Wednesday, September 04, 2013

நல்ல வேளை.... பொதுப் பெயரா அமைஞ்சு போச்சு (மலேசியப் பயணம் 14 )

ஒவ்வொரு கோபுரக் கட்டடத்துக்குள்ளேயும் பத்து எஸ்கலேட்டர் இருக்காம். நமக்கு ரெண்டே ரெண்டுலேதான் போய்வர வாய்ச்சது, கீழ்தளத்துலே டிக்கெட் வாங்க போனபோதும் ஷாப்பிங்  ஏரியா சுத்திவரும்போதும்.


அடுத்துப்போய் இறங்குனது  எம்பத்தி ஆறாவது தளம்.  நாப்பத்தி ஒன்னுலே இருந்து நேரா எம்பத்தி ஆறு.நான்ஸ்டாப்.

   ஃபோயரில், உலகின்   அதிக உயரமுள்ள   கோபுரங்கள்  என்னென்ன இருக்கு.  எத்தனை மீட்டர்?  அந்த ரெக்கார்டை முறியடிச்சது  எது?  எந்த ஆண்டுன்னு  விபரங்கள் பலதும் இருக்கு. 2004 வது ஆண்டுவரை   இந்த பெட்ரோனாஸ்  கோபுரம்தான்  நம்பர் ஒன். சரித்திரம்  முக்கியம்!


 இங்கே   எண்பத்தியாறில் 360 டிகிரி சுத்திச் சுத்திப் பார்க்கலாம்.  கீழே நாப்பத்தியொன்னில் கண்ணில் பட்டவை எல்லாம்  இப்போ தொலைதூரத்தில் கீழே ! ஒவ்வொரு திசையைப் பார்த்தும் ஹைய்யோ, ஆஹா, சூப்பர் வியூன்னு பாராட்டிக்கிட்டே க்ளிக்கோ க்ளிக்தான்.

அங்கங்கே சில இருக்கைகளும், தொலைதூரம் பார்க்க  பைனாகுலர்ஸும் இருந்தாலும்  உக்கார்ந்து ஓய்வெடுக்க எல்லாம் நேரமில்லையாக்கும் கேட்டோ!  அனுமதிப்பது 25 நிமிசமே!

ஹாலின் நடுவில் ரெட்டைக்கோபுரத்தின்  மாடல் ஒன்னு இருக்கு.

அது என்ன பெயர் பெட்ரோனாஸ்? ஏன் இப்படின்னு பார்த்தால்   Petroliam Nasional Berhad,  என்பதின் சுருக்கம்தான். பெட்ரோலியம் நேஷனல் லிமிட்டட். 1910 ஆண்டே பெட்ரோலியம் எடுக்கத் தொடங்கிட்டாலும்  அப்போ வெள்ளையர்கள் ஆட்சி காலம். ஷெல் கம்பெனிதான்  பெட்ரோல் எடுத்துக்கிட்டு இருந்துச்சு

மலேயாவின் மற்ற தீவுகள் எல்லாம் சேர்ந்து  மலேசியான்னு ஆனதும் ப்ரிட்டிஷாரிடம் இருந்து  1957 இல் சுதந்திர நாடாக  ஆனதும் முந்தி  சொன்னது நினைவிருக்கோ?

1974 வது வருசம்  பெட்ரோலியம் நேஸனல் லிமிட்டட்  என்ற பெயரில்  எண்ணெய் கம்பெனி உருவாச்சு.  இவ்வளவு வேகமா  வளர்ச்சியடைஞ்சது  பார்த்தா  வியப்புதான். இப்போ வருசத்துக்கு ரெண்டாயிரத்து ஐநூறு பில்லியன் ரிங்கிட் வியாபாரம்.  நாட்டின் பணம் காய்ச்சி மரம்!

அந்தக் காலக்கட்டதில் பிரதமரா இருந்தவர் (1981-2003) டுன் டாக்டர் மஹாதிர் மொஹம்மத்.  மாடர்ன் மலேசியாவுக்கு  ஒரு  அடையாளச் சின்னமா இருக்கும்படியான  கட்டிடம் ஒன்னு  பணம் காய்ச்சி மரத்துக்கு பெருமை சேர்க்கும் விதமா இருக்கணும் என்ற  ஆவலில்  உருவானதே இந்த ரெட்டை கோபுரங்கள்.

