Saturday, April 29, 2006

அக்ஷ்ய திருதியை.

நாளைக்கு அக்ஷ்ய திருதியையாம். ரெண்டு மூணு வாரமா பேப்பருங்க எல்லாம் தண்டோராப் போட்டுக்கிட்டேஇருக்குங்க. நானும் இ பேப்பர் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்.


நகைக்கடைங்க பண்ணற விளம்பர அட்டகாசங்கள் வரவர அநியாயமா இருக்கேங்க. நேத்து தினமலர் கடைசிப்பக்கத்துலே கேரளா ஜுவெல்லர்ஸ் விளம்பரம் யாராவது பார்த்தீங்களா?


தங்கம் விக்கற விலையிலே அந்தப் பொண்ணு, அதாங்க மாடலிங் செஞ்ச பொண்ணு போட்டுருக்கற நகைங்களைப் பார்த்து மனஆறுதல் பெறுங்க. அந்தவரைக்கும் உங்க வீட்டுப் பெண்குலங்கள் இதையெல்லாம் வேணுமுன்னுகேட்டுருக்க மாட்டாங்கன்ற நம்பிக்கைதான். நானே கேக்கலைன்னா பாருங்களேன்:-))) கழுத்து நெக்லஸ், தொலையட்டும். அதென்னங்க அப்படி ஒரு கூட்டம் வளையல் ? கையைத் தூக்கி எப்படி பதிவுங்க தட்டச்சு செய்யறது?


ஒட்டியாணம் வேற இருக்குங்க. இப்ப இருக்கற சைஸுக்கு ரெண்டு வாங்கி ஜாயிண்ட் பண்ணாத்தான் பத்துமுன்னுஇருக்கு. ம்ம்ம் இந்தக் கவலை எங்க இவருக்குல்லே வரணும்? அப்புறம் காதைக் கவனிங்க. கர்ணாபரணங்கள். திஸ் ஈஸ் ஃபைவ் மச்!


புரியாத சிலதும் இருக்கு பாருங்க. அது வந்துங்க.........


நாளைக்கு நல்ல நாளாம், தங்கம் வாங்க.- மெத்தச் சரி. ஆனா, கூட்ட நெரிசலைத் தவிர்க்க, முன்பணம் 50%செலுத்தி முன்பதிவு செஞ்சுக்கணுமாம். அதுவும் சரி.


ஆனா, பணம் கொடுத்த விநாடியே அதை வாங்கிட்ட மாதிரிதானே அர்த்தம்? அப்ப திருதியை திதி? நகை என்ன தோசையா? அப்பப்பச் சுட்டுத்தர? மொதல்லேயே செஞ்சு வச்சதுங்கதானே? அப்படி இருக்க நாளைக்கு மீதி 50% கட்டுனவுடனே லட்சுமி கூடவே வீட்டுக்கு வந்துருமா?


சரி. நாமோ நாளைக்கு வாங்கறோமுன்னு வையுங்க. அப்ப உலகத்தின் அடுத்தபக்கம் இருக்கறவங்க எப்பவாங்கணும்? நாளான்னைக்கா? அங்கேயும் நம்ம ஆளுங்கதானேங்க இருக்கோம். சாமி பூமிக்கு மேலே இருந்து அருள் செய்யறப்ப அது ஒரு நாளைக்கு இந்தியாவுக்கும், அடுத்தநாள்தான் அமெரிக்காவுக்கும் போகுமா?


சரி, நகை வாங்குனா அதுவும் ஒரு சேமிப்புன்னு நினைச்சுக்கலாம். ஆனா மத்தகடைங்க ஏங்க இதுலே நடுவிலேவந்து கூவுதுங்க?


