காலையில் இருந்தே மாய்ஞ்சுமாய்ஞ்சுப் பாத்திரம் தேய்ச்சுக்கிட்டு இருந்தேன். ராத்திரி எல்லாத்தையும் எடுத்து ஏறக்கட்டிட்டு, சாப்பிட்டத் தட்டுகளையெல்லாம் ச்சும்மா ஒரு அலசு அலசறேன்னு கார்டன் ஹோஸ் வச்சுத் தண்ணியடிச்சு எடுத்துவச்சுட்டோம். இதுக்கே பனிரெண்டுமணிக்கு மேலே ஆகிருச்சு.
தட்டுகள் அளவில் பெருசா இருப்பதால் இந்த டிஷ் வாஷரில் சரியா வைக்க முடியாது. தம்ளர்களை, கரண்டி, பாத்திர மூடிகள்ன்னு சிலதைமட்டும் நேத்து இரவே ரெண்டு டிஷ் ட்ராவிலும் போட்டுவச்சேன் .
ரெஸ்ட்டாரண்ட் ஓனர் நமக்குப் பல வருசங்களாவேத் தெரிஞ்சவர். (தம்மாத்தூண்டு ஊர்லே புதுசா நம்மாளுங்க யாராவது யாவாரம் தொடங்குனாத் தெரியாமப் போயிருமா என்ன?) இதுபோல பூஜை,புனஸ்காரம்(அது என்ன காரமுன்னு கேக்காதீங்க. இப்படிச் சொல்வதுதான் ஐதீகம்) நிகழ்ச்சிகளுக்குன்னே நாலுவருசத்துக்கு முந்தி ஒரு அம்பது தட்டுகளையும், அம்பது தம்ப்ளர்களையும் வாங்கி வந்துருந்தாராம். அது 'அப்ப ' நமக்குத் தெரியாது. நாமும் இப்ப நாலுவருசமாத்தான் சாப்பாடு அங்கே ஏற்பாடு. முதல்முதலில் ஆர்டர் கொடுக்கப்போனப்ப, தட்டுகள் எங்காவது வாடகைக்குக் கிடைக்குமான்னு கேட்ட நினைவு. நம்ம சாப்பாட்டு ஐட்டங்களுக்கு பேப்பர் ப்ளேட் வசதியா இருக்கறதில்லைப்பா(-: குழம்பு ஊத்திப் பிசையணுமா இல்லையா?
'எங்கிட்டே தட்டுகள் இருக்கு. நான் தர்றேன்'னு அவரே சொன்னார்.அதுவும் இலவசமா. அடிச்சோம் ப்ரைஸுன்னு இருந்துச்சு.புதுத்தட்டுகளைப் போணி பண்ணிட்டோமுல்லெ:-) அந்த வருசம் விருந்தினர் எண்ணிக்கையும் ரொம்பக் கூடுதல். வீட்டுத் தட்டுகளையும் சேகரிச்சு ஒருவழியா அமர்க்களமா நடந்துச்சு. இப்படி நல்லமனசோடு தரும் உதவியைப் பாராட்டும் விதமா, நாமும் பளிச்சுன்னு சுத்தம் செஞ்சு கொடுக்கவேணாமா? இதுங்களுக்கு ஏண்டாக் கொடுத்தோமுன்னு நொந்து நூடுல்ஸ் ஆக விடலாமா?
காலையில் வெள்ளென 10 மணிக்கு எழுந்து பாத்திரம் தேய்க்க ஆரம்பிச்சேன். கோபாலும் இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமாப் பதினோரு மணிக்கே எழுந்து வீட்டை முந்தி இருந்த (அலங்)கோலத்துக்குக் கொண்டுவந்தார். கோகியும் ஓடி ஓடி எல்லாம் சரியா இருக்கா......... முக்கியமா அவனோட நாற்காலிகள் எல்லாம் இருக்கவேண்டிய இடத்துலே இருக்கான்னுச் செக் பண்ணிக்கிட்டு இருந்தான். பூனை சிரிக்காதுன்னு யாராவது சொன்னால் நம்பாதீங்க,ஆமாம்.
