Thursday, January 28, 2010

அரசனைப் பார்த்தக் கண்ணுக்கு.............. (குஜராத் பயணத்தொடர் 9)

நாம் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து இடப்பக்கம் ரெண்டு கட்டிடம் தாண்டி, அதுக்கு நேரா இருக்கும் குறுக்குத் தெருவில் நடையைக் கட்டுனால் ஒரு ரெண்டு நிமிசத்துலே வலப்பக்கம் கோவில். திரும்பாம நேராப்போனால் கோமதி ஆற்றங்கரை. என்னென்னவோ இடிபாடுகள், மாடுகள், மனிதர்கள் ஜேஜே.. போகும் வழியில் அரைநிமிச நடையில் டாக்டர் வினூ பாய்!. வீட்டுவாசலில் க்ளினிக். வண்டியில் கடுவா கர்கோடா, ஜங்லி சுரன், டூடியா, இம்கன், சட்டாவர், ரகத் ராய்டான்னு உலர்ந்த வேர்கள் கிழங்குகள்ன்னு வச்சுருக்கார். இதையே பொடிச்சும் தனித்தனி டப்பாக்களில் இருக்கு. சகலவியாதிகளையும் போக்கும் நாட்டு/காட்டு மருந்து. முக்கியமா நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, பலஹீனம் இதுக்கெல்லாம் கை கண்டது. முன்னோர்கள் சொல்லித்தந்த மருத்துவம்.
திண்ணைகள் வச்ச பழைய காலத்து வீடுகள், ரொம்ப சுவாதீனமா நம்மை உரசிப்போகும் மாடுகள். லேசா ஏற்றம் உள்ள தெரு. கோவில் முன்னால் புதுசா தரைபோட வெட்டிவச்சுருக்காங்க. சங்கரமடம், சாரதாபீடம்னு அலங்கார தோரணவாசல். அடுத்து வருவது துவாரகை அரசனின் வாசல்.

கேமெரா, செல்போன் உள்ளே கொண்டுபோக அனுமதி இல்லை. ரெண்டு ரூபாய் ஒரு ஐட்டத்துக்குன்னு கட்டினால் பாதுகாப்பா வச்சுக்கிட்டு டோக்கன் தர்றாங்க. கீதாவின் பதிவில் இதைப்பற்றி ஏற்கெனவே படிச்சுவச்சுக்கிட்டதால் தைரியமாக் கொடுத்துட்டு வாசலுக்குப் போனோம்.
காலணிகளை விட்டுவைக்கன்னு எந்த ஏற்பாடும் இல்லை. அப்படியே வெளியே விட்டுட்டுப்போகணும். காணாமப்போச்சுன்னா? கோவில் வாசலில் செருப்புத் தொலைஞ்சால் ரொம்பவே நல்லதாம் (கோயிலைச் சுத்திச் செருப்புக்கடைகள் இருப்பதின் மர்மம் இதுதானோ?)

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி வரிசை. தொட்டுத் தடவி தழுவல் எல்லாம் ஆச்சு. கைப்பையைத் திறந்து காமிக்கணுமாம். வாசல்கதவைக்கடந்து உள்ளே காலடி வச்சதும்.....மனசுக்குள்ளே இனம்புரியாம ஒரு சிலிர்ப்பு. வந்தே வந்துட்டோம் கடைசியிலே!
இடதுபக்கமும் வலது பக்கமும் சின்னதா சில சந்நிதிகள். சிவன், சத்தியநாராயணன், கொல்வாபகத், சிவன். பக்கத்துக்கு ரெண்டு. ஒரு 'பண்டிட்' வந்து கோவிலைச் சுத்திக்காமிக்கிறேன்னு சொன்னார். ஏற்கெனவே நம்மை ஹோட்டேலில் வந்து கண்டுக்கிட்ட பையர் வருவாருன்னு சொன்னோம். யாரு, என்ன பேருன்னு கேட்டதுக்கு, நாம் 'அருண்'. அது நம்ம தம்பிதான். வந்துருவான்னு சொல்லிப்போனார்.

