Monday, October 06, 2008

A ஃபார் ஆப்பிள் :-)

நினைவு தெரிஞ்ச நாட்களில், ரொம்ப ஒசத்தியான பழம் இதுன்னு எங்க பாட்டி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதுவும் அவுங்களுக்கு ஒடம்பு சரி இல்லாதப்ப எங்க மாமா ரெண்டுமூணு ஆப்பிளை வாங்கிவந்ததும் அப்படியே உருகிப் போயிருவாங்க. திருப்பித்தரும் எண்ணமே இல்லாமல் வாங்கிப்போகும் கடன்களுக்கு அந்த ஆப்பிள் பழங்கள் ஒரு 'முதலீடு'ன்னு அவுங்களுக்குப் புரியாது. ஒருவேளை தெரிஞ்சும் தெரியாதமாதிரி இருந்து குடும்பத்தில் பாசத்தை வளர்த்தாங்களோ என்னவோ!!!

நாங்க மதுரையில் இருந்து விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்கு வந்தாலும் மாமாவோடு கடைக்குப் போகும்போது எனக்குமட்டுமேன்னு ஒரு ஆப்பிள் வாங்கித் தருவார். கொலுப்பொம்மையை அடுக்கி வச்ச மாதிரி வரிசையா மெல்லிசான காகிதக் குவியலுக்குள் உக்கார்ந்திருக்கும் பழமும், கடைக்காரர் அதைக் கொடுக்கறதுக்குமுன் கையில் வச்சுருக்கும் ஒரு துணியால் பளபளன்னு துடைக்கும் தினுசும் ஆப்பிளைப் பத்தின உயர்வான எண்ணம் கொடுத்தது என்னவோ நிஜம். 'காஷ்மீர் ஆப்பிள்'ன்னா சும்மாவா?

விடுதி வாழ்க்கையில் என் தோழி சாவித்திரிக்கும் ஆப்பிள் பிடிக்கும். ஆனால் சட்டிமாதிரி இருக்கும் குண்டு ஆப்பிள்தான் நல்ல ரகம் என்று சாதிப்பாள். நானும் அவளுக்காகவே அதுதான் சரின்னும் வாதாடுவேன். உள்ளே மாவு மாதிரி இருக்கும். கோட்டை ரயில் நிலையத்துக்கு வரும்வழியில் எல்லாம் பழக்கடைகள். தினமும் நான் வேலைவிட்டு வரும்வழியில் பார்த்துக்கிட்டே வந்தாலும் எப்போதாவது மனசுலே தோணுச்சுன்னால் மட்டும் நின்னு ரெண்டு பழம் வாங்கி வருவேன். நம்ம கண் முன்னால் எடைபோடும் 'பழம்' காகிதப்பைக்குள்ளே வராது. எப்ப, எப்படித்தான் இடம் மாறுமோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். வாங்கறதே ஒன்னோ ரெண்டோ. அதுவும் வீட்டுலே வந்து பார்க்கும்போது அழுகலா இருந்தா எப்படி? புது டெக்னிக் கைவசம் வந்தது அப்பத்தான். எடைபோட்டு முடிச்சதும் கையில் வாங்கிப் பார்த்துட்டு அப்படியே ஹேண்ட்பேக்லே போட்டுக்குவேன். ரெண்டு நாளைக்கு பையைத் திறக்கும்போதெல்லாம் வாசனை 'குப்'ன்னு வரும்.

வாழ்க்கையோட்டத்துலே ஃபிஜியில் வாழ்ந்தப்ப.....ஒரு டாலருக்கு ஏழு ஆப்பிள்கள். எல்லாருக்கும் ஆறுதான். ஆனால் பானு அண்ணி வழக்கமா வாங்கும் கடையில் அவுங்களுக்கு மட்டும் ஏழு. அண்ணியோடு நாங்களும் ஒட்டிக்கிட்டதால் நமக்கும் ஏழு. ரொம்பக் குட்டியா உள்ளங்கையில் அடங்கும்
பழங்கள். எல்லாம் நியூஸியில் இருந்து வர்றதுதான். சில சமயம் ருசியே இல்லாமல் ஏதோ அட்டையைத் தின்பதுபோல இருக்கும். மாவு ஆப்பிள் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு நினைப்பேன்.


