Monday, January 18, 2010

அனுமாரே...இதென்ன அக்கிரமம்? (குஜராத் பயணத்தொடர் 2)

உலகமெல்லாம் சுவாமிநாராயணன் கோவில்கள் கட்டிக்கிட்டே போறாங்க பார்த்தீங்களா? இந்தக் கோவில்களுக்கெல்லாம் ஆதிக் கோவிலாக இருக்கும் கோவிலுக்குப் போனோம். காலுபூர் என்ற இடத்தில் இருக்கு. பெரிய அழகான தோரணவாயிலைக் கடந்து உள்ளே போனால் முற்றத்தில் புறாக்கூட்டங்கள் நிச்சிந்தையா தானியங்களை ஸ்வாஹா செஞ்சுக்கிட்டு இருக்குதுகள்.

அங்கே இருக்கும் ஒரு அழகான அலங்காரமண்டபத்தில் ஸ்வாமியின் திருவடிகள் பதிச்சுருக்கு. நல்ல பெரிய வளாகம். வடக்குப் பார்த்தமாதிரி மூலவர்கள். நாம் வந்த தோரணவாயில் மேற்கில் இருக்கு. வடக்குவாசல் வழியாக நாம் உள்ளே போனோம். அந்தப் பெரிய ஹாலில் நடுவில் ஒரு தடுப்பு. ரெண்டு பகுதியா நீளவாட்டில் கிடக்கு. தடுப்புக்கு இந்தப் பக்கம் சில பெண்கள் கோவிலில் மூலவரை நோக்கியபடி உட்கார்ந்துருந்தாங்க. தடுப்புக்கு அந்தப் பக்கம் சில ஆண்கள் மூலவர்களை அருகிலே போய்ச் சேவிச்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தடுப்புக்கு அந்தப் பக்கம்போய் அங்கே இருக்கும் அஞ்சு சந்நிதிகளை ஒவ்வொன்னாகப் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்போதான் 'பெண்கள்' தடுப்புக்கு அந்தப் பக்கம் இருக்கணுமுன்னு ஓசைப்படாம ஒருத்தர் வந்து ஓதிட்டுப்போனார். அச்சச்சோ.......
மேற்குவாசல் வழியா வெளியே வந்தால் அங்கே ரெண்டு புறமும் பிள்ளையாரும் ஆஞ்சநேயருமா இருக்காங்க. கிட்டேப் போய்ப் பார்த்தால் என்னடா இது அக்கிரமம்ன்னு ஆகிப்போச்சு. இதை நம்ம மக்கள்ஸ்க்குக் காட்டியே தீரணுமுன்னு, வளாகத்தில் இருந்த அலுவலகத்துக்குப்போய், படம் எடுக்க அனுமதி வாங்கினேன்.


புள்ளையார் அவர்பாட்டுக்குத் தொப்பியும் பட்டுச் சட்டையுமா ஒடைஞ்ச ரெண்டு தந்தங்களும், சுருட்டிய தும்பிக்கையுமா அழகான நகங்களோடு நிக்கிறார். ரெண்டு பக்கமும் எலிகள்.

இந்த அனுமார் மட்டும் இடதுகாலைத் தூக்கி ஒரு பெண்ணின் முதுகுலே வச்சு அழுத்தறார். அந்தம்மா ஏதோ அரக்கின்னாலும்கூட வதம் செய்யும் கதைன்னு நினைச்சுக்கலாம். பார்த்தா அப்படி இல்லை. நல்ல பெண்மணியாத் தெரிஞ்சாங்க. தலையில் கொம்பு இல்லை!!!! இப்படிச் சொல்றேனே தவிர அரக்கி மட்டும் பெண் இல்லையா? சரியான ஆணாதிக்க அனுமாரா இருக்காரே? ஒருவேளை இந்த அம்மாவுக்கு முதுகுலே வாய்வுப்பிடிப்புன்னு வாயுபுத்திரன் பாதத்தால் நீவி விடுறாரோ? என்னதான் இப்படியெல்லாம் யோசிச்சாலும் மனசுக்குச் சமாதானமே ஆகலையே(-: இவரோட தோழர்கள் எல்லாம் வகைவகையாப் பழங்களை உள்ளே தள்ளிக்கிட்டு இருக்காங்க. தென்னிந்தியாவுலே மட்டும் வாலைச்சுருட்டிக்கிட்டு இருப்பதுதான் உத்தமம்ன்னு தெரிஞ்சுவச்சுருக்கு பாருங்க! .