எட்டு மூலை நட்சத்திர டிஸைன். இஸ்லாமியக் கட்டிடக் கலையம்சமா இருக்கணுமுன்னு  முதலிலேயே தீர்மானிச்சுட்டாங்க.  அதே  சமயம்  கட்டிடங்கள் மினாரா போல் தோற்றமளிக்கணும். architect César Pelli என்னும் அர்ஜெண்டீனாக்காரர் வடிவமைச்சார். இவருடன்கூட பல்வேறு நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் பலரும் ரெட்டைக்கோபுரம் உருவாக வேலை செஞ்சுருக்காங்க.  தலைமையா இருந்த  César Pelli க்கு அப்போ வயசு ஒன்லி  76. இவருக்கு பொழுது போக்கே உசரமான கட்டிடங்கள் கட்டுவதுதான் போல:-))))

1992 ஜனவரி பூமி பூஜை!  ஒன்னேகால் ஆண்டு திட்டமிடல். 1993 ஆம் ஆண்டு அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சாங்க. கட்டிட உயரத்துக்குத் தகுந்தாப்போல  முப்பது மீட்டர் ஆழம்  தோண்டனும். 395,000 சதுர மீட்டர் பரப்பளவு. தினம்  தோண்டுன மண்ணை வாரிப்போடவே  500 ட்ரக்குகள் ராவும் பகலுமா வேலை செஞ்சுருக்கு.

அஸ்திவாரத்துக்கு  காங்க்ரீட்  ஊத்தும் வேலை இடைவெளிவிடாமல் ஒரேதடவையில் நடக்கணுமே. அதுக்கு  13,200 க்யூபிக் மீட்டர் காங்க்ரீட் , தொடர்ச்சியா 54 மணி நேரம் ஒவ்வொரு டவர் கட்டிடத்துக்கும் ஊத்தியிருக்காங்க. அம்மாடியோவ்!!! நம்ம வீட்டுக்கு வெறும் ரெண்டாயிரத்து அறுநூத்துப்பத்து சதுர  அடிக்கே  ஏழெட்டு  ட்ரக்  சிமெண்ட்/காங்க்ரீட்  வந்துச்சுன்னா....  அங்கே எத்தனை லோடு  வந்திருக்கும்! வர்றது என்ன? அங்கேயே வச்சுக் கலக்கி அடிச்சுருப்பாங்க!!!


மொத்தம் மாடிகள் 88தான். அதில் 86 இல் இப்போ இருக்கோம். அப்ஸர்வேஷன் டெஸ்க் இங்கேதான்.

452 மீட்டர் உயரத்தில் கட்டிடம் மேலே முடிஞ்சு போனதும் கும்மாச்சியா கோபுரம் ஒன்னு தனித்தனியா ரெண்டு டவர்களுக்கும்.  பதினாலு வளையங்கள் உள்ள பந்து. அதுக்குள்ளில் இருந்து புறப்படும்  கூம்புக்குச்சி எழுபத்தி மூணரை மீட்டர். உச்சாணிக்கொம்பில் விமான ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தரும் சிகப்பு விளக்கு இரவில் ஒளிரும்.

மேலே அசலும்  கீழே நகலும்:-)


முந்தி கே எல் டவர்தான் உசரமான கட்டிடமா இருந்துச்சு.  இப்ப அது Bபச்சா! உயரம்  வெறும் 420 மீட்டர்தான். ஆறே மாடிகள். அதுவும் தூணில் மேல் உக்கார்ந்திருக்கும்  கூண்டுப்பகுதியில்.  1996 இல் இது கட்டி முடிச்சு திறப்புவிழா நடந்த சமயம் பெட்ரோநாஸ் வளரத்தொடங்கி  நாலுவருசமாகி இருக்கு. கே எல் டவர் முழுசும்  டெலி கம்யூனிகேஷன் துறைக்குன்னே இப்போ   பயன்படுதாம்.

