பயண விவரம் பகுதி 20முன் குறிப்பு:
இதுக்கு முன்னாலே வந்த தலைப்பு இல்லாத இடத்துலே இருக்கும் படங்களுக்கு இது பதிவு:-))))
நீங்க ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? நம்ம எல்லாருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கு. எங்கியாவது போய் நாலைஞ்சு
நாள் சேர்ந்தாப்புலெ தங்கறோமுன்னு வச்சுக்குங்க, இன்னின்ன வேலை, இந்தந்த நேரத்துக்குன்னு ரொட்டீனா செய்யப்
பழகிடறோம். அதுவும் ஒரு மாசம்போல இருக்கோமுன்னு வச்சுக்குங்க, அவ்வளோதான். வாழ்க்கைபூராவும் அங்கெயே
இருந்தமாதிரி ஆயிருதுல்லே?
எங்க இவர் இருந்தப்ப ஒரு பேட்டர்ன். இப்ப வேற ஒண்ணு. காலையிலே எழுந்தமா, குளிச்சு முடிச்சுக் கோவிலுக்குப்
போனமா, அங்கே இருந்து ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எதாவது ஒரு ரெஸ்டாரண்டுக்குப் போனமா, சாப்புட்டுட்டு வெளியே வந்தவுடனே
பக்கத்துலெ இருக்கற பெட்டிக்கடையிலே பேப்பர் வாங்குனமா( அதெப்படிங்க, எல்லா சாப்பாட்டுக்கடைக்குப் பக்கத்துலெயும்
ஒரு பெட்டிக்கடை கட்டாயம் இருக்கு?) வீட்டுக்கு வந்து அதை மேய்ஞ்சோமா, மிச்சம் இருக்கற நேரத்துக்கு டிவி
ரிமோட்டை வச்சுக்கிட்டு தாவித்தாவிக்கிட்டே இருந்தமான்னு..........
நான் டிவி பாக்கற ஆளு இல்லேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்லே அது இங்கேதான். சிங்காரச் சென்னையிலே
இந்தமுறை நல்லாவே பார்த்தேன். கொசு புடுங்குதுன்னு சிலசமயம் தூக்கம் கலைஞ்சு எழுந்து வந்து டிவி போட்டாலும்
விஜய், விக்ரமுன்னு யாராவது ஆடிக்கிட்டேதான் இருக்காங்க. அக்கம்பக்கத்துக்குத் தொந்திரவுன்னு 'ம்யூட்'செஞ்சுடறோமா
எல்லாம் படா தமாஷ். 24 மணிநேரத் தொலைக்காட்சி தேவைதானா?
ஒரு சானல்லே விடாம படங்கள் ஓடுது. யஜமான் படத்தையே வேறவேற நாளிலே அஞ்சஞ்சு நிமிஷம் பார்க்கும்படி
ஆச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க, அதுவும் ஒரே ஸீன்! ஐஸ்வர்யா பொய்ப்புகார் கொடுக்கறதும், மீனா ஓரமா ஒளிஞ்சு அதைக் கேக்கறதும்,
சாட்டையாலெ நாயகன் அடி வாங்கறதும்...... சத்தியராஜ் படங்களும் இதே மாதிரிதான்..... ரெண்டு மனைவி (அம்பிகா & கோவை சரளா)
வர்ற படம் பெங்களூருலேகூட விடாம துரத்துச்சுன்னாப் பாருங்க:-)
காலையிலே தமிழில் சுப்ரபாதம் சொல்லிக்கிட்டுத் திருப்பதி கோயில் காமிக்கறது பிடிச்சிருந்துச்சு. எந்த சேனலுன்னு தெரியலை,
தினம் ஒரு கோயில் காமிச்சாங்க.( நேர்லே போறது போதாதுன்னு இப்படி டிவி தரிசனம் வேற எனக்கு!) பொதிகையிலே
கர்நாடக சங்கீதம் சிலநாள், அப்புறம் மலையாள சேனல்ன்னு கொஞ்சம்கொஞ்சம் பார்த்தேன். தெலுங்குலேயும்
இதேதான், அவுங்க 'பாட்டு சீன்'களிலே கலர்ஸ் ரொம்ப 'காடி'யா இருந்துச்சு. ஆனா ப்ரிண்ட் பளிச்சுன்னு இருக்குங்க.