கோவில் உள் முற்றம் கண் எதிரில். அதே முற்றத்தில் நமக்கு இடதுபுறம் காயத்ரி, ப்ரத்யும்னன் & அநிருத்தன் (கிருஷ்ணனின் மகன் & பேரன்) ரெண்டும் வலது புறம் அம்பிகா, புருஷோத்தமன், குரு தத்தாத்ரி ன்னு மூணுமா அஞ்சு சந்நிதிகள்.

தரிசனம் பண்ண ஓடிவாங்கன்னு குரல் கேட்டதும் மூலவரை நோக்கி ஒரு பாய்ச்சல். ஆண் பெண் வரிசைகள் தடுப்புடன் பக்கம்பக்கம். விசிறித் தலைப்பாகையுடன், ரோஜா வண்ண உடுப்பில் சின்னவனா நிக்கிறான். ரெண்டரை அடி இருந்தாலே அதிகம். (உண்மை உசரம் வெறும் ரெண்டேகால் அடிதானாம்!)நல்லவேளையா இடுப்புயர மேடையில் நிற்பதால் எட்டிக்குதித்தாவது சேவிக்க முடிகிறது, இப்போ கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆரத்தி சமயம் மீண்டும் வந்து சேவிக்கலாமுன்னு கோவிலை இடம்வந்தோம். கிருஷ்ணனுக்கு நேர் எதிரா தேவகிக்கு சந்நிதி. கருவறையில் ஒரு அஞ்சடுக்கு கொலு வச்சுருக்காங்க. மாடுகள், பால் கேன்கள் , மரம், பழம்ன்னு சில பொம்மைகள். ஜிலுஜிலுன்னு சம்க்கிகள் மின்னும் வட இந்தியப்புடவையில் தேவகி. பக்கத்துலே ஒரு சின்னக் கட்டில்.

அடுத்து தனிச்சு நிக்கும் சந்நிதியில் ராதையும் கண்ணனும். கோரி ஔர் காலா. வளாகம் முழுசும் தனித்தனியாச் சநிதிகள். மாதவனுக்கு ஒன்னு, பலராமனுக்கு ஒன்னு. இதுமட்டும் நாலு படி ஏறிப்போகணும். இங்கே கருடாழ்வாருக்கும் புள்ளையாருக்கும் தனித்தனிச் சந்நிதிகள். கூடவே லக்ஷ்மி. கருடனுக்கு நிலக்கடலை நைவேத்தியம் போல. அவரே உரிச்சுத் தின்னுக்கணும். அங்கே இருந்த கண்ணாடி ஷெல்ஃபுலே சின்னக் கட்டில்கள், குதிரை , யானைன்னு இருக்கு. கொஞ்சம் அடுக்கி அழகா டிஸ்ப்ளே செஞ்சுருக்கக்கூடாதோ?

வளாகத்தில் நடக்கும்போது அங்கங்கே பண்டிட்கள் வந்து வளைக்கப் பார்க்கிறாங்க. ஒரு ஆள் வந்து கேட்கிறார், 'ஆப் ப்ராமின் ஹை யா சண்டாள்? ' அடச் சண்டாளா? சாமி முன்னாலே சாதியா கேக்கறே? 'முதல்லே நீ யாருன்னு சொல்லு'ன்னேன். 'நான் உ.பி.ப்ராமின்'. 'ஓ அப்ப நான் தமிழ்நாடு.
.அது என்ன கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாம ஜாதி கேக்கறது?