1822 வது வருசம் கட்ட ஆரம்பிச்ச கோவில். அப்போ நம்ம நாட்டில் ப்ரிட்டிஷ்காரர்கள் ஆட்சி. கோவில் கட்ட அவுங்களே இடத்தைக் கொடுத்துருக்காங்க. அதுவும் தாமிரப்பத்திரத்தில் சூர்யசந்திரர்கள் உள்ளவரை இந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமுன்னு எழுதி இருந்தாங்களாம். ராஜஸ்தானில் இருந்து வந்துருக்கு கடவுளர்களின் சிலைகள். நடு செண்டர் சந்நிதியில் இருக்கும் நரநாராயணர்களின் சிலைகள் மட்டும் கருப்புப் பளிங்கில்.
(இந்த நரன் & நாராயணன் ஐடியா சூப்பர். தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள் மனிதனில் இருக்க மாட்டாரா? இதுதானே அஹம் ப்ரம்மாஸ்மி)
அவர்களுக்கு வலதில் குழல் ஊதும் கண்ணனும் ராதையும். (காலா ஆத்மி ஔர் கோரி அவுரத். தமிழ்ச்சினிமா சம்பிரதாயம் அங்கே இருந்துதான் ஆரம்பிச்சு இருக்கணும்) இடது பக்கம் சுவாமிநாராயண் சம்பிரதாயப்படிக் கோவில்கட்ட ஆரம்பிச்ச குருதேவர் படங்களும், அடுத்த சந்நிதியில் இன்னும் மூன்று சிலைகளுமா இருந்துச்சு. கண்ணன், பலராமன், சுபத்ராவோன்னு நினைச்சேன். யாரையாவது கேக்கலாமுன்னா...... யாரைக்கேக்க? (ஏற்கெனவே நான் அந்தப் பக்கம்போன கடுப்பில் இருக்காங்களோன்னு எனக்கு ஒரு தோணல்) கடைசியில் வலைவீசியதும் ஆப்ட்டது, தர்மமும் பக்தியும், குருதேவருமாம்.
இந்த ஸ்வாமிநாராயணன்களின் கோவில்களில் எனக்குப் பிடிக்காத ஒன்னு பெண்களை ரெண்டாம்தரப் பிரஜைகளா நடத்துவது. நியூஸியில் இருக்கும் நம்ம ரமண் (b)பையாவும் இதைத்தான் சொல்லிக்கிட்டு இருப்பார். சந்நியாசிகளுக்கு அருகில் பெண்களே போகக்கூடாதாம். மொத்தவேலையையும் மாங்குமாங்குன்னு செஞ்சு, விதவிதமான பிரசாதங்களை ஆக்கிவைப்பது பெண்கள். ஆனால் சத் சங்கக்கூட்டங்களில் கூட ஆண்கள் வரிசைக்குக் கொஞ்சம் இடம்விட்டு, பின்னாலேதான் பெண்கள் இருக்கணும். இந்த ஆண்கள் மட்டும் ஆகாசத்துலே இருந்தா குதிச்சாங்க? பெண்கள் சுமந்து பெற்றவர்கள்தானே??


கோவிலின் அழகையும், ஜனங்களின் பக்தி சிரத்தையும் பார்த்து அதிசயிச்ச ஆங்கிலேய அரசு, கோவிலின் திறப்பு விழாவின்போது 101 முறை துப்பாக்கி வெடிச்சு (ஆகாயத்தை நோக்கித்தான்) கௌரவிச்சு இருக்கு!

வளாகத்தின் மூன்று பக்கங்களிலும் நாலுமாடிக் கட்டிடங்களில் வரிசை வரிசையாக அறைகள். சாமியார்கள் தங்குமிடமாம்.

கோவிலின் படங்களைத் தனி ஆல்பத்தில் போட்டுருக்கேன்.
கடைவீதிகளைக் கடந்து போகும்போது பட்டங்கள் திருவிழாவுக்காக கலர்கலரா நூல்கள் தயாரிச்சு முறுக்கேத்திச் சுத்துறதைப் பார்த்தேன். இந்தப் பட்டங்கள் எல்லாம் வெறும் காகிதப் பட்டங்கள். ஒருநாள் விழாதான். கொண்டாடுனமா, தூக்கிப் போட்டுட்டு வேலைவெட்டியைப் பார்க்கப்போனமான்னு.......... நம்ம மாநிலத்துப் பட்டங்களைப் பற்றிச் சொல்லணுமா? அதான் சுண்டல் விநியோகம்போல மாமணிகளா ஒலிக்குதே! போதாக்குறைக்கு அதை வென்றான், இதை மீட்டான், இன்னும் என்னத்தையோ கொன்றான்னு பட்டங்களுக்காப் பஞ்சம்? என்ன இருந்தாலும் நம்மை அடிச்சுக்க முடியாது இவுங்களால்:-)))))