தங்கவேட்டையும் நாலு மொழிகளில்...... தமிழில் மட்டும் பங்கெடுக்கறவங்க கொஞ்சம் வழிச்சல்..... நகைநட்டெல்லாம்
விளக்கி விளக்கிச் சொல்றாங்க. தங்கம் விக்கற விலையிலே வாங்குனாலும்......
அக்கம்பக்கத்துலே சில ப்ளாட்காரங்களும் முந்தியே பழக்கம்ன்றதாலே அவுங்களும் பேச்சுக் கச்சேரிக்கு வந்துருவாங்க.
வீட்டைச் சுத்தம் செய்ய அவுங்களோட உதவியாளர்களை அனுப்பிவச்சுப் புண்ணியம் தேடிக்கிட்டாங்க.
மக்களுக்கு என்னென்ன நம்பிக்கை எப்படிஎப்படி இருக்குதுன்னுக் கவனிச்சுப் பாக்கறதுகூட ஒரு சுவையான விஷயம்.
ஒரு நாள் காலையிலே கதவைத்திறந்தப்ப., எதிர்வீட்டுக் கதவுலே என்னவோ வித்தியாசமா இருந்துச்சு. பச்சை மிளகாய்
தோரணம்( நல்லா நீட்டமா இருக்கற மிளகாய்) அப்புறம் ஒரு கொத்து காய்ஞ்சமிளகாய், கூடவே ஒரு எலுமிச்சம்பழம்!
சமைக்கிறப்ப ஒரு மிளகாய் தேவைப்பட்டாச் சட்டுன்னு எடுத்துக்கலாம். நல்ல ஐடியாதான். அப்புறம் பக்கத்து வீட்டம்மா
சொன்னாங்க, அதை வச்சா திருஷ்டி போயிருமாம்! ஓஓஓஓ...............
வியாழக்கிழமை பள்ளிக்கூடம் போய்ப் பார்க்கலாமுன்னு முடிவாச்சு. அருணாகிட்டே பேசுனப்ப, ஊருலே இருந்து
தங்கை வந்துருக்காங்க, அவுங்களையும் கூட்டிட்டு வரேன்னு சொன்னாங்க. மதுவும் ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டாங்க.
இந்தப்பள்ளிக்கூடம் ஒரு சேவையா நடந்துக்கிட்டு இருக்கு. நம்ம வலைஞர்கள் பார்த்து அவுங்க பதிவுகளிலே எழுதுனா
மக்களோட கவனம் கிடைக்குமேன்னு எனக்குத் தோணுச்சு. பொண்ணுங்க ஜமா சேர்ந்து கிளம்புனா, புடவை நகைன்னு
லூட்டி தான்னு நினைக்கிறவங்க இதைக் கண்டிப்பாக் கவனிங்க. நாங்க அப்படியெல்லாம் இல்லீங்க. புதன் ராத்திரி நம்ம
அருணா போன்லெ கூப்புட்டு, அவுங்க வரமுடியாத நிலை, வீட்டுலே விசிட்டர்ஸ்ன்னு சொன்னாங்க. நாலு ரெண்டாச்சு.
நாங்களே நாலுபேர்ன்றதாலெ கார்லே இடம் இருக்காதேன்னு மலர்விழி மட்டும் தனியா வந்தாங்க. மதுவீட்டுக்குப்
போய் அவுங்களையும் கூட்டிக்கிட்டு மூட்டைக்காரன் சாவடி, தொரப்பாக்கம் பள்ளிக்கூடத்துக்குப் போனோம்.
பள்ளிக்கூடத்துக்குத் தலைமை ஆசிரியர் வேணுமுன்னு விளம்பரம் செஞ்சிருந்தாங்களாம். வந்த விண்ணப்பங்கள்
பார்த்துட்டுத் திருமதி மஞ்சுளாவை நேர்காணலுக்குக் கூப்புட்டு இருக்காங்க. மலர்விழி, அவுங்க கணவர் டாக்டர்
அசோக் இருவருமே நாப்பதைத் தாண்டவே இன்னும் நாலைஞ்சு வருசம் இருக்கு. சின்ன வயசுக்காரங்களைப்
பார்த்ததும் மஞ்சுளாவுக்கு சந்தேகம். இவுங்க என்னா ஸ்கூல் நடத்தி..... நாம என்னா வேலை செஞ்சு....ன்னு
நினைச்சிருக்காங்க. ஆனாப் பாருங்க இவுங்க திட்டங்கள், பள்ளிக்கூடத்தைப் பத்துனவிவரங்கள் எல்லாம் கேட்டபிறகு
'இதுதான் சரியான இடம்'ன்ற 'ஹோப்' வந்துருச்சு. வராம இருக்குமா?ஹோப் பவுண்டேஷன் நடத்துற பள்ளிக்கூடமாச்சே.
நிதிநிலைமையைப் புரிஞ்சுக்கிட்டதும் கேக்க நினைச்சிருந்த சம்பளத்தையும் கேக்காம, குறைச்சலான சம்பளத்துக்கே
வேலையை ஒப்புக்கிட்டாங்க. ஆனா பார்ட் டைமா வாரம் மூணரை நாள்தான் வேலைக்கு வரமுடியும்னு சொல்லிட்டாங்க.
மஞ்சுளாவோட கணவர் ஒரு தனியார் கம்பெனியிலே உயர்பதவியிலே இருக்கார். அவுங்களோட சொந்தக்காரங்க பலரும்
நல்ல நிலமையிலே இருக்கறதாலே அவுங்ககிட்டே எல்லாம் பள்ளியோட நிலையை எடுத்துச் சொல்லி மாசாமாசம்
ஒரு நல்ல தொகை வசூலிச்சுக் கொடுக்கறதுமில்லாம, தன்னோட சம்பளப்பணத்துலே ஒரு பகுதியையும் பள்ளிக்கூடத்துக்கே
செலவு செய்யற புதுவிதத் தலைமை ஆசிரியை இவுங்க. ஆனா சொன்ன பேச்சைக் காப்பாத்தலைங்க. பார்ட் டைமுன்னு
சொல்லிக்கிட்டு இப்ப வாரமுச்சூடும் அங்கெயே இருக்காங்க!
இதுக்குள்ளெ ஸ்கூல் வந்துருச்சு. நாங்க உள்ளெ நுழையறோம், நாலுச் சின்னப் பிஞ்சுங்க மாலை ஏந்திக்கிட்டு
ஓடிவருதுங்க. நாங்க ரெண்டு பேர்தானே? அருணாதான் மிஸ் செஞ்சுட்டாங்க..நான் உடனே மலருக்கும், மஞ்சுளாவுக்கும்
மாலையைப் போடுங்கன்னு சொல்லி அவுங்களுக்கும் பதில் மரியாதையைப் பண்ணிட்டேன்:-)
பக்காவா புரோக்ராம் போட்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. யூகேஜிப் பொண்ணு கீர்த்திகா வரவேற்பு உரை,
எல்கேஜி பசங்க ரெண்டு பேர் ரைம்ஸ், அப்புறம் பெரிய மாணவ மாணவிகள் ஸ்பீச்.
ஒண்ணாப்புப் படிக்கிற இம்மானுவேல் -தன்னுடைய பள்ளிக்கூடம்
மூணாப்பு சரத் குமார் - ஏன் என் பள்ளியை விரும்பிகின்றேன்?
மூணாப்பு மைக்கேல் - நான் என்னவாக விரும்புகின்றேன்
நாலாப்பு இந்துமதி - என்ன செய்ய விரும்புகிறேன்?
அஞ்சாப்பு நித்தியா - என் உயர்வான நோக்கம்
நாலாப்பு & அஞ்சாப்பு மாணவிகள் - நடன விருந்து (7 பொண்ணுங்களும், ஒரே ஒரு பையனும்)
ஒண்ணாப்பு ஜாஸ்மின் - நன்றி உரை
சொல்ல மறந்துட்டேனே, எல்லா ஸ்பீச்சும் ஆங்கிலத்துலேதான். இது ஒரு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்.
மொத்தம் எட்டு டீச்சருங்க. எல்கேஜியிலே இருந்து அஞ்சாப்பு வரை இப்ப இருக்கு. 'ஏழைபாழைங்களுக்கும்
இங்கிலீஷ் மீடியம்' ன்றது இதுவரை நினைச்சுப் பாக்கமுடியாத கனவா இருந்தது. இப்ப நனவாகி இருக்கு.
