Wednesday, September 11, 2013

ஜெய் ஜவான்!!! (மலேசியப் பயணம் 16 )

வார் மெமோரியல் இருக்குன்னு தெரிஞ்சா நான் ஒருநாளும் தவறவிடமாட்டேன். இங்கே நியூஸியில்  இருபதுபேர் வசிக்கும் சின்ன ஊரா இருந்தாலும் அங்கிருந்து போரில் கலந்து கொண்டவர் ஒரே ஒரு நபரா இருந்தாலும் கூட அங்கே ஒரு  நினைவுச்சின்னம் வச்சுருவாங்க. ஆன்ஸாக் டேன்னு சொல்லப்படும் ஏப்ரல் 25 ஆம்தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் அந்த நினைவுச் சின்னங்களுக்கு  மலர்வளையம் வச்சு மரியாதை செய்வது  ஒரு சடங்கு.  இந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளனர்.

நாங்களும் நியூஸியில் எந்த ஊர்ப்பக்கம் சுற்றுலாவுக்குப் போனாலும் போர் நினைவுச் சின்னத்திற்குப்போய் ஒரு நிமிசம்  பிரார்த்தனை செய்துட்டுத்தான் வருவோம். நாட்டுக்காக உயிர் துறந்த உத்தமர்களுக்கு நாம் செய்யும்  ஒரு மரியாதை. ராணுவத்தின் பணி  மகத்தானது என்பதை நெருக்கடி காலங்களில் புரிந்துகொள்ள முடியும்.


மரத்தாண்டவர் நம்மைக்கொண்டு போய் இறக்கியது  நேஸனல் மெமோரியல். அழகான தோட்டத்துக்கு நடுவில்   கட்டி இருக்காங்க.முன் வாசல் கேட் கடந்தால் எதிரில் ஒரு செனடாப். இந்த சாலைக்கு ஜலான் செனடாப் என்றுதான் முந்தி பெயராம். இப்போ Jalan Tugu என்று பெயர்.

நம்ம சிங்காரச்சென்னையிலும் செனடாப் ரோடு இருக்கே..... அங்கே எதாவது செனடாப்பைப் பார்த்த நினைவு எனக்கு இல்லை.  உங்களுக்கு  இருக்கோ?  எப்படி செனடாப் ரோடு என்று பெயர் வந்திருக்கும்?

இங்கே  ஒன்னு சொல்லாம இருக்கமுடியலை. நம்ம சிங்காரச் சென்னையில் போர் நினைவுச்சின்னம் ஒன்னு இருக்கு பாருங்க  தீவுத்திடல் போகும் வழியில் கோட்டைக்குப் பக்கம்.  அங்கே ஒருநாள் எட்டிப் பார்த்தப்ப,  இடத்தின் அருமை தெரியாத சனம் துண்டு விரிச்சுத் தூங்கிக்கிட்டு இருக்கு:(

மலேசியா தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று இந்த நேஸனல் மான்யூமெண்ட். முதல் உலகப்போரிலும், ரெண்டாவது உலகப்போர் காலத்தில்  ஜப்பான் மலேயாவைக் கைப்பற்றி  வச்சிருந்த போதும், மலேயன் எமெர்ஜென்ஸின்னு 1948 முதல் 1960 வரை இருந்த சமயங்களிலும், பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் வேண்டி நின்ற சமயங்களிலும் நாட்டுக்காக உயிர்துறந்த  ராணுவவீரர்கள் நினைவாகக் கட்டப்பட்டதே இது.




இந்த  நினைவுத்தூணுக்கு பின்னே   ஆங்கில   'C' யை படுக்க வச்ச மாதிரி இன்னுமொரு  அழகான கட்டிடம்.  தளத்தின் மேல்  இஸ்லாமிய கலையைக் காட்டும்  வெங்காய கூம்புகள் நடுவிலே ஒன்னும் ரெண்டு பக்கங்களில் ஒவ்வொன்னுமா  மூன்று.