கிருஷ்ணனின் சந்நிதிக்கு நேராப் பின்பக்கம் துர்வாச முனிவருக்கு. அங்கே ஒரு பள்ளத்தில் சிவலிங்கம். இதையும் கடந்தால் சாராதாபீட சங்கர மண்டபம். இடதுபக்கம் வீடுபோல ஒரு அமைப்பு. நாலைஞ்சு படிஏறி உள்ளே போனால் நடுவில் முற்றம் வச்சு சுத்திவர வெராண்டா. வெராண்டாவில் நடக்கும்போது நமக்கு இடப்புறமாக குட்டியா அறைகள். ஒவ்வொன்னிலும் ஒரு சாமி. ஏதோ அந்தப்புரத்துக்குள்ளே வந்துட்டோமா என்ன? ஒரு பக்கம் ஜாம்பூவதி, ராதா,(பாவம், இந்த ராதா. குஜராத்தியில் எழுதிவச்சுருந்ததை, பத்ரகாளின்னு படிச்சார் கோபால்) லக்ஷ்மிநாராயண் இப்படி மூணு. நேர்ச்சுவரில் குட்டி மாடத்தில் சஞ்சீவிமலையுடன் ஹனுமன். இன்னொரு பக்கம் கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி, சத்யபாமா, சரஸ்வதி. எல்லா அறைகளிலும் சிலைகளுக்கு அருகில் சின்னதா கட்டில். டால்ஸ் ஹவுஸில் இருக்கும் உணர்வுதான் வருது. திறந்த முற்றத்தின் நடுவில் யாருக்கும் எட்டாத உயரத்தில் ஆளுயர மாடத்தில் தளதளன்னு துளசி. அப்டிப்போடு!!! வெராந்தாவின் ஒரு மூலையில் பண்டிட் தீர்த்தம் தர்றார். வெளியிடங்களில் கிடைக்கும் தீர்த்தங்களை வாங்கித் தலையில் மட்டும் தடவிக்கொள்ளூம் வழக்கத்தின்படிச் செஞ்சால்..... அச்சச்சோ..... சக்கரையும் பாலும் கலந்த பிசுபிசு. இங்கே இருக்கும் ஒருவாசல் மூலம் சங்கரமட ஹாலுக்கு வந்துறலாம். சுவரில் நரசிம்ம அவதாரம், சங்கரர் இமயமலையில் தவம் செய்தது, புலி அடிக்க வந்ததுன்னு சில சுவர் ஓவியங்கள்..

சங்கரமடம் ஹாலில் பெரிய அளவில் ஆதிசங்கரர் , மற்றுமுள்ள பீடாதிபதிகளின் படங்கள். மேற்கூரையில் சிவனின் வெவ்வேறு திருக்கோலங்களின் பதினாறு செதுக்குச் சிற்பங்கள். ஒரு மூலையில் மகாபாரத உபந்நியாசம். நாலைஞ்சு பேர் உக்கார்ந்து கேக்கறாங்க. மச்சு மாதிரி ஒரு அமைப்பு. படி ஏறிப்போனால் கொலுவச்சுருப்பதைப்போல் படிக்கட்டுகளில் அடுக்கி வச்சுருக்கும் சிவலிங்க வகையறாக்கள். எல்லா இடத்திலும் தட்சிணை வாங்கும் தட்டோடு ஒரு பண்டிட். ஜனங்களும் பத்து ரூபாய் போட்டுப் பாவத்தைக் கழிச்சுக்கிட்டே போறாங்க. சந்திரமௌலீஸ்வரர் கொலு.