அதுக்குப்பிறகு இங்கே நியூஸிக்கு வந்துட்டோமா...... முதல்முறையா அஞ்சாறு வகை ஆப்பிள்களைச் சூப்பர் மார்கெட்டில் பார்த்தேன். அட! இதுலேகூட வகைகள் இருக்கா? வந்து செட்டில் ஆன சில மாசத்துலே இங்கே பிக் யுவர் ஓன்((PYO) ன்னு வரும் விளம்பரங்களைப் பார்த்தோம். இதுலே காய்கறிகள் முக்கியமாத் தக்காளி, பச்சைப் பட்டாணி. வெங்காயம்னுதான் இருக்கும். இதுக்குன்னு கிளம்பிப்போகும் வழியில் 'பிக் யுவர் ஓன் ஆப்பிள்ஸ்' போர்டைப் பார்த்தோம். கிலோ அம்பது செண்ட்(தான்) தோட்டத்துக்குள்ளே போனால் ஹைய்யோ............. மரத்துலே கொத்துக்கொத்தாத் தொங்குது. தரையெல்லாம் விழுந்துச் சீப்பட்டுக்கிடக்கு. ஃபிஜியில் கிடைச்சதுபோல இல்லாமப் பெரிய பெரிய சைஸுகளில் இருக்கு. ஏழெட்டு வரிசை மரங்கள். இந்தவரிசைக்கு அப்புறம் இன்னொரு ஏழெட்டு வரிசை. இப்படிப் பலவரிசைகள் கிடக்கு. ஒவ்வொரு ஏழெட்டு வரிசையும் ஒவ்வொரு வகை. பறிச்சுத் தின்னுப் பார்த்துக்கிட்டே பழம் பறிக்கலாம். காணாததைக் கண்ட அதிசயத்தில் பறிக்கப் பறிக்க அடங்காத வெறியுடன் மரத்துக்கு மரம் நகர்ந்து போய்க்கிட்டே இருக்கோம். கையில் இருந்த ப்ளாஸ்டிக் பை, கனம் தாங்காமல் கிழிய ஆரம்பிச்சதும் பண்ணையின் முன்பக்கம் இருக்கும் ஷெட்(கடை?)டுக்குக் கொண்டுவந்தால் அங்கே எடைபோட்டு, 20 கிலோன்னு சொல்லிக் காசு வாங்கிக்கிட்டாங்க. இப்பப் பிரச்சனை என்னன்னா..... எப்படித் தின்னு தீர்க்கப்போறோம் என்றதுதான்...... அது தீரும்வரை வீட்டுக்கு யார் வந்தாலும் ஆப்பிளோ ஆப்பிள்தான்:-)))))

ஆரம்ப ஆர்வம் எல்லாம் அடங்கிப்போச்சு இப்ப. ஆச்சேப்பா 21 வருசம்! வாராவாரம் தேவையான பழங்களை வாங்கிக்கும்போது அஞ்சாறு ஆப்பிள்களை வாங்கறதோட சரி. இதுலே கோபாலுக்கு நக்ரா கொஞ்சநஞ்சமில்லை. வகைவகையாக் கொட்டிக்கிடக்கு. இது ஜூஸா இல்லே, க்ரிஸ்ப்பா இல்லை, காஞ்சு போயிருக்குன்னு நூறு நோணாவட்டம்.

இப்ப நம்ம பக்கத்து ஆப்பிளைச் சொல்லலாமுன்னா....ஏகப்பட்ட வகைகள் கிடைக்குது. இந்த 21 வருசத்துலே புதுசு புதுசா நிறைய வகைகளை (ஒட்டுச்செடிகளா இருக்குமோ?) உற்பத்தி செஞ்சுருக்காங்க. வசதியை முன்னிட்டுப் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்துருக்கேன் பாருங்க.

Braeburn Fuji Royal Gala Pacific Rose, Southern Rose, Cox's Orange Granny Smith, Jazz, Pink Lady, southern snap, Orin, Gala, Red Delicious, Golden Delicious pacific Beauty.

