்கா ஒரு புதுப் பதிவரைக் கொண்டுவந்து சேர்த்துக் கடமையை ஆற்றிட்டேன்! நாளைக்கு யாரும் நான் 'சேவை' ஒன்னுமே செய்யலைன்னு சொல்லிறக்கூடாது பாருங்க.
அடுத்து இன்னொரு புத்தகம் மூன்றாம் சிலுவை. பிரபஞ்சன் வெளியிட்டார். காலச்சுவடு கண்ணன் அருகில் இருந்தார். நான் சரியா அவரை அவர்தான்னு ஊகிச்சுட்டேன்:-)

எஸ்.ரா. வெளி அரங்கிலும் பேசப்போகிறாராம். நேரம் இருந்தால் கேக்கப்போகணும். சுத்திமுத்தி உயிர்மைக்குப் போனோம். செல்வி இருந்தாங்க. மனுஷ்யபுத்திரன் வரலையான்னேன். அடுத்த வாசலில் இருக்காராம். அவரிடம் கொஞ்சம் 'பேசிட்டு' கிளம்பும்போது சங்கரின் கால். வந்துட்டேன். எங்கே இருக்கீங்கன்னார். தலையை நிமிர்த்திப் பார்த்தால் ஓம்சக்தி. முன் வைத்த காலை ஒரு எட்டு பின் பக்கம் வச்சுட்டு, உயிர்மையில் இருக்கேன்னேன். மறுபடி கால். நான் உயிர்மையில் இருக்கேன். நீங்க? நான் மனுஷ்யபுத்திரன் அருகில். தலையைக் கொஞ்சம் திருப்புப்பா.....

கழுத்துலே ருத்திராட்சமோ? இருக்கட்டும் இருக்கட்டும். நாலு வரி பேசும்போது இன்னொரு பச்சைச்சட்டை உள்ளே போகிறார் நம்மைக் கவனிக்காமல்.....ஜெட்லியாம். நாந்தான் டீச்சர்ன்னதும் படக்ன்னு கையைகட்டி என்னா பணிவு என்னா பணிவு. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கொலவெறியோடு இவரைத் தேடிக்கிட்டு இருக்காங்க. சட்டையை மாத்திட்டு, முகத்துலே ஒரு மச்சம் வச்சுக்கப்பா. அப்ப அடையாளம் தெரியாது. பத்திரம்!

இன்னும் கொஞ்சம் சுத்திக் கிழக்குப்பக்கம் போனோம். தெரிஞ்ச முகம்? ஊஹூம்...... ஹரன்ப்ரசன்னா இருக்காரான்னு அவர்பக்கத்து இருக்கையில் இருந்தவரைக் கேட்டேன்:-)
என்னதான் இருந்தாலும் நாம் மரத்தடி கால மக்களல்லவா?

ஏழே முக்கால் ஆச்சுன்னு வெளியே வந்து பார்த்தால் எஸ்.ரா. அமர்ந்திருந்தார். தமிழருவி மணியன் மைக்கில்.

இன்னிக்கு ரெண்டு நல்ல காரியம் செஞ்சுட்டோமேன்ற பூரிப்பில் வீடுவந்து சேர்ந்தேன்.

35 comments:

said...

//லாந்துக்கு லாந்து சரியாப் போச்சு//

ஹா ஹா ஹா

//முகத்துலே ஒரு மச்சம் வச்சுக்கப்பா. அப்ப அடையாளம் தெரியாது. //

மேடம் உங்களுக்கு நக்கல் தான் .. நீங்க கூறுவதை கேட்டவுடன் எனக்கு MGR தான் நினைவிற்கு வருகிறார் .. ;-)

said...

மேடம் எனக்கு ஒரு சந்தேகம்.. ஏன் நீங்க தமிழிஷ் ல இணை(ப்பதில்லை)க்கவில்லை?

said...

வாங்க கிரி.

முதல் போணி சிங்கையில் இருந்து!!!

சிரித்து வாழவேண்டும் அதே எம் ஜி ஆர் பாடிட்டாரேப்பா.

தமிழிஷா? இணைக்கணுமுன்னுதான் தோணுது. ஆனா எப்படின்னு தெரியலையே ( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

நிரல் ஒட்டணுமுன்னா கொஞ்சம் பின் வாங்கிருவேன். நம்ம டெம்ப்ளேட் தோழி ஒருத்தர் தனிப்படச் செஞ்சு கொடுத்தது. இப்ப அவுங்களைக் காணோம். நான் பாட்டுக்கு மாத்தி உள்ளதும் போச்சுன்னா......

said...