இந்த ரெட்டை கோபுரங்களில்  ஒரு கட்டிடம் முழுசும் பெட்ரோநாஸ் பயன்படுத்திக்குது.  இவுங்களுக்குத்தான் ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கே. நூற்றுக்கும்  மேற்பட்ட சேவைகளுக்குப் புரவலராகவும், நாப்பது  தொழில்களில் கூட்டுச் சேர்ந்துகிட்டும், ஹெல்த், எஜுகேஷன், பேங்கிங், போக்குவரத்து, மெக்டோனால்ட்ஸ், கென்டக்கின்னு எதையும்விட்டு வைக்கலை.

தரையில்  ஹ்ருதயகமலம் கோலம்போட்டு வச்சுருக்காங்கப்பா!!!


கிடைக்கும் தரமான பெட்ரோலை ஏற்றுமதி செஞ்சுட்டு, நாட்டுக்குத் தேவையான பெட்ரோலை  இறக்குமதி செஞ்சு விநியோகமாம். இதுலேயே பயங்கர வருமானம் வருது. யாரிடமோ பேசினப்ப வந்து விழுந்த சமாச்சாரம். எப்போ? யாரு? ன்னுதான் இப்போ நினைவுக்கு வரலை:( நாட்டில் மட்டும் 1670 பெட்ரோல்(ஸ்டேஷன்) Bபங்குகள்  இவுங்களோடதுதான்.

பெட்ரோல்காரவுஹளா இருந்துக்கிட்டு  மோட்டர் ஸ்போர்ட்ஸ் ஆதரிக்கலைன்னா எப்படி?  BMW Sauber Formula One teamக்கு முழு சப்போர்ட் இவுங்கதான்.   2008 முதல்  PETRONAS TOYOTA TEAM TOM'S (Super GT series) க்கு ஸ்பான்ஸார் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ரெட்டை கோபுர நுழைவு வாசலிலேயே இதைச் சொல்லியாச்சு இப்படி:-)

மலேசிய அரசின் அழைப்பை ஏற்று Universiti Teknologi PETRONAS என்று ஒரு  யூனியையே கட்டிப்போட்டு வுட்டுருக்காங்கன்னா பாருங்க. ஏழாயிரம் மாணவர்கள் படிக்கிறாங்க இதுலே!

கோபுரத்துக்குக் கண்ணாடிகளும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுமா   வாரி இறைச்சுருக்காங்க. ஒவ்வொன்னும் அட்டகாசமாப் பொருந்தி இருக்கு.  சூரியனுடைய கடுமையையும் வெளிப்புற சப்தங்களையும்  உள்ளேவிடாம இருக்கும் விசேஷக் கண்ணாடிப்[ பேனல்கள் 77,000 சதுர மீட்டர்  அவைகளைத்தாங்கி நிற்கும்  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் cladding மட்டும்  83,500 சதுர மீட்டர். ஒவ்வொரு கோபுரத்துக்கும் அடியில் கனம் தாங்கி நிற்க 104  ராக்ஷஸ தூண்கள்.  அதுக்குப் பயன்படுத்திய  ஸ்டீல் கம்பிகள்  36,910 டன்.

நம்ம விஜயகாந்துக்கு  இந்த கட்டிடம் ரொம்பப் பிடிக்கலாம். எக்கச்சக்கப் புள்ளி விவரங்கள் அடக்கம். அங்கங்கே  தகவல்கள் அடங்கிய   இண்ட்டராக்டிவ் டச் ஸ்க்ரீன்கள்.  தொட்டுத்தொட்டுப் பார்த்தால்..... எல்லாத்தையும் புட்டுப்புட்டு வைக்குது.  நோகாம  நாமும்  பிஹைண்ட் த ஸ்க்ரீன் சமாச்சாரங்களைத்  தெரிஞ்சுக்கலாம், கேட்டோ!

1999 வது ஆண்டு ஆகஸ்ட் 31 (மலேசிய சுதந்திர தினம்) கோலாகலமான திறப்பு விழா. கனவு நனவாகிய மகிழ்ச்சியில் YAB Dato Seri Dr Mahathir Mohamad திறந்து வைத்தார்.  நல்ல வேளை....  பொதுப் பெயரா அமைஞ்சு போச்சு . சொந்தப்பெயரைச் சூட்டிக்கும் வழக்கம் தெரியாது போல!

