ஏங்க, எப்பப்பார்த்தாலும் புதுப்புது புடவையா கட்டமுடியுமா, இல்லே புதுப்புது சல்வார் கமீஸே போடமுடியுமா?இடைக்கிடே பழசும் எடுத்துப் போட்டுக்கறமல்லே, அதே போல முந்தி எழுதனதுலே ஒண்ணை 'நைஸா' இங்கேபோட்டுக்கறேன். புது ஆளுங்களும் படிக்கத்தாவலை? இப்பப்பாருங்க, நம்ம தாணுவே கேட்டுருக்காங்க,' .....முந்தியேசொல்லிட்டீங்களா? லேட்(?) ஆசாமிகளுக்காக மறுபடிக் கதைக்கவும்'னு.
அதென்ன புடவை, சல்வார்ன்னு கேக்கறீங்களா? என்னமோப்பா எனக்குத் தெரிஞ்ச உதா ரணம்.
சட்டாம்பிள்ளை
வத்தலகுண்டு 'எலிமெண்டரி ஸ்கூல்'காம்பவுண்டு. பின்பக்கச் சுவர்லே ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அதுவழியா பசங்க போலாம்,வரலாம். ஆனா போகக்கூடாதுன்றது டீச்சருங்க போட்ட கட்டளை. ஏன்னா அதும் பக்கத்துலெதான்பெண்பிள்ளைகளுக்கான 'டாய்லெட்' இருக்கு. அந்த ஓட்டைக்கு வெளியே ஒரு சின்ன மண்தரை இருக்கும். அந்தத் தரையைத்தாண்டினா ஒரு பாதை வரும் அதுக்கு எதிரே நம்ம வீட்டு வாசல்! ஒரே நிமிஷத்துலே வீட்டுக்குப் பொயிரலாம்!
எனக்கு அதுவழியா 'ஸ்கூலு'க்குப் 'போறதுக்கு' மட்டும் முடியாது. செங்கல்லுலே உரசி சட்டையெல்லாம் அழுக்கு ஆயிடுமே!ஆனா உண்மையான காரணம் வேற ஒண்ணு. ஸ்கூலுக்குத் தனியாப் போகப் பயம்! மொதநாளு என்கிட்டஅடிவாங்குன பசங்க திருப்பி அடிக்கக் காத்துகிட்டு இருப்பாங்கல்ல.
"இருடா இரு வீட்டுக்குப் போறப்ப பாத்துக்கறேன்"
" எங்க கை மட்டும் பூப்பறிக்குமா? இருடி இரு"
இந்த மாதிரி வீர வசனங்கள அப்பப்ப எடுத்துவிடுவோம்.
பெரிய காரணமெல்லாம் இருக்காது. சிலேட்டுக்குச்சி தரலே, சிலேட்டுலே எழுதுனதை அழிச்சிட்டான்(ள்)கணக்குக்கு விடையைச் சொல்லலே, இப்படி ஏதாவது சில்லறைக் காரணம்தான். ஆனா அந்த வயசுக்குஅது ரொம்பப் பெருசுதானே!
சண்டை எதுக்கா இருந்தாலும், வகுப்பு நடக்கறப்ப சமத்தா இருந்துடுவோம். எதா இருந்தாலும் சாயந்திரம்ஸ்கூல் விடறதுக்குக் கொஞ்சம் முன்னலேதான் அதுக்கு மறு உயிர்!
சாயந்திரமா 'ஸ்கூல் விடறப்ப பின்னாலேயே போய், ஒரு அடி 'படார்'னு முதுகிலே அடிச்சுட்டு, சுவத்துலெஇருக்கற ஓட்டைவழியா வீட்டுக்கு ஒரே ஓட்டம்தான். இது தெரியாம பசங்க 'ஸ்கூல் கேட்'லே காத்துக்கிட்டுஇருப்பாங்க சில சமயம்!