இன்னிக்குப் பேப்பர்லே மொதப் பக்கத்துலேயே 'விவேக்ஸின் அக்ஷ்யதிருதியை விற்பனை' ஃபேன், ஏசி, ஃப்ரிட்ஜ்,டிஜிட்டல் கெமெரா, ஹேண்டிக்காம் இப்படி. அப்ப இந்த வருசம் ஒரு ஃப்ரிட்ஜ் வாங்குனா அடுத்தவருசத்துக்குள்ளேவீடு பூராவும் ப்ரிட்ஜ்ஜா? அதையெல்லாம் எங்கே வைக்க?

என்னாங்கடா ஒண்ணும் புரியலைன்னு பார்த்தா இதோ இன்னொரு விஷயம்.
'இலவசம். ஒவ்வொரு பர்சேஸ்ஸூடன் தங்கக் காசு'. ஆங்.....

இவுங்க தேசலாக் குடுக்கற தங்கக்காசு அடுத்தவருசம் குட்டி போட்டுப் பெருகிடும்.

கடைகடைக்கு கிராமுக்கு ரூபாய் 25, 40, 50ன்னு விலை குறைச்சுவேற குடுப்பாங்களாம். தங்கம் உலகமார்க்கெட் விலையாச்சே? எப்படி விலையைக் குறைப்பாங்களாம்? இன்னும் கூடுதலாச் செம்பு கலந்தா?


அலாரம் வச்சு மூணு மணிக்கே எழுந்து குளிச்சு மொழுகி சாமி கும்புட்டுட்டு கடைக்குப் போகற வேலையைப் பாருங்க. நாளைக்குக் காலையிலே ஆறுமணிக்கே கடை திறந்துருவாங்களாம். உங்க நல்ல காலம் நாளைக்கு ஞாயித்துக்கிழமை.

33 comments:

said...

ச்சும்மா, கடை திறந்துருக்கான்னு வந்து பார்த்தேன்.:-)))))

( டெம்ப்ளேட் லே ஒரு மாத்தம் செஞ்சு வச்சுருக்கேன். அதான்)

said...

அட்டகாசங்கள் வரவர அநியாயமா இருக்கேங்க//

எல்லா விளம்பரங்களுமே அநியாயமாத்தானே அதாவது ஏமாத்தறமாதிரிதானே இருக்கு.\

கேரளா ஜுவெல்லர்ஸ் விளம்பரம் யாராவது பார்த்தீங்களா?//

இப்பல்லாம் கேரளத்துலயும் இந்த மாதிரி கட்டி கட்டியா நகைகளை போட்டுக்கறது ஒரு ஃபாஷனா போயிருச்சி.

கையைத் தூக்கி எப்படி பதிவுங்க தட்டச்சு செய்யறது? //

அந்த மாதிரி ஆளுங்க தட்டச்சு எங்க செய்யப்போறாங்க?

இப்ப இருக்கற சைஸுக்கு //

எது இடுப்பா? இந்த காலத்து பசங்களுக்கு அது வேற இருக்கா என்ன? ஓ! அது உங்க ஜெனரேஷன் ஆளுங்களுக்கா? அப்ப சரிதான்:-)

புரியாத சிலதும் இருக்கு பாருங்க. அது வந்துங்க.........//

எது வந்துங்க..

சரி, பின்னூட்டம் சின்னதா லக்ஷனமா இருக்கணும்.. வளவளன்னு .. அப்படீன்னு நீங்க முனகுற சத்தம் கடல் கடந்து இங்க கேக்குது.. நிறுத்திட்டேன்..:-)

said...

akka yanai na akka yanai dhan!
aana ella voottu yanai kalukkum ipadi patta yosanai varanume! varuma?

said...

//ரெண்டு வாங்கி ஜாயிண்ட் பண்ணாத்தான் பத்துமுன்னுஇருக்கு. ம்ம்ம் இந்தக் கவலை எங்க இவருக்குல்லே வரணும்?//

:))) துளசியக்கா பாவங்க உங்க அவரு.விட்டுடுங்க !!! :))

said...