படிகளேறி உள்பக்கம் போனால் கட்டிடத்துக்கு மறுபுறம் பெரிய செயற்கைக் குளமும் அத்ல் மிதக்கும் செயற்கைத் தாமரை அமைப்புகளுமுள்ள நீரூற்று.  அதுக்கும் அந்தாண்டை ஒரி பிரமாண்டமான சிலை. படையினர் கையில்  தேசியக்கொடியும் படைக்கலன்களும் ஏந்தி நிக்கறாங்க. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்  காலடியில்  கீழே விழுந்திருக்கும் வீரர்களின் உடல்கள்:(

அவர்களின் ஆன்மசாந்திக்கு வேண்டி ஒருநிமிடப் பிரார்த்தனை.

இந்த வார் மெமோரியல் கட்டிடமும் நினைவுத்தூணும் கட்டியது 1960 ஆம் வருசத்தில்.  நாடு சுதந்திரம் அடைந்த பின் பதவிக்கு வந்த முதல்பிரதமர் டுன்கு அப்துல் ரெஹ்மான் அவர்கள்  அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குப் போயிருந்தப்ப , வர்ஜீனியாவில் உள்ள  Marine Corps War Memorial போயிருக்கார். அந்த  நினைவிடத்தின் அழகிலும் கருத்திலும் வெகுவான ஈர்ப்பு வந்திருக்கு.

1948 முதல் 1960 வரை  மலேயன் எமெர்ஜென்ஸி(காமன்வெல்த் படையினருக்கும்மலேயாவின்  லிபரேஷன் பர்ட்டியின் மிலிட்டரியினருக்கும் நடந்த கொரில்லாப் போர்)  சமயம்  உயிரிழந்த பதினோராயிரம் வீரர்களின் நினைவுக்காகவும், முதல் இரண்டாம் உலகப்போர்களில்  போரிட்டு வீழ்ந்துபட்ட வீரர்களின் நினைவுக்காகவும் இதே போல் ஒரு நினைவிடம்  கட்டணும் என்ற எண்ணம் வந்து,  அதே Felix de Weldon என்ற சிற்பியைக் கொண்டு  இங்கே அமைத்த  சிலைதான் இது.

1966 இல் சிலை உருவாகி திறந்து வைக்கப்பட்டது. நம்மூர் கொடிநாள் போல இங்கே வாரியர்ஸ் டேன்னு  ஜூலை மாதம் 31 ஆம் தேதியில் படையினரை நினைவு கூறுகிறார்கள். இந்த நாளில் அரசரும் பிரதமரும் மற்ற பார்லிமெண்ட் அங்கங்களும் வந்து  மலர்வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தறாங்க.



நாட்டின் மிகப்பெரிய வெண்கலச்சிலை என்ற  பெயரில்  49 அடி உயரச் சிலையா அமைஞ்சுருக்கு. அதுவும் மேடை மேல் இருப்பதால்  அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் உயரமே!


இடம் அப்பழுக்கில்லாமல் படு சுத்தமா இருக்கு. சுத்திவர இருக்கும் செயற்கைக் குளங்களில் அழுக்கு சேரவிடாமல் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க.


நீர்நிலைகள் அது செயற்கையோ இயற்கையோ ...பார்த்தாலே மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு. அதுவும் சுத்தமா இருந்தால் கேக்கவே வேணாம்! 



தரைகளில் கோலங்களா என்ன?

சுற்றுலாப்பயணிகள் நடமாட்டம் அதிகமாத்தான் இருக்கு. பெரிய தோட்டத்துக்குள் இருப்பதால் வெயிலின் கொடுமை அவ்வளவாத் தெரியலை.
கொஞ்சதூரத்திலேயே டுன் அப்துல் ரஸாக் அவர்களின் நினைவாலயம் இருக்கு. இவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமர்./ நம்ம டுன்கு அப்துல் ரெஹ்மான் (முதல் பிரதமர்) அவர்களை தேசத் தந்தை என்று அன்போடு விளித்த மக்கள், டுன் அப்துல் ரஸாக் அவர்களை  Father of Development என்று போற்றினர்.  (இங்கே  உள்ளே போய்ப் பார்க்காமல் போறபோக்கிலேயே ஒரு வணக்கம் போட்டுட்டுப் போனேன்)


இஸ்லாமிக் ஆர்ட் ம்யூஸியம் ஒன்றைக் கடந்தோம். கட்டிடத்தின் முகப்பில் அரபி எழுத்துக்கள் அழகா டிஸைன் போட்டதுபோல் இருக்கு.