அடுத்துப்போனது படிக்கிணறுகளைப் பார்க்க. ஒரு மண்டபம். அங்கே இருந்து ஒரு ஐநூறு மீட்டர் தூரத்துலே ஆழமா ஒரு கிணறு. இங்கே இருந்து அங்கே போகப் படிகள் அடுக்கடுக்காக் கட்டி வச்சுருக்காங்க. ஒவ்வொரு அடுக்கும் ஒரு மண்டபம். மெல்ல மெல்ல இறங்கிப்போய்க்கிட்டே இருக்கணும். போரடிக்காம இருக்க மண்டபம், தூண்கள், படிக்கட்டுகள்ன்னு ஒன்னுவிடாம கலை அழகோடு சிற்பங்கள் செதுக்கி வச்சுருக்காங்க. அம்மாந்தூரம் போய் தண்ணி கொண்டுவரணுமுன்னு மருமகள்களுக்காகவே திட்டம் போட்டுக் கட்டி வச்சுருப்பாங்க போல! தினம் தலையில் ரெண்டு குடத்தைச் சுமந்துக்கிட்டு இப்படி இறங்கி ஏறுனா ஃபிஃப்டி கேஜி தாஜ்மகாலாவா இருப்பாங்க. ட்வெண்ட்டிஃபைவ் கேஜி அநோரக்ஸியா கேஸ்களாத்தான் இருந்துருக்கச் சான்ஸ்(-: அழகான அதிசயக் கிணறுன்னாலும் அந்தக் காலத்துப் பொண்களை நினைச்சால் ஐயோன்னுதான் இருக்கு.
ஒரு ராணி இருந்தாங்க. அவங்க மகன், வேற நாட்டுக்குப் போனப்ப அங்கே இருந்து ஒரு இளம்பெண்ணைக் கட்டிக்கிட்டு வந்துட்டான். அந்தப் பொண்ணை என்னவோ...மகாராணிக்குப் பிடிக்காமப்போச்சு. இளவரசனுடைய மனம் நோகாமல் எப்படிடா இவளை இந்த நாட்டிலே இருந்து ஓட்டலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சாங்க. கடைசியில் இந்தக் கிணறு ஐடியா தோணுச்சு. அரண்மனை அதிகாரிகள், வேலைக்காரர்களைக் கொண்டு கிணறு வெட்டி முடிச்சாங்க. புதுமருமகளிடம், ஆரம்பத்துலேயே ரொம்ப இனிமையாப் பேசி குலவழக்கப்படி பூஜை எல்லாம் ஆனதும்தான் நீங்க ரெண்டுபேரும் மணவாழ்வை ஆரம்பிக்கணுமுன்னு நைச்சியமாச் சொல்லித் தனித்தனியா பிரிச்சுவச்சுருந்தாங்க. இங்கேயோ கிணறு ரெடி ஆகிக்கிட்டு இருக்கு. நல்ல நாளும் வந்ததுன்னு குடத்தை மருமகளிடம் கொடுத்துக் கிணற்றில் இருந்து தினம் மூணு வேளையும் தானே போய்த் தண்ணீர் கொண்டுவந்து அரண்மனை முற்றத்தில் இருக்கும் கோவில் மூலவருக்கு அபிஷேகம் செய்யணும். ஒரு மண்டலம் இந்த மாதிரி பூஜை செஞ்சுமுடிச்சதும் கடவுள் அருள் பூரணமா உங்களுக்குக் கிடைக்கும். இனிமையா உங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கலாமுன்னு சொல்லி குடத்தைக் கையில் கொடுத்தாங்க.
இந்த சூதுவாது எல்லாம் அறியாத இளமங்கை கிணத்துக்குப் போகுது. முதல் நாள் அவ்வளவாக் கஷ்டம் தெரியலை. எல்லாம் புது ஜோர். அப்புறம் அப்புறம்................. மூணாம்நாளே கைகால் எல்லாம் முறுக்கிப் பிழியும் வலி. ஒரு எட்டு வைக்கிறதே உம்பாடு என் பாடுன்னு கிடக்கு. இப்படி நாப்பதுநாள் நடக்குற வேலையா? போதுண்டா சாமி, உங்க குலவழக்கமும் நீங்களும். நான் எங்க நாட்டுக்குப் போறேன்னு ஓலை எழுதிவச்சுட்டு ஓசைப்படாம, தன்னுடன் கூடவே வந்த தன்னுடைய நாட்டுத் தோழிகள், வீரர்கள் துணையோடு 'எஸ்' ஆகிருச்சு.