ஒரு வாரமாகத் தொலைக் காட்சிகளில் செய்தி படிக்கும் பெண்கள் கூட நகைக் கடைகளாக உட்கார்ந்த்து இருக்கிறார்கள். ஜெயா டிவியில் ஒரு செய்தி வாசிப்பாளர், உடல் முழுவதும் வெள்ளை நிற ஆபரணங்கள் மிளிர செய்தி வாசித்தார். (பிளாட்டினம்?). எல்லா வகையிலும், மக்களை உள ரீதியில் தாக்கி வியாபரத்தைப் பெருக்கி விட முனைந்துள்ளார்கள் வியாபாரிகள்.

said...

அக்கா, நீங்க எதுக்குத் தங்கம் தனியா வாங்கணும்? நான் அட்சய திருதீயைக்கு வந்து ஒரு கமெண்ட் போட்டுட்டு போயிடறேன்.. 'பொன்'ஸ் உங்க வீட்டுக்கு வந்துட்டு போனா போதாது? :-D :) :)

said...

நாளை விடுமுறையை 'கியூ' வில் கழிக்க வேண்டியதுதானா?

ஆமாம்,ஜோசஃப் சார் வங்கியும் தங்க விற்பனைக்கு நாளை திறந்திருக்குமா :)

அக்ஷய திருதையை அன்று அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஏதோ காதில் விழுந்ததே, அது எப்படி ஒருவருக்கும் கேட்கவில்லை :)

பொன்ஸ், எங்க வீட்டிற்கும் நாளை ஒரு நடை வந்து போங்க :) என்ன, அப்புறம் தினம் வர வேண்டியிருக்கும்.:)

said...

என்னங்க டிபிஆர் ஜோ,

அக்ஷ்ய திருதையை நாள் நெருங்க நெருங்க ஜுரம் வந்தது போல ஆயிருச்சுங்களா?

//அந்த மாதிரி ஆளுங்க தட்டச்சு எங்க செய்யப்போறாங்க?//

ஏங்க, நீங்களே இப்படி முடிவு செஞ்சுக்கறதா?:-))))

said...

சிவஞானம்ஜி,

எல்லா யானைகளுக்கும் இப்படி யோசனை வந்ததாலெதான் நீங்க எல்லாம் இப்படி ப்ளொக் படிச்சுக்கிட்டு
நிம்மதியா இருக்கீங்க:-))))

said...

ஜொ.பா,

அட, நீங்க வேற. ரெண்டையும் ஒரே டிஸைன்லே வாங்கி வந்துறப்போறாரேன்னு நான் கவலைப்பட்டுக்கிட்டு
இருக்கேன். வேற வேற டிசைன்னா இப்படி, அப்படின்னு விதவிதமா மாத்திப் போட்டுக்கலாமுல்லே:-))))

said...

வாங்க மா.சிவகுமார்.

ப்ளாட்டினம் நகை அசப்புலே பார்த்தா ஸ்டெயில்ஸ்டீல் போலத்தான் இருக்கு. அதுலேயும் ஏமாத்து வேலை
வராம இருக்கணும்.

நீங்க 'ஜெயா' டிவின்னதாலே எல்லாமே ஒரிஜனலோன்னு ஒரு நினைப்பு வருது:-))))

said...

வாம்மா பொன்ஸ்,
அக்காவீட்டுக்கு வெறுங்கையோடு வரக்கூடாதுன்றது தெரியாதா?
'கொண்டுவந்தால் சகோதரி' வசனம் நினைவு இருக்கா?
என் கவலை என்னன்னா, தங்கம் விலை ஏறஏற திருட்டுக் குற்றம், அல்ப நகைக்காக கொலைவரை
போறதுன்னு கூடிருமேன்றதுதான்.

said...

மணியன்,

ஜோசஃப் சார் வங்கியிலே நகைவாங்க பணம் எடுக்கறவங்களும், இதுக்காகவே லோன் போட்டவங்களும்
நேத்தே பணம் வாங்கிப் போயாச்சாம். அப்படிக் காசு வேணுமுன்னா இருக்கவே இருக்கு ATM.