இங்கே நியூஸியில் ஆப்பிள் சீஸன்னு சொன்னால் ஃபிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை போகுது. இதுவரை மொத்தம் 77 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகுது. இதுக்காகவே ஒரு தனி நிறுவனம் ENZA என்ற பெயரில் இயங்குது. நல்ல தரமான ஆப்பிள் & பேரிக்காய் வகைகளை உலகச் சந்தைக்கு அனுப்பறாங்க. பழங்களை விளைவிக்கும் பண்ணைகளையும் உலக மார்கெட்டையும் ஒருங்கிணைப்புச் செய்றது இந்த என்ஸா தான். பழத்தோட்டப் பராமரிப்பு, செடிகளை நோயில்லாமல் காப்பாத்துவது, புதுவகைகளை பரிசோதிச்சு நடுவது, (Pest Management , Disease Management, Site, Rootstock, Varieties, Planting Systems and Production Management, Spray application technolog, Soil Management , Weed, Shelter and Understory Management, Water Management ) இப்படிப் பலதரத்திலும் ஆலோசனைகளைக் கொடுக்கறாங்க. இந்த என்ஸா என்னும் ப்ராண்ட் ஆரம்பிச்சதும் 1991 வது வருசம்தான். அதுக்கு முந்தி New Zealand Apple & Pear Marketing Board ன்னு நீட்டி முழக்கிக்கிட்டு இருந்தாங்க. இப்பப் பாருங்க 'ச்சிக்'ன்னு நாலே எழுத்துலே (ENZA) சுலபமா சொல்லவேண்டியதைச் சொல்லுது:-) இவுங்க உதவியுடன் விளையும் பழங்களில் என்ஸாவின் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதுவே தரமான பழம் என்பதுக்கு உத்தரவாதம்தான்.


உலகம் முழுசும் 7500 ஆப்பிள் பழவகைகள் இருக்கு. இதுலே 2500 வகைகள் அமெரிக்காவில் பயிரிடறாங்க. வியாபாரத்துக்குன்னே 100 வகைகளை சிறப்பாப் பயிர் செய்யறாங்களாம். 50 மாநிலங்களில் ஆப்பிள் விளையுதாம் இப்படி ஏகப்பட்ட விவரங்கள் கொட்டிக்கிடக்கு இங்கே!

ஒரு ஆப்பிள் பழம் நல்ல முறையில் விளைய வெய்யில் முக்கியம். வருசத்துக்கு 1200 மணிநேரம் சூரிய ஒளி, குறைஞ்சபட்சமா 7.2 செண்டிகிரேடு சூடு( !!!!) அருமையான பனிக்காலம் எல்லாம் வேணுமாம். குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் ஆரம்பிச்ச சில வாரங்களில் ஆப்பிள் மரங்கள் பூக்கத் தொடங்கிருது. முதலில் மொட்டுகள், பூக்கள். அப்புறம்தான் இலைகள் வரத்தொடங்குது.மொட்டுபூகாய்/பழம் (போன சீஸனில் காய்ச்சது)


இங்கே பாருங்க சிகப்பு மொட்டு, வெள்ளைப்பூ, பச்சை ஆப்பிள்( க்ரானி ஸ்மித் க்ரீன் ஆப்பிள்) வரும் நம்ம வீட்டு மரத்தை க்ளிக்கியது.

தினம் ஒரு ஆப்பிளைத் தின்னால் டாக்டரிடம் போகவே வேணாமாம். நெசமாத்தான் சொல்றாங்களா????

29 comments:

said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

said...

ஆப்பிள் பூவெல்லாம் இப்பத்தான் பார்க்கிறேன்..

இங்க தில்லி வந்தப்பறம் ஆப்பிள்ன்னா அது பச்சை ஆப்பிள் தான் சூப்பருன்னு ஆகிப்போச்சு...

said...

ஆப்பிள் பணக்காரர்கள் பழமாகிப் போச்சு... எங்க கேண்டீனில் தினமும் ஒரு ஆப்பிள் தர்ராங்க... இப்ப ஆசையே விட்டுப் போச்சு.
வேலை செய்யும் அரண்மனையில் நிறைய ஆப்பிள் மரங்கள் இருக்கு... ஆனால் பூப்பூத்து சின்னதா காயாகும் போதே குரங்குகள் பிய்த்து போட்டு விடுகின்றன. சில மரங்களில் வலை போட்டு பாதுகாக்கப்பாங்க .டேஸ்ட் பண்ணினா நல்லா இருக்கும்.
(அரேபியாவில் ஆப்பிள் மரங்களான்னு கேக்கப்படாது... நாங்க இருப்பது கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் இருக்கும் குளிர் மலைப் பிரதேசம்)

said...

