Thursday, October 23, 2008

தீபாவளி ... வத்தலகுண்டு ஸ்டைல்!!!!!(மரத்தடி நினைவுகள்)

நம்ம வத்தலகுண்டுலே அப்பல்லாம் தீபாவளிப் பண்டிகையைவிட கார்த்திகை தீபம்தான் பெரிய விழாவாக இருந்தது! ஆனாலும் தீபாவளியையும் சுமாரா...ச்சீச்சீ நல்லாவேதான் கொண்டாடின ஞாபகம் இருக்குது!

எங்க வீட்டுலே தீபாவளிக்கு மறுநாள் வர்ற நோம்புதான் ரொம்ப விசேஷம். அதுக்கு கேதார கெளரி நோம்புன்னு பேரு!

நாங்க மதுரை ஜில்லாவுலே அப்ப இருந்தாலும், எங்க முன்னோர்கள் எல்லாம் ஆந்திராவுலெ இருந்து வந்தவங்களாம். எப்படி, பட்டணத்துக்கு வந்தோம்னு சொல்றதுக்கே ஒரு 'குடும்பக் கதை' இருக்கு!

தீபாவளிக்கு 'மட்டன்' வாங்கறது முக்கிய விஷயம். அதுவும் தீபாவளிக்கு மொத நாள் ராத்திரியிலிருந்தே அதை வேக வச்சிகிட்டு இருப்பாங்க! எங்க வீட்டுலே அம்மா மட்டும் நான்வெஜ் சாப்பிடமாட்டாங்க.

வழக்கமில்லாத வழக்கமா தீபாவளிக்கு முதல்நாள் சாயந்திரம் 'கறிக்கடை' திறந்திருக்கும். மத்த நாளிலே காலையிலே மட்டும் தான் திறப்பாங்க. அதுலெயும் அன்னைக்கு வெட்டுன ஆட்டுக் கறி வித்து முடிச்ச உடனே கடையைக் கழுவிட்டுப் போயிருவாங்க! கடைன்னவுடனே பெருசா கேஷ் கவுன்ட்டர் வச்சுநிறைய பேரு வேலை செய்யற 'சூப்பர் மார்கெட்'ன்னு நினைச்சுக்காதீங்க!

வத்தலகுண்டுலே வாரச் சந்தை கூடறதுக்கு ஒரு இடம் இருக்கு. அதுக்குள்ளெயே ஒரு நீளமா ஒரு சுவர் இருக்கும். அந்தச் சுவத்துக்கு அந்தப் பக்கம்தான் 'கறிக்கடை'

அந்தப் பக்கம் போக சுவரிலே 'கேட்' ஒண்ணும் இருக்காது. ஒரு இடைவெளி விட்டு அந்தச் சுவரைக் கட்டியிருப்பாங்க.

அங்கே சிமெண்டாலே ஒரு நீள மேடையிருக்கும். குறுக்காலே ஒரு மறைவும் இல்லாம கடைக்காரங்களே அந்த இடத்தைப் பங்கு போட்டிருப்பாங்க. ஒரு வட்டமான பெரிய மரத்துண்டு ஒவ்வொரு கடைக்கும் இருக்கும். மேலே கயிறு கட்டி அதுலே நல்ல கனமான கொக்கிங்க தொங்கிக்கிட்டு இருக்கும். இதுதான் கடைங்கறது.

அந்தக் கொக்கிங்களிலே தோலுரிச்ச ஆடுங்க தலைகீழாத் தொங்கிகிட்டு இருக்கும். வாங்குற ஜனங்களுக்குச் சந்தேகம் வந்துருமுன்னு எல்லாத் தோலையும் உரிச்சுட்டு வாலில் மட்டும் கொஞ்சூண்டு ரோமம் விட்டுவச்சுருப்பாங்க.. அதைப் பார்த்து, வெள்ளாடா இல்லை செம்மறியான்னு கண்டு பிடிப்பாங்களாம்.

சுவத்திலே இருக்கற இடவெளியிலே ஒரு கண்ணும், செய்யற வேலையிலே ஒரு கண்ணுமா இருப்பாங்க அங்கே வேலை செய்யறவுங்கெல்லாம்! நம்ம தலை தெரிய வேண்டியதுதான், 'பாப்பா, இங்கே வா. நம்ம கடையிலேதான் நீங்க எப்பவும் வாங்கறது'ன்னு எல்லோரும் சேர்ந்த மாதிரி கத்திக் கூப்பிடுவாங்க! ஆனா எனக்குத்தான் தெரியுமே நாம எந்தக் கடையிலே வழக்கமா வாங்கறதுன்னு! ஆங்.. சொல்ல மறந்துட்டேனே இந்த மாதிரி முக்கிய(!) வேலைக்கெல்லாம் போறது நான் தான்! வீட்டுலே அதுக்குன்னே ஒரு பை வேற தனியா இருக்கும். சமைக்கிற பாத்திரம், அருவாமணையெல்லாமே தனியா இருக்கும்! ஏன் அடுப்புக்கூடத் தனியா வெளியில் இருக்கும்.

என்கிட்டே அப்பல்லாம் ஒரு குதிரை இருந்துச்சு! தனியா, எங்கே போறதா இருந்தாலும் அதுலேதான் போவேன். குதிரை ஓடறமாதிரி பாஞ்சு ஓடிகிட்டே நாக்கை மடக்கி 'ட்ளோக், ட்ளோக்'ன்னு சத்தம் எழுப்பிகிட்டே போகணும். சாதாரணமா நடந்து போறதைவிட, ரொம்பச் சீக்கிரமாப் போயிடலாம்!

