Monday, December 05, 2005

நியூஸிலாந்து பகுதி 31

எல்லாருமா ஒரே மாதிரி சிந்திப்பாங்க? வெள்ளைத் தோலைப் பார்த்து பயந்தோ, மயங்கியோ அவுங்களோடநட்பு வச்சுக்கிட்ட கூட்டத்திலோ சேராம ஒருத்தர் இருந்தார். அவருக்கு இந்த ஒப்பந்தம், உடன்படிக்கை இதுமேலேல்லாம் நம்பிக்கை இல்லை.'நம்மச் சுரண்டத்தான் இந்த ஆளுங்க வந்திருக்காங்க'ன்னு கரெக்ட்டாக் கண்டுபிடிச்ச மனுஷர். இவர்பேர் டரெஹ( Tareha) Chief of Ngati Rehia. விழா நடந்த சமயம், இவர் அறுதப் பழசான ஒரு பாயைக் கட்டிக்கிட்டு, ஒரு கொத்துக் காஞ்ச பெரணி வேரைக்கையிலே புடிச்சுக்கிட்டு வந்தார். ஹாப்சனைப் பார்த்து,' ஏய், வந்தவழியாத் திரும்பிப் போயிரு. பார்த்தியா இந்தப் பெரணி வேரை. இதுதான் எங்கமுன்னோர்கள் தின்ன உணவு வகை. இதோ நான் கட்டிக்கிட்டு இருக்கற இந்தப் பாய்தான் இவ்வளோநாள் எங்களைக் குளுருலே இருந்துக் காப்பாத்துச்சு. உங்க ஊரு சாப்பாட்டையும், துணிமணிகளையும் காட்டித் தூண்டில் போட்டு எங்களையெல்லாம்பிடிச்சு வளைக்கப் பார்க்காதே. இதுக்கெல்லாம் நாங்க மயங்கிறமாட்டோம்'னு கூச்சல் போட்டுக்கிட்டு தன்னோட எதிர்ப்பைக் காமிச்சுக்கிட்டு இருந்தார். ஏழை சொல் அம்பலமேறுமா? மத்த ஆட்கள் யாருமே இவரைச் சட்டை செய்யாம ஒரே கோலாகலமா விழாவைக் கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க.


டமடி வாகா நெனெ( Tamati Waka Nene, Chief of Ngapuhi)ன்றவர் இந்தக்குரலுக்குஎதிர்க்குரல் விட்டுக்கிட்டு இருந்தார். 'ஹாப்ஸன், எங்களோட தோழரே, ஐயா! நீங்க கவலைப்படாதீங்க. எங்க கவர்னரேநீங்க இங்கேயே தங்கிறணும்'னு சொல்லிக்கிட்டு இருந்தார். எங்க மவோரி பழக்க வழக்கங்கள், எங்க நிலம் நீச்சுஎல்லாத்தையும் இந்த பிரிட்டிஷ் ஆளுங்க காப்பாத்துவாங்கன்னு அவருக்கு ஏகப்பட்ட நம்பிக்கை.


ஹாப்ஸனும் இந்த கலாட்டாவுலே அக்கம்பக்கம் இருந்த மத்த ஆட்கள் கிட்டே இருந்து சில மவொரி வார்த்தைகளைக் கத்துக்கிட்டு, அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருந்தார். 'ஹெ இவி டஹி டடெள' We are one people.


அந்தக் காலத்துலே இருந்து இதேதான். தன் பாஷை பேசறவங்களை உடனே நண்பனாக நினைச்சுக்கறது மனுஷசுபாவம். தமிழ்நாட்டுலேகூட பாருங்க, வடக்கே இருந்து வர்ற தலைவர்கள் பொதுக்கூட்டத்துலே பேசறப்ப, மொத வார்த்தையா'வனக்கம்'னு சொல்லிட்டாப் போதும். ஜனங்களுக்குப் புல் அரிச்சுடும். ஒரே ஒரு வார்த்தைக்கு இவ்வளொ எஃபெக்ட்!


