Wednesday, September 25, 2013

அதென்ன கெமிஸ்ட்ரியோ!!! (சிங்கைப்பயணம் 2)

பதிவர், எழுத்தாளர் என்பதையெல்லாம் கடந்து ஏதோ ஒன்னு  நட்புகளை பிணைக்கும்  அதிசயம்தான்  கடந்த பத்துவருசமா நடந்துக்கிட்டு இருக்கு.  சிலநண்பர்கள் குடும்ப நண்பர்களா ஆகிப்போனதும் ஒரு  விசேஷம்தான் இல்லையோ?  முதலிரண்டு முறை  ஊரைச் சுற்றிப்பார்க்கும் ஆவல் அதிகமா இருந்தது போல  இப்போ இல்லை.  ஷாப்பிங் ஷாப்பிங்ன்னு அலைஞ்ச காலமும் போயிருச்சு. உலகம் முழுசும் எல்லாமே சீனத் தயாரிப்பு. அப்புறம் எங்கே வாங்கினால் என்ன? சிங்கையில்   மலிவாக் கிடைக்குதேன்னு  பார்த்தால் தரமும் குறைவாகத்தான் இருக்கு:(

சிங்கைச்சீனுவுக்கு முன்னுரிமை,  அப்புறம் நண்பர்கள் சந்திப்பு.வேறொன்னும் அவ்வளவு முக்கியமாத் தோணறதில்லை இந்த சிங்கப்பூரில்.  அடிக்கடி வந்து போவதால்  வேற்றூரென்ற எண்ணம்கூட வர்றதில்லை.

மரத்தடி காலத்து நண்பர்களுடனும், இணைய நண்பர்களுடனும்  சேர்ந்து இண்டர்நேஷனல்  சந்திப்பு ஒன்னை ஆரம்பிச்சு வச்சது துளசிதளம் என்று சொன்னால் நம்புவீங்களா?


இங்கே பாருங்க.  அட!  பயணக் கட்டுரையை வெறும்  பத்தே பகுதியில் முடிச்சுட்டேனே!!!!! அதுவும் ஒன்பதுநாள்  ஒரே ஊரில்  இருந்துருக்கோம்! சபாஷ்!


தோழி வந்தாச்சு.  சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ். நாம் எப்போ சிங்கை போனாலும் அவுங்க வீட்டுலே ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டுத்தான் வருவோம்.  எழுத்து நம்மை இணைக்குதுன்னு பார்த்தால்  நம்ம கோபால் கூட நேரம் கிடைச்சால் அங்கே போய் ஒரு கட்டு கட்டாமல் வர்றதில்லையாக்கும்!  சித்ராவின்  கணவர் ரமேஷ் எங்கேன்னதுக்கு  'தென்னாப்பிரிக்காவில்  ரமேஷ்'னு சொன்னாங்க. (சினிமாவையும் தமிழனையும் பிரிக்கவே முடியாது!)  ராஜுதான் போகலை. ரமேஷாவது  போய்வரட்டுமே!  இவரும் மரத்தடி எழுத்தாளரே.  ஆனால் ரொம்பநாளா  ஒன்னும் எழுதலை:( அவுங்க மகனுக்கு  போன டிசம்பரில் கல்யாணம்.  போக ரெடியா நின்னவளை குடும்பக்காரணம் ஒன்னு இழுத்துப்பிடிச்சது ஒரு சோகக் கதை:(


என்னதான் வீடியோவில் கல்யாணத்தைப் பார்த்துட்டாலும் மருமகளை நேரில் காண்பது இதுதான் முதல்முறை எனக்கு. தோழியின் கூடவே  (மாமியார் மெச்சிய) மருமகளும் வந்துருந்தாங்க. சின்னதா ஒரு பரிசுப்பொருள் வாங்கி வச்சுருந்தோம்.  கொஞ்சநேரம் விட்டுப்போன  (எட்டுமாசக்) கதைகளையெல்லாம் பேசி முடிச்சு(?) சாப்பிடக் கிளம்பினோம்.

இன்னிக்கு இப்போ முன்னுரிமை மருமகளுக்கே!