நம்ம வீட்டுலேயும் அவுங்களுக்கு வேலை ஆகணும்ன்னா, 'உன் குதிரைலே போய் இந்த.... சாமான் வாங்கிட்டு வந்துடா செல்லம்'ன்னு அன்பாச் சொல்வாங்களா, நானும் அதை உண்மையின்னு நம்பி, உடனே கட்டி வச்சிருக்கற குதிரையை அவுத்துக்கிட்டு கிளம்பிடுவேன்.

தீபாவளிக்கு மாத்திரம் 'கறி' எடுக்க நான் தனியாப் போக மாட்டேன். நிறைய வாங்கணும். அப்புறம் கூட்டம் வேற அதிகமா இருக்குமே, சின்னப் பிள்ளைன்னு ஏமாத்திடுவாங்களாம்! வீட்டுலே வேலை செய்யற முனியம்மா கூடத்தான்
போவேன். நிஜத்தைச் சொல்லணும்ன்னா, முனியம்மாவைத்தான் ஏமாத்திருவாங்க! என்னையில்லே!

முனியம்மா கதை சொல்றதில்லே கில்லாடி! எப்பவும் 'கதை சொல்லு கதை சொல்லு'ன்னு கேட்டு நச்சரிப்பேன். முனியம்மா சொல்ற கதையிலே எப்பவும் ராஜா, ராணிங்க வருவாங்க. அந்த ராணிக்கு அநேகமா ஒரு 'கள்ளப் புருஷன்' இருப்பான். இப்ப அதையெல்லாம் நினைச்சுக்கும்போது சிரிப்பு வர்றது மட்டுமில்லே, ஏன் எப்பவும் அப்படிச்
சொல்லணும்ன்னும் தோணும்! அப்ப அதெல்லாம் ஏன்னு கேக்கற விவரம் இல்லே. ஒருவேளை கதைக்கு சுவாரசியம் கூட்டறதுக்காகவா?

ராத்திரி சாப்பாடெல்லாம் முடிஞ்சவுடனே, வெளி அடுப்பைப் பத்தவச்சுக் கறிப் பாத்திரத்தை அடுப்பிலெ ஏத்திருவாங்க! அப்பல்லாம் 'ப்ரெஷர் குக்கர்'ங்கற நாமதேயம் கூட கேள்விப்பட்டதில்லே!

இட்டிலிக்கு மாவரைச்சு ஒரு பெரிய பாத்திரத்துலே வச்சிருப்பாங்க. அக்காங்கதான் ராத்திரியிலெ ரெண்டுதடவை எந்திரிச்சு அடுப்புத் தீயைத் தள்ளிவிட்டு வருவாங்களாம்! அடுப்புமே விறகடுப்புதான்!

அண்ணன்தான் 'பட்டாஸ் டிபார்ட்மெண்ட்' லச்சுமி வெடி, அணுகுண்டுன்னு ஏகப்பட்டது வாங்கிவச்சிருப்பார்.எனக்கு எல்லாம் கம்பி மத்தாப்பு, கலர் கலரா, (என்ன பெரிய கலர், பச்சையும் சிகப்பும்தான்) எரியுற மத்தாப்புப் பெட்டி. தீப்பெட்டி மாதிரிதான்
இருக்கும். கேப், அது வெடிக்கறதுக்கு ஒரு நட்டு. மண்டையா ஒரு பெரிய ஆணி மாதிரி இருக்கும். அதுலெ ரெண்டு உலோக வாஷர். அதுக்கப்புறம் ஒரு நட்டு. கேப், பாக்கறதுக்கு இப்ப இருக்கற 'ஸ்டிக்கர் பொட்டு' போல சிகப்புக் கலருலே வட்டமா
இருக்கும்.அதுலே கறுப்பா ஒரு புள்ளிமாதிரி 'வெடி'மருந்து! குட்டியா ஒரு டப்பாலே சுமார் 30 பொட்டுங்க(!) இருக்கும். அதுலே ஒண்ணை எடுத்து, 'நட்டை லூஸ்' செஞ்சு, ரெண்டு வாஷர்ங்களுக்கு நடுவிலே ஒரு 'கேப்'பை வச்சு, 'நட்டைத் திருகி டைட்'
செஞ்சுட்டு, அதை அப்படியே வீசித் தரையிலே எறியணும். 'பட்' ன்னு சத்தத்தோட வெடிக்கும்! இப்படி ஒவ்வொண்ணா 'பட் பட்' நாளெல்லாம் வெடிச்சுக்கிட்டே இருப்பேன். அக்காங்கல்லாம் திட்டுவாங்க, ஒரே தலைவலின்னு! ஒரு நாளுன்னா பரவாயில்லே. ஆனா
கடையிலே பட்டாஸ் வந்த நாள்முதல் இதே வேலைன்னா யாருக்குத்தான் தலைவலி வராது?

சில சமயம் வெடிக்காமலும் போயிரும். அதையெல்லாம் சேர்த்துவச்சு, அந்த நாளோட கையிருப்பு தீர்ந்ததும், சிமெண்ட்டுத் தரையிலே பரப்பி வச்சு, ஒரு கல்லாலே அதும் தலையிலே தட்டித்தட்டி வெடிக்க வச்சுருவேன்.

