ராமசந்திரன், மஹேந்த்ரன், மொஹம்மெட் ராஜேன்ட்ரன், மொஹமெத் ரஃபி , மரத்தாண்டவர் எல்லோரும் கூட்டாளிங்களாம். தொழில் முறையிலும் இனம் முறையிலும். நாம் ட்வின் டவர் வளாகத்தை விட்டு வெளியில் வந்ததும் கூட்டமா நின்னு பேசும் மேற்படியாரை நோக்கிப்போனார் கோபால். நம்மைப் பார்த்ததும் என்னமோ ஆதிகால முதலே பழக்கமானவங்க போல ஒரு புன்சிரிப்பு அனைவர் முகங்களிலும்.
சில இடங்களைச் சுத்திப் பார்க்கணுமுன்னு நம்மவர் சொன்னதும் எங்கெங்கே போகணுமண்ணேன்னாங்க. இவர் டூரிஸ்ட் மேப்பைப் பிரிச்சு இது இதுன்னு காமிக்க எல்லார் தலையும் கூர்ந்து பார்த்துச்சு. தலைவர் போல் இருந்த ராமசந்திரன் இந்த அஸைன்மெண்ட்க்கு நூத்தம்பதுன்னு ஆரம்பிச்சவர், சட்னு மனம் மாறி நூறு வெள்ளி கொடுத்துருங்கண்ணேன்னு சொல்லி ஒருத்தரை நமக்கு அலாட் செஞ்சார். எல்லோரும் ரெட் டெக்ஸி ஓட்டுனர்கள்தான். உள்ளே வர அனுமதி இல்லை பாருங்க. அதான் வெளியே கூடி நின்னு பேசிக்கிட்டு இருப்பது வழக்கமாம்.
நமக்கு டெக்ஸி ஓட்டுனவரிடம் சின்னப்பேச்சு பேச ஆரம்பிச்சேன். பெயர் மரத்தாண்டவர் ராவ். மரமா.... ரெண்டாம் முறை கேட்டப்ப டெக்ஸியில் வச்சுருக்கும் விவரக் கார்டு எடுத்துக் கையில் கொடுத்தார். அதில் ஆங்கிலத்தில் மரத்தாண்டவர் என்றே எழுதி இருக்கு. இங்லீஷ் தெரிஞ்ச நண்பரிடம் எழுதி வாங்கிக்கிட்டாராம்.
குடும்பம் பற்றி விசாரிச்சேன். தாத்தா காலத்துலே மலேயாவுக்கு வந்துருக்காங்க. பாட்டி தெலுகுன்னார். இப்ப மூணு தலைமுறை பிறந்து வளந்தது எல்லாம் இங்கேயேதான். ரெண்டு பிள்ளைகளாம். மூத்தது பொண்ணு, ரெண்டாவது பையன். நான் பொதுவே கொஞ்ச அதிக நேரம் யாரோடாவது செலவளிக்க நேரும்போது குடும்பம், குழந்தைகுட்டி பற்றி எல்லாம் விசாரிப்பேன். இதுனாலே அவர்களுக்கு நம்மோடு ஒரு சிநேகம் ஏற்பட்டுப்போகும். மனதுக்கு நெகிழ்ச்சியாகவும் இருக்கும் போல.