 கோபுர தரிசனம் முடியச்  சரியா முக்கால் மணி நேரம்.  லிஃப்ட் நம்மைக் கீழே கொண்டு வந்து  தள்ளிரும்.லிஃப்ட்டில் நுழையுமுன்னே நம்ம கழுத்து மாலையை உருவிடறாங்க:-)   அதன்பின் அடுத்துள்ள நினவுப்பொருட்கள் கடையில்  சின்னதா ஒரு சுத்து. உருண்டை வடிவத்திலும்,  ஆயிரம் துண்டுகள் வகையிலும்  Puzzle ஒன்னு பார்த்துட்டு,  ஐயோ நம்ம மயில் இன்னும் அப்படியே கிடக்கேன்னு  கவலை அதிகம் ஆச்சு:(
வெளிவரும் சமயம் நம்மை துரத்திப் பிடிச்சுக் கூட்டிப்போய் படங்காமிச்சாங்க. பின்னணியில் கோபுரங்கள் கம்பீரமாய் நிற்க, நாங்களும் நிக்கறோம். லைன் அப் ஃபோட்டோ இதுக்குத்தானா?  இதைவிட நாம் எடுத்ததே நல்லா இருக்குமுன்னாலும்....   மனநிறைவுடன் பரவச நிலையில் இருக்கும் நாம்.....    'சரி  முப்பத்தியஞ்சு ரிங்கிட் போனாப் போவுது, இருந்துட்டுப்போகுது 'போன்னு நினைப்போமில்லையா?

திங்கட்கிழமை  ரெட்டை கோபுரத்துக்கு லீவு.  அன்னிக்கு நோ விஸிட்டர்ஸ்.  வெள்ளிக்கிழமைகளிலும்  பகல் 1 முதல் 2 15  வரை    உள்ள நேரம்  பார்வையாளர்களுக்குத் தடா. அது சாமி கும்பிடும் நேரம்.  இதை மனசில் வச்சுக்கிட்டுப் பயணத் திட்டம் போடுங்க.

தொடரும்............. :-)
26 comments:

said...

Not so much info in a single post: This is too much! Please consider this request.

said...

தரையில் ஹ்ருதயகமலம் கோலம்போட்டு வச்சுருக்காங்கப்பா!!!//
அட! அழகாய் இருக்கிறது,
படங்கள் எல்லாம் அழகு.
செய்திகள் அருமை.

said...

இது போன்ற அநேக விபரங்கள் அடங்கிய பதிவுகளை போகின்ற போக்கில் படிக்க உதவாது நம்ப்ள்கி. இது ஆவண வகை. நாளை மலேசியாவில் இந்த இடத்திற்கு செல்பவர்களுக்கு விக்கி பீடியா போல உதவும். காலம் கடந்து நிற்கும் விபரங்கள்.

said...

அழகான படங்களுடன் அருமையான பதிவு... நன்றி...

said...

படங்கள் எல்லாம் அழகோ அழகு...

said...

பிரமாதமாய் செய்திகள். ஹ்ருதய கமலம் கண்டது கலைக் கண்கள் துளசி.
இருவரும் சேர்ந்து நிற்கும் படம் எடுப்பது எல்லா இடத்திலும் பைசா வசூல் செய்து தருகிறதேப்பா.உண்மையாகவே அற்புத முயற்சி.அதை இவ்வளவு விவரமாகத் தந்திருக்கும் உங்கள் உழைப்பு ,சொல்லவே வேண்டாம். டெடிகேட்டட்.

said...

புள்ளி விவரங்களுடன் பல புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒவ்வொருநாளும் புதிது புதிதாய்க் கற்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். நன்றி டீச்சர்.

said...