அப்படியே துர்வாஸரைக் கடந்து இடம்வந்து ப்ரத்யும்னன் சந்நிதிக்கு வந்தால் ஜனம் அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருக்கு. கூடவே நாமும். ஆஹா..... கொடி மாத்துறாங்க. வெள்ளைக்கொடியில் நடுவில் சிகப்பு நிற சந்திரனும் சூரியனும். கொடியின் ஓரங்களில் சுத்திவரச் சிகப்புலே முக்கோண வடிவில் ஒரு டிசைன். ( அட! சாமி இப்படிக் குறிப்பால் உணர்த்தியும்கூட மக்கள்ஸ் கேக்கலையேப்பா!)
கொடியை ஏற்ற கோபுரத்தின் உச்சியிலே ரெண்டு பேர் போயிருக்காங்க. எட்டுமீட்டர் உயரக் கொடிக்கம்பம். அதுலே ஏறி நிக்க பலகை போல ஒரு அமைப்பு. அதுலே ஏறிநிற்கும் நபரின் கனத்தை அனுசரிச்சுப் பலகை இப்படியும் அப்படியுமா ஆடுது. இந்தக் கோபுரத்தின் உயரம் 170 அடி. அஞ்சடுக்கு மாளிகையா முழுக்கோவிலும் இருந்தாலும் கோபுரப்பகுதிமட்டும் இன்னும் ரெண்டடுக்கு மாடிகள் சேர்த்து ஏழும் அஞ்சுமாப் பரந்து, உயர்ந்து கிடக்கு. ஒவ்வொருமுறை பலகை ஆடும்போதும் 'குபுக் குபுக்'ன்னு நெஞ்சு அடைக்குது எனக்கு. என்ன ஒரு பாதுகாப்பு இல்லாத அமைப்பு!

இந்தக் கொடியின் நீளம் 52 கஜம். இதுக்கும் ஏதாவது கணக்கு இருக்குமே! இருக்கா? இருக்கு:-) யாதவர்கள் மொத்தம் 56 பிரிவுகளா இருந்தாங்களாம். இதுலே நாலு பிரிவு அரசர்கள். கிருஷ்ணன், பலராமன், ப்ரத்யும்னன், அநிருத்தன், இப்படி சதுர்வ்யூகம். இவுங்களுக்குட்பட்ட ஆட்சியில் (இந்த நால்வரைத்தவித்து) மீதி உள்ள 52 குழுக்களை நினைவுபடுத்த (ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கஜம் என்ற கணக்கில்) 52 கஜம் நீளமுள்ள கொடியாம். கொடியின் அகலம் 6.5 மீட்டர். செவ்வகமா இல்லாம குறுக்குவெட்டிய முக்கோணம் போல ஒரு கொடி. என்ன அளவோ? கஜம், மீட்டருன்னு குழப்பிவச்சுருக்கு கோவில் பற்றிய விவரம் அடங்குன புத்தகத்தில்.
(ஏழேகால் கஜம் அகலம், 52 கஜம் நீளம்ன்னு வச்சுக்குங்க) கொடியை ஏத்திட்டால் அது 20 யோஜனை தூரத்துக்குத் தெரியுமாம்! (யாராவது ஒரு யோஜனை எவ்வளவு தூரமுன்னு யோசனை செய்யுங்கப்பா)

வெள்ளை, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, சிகப்பு, கருநீலம், ரோஜா வண்ணம், வண்ணங்களில் தனித்தனியா பல கொடிகள் வச்சுருக்காங்களாம். இது இல்லாம மஞ்சள், காப்பிநிறம் ஆரஞ்சுன்னு மூணு நிறங்களை அஞ்சு பட்டையாச் சேர்த்துவச்சும் ஒரு கொடி இருக்கு. நாம் கொடி ஏத்தறோமுன்னு வேண்டிக்கிட்டு அதுக்குண்டான காசை கோவிலில் இருக்கும் கூக்ளி அந்தணர்கள் சங்கத்தில் அடைச்சால் கொடி ஏற்றி நம்ம பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பாங்களாம். மொத்தக் கோவிலுமே இந்த கூக்ளி அந்தணர்கள் கைப்பிடியில் கிடக்கு. நிர்வாகம் முழுக்க இவுங்கதான். அந்தக் காலத்துலே இப்ப்டி நேர்ந்துக்கிட்டவங்க கொடி ஏற்றி முடிச்சதும் அந்த அந்தணர்கள் சமூகம் மொத்ததுக்கும் விருந்து வைக்கணுமாம். காலப்போக்கில் இது காசா மாறி இப்போ ஆளுக்கு 2 ரூ என்ற கணக்காம். அங்கே எத்தனை ஆயிரம் அந்தணர்கள் இருக்காங்கன்றது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

கோவில் சார்பில் ஒரு நாளைக்கு காலை, நண்பகல் மாலைன்னு மூணுமுறை கொடிகளை நிறம் மாற்றிமாற்றி ஏத்தறாங்க. இதுலே ஒன்னுதான் நாம் இங்கே பார்த்தது. இளமஞ்சள் கொடியை மாற்றி இப்போ வெண்ணிறமா இருக்கு. நடுவில் இருக்கும் சந்திர சூரியர்கள் வம்சாவழியைச் சொல்லுதாம்.