கொஞ்சநாள் கழிச்சு இதே காலக் கட்டத்துலே நியூஸிலாந்து கம்பெனி நிக்கல்சன் துறைமுகத்துலே அவுங்களுக்குன்னுஒரு தனி கவர்மெண்ட்டு ஏற்படுத்திக்கிட்டு, சொந்த சட்டதிட்டங்களை ஏற்படுத்திக்கிட்டு இருந்தாங்க. இங்கிலாந்துலே இருக்கறவங்களுக்கு இங்கே இருக்கற நிலத்தை விக்க ஆரம்பிச்சாச்சு. காசு இருக்கற தனவான்கள் 'வெளிநாட்டுலே'நிலம் வாங்கிக் குவிச்சாங்க. ஆளுங்களும் கப்பலேறி வர ஆரம்பிச்சாச்சு.


ஹாப்ஸனுக்கு இது ஒரு தலைவலியாப் போச்சு. இதைச் செய்யறவங்க வெள்ளைக்காரங்களாச்சே. எப்படி இதைநிறுத்தலாமுன்னு இங்கிலாந்து அரசோடக் கலந்து பேசவும் நேரம் இல்லாததாலே, (அதான் ஒரு முறை இங்கிலாந்து போய்வர எட்டுமாசமாகுமே!) நியூஸிலாந்தை இனி ஆளப்போவது பிரிட்டன்னு அதிரடியா ஒரு அறிக்கை விட்டார். இது நடந்ததுமே மாசம் 21 ஆம் தேதி 1840. கையெழுத்தான மூணரை மாசத்துலேயே இப்படி ஒரு மாற்றம்!


பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சார்பா, இங்கே முதல் கவர்னராவும் ஆயிட்டார் நம்ம ஹாப்சன். ஆனா எண்ணி ரெண்டேவருசத்துலே 'மேலே'போய்ச் சேர்ந்துட்டார். அவருக்குப் பதிலா இன்னொரு கடற்படை அதிகாரி ராபர்ட் ஃபிட்ஸ்ராய்புது கவர்னரா இங்கே 1842லே வந்தார். அவரோட வருகைக்காகவே காத்திருந்தாப்போல தொல்லைகளும் வந்துசேர்ந்துச்சு.
மவொரிங்க எதிர்ப்பைச் சட்டைசெய்யாம நியூஸிலாந்து 'கம்பெனி கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்குஉடைச்சுக்கிட்டு 'இருந்துச்சு. புதுசா வந்தவங்களுக்கெல்லாம் சல்லிசான விலையில் நிலவிற்பனை!


சர்வேயருங்க நிலத்தை அளந்து பங்குபோட்டுக்கிட்டு குறைந்தவிலையில் மனை விற்பனை செஞ்சப்ப ரெண்டு மவொரி தலைவர்கள்Te Rauparaha and Te Rangihaeata இடையிலே புகுந்து இந்த இடம் யாருது? யாரு யாருக்கு விக்கறாங்க?இந்த விற்பனையை விசாரிக்கணும்னு சொன்னாங்க.


சர்வேயருங்க காதுகேக்காதமாதிரி இருந்தப்ப, கோபம் தாங்காமசர்வேயருங்க தங்கியிருந்த குடிசைகளை தீவச்சுக் கொளுத்துனாங்க. கலவரம் ஆரம்பமாச்சு. கம்பெனி ஒரு 35 பேரைஅனுப்புச்சு இவுங்களைக் கைது செய்யறதுக்கு! சரண்டர் ஆனா நல்லதுன்னு கத்திக்கிட்டே வந்தாங்க. மவொரிங்கதான்போர் குணம் இருக்கறவங்களாச்சே. இதுக்கு ஒத்துக்குவாங்களா? பின்னே? சண்டைதான். தலைவர்Te Rangihaeataவோட மனைவியைக் கொன்னாங்க. இந்தா ஒரு உயிருக்கு பதிலான்னு 22 வெள்ளைக்காரங்களைக் கொன்னாங்க மவோரிங்க. எஞ்சி இருந்த 13 வெள்ளைக்காரங்க, தப்பிச்சோம் பிழைச்சோமுன்னு ஓடுனாங்க.


நியூஸிலாந்து கம்பெனிமூலமா இங்கே வந்தவங்களை 'செட்டிலர்ஸ்'ன்னு சொன்னாங்க. இவுங்க செஞ்சது அநியாயமுன்னுநினைச்ச கவர்னர் இவுங்களுக்கு உதவி ஒண்ணும் செய்யாமச் ச்சும்மா இருந்தார். வெள்ளைக்காரங்களுக்குள்ளேயேரெண்டு குழுவாப் பிரிஞ்சுட்டாங்க.