நல்லா ரவுண்ட் அப் நடக்குது போல.

ரசிச்சேன்.

said...

துளசி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான் அவரைப் பார்த்துத் திகைச்சுப் போயிட்டேன்பா. இதென்ன ஆழ்வார் மாதிரி வேஷம்!யாரொ இவர் யாரோன்னு
யோசனை.
ஹி வாஸ் சோ ரியாலிஸ்டிக்.

நீங்க எதுக்கு பத்து ரூபா கொடுத்தீங்கன்னும் புரியலை:)))))
ஏன்னால் நான் டிக்கட் விலை 30ரூபாய்னு நினைச்சுட்டு இருந்தேன்!!


ரொம்ப நல்ல விஷயம் பாருங்க.(முக்தா ஸ்ரீனிவாசன்) இந்தப் புத்தகத்தைக் கொடுக்கறது.
அந்தப் பணத்தைவச்சு இன்னும் புத்தகங்கள் வாங்கலாமே.
கொஞ்ச நேரம் பேச்சு(!) கேட்டுட்டு வந்திருக்கலாமேன்னு அப்புறம் நினைத்தேன்.
நமக்குத்தான் எட்டு மணிக்கு சாப்பிட்டே ஆகணும்னு விதி இருக்கே.சட்டப்படி நடக்கத்தான் வேணும்!
ஆனால் இந்த நடைபாதைதான்பா மேடும் பள்ளமுமா படுத்தி விட்டது.

said...

வாங்க வல்லி.

தடக் தடக்ன்னு அங்கங்கே நமக்கு ட்ராப் வச்ச மாதிரி இருக்குல்லே?

அது ஏன்னா.... நான் முன்னொரு பதிவுலே தெருன்னு சொன்னேனில்லை? அதான் தெருவுக்குள்ள சகல லக்ஷணங்களும் அங்கேயும் இருக்கு.

பத்திரமா உங்களை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தது மூணாவது நல்ல செயல்:-)))

அதென்ன ஆன்னா ஊன்னா பக்தி ஸ்டாலுக்குப் போயிடறீங்க!!!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பின்னே? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

சான்ஸ் உள்ளபோதே சுற்றிக்கொல்!!!!
( நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்)

நேற்றும் உங்க 'கடையை' வல்லிமாவுக்குக் காமிச்சேன்:-)

said...

நேற்றும் உங்க 'கடையை' வல்லிமாவுக்குக் காமிச்சேன்//


ஓ நன்றி. இன்னைக்கு கட்டாயம் காட்டுங்க. ஜாலிலோ ஜிம்கானா பதிவு போட்டிருக்கேன். :))))

said...

{தமிழிஷா? இணைக்கணுமுன்னுதான் தோணுது. ஆனா எப்படின்னு தெரியலையே ( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

நிரல் ஒட்டணுமுன்னா கொஞ்சம் பின் வாங்கிருவேன். நம்ம டெம்ப்ளேட் தோழி ஒருத்தர் தனிப்படச் செஞ்சு கொடுத்தது. இப்ப அவுங்களைக் காணோம். நான் பாட்டுக்கு மாத்தி உள்ளதும் போச்சுன்னா......}

அதெல்லாம் ஒன்னும் பிரச்னையில்லை;பயனர் கணக்கு துவங்கி மானுயல்-ஆகவை இணைத்துக் கொள்ளலாம்..

முயற்சி செய்யுங்க..முயற்சி 'திருவினை' ஆக்கும்ல..

said...

//உங்க பதிவில் போடறீங்களான்னு கேட்டாங்க. த்தோடா.....//

//மெயில் ஐடி கொடுத்துட்டு வந்தேன். தமிழ்ச்சேவைக்கு என் பங்கா ஒரு புதுப் பதிவரைக் கொண்டுவந்து சேர்த்துக் கடமையை ஆற்றிட்டேன்!//

ஹி ஹி நாளைக்கே அவங்க இதை படிக்க நேரலாம் டீச்சர் :))

//அயர்லாந்திலே இருந்து வந்துருக்காங்களாம். லாந்துக்கு லாந்து சரியாப் போச்சு.//

அதானே நம்கிட்டயேவா டீச்சர் :)))

said...

நல்ல தமிழ் நடை.. கல கலன்னு

said...