ராணியம்மாவும் 'என்மேல் தப்பு ஏதுமில்லே. நீ கொண்டுவந்த பெண்தான் இங்கே இடம் பிடிக்கலைன்னு போயிட்டாள்'ன்னு சொல்லி மகனுக்கு இந்த சூழ்ச்சி தெரியாமல் தப்பிச்சுக்கிட்டாங்க. அதுலே இருந்து வேண்டாத மருமகள்களை ஒழிச்சுக்கட்ட இந்தக் கிணறு பயன்பட்டுச்சு.

ஏன் இப்படி ஒரு கிணறு கட்டி இருக்காங்க''ன்னு கேட்ட கோபாலுக்கு, இந்தக் கதையைச்சொன்னதும்...பாவம். நெசமுன்னே நம்பிட்டார்:-)
போகட்டும், வளைச்சுவளைச்சு எடுத்தக் கிணத்துப் படங்களை இங்கே பார்த்துக்குங்க.
வீட்டுவாசல்களில் கயித்துக்கட்டில்கள் போட்டு உல்லாசமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பதைப் பார்த்ததும் பேசாம இந்த 'நாகரீக உலகத்தையெல்லாம் விட்டுட்டு(???) இங்கேயே 'குடி' வந்துறலாமான்னு இருந்ததென்னவோ நிஜம்.

பார்க்கிங் கிடைப்பது ரொம்பவே கஷ்டம். வண்டியைவிட்டு இறங்காம வேடிக்கைமட்டும் பார்க்கிறதா இருந்தால் பழைய நகரத்தின் சந்துபொந்துகளில் கூட்டிட்டுப் போறேன்னார் மோஷின். ஆஹா.....வெல்லம் தின்னக் கசக்குதா? ச்சலோ......

பழைய நகரத்தின் பனிரெண்டு வாசல்களில் ஒரு ஏழெட்டு வழியாப் போனோம். கடைவீதிகள் கலகலன்னு கிடக்கு. ஒரு பொருளுக்கு ஒரு வீதியோ? பாத்திரக்கடைகளா ஒன்னு, துணிமணிகளா ஒன்னு, வீட்டுச் சாமான்களா ஒன்னு, எண்ணையா ஒன்னு கூடவே வெல்லமா ஒன்னு, நகையா ஒன்னு நட்டா ஒன்னு:-) அடாடாடா.......என்னைவிட கோபாலுக்குத்தான் கூடுதல் மகிழ்ச்சி. நாந்தான் வண்டியைவிட்டே இறங்கமாட்டேன்னு 'வாக்கு' கொடுத்துட்டேனே(-:


பயணம் தொடரும்..............:-)))))

17 comments:

Anonymous said...

இந்த அனுமார் மோசமானவரா இருக்கார்னு பாத்தா நீங்க ஷாப்பிங் பண்ண கார் விட்டு இறங்கமாட்டேன் சொல்லிட்டீங்களே , இதென்ன அக்கிரமம் :)

said...

அன்பின் துளசி

அட்டகாசம் - நக்கல் - நகைச்சுவை - அனுமாரக் கோச்சுக்கறது - பிள்ளையாரப் பாவம்ன்றது - தடுப்பு - ஆண் - பெண் - ஆணாதிக்கத்துக்கு எதிரா கொடி பிடிக்கறது ( பாவம் கோபால் ) - படமா எடுத்துத்தள்ளறது - கார விட்டு எறங்காம கோபாலுக்கு அட்லீஸ்ட் ஒரு சந்தோஷத்தக் கொடுத்தது - கிணத்துக்கு ஒரு கத சொல்லி பாவம் கோபால் - அவர நம்ப வச்சி - அய்யோ அய்யோ - அட்டகாசம் ப்போங்க

தூள் கெளப்பீட்டிங்க - நான் எஸ் ஆயிடரேன்

நல்வாழ்த்துகள் துளசி

said...