நம்ம பக்கங்களிலே பொழுதண்ணிக்கும் ரெண்டு கிராமத்துக்குச் சண்டை, வரப்புச்சண்டை, ஜாதிக்கலவரமுன்னு சொல்லி ஒருத்தரோடு ஒருத்தர் அடிச்சுக்கிட்டுச் சாவறது மாதிரியே அந்தக் காலத்திலும் இருந்திருக்கு பாருங்களேன். இனக்கலவரம் ஒருபக்கமுன்னா இப்பப் புதுசா மதக்கலவரம் சேர்ந்துக்கிச்சு.


இப்ப நாகரீக (!) உலகத்துலேயும் அண்டை நாடுகளில் போர் ஆரம்பிச்சவுடனே சப்போர்ட்டுக்கு வேற நாடுகளில்(!)இருந்து ஆளு வந்துருது.


எல்லா ஆசையிலும் பெருசு மண்ணாசைதான், இல்லே?&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

8 comments:

said...

துளசியக்கா,
உங்க நியூசிலாந்தி தொடர மொத்தமா சேமிச்சு படிக்கலாமிண்ணு இருக்கேன்.தொடர்ந்து எழுதுங்க!

said...

ஜோ,

'படிக்கப்போறதில்லை' ன்றதையும் இவ்வளவு நாசூக்கா சொன்னீங்க பாருங்க , அது:-))

said...

ஏங்க துளசி,

இப்படியும் போரடிக்கற சரித்திரத்தை இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா எழுத முடியுமா?

பேசாம நீங்க நம்ம பசங்க படிக்கற சரித்திரம், பூகோளம் புத்தகத்த புஸ்தகமா கொண்டு வரலாம் போலருக்குதே.

நீங்க கைல வச்சிருக்கறது பேனாதானே.. இல்ல மந்திரக்கோலா?

said...

நல்லா கத சொல்றீங்க டீச்சர். கட்டபொம்மன் படம் பாத்தாப்புல இருக்கு. ஊருருக்கு இதுதானா நடந்தது!

said...

துளசியக்கா,உங்க தங்கத்தம்பி இப்பொ ஊர் ஊரா சுத்திட்டிருக்கான்ணு தெரியுமில்ல .நான் உங்க தொடர திரட்டி புத்தகமா வச்சிருக்கலாம்னு பாத்தா இப்படி சொல்லிட்டீங்களே?ஹி..ஹி

said...

டிபிஆர்ஜோ,

இப்படியெல்லாம் சொன்னா பின்னாலே கஷ்டப்போவது நீங்கதான். நான் பாட்டுக்கு
நிஜமாவே நல்லா எழுதவருதுன்னு நினைச்சுக்கிட்டு தீட்டிடப்போறேன்:-)

கையிலே பேனாவும் இல்லை, மந்திரக்கோலும் இல்லை . எலி தான் கையிலே:)


ராகவன்,

தேசங்கள் தோறும் பாஷைகள் 'மட்டுமே 'வேறு.


ஜோ,

புத்தகம் போடற காலம் வந்தா(!) ஒரு காப்பி கட்டாயம் வித்துரும். வாங்கப்போறது நீங்கதான்:-)

said...

// ராகவன்,

தேசங்கள் தோறும் பாஷைகள் 'மட்டுமே 'வேறு. //

அத வெச்சும் பிரச்சனைகள் வருது டீச்சர். மனுசன் எதெல்லாம் தன்னோடதுன்னு நெனைக்கிறானோ.....அதெயெல்லாம் வெச்சு பிரச்சனை வருது டீச்சர்.

said...

உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்களே. நல்லதுக்கே காலம் இல்லேப்பா.

கையிலருக்கறது எலியானாலும் எழுத்தாளனுக்கு சாரி எழுத்தாளிக்கு கையில பேனானுத்தானே சொல்லணும்? அதான் சொன்னேன். இல்லன்னா எழுத்தாளின்னு இல்லாம எலித்தாளின்னு ஆயிரும். ஹி,ஹி!