கொடியை ஏற்றி உச்சிக்குக் கொண்டுபோய் சுருளைப் பிரித்ததும் காற்றில் அது படபடத்து வீசிப் பறக்குது. கற்பூர ஆரத்தி காமிச்சுட்டு, கீழே குனிஞ்சு பார்த்து எல்லோரும் விலகி நில்லுங்கன்னு கூப்பாடு போட்டுட்டு, அங்கே இருந்து ஒரு தேங்காயைக் கீழே போட்டாங்க. 170 அடி பாய்ஞ்சு வந்த தேங்காய் கல்தரையைத் தொட்டதும் சுக்கு நூறாச்சு. மக்கள் பாய்ஞ்சுபோய் பிரசாதமுன்னு எடுத்தாங்க.

இந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் பெண்கள், மனமகிழ்ச்சியாக இருக்கோமுன்னு ஒருத்தரை ஒருத்தர் கைபிடிச்சுத் தட்டாமாலை சுத்துனாங்க. வயசு வித்தியாசம் ஒன்னும் இல்லை. எல்லோரும் மனத்தளவில் குழந்தைகளா மாறிப்போனாங்கன்னுதான் சொல்லணும்.

இத்தனையையும் கண் இமைக்காமல் பார்த்து என் கண்ணுலே தண்ணீர்!

வெளிநாட்டில் இருந்து வந்த குஜராத்திகள் குடும்பம் ஒன்னு கூட்டமா தலையில் ஒரு பெரிய மூங்கில் தட்டைச் சுமந்தபடி வந்தாங்க. அதுலே பூஜைக்கான பொருட்களும் கலசம் மாதிரி ஒன்னும் இருந்துச்சு. அந்தணர்களின் (வேத) கோஷம் முழங்க கோவிலை மூணு முறை சுற்றிவந்துக்கிட்டு இருந்தாங்க. பாட்டும் கூத்தும், கிருஷ்ணா, நாராயணா, ராதே ஷ்யாம்ன்னு கோலாகலமும், கோஷங்களுமா அந்தச் சூழலே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!


ஆரத்திக்கு நேரம் இருக்கு. அதுவரை இன்னொரு சுத்துப் போய்ப் பார்க்கலாமுன்னு போனோம். எண்ணிப்பார்த்தால் சரியா 22 சந்நிதிகள் இருக்கு. இதைத்தான் காமிச்சு விளக்குவோமுன்னு அருணின் அண்ணாத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தாரோ என்னவோ!


திரும்பவும் சங்கரமடப் படிகளில் வந்து உக்கார்ந்தோம். கோவில் வளாகம் முழுசும் அங்கங்கே சின்ன துணியை விரிச்சு அதுலே கொஞ்சம் உதிரிப்பூவும், பஞ்சபாத்ர உத்தரணியுடன் ஜலமுமா உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்க ஆணும் பெண்ணுமா வயசானவர்கள் பலர். கொஞ்சம் காசைக் கொடுத்துட்டு தீர்த்தம் வாங்கி, பாவத்தைக் கழிச்சுறலாம். சின்னப் பசங்கள் யாத்ரீகர்களைச் சுற்றிச்சுற்றி வர்றாங்க.

"தட்சணை கொடு'"

"ஏன்?"

"நான் ப்ராமின்."

(ஆஹா.... அடிச்சக்கை. தமிழ்நாட்டுலே போய்ச் சொல்லிப்பாரு!)