கைலாச பர்வதம் போகலாமான்னாங்க.  அட! தாண்டிக் குதிச்சால் ஆச்சு:-)

நாம் தங்கி இருக்கும் ஹொட்டெலின் ஒரு பகுதிதான் இது.  என்ன ஒன்னு ரெண்டு கட்டிடத்துக்கும் நடுவிலே ஒரு லேன் போகுது.  அங்கேயும் மாடியில் தங்குவதற்கான அறைகள் உண்டு.  கைலாசத்தின் அடுத்த வாசல் செரங்கூன் சாலையில். நம்ம காளியம்மன்  கைலாசமலைக்குப் பக்கத்து வூடு!  படு பொருத்தமா அமைஞ்சு போச்சு பாருங்க:-)

முல்சந்தானி சகோதரர்கள்  சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்.  1940லே கராச்சியில் பானி பூரி வித்துக்கிட்டு இருந்தாங்க.  பிஸினஸ் நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினை ஆனதும்  இந்துக்களுக்கு  நடக்கும்கொடுமை தாங்காமல் ஊரை (நாட்டை)விட்டே ஓடிவரவேண்டிய நிலைமை. கலவரம் நடக்கும் காலத்தில் என்னத்தைன்னு மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்பறது? திகைச்சுப்போனவங்க..... விலைமதிப்பு வாய்ந்தபொருட்களை அம்போன்னு விட்டுட்டு,  கையிலே தொழில் இருக்கு. எப்படியும் பிழைச்சுக்கலாமேன்னு பானி பூரி, ரக்டா செய்யும் பாத்திரங்களைச் சுமந்துக்கிட்டு  பார்டர் தாண்டி வந்து  பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தாங்க.

முதலில் தெருவோரக்கடையா  இருந்து, பின்னே கைலாஷ் பர்பத்  (வடக்கருக்கு 'வ' வராதுல்லெ!) என்ற சின்னக்கடை  கொலாபா மார்கெட்டாண்டை ஆரம்பிச்சது 1952 இல். வியாபாரம் சூடு பிடிச்சது. படிச்சவன், படிக்காதவன், ஏழை பணக்காரன்,  குமரன் குமரி, கிழவன் கிழவின்னு  எல்லோரையும் ருசிக்கு அடிமையாக்கிட்டாங்க. பானி பூரி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும்  பஞ்சாபி, சிந்தி உணவு வகைகளும் தயாரிச்சதும் நல்ல பேர் கிடைச்சுப் போச்சு.

அதுக்குப்பிறகு  இந்தியாவிலேயே முக்கிய நகரங்களில்  கிளைகள் திறந்து அமோகமா இருக்காங்க. சிங்கை ஒரு குட்டி இந்தியாவா ஆனதும்  எப்படி நம்ம சரவணபவன், அடையார் ஆனந்தபவன், சங்கீதா எல்லாம்  இங்கே  இடம்பிடிச்சதோ  அதே வகையில் கைலாசமலை  இங்கே சிங்கையிலும் கிளை நீட்டி இருக்கு. வந்த கொஞ்சநாளிலேயே நல்ல பெயரும் புகழும்.  இந்திய ருசி & சிங்கைத் தரத்தில் சர்வீஸ். பின்னே கேட்பானேன்?

கைலாசமலையில் அமர்ந்து ஒரு சாட்


உணவு ஆர்டர் செய்யும் பொறுப்பும் மருமகளுக்கே!  சாட் ஸ்பெஷாலிட்டியா இருக்கு என்பதால்  சாட் ப்ளேட்டர், பட்டூரா ப்ளேட்டர் (எல்லாத்திலும் நவ்வாலு வகை)  சனாக் கறி, குல்ஃபி ஃபலூடா, மலாய் குல்ஃபி, ரசகுல்லா, ஆப்பிள் புதினா ஜூஸ்,  லஸ்ஸி, மசாலா டீ ன்னு   உள்ளெ தள்ளினோம்.  சும்மாச் சொல்லக்கூடாது ,நல்ல ருசிதான். ரெஸ்ட்டாரண்டும்  நல்லா சுத்தமா இருக்கு.  என்ன ஒன்னு சர்வீஸ் சார்ஜ்ன்னு ஒரு பத்து சதமானமும், ஜி எஸ் டின்னு இன்னும் ஒரு ஏழு சதமானமும் வாங்கிடறாங்க.