ஆனா ஒண்ணுங்க, ரொம்ப வசதி குறைவான ஆளுங்க இதுக்காக வாயைக்கட்டி வயித்தைக் கட்டிச் சேமிச்சு
வச்சிருப்பாங்க. அவுங்க கொஞ்சமே கொஞ்சம் வாங்கறதாலே கடையிலும் அவுங்களுக்கு மதிப்பு மரியாதை
இருக்காது. அதுதாங்க இன்னும் பாவம்.

//அக்ஷய திருதையை அன்று அன்னதானம் செய்ய வேண்டும் என்று ஏதோ காதில் விழுந்ததே..//

உங்க காது அவுட்டாயிருச்சா? டாக்டரைப் பாருங்க:-))))

said...

//ஜோசஃப் சார் வங்கியிலே நகைவாங்க பணம் எடுக்கறவங்களும், இதுக்காகவே லோன் போட்டவங்களும்
நேத்தே பணம் வாங்கிப் போயாச்சாம். அப்படிக் காசு வேணுமுன்னா இருக்கவே இருக்கு ATM.
//
பணத்திற்காக இல்லை யக்கோவ், வங்கிகளும் நாளை தங்கள் கிளைகளைத் திறந்து தங்க பிஸ்கோத்துகளை விற்கப் போகிறார்கள். ( முத்துவின் வங்கியின் விளம்பரம் பார்த்தேன்,ICICI bank, HDFC bank முதலியன)

said...

எல்லாம் விளம்பர உத்தி. முதல துணிக்கடை தான் இத ஆரம்பிச்சாங்க. ஆடி, தீபாவளி, பொங்கல், வருட பிறப்பு, ரம்ஜான், கிறிஸ்மஸ்,சுகந்திர தினம் இப்படினு போயி கிட்டே இருக்குது.அது மாதிரி இப்ப மற்றவர்க்களும் ஆரம்பித்து விட்டார்க்கள்.நம்ம மக்கள் தான் எதை சொன்னாலும் நம்பி விடுவார்க்களே. இறைவன் மேல் நம்பிக்கை வைத்தால் எல்லாம் நாளும் நல்ல நாள் தானே அக்கா!
அன்புடன்,
நாகை. சிவா.
தங்கள் உத்தரவுபடி, இன்று முதல் நாகை சிவா.

said...

ஹெலொ துளசி, கடை திரந்து வெகு நேரம் சென்று வந்த தமிழ் புலவி யாம்.அஷ்ய த்ரிதயை அன்று தானம் செய்ய வேண்டும். உங்களுக்கு தான் இப்பொ ராத்திரி ஆகி விட்டதே.ஆதலால் எமக்கு தமிழ் பாடம் எடுத்து புண்ணியம் தேடவும்.யானை எப்படி வந்து ஆடுகிரது, உஙக பதிவில்?தமிழ் என்றுமெ அஷய த்ரிதியை பாத்திரம் தான்.எல்லொரும் வளமாக இருப்போம்.மனு,வல்லி

said...

எனக்கென்னவோ....அந்தநாளில் வாங்கினால் நகைசேரும் என்கிறார்களே...அதில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதே அக்சய நாளில் ஒருசவரனுக்கு ஒரு மோதிரம் வாங்கினேன். அதற்கு பிறகு அவ்வளவுதான்.... ஒன்னுமே வாங்கலை.....

said...

மணியன்,

வங்கியெல்லாம் பிஸ்க்கோத்து விக்குதா? அடடே... எனக்குத் தெரியாமப்போச்சே! அப்ப ஜோசஃப் சாரை
விடக்கூடாது:-))))) நமக்கெல்லாம் ஞாபகார்த்தமா பிஸ்கோத்து தரணும் அவர்.

said...

நா(ந)கை சிவா,

நல்லாச் சொன்னீங்க. நல்லவர்க்கேது நாளும் கோளூம்?