மனைவி சமீபத்துலே இறந்துட்டாங்கன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. அஞ்சு மாசம் ஆச்சாம். உடம்பு சரி இல்லாம மருந்து மாத்திரைன்னு இருந்தாங்களாம். பிள்ளைங்க சின்னதுங்க. அவருடைய அம்மாதான் பார்த்துக்கறாங்களாம். அவுங்களுக்கும் வயசாகிப்போச்சு. அதனால் இவர் சாயங்காலம் அஞ்சு மணியோடு வண்டி ஓட்டுவதை நிப்பாட்டிக்குவாராம். பிள்ளைங்க பள்ளிக்கூடத்துலே இருந்து திரும்பி வர்ற நேரமாம். இவர் வீட்டுக்குப்போய் சமையல் செஞ்சு போடுவாராம். ஆனாலும் எப்படியும் வாரம் ரெண்டு முறையாவது வெளியில் சாப்பாடு வாங்க வேண்டி வந்துருதாம். கொஞ்சம் லேட்டாப் போனால்...பசங்க பசி தாங்காதுன்னார். ப்ச்.... ஒவ்வொருவருக்கு ஒரு கஷ்டம் பாருங்க:(
முதலில் அரண்மனை பார்த்துறலாமுன்னு அங்கே போய்க்கிட்டு இருக்கோம். போற வழியில் நின்ன ஒரு கட்டிட அமைப்பு கண்ணை இழுத்துச்சு. மலேசியாவில் இருந்து போகும் ஹஜ் யாத்திரைக்காரர்களுக்கான உதவி செய்யும் நிதி ஒதுக்கீடு அலுவலகமாம். Lembaga Tabung Haji Headquarters. இந்த புண்ணிய காரியம் செய்ய ஆரம்பிச்சது 1962 இல் இருந்து. இப்போ 1984 இல் சொந்தக் கட்டிடம் கட்டிட்டாங்க. இதுலேயும் பலமாடிகளை வாடகைக்கு விட்டு அதுவும் பயண நிதியில் சேருதாம்.
இந்த அமைப்புள்ள கட்டிடம் என்னவாக இருக்குமுன்னு கொஞ்சநேரமுன்னே கோபுரத்தில் இருந்து பார்த்தபோது யோசனை. கீழே வருமுன் மறந்தும் போச்சு. இப்போ கண்ணில் பட்டதும் விசாரிச்சால் அது கலைநிகழ்ச்சிகளுக்கான தியேட்டர்.
ட்வின் டவரில் இருந்து எடுத்த படங்கள் கீழே.
அரண்மனைக்குப் போகும் வழியில் மேலே சொன்னவைகளை க்ளிக்கிக்கிட்டே போறோம். கொஞ்சம் மேடான பகுதியில் தனியா ஒரு புத்தம்புது சாலை ப்ளை ஓவரா பிரிஞ்சு போகுது. Daulat Tuanku (அரசர் நீடூழி வாழ்க) என்பதைப் பார்த்ததும் சரியான சாலைதான்னு உறுதியாச்சு. இப்போதைய அரசர் அங்கே வசிக்கிறார். அதென்ன இப்போதைய?
மலேசியாவில் அரச குடும்பம் மட்டும் ஒன்பது பேர் இருக்காங்க. இவுங்க அஞ்சு வருசத்துக்கு ஒரு குடும்பமுன்னு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தறாங்க. அடுத்த வாரிசா மகன் இருக்கணும் அரசாளன்னு வேற இருக்கு. பெண்குழந்தைகள் இருந்தால் அவுங்கமுறை போயிருமேன்னு குடும்பத்தில் ஆண் வாரிசுக்காக ஒன்னுக்கு மேற்பட்ட திருமணங்களும் நடப்பதுண்டு. ஒருத்தர் அஞ்சு வருசம் ஆண்டுட்டால் அவருக்கு அடுத்த முறை வர எப்படியும் 45 வருசமாகிரும்.
அரண்மனையில் ஒவ்வொரு அஞ்சு வருசத்துக்கும் புது ராஜா வந்து குடியேறுவார். இப்போ இருக்கும் அரசர், புது அரண்மனை கட்டிக்கலாமுன்னு முடிவு செஞ்சு அதை லண்டன் பக்கிங்ஹாம் பேலஸ் மாதிரி ஒரு ஸ்டைலில் கட்டிமுடிச்சு குடியேறிட்டார். 28 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய தோட்டத்துக்கு நடுவில் பிரமாண்டமாக் கட்டி இருக்காங்க. பத்து லட்சம் சதுர அடிகள் கட்டுமானம்.