// நாலு புத்தகத்தை எடுத்துக்கிட்டுப்போய்ப் படிச்சுட்டுத் திருப்பித்தரலாமாம். எல்லாம் இலவசமாம்.//

திருப்பிக் கொடுக்கும்போது புத்தகத்தைப் பற்றி கேள்வி கேட்பாராம், அது தெரியுமா?

said...

//உங்க நூலகத்துக்கு டொனேஷனாக் கொடுத்துட்டுப் போகப்போறேன்னேன்//

எனக்கு கூட தரலாம், காசெல்லாம் கொடுக்க மாட்டேன்

said...

//லாந்துக்கு லாந்து சரியாப் போச்சு.//

லந்து ரொம்ப ஓவரா இருக்கே :)))

said...

//கழுத்துலே ருத்திராட்சமோ? இருக்கட்டும் இருக்கட்டும். //

துளசிதளம்னு பேர் வச்சிக்கிட்டு துளசி மாலையை ருத்ராட்சமான்னு கேட்கிறீங்களே, நியாயமா?, சபரிமலைக்கு போறேன்

said...

தினசரி போறீங்களா... புக் கண்காட்சீல உங்க appointment கிடைக்குமா??
;))

said...

வேற ஒண்ணும் இல்லை.. உங்களையும் பாத்த மாதிரி ஆச்சு.. அப்படியே எங்க போடோவையும் போடுவீங்க..
எல்லாம் ஒரு விளம்பரம்தான்.. ஹி ஹி

said...

நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

said...

புதுகைத் தென்றல்,

இந்தக் கடையை அல்ல. அங்கே புத்தகத்திருவிழாவில் நீங்க போட்டுருக்கும் கடையைக் குறிப்பிட்டேன்:-)

said...

வாங்க அறிவன்.

க கை நாவுக்குப் புரியும்படிச் சொன்னதுக்கு நன்றி.

'திருவினை' ஆற்றிடுவோம்:-)

said...

வாங்க நான் ஆதவன்.

அவுங்க படிக்கட்டும். படிக்கணும்.சந்தோஷப்படுவாங்க. பதிவராகுமுன்பே விளம்பரம் வந்துருச்சுல்லே:-)))))

said...

வாங்க அண்ணாமலையான்.

இதுதான் முதல்லே தயக்கமா இருந்துச்சு. ரெண்டுமூணு நடை நடந்து பார்த்துட்டு இந்த பூனை நடை நமக்கு ஓக்கேன்னு அதையே அப்படியே மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு இருக்கேன்:-)))

said...

வாங்க சங்கர்.

அட! இப்படி நாலுவூடு கட்டிட்டீங்க!!!!

1. அவர் இல்லாத நேரமாப் பார்த்துப்போய் புத்தகத்தை ரிட்டர்ன் பண்ணனும்.

மாட்டிக்கிட்டோமுன்னு வையுங்க..... நான் யாருன்னு தெரியுதா? நம்ம ப்ளொகைப் போய்ப் பாருங்க. உங்க கேள்விகளுக்குப் பதில் அங்கே இருக்குன்னு சொல்லிட்டோமுன்னா, நமக்கும் ஒரு வாசகர்(!!) கிடைப்பார்.

2. நோ காசா? அப்ப அவர்கிட்டே ஏற்கெனவே இருக்கும் புத்தகம் டொனேஷன் லிஸ்டில் இருந்தால் அது உங்களுக்கு.

3. அதெப்டிங்க விடமுடியும்? ஒண்டிக்கொண்டி நிக்கத்தாவலை? நாமெல்லாம் யாரு? 'மற'த்தமிழர்களாச்சே!!!

4. துளசி மாலையா? அச்சச்சோ.... கண்ணு சரியாத் தெரியலைப்பா. ஒரு கருப்பு பேண்ட்ஸ் & ஷர்ட் போட்டுருக்கக்கூடாது? கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுருப்பேன்லெ!!!

said...

வாங்க எறும்பு.

ரெண்டு முறைதாங்க போனேன். இதுதான் கடைசியும்கூட.

முதல்முறை கோபாலைக் கூட்டிட்டுப்போனேன். எந்த மாதிரி 'ஜாய்ண்ட்'லே இருக்கேன்னு உதார்விட:-)

நேத்துப்போனது வல்லியம்மாவை ஒரு புத்தகம் வாங்க வைக்க.