மறுநாளு, காலையிலே எந்திரிக்கும்போதே ஒரு பயம் வந்திரும். ஸ்கூல் நேரத்துக்கு முன்னாலேயே ஆஸ்பத்திரிக்குப்போய், அங்கேயே சுத்திகிட்டு இருப்பேன். சிலநாளு அம்மா கூடவே,'ரவுண்ட்ஸ்'போவேன். எனக்கு ரொம்பப் பிடிச்சஇடம் எதுன்னா, புதுப்பாப்பா வார்டு. ஜோரா இருக்கும்! கிராமத்துலே இருந்து வந்தவுங்க எல்லாம் கூட்டம் போட்டுகிட்டுஉக்காந்திருப்பாங்களா, அம்மா அங்கெ போறதுக்கு முன்னாடி, நர்ஸ்ஸம்மா போயி அவுங்களையெல்லாம் விரட்டுவாங்க!அவுங்களும் வெளியே போறமாதிரி போயி, அம்மா தலை மறைஞ்சவுடனெ, திரும்பி வந்துருவாங்க!
அம்மா கேப்பாங்க "ஸ்கூல் டயமாச்சே, இன்னும் போகலையா?"
"இன்னும் பெல் அடிக்கலே"
மணி அடிக்கறதுக்கு முன்னாலெ போனா, பசங்க 'அடிக்க'க் காத்திருப்பாங்க!
மணி அடிச்சபிறகு போனா, டீச்சருதிட்டுவாங்க! ஆனா திட்டு வாங்காம தப்ப ஒரு வழி இருக்கு. யாராவது பெரியவுங்க கொண்டாந்து விட்டாங்கன்னா டீச்சரு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க! அதுக்காக, ஆஸ்பத்திரிலே இருக்கற 'கம்பவுண்டர், வார்டு பாய், குறைஞ்சபட்சம் அழுக்கெல்லாம் கூட்டற 'லச்சி' இவுங்கள்லே யாரையாவது கூட்டிட்டுப் போகணும்னு காத்துகிட்டிருப்பேன்!
'பாப்பாவை நான் கூட்டிட்டுபோறேன்'ன்னு சொல்றதுக்கு ஆள் 'ரெடி'யா இருக்கும்! இந்த சாக்குலே ஒரு அஞ்சுநிமிசம் 'எஸ்கேப்' ஆகலாம்னுதான்!
ரொம்ப தூரமா என்ன? ஒரு பத்து எட்டுலெ இருக்கு பள்ளிக்கூடம்! முக்காவாசி நாளு இதே கதைன்றதால எல்லாருக்கும்பழகிப்போச்சு.
அந்த ஸ்கூல்லே ஒரு பழக்கம் இருந்துச்சு. அதாவது காலையிலே 'ஆஜர்' சொன்ன பிறகு, யார் யார்வரலேன்னு தெரிஞ்சுரும்லே. அப்ப டீச்சர் கேப்பாங்க, வராதவுங்கல்லாம் ஏன் வர்லேன்னு.
தெரிஞ்சா சொல்லுவோம், தெரியலேன்னா, தெரிலேன்னு கத்துவோம்.
உடம்பு சரியில்லேன்னா மட்டும் எனக்குக் கட்டாயம் தெரிஞ்சிரும். நம்ப அம்மாகிட்டதானே மருந்து வாங்க வருவாங்க!
தினமும் காலையிலே ஆஸ்பத்திரி முன்னாலே இருக்கற பெரீய்ய்ய்ய வெராண்டாவுலே ஒரு பெரீய்ய்ய மேஜைபோட்டு வச்சிருப்பாங்க. அங்கெதான் 'அவுட் பேஷண்ட்'டைப் பாக்கறது. அம்மா 'சீட்டு' எழுதுனவுடனே,அதைக் கொண்டுபோய் கம்பவுண்டர் கிட்டே கொடுத்தா, அவரு, ஏற்கெனெவே கலக்கி வச்சுருக்கற 'தண்ணீ'மருந்தைத் தருவாரு. அதை வாங்கறதுக்கு 'சீசா' கொண்டு போணும். இல்லாதவுங்க, நம்ம ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குவெளியே, ஒரு ஆளு, சாக்கு விரிச்சு உக்காந்துகிட்டு, 'பாட்டிலு' விக்கறாரு இல்லே, அவருகிட்டப் போய் வாங்கணும்.ஆனா, எல்லாருமெ ஒரு 'சீசா' வீட்டுலே இருந்துதான் கொண்டு வருவாங்க. பழைய மருந்து ஏதாவது பாக்கி இருந்தாஅதை வெளீயே ஊத்திட்டு, அவசர அவசரமாக் களுவிட்டு வந்துருவாங்க சில பேரு. கம்பவுண்டர்க்கு எப்படியோ இதுதெரிஞ்சிரும் போல. மோந்து பாத்துட்டு, வேற கொண்டான்னுட்டார்னா, வழியில்லாம அஞ்சு காசு,பத்து காசு கொடுத்துவாங்கிருவாங்க!
அதே ஆளுதான், ஸ்கூல்லே 'ரீஸஸ்' விடுறப்ப, ஸ்கூல் காம்பவுண்டுக்கு வெளியெ, அதே சாக்கை விரிச்சு, அதுலேஅவிச்ச கள்ளே, நெல்லிக்காய், கொடுக்காப்புளி,கரும்புத்துண்டு இப்படி 'சீஸனு'க்கு ஏத்த மாதிரி விப்பாரு. இதுலெல்லாம்எனக்கு 'இன்ட்ரெஸ்ட்' இல்லே! ஆனா அவரு பக்கத்துலே ஒரு 'ஆயா' உக்காந்து விக்கும் பாருங்க 'சவ்வு முட்டாய்' அதுதான் என் 'கோல்' அதுலெ ரெண்டு விதம் இருக்கும். ஒண்ணு கலரு போடாதது, இன்னொண்ணு நல்லா சிவப்புக்கலருலே இருக்கும்! அதைத் தின்னா, அப்படியே வாயெல்லாம் சிவந்து, வெத்தலை போட்டமாதிரி இருக்கும். பசங்க எல்லாம்அதைத் தின்னுட்டு, நாக்கை நாக்கை நீட்டிப் பாத்துக்குவாங்க! பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்!
ஆனா, எனக்குத்தான் அந்த பாக்கியம் இல்லை. வெளியிலே 'கண்டதையும்' வாங்கித் தின்னக் கூடாதுன்றது அம்மாக் கட்டளை!அரச கட்டளை மாதிரிதான் இது! தெரியாம வாங்கித் தின்னலாம்னா, அந்த சிவப்புக் கலரு இருக்கே அது, மத்தியானம் வரைக்கும்அப்படியே இருக்கும்.அப்படியேன்னா, அப்ப்ப்ப்படியே இல்லை. ஆனா லேசில போகாது! பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகணும்ல.அப்ப மாட்டிக்க மாட்டேனா?
அந்த வயசுலெ ஆசையெ அடக்கறதுக்கு நான் என்ன புத்தரா? தின்னணும், ஆனா மாட்டிக்கக்கூடாது. எப்படி? ஒரேவழி. கலருபோடாத முட்டாயத்தான் வாங்கித் தின்னணும்! (அந்த வயசிலேயே எவ்வளவு தில்லு முல்லு திருக்கோசு பாருங்க!)
முட்டாயுன்னதும் இன்னொண்ணு கூட ஞாபகம் வருது. ஒரு முட்டாய் விக்கறவரு,தடியா ஒரு கம்பைத் தோள்மேலே தூக்கிகிட்டு வருவாரு.அந்தக் கம்புலே, மேல்பக்கத்துலே கலர்கலரா வானவில்லை அப்படியெ பந்தா சுருட்டின மாதிரி சவ்வு முட்டாய் சுத்தி இருக்கும்.அந்தக் கம்பு உச்சியிலே ஒரு பொம்மை இருக்கும். அதுக்கு நல்லா 'கவுனு' இல்லாட்டா புடவைன்னு உடுத்தி விட்டுருப்பாங்க!அதுக்குச்சலங்கைகூட கட்டிவிட்டுருப்பாங்க! கம்பத் தூக்கிகிட்டு வரும்போதே'ஜல் ஜல்'ன்னு தாளத்தோட பொம்மை ஆடிகிட்டே இருக்கும்.அவருகிட்டே முட்டாய் வாங்குனா, நமக்கு என்ன மாதிரி வேணும்னு கேட்டு, அதே மாதிரி செஞ்சு கொடுப்பாரு.( டிஸைனர் முட்டாய்!)எல்லாப் பசங்களும் சொல்லிவச்ச மாதிரி கைக்கடியாரம்தான் கேப்பாங்களா, அவரும் கம்பு மேலெ இருக்கற பந்திலெருந்து, நீளமாஇழுத்து நீட்டி, அதைச் சுத்திச் சுத்தி நிமிசத்திலே கைக்கடியாரம் செஞ்சு, கேட்டவுங்க கையிலே கட்டியும் விட்டுருவாரு. கையிலே கட்டிட்டாதிங்கறது எப்படி? அதுக்காக, கம்புலேருந்து இன்னும் கொஞ்சம் இழுத்து நீட்டினதுலே, கொஞ்சம்போல எடுத்துத் தனியா கொடுத்துருவாரு!பூனை, நாய், சைக்கிள்,தேளு இப்படி விதவிதமா அவரு விரலு விளையாடும்! அதப் பாக்கறதே ஒரு சொகம்!
