Tuesday, September 10, 2013

A Day Out with புள்ளையார்!!


ஈரக்களிமண் புள்ளையார்  கடந்த  நாப்பத்தினாலு  வருசங்களில் ஒன்னே ஒன்னில் கிடைச்சார்.  அப்போ  அவரைக் கொண்டுவந்து வீட்டில் வச்சு அலங்கரிச்சு பதிவெல்லாம் கூட போட்டுட்டேன்.  அது இங்கே:-)

சிங்காரச்சென்னையில் வாசம் அப்போது. நல்ல சுத்தமான கடற்கரையில் கொண்டு போய் அவரைக் கரைக்கணுமுன்னு  வேண்டுதல்.   அக்கம்பக்கம் நல்ல பீச் இருக்கான்னு  நாலைஞ்சுமுறை போய்ப் பார்த்தேன். திருவான்மியூர் கடற்கரை சுத்தமா இருகுன்னு கேள்விப்பட்டு அங்கே போனால் முதல் நாள்  பத்து(ஆனந்தச் சதுர்த்தசி)  என்று புள்ளையார்களைக் கொண்டுபோய்  கடாசிட்டு வந்துருக்கு சனம். கையும் காலும் தலையுமா உடைபட்ட புள்ளையார்கள்  தண்ணீருக்குப் போகுமுன்னேயே தெருவோரங்களில்:(

மனசுக்கு வேதனையாப் போச்சு.  நம்ம புள்ளையாருக்கு நல்ல இடம் பார்க்கலாமுன்னு காத்திருந்தேன். காலமும் கடந்து ஓடிக்கிட்டே இருந்தது. அதுக்குள்ளே நம்ம புள்ளையார் பூஜை அறையில் நிரந்தர இடம் புடிச்சு உக்கார்ந்துட்டார்.  ஈரக்களிமண் எல்லாம்  போய் இப்ப உ(ண)லர்ந்தவராக இருந்தார். டீஹைட்ரேஷன் ஆகிப்போனதால் உடம்பு கனமும் காத்தாப்போச்சு.

நாலு மாசம் ஆனபிறகு , இனி(யும்) அவரைப் படுத்த வேணாமேன்னு  காலையில்  பூச்சர மாலை சூட்டி, பூஜை செஞ்சு காரில் உக்கார்த்திவச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.


முதலில் போன இடம் கோவளம் கடற்கரை. நல்ல இடம்தான்  ஆனால்....ஈ காக்கா இல்லை.  மணி பதினொன்னரை.  பேசாம மஹாபலிபுரம் கடற்கரைக்குப் போயிடலாமுன்னு  அங்கிருந்து புறப்பட்டு மஹாபலிபுரம் போய்ச் சேர்ந்தோம்.

அங்கே போனதும் முதலில் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு நல்ல இடம் தெரிஞ்செடுத்துப் புள்ளையாரைக் கரைக்கலாம். அவர் பாட்டுக்கு காரில் அதுவரை உக்கார்ந்திருக்கட்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கடற்கரைக்கோவில் போய் சுத்திப் பார்த்தோம். வெளியில்  டிக்கெட்டு கவுண்ட்டர், கேட் வாட்ச்மேன் எல்லாம்போட்டு அமர்க்களமா இருக்கு.பெரிய தோட்டம். நடுவில் நடைபாதை எல்லாம் ஜோர். கேமெராவுக்கு நாம் டிக்கெட் வாங்குனோமா என்பதில்தான் காவல்காரர் கவனம் எல்லாம்:-)

வராகங்கள் மட்டும் ரொம்பவே  சுதந்திரமா  தோட்டமெங்கும் அலையுதுகள். இதைக்கொஞ்சம் கவனிக்கக்கூடாதோ?

சுனாமி வந்த பிறகு கடற்கரைக்கோவில் வெளிப்பிரகாரத்துச் சிலைகள் எல்லாம் மண்ணீல் இருந்து தலை காமிச்சிருக்கு. அதையெல்லாம் இன்னும் ஆழமாகத் தோண்டி வச்சுருக்காங்க. அடடே.... இதெல்லாம் புதுசு! மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்த்தோம். கடற்கரைக்கு முந்திமாதிரி ஆக்ஸெஸ் இல்லை. வலைத்தடுப்பு இருக்கு.