நம்ம புத்தகம் ஒன்னு வெளிவந்துருக்கு. வாங்கும் ஆளையும் கையோடு கொண்டுபோனா ஒரு விற்பனைக்கு கேரண்டி:-)

நம்ம அதிருஷ்டம் பாருங்க. வல்லியமா தப்பிச்சுக்கிட்டாங்க. புத்தகம் கொண்டுவர தாமதமா ஆயிருச்சு.

சொக்கா இது நமக்கில்லை. எம்பது ரூபா போச்சேன்னு மனசுக்குள்ளெ புலம்பிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்.

இன்றைக்குக் காலையில் பதிப்பாளர் வீட்டுக்கே சில புத்தகங்களை அனுப்பி வச்சார்.

நீங்க திருவிழாவுக்குப் போனால் சந்தியாவைக் கொஞ்சம் எட்டிப்பாருங்க.

said...

வாங்க ரிஷபன்.

சிரிச்சதுக்கு(ம்) நன்றிங்க.

said...

டீச்சர் நீங்க சொல்ற ஐடியா எனக்கு வொர்க்ஆவுட் ஆகுமா
தெரியல!! ஆனா கண்டிப்பா விஜய்க்கு வொர்க்ஆவுட் ஆகும்...

said...

நல்லா கலகலப்பா எழுதி அசத்தி இருக்கீங்க. சூப்பர். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

வாங்க ஜெட்லி.

எம் ஜி ஆருக்கே ஒர்க்கவுட் ஆன டெக்னிக் ஆச்சே:-))))

உங்களுக்கும் ஆகும். நோ ஒர்ரீஸ்...

said...

வாங்க சித்ரா.

வருகைக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

அடிக்கடி வந்து போகணும்.

said...

மேடம் நீங்க நிரல் எதுவும் இணைக்க தேவையில்லை.. அது உங்க எக்ஸ்ட்ரா வசதிக்கு தான்..

நீங்க அதில் ஒரு பயனர் கணக்கு துவங்கி உங்க தொடுப்பை இணைத்தால் போதுமானது.. ரொம்ப எளிது.

சிங்கப்பூர் ல எங்கே போனாலும் வழிகாட்டி இருப்பது போல நீங்க இணைக்கும் போது என்னென்ன செய்யணும் என்று அதிலே இருக்கும், குழம்ப வேண்டிய அவசியமே இல்லை.

நீங்க செய்கிற சமையலை விட எளிது ;-) நம்புங்க

said...

//மாட்டிக்கிட்டோமுன்னு வையுங்க..... நான் யாருன்னு தெரியுதா? நம்ம ப்ளொகைப் போய்ப் பாருங்க. உங்க கேள்விகளுக்குப் பதில் அங்கே இருக்குன்னு சொல்லிட்டோமுன்னா, நமக்கும் ஒரு வாசகர்(!!) கிடைப்பார்.//

ப்ளாக் பக்கம் வந்தாருன்னா, அப்புறம் உள்ளேயே விடமாட்டேன்னு சொல்லிடப்போறாரு :))

said...

கிரி,

//நீங்க செய்கிற சமையலை விட எளிது ;-) நம்புங்க//

நம்பிட்டேன் நம்பிட்டேன்:-)))))

செஞ்சுருவோம்!!!

said...

சங்கர்,

அதுக்கெல்லாம் வழி இருக்கு. புடவை கட்டிக்கிட்டு முகத்துலே மச்சம் வச்சுக்குவேன். மச்சம்கூட எதுக்கு? புடவையே போதும்.

ஆள் மாறாட்டம்.....கண்டே பிடிக்க முடியாது:-)

said...

ஹ்ம்ம்... வர முடியல்லையேன்னு வருத்தப் பட்டுகிட்டு இருந்தேன். குறை முக்கால் வாசி தீர்ந்திடுச்சு. புத்தகங்கள் பத்தி இன்னம் கொஞ்சம் எழுதியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்....


http://kgjawarlal.wordpress.com

said...

வாங்க ஜவஹர்.

வாங்குனதே நாலைஞ்சு புத்தகங்கள்தான். படிச்சுட்டு நாலுவரி எழுதணும்.

புத்தகவிழாவுலே என்னென்ன வந்துருக்குன்னு வேடிக்கை பார்ப்பதும், எழுத்தாளர்களைச் சந்திப்பதும்தான் முக்கியம். புத்தகம் வாங்குவதைத் தனியா வச்சுக்கலாம்.

பத்து சதம் கழிவைப் பார்த்தால் மூட்டை தூக்கிக்கிட்டு நடக்க முடியாது(-: