Friday, December 09, 2005

நியூஸிலாந்து பகுதி 33

காசு இருக்கறவனுக்கு ஒரு மாதிரி, அது இல்லாதவனுக்கு ஒரு மாதிரின்னு இப்ப நடக்கறது அப்பவும் நடந்துச்சு!கூடுதல் காசுக்கு கூடுதல் செளகரியம். பயணிகள் தனி கேபின் கிடைக்கும். இல்லாதவனுக்கு டார்மிட்டரிதான். கூட்டத்துலேகோவிந்தா. ஒண்ணு ரெண்டு நாள் இல்லை , மாசம் நாலுக்கு மேலே ஆகும். பெரும்பான்மையானோர் இருக்கறது ஹோல்ட்(hold)ன்னு சொல்ற கப்பலோட அடிப்பாகம். அங்கே ஜன்னலோ , போர்ட் ஹோலோ கிடையாது. படிக்கவோ,எதாவது கம்பளி உடுப்புப் பின்னல் போல கைவேலை செய்யவோ முடியாது. அந்த இருட்டுலே எப்படி..?


ஆறடிக்கு எட்டடி இருக்கற இடத்துலே ஆறுபேர் இருக்கற குடும்பம். இப்படி நெருக்கித் தள்ளிக்கிட்டு நாலுமாசம்பயணம் பண்ணா எப்படி? மூச்சு முட்டிறாது? கூட்டத்துக்குள்ளே சீக்கு பரவ ஆரம்பிச்சது. 1842 லெ வந்த ஒரு கப்பலிலெ ( கப்பல் பேரு லாயிட் Lloyds ) 65 புள்ளைங்க சீக்கு வந்தே செத்துப்போச்சுங்களாம். அடப்பாவமே(-:


ஒரு குடும்பத்துக்கு ஒரு மெத்தை, தலைகாணி, ரெண்டு சமையல் பாத்திரம். தட்டு, கப்பு, கட்லரி( ரொம்ப முக்கியம்?)வகையறா பயணிகளே கொண்டுவந்துறணும். ஒரு மாசத்துக்கு வேண்டிய துணிமணியைக் கூடவே வச்சுக்கலாம். அவுங்களொட மத்த சாமான் செட்டெல்லாம் அந்தக் கப்பலோட அடித்தளத்துலே இருக்கிற லக்கேஜ் இடத்துலேஇருக்கும். அதை மறுபடிக் கண்ணுலே பாக்கறதே கப்பலைவிட்டு இறங்குனப்புறம்தான்.


சரி. கப்பல்லே சாப்பாட்டு வசதியெல்லாம் எப்படி? ஏர்ஹோஸ்டஸ் மாதிரி கப்பல் ஹோஸ்டஸ் வகைவகையாக்கொண்டுவந்து தருமாமா? (ம்க்கூம். ஆசை தோசை அப்பளம் வடை...)

ரேஷன் போட்டுச் சாமான்களைக் கொடுப்பாங்களாம். அதுலேயே ஆக்கித் தின்னுக்கணும்.சிலது தினப்படி, சிலது வாரப்படி!


தினப்படி இப்படி இருந்துச்சு.
முக்காப் பவுண்டு பிஸ்கெட்,அரைபவுண்டு மாவுபட்டாணி அரைப் பின்ட்டு(ஆமா, இந்தப் பட்டாணியை என்ன பண்ணி இருப்பாங்க? ஒருவேளை 'சுண்டலோ'?)


வாரம் ரெண்டுதடவை( செவ்வாயும் சனியும்) ஒரு பவுண்டு இண்டியன் மாட்டிறைச்சி( எதுக்கு இந்தப் பேரு? ஒருவேளை 'தட் மாடு ஃப்ரம் இண்டியா'?:-))அரைப் பவுண்டு பதப்படுத்தின வேற(?) இறைச்சி.


வாரம் மூணு முறை:

அரைப் பவுண்டு பன்றிக்கறி


வாரம் நாலு முறை:

கால் பவுண்டு அரிசி
முக்கால் பவுண்டு உருளைக்கிழங்கு.


இதில்லாம கொஞ்சம் வெண்ணெய், சக்கரை, டீத்தூள், காபிப்பொடி, உப்பிலிட்ட முட்டைக்கோஸ்,கடுகு( அரைச்சது) உலர்ந்த திராட்சை, உப்பு, மிருகக் கொழுப்பு, குடிதண்ணீர்.


தேவைக்காக ஓட்ஸ், அர்ரோரூட் மாவு, எலுமிச்சம் ஜூஸ் வச்சிருப்பாங்களாம். ச்சின்னப் பசங்களுக்கு மேலே சொன்ன பெரியவங்க ரேஷனில் ஒரு பகுதி. ஒருவயசுக்குட்பட்டகுழந்தைகளுக்கு ஒண்ணும் கிடையாது. அதான் பால் குடிச்சுக்குமுன்னு இருந்திருப்பாங்க போல..
பிரயாணம் முடிவடையறப்ப மிச்சம் இருக்கற சாப்பாட்டுச் சாமான்களை எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்துருவாங்களாம். கப்பலிலே மருந்துவகைகள் இருக்குமுல்லே. அதுலே 12 பாட்டில் ஷெர்ரி, 12 பாட்டில் போர்ட் ஒயின்,300 கேலன் Stout, 40 கேலன் பிராந்தி !( ஆமாமாம். திங்க சோறில்லேன்னாலும் குடிக்க மது இல்லாம இருக்கலாமோ?)


குடிதண்ணீர் அளவோடதான் தருவாங்களாம். இந்த லட்சணத்துலே குளிக்க நல்ல தண்ணி ஏது? இளவயதுஆம்பளைகள் கப்பல்மேல்தளத்துலே உப்புத்தண்ணியை மொண்டு குளிக்கறதோட சரியாம்.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்தவுடனே, நிலம் வாங்கறவரை அங்கங்கே குடிசை,கூடாரமுன்னு போட்டுக்கிட்டு இருக்க வேண்டியது தானாம்.


செருப்பு, ஷூவெல்லாம் விலை கூடுதல்ன்றபடியாலே பசங்க வெறுங்காலோடுதான் இருக்கறது, விளையாடறது.துணி துவைக்கறது, பொட்டிபோடறதெல்லாம் கஷ்டமுன்னாலும் எல்லோரும் 'நீட்டா' உடுத்துவாங்களாம்! இருக்கறதுலேயேநல்ல உடுப்புங்களை ஞாயித்துக்கிழமை சர்ச் போகன்னு வச்சுக்குவாங்களாம்.


புள்ளைங்களும் தினம்தினம் ஸ்கோலுக்குப் போவாதாம். நிலத்துலே வேலை செய்ய ஆளு வேணுமுல்லே?


பெரிய பெரிய குடும்பங்களாம். நிறையப் புள்ளைங்க. ஆனா டைஃபாய்டு, டிப்தீரியா, கக்குவான் இருமல், வயித்துப்போக்குன்னு வந்து சின்னவயசு சாவுங்க ஏராளமாம்.


நிலத்துலேயும் பயிர் பச்சை வைக்க, இன்னும் நிலம் உழுதல்ன்னு வேலை நிறைய இருக்குமே, அதுலெல்லாம்கூடப் பெண்கள் உதவியில்லாமல் முடியாதுன்றதுதான் உண்மையான நிலமை.


அப்ப இங்கே வசித்த பெண்களில் பலரும் கல்யாணம் என்ற பந்தத்தில் இருந்தவர்கள். அநேகமா இவுங்கதான்வீட்டுவேலைகள் எல்லாம் செஞ்சுக்கிட்டு, குழந்தைகுட்டிகளைப் பார்த்துக்கிட்டு வீட்டுலே எதாவது உபரி வருமானம்( சிறுவாடு?) பார்க்கறதுக்காக, வெண்ணெய், பால், ச்சீஸ்ன்னு அக்கம்பக்கத்துக்கு வித்துக்கிட்டுஇருந்திருக்காங்க.ஆஸ்பத்திரி, ஹெல்த் வொர்க்கர்ங்கன்னு யாரும் இல்லாத காலமென்றபடியாலே வீட்டுலே இருக்கற சீக்காளிங்களைப்பார்த்துக்கறதும் ஒரு பெரிய வேலையா இருந்திருக்கு.


எல்லாத்துக்கும் மேலே வீட்டு ஆம்பளைங்க மரியாதையோடு நடந்துக்கறதும், அளவோடு குடிக்கறதுக்கும்கூட இவுங்களோட பொறுப்புதானாம்!!!


அப்ப இவுங்க உடை என்ன தெரியுமா? பாதம் வரை கணுக்காலை மூடும் பாவாடை. அடியுடுப்பாக மூணு நாலு பெட்டிகோட்டுங்க.


( இதையெல்லாம் படிக்கறப்ப நம்ம கிராமங்கள்தான் நினைவுக்கு வருது. அப்ப நம்ம நாட்டிலும் பெண்களுக்கு வாழ்க்கை இப்படித்தானே இருந்திருக்கு!)


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

11 comments:

said...

கப்பலோட அடிப்பாகம். அங்கே ஜன்னலோ , போர்ட் ஹோலோ கிடையாது. படிக்கவோ,எதாவது கம்பளி உடுப்புப் பின்னல் போல கைவேலை செய்யவோ முடியாது. அந்த இருட்டுலே எப்படி..?//


ஆரம்பத்துலருக்கற இந்த பத்திய படிச்சப்ப ஏதோ நீங்க கப்பல்ல பண்ண பயணத்தை பத்தி எழுதறாப்பல பட்டுது. ஆனா எப்பவோ (எந்த வருஷங்க?) நடந்தத நேத்து நடந்தாமாதிரியும் அத நீங்களே பார்த்தா மாதிரியும் எழுதறது ரொம்ப அழகா இருக்குங்க துளசி.

இத தொடர்ந்து படிக்கிறேன்.

said...

இது இங்கிலீஷ்காரன் முதமுதல்ல தன் நாட்டை விட்டு மத்த புதுசா கண்டுபிடிச்ச தேசங்களுக்கு இடப்பெயர்ச்சி செஞ்சப்ப வந்த கதை. ஊர்ல ஒன்னுமில்லன்னு பஞ்சம் பொழைக்க வந்த கும்பலு இப்படி. ஆனா இந்த ஆப்பிரிக்கால்ல இருந்து கப்பல்ல கொண்டு வந்த அடிமைகள் கதை இன்னும் பரிதாபம். நூத்துக்கு அம்பதுதான் பொழச்சி கரை இறங்கிறது, மீதி எல்லாம் கடல்ல மீன்களுக்கு இரை தான்!

said...

டிபிஆர் ஜோ,

//.....நீங்களே பார்த்தா மாதிரியும் எழுதறது ...//

யாரு கண்டா? ஒருவேளை என் முன் ஜென்மத்துலே அந்தக் கப்பலிலே வந்தேனோ என்னமோ?:-)))

said...

ஆமாங்க உதயகுமார்.

//பஞ்சம் பொழைக்கவந்த கும்பலு//

சரியான வார்த்தை:-)))

எப்படி உலகத்தையே ஆட்டுவிச்சிருச்சுப் பார்த்தீங்களா?

எல்லாம் தோலின் மகிமையோ?

said...

தோலின் மகிமை என்று முடிவு கட்ட முடியாது டீச்சர். அவர்களது systamatic approach என்று சொல்லலாம்.

அந்த விஷயத்தில் அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள் என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒரேடியாகப் படையெடுத்துச் சென்று அழிப்பது ஒரு வகை. அந்த ஊரில் புகுந்து அடிப்பது. அங்கிருக்கும் கட்டிடங்களை இடிப்பது. இந்த முறை systamatic approach இல்லை. ஏனென்றால் இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம். இந்தியாவில் நடந்த அயல்படையெடுப்புகளும் மங்கோலியர்களின் படையெடுப்புகளும் பெரும்பாலும் இந்த வகையே.

ஆனால் வெள்ளையர்கள் அடுத்தவனை எப்படி அழிப்பது என்பதில் தெளிவாக இருந்தார்கள். அவர்களுக்கு மிகவும் உதவியது வரைபடங்கள். ஒரு இடத்திற்குப் போனதும் அந்த இடத்தைப் பற்றிய வரைபடங்களைத் தயாரித்துக் கொண்டார்கள். அது அவர்களுக்குத் தெளிவான வழியைக் காட்டியது. நம்மவர்களை நினைத்துப் பாருங்கள். மதுரையா? என்ன அம்பது மைலு இருக்கும். இப்படியே தெக்க போயி மேக்க போயி கெழக்க போயி ஒழக்குல விழுங்குற மாதிரி வழி சொல்வாங்க. இல்லையா?

said...

ராகவன்,

நீங்க சொல்றது முற்றிலும் சரிதான்.

( இது என்ன திடீர்னு டீச்சருக்கே விளக்கம்? முருகனைக் கும்பிடறதாலே நீங்களும் அவர்
போலவே ஆகிட்டீங்களா? அவர் தகப்பன் சாமின்னா நீங்க டீச்சருக்கெ டீச்சரா?)

ஆனாலும் ஆழ்ந்து படிக்கிறது பார்த்தா எனக்கு சந்தோஷமா இருக்குப்பா.

ஆமாம். அந்த மதுரைக்கு வழி சொன்னது சூப்பர்:-))))

(எல்லாம் முழநீளக் கபாபின் மகிமையோ? ச்சும்மா....)

said...

இடையிடையே ரன்னிங் காமெண்ட் வேறேயா? நீங்க`சிறுவாடு'எவ்வ்ளோ சேர்த்து வைச்சிருக்கீங்க, அதைச் சொல்லுங்க முதலில்?

said...

நான் இலட்சதீவுகளுக்கு சிறுகப்பலில் பயணித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் கேபினில் அரசு அதிகாரிகளும் செல்வாக்கு படைத்தவர்களும், நடுத்தர டார்மெட்டரியில் செல்வாக்கில்லாத ( பயணச்சீட்டுக்கள் இலட்சத்தீவு administratorஆல் ஒழுங்குபடுத்தப் படுவதால்) சுற்றுலா பயணிகளும் கீழே மற்றோரும் பயணிப்பர். ஆறேழு நாட்கள் பயணம் தான். சைவ சாப்பாடு என்றால் பிரட் மட்டும் தான். கப்பலிலிருந்து நடுக்கடலில் படுக்கு மாறி கவரத்தி அடையும் முன் .. பழக்கமில்லாத நமக்கு உயிர் போய் உயிர் வரும்.

said...

தாணு,
என்ன செய்யறது? சிலசமயம் ஹிஸ்டரி கொஞ்சம் போரடிச்சுருதே( படிக்கறவங்களுக்கு)
அதனாலே அப்பப்ப கொஞ்சம் கரம் மசாலா தூவலாமுன்னுதான் இந்த ரன்னிங் கமெண்ட்டரி:-)

சிறூவாடு எங்கே சேமிக்கறது? எல்லாம் பெருவாடுதான். இங்கெல்லாம் டாக்ஸ் கட் செஞ்சுட்டுத்தான்
வருமானமே வரும். அதுவும் அப்படியே பேங்குக்குப் போயிரும். எல்லாம் அட்டை தான். காசைக் கண்ணுலே
பார்த்தே நிறைய நாளாச்சுப்பா:-))))

said...

ஆமாங்க மணியன், 'பணம் பாதாளம் வரை பாயும்'னு ஒரு பழமொழி இருக்குல்லே!
கடல் பயணமுன்னாலே தலை சுத்தலும் வாந்தியும் கண்டிப்பாக வரும். இந்த அழகில்
சாப்பாடு வேற கிடைக்கலேன்னா அவ்வளோதான்(-:

அப்பெல்லாம் இந்த நியூஸிப் பயணம் 4 மாசத்துக்கும் மேலாம். செத்தோம்.

இப்பவும் ப்ளேன்லே எகானமி வகுப்புக்கும் பிஸினெஸ் வகுப்புக்கும் பாருங்களேன்.
எல்லாம் காசு செய்யற வேலை!

said...

// ( இது என்ன திடீர்னு டீச்சருக்கே விளக்கம்? முருகனைக் கும்பிடறதாலே நீங்களும் அவர்
போலவே ஆகிட்டீங்களா? அவர் தகப்பன் சாமின்னா நீங்க டீச்சருக்கெ டீச்சரா?) //

அப்படியெல்லாம் இல்லை டீச்சர். எல்லாம் நீங்க கத்துக் கொடுத்ததுதான். :-)

// (எல்லாம் முழநீளக் கபாபின் மகிமையோ? ச்சும்மா....) //
ஆசையக் கெளப்பாதீங்க டீச்சர். ஊருல இருந்து அம்மா அப்பா வர்ர வரைக்கும் காத்திருக்கனும். வந்ததும் கூட்டீட்டுப் போகனும்.