வெள்ளிக்கிழமைக் கர்வாச்சவுத் நோன்பு இருக்கு. மறக்காம வந்துருன்னு சேதி சொல்லிட்டுப் போயிருக்காங்க நம்ம பஞ்சாபித் தோழி. நம்ம பூஜைக்கு வந்திருந்தக் கேரளத்தோழிக்கும் அழைப்பு உண்டு. அவுங்க நான் எப்ப வருவேன்னு கேட்டப்ப, 'நான் ஏற்கெனவே இதைப்பத்தி எழுதியாச்சு. அதனால் இந்த முறை எஸ்கேப்பு' ன்னு சொன்னதுக்கு சுட்டி அனுப்பச் சொல்லிட்டுப் போனாங்க. எனக்கு மலையாளம் படிக்க வர்றது மாதிரி தோழிக்குத் தமிழ்ப் படிக்க வரும். இதுதான் தோழிக்கு அனுப்புன சுட்டி. கர்வா ச்சவுத்.
மரியாம்மெ, நாலைஞ்சு நாளைக்கு முன்னேயே, 'ஞாயராழ்ச்ச நாலுமணிக்குப் பள்ளியில் குருபானை உண்டு'ன்னு சொல்லி இருந்தாங்க. சிஸ்டர் அல்ஃபோன்ஸா, விசுத்தயாயதினைப் ப்ரமாணிச்சு நடக்கான் போகுன்னு. வரேன்னு சொல்லி இருந்தேன். ஒரு அஞ்சாறு நிமிஷ ட்ரைவ்தான். 'கிறைஸ்ட் த கிங் சர்ச்''. சுட்டிக் கேட்ட தோழியும் அங்கே ஆஜர். சுட்டி கிடைச்சது. படிச்சுட்டேன். இண்டெரஸ்டிங்கா இருக்கும்போல..... நான் போய்ப் பார்க்கப்போறேன். கதை இப்பத் தெரிஞ்சுபோனதால் பிரச்சனை இருக்காது'ன்னு சொன்னாங்க. தோழிக்கு ஹிந்தி தெரியாது.
பள்ளிக்ககத்து நல்ல திரக்கு. வீட்டுலே இருந்து கிளம்பும்போதே கோபால் கேட்டார், இந்த சர்வீஸ், கேரளா கிளப்பா நடத்துதுன்னு. இல்லை. இங்கே இருக்கும் மலையாளிகள் (ஒரே ஒரு குடும்பம்தவிர மற்ற எல்லாவரும் கிறிஸ்தியானிகள்) சேர்ந்து நடத்தறாங்கன்னு சொன்னேன்.
அதெப்படி? க்ளப்புக்கு வராதவங்க க்ரூப் தனியா நடத்தலையா?
இதென்ன கேள்வி சகாவே..... அதுவேற, இது வேற. மதத்தையும், பொழுதுபோக்கையும் நல்லாவே புரிஞ்சுவச்சுருக்காங்க. எல்லாத்துக்கும் கொள்கைன்னு ஒன்னு இருக்கே சகாவே. எனக்கு விவரம் சொன்ன மரியாம்மெ கூட கேரளா க்ளப்புக்கு வராதவுங்கதானே?
பள்ளியில் என்னைப் பார்த்ததும் அந்த 'இந்துத் தோழி' ஓடிவந்து என் பக்கத்துலே நின்னாங்க. கம்பெனி இருக்குமாம்:-) நான் முடிஞ்சவரை பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்துக்கும் வழக்கம் இருப்பதால் எனக்கு ஸப் ச்சல்த்தா ஹை:-)))
உள்ளே அலங்காரம் ஆடம்பரமில்லாமல் இருந்தது. இப்படித்தான் இருக்கணும். அப்பத்தானே மனம் ஒன்றி பூஜையில் லயிக்க முடியும். நல்ல விஸ்தாரமான ஹால். அதுக்குமுன்பக்கம் சின்னதா ஒரு ஆல்ட்டர்(கர்ப்பக்கிரகம்?) ஹாலில் ஆறுபேர் தாராளமா உட்காரும் அளவில் நீள நீள பெஞ்சுகள், நடுவே நடைபாதைவிட்டு ரெண்டு வரிசைகள். முழங்காலிட்டுப் பிரார்த்திக்க நம் காலுக்கு முன்னே மரப்பலகைகள் பொருத்தி இருக்கு. இந்த ரெண்டுவரிசை இல்லாம வலதுபுறமும் இடதுபுறமும் ஒரு கோணத்தில், ஆறுவரிசைகளா இதே மாதிரி பெஞ்சுகள்.