180 புள்ளைங்க மொத்தம். இடவசதி போதாது. ஆனா ஓலைக்கூரையெல்லாம் இல்லை. பக்கா கல் கட்டிடம்.
ஒரு மாடிவீட்டை வாடகைக்கு எடுத்துருக்காங்க. ச்சின்னச் சின்ன அறைகள். வகுப்பறைகளைப் பார்வையிட்டப்ப,
'ஸார்டீன் இன் எ கேன்' ஞாபகம் வந்ததைத் தடுக்க முடியலை. விளையாட்டு மைதானமெல்லாம் இல்லை.
இன்னும் ஏகப்பட்ட 'இல்லைகள்' இருந்தாலும் பிள்ளைகள் மகிழ்ச்சியாவே இருந்தாங்க. ச்சின்னச்சின்னதா
வாழ்த்து அட்டைகள் செஞ்சு நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டுக் கொடுத்து எங்க கைகளை மட்டுமில்லை, மனசையும்
நிறைச்சுட்டாங்க.
திரும்பி வரும்போது அந்த ஏரியாவை ஒரு வலம் வந்தோம். அடுக்கு மாடிக் கட்டிடங்கள். ஆனா அழுக்கா இருக்கு.
பத்து வருசம்தான் ஆச்சாம். கொஞ்சம் மெயிண்டனன்ஸ் செஞ்சா நல்லதுதான். புள்ளைங்க படிச்சுவந்து செய்யறதுக்கு
காத்துக்கிட்டு இருக்கோ என்னவோ?
பி.கு:தமிழ்மணத்துலே 'அளி'க்கமுடியாததால் மறுபடியும் போட்டுருக்கேன். பார்க்கலாம் என்னாகுதுன்னு.
ப்ளொக்கருக்கு என்னமோ சரியில்லை. தலைப்பை முழுங்கிச்சுன்னு பார்த்தா
இப்பப்பதிவையும் பாதிக்குமேலே முழுங்கிருச்சு.
அகோரப் பசியோ?
Tuesday, April 25, 2006
பள்ளிக்கொடம் போகையிலே
Posted by துளசி கோபால் at 4/25/2006 12:37:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
A VERY GOODMORNING Thulasi.address note seythu konden. thank you,. vaazhthukkal,. Nallavaraaka iruppatharkum,
nallavarkalai adayalam solvatharkum.
koduppinai vendum. I also went thru difficulties in editing my post yesterday and gave up.bye for now.
வாங்க மானு.
வெரி குட் மார்னிங்.
இந்த அட்ரஸ் & ஃபோன் # எடுத்துக்குங்க.
Hope Foundation
H110/2
7th Avenue
Besant Nagar
Chennai.
Phone #s244 633 94 & 244 634 03
மலர்விழி ரொம்ப நட்பானவங்க. பேசிப்பாருங்களேன்.
dear Thulasi, thank you for the address. will call her.
நேற்று ப்ளாக்கர் வேலை செய்யவில்லை.
கீழே பாருங்கள்:
//Monday, April 24, 2006
Blogger.com will be down on April 24 2006 from 4 pm PDT to 4:45 pm PDT
due to planned maintenance. We're sorry about the one-two
unplanned/planned outage punch today, but we need to do some database
maintenance. You will still be able to view your blogs during the
outage. Be assured that when Blogger.com comes back, it will be shinier
and happier than ever.
Posted by Pete at 11:32 PDT
All publishing is broken right now. We're working on fixing it.
Update, 10:15AM: We have Blog*Spot publishing working again. External
publishing coming soon.
Update, 10:41AM: External publishing is working again as well. Plus
users, we haven't forgotten about you.
Update, 10:50AM: Everything sorted out now and working fine. Expect
possible transient slownesses as we shore up some of the quick fixes
that we had to make. //
இரண்டாவதாக லோட் ஆகும் முதல் பக்கம் ஒரு MB க்குள் இருக்க வேண்டுமாம். படங்களின் அளவை சுருக்கி (காசி ஒரு பதிவு போட்டிருந்தார்.. சட்டென்று லின்க் கிடக்கவில்லை) வலையேற்றினால் உங்கள் பிரச்னை தீரும்.
மூணாப்பு மைக்கேலும் நாலாப்பு இந்துமதியும் அஞ்சாப்பு நித்தியாவும் பேச்சிலே எதைச் சொன்னாங்க?
அதாவது, மைக் (செல்லப்பேராக சுருக்கியாச்சு!!) என்னவாக விரும்புறாரு, இந்து என்ன செய்ய ஆசைப்படறாங்க & நித்தியின் உயர்வான நோக்கமென்ன என்று சொல்லுங்களேன்.
நல்ல நோக்கங்கள் நிறைந்த மனிதர்கள் கொண்ட உலகம் அவங்களுக்குக் கிடைச்சதிலே மகிழ்ச்சி.
ஆமா... மூணாப்புக்கு அப்புறம் நாலாப்பும் அவங்களுக்கப்பறம் அஞ்சாப்பும் என்றா மேடைப்பேச்சு? இல்ல நீங்கதான் ஒரு "இதா" இருக்கட்டுமேன்னு அப்புடி அடுக்கி விட்டீங்களா? :O)
ஷ்ரேயா,
இதானே வேணாங்கறது:-) அன்னைக்கு நடந்த நிகழ்ச்சிநிரலை அப்படியே போட்டுருக்கேனாக்கும்.
வேணுமுன்னா நான் அங்கிருந்து கொண்டுவந்ததை, நீங்க இங்கெ வரும்போது டபுள் செக் செஞ்சுகுங்க.
பசங்க பேசுனது(!) எல்லா இந்தியப்பிள்ளைகள் சொல்றதுதான். டாக்டர் ஆகணும். பொது மக்களுக்கு சேவை
இத்தியாதி...... ஆனா டீச்சருங்க என்ன சொன்னாங்க தெரியுமா? 'இது புள்ளைங்களே தயாரிச்ச ஸ்பீச்!'
நம்புவோமாக.
உலகத்துலே எதைஎதையோ நம்பறோம். இதையும் நம்பறதாலே என்ன குறைஞ்சுரப்போகுது.
அதான் சொல்ல வேணாமுன்னு பார்த்தேன். எங்கே? வுடமாட்டீங்களே.இப்படி 'பிட்வீன் த லைன்ஸ் 'படிச்சா இதுதான்
மணியன்,
//இரண்டாவதாக லோட் ஆகும் முதல் பக்கம் ஒரு MB க்குள் இருக்க வேண்டுமாம்.
படங்களின் அளவை சுருக்கி (காசி ஒரு பதிவு போட்டிருந்தார்..
சட்டென்று லின்க் கிடக்கவில்லை) வலையேற்றினால் உங்கள் பிரச்னை தீரும். //
அப்படியா விஷயம்? செஞ்சுட்டாப் போகுது. நன்றிங்க.
ப்ரேக் டவுன் நோட்டீஸ் நமக்கும் வந்திருந்தது.
டீச்சர்....குழந்தைங்க பேசுன தலைப்புகள வெச்சுக்கிட்டு என்னடா இது எல்லாம் தமிழ்ல இருக்கேன்னு ஆனந்த அதிர்ச்சியடைஞ்சிட்டேன்...கடைசீல பாத்தா எல்லாம் இங்கிலீஷ்னு சொல்லீட்டீங்க. அதுதான இப்போதைக்குப் பெருமை.
டீவிக்கள் எல்லாமே கொடுமை. நான் டீவியைப் பாக்குறத நிப்பாட்டி நாளாச்சு. ரொம்ப தோணுச்சுன்னா மட்டுந்தான் பாக்குறது. நேத்து என்னவோ ஆசைல போட்டுட்டேன். அதுல டாப் டென் மூவீஸ். சேது படத்தைக் கிண்டலிச்சு போட்டிருந்தாங்க...காமெடிதான்...ஆனாலும் கேவலமோ கேவலம்.
ராகவன்,
இது இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல். அப்புறம் எங்கே தமிழிலே பேசறது?
நம்ம ஊர்லே ஞாபகசக்தி நிறைய இருக்கறவங்கதான் கல்வியிலே முதல் இடம்.அப்பத்தானே எல்லாத்தையும்
நெட்டுரு போட்டு ஒப்பிச்சுரலாம். என்னமோ போங்க. கல்வித்திட்டத்தையே மாத்தணுங்க.
Post a Comment