ஜனங்க எத்தைத் தினா பித்தம் தெளியுமுன்னு இருக்கேப்பா. அதான் கவலையா இருக்கு.

//தங்கள் உத்தரவுபடி, இன்று முதல் நாகை சிவா//

அதென்ன உத்தரவு? அன்புக்கட்டளைன்னு வச்சுக்கலாம்.
அக்ஷ்ய திருதியை ஆச்சேன்னு தான் இப்ப மட்டும் நாகையை நகையா ஆக்கிட்டேன்.

said...

மானு,

நீங்க சொன்னதாலே ஒரு தமிழ்ப் பாடம் எடுக்கறேன்.

தேர் ஈஸ் நோ சச் திங்ஸ்...அடடா தமிழ்ப்பாடம் இல்லை....

'தமிழ் புலவி'ன்னு ஒரு சொல் கிடையாது. புலவருக்குப் பெண்பால், புலவர்தான்.

யானை ஆடுறது, இங்கே என்னைப் பார்த்துட்டுத்தான்:-)))))

said...

நாகு,

வாங்க வாங்க,

//அந்தநாளில் வாங்கினால் நகைசேரும் என்கிறார்களே..//

ஏங்க இப்படிச் சின்னப்புள்ளையா இருக்கீங்க? அது எப்படி 'தானே' சேரும்? நாமதான் போறப்ப வர்றப்பன்னு
கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேர்த்து அந்த மொழியை உண்மையாக்கணும். இப்படிச் செஞ்சுருந்தா, போன ரெண்டாம்
வருஷம் நிறைய தங்கம் சேர்ந்து, இப்ப போனவருஷம்னு சேர்ந்து, இப்ப நாளைக்கு வாங்கறதுன்னு எவ்வளோ சேர்ந்து
இருக்கும்? ஹூம்....சரி நாளையிலே இருந்து மறுபடி ஆரம்பிங்க.

ஆமாம். ஒரு சவரன் மோதிரமா? பெருசா கனமா இருக்குமே! நம்ம 'தாமரைக்கனி' மோதிரம் மாதிரியா?

said...

//கடைகடைக்கு கிராமுக்கு ரூபாய் 25, 40, 50ன்னு விலை குறைச்சுவேற குடுப்பாங்களாம். தங்கம் உலகமார்க்கெட் விலையாச்சே? எப்படி விலையைக் குறைப்பாங்களாம்? இன்னும் கூடுதலாச் செம்பு கலந்தா//

இன்றைய தங்கவிலை கிராமுக்கு 850க்கும் மேல். அந்தத் தங்கம் எல்லாம் கடந்த வருடம் கிராம் 600 ரூபாய்க்கு மொத்தமாக வாங்கியதாக இருக்கும். எனவே லாபத்தில் கொஞ்சம் குறைத்துத் தருகிறார்கள். அவ்வளவுதான்.

இந்த வருடம் தங்கம் எல்லாம் கிடையாது என் அம்மாவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிடேன்.

said...

மகேஸ்,

அம்மாகிட்டேயா? அதுக்கென்ன சொல்லிறலாம்தான்.
ஆனா...? அதையே ஆம்படையாள்கிட்டே சொல்ல முடியுமோ?:-)))))

said...

//ஆனா...? அதையே ஆம்படையாள்கிட்டே சொல்ல முடியுமோ?:-)))))
//
எனக்குத்தான் இன்னம் கல்யாணம் ஆகலயே..

said...

ஆமாம் புலவி கிடயாது.தமிழ் பேசும் ஆர்வத்தால் நிகழ்ந்த தவற்றை மன்னிக்கவும்.
இந்த நடு ற் வருமா?பாடத்திற்கு நன்றி.
அஷ்ய த்ரிதியை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.மனு

said...

மகேஸ்,

//எனக்குத்தான் இன்னம் கல்யாணம் ஆகலயே.. //

இது இப்ப.