கடற்கரைக்கோவில்களில் பூஜை நடப்பதில்லை. கம்பிக்கதவு போட்ட கருவறைகளை எட்டிப்பார்க்க முடிகிறது.  அநந்தன் மேல் சயனித்திருக்கும்  பெருமாள், அரை இருட்டில் பாவமா இருக்கார்.


பன்னிரெண்டு பட்டை சிவலிங்கம் ஒன்னு  மேற்பாகம் சிதைஞ்ச நிலையில். சுவரில் இருக்கும் குடும்பப்படம் அது யாரோட அறைன்னு சொல்லுது!

உயிர்ப்பலி கூடாதுன்னு சொல்லப்டாதோ?  கடா வெட்டிட்டாங்கப்பா!


நம்ம கோகி மாதிரி  சிரிச்சமுகம் இவனுக்கு:-)

இதுக்குள்ளே பசி நேரம். INDeco ஹொட்டேலின்  ரெஸ்ட்டாரண்ட்  கடற்கரைக்  கோவிலுக்குப்பக்கத்துலேயே  கண்ணில்பட்டது. Pongamiya restaurant. நாம் முந்தி ஒருக்கா இந்த  ஸ்வாமிமலை ஆனந்தம் ரிஸார்ட்டில் தங்கினோம் பாருங்க,அதை  இந்த INDeco தான் நடத்துது. அதனால் இங்கே நல்லாதான் இருக்குமென்று நம்பினோம். நம்பிக்கை வீண்போகலை.  தனித்தனியா ரெண்டு  ஸ்டேண்டுகள் போட்டு நான்வெஜ்ஜும்  வெஜ்ஜுமா வச்சுருக்காங்க.

பஃபே முறை.  பருப்பும், பரோட்டாவும் சோறும் கிடைச்சது எனக்கு. டிஸ்ஸர்ட் பக்கம் போனால் ஐஸ்கிரீமும் குலோப் ஜாமூனும்.  ரெண்டாவதை வாங்கிக்கிட்டேன்.

அழகான தோட்டத்துக்குள் இந்த ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. சுத்திவர வெளிவராந்தா முழுசும்  சாப்பிட வசதியா இருக்கைகளும் மேஜையுமா இருக்கு.  வரிசைகட்டி நிக்கும் டெர்ரகோட்டா ம்யாவ்ஸ் அழகுன்னா அப்படி ஒரு அழகு.  உள்ளே  அந்தக்கால தயிர் மத்து ஒன்னு:-) யசோதா எப்படிக் கடைஞ்சாளோ? ரெண்டு மணிகளைத் தொங்கவிட்டு  அடிச்சுக்கோன்னாங்க. நான்...ஊஹூம்.... இவரோ?   (போர்டு) சொன்னால் கேக்கமாட்டார்:-)
சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு  அப்படியே இவுங்க ம்யூஸியத்துக்குள் போனோம். மரக்கடிகாரக்கூண்டும்,  பாய்மரப்படகோட்டியுமா சிலபல சமாச்சாரங்கள். வாசக்கதவுக்கு நேரெதிரா கொஞ்ச தூரத்தில் கடல். அவ்ளோதூரம்  போக அதுவும் மண்டைகாயும்வெயிலில் போக ஒரு சோம்பல்:(


அர்ஜுன் தபஸ் நோக்கிப்போனோம். வழியில் இருந்த கிருஷ்ண மண்டபத்துக்குள் வகைவகையான  சிற்பங்கள். கோவர்தனகிரியைத் தாங்கி நிற்கும் கண்ணன்.  அங்கேயும் விடாமல்  பால் கறக்கும் கோபன். சுவர் முழுக்க கோகுலம்தான்.முப்பது மீட்டர் உயரமும் அறுபது மீட்டர் அகலமும் உள்ள பெரிய பாறையில் சுமார் 150சிற்பங்கள். ஒரு பிலத்துள் மூணு நாகர்கள். பக்கத்துலேபெரிய யானைகள்.  பாசுபத அஸ்த்திரம் வேண்டி தவம் செய்யும் அர்ஜுனன்.  விலா எலும்புகள் எல்லாம் எண்ணலாம்.  அவனைப்போலசீரியஸா தவம் செய்யும் குண்டுப்பூனையார்.  போலிகளை நம்பி ஏமாந்து போக  எப்பவுமே ஒரு கூட்டம் உண்டு என்று சிம்பாலிக்காச் சொல்லும் எலிகள் கூட்டம் பூனையாரைச்சுற்றி.ஸ்தல சயனப்பெருமாள் கோவில் (108 இல் ஒன்னு)  பகல் வேளையில் பூட்டிக்கிடக்கு.  எப்ப  மகாபலிபுரம் வந்தாலும்  அநேகமா இந்த நேரம்தான்.  சாயங்காலம் நாலரைக்குக் கோவில் திறப்பாங்க என்றாலும் அதுவரை காத்திராமல் மற்ற இடங்களைச் சுத்திட்டுக் கிளம்புவதே  வாடிக்கை என்பதால் ... இன்னிக்கு  விடுவதில்லை என்று சொன்னேன்.

கிருஷ்ணனின் வெண்ணெய் உருண்டை கல்லாக மாறி கனகாலமாச்சு!

வெண்ணெய்க்கு  அந்தாண்டை  திருமூர்த்தி கோவிலை நோக்கிப் போனோம்.
நம்மாட்கள் எல்லா இடங்களிலும்  சுத்தித் திரியறாங்க.

இங்கேதான் பீமன் சமையல் செஞ்சானாம்.   ரெண்டு பிரமாண்டமான பாறைகளுக்கிடையில்  அடுப்பு அணையாம நல்லா எரிஞ்சிருக்கும். பீமனின் ஸிங்க் இதுதான் போல!

சிவன், விஷ்ணு, ப்ரம்மன் ஆகியோருக்குத் தனித்தனி சந்நிதிகளா  குகைக்கோவிலில் செதுக்கி இருக்காங்க. அத்தனையும் அற்புதம்!
கடலைகளுக்குப்பஞ்சமே  இல்லையாக்கும்!

பீமனுடைய  பேண்ட்ஸ்க்கு  ஸிப் வச்சுருக்கோ?  கற்களை  தையல் போட்டு இணைச்சது அபாரம்!

வந்தவழியே திரும்பி எதிர்த் திசையில்  போறோம்.  அழகான புல்தரையில் நாயர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்.வெயிலுக்கு சுகமா இருக்கு போல!
எதிர்ப்புறம் கொஞ்சம் ஏற்றம்.  சின்னச் சின்ன மண்டபங்கள். அதில் ஒன்னில்  சந்தனக்காப்பில் ஜொலிக்கும்  புள்ளையார்.  சித்தப்பா வரும்வரை பொறுப்பில் இருக்கும் குட்டிப்பையன் கணேஷ். விபூதி குங்குமத்தட்டு ஏந்தி நின்னால்போதும். 'வருவது வரட்டும்' என்ற நம்பிக்கை!  நம்பிக்கை எப்போதாவது பாழாகி உள்ளதா? ஊஹூம்...:-)ஏறுமுகத்தில் வரிசையா நிற்கும் கற்களில் ஒன்னையும் விட்டு வைக்கலை. லக்ஷ்மி வராஹமூர்த்தி,  ஈரேழு உலகம் அளந்த திருவிக்ரமன்,  கஜலக்ஷ்மி இப்படி ஆளுக்கொன்னுன்னு  கல்மண்டபமும் சந்நிதியுமாக.


கிட்டத்தட்ட குன்றின் மேல் கடைசிப்பகுதிக்கு வந்தால் கைக்கெட்டும் தூரத்தில் கலங்கரை விளக்கம் இருப்பதுபோல்  கண்கட்டு வித்தை!
உச்சியை விட்டு வைக்காமல் அங்கொரு கோவில் கட்டிக்க ஏற்பாடு ஆகி  வேலை பாதியில் நிக்குது. இம்மாம்பெரிய மண்டபத்துக்கு மேற்கூரை எப்படிப் போட்டுக்கும் ஐடியாவா  இருக்கும்?

மலையின் பக்கங்களில் அடர்ந்த காடு! பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள்.  ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பயங்கர சரிவில்  இறங்கி கடலை வறுக்கும் வாசம்!  கால் வழுக்கினால் இத்துடன் தொலைஞ்சது. ஒருவேளை  இப்படியாவது தொலையட்டும் என்றோ?  தொலைவில் ஊர்!

கவனமாக்கால்வச்சுக் கீழே இறங்கி கலங்கரை விளக்குப் பக்கம் போனோம். வழியெல்லாம் சிற்பக்கடைகள். சும்மாச் செதுக்கிப்போட்டு வச்சுருக்காங்க. இன்னொரு பெரிய பாறையில் அர்ஜுன் தபஸ்.  ப்ராக்டீஸ் செஞ்சிருக்காங்க.

திரும்பி  ஐந்து ரதங்கள் பகுதிக்குப் போனோம். கொஞ்சம் கூட்டம் அதிகம்தான்.  போகும்வழியில் ஒரு சின்ன வணிக வளாகம். அதைச் சுற்றியுள்ள தோட்டத்தில்  மயிலுக்குப் போர்வை தந்தபேகன், புலியை முறத்தால்  துரத்திய வீரப்பெண்மணி இப்படி  காங்ரீட் சிற்பங்கள்.  காலத்தால் அழியாது நிற்கும் பேசும் கற்சிற்பக் கலைக்கு ப் போட்டியாக  இது! சரியான ஐ ஸோர்:(

ரதங்கள் ஒவ்வொன்னும்  அழகோ அழகு!  இந்தப் பாறைகளுக்கு இப்படி ஒரு கொடுப்பனை.  ஐடியா எப்படி உதயமாகி இருக்கும்!!!!நம்ம யானையுடன் நான்:-)

இங்கேதான்  நாட்டியாஞ்சலி நடக்குமாம்.

காம்பவுண்டு சுவர் போல் கல்வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு புள்ளையார்!

வணிக வளாகத்தில் சில கடைகள். தியானம் செஞ்சு உருக்குலைஞ்ச புத்தர்! ஆன்மீகம்

அம்மிக்கல்லும், குட்டிக்கல் உரலுமா  இன்றையத் தேவைகளுக்கு .... லௌகீகம்.

ஸ்தலசயனப் பெருமாள் தரிசனம் ஆச்சு. உள்ளே மூணு புள்ளையார் ஒருசேர.  இவரை வழிபட்டால்  அதிர்ஷ்டம் என்று சேதியை  யார் காதிலாவது ரகசியமா  ஓதி வச்சால் போதும். கோவிலுக்குக் கூட்டம்  படையெடுக்காதோ?
இத்தனை ஊர் சுற்றலுக்கும் வாயைத் திறக்காமல் நம்ம புள்ளையார் பின்ஸீட்டில். அநேகமா இவர் நம்ம வீட்டுக்குத் திரும்பிவரும் எண்ணத்தில் இருக்கார் போல!

மறுபடியும்  கோவளத்துக்குள் நுழைஞ்சோம். இதுவரை பார்த்ததில் இந்தக் கடற்கரைதான்(ஓரளவு) சுத்தமா இருக்கு.  ஊருக்குள் நுழைஞ்சு கடற்கரைக்குப் போகும் வழியில்  ஒரு தர்கா.  அஜரத் தம்ம் அன்ஸாரி அஸ்ஸாபே ரஸூல்.ஸல் என்று அலங்கார வளைவு சொல்கிறது.
அல் அன்ஸாரி மதீனாவில் பிறந்தவராம்.  முஹம்மது நபியின் நெருங்கிய தோழர்களில் ஒருவர். இந்தியாவுக்கு எப்ப வந்தார் ? எப்படி வந்தார்?

 இவருடைய மறைவுக்குப்பின்  சவப்பெட்டியில் உடலை வச்சு  கடலில் விட்டுட்டாங்களாம். அதுவே அவருடைய  ஆக்ஞையாக இருந்தது. பெட்டி கடைசியில் வந்து கரை ஒதுங்கியது இந்தக் கோவளத்தில்தான்.  அவருடைய பூத உடல் புதைக்கப்பட்ட இடம்தான் இந்த தர்கா.  ஆற்காட் நவாப் இந்த தர்காவை கட்டினாராம். ரொம்ப பவர்ஃபுல் இடமுன்னு சொல்றாங்க. வேண்டுதல் எல்லாம் பலிக்கும் என்ற நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமிக்குப்பிறகு வரும் முதல் வியாழன் இங்கே விசேஷம். அன்று காலை அஞ்சு முதல் இரவு 10 வரை வழிபாடு நடத்துறாங்க.  கூட்டம் அம்மும் தினமாம் அது. குறி சொல்லுவார்களாம்.கெட்ட ஆவிகளை மந்திரிச்சு விரட்டுவாங்களாம்.  மனித மனசுக்கு ஆறுதல் தருவது  கடவுளின் ட்யூட்டிகளில் ஒன்னு,இல்லையோ? நதிமூலம் எதுக்கு?

உள்ளே போய்ப் பார்க்க ஆசை இருந்தாலும், பொழுது சாயுமுன் புள்ளையாருக்கு ஒரு வழி காமிக்கணுமேன்னு  கையெடுத்துக் கும்பிட்டுட்டு கடந்து போனோம்.  இதோ காலையில் பார்த்த கடற்கரை. கட்டுமரங்களுக்கு சின்னதா  எஞ்சின் வச்சு ஓட்டுறாங்க. காலையில் பார்த்தவைகளை இப்போ காணோம். கடலுக்குள் போய் இன்னும் திரும்பலை போல!

விரிந்து பரந்த மணல் வெளியின் ஒரு பக்கம் கண்ணியம்மன் கோவில் ஒன்னு.

நம்ம புள்ளையாரை மணலில் வச்சு ஒரு க்ளிக்.  கோபால் அவரைத்தூக்கிட்டுத் தண்ணீரை நோக்கிப்போறார். (கோபாலுக்கு அலையில் கால் நனைப்பது ரொம்பப்பிடிக்கும்)

குனிஞ்சு அவரைத் தண்ணீரில் வைக்கப்போறார். நான் கெமெராவை ஃபோகஸ் பண்ணறேன்.  எல்லாம் ஒரு மைக்ரோ செகண்ட் நேரம்தான்.  பட்டனை அமர்த்துமுன்...........  வியூ ஃபைண்டரில் பார்த்தால் புள்ளையாரைக் காணோம். இடுப்பளவு  உயர அலையில் நம்ம கோபால்.


நாலு மாசம் நம்மோடு வாழ்ந்த அவஸ்தை போதுமுன்னு  துண்டைக் காணோம் துணியைக் காணோமுன்னு தண்ணீரைத் தொட்டதும் காணாமப் போயிட்டாருப்பா புள்ளையார்! என்ன சொல்லுங்க.... கோபாலுக்கு இருக்கும் பொறுமை புள்ளையாருக்கு இல்லை:-)

செண்ட் ஆஃப்க்கு ஒரு குட்பை சொல்ல முடியலைன்னு எனக்கு மகா வருத்தம்.

PIN குறிப்பு: நாலு வருசமா ஒவ்வொரு புள்ளையார் சதுர்த்திக்கும் மனதில் ஓடும் குறும்படம். இன்று உங்களுக்காக வெளியிடப்பட்டது:-)16 comments:

said...

அழகு... அட்டகாசமான படங்கள் அம்மா...

said...

நம்மவீட்டுலயும் பூஜை நடந்த படங்களுடன், நிமர்ஜன் பத்தியும் பதிவு இப்பத்தான் போட்டு வந்தேன். உங்க புகைப்படங்கள் வழக்கம் போல அருமை

said...

மஹாபலிபுரத்தில் நீங்கள் நடக்காத இடங்கள் இல்லை போல. அத்தனை இடங்களையும் படம் எடுத்து இருக்கிறீர்களே.கச்சிதமாக வந்திருக்கின்றன.
பிள்ளையாருக்கு என்ன அவசரமோ . ஓடிவிட்டாரே.அழகா மல்லி மாலை வேற.!!

said...