சித்ராவைவிட அவுங்க அம்மா எனக்கு ரொம்ப நெருங்கியவங்களா ஆகிப் பலவருசங்களாச்சு.  'சந்திக்க வரலாமா'ன்னு ஃபோன் போட்டால், 'இது என்ன கேள்வி? இது உன் வீடு எப்ப வேணுமுன்னாலும் வரலாம். சட்னு கிளம்பி  வா'ன்னு வாய்நிறையச் சொல்லும் அன்புக்கு நான் அடிமை.

பேச்சு வாக்கில் ஊரிலே அம்மா அப்பா எப்படி இருக்காங்கன்னு கேட்டால்,  இங்கே சிங்கைக்கு வந்துருக்காங்கன்னு இன்ப அதிர்ச்சி கொடுத்தாங்க சித்ரா.  "அடடா.... ஏன் கூடக்கூட்டிக்கிட்டு வரலை?"

தம்பி வீட்டில் இருக்காங்கன்னதும்  ரொம்பக்கிட்டக்கத்தானேன்னு பேசிக்கிட்டே  பொடி நடையில் அங்கே போனோம். சர்ப்பரைஸா இருக்குமோன்னு  நினைப்பு. 'கவலையே படாதே. எல்லாவிவரமும் அம்மாவுக்குச் சொல்லியாச்சு'ன்றாங்க.

கேட்டைக் கடந்ததும் பெரிய நீச்சல்குளம் உள்ள அருமையான அடுக்கு மாடி வீடு.  ஒரு சமயம் பெய்த பெருமழையில் மொத்த சிங்கப்பூரும்  வெள்ளத்தில் மிதக்க, காம்பவுண்டுக்குள்ளே வந்த  வாடகைக்கார், நேரா போய் நின்னது(!) நீச்சல்குளத்துக்குள்ளே!  தரை தெரியாமல் தண்ணின்னா பாவம் புது  ட்ரைவருக்கு குளம் விவகாரம் எப்படித் தெரியும்? இப்படியாக உள்ளூர் பத்திரிகை மூலம் வீட்டின் புகழ் பரவிருச்சு:-)

தம்பி வீட்டின் உள் அலங்காரம் படு பிரமாதம். இருக்காதா பின்னே?  யானையாரும் பூனையாரும்  இருக்காங்களே!

 அப்ப விஜய் டிவியின் அவார்ட் ஃபங்க்‌ஷன் நடக்குது. சினிமா அண்ட் டிவி உலகில் யாரு இருக்கான்னுகூட தெரியாத எனக்கு, சித்ரா அப்பா முதல் முழுக்குடும்பமும்  திரையில் வரும் அனைவரின் ஜாதகத்தைப் புட்டுப்புட்டு வச்சாங்க!  எம்பத்தினாலு வயசுக்கு  அப் டு டேட், இல்லையில்லை  செகண்ட்  தெரிஞ்சு வச்சுக்கும்  விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சது:-)  ரிட்டயர்டு லைஃப் மஜாவாப் போகுதுன்னு  கிண்டல் செஞ்சேன்:-)   ரெண்டு மணி நேரம் செம அரட்டை:-)))) இன்னுமொரு மாசம் இருந்துட்டுக் கிளம்பறாங்களாம்.


நாங்க கிளம்பினபோது, ஒரு ஷிர்டி சாய்பாபா படமும் ஒரு மாம்பழமும் சாமி ப்ரஸாதம் கிடைச்சதுன்னு  கொடுத்தார்  சித்ரா அப்பா.  நிறைய கோவில்கள் , பூஜைகள், கச்சேரிகள் என்று  பொழுது நல்லாப் போகுதாம்.   நாம் அங்கே போன பாதையிலேயே பொடிநடையில்  செராங்கூன் சாலைக்குப் போயிட்டோம். ராமகிருஷ்ணா மிஷன் கட்டிடத்தைக் கோபாலுக்குக் காண்பிக்கலாமுன்னு நோரீஸ் தெருவுக்குள் நுழைஞ்சு ,  தேடிக்கிட்டுப் போறேன். காணோம்.  அப்பதான் உறைக்குது தப்பான தெருவில் நுழைஞ்சுட்டேன் என்பது. ஆனால்  அட்டகாசமான ஒரு  கட்டிடத்திலே சர்ச் ஒன்னு இருப்பதைக் கவனிச்சேன்.