காலம் ஒரு நாள் மாறும்....உங்க 'கவலைகள்' எல்லாம் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கிறேன்:-))))

said...

மானு,

நல்லதுதானே செய்யணும். சீக்கிரம் ஒரு பத்து பவுன் வாங்கி இங்கே அனுப்புங்க.
நல்லது செய்ததா ஆச்சு:-)))))

தங்கம் அநியாயத்துக்கு விலை ஏறுனதால் கொஞ்சமாகச் சொல்கிறேன்.

said...

//வருவதை எண்ணி சிரிக்கிறேன்:-))))//


அப்ப,
'வந்ததை எண்ணி அழுவுறீங்களா?'

:-)))))))))))

//சாமி பூமிக்கு மேலே இருந்து அருள் செய்யறப்ப அது ஒரு நாளைக்கு இந்தியாவுக்கும், அடுத்தநாள்தான் அமெரிக்காவுக்கும் போகுமா?//

அடுத்த "கதை"யில, பூமி மெதுவா சுத்தினப்ப, இந்தியா மேல கட்டியை எறிஞ்சாருன்னீங்களே,

அதுபோல, 'அ.த்' யும் அடுத்த நாளு வருதோ என்னமோ!!

said...

SK,

சாமி ஒருதடவை தூக்கிப் போட்டா போட்டதுதான். அக்ஷ்ய திருதியை ஒரு நாள் மட்டும்தான்:-)

அடுத்த கதையையும் மாத்திறலாமுன்னு இன்னொரு முடிவை எழுதியாச்சு பின்னூட்டத்துலே:-)))

said...

Amma,

naanum akshya thirutiyay pativu pottrikkEn. paarungga.

http://sivamurugan.blogspot.com

said...

பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மின் தொடர் வண்டிக்கு காலை 6 மணிக்கு டிக்கெட் எடுக்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம் அன்று காலையிலேயே எழுந்து நகைக் கடைக்குப் போகிறது. உங்கள் பதிவைப் பார்த்ததும் தான் தெரிந்தது ஏன் இவ்வளவு கூட்டம் என்று. அந்த நாளில் விசிறி தானம், அன்ன தானம், நீர்மோர், பானகம், சுண்டல் முதலியன வைத்துத் தண்ணீர்ப் பந்தல் முதலியன வைக்க அக்ஷய திரிதியை அன்று தொடங்குவார்கள். மதுரையில் மீனாக்ஷி திருநாளும் ஆரம்பிக்கும். மேலகோபுர வாசல் முழுக்கப் பந்தல் போட்டு மணல் பரப்பிக் கடைக்காரர்கள் தங்கள் கடை வாசலிலேயேத் தண்ணீர்ப் பந்தலும் வைப்பார்கள். இப்போது கடைக்காரர்களும் மாறிவிட்டார்கள், மக்களும் மாறிவிட்டார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றது அர்த்தமே மாறி நல்லப் பழைய வழக்கங்கள் மாறி வேண்டாத் மூட நம்பிக்கைகள் என்று ஆகி விட்டன.

said...

வாங்க கீதா.

என்ன 6 மணிக்கு அவ்வளோ கூட்டமா? இருக்காதே. இந்த வருசம் கடைங்க அஞ்சரைக்கே திறக்கறதாகப்
பேப்பரில் படிச்சேனே :-))))

அதாங்க, அன்னைக்குத் தானம் செஞ்சா வீட்டுலே நல்லது நடக்குமுன்னு இருந்ததை இப்படித் திரிச்சு தானம்
வாங்குனா( நம்ம காசைக் கொடுத்துக் கடைக்காரன் கிட்டே இருந்து தங்க தானம்!) நல்லது ஆக்கிட்டாங்க.
ஜனங்க பாயுது.

said...

சிவமுருகன்,

உங்க பதிவை இதோ போய்ப் பார்க்கறேன்.