அரண்மனைக்கு ஆன செலவு மட்டும் 258 மில்லியன் டாலர்னு ஒரு பக்கம் மக்கள்ஸ் (ஓசைப்படாமல்) புலம்பிக்கிட்டு இருந்தாங்க. மன்னராட்சியில் இதெல்லாம் சகஜமில்லையோ? அதுவுமில்லாமல், இப்போதைய மன்னரின் பதவி காலம்முடிஞ்சதும் அடுத்த அஞ்சு வருசத்துக்கு ஆளவருபவரும் இங்கேதானே வந்து வசிக்கப்போறார். அந்த மன்னர் கட்டுனதை நான் பயன்படுத்த மாட்டேன். அதை வேறொன்னா மாத்தணும் என்றெல்லாம் சொல்லமாட்டாங்க தானே?
பழைய அரண்மனை நல்லாத்தானே இருக்குன்னு சொன்னவர்களுக்கு , நோ ஒர்ரீஸ். அதை ம்யூஸியமா மாத்திக்கலாம். வேஸ்ட் ஆகாதுன்னு உத்திரவாதம் கிடைச்சது. என்ன ஒன்னு.... கட்டி முடிக்கக் கொஞ்சம் தாமதமாகிப்போச்சு என்பதைத் தவிர வேறொரு குழப்பமும் இல்லை.
மன்னர் ரெண்டு வருசத்துக்கு முன்னாலே (2011) புது (அரண்)மனையில் குடியேறிட்டார்.
பெரிய வளாகத்துக்குள் வண்டிகள் நிற்க ஏராளமான பார்க்கிங் இருக்கு. சுற்றுலாத்துறை விடும் ஹாப் ஆன் ஹாப் ஆஃப் பேருந்துகள் இங்கேயும் பயணிகளைக் கொண்டு வந்து காமிச்சுட்டுக் கூட்டிப் போகுது. மத்தபடி பஸ் வசதிகள் இல்லை. காரிலோ, டெக்ஸியிலோ போறதுதான் சுலபம்.
அரண்மனைக்குள் போய்ப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. வாசக்கேட்டுக்கு வெளியில் இருந்து பார்த்துட்டு க்ளிக்கிட்டுப் போகலாம்.
பெரிய கம்பி கேட்டுக்கு ரெண்டு புறமும் ரெண்டு மாடங்களில் குதிரையும் அதன்மேலமர்ந்து காட்சி கொடுக்கும் வீரரும். ப்ரிட்டிஷ் யூனிஃபார்ம் போல சிகப்பு நிறத்தில் உடை அணிஞ்சு இருக்காங்க. இடையில் உள்ள காவல் மாடத்தில் வீரர்கள் எல்லாம் மலேயா ஸ்டைல் தொப்பியும் Songket என்ற வகை அரைச் சராங்குமா இருக்காங்க.
இதான் அரண்மனைன்னு சுட்டிக் காட்டறார் நம்மவர்:-)
கம்பி கேட்டென்பதால ஓரளவுக்கு உள்ளே இருக்கும் இஸ்லாமிய ஸ்டைல் கட்டிடங்களைப் பார்க்கமுடியுது. வெங்காயக் கூம்புகள் போல் இல்லாம புது மோஸ்தரா மாடர்னாவும் இருக்கு! பகல் 12 மணிக்கு சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ் இருக்காமே! அதைப்பார்க்க நல்லகூட்டம் வந்துருக்கு. எங்களுக்குத்தான் கொஞ்சம் பிந்திப் போச்சு. ஒரிஜனல் பக்கிங்ஹாம் பேலஸில் பார்த்தது (14 வருசம் முன்னே) நினைச்சுக்கிட்டேன்.
சுற்றிலும் பசுமையா இருக்குன்னாலும் பூச்செடிகள் அவ்வளவா இல்லை. வளாகத்தில் நின்னால் ஒரு புறம் ரெட்டைக் கோபுரங்கள் கண்ணில் விழுந்தன.