மறுநாளு காலையிலே இருட்டா இருக்கறப்பவே( மணியெல்லாம் யாரு பார்த்தா?) அக்காங்க எழுப்பிக் குளிக்க வச்சிருவாங்க. சீயக்காப் பொடி போட்டுத் தலையை பரபரன்னு தேய்ப்பாங்க! எங்கவீட்டுலே சீயக்காய்ப்பொடி கடையிலே வாங்கற வழக்கம் இல்லே. பட்டணத்துலே இருக்கற பாட்டி வீட்டுலே இருந்து கொண்டுவர்றதுதான்! சீயக்காய், வெந்தியம், பச்சைப்பயறு,இன்னும் என்னென்னவோ சேர்த்து, மாவு மில்லுக்குக் கொண்டுபோய், அதுக்குன்னே இருக்கற ஒரு மெஷீன்லே அரைச்சு வாங்கிருவாங்க பாட்டி!

வருஷா வருஷம், இந்தச் சீயக்காய்ப்பொடி, ரங்கோன் மொச்சைகொட்டை, சிகப்பான புட்டரிசி,திருப்பதி குங்குமம் இன்னும் சில சாமான்கள் எல்லாம் 'மெட்ராஸ்'லேயிருந்து வந்துரும்!

குளிச்சு முடிச்சு, புதுச் சொக்காயெல்லாம் போட்டுகிட்டு, பட்டாஸ் கொஞ்சம்போல வெடிச்சிட்டு, சாமிகும்பிடணும். அப்புறம் காலைப் பலகாரம். இனிப்பெல்லாம் ரொம்ப இருக்காது.மொதநாளே செஞ்சுவச்ச மைசூர்பாக்தான் அநேகமா. அப்புறம் கேசரியும் கிளறியிருப்பாங்க, சாமி நைவேத்தியத்துக்கு!
இதையெல்லாம் சாமி அறையிலேயே உக்காந்து சாப்பிடுவோம். அதுக்கப்புறம் அடுப்பங்கரைக்கு வெளியே இருக்கும் வெராந்தாவுலே உக்காந்து, இட்டிலி, தோசை, கறிக்குழம்புன்னு ஒரு வெட்டு வெட்டுவோம். தீபாவளியைத் தவிர எப்ப இட்டிலி,தோசை செஞ்சாலும் அதுக்குத் தொட்டுக்க சட்டினிதான். மிஞ்சிப் போனா மிளகாய்ப் பொடி.காலையிலே கறிக்குழம்புன்றது தீபாவளிக்கு மட்டுமேயான 'ஸ்பெஷல்!' ஒருவருசம் மட்டும் வெல்லப்பாகு இருந்துச்சு. நான் அதைத் தேன் பாகுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இதெல்லாம் முடியறப்ப பொழுது விடிஞ்சிடும்! இப்ப நமக்காக வேலை செய்யற துப்புரவுத் தொழிலாளிங்க, தபால் ஊழியர்ங்க, சலவைத் தொழிலாளின்னு வருவாங்க. அவுங்களுக்காக இட்டிலிங்களை அவிச்சு வச்சிக்கிட்டே இருப்பங்க. அப்பல்லாம் இந்த 'இட்லி ஸ்டேண்டு' இல்லையே. பெரிய இட்டிலிக் குண்டான்லேதான் இட்டிலி அவிக்கணும். ரெண்டு ரெண்டுத் தட்டாத்தானே ஒரு ஈடு வரும். அதுக்கே பாதிநாளு போயிரும்!

நம்மத் துப்புரவுத் தொழிலாளி பேரு, ராமம்மா. அவுங்க வூட்டுக்காரரு பேரு ராமைய்யா! அவுங்க தெலுங்கு பேசுவாங்க! நாங்களும் வீட்டுலே தெலுங்கு பேசற ஆளுங்கதான்! எனக்கு ராமம்மான்னா ரொம்பப் பிடிக்கும்! அவுங்களைப் பார்த்தவுடனே நானே அவுங்களுக்கான
பலகாரங்களைக் கொடுக்கணும்ன்னு ஓடுவேன். அப்ப அக்காங்களோ, இல்ல அம்மாவோ சொல்வாங்க,' தொடாமக் கொடுக்கணும். இலையோடதிண்ணையிலே வச்சிரு. அவுங்க எடுத்துப்பாங்க'

இதுதான் எனக்கு ஏன்னு புரியாது! 'அவுங்க நம்ம ஜாதி தானே? எதுக்காக தொடாமக் கொடுக்கணும்?' அக்காங்ககிட்டே கேட்டா சிரிப்பாங்க.

"உனக்கு எப்படித் தெரியும் அவுங்க நம்ம ஜாதின்னு?"

" நம்மளை மாதிரி தெலுங்கு பேசறாங்களே!"

" தெலுங்கு பேசுனா?" மறுபடியும் சிரிப்பு!

எதுக்குத்தான் இப்படி சிரிக்கிறாங்களோ? அன்னைக்குக்கூட நான், 'எம்.என்.ராஜமும், எம்.என். நம்பியாரும்' ப்ரதர் அண்ட் சிஸ்டர்ன்னு சொன்னதுக்கு சிரியோ சிரின்னு சிரிச்சாங்க!

ஒரே இனிஷியல் வந்தா ஒரே குடும்பம் இல்லையாம்! ஒரே பாஷை பேசுனா ஒரே ஜாதி இல்லையாம்! அது என்ன ஜாதியோ?

பெரியவுங்களை ஒண்ணும் புரிஞ்சிக்க முடியதில்லே!

இப்படியெல்லாம் யோசனைகள் ஓடும் என் மனசுலே!