தொடரும்...........:-)





16 comments:

said...

உண்மையிலேயே நீங்கள் சூப்பர் போட்டோகிராபர்... பளிச் படங்கள்....

said...

ஜெய் ஜவான்....

வார் மெமொரியல் படங்கள் அழகு. நம்ம ஊரில் வார் மெமோரியல் நிலை - கஷ்டம் தான்.....

பயணத்தொடரின் சில பகுதிகள் படிக்க விட்டுப் போச்சு. சீக்கிரம் படிக்கிறேன்!

said...

படங்கள் அட்டகாசம்... தொடர வாழ்த்துக்கள்...

said...

புகைப்படங்கள் amazing !!

said...

வாங்க ஸ்கூல் பையர்.

நல்ல பளிச்சுன்னு வெளிச்சம் இருந்ததே காரண்ம் .

நியூஸியில் பட்டப்பகல் 12 மணிக்கு எடுத்த படங்களுமே புகை மூட்டமா தேவலோக ஸீன் காமிக்கும்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வார் மெமோரியல் மட்டுமில்லை. எதையும் கட்டுவதோடு சரி வீடு உட்பட.

அப்புறம் பெயிண்ட் பார்த்தே இருக்காது:(

ரெண்டு வருசப் புதுவீடு கூட ஹைதர் அலி காலத்துலே கட்டுனதைப்போல:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

தேங்க்ஸ்ப்பா.

said...

மலேஷியா போகவில்லை என்கிற கவலையே போச்சு. அற்புதமான கட்டிடக் கலை.வெகு அழகு.

அதுவும் இராணுவ வீரர்களுக்கு நினைவுக்கூடங்கள் மிக அவசியம். நம் ஊர் வார் மெமோரியல் பாவம். அது சினிமாக்களிலாவது வந்து கொண்டிருந்தது. இப்போ அதுவும் இல்லை.

said...

படங்கள் அழகு.

நீர்நிலைகள் பார்ப்பதற்கு குளிர்ச்சியாக இருக்கின்றது.

said...

ஆஹா அருமை..... நானும் சென்று வந்தேன். உங்களது தளத்தில் follow ஒன்று வையுங்கள், இல்லையென்றால் பதிவை எப்போது போடுகிறீர்கள் என்றே தெரியவில்லை.


கோபால் சார் இளைச்ச மாதிரி இருக்கார், சரியா சாப்பாடு போடறீங்களா இல்லையா ?! :-)

said...

இங்க போயிருக்கேன். நல்லா நினைவுக்கு வந்துருச்சு.

அங்க பட்டியல்ல இந்தியப் பெயர்களைப் பாத்த நினைவு.

said...

வாங்க வல்லி.

பாருங்க.... உங்களுக்காக எவ்ளோ கஷ்டப்படறேன்னு:-)))))

said...

வாங்க மாதேவி.

சுத்தமே ஒரு கூடுதல் அழகா இருக்குப்பா.

said...

வாங்க சுரேஷ் குமார்.

டெம்ப்ளேட்டில் கை வைக்க பயம்.

திங்கள், புதன் & வெள்ளி என்று வாரம் மூணு என்று கூடியவரை பதிவு வெளியிடுவது வழக்கம்.

கோபால் இளைச்சுட்டாரா? ஆஹா.... எனக்கு ட்ரிக் ஃபோட்டோ எடுக்க வந்துருச்சு:-)))))

said...

வாங்க ஜி ரா.

அழகான நினைவுச்சின்னம். மனதைவிட்டு விலகலை!

பெயர்ப்பட்டியல் முழுசும் படிக்க நேரமில்லை:(