மிஞ்சிப்போனால் இருவது நிமிசத்துக்கு மேல் பார்க்க ஒன்னுமில்லை. வெளி முற்றம் நிழல் இல்லாமல் உலகத்து வெயிலை எல்லாம் இழுத்து நம் தலையில் போடுது. அதுவும் மட்ட மத்தியான வெயில்:(
நாமும் தௌலத் டுவான்கு Daulat Tuanku (அரசர் நீடூழி வாழ்க) சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
தொடரும்..........:-)
33 comments:
படங்கள் அருமை அம்மா...
come to Thanjavur: u can visit the palace inside/outside
இவங்க எல்லாம் ஒரே மாதிரி அரண்மனை கட்டுறாங்க இல்லப்பா துளசி.?
அந்த மரத்தண்டவர் மார்த்தாண்டமா இருப்பரோ:)
கொஞ்சம் உள்ளயும் விட்டிருக்கலாம். நாங்க பார்த்திருப்போம்.!!!
படங்கள் எல்லாமே சூப்பர்,.
ஹ்ம்ம்ம்..துளசிம்மாவை மட்டும் அரண்மனைக்குள் அனுமதித்து இருக்கலாம்.எல்லோரும் சேர்ந்து பார்த்திருப்போம் இல்லை!
//இதான் அரண்மனைன்னு சுட்டிக் காட்டறார் நம்மவர்:-)//
பெண்கள் உலகம் முழுவதும் ஒன்று தான். நம்மவர் என்று சொல்லும் போது உள்ள அதே closeness (அன்னியோன்யம்?? சரியான் மொழி பெயர்ப்பு தானே), he is my husband, என்று அழகாக சொல்லும் வெள்ளைக்காரிகளிடமும் கண்டுள்ளேன். பெண்கள் எங்கிருந்தாலும் ஒன்று தான் போல!
மரத்தாண்டவர் குடும்பத்தைப்பற்றி கேட்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.
அரண்மனை வெளிப்புறத் தோற்றம் அழகு. படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.
அன்பின் டீச்சர்,
போன பதிவில் எனக்காக 'தாலி' பற்றிய பல தகவல்களைத் தெளிவாகவும், விரிவாகவும் தந்தமைக்கு மிகவும் நன்றி டீச்சர். தாலி சென்டிமென்டோட பல தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கிறேன்..இப்படியொரு 'தாலி'யை இன்றுதான் கேள்விப்படுகிறேன். இனிமே எப்ப சரவணபவன் போனாலும் உங்கள் ஞாபகம்தான் வரும். :-)
அப்புறம் டீ ஆற்றுவது குறித்துக் கூறியிருந்தீர்கள். நேரில் பார்த்ததில்லை. யூட்யூப் எதற்கு இருக்கிறார்? தேடிப் பார்த்தேன்..சான்ஸே இல்லை..
இதைப் பாருங்கள்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=XRNIExdiBpw
ரசித்தேன்.
புன்சிரிப்புடன் ஆரம்பித்து
அழகான வீதிகளில் அழைத்துச் சென்று
அரண்மனை வாழ்வையும்
சில கணங்கள் தந்துவிட்டீர்கள்
நன்றி
ரசித்தேன்
அய்யாவிடம் இந்த வார்த்தைக்கு ட்ரேட் மார்க் வாங்கி வச்சுக்கப் போறேன்.
எனக்கும் உங்களைப் போன்ற பழக்கம் உண்டு. கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் ஊர்ப்பற்றி அங்கே உள்ள சிறப்புகள் பற்றி அவர்கள் துறை சார்ந்த விசயங்களைப் பற்றி தெரிந்து கொள்வதுண்டு.
ஆனால் இன்று பலரும் இது போன்ற உரையாடல்களை விரும்புவதில்லை என்பதும் உண்மை.
