Monday, September 02, 2013

ஸ்கை ப்ரிட்ஜ் .பெட்ரோநாஸ் ரெட்டைக் கோபுரம்....... (மலேசியப் பயணம் 13 )

அரசர் நீடுழி வாழ்கன்னு நிரந்தமான  சொற்களோடு  Daulat Tuanku பிரமாண்டமா நிற்கும் இரட்டைக்கோபுர வளாகத்தில்  போய் இறங்குனப்ப  மணி  ஒம்பதே முக்கால் கூட ஆகலை.  காமணிக்கு முன்னாலே வந்துறனுமுன்னு  நமக்கு உத்தரவாகி இருக்கேன்னு  காலையில்  ரெடியாகி, ப்ரேக்ஃபாஸ்டை அறையிலே முடிச்சுக்கிட்டு கீழே வந்தவுடன் சட்னு டெக்ஸி கிடைச்சிருச்சு.


  பத்து நிமிசத்துக்கும் குறைவான பயணம். மண்ணச்சநல்லூர்காரர்  பழனிச்சாமியின் ரெட்  டெக்ஸி. சின்னப்பேச்சை ஆரம்பிச்சு முதல் கேள்வியை முடிக்குமுன் நாம் இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு. வழக்கம் போல் வளாகத்தின் வெளியே இறக்கிவிடப்பட்டோம். அநியாயத்துக்கு காசு பிடுங்கிடுவாங்கன்னு சொன்னார்.

நாம் போய் ஆஜர் சொல்ல இன்னும் அரைமணி இருக்கேன்னு  ஷாப்பிங் பகுதிக்குள் நுழைஞ்சோம். கடைகள் எல்லாம் பத்து மணிக்குத்தான் திறக்கறாங்க.  அங்கங்கே இருக்கும் சின்னச் சின்ன  கடைகள் படுதாவுக்குள்! அங்கங்கே ஒரு சில  கடைகள் திறக்க ஆரம்பிச்சுருந்தாங்க..

பிரமாண்டமான மேல் கூரைகளுடன்  காலியா இருக்கும் போது ஒருவிதமான அமைதி அங்கே! ஒவ்வொரு கடைகளும் இருக்கும் விதம் பார்த்தால்....   ஊருக்குப்போய் வீட்டை வித்துக் கொண்டு வந்தாலும் பத்தாமல் போகும் என்று நினைப்பு.  வீடு இருக்கட்டுமே நமக்கு.

வெளியே போய்  ரெட்டை கோபுரங்களை கொஞ்சம் க்ளிக்கலாமுன்னு முன்புறம்வந்தோம். அலங்கார  நீரூற்று.  கோபுரத்தின் பிம்பம் தண்ணீரில் தெரிய  சான்ஸே இல்லை.   இன்னும் தள்ளிப்போகணும், இன்னும், இன்னுமுன்னு சொல்லிக்கிட்டே வளாகத்தின் எதிர்மூலைக்குப் போயிருந்தோம்.  ஒரு ஃப்ரேமில் அடங்கும் சமாச்சாரம் இல்லை என்பதுரொம்பவே லேட்டாப் புரிஞ்சது:-)





ஒரு நாளைக்கு  24 முறை, ஒவ்வொரு முறைக்கும்  20 பேர்கள் என்ற கணக்கில் கொண்டுபோய் காமிக்கிறாங்க. காலை 9 மணிக்கு முதல் குழு.  ரெண்டாவது  குழு  ஒன்பதே காலுக்கு.  அதுக்குப்பின்  ஒவ்வொரு முழுமணிக்கும்  அதைதொடர்ந்து வரும் கால் மணிக்கும் ஒரு ரெண்டு  குழு. இரவு எட்டுக்கும் எட்டேகாலுக்கும்  கடைசி குழுக்கள்.  9,915. 10, 10.15, 11, 11.15 இப்படி.

ஒவ்வொரு முழுவிலும் 20 பேர்தான் அதிகபட்சம்.   இதுதான் மேனேஜபிள் எண்ணிக்கை போல. அப்புறம் தெஞ்சுக்கிட்டது, ஒரு லிஃப்ட்டுலே 26 நபர்கள்தான் போகமுடியும் என்பது.


பத்து மணிக்கு நாங்கள் வரிசையில் போய் நிற்கிறோம்.  விஸிட்டர் என்ற அடையாள அட்டையை நம் கழுத்து அலங்கரிக்கணும்.  எதோ விமான நிலையத்தில் இருப்பதைப்போல்  செக்யூரிட்டி செக். நம்ம கைப்பைகள் எல்லாம்கூட ஸ்கேன் செஞ்சு அடுத்த பக்கம் வருது.