"நானும் ப்ராமின் தான். எனக்குக் கொடேன். எவ்வளவு தூரத்தில் இருந்து யாத்திரை வந்துருக்கேன்"

விதவிதமான மக்கள், அடுக்கடுக்கான ப்ரார்த்தனைகள். கண்களில் கலந்து கட்டுன உணர்வுகளோடு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். இருட்டு மசமசன்னு சூழும் நேரம். தற்செயலா கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தால் வெள்ளைக்கொடியை இறக்கிட்டு வெவ்வேற மூணு நிறமுள்ளதை ஏற்றிக்கிட்டு இருக்காங்க.(பஞ்சபூதங்களுக்கானதாம்) ஒரு முறை இந்தக் கொடியைப் பார்த்தாலே இந்த ஜென்மத்தில் செய்தபாவம் அகன்று போயிருமாம். இன்னிக்கு இது மூணாவது! க்ருஷ்ணா க்ருஷ்ணா........

ஆரத்திக்கான மணியோசை கணகண கணகண....... எழுந்து சந்நிதிக்குப் போனால்.... மூச்சுமுட்டும்விதம் கூட்டம். அடிச்சுப்பிடிச்சு தேவகிக்கருகில் இடம் கிடைச்சது. திரைக்குப் பின்னே த்வார்க்கா நாத். கோபாலா, கோவிந்தா, மாதவா, ராதேஷ்யாம்ன்னு இறைவனை பலவிதமாக் கூவி விளிக்கும் கூட்டம். கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கூவல்கள் கதறல்களா மாறிக்கிட்டே வருது. எல்லோரும் ஏதோ......அந்நிய உலகில் புகுந்து போவதுபோல ட்ரான்ஸ் நிலைக்குப் போய்க்கிட்டு இருக்காங்க.

திரை திறந்ததும் கூட்டம் அப்படியே நெருக்கித் தள்ளுது. நமக்காகாதுன்னு சட்னு அதில் இருந்து நீந்தி வெளியே வந்தோம். அங்கேயே நின்னுருந்தாலும் ஏதும் தெரியாதுன்றது வேற விஷயம். ஒரு பத்து நிமிசத்தில் திரை போட்டுருவாங்களாம். ஆண்கள் தரிசனம் முடிந்து வெளிவருமிடத்தில் கொஞ்சம் இடைவெளி. கோபால் ஊடாகப் பாய்ஞ்சு பார்த்துட்டு வந்தார். சின்ன விளக்கால் ஆரத்தி எடுக்கறாங்களாம். ஷோடச உபசாரம் நடக்குதான்னு கேட்டேன். இல்லையாமே! (இவர் கவனிச்சு இருக்க மாட்டார்) நம்ம கோவிலில் நடக்கும் ஆரத்தியின் அழகே இங்கே இல்லைன்னார். போகட்டும். இவர், ஆரத்தி பார்த்த புண்ணியத்தில் பாதி எனக்காச்சு!

பரவசமும் ஏமாற்றமும் கலந்த நிலையில் அதான் இன்னும் ஒரு நாள் இருக்கே பார்த்துக்கலாமுன்னு வெளியில் வந்தேன். கோவிலுக்குள் பார்த்ததைப்போல பத்து மடங்குக் கூட்டம் அங்கே!

அங்கேயும் பண்டிட்களின் கூட்டம். பேண்டிட்ன்னுதான் சொல்லணும். கொள்ளையடிக்க ரெடியா இருக்காங்க.. கேமெரா செல்ஃபோனைக் கொடுத்துட்டு வான்னு சொல்லிக்கிட்டே, கிட்டே வந்து என்ன ஜாதின்னு ஆரம்பிச்சார் ஒருத்தர். ஜாதி விசாரம் எதுக்கு? சொல்லலைன்னா என்ன பண்ணுவேள்?
அச்சச்சோ.... அப்படி இல்லைம்மா. அந்தந்த சாதிக்கேற்றமாதிரி விளக்கம் சொல்லி தரிசனம் பண்ணி வைக்க இங்கே நாங்க இருக்கோம்.