அதுக்கும் நமக்கு கொடுப்பனைஇல்லே. அந்த முட்டாய் சுத்த பத்தமா செஞ்சது இல்லையாம்! அந்த ஆளுங்க,'மூக்கைச் சீந்திட்டு' அப்படியே தொட்டுருவாங்களாம்! அப்படி, இப்படின்னு சொல்லி வச்சுருவாங்களா, அதுக்குப் பயந்துகிட்டு அதையெல்லாம் பாக்கறதோட சரி.
நம்ம கையிலே காசு வந்தவுடனே அது, நம்ம தெருவிலே இருக்கற பெட்டிக் கடைக்கு போயிரும்.ஆரஞ்சு முட்டாய் இல்லேன்னா கோழிமுட்டைமுட்டாய். இதுலே உள்ளுக்குள்ளே ஒரு பாதாம் பருப்பு இருக்கும். இதை வாயிலெ போட்டுட்டா அவ்ளதான். ரொம்ப நேரத்துக்கு பேச முடியாது.வெளியவும் எடுக்க முடியாது. எச்சி இல்லே! முட்டாய்ங்களைப் பத்தி இன்னைக்கில்லாம் சொல்லிகிட்டே இருக்கலாம்தான்.
ஆனாப் பாருங்க, வாழ்க்கையிலே நிறைவேறாமப் போன ஆசைகளிலே இந்த ஜவ்வு முட்டாயும் இருக்கு. இப்பல்லாம் இது கிடைக்குதான்னுகூடத் தெரியலே.
ஆங்.... எங்கெ விட்டேன்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஸ்கூலு...ஆஜர் எடுக்கறது.
டீச்சரு கேட்டப்ப, வராதவுங்க ஏன் வரலைன்றதுக்குக் காரணம் தெரியலேன்னா, அதைத் தெரிஞ்சிக்கறதுக்கு வேற வழி இருக்குல்ல!
" கமலா/செல்வி/வசந்தா/குமார் ஏன் வரலென்னு யாருக்காவது தெரியுமா?"
"தெரியாது டீச்சர்" "இவுங்க வீடு யாருக்குத் தெரியும்?"
" எனக்குத் தெரியும் டீச்சர்!"
இந்தக் கேள்வியை மத்தவங்ககிட்ட கேக்க வேண்டிய அவசியமே இல்லை. அதான் நான் இருக்கேனே. எல்லார் வீடும் அனேகமா எனக்குத்தெரிஞ்சிருக்கும்! அது எப்படி? அதானே எனக்கும் தெரிலெ?
நான் எப்பவும் ஊரைச் சுத்திக்கிட்டு இருந்ததாலா? ச்சீச்சீ, இருக்காது.
எல்லாருக்கும் எல்லார் வீடும் தெரிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன்.அப்ப 'இந்தக்காலத்தில' இருக்கறதைப்போல தப்புத் தண்டாவெல்லாம் நாங்க கேள்விப்பட்டதேயில்லை! பயமில்லாமத் திரிஞ்சிகிட்டுஇருந்தோம்!
உடனே என்னையும், கூட இன்னோரு பொண்ணையும்( இது எப்பவுமெ என் 'பெஸ்ட் ·ப்ரண்டு' பிச்சம்மாவாத்தான் இருக்கும்) அனுப்புவாங்க!
"ஓடிப்போய் என்னன்னு கேட்டுட்டு வரணும். அங்கே, இங்கேன்னு பராக்குப் பாத்துகிட்டு நிக்கக்கூடாது"
நாங்க ரெண்டுபேரும் கிளம்பிடுவோம். டீச்சர் சொல்படி ஓடிப்போக மாட்டோம். ஏன் தெரியுமா? பிச்சம்மாவுக்கு, 'போலியோ' வந்து, ஒரு காலுவளஞ்சு போயிருக்கும்.அந்தக் காலை உதறி உதறி விந்தி விந்திதான் நடப்பா. மத்தபசங்கெல்லாம் அவளை, நொண்டிப்பிச்சம்மா'ன்னுகூப்பிடறப்போ, எனக்குக் கோவம் கோவமாவரும்.