நான் கடந்த 5 வருடங்களாக சிங்கையில் இருந்ததால் சில மலேசிய நன்பர்கள் மூலம் அறிந்து கொன்ட மேலதிக தகவல்கள்.
ஆனந்த கிரிஷ்ணன் என்ற தமிழர்தான் இந்த ருவின் ரவரை கட்டியவர். இவர் முன்னாள் பிரதமர் மகதீருக்கு மிக நெருங்கிய நண்பர். முன்னர் மலேசியாவில் லொத்தரினை அரசாங்கமே நடத்தி வந்தது. ஆனால் மக்களின் எதிர்ப்புக்களின் காரணமாக அதை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முடிவு செய்த போது, ஆனந்த கிருஷ்ணன் தனக்கு மகதீரிடமிருந்த செல்வாக்கு மூலம் அதை கைப்பற்றி அதன் மூலம் அதிக பணம் சம்பாதித்ததாக கேள்வி.
பின்னர் அந்த பணத்தின் உதவியுடன் கச்சாய் எண்ணை உற்பத்தியில் குதித்ததாயும், பின்னர் பெற்றோனாஸ் என்னும் எண்ணை கம்பனியை வாங்கியதாகவோ/ உருவாக்கியதாகவோ சொல்லப்பட்டதாக ஞாபகம். டிஜி செல் என்னும் செல்போன் நிறுவனமும் இவருக்கு சொந்தம். அத்துடன் சில காலத்திற்கு முன்னர் கலா நிதி மாறனின் பதவி பறிபோனது கூட ஏர் சொல்லை இவருக்கு விக்க கட்டயப்படுத்தியதாக படித்த ஞாபகம். அதை விட மலேசியாவில் கேபிள் ரிவியில் 90% இவருக்கு செந்தம். இவரதி டிஷ் அன்ரனா இல்லாத வீடுகள் கேல் இல் மிகக் குறைவு. பெயர் மறந்து விட்ட்டது. முன்னர் 2 டவர்களிம் இவரிடமிருந்த்து. பின்னர் 1 இனை பணக்கஷ்டத்தில் அரசிற்கு விற்றதாக கேள்வி. பின்னர் 2 வது விற்கப்படப்போவதாக ஒரு 4 வருடத்திற்கு முன்னர் பேசப்பட்டது. அப்போது அந்த இணைப்பிற்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலே மலேசிய ராணுவ தகவல் மையம் இருப்பதாக பேசப்பட்டது.
ஆனந்த கிருஷ்ணனிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மிக மிக அதிக தொடர்பு உள்ளதாக கேள்வி. மன்னார் வளைகுடாவில் இலங்கை அர்சாங்கத்திற்காக இவரின் நிருவனம்தான ஆய்வுகளை நடாத்தி தோல்வியடைந்த்தது. இலங்கையில் போர் நடாத்தப்பட்ட போது சீனாவிற்கும் இலங்கைக்குமிடையில் இவர்தான் மீடியேட்டராக இருந்ததாகவும் ஒரு பேச்சு இருந்த்தது. இப்போது ரெஸ்கோ / யஸ்கோ என்னும் செயின் நிறுவனங்களை இவர்தான் மலேசியாவில் நட்டத்துகிறார். ருவின் ரவரின் கண்ட்ராக்ரர்களில் சாம்ச்ங்மும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

said...

ஹ்ருதயகமலம் அருமை !! துளசி கோபால் படங்கள் superrrrrr !!!

said...

படங்கள் சரித்திரம் விபரங்கள் என மிகவும் நிறைவான பகிர்வு. வாழ்த்துகள்.

மகிழ்ந்தோம். நன்றி.

said...

//ஆனந்த கிரிஷ்ணன் என்ற தமிழர்தான் இந்த ருவின் ரவரை கட்டியவர். இலங்கையில் போர் நடாத்தப்பட்ட போது சீனாவிற்கும் இலங்கைக்குமிடையில் இவர்தான் மீடியேட்டராக இருந்ததாகவும் ஒரு பேச்சு இருந்த்தது.//

தற்பரானந்தன் ஆனந்த கிருஷ்ணன் ஒரு ஈழத்தமிழர். அவரது தந்தையார் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை என்னும் இடத்தைச் சேர்ந்தவர். Malaysian Civil Servant ஆக யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியாவுக்கு குடியேறியவர்கள். ஆனந்தகிருஷ்ணன் தான் இந்த Petronas Towers இன் உரிமையாளர் அத்துடன் உலகின் தமிழ் Billionaireகளில் ஒருவர். அவர் இலங்கையில் முதலீடு செய்திருந்தாலும், அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருந்ததாகவும், மலேசியாவில் தமிழீழப் போராட்டத்துக்குள்ள ஆதரவின் பின்னனியில் அவரும் இருந்ததாகவும் முன்பு பேசப்பட்டது. அதனால் சீனாவுக்கும், இலங்கைக்கும் அவர் mediator ஆக இருந்தார் என்பது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது.

said...