திரிசமனா இருக்கே! தரிசனம் ஆச்சுன்னு சொல்லி நடையை கட்டினேன்.

ஏண்டா யாதவ க்ருஷ்ணா.... இப்படி எல்லோரையும் வளர்த்து வச்சுருக்கியே..உன்னாலும் ஜாதியை அழிக்க முடியலையா? இந்தச் சாதிச் சனியன் தொலைஞ்சால்...... கொடி ஏத்தி வைக்கிறேன்னு சொல்லி வச்சேன்.


பயணம் தொடரும்.........:-)

24 comments:

said...

//ஆரத்தி பார்த்த புண்ணியத்தில் பாதி எனக்காச்சு!//

unga punniyathial engaluku pathi

said...

உள்ளேன் டீச்சர் ;)

said...

டீச்சர் எப்போ ஊருக்கு வருவீங்க ...

said...

சரியான பகல் கொள்ளைக்காரர்கள் போலும். அதுசரி ஜாதியை ஒழிக்கனும் சொல்லி அது என்ன யாதவ கிருஷ்ன்னா?
இதுதான் டீச்சர் பஞ்ச்சா? நல்ல பதிவு நன்றி.

said...

//அதுசரி ஜாதியை ஒழிக்கனும் சொல்லி அது என்ன யாதவ கிருஷ்ன்னா?//

யாதவ என்பது ஜாதியைக் குறிக்குதுனு சொன்னது யாரு??? யயாதியின் பிள்ளை யதுவின் குலம் யாதவ குலம். இன்னிக்கு யாதவர்கள்னு ஏற்பட்டிருக்கும் ஒரு குலம் இல்லை அது. யாதவ கிருஷ்ணா என்பது ஒரு அடைமொழியே.

said...

மேலதிகத் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்

said...

யயாதி மன்னனின் மூத்த மனைவியும், சுக்ராசாரியாரின் மகளும் ஆன தேவயானிக்குப் பிறந்த பையன் தான் யது என்னும் ராஜகுமாரனும், துர்வாசு என்பவனும் ஆவார்கள். இந்த யதுவின் வம்சமே யாதவர்கள் என அழைக்கப் பட்டனர். யாதவர்களில் பல பிரிவுகள் இருந்து வந்தன. அவற்றில் சில குக்குரர்கள், அந்தகர்கள், வ்ருஷ்ணிகள், சத்வதர்கள், போஜர்கள், மாதவர்கள், ஷூரர்கள் என்று இருந்த அனைத்துப் பிரிவுகளையும் மொத்தமாய் வ்ருஷ்ணி சங்கமம் எனச் சொல்லுவதும் உண்டு. யாதவர்கள் தங்கள் கடமைகளில் சிறந்து விளங்கியதோடு மட்டுமில்லாமல், சிறந்த வீரர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களில் அந்தக் கால கட்டத்திலேயே நேரிடையாக அரசன் என ஒருவரை மட்டும் சொல்லாமல் ஜனநாயக முறையே இருந்து வந்தது. என்றாலும் ஒரு தலைவன் வேண்டுமே என்பதற்காக, ஒவ்வொரு பிரிவினரும் தங்களில் மிகச் சிறந்தவரை, வீரரை, செல்வமும், படை பலமும் பெற்றவரை அரசர் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்தது.

said...

//அங்கேயும் பண்டிட்களின் கூட்டம். பேண்டிட்ன்னுதான் சொல்லணும். கொள்ளையடிக்க ரெடியா இருக்காங்க.. //

சரியாச் சொன்னீங்க. காசியிலே எனக்கே இந்த அனுபவம் உண்டு.

http://kgjawarlal.wordpress.com

said...

ஆகக் கூடி கிருஷ்ண தர்சனம் மனசு நிம்மதியைத் தந்ததா ,இல்லையான்னு தெரியலையே.:(

said...

வாங்க எல் கே.

அதெல்லாம் (துவாரகைப் பயணத்தில் கிடைச்ச புண்ணியங்களை) சக மனிதருக்கு/ சக பதிவர்களுக்குப் பகிர்ந்தே கொடுத்தாச்சு!

said...