ஒவ்வொரு குடும்பம்/குழுவையும்  தனித்தனியா  ஒரு கருப்பு பேக்ட்ராப் முன்னால் நிக்கவச்சு ஒரு ஃபோட்டோ வேற, ஏதோ லைன் அப் படம் எடுக்குறமாதிரி.  நமக்கெதாவது  ஆகிருச்சுன்னா.....  செக்யூரிட்டி இல்லை எவிடென்ஸுக்கு  எடுக்கறாங்கன்னு (மடத்தனமா) நினைச்சுக்கிட்டேன்.


அப்புறம்  நாம் எப்படி நடந்துக்கணுமுன்னு சின்னதா ஒரு  அறிவிப்பு. இப்போ நாம் பார்க்கப் போற 'அதிசயத்தை' பற்றி:-) ஒரு லிஃப்ட் வந்து நின்னு கதவு திறந்ததும் எங்க இருபது பேரையும் அதுக்குள்ளே அடைச்சாங்க. விர்ன்னு மேலே எழும்பி , போய் நின்னது 41 வது மாடியில்.  வெளியே வந்த இடம் ஸ்கை ப்ரிட்ஜ். ரெண்டு கோபுரங்களையும் இணைக்கும் பாலம்!

மலேசியாவின் பல்வேறு இனங்கள் எப்படி ஒன்னுக்கொன்னு ஆதரவா இருக்குன்றதை உருவகப்படுத்தும் விதமா இந்த ரெட்டைக்கோபுரங்கள் ஒன்னுக்கொன்னு ஆதரவா  கை பிடிச்சு நிற்கும்விதமா இந்த பாலம் ரெண்டு கோபுரங்களையும் இணைச்சுப்பிடிச்சிருக்கு.

தரையில் இருந்து 170 மீட்டர் அந்தரத்துலே இருக்கோம் இப்போ!  யாராவது கீழே சாடிட்டால்? நோ ச்சான்ஸ். முழுசுமா கண்ணாடிச்சுவர்.  கோபுரத்தின் முன்னும்பின்னும் இருக்கும் காட்சிகள் கண்ணுக்குத் தெரியுது. தூரக்கே அந்த பத்து மலை. நம்ம முருகன்  இருக்கானான்னு  பார்த்தால் ஊனக்கண்ணுக்குத் தெரியலை.  ஞானக்கண்ணுக்கு தெரியுமோன்னு எதுக்கும் க்ளிக்கி வச்சேன்.


 வெளியே கண்ணாடிச்சுவர்களைச்சுத்தம் செய்யும் பணிசெய்கிறார் ஒருவர்.

அதிகப்பட்சமா இந்த  வானப்பாலத்தில் பதினைஞ்சு நிமிசம் நாம் நடக்கலாம். மனுச சுபாவம் தெரிஞ்சதால் பத்து நிமிசம் இங்கே இருந்து காட்சிகளைப் பாருங்கன்னு  சொல்றாங்க:-) நாம் அப்படி இப்படின்னு இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் நீட்டிக்குவோம். இந்தக் குழுவின் கூடவே வரும்  ரெட்டை கோபுர பார்வையாளர் குழுக்களுக்கான  பொறுப்பு வகிப்பவர்  ஒருத்தர்  கூடவே வந்துக்கிட்டு இருக்கார்.  எதாவது சந்தேகம் இருந்தால் அவரைக் கேட்டுக்கலாம்.  இருக்கும் பத்து நிமிசத்தில்  வேடிக்கை பார்ப்போமா, பரவசம் அடைவோமா,  க்ளிக்குவோமா, இல்லே சும்மா இங்கேயும் அங்கேயுமா நடப்போமா ? பாலத்தின் நீளம் அம்பத்தியெட்டு புள்ளி நாலு மீட்டர்!

எவ்ளோ நேரம்  அங்கே இருக்கலாமுன்னு ஒரு சிம்பிள் கேள்வி கேட்டேன்:-)


காணும் காட்சிகள் விவரம்  டச் ஸ்க்ரீனில் பார்த்துக்கலாமே!~




ஒரு கோபுரத்துலே  எதாவது ஆபத்துன்னா  அங்கே இருப்பவர்கள்  இந்தப் பாலம் வழியா அடுத்த கோபுரத்துக்கு  வந்துறலாமாம்.