இன்னும் கொஞ்சம்  தூரம் போய் காய்கறிக்கடைகளில் புதுசா வந்து இறங்கி விற்பனைக்குத் தயாரா இருக்கும் காய்கறிகளைக்  கண்ணால் பார்த்து, பெருமூச்சு விட்டு, க்ளிக்கிட்டு  நடந்தால் ஒரு கடையில் நாவல்பழங்கள்! ஹைய்யோ!  எவ்ளோ நாளாச்சு!  கொஞ்சம் ஒரு அரைக்கிலோ  வாங்கினோம்.



அப்புறம் ஜோதி 'புஸ்ப'க்கடையில் வழக்கமா ஒரு சுத்து. விலையெல்லாம் தாறுமாறாய் ஏறிக்கிடக்கு! நம்ம வீட்டுக்கு வழக்கமா வாங்கும் ஊதுவத்தி  எட்டு டாலர் சமாச்சாரம் இப்போ பதினெட்டு டாலர்!  பொம்மைகளும் பூஜை சாமான்களும்  வழக்கம் போல் கொள்ளை அழகு.




சும்மாவே ஆடுவேன்.  சலங்கை கட்டிக்கிட்டால்.............:-))))






இன்னொரு கடையில்  'பொம்மைக்கொலு' பார்த்துட்டுக் கிளம்பும் சமயம்   நம்மை மாலை எட்டுக்குச் சந்திக்க வர்றதாச் சொன்ன  கோவி.கண்ணன்  குடும்பம்,  ' வரலை'ன்னு  செல்லில் கூப்பிட்டுச் சொன்னார்.  மறுநாள்  பார்க்கலாமுன்னு  முடிவாச்சு. நாங்களும்  பஃபெல்லோ தெருவில் இருந்த இன்னொரு கடையில் ஊதுபத்தி விசாரிக்கப்போனால் அங்கேயும் பதினெட்டே! இதென்னடா  ஊதுவத்திக்கு  வந்த வாழ்வுன்னு  ஒரு பேக்கெட் மட்டும் வாங்கிக்கிட்டு  அருகில் இருக்கும் கோமளவிலாஸில்  அஞ்சு இட்லிகளை பார்ஸல் வாங்கிக்கிட்டு அறைக்குப் போயிட்டோம்.  சூடு ஆறுவதற்குள்  சாப்பிட்டும் ஆச்சு.

அப்ப  நம்ம கோவியார்  செல்லில் கூப்பிட்டு  அவரும் குழலியுமா நம்மைச் சந்திக்க வந்துக்கிட்டு இருக்கோமுன்னு  சொன்னார்.  அஞ்சு நிமிசத்துலே கீழே லாபியில் இருக்கோமுன்னு  செய்தி. நாங்க பரபரப்பா கீழே போனால் அங்கே மொத்தக் குடும்பமும் ! நமக்கோ  இன்ப அதிர்ச்சி.

குழந்தைகளுக்குப் பசியா இருக்குமேன்னு  உடனே  சாப்பிடப் போனோம்.   இப்போ முன்னுரிமை குழந்தைகளுக்கு. நம்ம  செங்கதிர்  இன்னும்  சின்னக்குழந்தை என்பதால்  அக்கா சொன்னபடி  சிங்கை ஸ்டைல் உணவு கிடைக்கும் ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம்.

நமக்குத்தான் இன்னொரு வயிறு இல்லை:( கம்பெனி கொடுக்கன்னு  ஒரு ஸ்வீட் மட்டும் வாங்கிக்கிட்டேன். பேச்சு எங்கள் மூச்சாக இருந்துச்சு. இடைக்கிடை ஒரு வாய் உணவு.

'ப்ளொக் இனி அவ்ளோதான். அதன் மவுசு குறைஞ்சுக்கிட்டு வருது'ன்னுகுழலி சொன்னதும்  கோபால் ஆடிப்போயிட்டார்! நாலு வரி எழுதும்  ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ட்ராஃபிக் நிறையன்னதும், கவலையோடு 'இப்ப என்னம்மா செய்யப்போறே?' ன்னு கேள்வி வேற!!!

'இனி என்றால் இன்றோடுன்னு  பொருள் இல்லை.  அததுக்கு  ஆயுள் உள்ளவரை  வண்டி ஓடத்தான் செய்யும்' என்று நான் ஆசுவாசப்படுத்தினேன்:-)

மணி பத்தரைக்கு மேல் ஆச்சு. குழந்தைகளுக்கு தூக்க டைம்ன்னு  நினைச்சால். அழகான கண்களை இன்னும் அழகாத் திறந்து  தூக்கம்ன்னா என்னன்னு  கேட்கும் பார்வையை   என் மீது வீசறார் செங்கதிர்.