In 2003 when senior officials of the Board of Investment went shopping for investment from Malaysia, they were told that two of the country’s most successful entrepreneurs had Sri Lankan roots and were keen to invest in Sri Lanka.

According to a report then by Bernama News Agency, the (grand)fathers of Tan Sri T. Ananda Krishnan and Tan Sri G. Gnanalingam had been brought to Malaysia from Jaffna by British colonial rulers to work in Malaysia’s Public Works Department, a common practice then as Jaffna produced some of the most educated people in the whole country.

"Tan Sri Gnanalingam himself told one of our ministers that he wants to put something back into this country because his grandfather was Sri Lankan," Deputy Director-General of Sri Lanka's Board of Investment (BOI) Santhusht Jayasuriya had told a a group of visiting Malaysian journalists then, according to the Bernama 2003 story. Gnanalingam, executive chairman of Malaysia's Westport, held talks with Prime Minister Ranil Wickremesinghe during a visit to Malaysia in 2003 and the former followed up with a visit to Colombo. In the same year a Memorandum of Understanding was formalized in March this year between 'Westport' and the Sri Lanka Ports Authority (SLPA).
Westport is keen to invest in Sri Lanka but no formal process has begun.

However Ananda Krishnan has sparked a huge controversy in Sri Lanka this month after one of his subsidiaries staked a claim in Sri Lanka Telecom. Bernama said that Astro CEO Ralph Marshall’s grandfather also hails from Jaffna. Astro is part of the Maxis group which Krishnan hopes will eventually run SLT though the purchase is to be made through Global Telecommunications Holdings NV.

According to Wikepedia, the free Internet encyclopaedia, Tatparanandam Ananda Krishnan was born in 1938 in Brickfields, Kuala Lumpur to a Tamil immigrant family from Sri Lanka
Nicknamed TAK, Krishnan is a Malaysian businessman and philanthropist and he is estimated to worth about US$7.4 billion, making him the second wealthiest man in Southeast Asia (and world's 99th).

Krishnan hates public exposure and is known to maintain a very low profile for a person of his stature. However, his hugely successful business activities always thrust him into the limelight and his name represents a huge business empire.
Currently, he has business interests in entertainment (Astro), space (3 Satellites), oil, power, shipping, telecommunications (Maxis - Malaysia, Aircell - India), property and gaming (Pan Pools Malaysia). His companies operate in most parts of South East Asia. A quarter of his wealth comes from the gambling business (lottery, horse-racing wagering). He is also said to be behind the world's largest indoor Water Park in Tropical Islands, Germany with former Genting Group executive Colin Au. He is also pondering an online lottery venture in Russia, Wikepedia said.

Said to have an extraordinary entrepreneurial flair and being far-sighted, it was Krishnan who sold former Malaysian Prime Minister Tun Dr. Mahathir Mohamad the idea of the 88-storey Petronas Twin Towers, the world's second tallest building, which stake he has now sold off. “Ananda Krishnan has been called everything from a recluse to a humble, silent worker. Not much is known about him and his tightly guarded private life because he maintains such a low profile,” Wikepedia said. He is known to be apolitical but also a close friend of both Dr. Mahathir and Mahathir's former arch-foe Tengku Razaleigh Hamzah. He brokered the peace deal and healed the political rift between them a few years ago.

Despite his wealth he still maintains and stays in his family's Minangkabau styled mansion in Kuala Lumpur. He was one of the first tycoons to own a Dassault Falcon private jet.

http://www.sundaytimes.lk/070527/News/nws14.html

Two Sri Lankan Tamils in Forbes Billionaire List

http://transcurrents.com/tc/2009/03/two_sri_lankan_tamils_in_forbe.html

said...