உள்ளே நுழையும்போதே சிறுமிகள் புன்சிரிப்போடு வாசலில் நின்னு எல்லாருக்கும் அல்ஃபோன்ஸா அம்மாவுடைய படம் ஒருபக்கம், பிரார்த்தனை ஒரு பக்கமுன்னு அச்சடிச்சத் தாளைக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க.
நாலே காலுக்கு சர்வீஸ் துவங்கியது. எரியும் மெழுகுவர்த்தி உள்ள பித்தளை ஸ்தம்பங்களைத் தூக்கிப் பிடிச்சு, ஒரு யுவதியும், பின்னே ரெண்டு இளைஞர்களும் நடைபாதையில் வந்தாங்க. அவர்களுக்குப் பின்னே ரெண்டு நபர்கள்.
அவர்களுக்குப் பின்னே நாலு அச்சன்மார் சின்ன ஊர்வலமா வந்தாங்க. இந்த நாலிலே ஒருவர் நம்ம கொச்சியில் இருந்நு வந்ந அச்சன்.(மாவேலி வந்நப்பக் கேரளாவே இல்லைன்னு ஒரே போடு போட்டாரே நம்ம ஓணம் பண்டிகை விழாவில் அவரேதான்). மற்ற மூவரும் வெள்ளையர்கள்.
ஆல்ட்டரின் முன்னால் ரெண்டு மெழுகுவத்தி ஸ்டேண்டையும்( குத்துவிளக்கு?) ரெண்டுபக்கமும் வச்சுட்டு வலதுபக்கம் சுவரோடு பொருத்தி இருந்த ஒரு சின்ன பெஞ்சில் போய் உக்கார்ந்தாங்க அந்த இளைஞர்கள். உடுப்புக்கு மேலே ஒரு வெள்ளை அங்கியும் போட்டுருந்தாங்க. அச்சன்மார் பெரிய மேசைக்குப் பின் வரிசையா நின்னவுடன், நம்மட அச்சன் ஒரு ஜெபம் சொன்னார். அது முடிஞ்சதும் நாலுபேரும் சுவர் ஓரமா இருந்த நாலு கஸேரகளில் அமர்ந்தாங்க. சுவரின் ஒருபுறம் இந்தியா & நியூஸி நாடுகளின் தேசீயக் கொடி தொங்க விடப்பட்டுருந்துச்சு. சிலுவையில் தொங்கும் ஏசுநாதர் உருவம் சுவரில்.
ஊர்வலத்தில் வந்த ரெண்டு நபர்களும் வந்தவர்களை வரவேற்று சில வார்த்தைகள் சொல்லி, பைபிளில் குறிப்பிட்ட சில வசனங்களைப் படிச்சாங்க. அப்புறம் எல்லோருமாச் சேர்ந்து பாட்டு. மக்களுக்காகப் பாட்டின் வரிகள் உத்தரத்தில் இருந்து தொங்கும் பெரிய ஸ்க்ரீனில் காமிக்கப்பட்டுச்சு. மலையாள மொழியில் கையெழுத்தில் இருந்துச்சு. இப்பத்தான் கணினியில் மலையாளம் எழுத்துரு கிடைக்குதே. அதுலே தட்டச்சுச் செஞ்சுபோட்டால் இன்னும் தெளிவா இருக்கும். சொல்லணும்.
நமக்கு முன்வரிசையில் இருந்த அஞ்சு பக்தர்கள் மட்டுமே உள்ளுர் வெள்ளைக்காரர்கள். பிரார்த்தனைகள், பாட்டு, இடைக்கிடையே நம்ம மக்கள் ஏற்கெனவே தெரிந்தெடுக்கப்பட்ட பைபிள் வசனங்களை படித்தல் இப்படிப் போய்க்கிட்டு இருந்துச்சு. நிகழ்ச்சியை முழுசும் நடத்துனது நம்மட அச்சன் தான். அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். முதலில் ஆங்கிலத்தில் ரெண்டு நிமிசம் பேசிட்டு, மலையாளத்துக்கு மாறினார்.