Entrapment படத்தின் க்ளைமாக்ஸ் இந்த ஸ்கைப்ரிட்ஜ்லே எடுத்தாங்க. (அப்பாடா...சினிமாவில் ஆக்ட் கொடுத்தாச்சு சினிமாப்புகழ்)

எல்லோரையும் ரவுண்டப் பண்ணி இன்னொரு மின்தூக்கிக்குள் அடைச்சாங்க.  முழுக் கட்டிடத்துக்குள்ளே  29 டபுள்டெக்கர்  லிஃப்ட் ஒவ்வொரு கோபுரத்துக்கும் இருக்காம்.  ஆனா நாம் போகும் லிஃப்ட்டில்  அடுக்கடுக்கா  தளவரிசைக்கான  எண்கள் போட்டுருந்தாலும்   ரெண்டே ரெண்டு தளத்துக்கான லிமிட்டட்  ஆக்ஸெஸ்தான்.

தொடரும்......... :-)




17 comments:

said...

ஜையை பிடிச்சு கூட்டி போனது போல இருந்துச்சு, படங்கள் அருமை!!

said...

படங்களுடன் விளக்கம் அருமை...

said...

அருமை. அழகான புகைப்படங்கள். ராஜி சொல்வது போல் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு போகும் வாத்சல்யம். நன்றி டீச்சர்.

said...

காலை முதல் மதியம் வரைக்கும் இங்கே இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. ஆச்சரியப்படும் சுத்தம்.

said...

அருமையான வர்ணனைகளுடன் படங்கள் பார்த்ததினால் நேரில் சென்று பார்த்தது போன்ற மகிழ்ச்சி . thankyou!!!

said...

ரசித்தேன்.

said...

வாங்க ராஜி.

நம்ம பயணம் எல்லாம் சரித்திர டீச்சர் கூடப்போகும் பள்ளிக்கூடச் சுற்றுலாக்கள்.

டீச்சர் பொறுப்பாக் கூட்டிப்போக வேணாமோ?

அங்கே இங்கே ஓடாமல் கூடவே வருவதற்கு நன்றிப்பா.

said...

வாங்க கீத மஞ்சரி.

கூட(வே) வருவதற்கு நன்றிப்பா.

said...

வாங்க ஜோதிஜி.

கோபுரமேறிப் பார்க்கத்தான் லிமிட்டட் டைம். பொதுவா வளாகத்துக் கடைகளில் நாள் பூராவும் இருந்தாலும் நேரம் போவது தெரியாது.

சுத்தமே ஒரு அழகுதான்.இல்லே?

said...

வாங்க சசி கலா.

அதுக்காக நேரில் பார்க்கச் சான்ஸ் கிடைச்சால் விடலாமா?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பின்னூட்டப்புயல் என்பது பொருத்தமான பட்டம் உமக்கு:-)

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றீஸ்.

said...

ஸ்கைவாக் நல்லா இருக்கு.
எம்பையர் ஸ்டேட் பில்டிங் ஏறியபோது ம்,டொராண்டோ சிஎன் டவர் பார்த்தபோது இருந்த த்ரில் நினைவுக்கு வந்தது.
நானும் யோசித்துப் பார்க்கிறேன்,. ஏன் இத்தனை உயரம் கட்டும் எண்ணம் வருகிறது. அதுவும் ஒரு நாட்டோடு இன்னோரு நாடு போட்டி:)
ஷான் கானரியும் கேதரின் ஜோன்ஸும் உலா வந்தார்கள்!!!

said...

அசத்தல் கோபுரங்கள்.
பார்த்து மகிழ்ந்தோம்.

said...

வாங்க வல்லி.

எனெக்கென்னமோ எம்பயர்ஸ்டேட் பில்டிங் எஸ்கலேட்டர் ரொம்ப தூரத்துக்குப் போட்டுருந்த நினைவு. அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருந்துச்சே!

உயரப்போக மனுசனுக்கு ஆசைப்பா:-)

said...

வாங்க மாதேவி.

ரசித்தமைக்கு நன்றிப்பா.

said...

பல போஸ்டர்களில் இந்த கோபுரங்களைப் பார்த்திருக்கிறேன். இன்று தான் இவற்றை பற்றிப் படித்து தெரிந்து கொண்டேன்.

இரட்டைக் கோபுரங்களின் மேல் கூட்டிப் போனதற்கு நன்றி, துளசி.

ஒருவழியாக எனது உள்ளூர் பயணங்கள் முடிந்து மறுபடி உங்களுடன் மலேசியப் பயணத்திற்கு வந்துவிட்டேன். மற்ற பதிவுகளையும் படித்து விடுகிறேன்.