அன்னைக்கு ராத்திரி எல்லோரும் சாப்பிட்டவுடனே ( என்னத்தை சாப்பாடு, அதான் கண்டதையும் தின்னுட்டு சோறு தின்ன முடியாம இருப்பமே!) வீட்டை நல்லாக் கழுவி விட்டுருவாங்க. நாங்கெல்லாம் மொட்டை மாடிக்குப் போயிருவோம் தூங்கறதுக்கு!

மறுநாள், நோம்பு! எனக்கும் அண்ணனுக்கும் ஏதாவது சமைச்சு முன்பக்க அறையிலே வச்சிருவாங்க. நாங்களெ எடுத்துப் போட்டுச் சாப்பிட்டுட்டு அப்படியே வெளையாடப் போயிரலாம். வீட்டுக்குள்ளே போகக் கூடாது! அப்படியே போனாலும் எதையும் தொடக் கூடாது! யார்மேலேயும் வுழுந்துரக்கூடாது! இப்படி ஏகப்பட்டக் கூடாதுகள்!

அக்காங்க, அம்மாவெல்லாம் விரதம்! ஒண்ணுமே சாப்பிடமாட்டாங்க, ஆனா காஃபி மட்டும் குடிப்பாங்க! அது என்ன விரதமோ?

உள்ளேயிருந்து ஒரே நெய் வாசனையும், ஏலக்காய், பச்சைக் கற்பூரவாசனையும் மூக்கைத் துளைக்கும். வெல்லப்பாகு முறுகற வாசனை ஆஹா, ஆஹான்னு இருக்கும். அக்கா மட்டும் வெளியிலே வந்து, 'என் செல்லம், குதிரையிலே ஓடிப் போய் ஒரு தேங்காய் வாங்கிகிட்டு ஓடிவாடா'ன்னு தூர இருந்தே கொஞ்சும்! நானும் ஓடுவேன்.

அதிரசத்துக்குப் பாகு காச்சறப்ப ரொம்ப முறுகிடுச்சாம். அதை வீணாக்காம 'கமர்கட்டு' செஞ்சுடுவாங்களாம்!

அது எப்படி எல்லா நோம்புக்கும் 'பாகு முத்திப்போச்சுன்னு சொல்றாங்க'ன்னு பாத்தா, ஒரு நாளு ஏதோ சுவாரசியமான பேச்சுலே உண்மை வெளிவந்திருச்சு!

கமர்கட்டுக்காகவேப் பாகை முறுக வச்சுருமாம் பெரியக்கா!

மத்தியானம் நாங்கெல்லாம் சாப்பிட்டபிறகு, அண்ணனை இன்னோருதரம் குளிக்கச் சொல்வாங்க. ஏதுக்குத் தெரியுமா? கலசத்துலே அரைச்ச மஞ்சளாலே முகம், மூக்கு எல்லாம் வரைஞ்சு அலங்கரிக்கறதுக்கு! அண்ணன் ரொம்ப நல்லா இதையெல்லாம் செய்வாரு!
நானும் இன்னொருக்க குளிச்சிட்டு வந்து, பக்கத்துலே உக்காந்து, கலசத்துக்குப் போடற நகைகளையெல்லாம் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருப்பேன்.

அன்னைக்குச் சாயந்திரம் கலசம் வச்சு, அதுக்கு முன்னாலே பாத்திரம் பாத்திரமா வகை வகையான பலகாரங்கள் இருக்கும். அதிரசம், லட்டு, முறுக்கு, அப்பம், சக்கரைப் பொங்கல்,வெண் பொங்கல், பாயாசம், கலர்க்கலரா சாதவகைகள் இன்னும் என்னென்னவோ
இருக்கும்.

நோம்புக்குன்னு இருக்கற சின்னப் புஸ்தகம் ஒண்ணு படிப்பாங்க! படிச்சுகிட்டே இருப்பாங்க! எப்படா முடிப்பாங்கன்னு ஆயிரும்! கடைசியா நோம்புக்கயிறு கட்டிவிடுவாங்க. சிகப்புக் கலருலே இருக்கும். ஆம்பிளைக்கு தனி டிஸைன், பொம்பிளைக்குத் தனி டிஸைன்!
இதுவும் நோம்புக்கு ஒரு மாசம் முந்தியே 'மெட்ராஸ்'லேயிருந்து தபால்லே வந்திருக்கும்!

கயிறு கட்டிக்கிட்டு, விழுந்து கும்பிட்டுட்டு, ப்ரசாதம் வாங்கிக்கணும்!

அதுவரைக்கும் எல்லாப் பலகாரத்தையும் கண்ணாலேயே சாப்பிட்டு முடிச்சிருப்போமா, இப்பக் கையிலே கொடுத்துச் சாப்பிடுன்னு சொல்றப்ப, திங்கற ஆசையே போய், சும்மா வெறிச்சின்னு இருக்கும்.

அக்காங்களும், 'இப்போ சாப்பிட முடியாது, பசியே இல்லை'ன்னு சொல்லிட்டு கொஞ்சமே கொஞ்சம் பிரசாதம் வாயிலே போட்டுகிட்டு எல்லாத்தையும் பெரிய பெரிய அலுமினிய டப்பாக்களிலேயும், தூக்கு, சம்புடம் எல்லாத்துலெயும் நிரப்பி வச்சுட்டு, ரெஸ்ட் எடுக்கப்
போயிருவாங்க!

இவ்வளவு கஷ்டப்பட்டு, காலையிலிருந்து விழுந்து விழுந்து செஞ்சது எல்லாம் அப்படியெ இருக்கும்!

இதே கூத்துதான் அடுத்த வருஷமும்!!!!!!

நன்றி: மரத்தடி Nov 14 2004
***********************************************************************************************************

அன்று அப்படின்னா இன்று இப்படி!!!!