மறுநாளைக்கான  பதிவர் மாநாடு 'வழக்கமான இடத்தில்' மாலை அஞ்சு மணிக்குன்னு  சொல்லிட்டுக் கிளம்பினார் கோவியார்.  நம்ம குழலிக்கு  மறுநாள் வரமுடியாமல்  முக்கிய வேலை ஒன்னு இருப்பதால் இன்றைக்கே  நம்மைச் சந்திக்க வந்தாராம்.   ஹௌ நைஸ்!!!! ஹௌ நைஸ்!!

இப்போ தலைப்பு சரியா வருதா? :-)

தொடரும்......:-)







24 comments:

said...

பதிவுலகம் தந்த நட்புடகள் இன்று வரையிலும் பலமாகத்தான் இருக்கு,

said...

கடவுளர்களையும் பதிவர்களையும் சேர்ந்து பார்த்தது மகிழ்ச்சி. செங்கதிர் அண்ணா நல்லா சிரிக்கிறார்.
சித்ரா அம்மாவை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி.

said...

சிங்கப்பூர் சுற்றுப்பயணமா?படங்களும் பகிர்வும் சுவாரஸ்யம்.தொடருங்கள்.

said...

சந்திப்புகள், பொம்மைக்கொலு எல்லாமே களை கட்டியிருக்கு. நவராத்திரிக்கு இங்கிருந்து ஏதாச்சும் தேத்தினீங்களா :-)

ஹாயாப் படுத்திருக்கும் அம்மாவும் குழந்தைகளும் ஜூப்பரு..

said...

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

said...

அன்பின் டீச்சர்,

சிங்கைக்குக் கூட்டிட்டுப் போய் சக பதிவர்களைக் காட்டியதில் ரொம்ப மகிழ்ச்சி. செங்கதிர் - குழந்தை பெயரும் கொள்ளை அழகு.

அந்தத் தாத்தா, பாட்டியைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீடூழி வாழணும்.

நாவல் பழங்களை புகைப்படங்கள்ல பார்த்து பெருமூச்சு விட்டுட்டிருக்கேன். இன்னும் சாப்பிட்டதில்ல. என்ன டேஸ்ட் டீச்சர்?

said...

இனிய சந்திப்புகள்..... :)

உங்களது இல்ல விழாவில் திருமதி சித்ராவின் பெற்றோர்களைப் பார்த்து நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது நினைவில்.....

எங்க ஊர்க் காரர் ஆச்சே! :)))))

said...

அருமையான பதிவர் சந்திப்பு போங்கள்..... படங்கள் எல்லாமே அருமை !

said...

இனிய உறவுகள். என்றும் தொடர்க.

said...

[[கைலாசமலையில் அமர்ந்து ஒரு சாட்]]

அது என்ன சாட்? அர்த்தம் என்ன? சட்டு புட்டுடுன்னு -- ல வர சட் -டா? இல்லை அரட்டை என்ற அர்த்தமா?

ப்ளேட் வடிவம் புது மாதிரி இருக்கு?

said...

பொம்மை கொலு ரொம்ப அசத்தல். அடுத்த பதிவு 'வெளிநாட்டில் நடந்த பதிவர் சந்திப்பா'?

said...

வாங்க ஜோதிஜி.

உண்மைதான். முதல்முறை சந்திக்கும்போது கூட வேற்று நபரென்று உணரமுடிவதில்லை.எதோ தினம் பார்க்கும் பக்கத்து வீட்டு மனுசர் என்றுதான் தோணுது.

பதிவர் குடும்பம் என்று நான் நினைப்பது உண்மையே!

said...

வாங்க வல்லி.

கதிரு கண்ணாலேயே பேசறாருப்பா:-)

சித்ராவின் பெற்றோர் , தன் பிள்ளைகளின் தோழி, தோழர்களெல்லாம் தமக்கும் பிள்ளைகளேன்னு இருக்காங்கப்பா.

said...

வாங்க ஸாதிகா.