முதல்முதலா இந்தியாவில் இருந்து ஒரு பெண் கன்னியாஸ்த்ரீ புனிதர் ஆனது பற்றிச் சொன்னார். அதிலும் சிஸ்டர் அல்ஃபோன்ஸா, நம்மட ஸ்வந்தம் கேரளத்தில் ஜெனிச்சு வளர்ந்ந ஒரு மலயாளி. இந்தியாவில் ஏற்கெனவே கொன்ஸாலோ கார்ஸியா (Gonzalo Garcia) ஒரு புனிதர் ஆகி இருந்தாலும் அவர் பம்பாயைச் சேர்ந்தவர். அவருடைய அம்மா மட்டுமே இந்தியர். அப்பா போர்த்துகீஸியர். அதானால் அவரை 'கொம்ப்ளீட் இண்டியன்'னு சொல்ல முடியாது. அந்தக் கணக்கில் புனிதரான முழு இந்தியர் நம்மடெ அல்ஃபோன்ஸா அம்மெதான்னும் சொன்னார். அப்புறம் அம்மெயின் வாழ்க்கை வரலாறையும் சொன்னார்.
காலையில் நானும் வலையில் சிலவிவரங்களைப் படிச்சுக்கிட்டுப் போனதால், அன்னாக்குட்டி 1910 இல் ஜெனிச்சதும், கல்யாணம் கழிக்குன்னதில் இருந்து ஒழிவாகான் அரக்கப்பொடித் தீயில் தண்டே காலை அமர்த்தி சரிக்கு நடக்கான் பற்றில்லாத ஸ்த்ரீயாயதும், பின்னே மடத்திலே சேர்ந்நு, அல்ஃபோன்ஸா என்ன பேரில்( மறு ஜென்மம் எடுத்தாற்போல) கன்யாஸ்த்ரீயாயதும், சகலரோடும் ஸ்நேகபூர்வமாயி பெருமாருன்ன வ்யக்தியாயதும், பின்னே சுககேடு வந்நு, தண்டே முப்பத்தியாராமத்து வயசில் மரிச்சதும், அதிண்டே சேஷேம் அல்புதங்கள் காணிச்சதுமுன்னு எல்லாம் நல்லோணம் மனசிலாயி.
பெண்குழந்தைகள் புனித அல்ஃபோன்ஸா அம்மெக்கு பூக்களை ஏந்திவந்து சமர்ப்பித்தார்கள். புஷ்பம் சமர்ப்பியாமி.
இன்றைய சர்வீஸில் ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யும் நிகழ்ச்சியும் இருந்துச்சு. கடைசியாக ஹோலி கம்யூனியன். கன்ஃபர்மேஷன் எடுத்தவங்க மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி. அப்பமும், திராட்சை ரசமும் கொடுப்பாங்க. நீங்க வரிசையில் போய் நின்னுறாதீங்கன்னு கோபாலைக் கண்ணால் மிரட்டினேன்:-)))))
நம்முடெ அச்சன் வரிசையில் போனவர்களுக்கு அப்பம்( லேசான சின்ன வேஃபர் பிஸ்கெட்) கொடுத்தார். ஒவ்வொருவரா உள்ளங்கையில் வாங்கி வாயில் போட்டுக்கிட்டாங்க. பல்லில் படாமல் சாப்பிடணுமாம். நாவில் பட்டதும் கரையும் விதமா இருப்பதால் அப்படியே விழுங்கிறலாமாம். ஹாலின் ரெண்டுபக்கமும் பக்கத்துக்கு ஒருவராக அச்சன்மார் நின்னு, ஒரு கையில் ஒயின் உள்ள கோப்பையையும், மற்ற கையில் ஒரு கைகுட்டைபோல துணியும் வச்சுருந்தாங்க. மக்கள் ஒவ்வொருத்தரும் கோப்பையைக் கையில் வாங்கி உதட்டில் வச்சு ஒயினில் ஒரு 'ஸிப்' குடிச்சதும், அச்சன் உதடு பட்ட இடத்தைத் துணியினால் துடைச்சுட்டு வரிசையில் அடுத்து நின்னவங்களுக்குக் கோப்பையை நீட்டினார்.