போன சனிக்கிழமை இங்கே ஆக்லாந்து நகரில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடந்துச்சு. மகள் அங்கே வசிப்பதால் கொண்டாட்டங்களுக்குப் போய் வந்து அனுப்பிய படங்கள் இவை.

கீழே உள்ளவை நம்மூட்டுலே இருப்பவை.


வெளியே.....................

உள்ளே............

பட்டாஸை எப்படிப் பாதுகாப்பாக் கொளுத்தணுமுன்னு சொல்றாங்க.
இவைகள் எல்லாம் போனவருச 'கை ஃபாக்ஸ்' தினத்துக்காக விற்பனை செஞ்சப்ப நம்ம தீபாவளிக்காக வாங்கி வச்சுக்கிட்டது.

ஒளியும் ஒளியும் மட்டும்:-) ஒலிக்குத் தடா:-)

இன்று மாலை முதல் தீவுளித் திருவிழாவில் முழுமூச்சோட இறங்கறோம். 4 நாள் அஞ்சு இடத்தில். இது திங்கள் வரை:-)

மேற்கொண்டு......நவம்பர் முதல் தேதி கேரள சங்கத்தில் தீபாவளி.

நவம்பர் 15க்கு நம்ம ஊர் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாட்டம்.

எங்கூர் இந்தியன் க்ளப் தீபாவளி விழா நவம்பர் 22 தேதிக்கு நகரச் சதுக்கத்தில் வச்சுருக்கோம். ரெண்டு மாசம் இழுத்து நீட்டிக் கொண்டாடப்போறோம்:-))))





நட்புகளுக்காகக் கொஞ்சம் இனிப்பு. எல்லாம் இன்று செஞ்சது. (புதுக் கடை. அதனால் இன்று செஞ்சதுன்னு நம்பறேன்)

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!



என்றும் அன்புடன்,
துளசி & கோபால்

41 comments:

said...

என்ன தீபாவளிப் போஸ்ட் இது. ஒரு ஸ்வீட்டும் இல்லாம!

போனா போகட்டும். வகுப்பில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

said...

தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

எதுக்குத்தான் இப்படி சிரிக்கிறாங்களோ? அன்னைக்குக்கூட நான், 'எம்.என்.ராஜமும், எம்.என். நம்பியாரும்' ப்ரதர் அண்ட் சிஸ்டர்ன்னு சொன்னதுக்கு சிரியோ சிரின்னு சிரிச்சாங்க!

ஒரே இனிஷியல் வந்தா ஒரே குடும்பம் இல்லையாம்! ஒரே //

ஹாஹா.சிரிக்காம என்ன செய்வாங்க.
இங்க தீபாவளி அன்னிக்கு டின்னருக்குக் கூப்பிட்டு இருக்கோம்.
கோவில்ல பட்டாசு வெடிக்கலாம்ம். வாரக்கடைசில.

கோபால்,ஜிகே,மகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் துளசி.

said...

வகுப்புக்குத் தவறாம வர அத்தனை பேருக்கும் எங்களோட மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வல்லிம்மாவும் அவங்க வீட்டுக்காரரும்.

said...

//"தீபாவளி ... வத்தலகுண்டு ஸ்டைல்!!!!!(மரத்தடி நினைவுகள்)"//

துளசி அம்மா,

உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறேன். குறிப்பு. தலைப்பு வைக்கும் போது "மரத்தடி நினைவுகள்" என்பதையும் சேர்த்து வைக்காதிங்க.

பொதுவாக பதிவர்கள் பழைய செய்திகளை படிக்கனுமா ? என்று நினைப்பாங்க, அதனால் என்ன செய்யனும் என்றால் தலைப்பில் இது பழைய மேட்டர் என்று காட்டிவிடக் கூடாது. மனசாட்சி உறுத்தும், கன்னப்பின்னான்னு கூட திட்டும், இப்படியெல்லாம் பதிவு போட்டே ஆகனுமா என்றெல்லாம் கூட கேட்கும், அதை கொஞ்ச நேரம் சும்மா இருக்கச் சொல்லிவிட்டு கட்டுரை முடிவில், பின்குறிப்பு : இது மரத்தடி கால நினைவுகள் என்று போட்டுவிட்டால் மனசாட்சி அதன் பிற்கும் வாயைத் திறக்கும் ?

:)))))))))

said...

//இன்று மாலை முதல் தீவுளித் திருவிழாவில் முழுமூச்சோட இறங்கறோம். 4 நாள் அஞ்சு இடத்தில்.

நவம்பர் முதல் தேதி கேரள சங்கத்தில் தீபாவளி.

நவம்பர் 15க்கு நம்ம ஊர் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாட்டம்.

எங்கூர் இந்தியன் க்ளப் தீபாவளி விழா நவம்பர் 22 தேதிக்கு நகரச் சதுக்கத்தில் வச்சுருக்கோம்.

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

என்றும் அன்புடன்,
துளசி & கோபால்//

துளசி - கோபால் என்ன பொருத்தமான பெயர்கள் ! பெயர் பொருத்தம் கிடைக்கிறதுக்கு கொடுப்பினை வேணும்.
:)

கட்டுனவங்களுக்கு ஒரு வீடு கட்டாதவங்களுக்கு ஊரெல்லாம் வீடுன்னு சொல்லுவாங்க, தமிழ்நாட்டில் இருந்தால் ஒரு தீபாவளிதான், வெளிநாட்டில் உளளவங்களுக்கு 2 மாதங்களுக்கு வார இறுதி நாட்களெல்லா தீபாவளி கொண்டாட்டம் தான்.

இருவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் !

Anonymous said...

//என்ன தீபாவளிப் போஸ்ட் இது. ஒரு ஸ்வீட்டும் இல்லாம! // வழிமொழிகிறேன்.

என்ன இருந்தாலும் குழந்தைகளாய் இருந்தப்போ தீபாவளி கொண்டாடும் நினைவுகளே தனி. தீபாவளை பலகாரங்கள் அக்கம் பக்கத்துக்கு சப்ளை பண்ண நாந்தான் போவேன். கடைக்குட்டின்னா இது ஒரு வேலை. போனஸா எல்லா வீட்டுலயும் ஏதாவது திங்கறதுக்கு தருவாங்க. வீட்டுக்கு வந்து பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிக்கறதுதான்.
சூப்பர் பதிவு, தீபாவளி வாழ்த்துக்கள்

said...

டீச்சரைத் தான் எல்லா வேலைக்கும் ஏவ் இருக்காங்க வீட்ல..:)
உங்க வீட்டில் இருந்து கறிக்கடை ரொம்ப தூரம் தான்.. :)

ஒலி இல்லாம தீபாவளி பட்டாசு நல்லாவா இருக்கும்.. ;)

வகுப்பில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

said...

தீபாவளி வாழ்த்துக்கள்..

என்ன இருந்தாலும் அந்தக்கால தீபாவளி போல் வராது..ஹ்ம்..

said...

happy diwali madam

said...

மிக அருமையா கொசுவத்தி சுத்தியிருக்கீங்க ரீச்சர்.

உங்களுக்கும், இங்க வரும் மற்ற பதிவர்களுக்கும் நானும் தீபாவளி நல்வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன்.

said...

டீச்சர் தீபாவளி வாழ்த்துக்கள் ;)

பதிவுக்கு வரிக்கு வரி வழிமொழிக்கிறேன்.

எங்க வீட்டிலும் இதே போல தான். ஆனா முகம் வச்சு செய்யுறது எல்லாம் இல்ல..அது அத்தை வீட்டில் நடக்கும். இங்க எல்லா டூட்டியும் முடிச்சிட்டு அத்தை வீட்டுக்கு போகனும். நீங்க சொன்னது மாதிரி கடமைக்குன்னு ஒரே ஒரு அதிரசம் தான் அன்னிக்கு. ;))

இதுல ஒரே நாள்ல நோம்பும், தீபாவளியும் வேற வரும். அப்போ கறிக்கு தடா ;)

said...

சூப்பர் நினைவுகள் டீச்சர்.. அருமையா விவரிச்சு எழுதியிருக்கீங்க.. தீபாவளி வாழ்த்துக்கள்..

said...

வணக்கம் டீச்சர்!என்னது Red Fan,Sand Storm,Boomer ஆஆ!! நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கம்பி மத்தாப்பும்,சரவெடியும்தான்:)

said...

அது என்ன எல்லாப் பண்டிகையும் ரெண்டு மூணூ நாளைக்கு முன்னாடியே கொண்டாடிறீங்க! போன தடவை சுதந்திர தினப் பண்டிகையும் இப்படித்தான்.எல்லாருக்கும் முன்னாலே கண்ணு முழிக்கிறீங்க அதுக்காக இப்படியா:))

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

வாங்க கொத்ஸ்.

ஸ்வீட்ஸ் போடாதது எல்லாம் உங்களுக்காகத்தான்.

வயித்தெரிச்சலை ஏன் கொட்டிக்கணும் என்ற நல்ல எண்ணம்:-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

நன்றி. உங்களுக்கும் அன்பான வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வல்லி.

நன்றிப்பா.

உங்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

பட்டாஸ் கொளுத்தும்போது செல்லங்களை வீட்டுக்குள்ளே வைக்கணும். இல்லேன்னா அதுகளுக்கு மிரட்சியாயிரும்(-:

said...

வாங்க கோவியாரே.

மரத்தடியில் புதையுண்டு போயிருந்தவைகளை மீண்டும் ஒரு இடத்தில் சேமிக்கவும்(ஆர்க்கியாலஜி?)
அதே சமயம் புதுசாக் கிடைச்ச வாசக அன்பர்கள் வாசிச்சு இன்புறவும்(???)வேண்டித்தான் இதையெல்லாம் இங்கே கொணாந்து போட்டுக்கிட்டு இருக்கேன். அப்ப முதலே மரத்தடி நினைவுகள்ன்னு தான் இருக்கு. இருந்துட்டுப்போகட்டும்.

எப்படியும் திட்டுறவங்க மனசுக்குள்ளே திட்டிக்கலாம்:-)


தினந்தோறும் தீபாவளின்னு சொல்வது வெளிநாட்டு வாழ்க்கையில்தான். நம்முடைய இந்தியர்களின் குணவிசேஷத்தின்படி,
ரொம்ப ஒற்றுமையாச் சேர்ந்து ஒவ்வொரு சங்கமும் தனித்தனியாப் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்.

யஹாங் ஸே வஹாங், வாஹாங் ஸே யஹாங் ன்னு மக்களும் அழைப்பை மதிச்சுப் போவதுதான் நடக்குது.

இன்னிக்கு மாலை ஃபிஜி தென்னிந்திய சங்கத்தின் விழா. முழுக்க முழுக்க ஹிந்திப்பேச்சும் பாட்டும்தான். ஸப் சல்த்தா ஹை:-))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

புது நாட்டுலே முதல் தீபாவளி உங்களுக்கு!