//இந்த அமைப்புள்ள கட்டிடம் என்னவாக இருக்குமுன்னு கொஞ்சநேரமுன்னே கோபுரத்தில் இருந்து பார்த்தபோது யோசனை. கீழே வருமுன் மறந்தும் போச்சு. இப்போ கண்ணில் பட்டதும் விசாரிச்சால் அது கலைநிகழ்ச்சிகளுக்கான தியேட்டர்.//
முந்தைய பதிவில் போட்டோவை பார்த்தப்போ எனக்கும் இ ந்த கட்டிடம் என்னவோ ன்னு யோசனை போச்சு . இப்போ தெரிஞ்சுகிட்டேன் .
நேரில் செல்ல முடியுமா தெரியாது . உங்கள் விளக்கம் நேரில் சென்று பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது .
ரிஷான் ஷெரிப் கொடுத்த லிங்க் .....
அடடடா அந்த டி ஆத்தும் நாயர் ( டீ ஆற்றினால் நாயர்தான் ) அட்டகாசம் !!! ஆற்றுவதற்க்கு முன் ஒரு ஆட்டம் போடறார் பாருங்க ..... பின் அந்த பரோட்டா மாஸ்டரும் அந்த ரொட்டியை கேட்ச் பிடிப்பவரும் .... அசத்திட்டாங்க போங்க !!!!
பதிவர் சசிகலா நான் இல்லை என்பது தெரிந்து கொண்டீர்களா ?
அரணமனை விஸ்தாரமாக அழகாக இருக்கின்றது.
வெயிலைக்குறைக்க இன்னும் மரங்கள் நாட்டிவைக்கலாமே எனத்தோன்றியது.
உலகம் சுற்றும் வாலிபி சாரீஸ்ஸ்ஸ்ஸ் இளைஞீ வாழுக !!!
படங்களில் அவர்களின் இயல்பான மனம் நிறைந்த சிரிப்பை அள்ளிட்டீங்க. மகிழ்ச்சியாக இருக்கு.
உங்கள் வலைப்பதிவின் படங்கள் வரலாற்று ஆவணமாகப் போகுது துள்சி. குறிச்சு வெச்சுக்கோங்க :)
தௌலத் டுவான்கு
தௌலத் டுவான்கு
தௌலத் டுவான்கு
நானும் சொல்லி வெச்சுக்கிறேன்:)
மரத்து ஆண்டவர்தான் மார்த்தாண்டவர் ஆகியிருக்குமோ! ரூம் போடாமல் வீட்டிலேயே உட்கார்ந்து யோசிக்கிறேன் :)
உங்களப் பாத்ததும் டக்குன்னு 25வெள்ளி கொறச்சுக்கிட்டாங்களே. அடேங்கப்பா.. அடேங்கப்பா (பாலையா குரலில்)
பொறுப்பான குடும்பத்தலைவர் போல. முருகனருளால் அவங்க குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கனும்.
.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரசித்தமைக்கு நன்றீஸ்!
வாங்க ttpian.
தஞ்சாவூர் அரண்மனையை போன ஆண்டு பார்த்து, எழுதியும் ஆச்சுங்களே!
வருகைக்கு நன்றி.
வாங்க வல்லி.
அரண்மனை உள்ளே படங்கள் சில 'ஆண்டவர்' அருளினார். அப்படி ஒன்னும் ஓஹோன்னு இல்லையாக்கும்.
நான் கூட அவர் மருதாண்டவர் என்றே நினைச்சேன். ஆனால் இல்லையாமே!
மரு இல்லை, மரமே!
ராஜஸ்தான் பயணத்தில் ஏராளமான அரண்மனைகளையும் கோட்டைகளையும் பார்த்தோமே.
இன்னொரு புது அரண்மனை வந்தால் ஒருவேளை பழையதைப் பார்க்க விடுவாங்களா இருக்கும்:-)))
வாங்க ஸாதிகா.
அவுங்களுக்கு 'நம்ம' பவர் தெரியலையேப்பா!!!! :-)))))
வாங்க நம்பள்கி.
அதென்ன பெண்களை மட்டும் சொல்றீங்க?