வாங்க கோபி.

பதிஞ்சாச்சு.

said...

வாங்க ஸ்டார்ஜன்.

கேள்வி இன்னும் தெளிவா இருக்கணும்.

எந்த ஊருக்கு ?

said...

வாங்க பித்தனின் வாக்கு.

உங்களுக்குப் பதில் நம்ம கீதா கொடுத்துட்டாங்க:-)))

said...

வாங்க கீதா.

உங்களிடம் விவரம் நேரில் கேட்டதும் இல்லாமல் உங்க பதிவுகளை நல்லாப் படிச்சுக்கிட்டும்தான் போனேன்.

கோவில் விவரங்கள் உங்க பதிவுகளிலே , நல்லா
விளக்கமா இருக்கேன்னு தான் அதைத் தவிர்த்து மற்ற விஷயங்களை என் பார்வையில் பட்டவைகளை மட்டும் சொல்லிக்கிட்டே போறேன்.

நம்ம தளத்துலே லிங்க் போட்டு வச்சுக்கவா?

said...

வாங்க ஜவஹர்.

தானா நம்ம ஆசைப்பட்டுக் கொடுப்பதுதான் தானம். ஆனால் இவுங்க பிடுங்கி எடுப்பதில் நம்ம நிதானம் போயிருது!

said...

வாங்க வல்லி.

தரிசனம் எப்பவாவது நிம்மதியைத் தருமா? அது நம்ம மனசுலேதானே இருக்கு!

எவ்வளோ பார்த்தாலும் ஆசை அடங்காத நிலைன்னால் அப்போ ஏது நிம்மதி:-)))))

said...

லிங்க் போடுங்க, போடுங்க, அப்படியானும் போணியாகுதானு பார்க்கலாம்! :P :P

said...

"இன்னிக்கு இது மூணாவது! க்ருஷ்ணா க்ருஷ்ணா........"
எங்களுக்கும் கிடைச்சிடுச்சே.:)) நன்றி.

said...

டீச்சர் சொந்த ஊருக்கு எப்போ திரும்புனீங்க .

said...

வாங்க மாதேவி.

க்ருஷ்ணார்ப்பணம்!

இங்கேயும் பணமே பணம்!!!!!

said...

ஸ்டார்ஜன்,

எளிமையாக் கேட்டக் கடினமான கேள்வி!

'எந்த ஊர் என்பவரே...இருந்த ஊரைச் சொல்லவா?'

முதலில் சொந்த ஊர் என்பதற்கு ஒரு விளக்கம் சொல்லுங்க.

ஒரு பதிவே போடுங்க. ஜூஸி டாபிக்.

said...

//வளாகத்தில் நடக்கும்போது அங்கங்கே பண்டிட்கள் வந்து வளைக்கப் பார்க்கிறாங்க. ஒரு ஆள் வந்து கேட்கிறார், 'ஆப் ப்ராமின் ஹை யா சண்டாள்? ' அடச் சண்டாளா? சாமி முன்னாலே சாதியா கேக்கறே? 'முதல்லே நீ யாருன்னு சொல்லு'ன்னேன். 'நான் உ.பி.ப்ராமின்'. 'ஓ அப்ப நான் தமிழ்நாடு.
.அது என்ன கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாம ஜாதி கேக்கறது?
//

அப்படின்னா கூச்சத்தோடு கேட்கலாமில்லையா?

கூச்சம்தான் உங்கள் பிர்ச்னை; சாதி கேட்டல் இல்லை.

Am I correct?

said...

வாங்க கத்திமூக்கு மீனே!

புதுவரவு போல? நல்லா இருக்கீங்களா?

//Am I correct?//

யாரு சொன்னா? இது உங்க கருத்தாச்சே!

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

மீண்டும் வருக.

said...

//யாரு சொன்னா? இது உங்க கருத்தாச்சே!//

அப்ப உங்க கருத்து?