நல்லா மகிழ்ச்சியாக் கொண்டாடுங்க.
ஸுட்கேசை நினைக்கவேணாம்......

said...

இந்த வருசம் தீபாவளி ந்யூ சீலே எப்படி இருக்கும்னு
பார்த்தேன். அமக்களமா டான்ஸ் ப்ரோக்ராம் எல்லாம் இருக்கே.
நீங்க போனீகளா ?

http://meenasury.blogspot.சொம்

துளசிக்கும் கோபாலுக்கும் எங்கள் தீபாவளி
நல்வாழ்த்துக்கள்.

மீனாட்சி பாட்டி.

said...

துளசி கோபால் மேடம்,

என்னுடைய கோபமெல்லாம் உங்க கேமரா மீது தான்.

அதில் எடுக்கப்படும் படங்களை விட அவை கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்து வரும் உங்க சரளமான தமிழ் விவரிப்புகள் பற்றித் தான் எனக்குக் கவலை.

இந்தப் பதிவிலும் பாருங்க, பழைய தீபாவளியை உங்கள் கட்டுரை காட்சிப்படுத்திய அளவுக்கு இந்தப் படங்கள் இன்றைய தீபாவளியைக் காட்சிப் படுத்தவில்லை என்று தான் சொல்வேன்.

(என்னால் படங்களைப் பதிவில் ஏற்ற முடியாத பொறாமையின் தீய்ந்த வாசம் நிச்சயமாக இந்தப் பின்னூட்டத்தில் இல்லை என்று சொல்லிக் கொள்கிறேன்).

//ஒரே இனிஷியல் வந்தா ஒரே குடும்பம் இல்லையாம்! ஒரே பாஷை பேசுனா ஒரே ஜாதி இல்லையாம்! அது என்ன ஜாதியோ?

பெரியவுங்களை ஒண்ணும் புரிஞ்சிக்க முடியதில்லே!

இப்படியெல்லாம் யோசனைகள் ஓடும் என் மனசுலே!//

அப்ப ஓடிச்சு சரி, இப்ப உங்க மனசு அப்படியே நினைக்கும் இளமையோடு இருக்கிறதா அல்லது, நீங்களும் புரிஞ்சுக்க முடியாத பெரியவங்க ஆயிட்டீங்களா அதைச் சொல்லுங்க.

said...

வாங்க தமிழ் பிரியன்.

வீட்டுக்கும் கடைக்கும் தூரம் ரொம்பன்னு உள்ளூர்க்காரர் வந்து ஊராருக்குச் சொன்னதுக்கே ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்.

நல்லவேளையாக் குதிரை வச்சுருந்தேனோ, பொழைச்சேனோ:-)

குதிரை மேலே அப்ப இருந்தே ஒரு ஆர்வம் இருந்துருக்கு. ஏன் இப்ப, இப்படிச் சொல்றென்னா.... அதைப் பத்தி ஒரு பதிவு வந்துக்கிட்டு இருக்கு என்ற (எச்சரிக்கை) அறிவிப்பு:-))))

said...

வாங்க கயலு.

எல்லாம் கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பா ஆன கதைதான்.

நம்ம பசங்களுக்குத் தீபாவளின்னா என்ன தோணப்போகுதோ பின்னாளில்!!!!

என் பொண்ணு ஏற்கெனவே இதையெல்லாம் கண்டுக்கறதே இல்லை:-)

said...

வாங்க முரளி கண்ணன்.

இன்னொரு வத்தலகுண்டுக்காரர் வருகையா? பேஷ் பேஷ்.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் விசேஷ வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மதுரையம்பதி.

கொசுவத்தியை மிஞ்சி உலகில் ஏதும் இல்லை:-)

எல்லாருக்கும் தனித்தனி வத்திகள் உண்டு:-)

தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கோபி.

முகம் வச்சுச் செய்யறதெல்லாம் அம்மாவோட போயே போச்.

இப்பெல்லாம் மனசுலே நினைச்சுக்கறதோட சரி.

said...

வாங்க வெண்பூ.

நினைவுகள் அழிவதில்லை, அதுவும் பதிவுகள் (எழுத)வந்த பின்பு:-)

தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராஜ நடராஜன்.

பட்டாஸ்கள் எல்லாம் பேரு பெத்த பேரு வகைதான்.
நம்மூர் ஃப்ளவர் பாட் தான்.

வகைவகையா ஒளி உமிழ்ந்து வைக்கும்!

ரெண்டு மூணு நாளைக்கு முன்பு தீபாவளின்னாக்கூடப் பரவாயில்லை. அக்டோபர் 11 முதல் ஒவ்வொரு க்ளப்பாக் கொண்டாடிக்கிட்டு இருக்கு.

கடைசி ( இப்போதைக்கு) நவம்பர் 22.

நடுவில் நவ.8 இங்கே தேர்தல் நாள் என்பதால் பள்ளிக்கூட ஹால்கள் கிடைக்காமல் போயிருச்சு. எலெக்ஷன் பூத்.

நேத்திக்குத் தகவல் வருது அன்னிக்கும் ஒரு விழா இருக்கு. மாலை 6 மணிக்கு மேல்ன்னு. ஸ்ரீ சுவாமி நாராயண் குழு. 500 பேர்கள் விழாவுக்கு வரணும். அதுக்கு நீங்கதான் உதவணுமுன்னு சொல்றாங்க. பேசாமப் பதிவர்களைக் கூட்டுக்கிட்டுப் போயிறலாமான்னு இருக்கு:-)))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.
என்ன நீங்க சொம்(பு)ன்னு எல்லாம் சுட்டி கொடுத்துருக்கீங்க?