நண்பர்கள் ஆனந்த கிருஷ்ணன் குறித்து எழுதி உள்ளதால் என் பதிவில் எழுதி உள்ள சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

உங்கள் பதிவில் இது போன்ற சமாச்சாரத்தை கொடுக்க வேண்டாம் என்று தான் நினைத்திருந்த போதிலும் பலரும் விக்கீபீடியா ஒன்றையே பலவற்றுக்கு ஆதாரமாக காட்டிக் கொண்டிருப்பதாலும் இது போன்ற தகவல்கள் தமிழிலில் எழுத முடியும் என்பதற்காகவும் இந்த இணைப்புகள்.

ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் மொத்த வரலாறு போன்ற விசயங்கள்.

சர்வதேச அரசியல், இவரின் பிரமிக்கக்கூடிய வளர்ச்சி, அதற்கு பின்னால் உள்ள விசயங்கள்.

சீனாவின் பொருளாதார அடியாள் -- ஆன்ந்தகிருஷ்ணன் - 1

http://deviyar-illam.blogspot.in/2011/06/1.html

சீனாவின் பொருளாதார அடியாள் -- 2
http://deviyar-illam.blogspot.in/2011/06/2.html

சீனாவின் பொருளாதார அடியாள் -- 3

http://deviyar-illam.blogspot.in/2011/06/3.html

said...

வாங்க நம்பள்கி.

அடடா.... அப்டீங்கறீங்க?

சொல்ல வந்ததை முழுசுமாச் சொல்லலைன்னா எப்படி என்பதால்தான் அந்த டூ மச் இன்ஃபோ.

இதுலேயும் ரொம்ப முக்கியமுன்னு நான் நினைச்சதைச் சொல்லி இருக்கேன்.

சொன்னது பாதின்னா சொல்லாதது மீதி!

said...

வாங்க கோமதி அரசு.

ஒரு பிசுறில்லாமல் கோலம் ரொம்பவே அழகாத்தான் இருந்தது.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜோதிஜி.

புரிதலுக்கு நன்றிகள்.

said...

வாங்க ஸ்கூல் பையர்.

ரசித்தமைக்கு நன்றி.

( உங்க படத்தை பதிவர் மாநாட்டில் பார்த்தது முதல் 'ன்' போடத் தயக்கம்.
அதுவும் ஹெட் மாஸ்டராமே! )

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

காசு சேர்க்கும் சூக்ஷமம் அவுங்களுக்குத் தெரிஞ்சுருக்கேப்பா:-))))

அதிலும் ரெண்டு பேருமா இருக்கும் படம்
என்றால் விட மனசில்லை:(

சும்மாச் சொல்லக்கூடாதுப்பா...அங்கே விவரங்களை அப்படியே குவிச்சு வச்சுருக்காங்க. நான் போற போக்கில் கொஞ்சம் அள்ளிக்கிட்டேன்:-)

said...

வாங்க கீதமஞ்சரி.

எனக்கு இந்த பிஹைண்ட் த ஸீன் சமாச்சாரங்கள் ரொம்பப்பிடிக்கும்.

கண்முன்னே காண்பது எப்படி வந்துச்சு????

பொறுமையா வாசிச்சதுக்கு நன்றி.

said...

வாங்க ஜானஹி ராம்.

புதுத் தகவல்களுக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க மாதேவி.

போரடிக்குமோன்னு ஒரு பயம் உள்ளூர இருந்தது.

ரசிச்சு வாசிச்சதுக்கு என் நன்றிகள்.

said...

வாங்க வியாசன்.

விரிவான பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இவைகள் எல்லாமே எனக்குப் புதுத் தகவல்கள்.

said...

வாங்க ஜோதிஜி.

இந்த பதிவுகளின் சூட்டிகளுக்கு நன்றி.

எப்படித்தவற விட்டேன் என்று பார்த்தால்.... சண்டிகரிலிருந்து நியூஸி திரும்பும் பரபரப்பில் இருந்த காலக்கட்டம்.

said...

நிறையப் புகைப்படங்கள் இருப்பதால் பெரிய பதிவாகத் தெரிகிறதோ? தேவையான தகவல்களை கொடுத்துக் கொண்டு போவதால், அதிகம் என்று தோன்றவில்லை. புகைப்படங்களைப் பார்க்கத்தான் நேரம் பிடிக்கிறது.

பின்னூட்டங்கள் ரொம்பவும் சுவாரசியம்!