சிரிக்காம கேட்டிங்கன்னா ஒன்னு சொல்லுவேன்!

ஆப்பிள வெட்டிப்போட்டு குழம்பு வைச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்!
வீட்டுக்கார அம்மாகிட்ட சொன்னா! ''நீங்க என்னா லுசான்னு'' கேட்டுச்சி!
நானும் விடாம அடம் புடிச்சு, ஆப்பிள் கொழம்பு வைக்க சொன்னேன்!
சரின்னு புளி கொழம்புல ஆப்பிள வெட்டிப்போட்டு வைச்சு கொடுத்துச்சி
பீர்க்கன் காய் ஒருகாய் கொழம்புல போடுவாங்க, அதுபோலவே இருந்தது
நம்ம புளி கொழம்புல போட்ட ஆப்பிளும்.


(நெஞ்சுல தில்லு இருந்தா நீங்களும் ஆப்பிள் கொழம்பு வைச்சு சாப்பிட்டு பாருங்க)

said...

வீட்டுக்கு வீடு ஆப்பிள் மரமா? சரி தான். நாங்க எல்லாம் பெங்களூர் தக்காளியவே ஆப்பிள்ன்னு சொல்லிக்கறோம். :))

ஆப்பிள் கேசரி செஞ்சு சாப்டுங்க. (என் வயிதெறிச்சல் சும்மா விடாது, இப்பவே சொல்லிட்டேன்). :))

said...

\\முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆப்பிள் பூவெல்லாம் இப்பத்தான் பார்க்கிறேன்..
\\\

ரீப்பிட்டே..;)

said...

துளசி மேடம்

எனக்கும் இந்தியாவில் இருந்த வரையில் ஆப்பிள் ரொம்ப பிடித்தது, இங்கே விலை குறைவாக இருப்பதால் சலித்துவிட்டது :) :)

said...

Hi,

The experience of reading your blog itself is first of its kind for me. It makes me smile, makes me learn a few new things, and wonder at the pretty pictures. Your witty blog makes me happy!

First time saw an apple flower.. Funnily, I did not enjoy eating apples in USA. Got used to the sourish tasting indian ones I suppose.

Thanks and god bless

said...

அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆடி.. ஆப்பிள்ல இவ்ளோ வகைகள் இருக்கா?
ரொம்ப உபயோகமான் தவல்கள் தான்..நன்றிம்மா.. :)

said...

//தினம் ஒரு ஆப்பிளைத் தின்னால் டாக்டரிடம் போகவே வேணாமாம். நெசமாத்தான் சொல்றாங்களா????//

வீட்ல இருக்கிற தட்டு முட்ட்ச் சாமான் எல்லாம் அடகுக் கடைக்கு போகுமே.. பரவால்லையா? :)

said...

நாங்க போனதடவை ஆப்பிள் பிக்கிங் போனோம். கூட வந்தவங்க நம்ம கே ஆர் எஸ், வெட்டி, இளா மற்றும் ஒரு நண்பர் குடும்பம். சரவணபவனில் இருந்து சாப்பாடு எல்லாம் வாங்கிட்டுப் போய் ஒரு பிக்னிக் ஆக்கிட்டோம்!! இந்த வருஷம் இன்னும் ப்ளான் பண்ணலை!

said...

முதல்லே தாமதமான பதில்களுக்கு மாப்பு. கூடுதலா விழாக்கால ஆணிகள் பிடுங்கவேண்டியதாப் போச்சு.


இந்த வலைப்பூக்களைப் பற்றி நண்பர்கள் யாராவது சொல்லுங்கப்பா. எப்படி? சேர்ந்துரலாமா?

உலகத்துக்கெல்லாம் (நம் எண்ணங்களைக்) காமிக்கலாமுன்னு சொல்றாங்க:-)))

said...

வாங்க கயலு.

நானும் ஆப்பிள் பூக்களை நம்ம வீட்டில்தான் இவ்வளோகிட்டக்கப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

said...

வாங்க தமிழ் பிரியன்.