அங்கெ போய்ப் பார்த்தால் நம்ம ப்ளொக்கர் சொல்லுது 'ப்ளாட்க் காலியாத்தான் இருக்கு.வூடு கட்டிக்க வர்றீயா'ங்குது!

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

ஒரு பத்துப் பக்கம் எழுதி விளக்குவதைவிட ஒரு படம் எல்லாத்தையும் சொல்லிருமுன்னு இருக்காமே.....

அந்தக் காலத்துலே எல்லா நிகழ்வுகளையும் கண்ணாலே புடிச்சுக்கிட்டேன். இப்போ கருவியால்.
காலம் மாறுதுன்னு சொல்ல இதைவிட வேறு அத்தாட்சி உண்டா? :-)))))

பழசுக்கு எழுத்து, புதுசுக்குக் படமுன்னு வச்சுக்கலாமா?
ஜூனியரைக் கலந்து ஆலோசிக்கணும் நீங்க. படம் பார்த்துக் கதை சொல் பிடிக்குதா இல்லையான்னு.

இப்பவும் இந்த 'சாதிச் சனியனைக் கட்டிக்கிட்டு ஏன் இருக்காங்க நம்ம மக்கள்'ன்னு புரியலைதான்.

எதோ என்னால் முடிஞ்சது, சாதியையும் யார் கேட்டாலும் சொல்லிக்கறதில்லை. மகளுக்கும் சாதி என்னும் விஷ(ய)ம் பத்தி ஒன்னுமே சொல்லவும் இல்லை.

வீட்டுக்குளே சாதியை ஒழிச்சாச்சு.

said...

///துளசி கோபால் said...
நேத்திக்குத் தகவல் வருது அன்னிக்கும் ஒரு விழா இருக்கு. மாலை 6 மணிக்கு மேல்ன்னு. ஸ்ரீ சுவாமி நாராயண் குழு. 500 பேர்கள் விழாவுக்கு வரணும். அதுக்கு நீங்கதான் உதவணுமுன்னு சொல்றாங்க. பேசாமப் பதிவர்களைக் கூட்டுக்கிட்டுப் போயிறலாமான்னு இருக்கு:-)))))////

டீச்சர் விசாவும் டிக்கெட்டும் கொடுங்க... குடும்பத்தோட வருகின்றோம்.. ;)))

said...

துளசி, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இம்மாதிரி சிறு செய்தி கூட விட்டுவிடாமல் மலரும் நினைவுகளை மனதில் நினைத்து மகிழ்ந்து - அதனைப் பதிவாகப் போடுவது துளசியினால் மட்டும் தான் முடியும்.

அருமை அருமை - துளசியின் குதிரை உட்பட அருமை. குதிரையின் 'ட்ளோக், ட்ளோக்' சத்தம் அருமை. கறிக்கடையை விவரிக்கும் விதம் அருமை.

பொறுமையாக, மெதுவாக, நானும் தங்க்ஸூம் சேந்து படிச்சி சுவைத்தோம். அனுபவிச்சோம். சிரிச்சோம். தொடாம கொடுக்கணுமா ? ஆமா - சிரிக்கறதா இல்ல சிந்திக்கறதா ? தெரில

நட்டு கத அருமை - ஒரே நட்டுலே பல கேப்புகள் வைச்சு - ரவுண்டா வச்சி - தலைக்கு மேலே தூக்கி நடு தார் ரோட்டிலே போடுறது - பயங்கர (??) சத்தமா வெடிக்கும்.

நெரெய நெரெய சொல்லலாம் - போதும் இது மறு மொழி தானே - பதிவில்லையே

said...

http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.htm

படியுங்கள் நேரமிருப்பின்

said...

வணக்கம், துளசி மேடம்!
கங்காஸ்னானம் ஆச்சா?
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உங்க வத்தலகுண்டு தீபாவளி நினைவுகள் வழக்கம்போலவே ரொம்ப ஷார்ப் & டிடெயில்டு. நானும் ஒரு கொசுவர்த்தி ஏத்தி வெச்சுட்டேன்.

said...

தமிழ் பிரியன்,

போன சனிவரை எப்படியும் டிக்கெட்டு எதுக்கு,தனிப் ப்ளேனே ச்சார்ட்டர் பண்ணிறலாமுன்னு ஒரு நம்பிக்கையோடு இருந்தேன்.

விஸா எல்லாம் க்ரூப் விஸாதான் எடுக்கணும். இன்னும் 2 வாரம் இருக்கே. எடுத்தறலாம். எல்லாம் சனி கவனிக்கணும்.

said...

டிஸ்கி:

இங்கே 'சனி' என்றது சனிக்கிழமையைக் குறிக்கிறது!

said...

வாங்க சீனா.

ரங்க்ஸ்ம் தங்க்ஸுமா ரசிச்சதுக்கு நன்றி.

சிந்திக்கவேண்டியது நெறயவே இருக்கு!

உங்க கொசுவத்தியைப் பார்த்தாச்சு. புகைஞ்சுக்கிட்டு இருக்கு:-)

said...

வாங்க தமாம் பாலா.

ஸ்நானம் எல்லாம் ஆச்சு. ஆனா கங்கை இருக்கச் சான்ஸ் இல்லை. பொழுதுவிடிஞ்சு ரெண்டு நாழி ஆன நேரம்(-:

உங்களுக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Anonymous said...

மிகவும் சுவாரசியமாக இருந்தது..:)

said...

வாங்க தூயா.
ரசிப்புக்கு நன்றி!