என் கிட்ட ஒரு பழக்கம் இருக்கு(இருந்தது?) என்கூட இருக்கறவங்க எப்படிப் பேசுறாங்களோ, நடக்கறாங்களோ, அதேமாதிரி என்னை அறியாமலேயேசெஞ்சுருவேன். பிச்சம்மாகூட போறப்ப நானும் அவளைப் போலவே நடப்பேன்.பாக்குறவங்களுக்கு, ரெண்டு சின்ன பொண்கள் கால் சரியில்லாமஇருக்கறாங்கன்னு நினைச்சுப்பாங்க! ( இதை ஒருதடவை எங்க அம்மா பாத்துட்டு கேட்டப்பத்தான் எனக்கே தெரியும்,நான் பிச்சம்மா மாதிரி நடக்கறேன்னு!)
இந்த நகர் வலத்தை முடிச்சிட்டு திரும்பி வர்றதுக்கே காலையிலே விடற 'ரீஸஸ் டைம்' ஆயிரும்! அப்புறம் ரெண்டு பீரியட்தான். சாப்பாட்டு இடைவேளை வந்துரும்!
அப்புறம், டீச்சரு எங்கெயாவது போனாங்கன்னா, சட்டாம் பிள்ளைதான் டீச்சர் வர்ற வரைக்கும் மொத்த வகுப்பையும் பாத்துக்கணும். சத்தம் கித்தம்போடாம, வீட்டுப் பாடம் எதாவது எழுதிகிட்டு இருக்கணும்.
எங்க 'ஸ்கூல்'லெ வகுப்புத் தலைவர்(சட்டாம்பிள்ளை) ஆவணும்னா வகுப்புலெ மொத'ரேங்' எடுக்கற ஆளா இருக்கணும். எல்லா மாசமும் 'டெஸ்ட்' வைப்பாங்கல்ல. அதுலே யாரு நிறைய 'மார்க்'கோ, அவுங்கதான் அடுத்த 'டெஸ்ட்' வரவரைக்கும் 'க்ளாஸ் லீடர்'
இதுலே எனக்கும், எங்க வகுப்புலே இருந்த 'வைத்தி' ன்னு நாங்க கூப்புடற வைத்தியநாதனுக்கும்தான் போட்டி.
வைத்தியப்பத்திச் சொல்லியே ஆகணும். அக்ரஹாரத்துப் பையன். ஆசாரமான குடும்பமாச்சா, அதுனால 'குடுமி'வச்சிருப்பான். முன்னந்தலைஅரைவட்டமா மழிச்சு இருக்கும். ஆனா, மழ மழன்னு இருக்காது. குட்டி குட்டியா சின்னச் சின்ன முடி இருக்கும். தலையைத் தடவுனா,'ப்ரஷ்'மாதிரி குறு குறுன்னு இருக்கும். நல்லாப் படிப்பான். நல்ல நிறமா இருப்பான். அவனோட தங்கச்சிப் பாப்பாவுக்கு எப்பவும் வயித்துக்கோளாறுன்னு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வருவாங்க அவுங்க அம்மா. கூடவே இவனும் வருவான்.அப்ப அவனை எங்க வீட்டுக்குள்ளேயெல்லாம் கூட்டிட்டுப்போய் எங்க அக்காங்களுக்கெல்லாம் காமிச்சிருக்கேன். நாங்க ரெண்டுபேரும் ·ப்ரெண்ட்ஸ்தான்.ஆனா அப்பப்ப சண்டையும்வந்துரும்!
ஒருநாளு டீச்சரு இல்லாதப்ப அவந்தான் எங்களையெல்லாம் மேய்ச்சுகிட்டு இருந்தான்.நாங்கெல்லாம் எப்பவும்போல பேசிகிட்டு இருந்தோம்.சத்தம் ஜாஸ்தியாச்சுன்னா, ஒரு 'சத்தம்' போடுவான்.
"உஷ்ஷ்ஷ்ஷ்.... பேசாதீங்க! டீச்சரு சொல்லிட்டுப் போயிருக்காங்க, பேசறவங்க பேரை 'போர்டு'லே எழுதணும்னு. இப்ப எழுதிருவேன். அப்புறம் டீச்சரு வந்தா மாட்டிக்குவீங்க"
நான் அப்படியெல்லாம் அடங்கற ஆளா? ரெண்டு நிமிஷம் சத்தம் இருக்காது.அப்புறம் மெதுவா, கிசு கிசுப்பா தொடங்கும். போகப்போகசத்தம் உசந்துகிட்டே போயிரும்.