ட்ரிங்க்ஸ் பாட்டில் ஷேர் பண்ணக்கூடாது. ஹெபடைட்டிஸ் வரும்னு இங்கே பள்ளிக்கூடங்களிலும், தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் வருவதைக் கவனிச்சிருந்த எனக்கு இதை வேற மாதிரிக் கொடுத்தால் தேவலையேன்னு இருந்துச்சு.
போனவருசம் ப்ரிஸ்பேனில் ஒரு Mormons church போனப்ப நடந்ததை எழுதி இருந்தேன் அதிலிருந்து சிலவரிகள்
நல்ல கூட்டம் இருக்கு. எல்லாரும் நீட்டா உடை உடுத்தி வந்துருந்தாங்க. அன்பா வரவேற்று உள்ளெ போகச் சொன்னாங்க.பெரிய ஹால்தான். ஒரு கோடியில் மேடை இருக்கு. அதுலே ஒரு மைக். கீழே நிறைய நாற்காலிகள். குழந்தையும் குட்டியுமா ஜேஜேன்னு இருக்கு. கடைசி வரிசையில் உக்கார்ந்தோம். ஒரு ட்ரே மாதிரி (தூக்குக் கைப்பிடியுள்ளது) வரிசையா எல்லார்க்குமுன்னே நீட்டிக்கிட்டே வந்தாங்க. மக்கள் அதுலே இருந்து ஒண்ணை எடுத்து வாயில் கவுத்துக்கிட்டு திருப்பி காலிக்குப்பியை அதுக்குன்னு இருக்கும் இடத்துலே போடறாங்க. கண்ணு பார்த்தா கை செய்யாதா நமக்கு? அரை ஸ்பூன் அளவு வரும் தண்ணீர்( தீர்த்தம்?)அதுக்கேத்தமாதிரி ச்சின்ன்ன்ன்ன்ன டம்ப்ளர். நம்மூர்லே டீக்கடைக்காரப் பையன் கொண்டுவரும் அஞ்சாறு டீ க்ளாஸ் வைக்கும் கொத்து ஞாபகம் வந்துச்சு.
அடுத்தவங்க பூஜை முறையில் மூக்கை நுழைக்கிறேன்னு நினைக்கப்படாது. எல்லாம் சுகாதாரத்தை உத்தேசித்து வரும் எண்ணங்கள்தான்.
கடைசியில் நம்மட அச்சன், 'பரிபாடி முடிஞ்சது. வாசல் பக்கத்து ஹாலில் உணவுவகைகள் ஏற்பாடு ஆகி இருக்கு. எல்லாரும் சாப்பிட்டுட்டுப் போகணு'முன்னு அறிவிச்சார். ஆரம்பத்துலே உள்ளே வந்தமாதிரியே, மெழுகுத்திரி விளக்கோடு இளைஞர்கள் முன்னே போக அச்சன்மார், எல்லோரும் சின்ன ஊர்வலமா வெளியே போனாங்க.
சரியா ஒன்னரைமணி நேரம் ஆகி இருக்கு இந்த வழிபாட்டுக்கு. நடுவில் பலமுறை எழுந்து நின்னும் மறுபடி உக்கார்ந்து தலை குனிஞ்சு ஜெபிச்சும், பாட்டுக்கள் பாடியுமுன்னு நடந்திருந்தாலும் களைப்பே இல்லை. தரையில் உக்காராமல் பெஞ்சில் இல்லை நாற்காலியில் இருந்தால் முழங்கால் வலி வர்றதே இல்லை. வலி பிடுங்காததால் வழிபாட்டில் லயிக்க முடியுது. நம்ம இந்துக் கோயில்களில் இப்படி ஒரு ஏற்பாடு இருந்தால் நல்லா இருக்கும். கோயில்கள் பழங்காலத்தில் கட்டுனவை. அங்கே வசதிகள் போதாதுன்னா............ வீட்டில் நடத்தும் பூஜைகளில் இருக்கைகளில் இருந்து பூசித்தால் 'மரக்கால்'களுக்கு மோட்சம் கிடைக்குமேன்னு தோணுது.