நாட்டுக்கு நவ்வாலு நாட்கள்ன்னு மூணு நாடுகள் சுற்றுப்பயணம். கடைசி நாலு இது:-)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரொம்ப யோசனைக்குப் பிறகு பஞ்சமுகப் புள்ளையார், லக்ஷ்மி,சரஸ்வதின்னு மூணு பேரை நவராத்ரிக்குன்னு கூட்டி வந்தேன்.

சும்மாச் சொல்லக்கூடாது..... அருமையா மூக்கும் முழியுமா செஞ்சுருக்காங்க சீனர்கள்!

எனக்கு அந்த அம்மா & குழந்தைஸ் ரொம்பப் பிடிச்சது.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ரிஷான்.

அடடா.... இன்னும் ருசி பார்த்ததில்லையா? முருகனே அவ்வைக்கு ருசி பார்க்கக்கொடுத்துருக்காரே! சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமான்னு!

உங்கநாட்டில் கட்டாயம் இருக்குமேப்பா.

இனிப்பும்துவர்ப்பும் கலந்த ஒரு சுவைதான். தொண்டை கரகரப்பா ஆகும் அதிகம் தின்னால். அதனால் கொஞ்சம் உப்புத்தூள்சேர்த்து குலுக்கி வச்சுக்கிட்டு போகவர ஒவ்வொன்னா லபக்கலாம். கொட்டை கொஞ்சம் பெருசா இருக்கும்.

வட இந்தியாவில் பெரிய சைஸில் கிடைக்கும். ஜாமூன் என்று பெயர். இதுலே கருப்பு,பிங்க் சேர்ந்த இளங்கருப்புன்னு ரெண்டு வகை உண்டு வடக்கே! சதைப்பற்றாகக்கூடைருக்கும்.

தின்னும்போதே நாக்கெல்லாம் கருநீலக்கலர் ஆகிரும்.

இருங்க நம்ம மாதேவியிடம் கேக்கலாம் இது இலங்கையில் கிடைக்குமான்னு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதானே ஊர்க்காரரை விட முடியும?

நெய்வேலிக் கதைகள் நிறைய உண்டு அவுங்களுக்கும்:-)

said...

வாங்க சுரேஷ் குமார்.

வருகைக்கு ரசித்தமைக்கும் நன்றீஸ்.

said...

வாங்க மாதேவி.

நாவல் பழங்கள் இலங்கையிலுண்டா? இருந்தால் அதுக்கு அங்கே என்ன பெயர்?

உங்க பதிலுக்கு வெயிட்டீஸ்!

said...

வாங்க நம்பள்கி.

கைலாசமலையில் போய் உக்கார்ந்து அரட்டை (chat) அடிச்சுக்கிட்டே Chaat
சாப்பிட்டோம்.

Bhelpuri போல எல்லா வகை சாட்டிலும் மெல்லிசான ஓமப்பொடியை தூவி வச்சுடறாங்க.

அங்கே செர்விங் ப்ளேட்டுகள் எல்லாம் ஒவ்வொரு டிஸைனில் அழகாவே இருக்கு.

said...

வாங்க ரஞ்ஜனி.

பதிவர் சந்திப்பு உடனே வந்துறாது. அதுக்கு முன் இன்னும் சிலசந்திப்புகள் உண்டு:-)

said...

நாவல்பழம் அருமையோ அருமை. ஒரு கால்கிலோ கிண்ணத்துல போட்டுக் கொடுத்தா கால்வாசியை கொட்டையோடும் முக்கால்வாசியை கொட்டை இல்லாமலும் சாப்பிட்டிருவேன். இன்னைக்குதான் தெரியுது நீங்களும் நவாப்பழப் பிரியர்னு :)

கோபால் சார் படத்துல டயர்டா தெரியுறாரு. அலஞ்சிருக்கார்ல.

பொம்மையெல்லாம் அழகா திருத்தமா இருக்கு. ஆனா விலைதான் ரொம்ப இருக்கும் போல.

கோவியை எல்லாம் பாத்து வருசம் அஞ்சாகுது. :)

said...

வாங்க ஜி ரா.

முருகன் கொடுத்த பழம் இல்லையோ! அதன் சுவையே தனி!

சின்ன வயசுலே லிப்ஸ்டிக் போட்டுக்கன்னே அதைத் தின்னுவோம்:-)

கொட்டை ரொம்ப துவர்க்காதோ?