வைத்தி, என் பேரை கோணக்கா மாணக்கான்னு 'போர்டு'லே எழுதிட்டான்!
இவ்வளவு தூரத்துக்கு இதுவரைக்கும் வந்ததில்லே. இன்னைக்கு ஏன் டீச்சரு இவ்வளொ நேரமா திரும்பி வரலே?
"டேய் வைத்தி, டேய் அழிச்சுடுடா, இனி பேசமாட்டெண்டா, டேய் டேய்"
"ஐயோ, டீச்சரு வந்துகிட்டு இருக்காங்கடா, டேய் வைத்தி, அழிடா அழிடா"
டீச்சரு காலை உள்ளே வெக்கறதுக்கும், வைத்தி 'போர்டை' அழிக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.
அப்பாடா, தப்பிச்சுட்டேன்! ஆனாலும் எவ்வளொ கெஞ்ச வச்சிட்டான்.
இருக்கட்டும். அவனை வீட்டுக்கு விடறப்பகவனிக்கலாம்!
அடுத்த ரெண்டு நாளிலேயே சந்தர்ப்பம் கிடைச்சிடுச்சு. நான் தான் 'லீடர்'
டீச்சரு வகுப்பிலே இல்லே. பேச்சு சத்தம் கொஞ்சம் கொஞ்சமா உச்ச ஸ்தாயிலே போயிகிட்டு இருக்கு. எனக்குசெஞ்ச உபகாரத்தை நினைச்சுகிட்டு, வைத்தி சத்தமா பேசிகிட்டு இருக்கான், பக்கத்துலே உக்காந்து இருக்கறபையனோட!
நானு, சத்தம் போடாதீங்க, சத்தம் போடாதீங்கன்னு ஒப்புக்கு ரெண்டுதடவை கத்திட்டு, வைத்தி பேரை 'போர்டு'லேஎழுதிட்டேன்! அவன் அதை சட்டையே பண்ணாம இன்னும் பேசிகிட்டு இருக்கான்!
ஆஹா.... டீச்சரு வந்துட்டாங்க! வைத்திக்கு அவன் கண்ணையே நம்ப முடியலே! அவன் பேரு இன்னும் இருக்கு.நான் அதை அழிக்கறதுக்கு ஒரு முயற்சியும் எடுக்கலே!
வைத்திக்கு 'நல்லதா' ரெண்டு அடி உள்ளங்கையிலே கிடைச்சது! அவன் கண்ணுலே தண்ணி முட்டிகிட்டு நிக்குது!
டீச்சரு என்னெ எதுக்கு கை நீட்டச் சொல்றாங்க! ஐயோ...ஆஆஆஆ வலிக்குதே! எனக்கு எதுக்கு ரெண்டு அடி?
நானே நீலி! 'நீலிக்கு கண்ணீரு நெத்தியிலே'ன்ற மாதிரி, கண்ணீரு ஆறாப் பெருகுது!
வகுப்பே முழிக்குது!
அழுதுகிட்டே கேக்கறேன், "என்னை ஏன் அடிக்கறீங்க? நானா பேசுனேன்?"
டீச்சரு, 'போர்டை'க்காட்டுனாங்க. இப்பத்தான் எனக்கு உறைக்குது!
நாந்தான் எழுதியிருக்கேன்!
'அப்பளாக்குடுமி வைத்தி பேசினான்'
நன்றி மரத்தடி.காம்
Wednesday, December 21, 2005
ஒரு குழந்தை உலகம்......
Posted by துளசி கோபால் at 12/21/2005 01:50:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
சூப்பர்!
ஏற்கனவே படிச்சிருந்தாலும்..
சூப்பர்!
பழைய கதையெல்லாம் இங்கே எடுத்து விடுங்க.
-மதி
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்... வழக்கம் போலவே கலக்குங்க....
பத்ரி,
வாங்க வாங்க. நன்றிங்க. எப்படி இருக்கீங்க?
டி.ராஜ்
பிடிச்சிருந்ததுன்னு கேக்க சந்தோஷம்.
மதி,
நன்றி மதி.