ஆண்களும் அப்படித்தான். எங்கிருந்தாலும் ஒன்றே!
வாங்க கோமதி அரசு.
ரசித்தமைக்கு நன்றி.
மரத்தாண்டவர் 'எளியவரா' இருக்கார். அதான் வாழ்க்கையில் சாமி விளையாட்டு!
வாங்க ரிஷான்.
சுட்டிக்கு நன்றி.
என்னமா ஆத்தறார்!!!!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க டொக்டர் ஐயா.
நலமா இருக்கீங்களா?
ரசித்தமைக்கு நன்றி.
வாங்க ஜோதிஜி.
ஐயா டெம்ப்ளேட் பின்னூட்டம் ரெடியா வச்சுருக்கார் :-)
சாதாரண மக்களிடம் பேச்சுக்கொடுத்தால் சிலபல அபூர்வ சமாச்சாரங்கள் எதிர்பாராமல் வந்து விழும்.
நம்ம பக்கங்களில் காலநிலை பற்றிதான் சின்னப்பேச்சு முதலில் ஆரம்பிக்கும்.
ரொம்ப இளைஞர்கள் தான் இப்படி பேச விரும்பாதவர்கள். காலம் மாறுதில்லையா:-)
வாங்க சசி கலா.
// ( டீ ஆற்றினால் நாயர்தான் )//
ஹாஹா, போட்டீங்களே ஒரு போடு:-)
நேரில் போய்ப் பார்க்கணுமுன்னு இருந்தால் கிடைக்காமல் போகாது. அப்பப்போய்ப் பார்த்து எழுதுனது சரியான்னு சொல்லுங்க.
வாங்க மாதேவி.
ஆமாம். மரங்கள் அங்கங்கே வச்சுருக்கலாம்.
முற்றம் முழுவதும் கல்பாவி வச்சுருக்காங்க. அரண்மனை கேட்/ ஃபென்ஸ் ஓரமாக அழகுக்காக பல மரங்களை தொட்டிகளில் வச்சுருக்காங்க.
வாங்க கவிதாயினி.
அரசர் நீடூழி வாழ்க! இப்ப அவர் ரெண்டாவது இன்னிங்ஸ்.
அங்குள்ள நம்மவர்கள் கொஞ்சம் வெகுளியாத்தான் இருக்காங்கப்பா.
அதான் வெள்ளைச்சிரிப்பு!
வாங்க ஜிரா.
இப்ப மார்த்தாண்டம் பற்றி யோசிக்கணும்!
நல்லவராத்தான் இருக்கார். முருகன் பார்த்துப்பான். படைச்சவனுக்கு வேறென்ன வேலை?
அம்பது குறைச்சுட்டார். 33% டிஸ்கவுண்ட்.
அருமையான படங்களுடன், நானும் சென்று வந்த உணர்வு.... அடுத்து எங்கே ட்ரிப் ?!
அரண்மனையை பார்க்கும் முன் மரத்தாண்டவர் கதை மனதை உருக்கி விட்டது. அரண்மனை முழுதும் அவரே சுற்றிச்சுற்றி வந்தார். நீங்கள் சொல்வதுபோல பத்துமலை முருகனும், பெருமாளும் அவரது குடும்பத்திற்கு அருளட்டும்.
ஊரு முழுக்க இரட்டை கோபுரம் தெரியும் போல?
வாங்க சுரேஷ் குமார்.
உள்ளூர்ப் பயணம் ரெண்டு மூணு இருக்கு.
அதுக்குப் பிறகுதான் ஓவர்சீஸ் ட்ரிப்.
வாங்க ரஞ்ஜனி.
எனக்கும் மலேசியாவை விட்டுக் கிளம்பும்வரை மரத்தாண்டவர் நினைவுதான். சூழல் மாறினதும் நினைவும் நிகழ்காலத்துக்கு வந்துருதே!
அவுட் ஆஃப் சைட் இஸ் அவுட் ஆஃப் மைண்ட்.
Post a Comment