இதைப் பற்றி சில நண்பர்களுடன் உரையாடுனப்ப, 'நம்ம பூஜைகளில் தரையில்தான் உட்கார்ந்து பூஜிக்கணும். அதுதான் முறை'ன்னு சொல்றாங்க. 'சாமிக்காகக் கொஞ்சநேரம் உக்கார்ந்தா என்ன?' ன்னு வேற ஒரு கேள்வி.
நம்மைவிட மேலான இடத்தில் சாமியை வைக்கணும். இதுதான் பிரச்சனைன்னா...ஒரு உயரமான மேடையில் சாமியை வச்சுட்டு, நாம் நாற்காலிகளில் இருந்தால் தப்பா? பேசாம என்னைப்போல் கால்வலி உள்ளவர்கள், வயசு கூடிய ஆட்கள் (இவுங்களுக்குத்தான் எல்லா வலியும் வந்து ஆட்டிவச்சுக்கிட்டு இருக்குமே) சிலரைச் சேர்த்துக்கிட்டு ஒரு புது இயக்கம் ஆரம்பிக்கலாமான்னு யோசனையில் இருக்கேன்.
நிறைய வகைவகையான ஐட்டங்கள் ஹாலில் இருந்துச்சு. ஒவ்வொரு குடும்பமும் ஒன்னுன்னு செஞ்சு கொண்டுவந்து வச்சுருந்தாங்க. வெஜிடேரியன் வகையில் அங்கிருந்த ஆலிவ் ப்ரெட்டையும், கொஞ்சம் பழங்களையும் சாப்பிட்டுட்டு வந்தோம். ஆறுமணி ( உண்மை மணி மாலை 5)க்கே என்னன்னு சாப்பிடறது? ரெண்டுங்கெட்டான் நேரமில்லையோ?
நன்றி அறிவிப்பு: மறுபடியும் கோபாலுக்குத்தான் நன்றி. கேமெராவை மறந்துவிட்டதால் அவருடைய 'ப்ளாக்பெர்ரி'யில் எடுத்த படங்களை இங்கே போட்டுருக்கேன்.
என்னுடைய முதல் வாசகரின் பிடுங்கலால் அரும்சொற் பொருட்களின் விளக்கம் இதோ:-)
குருபானை = வழிபாடு, செர்வீஸ்.
விசுத்தி= பரிசுத்தர். (விநாயகர்ன்னு சொல்வோமே அதிலும் வி என்பது சிறப்பு என்று பொருள்)
கஸேர = நாற்காலி,
அரக்கப்பொடி = உமிக்கரி
இன்னும் புரியாத சொற்கள் இருந்தால் சொல்லுங்க. வெளக்கிறலாம்:-)
Tuesday, October 14, 2008
அனந்த பத்மநாபனும் அல்ஃபோன்ஸாவும்..(மீதிக் கதை)
Posted by துளசி கோபால் at 10/14/2008 11:35:00 AM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
மீ த பர்ஸ்ட்... ரொம்ப நாள் ஆசையாக்கும்... மதியமா பதிவைப் படிக்கிறே. இப்ப நேரமில்லை.. :)
நம்மூர்லயே பலகை போட்டு அதில் உட்காரும் வழக்கம் இருக்கே.. சிவபூஜைக்காரங்க.. சாமிக்கு ஒரு பெரிய பலகையும்.. உட்காருபவர்களுக்கு உயரம் குறைஞ்ச பலகையும் போடுவாங்களே... அதையே பெரிசா செய்தா டேபிள் சேர் ஆகிடாதா?
போன பதிவிலேயே தட்டுக்கள் பத்தி கேட்க நினைச்சேன் விட்டுப் போச்சு! ஆனா மாணவன் மனசறிஞ்சு பதிவாகவே போட்டுட்டீங்க. ரீச்சர் வாழ்க!! :)
வாங்க தமிழ் பிரியன்.