விசர்ஜனுக்கு முன்னாடி நல்லாவே ஊர்சுத்திக் காமிச்சிருக்கீங்க அவருக்கு :-))

said...

நாலு வருசமா ஒவ்வொரு புள்ளையார் சதுர்த்திக்கும் மனதில் ஓடும் குறும்படம். இன்று உங்களுக்காக வெளியிடப்பட்டது:-)//

அப்பாடி ! மனதில் உல்ளதை இப்போது தகுந்த நேரம் பார்த்து சொல்லி விட்டீர்கள்.
அருமை.

மகாபலிபுரத்தை மறுபடியும் நன்கு பார்த்து விட்டேன் நன்றி.

நானும் பிள்ளையார் பதிவை இரண்டு நாளுக்கு முன் பதிவிட்டேன்.
படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.

said...

என் பள்ளிக்காலங்களில் வீட்டில் , அம்மா பிள்ளையாரை ஐந்தாம் நாள் வீட்டு கிணற்றில் விடுவார்கள் . ஐந்து நாள் பந்ததத்திற்கே மனம் பாரமாய் கனக்கும் (அம்மாவிடம் ஒவ்வொரு வருஷமும் கிணற்றில் போடவேண்டாம்னு சொல்லுவோம் ) நாலு மாத பந்தம் . கஷ்ட்டமாத்தான் இருக்கும் .

மகாபலிபுரம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது .
அருமையான பதிவு .

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இன்னும் உங்க பக்கம் வரலை. இதோ கிளம்பறேன்.

said...

வாங்க வல்லி.

விட்டால் போதுமுன்னு ஓடுனவர்தான்:-)

இன்னும் ஆதிவராக மூர்த்தி கோவிலுக்குள் போகலைப்பா:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஊர்சுத்த அவருக்கும் பிடிக்குமே என்றுதான்:-)))

said...

வாங்க கோமதி அரசு.

மனசுக்குள் ஓடுவது இன்னிக்கு வெளியில் வந்துருச்சு:-)

ரசித்தமைக்கு நன்றி.

உங்க புள்ளையாரைப் பார்க்க, இதோ கிளம்பி வர்றேன்.

said...

வாங்க சசி கலா.

அந்தக் காலத்தில் சதுர்த்தியன்றே மாலை புள்ளையார் வீட்டுக் கிணற்றுக்குள் போயிடுவார்.

பூனா வாழ்க்கையில்தான் பத்துநாள் உற்சவத்தைக் கண்டோம்.

தினமும் ராத்திரி பத்து மணிக்குக் கிளம்பி பேட்டை பேட்டையாகப்போய் புள்ளையார் பார்த்துட்டு, மசாலாப் பால் வாங்கிக் குடிச்சுட்டு ராத்திரி மூணுமணிக்குப்போய் மாமி வீட்டில் தூங்கிட்டு காலையில் மாமி போடும் அட்டகாசமான காஃபியைக் குடிச்சுட்டு ஆறரைக்கு வீடு போய்ச் சேருவோம்.

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!!!

said...

நம்ம ஊரில் மார்கழி (சாணம்) பிள்ளையார் கடலில் விடும் வழக்கம் இருந்தது. மண்பிள்ளையார் வழக்கம் இல்லை.

மகாபலிபுரம் மீண்டும் பார்க கிடைத்தது.

said...

டீச்சர், உங்க பதிவுகள் வேர்டுபிரஸ் ரீடர்ல அப்பப்ப வர மாட்டேங்குது. :((((((((((((((

அடிக்கடி பதிவுகளைப் படிக்காம விட்டுர்ரேன் :(

said...

வாங்க மாதேவி.

நாங்க மார்கழி (சாணகம்) பிள்ளையாரை போகிப் பண்டிகை தீயில் எரிச்சுருவோம்.

எப்படியும் 30 புள்ளையார்கள் இருப்பாங்களே!

said...

வாங்க ஜிரா.

வேர்டுப்ரெஸ் ரீடர் மேலே கேஸ் போடலாமா!!!