கோபால நல்லா வேலை வாங்கி இருக்கீங்க - போட்டோகிராபரா - போனாப் போவுதுன்னு அவரயும் ஒரே ஒரு படம் எடுத்துறீக்கங்க - இதுல ஆணாதிக்கம்னு பேச்சு வேற

said...

அதானே என்ன அக்கிரமம் இது..சரி அதுக்கான கதை கிடைக்கலயா..கிணறு கதையெல்லாம் விடறீங்க..:)

காரில் இறங்காம கார் விண்டோ ஷாப்பிங்கா ஊரு உலகத்துல இல்லாத அக்கிரமமா சே அதிசயமா இருக்கே.. :)

said...

அப்பக் கிணத்துக் கதை நிஜமில்லையா:)
ஆல்பத்தை அப்புறம் பார்க்கறேன்.
கயித்துக் கட்டில் குத்துமே துளசி!! அதில எப்படி உட்கார்ந்து பேசறது:))
இத்தனாம் கடைகளைப் பார்த்துட்டு ஒண்ணும் வாங்காம வந்திட்டீங்களா. !!!!!!!!!!!!!!

அனுமான் சாமி,லங்கினியை மட்டும்தான் கையாலத் தட்டினார்.
இது என்ன கதையோ தெரியலையே. ஏன் கேக்காம விட்டீங்க. அநியாயமா இருக்கே!

said...

வாங்க சின்ன அம்மிணி.

வந்து இறங்குன முதல்நாளே ஷாப்பிங் ஆரம்பிக்கலாமா? அதான் இன்னும் அஞ்சாறு கிடக்கே:-)

said...

வாங்க சீனா.

கோபாலுக்கு அப்பப்போ சின்னதா இந்த மாதிரி சந்தோஷத்தைக் கொடுக்கறேன்னு வாக்குக் கொடுத்துருக்கேன் என் மாமியாருக்கு.

கட்டியவரைக் கண்கலங்காம வச்சுக்கணுமா இல்லையா?:-)

said...

வாங்க கயலு.

இதெல்லாம் ச்சும்மா ஒரு முன்னோட்டம்தான்.

நம்ம ஷாப்பிங், ஊரு உலகத்தில் வேற இடமாக்கும்:-))))

said...

வாங்க வல்லி.

யாருகிட்டே போய்க் கதையைக் கேக்க?

கீதா வந்து எதாச்சும் சொல்லாமலா போயிறப்போறாங்க?

உங்களுக்காக ஒரு விரிப்பைக் கயித்துக்கட்டிலுக்கு எடுத்து வச்சுக்கறென்.

said...

"இந்த அனுமார் மட்டும் இடதுகாலைத் தூக்கி ஒரு பெண்ணின் முதுகுலே வச்சு அழுத்தறார்". இதுக்கும் நிஜமாகவே கதை இருக்குமா ?

பதிவு விபரங்களுடன் சுவாரஸ்யம்.

said...

படங்களும் கதைகளும் தூள் ;)

said...

போட்டோஸ் எல்லாம் பாத்தாச்சு!! பதிவு அருமை.. லைன் பை லைன் கமென்ட் சொல்லணும்... ஆனாலும் சைட் ஸ்டோரி அருமை.....

மீ ( டு கோபால் சார்) : சார் நீங்க ரொம்ப நல்லவரு சார் ??

கோபால் சார்: ஏம்மா அப்படி சொல்லறே

மீ: ரீச்சர் என்ன கதை சொன்னாலும் நம்பறீங்களே அதுக்குத்தான் :)))

said...

வாங்க மாதேவி.

நானும் 'கதை'க்காகக் காத்துருக்கேன்.

குஜராத் தோழிகளிடம் கேட்டுச் சொல்வேன்.

said...

வாங்க கோபி.

அங்கே போயும் உங்களை நினைச்சுக்க வேண்டியதாப் போச்சு. அடுத்தபகுதியைப் பாருங்க:-)

said...

வாங்க இலா.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை நல்லாவே புரிஞ்சுவச்சுருக்கார்:-))))

said...

ந‌ம்ம‌ ஹ‌னுமாரா இப்ப‌டி செய்திருப்பார்! அத‌ற்கும் ஏதாவ‌து ஒரு க‌தை இருக்கும் உங்க‌ளுக்கு தெரியா இருக்கும். :‍))

said...

வாங்க குமார்.

இந்தப் பயணத்தில் 'அந்தக்கதை' கிடைக்கலை. இதுக்காகவே இன்னொரு பயணம் போகணும். இன்னும் பலஊர்கள் அந்தப் பக்கம் பாக்கி இருக்கு:-))))