மனுசருக்கு ஆசைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!!!!
நிதானமா மறுபடியும் வாங்க.
வாங்க கயலு.
மணையில் உட்கார்ந்தாலும் முழங்கால் வலி வருதுப்பா. காலைத் தொங்கப்போட்டு உக்கார்ந்தா பிரச்சனை இல்லை.
இங்கே ஃபிஜி இந்தியர்கள் நடத்தும் விழாக்களில் பள்ளிக்கூட ஹாலை வாடகைக்கு எடுப்பதால் பூஜை செய்யும் பஜன் பாடும் குழுவினர் எல்லாம் ஸ்டேஜ்லே பாய்விரிச்சு அதுலே உக்காருவாங்க. எல்லாம் ஆண்கள் என்பதால் வலி இருக்காது போல!!!!
ஆடியன்ஸ் எல்லாரும் பெஞ்சு, நாற்காலி இப்படி. ஜாலியோ ஜாலிதான்:-)
வாங்க கொத்ஸ்.
பதிவை 'முழுசாப் படிக்கிறீர்'ன்னு புரிஞ்சுக்கலாமா?:-)))))
துளசி அம்மா,
முதல் பகுதியில் தலைப்பிற்கான காரணம் தேடினேன், இந்த பகுதியில் அகப்பட்டது.
:)
இந்த இருபகுதியையும் சேர்த்துப் படிக்கும் போது, இந்து - கிறித்துவத்தை ஒருங்கிணைத்து இரண்டிற்கும் பெருமதிப்புக் கொடுத்து நீங்கள் சுவைபட எழுதி இருப்பதை பாராட்டச் சொற்களே இல்லை.
இருபகுதிகளுமே அருமையாக இருந்தது. இரண்டாவது பகுதியில் மலையாள மண் வாசனையையும் சேர்த்தே சென்னை மீல்ஸ் மற்றும் கேராளா புட்டுடன் சுவைபட இருந்தது எழுத்து.
அட்டகாசம் !
ஒரு பெரிய 'ஓஓஓஓஓஓஓஓஓஓ' போட்டு பாராட்டுக்கிறேன். உங்களின் உற்றத் துணைக்கும் பாராட்டுக்கள் !
உங்களின் செல்ல நாட்டாமை ஜிகேவுக்கு பாராட்டுக்கள்
வாங்க கோவியாரே.
இப்படியெல்லாம் புகழ்ந்தா எனக்குத் தலைக்கனம் வந்துருமேப்பா:-))))
//'கொம்ப்ளீட் இண்டியன்'னு சொல்ல முடியாது.//
:))))
கீழே உக்காந்தா தான் பாதம் அழுந்தும். ரத்த ஓட்டம் சீராகும்.
வெயிட்டை குறைங்க, கால வலி சரியாயிடும். :))
முடிஞ்சா வஜ்ராசனம் தினம் ஐந்து நிமிடம் அமருங்க. எல்லாம் காந்தி தாத்தா ஒக்காருவாரே, முட்டை மடக்கி சம்மணம் போட்டு, அதே தான்.
இதுக்கு தான் சின்ன வயசிலிருந்தே ஒரு இடத்துல அமுங்க சமங்க உக்காந்து இருக்கனும்னு சொல்றது. :)))
பரிபாடின அச்சனுக்கு நன்னி.
எடுத்துச் சொன்ன துளசிக்கும் அஃதே.
எங்கடா அல்பான்சோ மாம்பழம் இருக்குன்னு போன பதிவில தேடினேன்:)
ஜிகே சிரிக்க மட்டுமா செய்வான். அன்னிக்கு கMம்ப்ளைன் பண்ணி பாட்டே பாடினானே கேக்கலியோ:)
எங்க வீட்டு பூஜை அறையில மின்விசிறியும் நாற்காலியும் போட்ட முத ஆளு நாந்தான். பின்ன சுகமில்லாம பிரார்த்தனை செய்தா மனம் அங்க ஒட்டுமா:)
என்ன விளக்கு அணையாம காத்தடிக்க வைக்கணும்:)
ரொம்ப நல்லா ரசிச்சு,சிரிச்சுப் படிச்சேன். சூப்பர் அம்மணி!!!