அரேபியாவில் மலை உச்சியிலா? கேக்கவே நல்லா இருக்கே!!!ஆஹா.... அதைப் பத்தி ஒரு பதிவு போடுங்களேன் படங்களுடன்.

said...

வாங்க ஜீவன்.

ஆப்பிள் பஜ்ஜி, ஆப்பிள் ஊறுகாய், ஆப்பிள் சட்னின்னு, ஆப்பிள் கூட்டு எல்லாம் செஞ்சு பார்த்தாச்சு. அதிலும் இந்த க்ரீன் ஆப்பிள் போட்டுக் கூட்டுச் செஞ்சால் புளியும் சேர்க்கவேணாம். (இங்கே புளி விலை கூடுதல்)

இந்த ப்ளம் பழங்கள் இருக்கே. அது காய்ச்சுவரும்போது பார்க்க அச்சுஅசலா மாவடு மாதிரி இருக்குன்னு அதை மாவடுமாதிரியே செஞ்சும் பார்த்துட்டேன். நல்லாத்தான் இருக்கு. ஆனா நாள்பட வைக்கமுடியலை(-:

said...

வாங்க அம்பி.

ஆப்பிள் கேஸரி, பைனாப்பிள் கேஸரி எல்லாம் செஞ்சு முழுங்கியாச்சு. இப்பக் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டி இருக்கு. கொலஸ்ட்ரால் பயம்தான்(-:

said...

வாங்க கோபி.

இங்கே நம்ம வீட்டில் 11 ஆப்பிள் மரங்கள், ஒவ்வொன்னும் ஒரு வகையா இருந்ததைத்தான் வீடுகட்டப் பழைய வீட்டை இடிச்சு நிரவுனப்ப எடுக்கவேண்டியதாப் போயிருச்சு. அப்படியும் ஒன்னே ஒன்னு வேலிக்கருகில் நின்னதால் தப்பியது.
அந்தப் பூக்கள்தான் இவை.

said...

வாங்க க.ஜூ.

எனக்கும் மா, பலா வாழைன்னுதான் பிடிச்சிருக்கு. ஆப்பிளைப்போல 10 மடங்கு விலை இங்கே(-:

said...

வாங்க வெற்றிமகள்.

//....makes me learn a few new things...//

ஆஹா..... நாலுபேருக்கு உதவியா இருக்குன்னா இப்படிப் பதிவு எழுதுவது தப்பே இல்லைன்னு அன்னைக்கே வேலு(நாய்க்கர்) சொல்லிட்டாரேப்பா:-)))))

said...

வாங்க பொடியன் சஞ்சய்.

அப்ப டாக்குட்டரே மலிவுன்னு சொல்றீங்களா?:-)

said...

வாங்க கொத்ஸ்.

ஆப்பிள் பிக்கிங் கூடவே வலைப்பதிவாளர் சந்திப்பா?

பலே பலே பேஷ் பேஷ்.

என்னென்ன வகைகள் இருந்தன?

said...

"தினம் ஒரு ஆப்பிளைத் தின்னால் டாக்டரிடம் போகவே வேணாமாம். நெசமாத்தான் சொல்றாங்களா????"

ஒரு நாள் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால்
டாக்டரிடம் செல்ல வேண்டாம்
ஒரு நாள் ஒரு நர்ஸை சாப்பிட்டால்
ஆப்பிளை சாப்பிட வேண்டாம் !!!

said...

வாங்க சாய்ராம் கோபாலன்.

நீங்க இப்படி ஒரு நர மாமிச பட்சிணியா?

நர்ஸை(சிஸ்டர்) எப்படிச் சாப்பிடுவீங்க(-:

said...

ஆப்பிள் வகைகள் பிரமிக்க வைக்கின்றன.

தினம் ஓர் ஆப்பிள் தின்னலாம். ஆனால் இங்கே வெளிநாட்டு லேபிளுடன் வருகின்ற ஆப்பிள்கள் எல்லாம் ஆறு மாதம் வரை பழையதாம். கெடாமல் இருப்பதற்காக விசேஷ கிரீஸ் தடவுகிறார்களாம். தோல் சீவாமல் சாப்பிட்டு விடாதீர்கள் என்று எச்சரிக்கை ஒன்று படித்தேன். எதற்கு வம்பெழவு, அதுக்குப் பதில் டாக்டரையே பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம். (இப்போது டாக்டரைப் பார்ப்பதும் குறைந்து விட்டது?)

said...