//காலையில் வெள்ளென 10 மணிக்கு எழுந்து//
:)
தலைப்புக்கேத்த பதிவு, பதிவுக்கேத்த தலைப்பு. நன்றி அம்மா :)
வாங்க அம்பி.
நீங்க டாக்குட்டர்ன்னு சொல்லவே இல்லை!!!!!
அது இருக்கட்டும். கீழே உக்கார்ந்தா எப்படிப்பா பாதம் அழுந்தும்? நெசமாவா?
வெயிட் தலையிலேதான் அதிகம் ஏறி இருக்கு. குறைப்பதுக் கொஞ்சம் கடினம்:-)
உங்க பேச்சைக் கேட்டு இப்பக் காந்தித்தாத்தா மாதிரி உக்கார்ந்ததில்
உடம்பே முடிச்சுப்போட்டுக்கிச்சு.
கோபால் ஆஃபீஸ்லெ இருந்துவந்துதான் முடிச்சை அவிழ்க்க உதவணும்!
வாங்க வல்லி.
உங்க பின்னூட்டத்தைப் படிச்சுக்காமிச்சதும் ஜிகேவுக்கு வாயெல்லாம் சிரிப்பு.
ஏகதந்தாய நமஹ:-)
வாங்க கவிநயா.
சீக்கிரமா எழுந்தேன்னு சொன்னா நம்பணும்:-)))))
//தலைப்புக்கேத்த பதிவு, பதிவுக்கேத்த தலைப்பு. நன்றி அம்மா :)//
தலைப்பு கோபால் & பதிவு துளசி.
எல்லாம் ஜாடிக்கேத்த மூடி:-)))
துளசி,
அல்போன்ஸா மாமபழத்தெக் காணோமே - தலைப்பிலே கோபல என்ன சொல்றாருன்னு மண்டெயெப் போட்டு உடைச்சிக்கிட்டேன் - போன பதிவுலே ?
இப்பத்தான் கோபால் - துளசி ஜாடிக்கேத்த மூடின்னு தெரிஞ்சுது
அருமைப் பட்டு திரும்ம்ப எழுதணும் - கரெண்டு கட்டாயி யூப்பிஎஸ் கத்துது - அப்பாலிக்கா வாரேன்
அழகான விவரிப்பு.
ஒருவேளை உணவாவது (குறிப்பாக இரவு உணவு) தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டால் கால்சம்பந்தமான பிரச்னைகள் பலவும் தவிர்க்கப்படும்.
முதன் முதலாக வாழ்க்கையில் மலையாளத்தில் ஒரு நிஜமான பக்திப்படம் பார்த்த உணர்வு.
பாராட்டுக்கள்.
வாங்க சீனா.
கல்யாணமாகி ஏழுவருசம் ஆகிருச்சுன்னா, தம்பதிகள் ரெண்டுபேரும் ஒரே மாதிரி ஆகிருவாங்கன்னு 'சீயக்காய்ப்பொடி'(புனைப்பெயர்தான்) என்றவர் திருவாய் மலர்ந்து அருளினார் ஒரு காலத்தில். அந்தக் கணக்குக்கு அஞ்சுமுறை 7 வருசம் ஆகுது.
அப்ப ஜாடிக்கேத்த மூடியா இருக்காதா? :-))))
நிதானமா வாங்க. உங்க வீடுன்னு நினைச்சுக்கோங்க.
வாங்க ரத்னேஷ் சீனியர்.
இரவு உணவு தரையில் அமர்ந்து.....
கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்தக் குளிரில் அதுவும் ரெண்டேபேர் இருக்கும் குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டம்தான். கீழே உக்கார்ந்தால் கோகியும் வந்துருவான். அவனுக்கும் தட்டுப்போடணும்.
ஹீட்டருக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்து, தட்டை மரியாதையாகச் செல்லம்போல மடியில் வச்சுக்கிட்டு.....
இப்படித்தான் காலம் போயிருச்சு.
அஞ்சில் வணங்காதது ..... அம்பதில்?????
சந்தேகக்கேஸ்தானே? :-))))
Post a Comment