நானும் சிம்லாவில் வாழ்ந்த நாட்களில் இந்த காட்சிகளை கண்டிருக்கிறேன். ஆப்பிள் பூக்கள் ஒருபுறம் பூத்திருக்க சட்லெஜ் நதிக்கரையோரத்தில் மணாலி செல்லும் ரோட்டில் பயணம் போக இனிமையாயிருக்கும். பழம் பழுத்த நாட்களில் சென்று காரை நிறுத்திவிட்டு, தோட்டக்காரரிடம் பழம் வேண்டும் என்று கேட்டால் பறித்துக்கொள்ளுங்கள், விலை சொல்கிறேன் என்பார். கைகளுக்கு கிடைத்த பழங்களை பறித்து காரின் டிக்கியில் அடுக்கிவிட்டு, எவ்வளவு தருவது என்று கேட்டால், டிக்கியை திறந்து பார்த்துவிட்டு, தோராயமாக எடையை கணக்குப் போட்டு ஒரு முப்பது ரூபாய் கொடு என்பார். ஆனால் உண்மையில் அந்தப் பழங்கள் கடைக்கு வந்தால் நூறு ரூபாய்க்கு கூட விற்பனையாகலாம். அநேக முறை மனது கேட்காமல் ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம்.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

நியூஸியில் இப்படிச் செய்வதில்லை. அதிலும் இந்த என்ஸா ப்ராண்ட் உள்ளதுக்கு ஆப்பிளின் தரம், மனுசன் சாப்பிடக்கூடிய தரத்துக்கு உத்தரவாதம்னு இருக்கு.

இன்னும் காசு காசுன்னு அலையும் குணம் நியூஸிக்கு வரலைன்னு நினைக்கிறேன். அணு சம்பந்தமுள்ள எதுவும் நியூக்ளியர் பவர் உள்படக் கூடாதுன்னு சொல்லும் நாடு.

ஜெனெக்டிக்கலி மாடிஃபைடு பொருட்களை நாட்டுக்குள்ளேயே விடமாடாங்க. என்னதான் ஃப்ரீ ட்ரேடு ஒப்பந்தம் இருந்தாலும்.

இன்னும் கெட ஆரம்பிக்கலை.(நான் நாட்டைச் சொல்றேன்)

said...

வாங்க பெஞ்சமின் பொன்னையா.

வணக்கம். நலமா? புதுசா முதல்முறையா வந்துருக்கீங்க போல?

சிம்லா, மணாலின்னு சொல்லும்போதே மனசுக்குள்ளே 'ஜில்'ன்னு இருக்கு!

விவசாயிகள் இன்னும் வெகுளியாத்தான் இருக்காங்க. நமக்குத்தான் நகரத்தின் விலை எல்லாம் அத்துப்படி ஆனதாலே, நமக்கு இவுங்க வெகுளித்தனம் பாவமா இருக்கு.

வருகைக்கு நன்றி.

அடிக்கடி வந்து போங்க.

said...

//எனக்கும் மா, பலா வாழைன்னுதான் பிடிச்சிருக்கு. ஆப்பிளைப்போல 10 மடங்கு விலை இங்கே(-:
//

வாழைப்பழம் இங்கேயும் மலிவு தான்.

மாம்பழம் பரவாயில்லை, ஓரளவு வாங்கலாம்.

பலாப்பழம் 1 பவுண்ட் 1.99$ என்று விற்கிறது(தோலுடன்). அது ரொம்ப அநியாயம், நம்மூரில் எல்லாம் ரொம்ப சீப்பான பழத்துக்கு இங்கே மார்கெட் பாருங்க!

said...

க.ஜூ.

மெக்ஸிக்கன் மாம்பழம் இங்கே வருது. ஒரே புளிப்பு. இதுக்குப் பதிலா இந்திய அல்ஃபோன்ஸா மாம்பழக்கூழ் கிடைக்குதுபாருங்க இந்தியன் கடைகளில்,
அதுவே நல்லா இருக்கு. திங்கமுடியாது. ஆனா மில்க்ஷேக் பண்ணிக் குடிக்கலாம். வாசனையாவது இருக்கே. உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....ஹ்ஹ்ஹ்ஹா