//பழைய கதையெல்லாம் இங்கே எடுத்து விடுங்க. //
நீங்களே சொல்லிட்டீங்கல்லே, இப்பப் பாருங்க.
தங்கமணி,
நன்றிங்க. அடிக்கடி வூட்டுப் பக்கம் வந்து போகணும்.
குழலி,
வாழ்த்துக்கு நன்றி.
முன்னாடி படிச்சதில்லை... பின்னிட்டீங்க...
super O super!!
veni,
vidi,
commented!
பிரகாஷ்,
//முன்னாடி படிச்சதில்லை... //
இதுதான் நுணலும் தன் வாயால்..... மாட்டிக்கிட்டீங்க.
பழசெல்லாம் வரப்போகுது. உஷார்:-)
ஞான்ஸ்,
நன்றிங்க.
ஆமாம், இந்த வேணி, விதி யாரோ?
"அந்தக் கம்பு உச்சியிலே ஒரு பொம்மை இருக்கும். அதுக்கு நல்லா 'கவுனு' இல்லாட்டா புடவைன்னு உடுத்தி விட்டுருப்பாங்க!அதுக்குச்சலங்கைகூட கட்டிவிட்டுருப்பாங்க! கம்பத் தூக்கிகிட்டு வரும்போதே'ஜல் ஜல்'ன்னு தாளத்தோட பொம்மை ஆடிகிட்டே இருக்கும்" //
- என்னங்க துளசி, அந்த பொம்மை எப்படி அப்படி ஆடிக்கிட்டே இருக்கும்னு இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு சொல்லாம விட்டுட்டீங்க! நான் சொல்லிறட்டுமா?
இந்த மிட்டாயெல்லாம் மூங்கில் கழிகளில்தான் சுத்தியிருப்பாங்க. இந்த பொம்மையை ஒரு கம்பியில இணைச்சி, அந்தக் கம்பி மூங்கில் கணுக்கள் வழியா கீழேவரை வந்து ஒரு வளையம் மாட்டியிருக்கும். அதை கால் கட்டைவிரல்ல மாட்டிக்கிட்டு மிட்டாய்காரர் - சிலர் நல்லா பாடுவாங்க - பாடிக்கிட்டே அந்த வளையத்தை ஆட்டும்போது பொம்மை டான்ஸ் ஆடும் பாருங்க...
இந்தக் கண்டுபிடிப்பை நான் பண்ணியதும் அதுவரை இருந்த ஆச்சரியம் போனாலும், நண்பர்கள்ட்ட இந்தக் கண்டுபிடிப்பைச்சொல்லி காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு...ம்..ம்ம்...
தருமி,
அப்பப் 'பொடிசா' இருந்ததாலே இந்த டெக்னிக் கண்டுபிடிக்கலை(-:
இப்பத்தான் தெரிஞ்சது.
நன்றிங்க.
சாரா,
வருகைக்கு நன்றி.
இப்படி எல்லாருக்கும் ஒரு 'சிறு வயது காலம்' நினைச்சுப் பாக்கறப்பவே இனிக்குதுல்லே?
சிறுவயது அனுபவங்கள் மிக இனிமையானவையே. அதிலும் உங்களைப் போல அந்த வயசிற்கே உரித்தானநடையில் விவரித்தால் கேட்கவா வேண்டும்.
நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.மற்றவர்களை imitate செய்யும் பழக்கத்தினால்தான் உங்களுக்கு எல்லா மொழிகளும் குறைந்த கால வாசத்திலியே பயிற்சியாகிறது போல.
அந்த நாள் (மரத்தடி) ஞாபகம் நெஞ்சிலே வந்ததே துளசி, துளசி
இந்த நாள் அன்றுப்போல் இன்பமாய் இல்லையே.. அது ஏன்? .. துள..சி
டீச்சர். அவசரமா இதுக்கு ஒரு +வ் போட்டாச்சு. விளக்கமான பின்னூட்டம் பிறகு.
அடியேனின் வேண்டுதலுக்கிணங்கி `மலரும் நினைவுகள்’ போட்டதுக்கு நன்றி! இன்னமும் எங்க ஊரிலெல்லாம் ஜவ்வு மிட்டய் இன்னும் இருக்கு துளசி! மாரியம்மன் கோயில் கொடைக்கு மட்டும்தான் வருது.
உங்க எழுத்துநடை எங்க `ஆட்டோகிராப்’ஐத் திருப்பிப் பார்க்கிறமாதிரியே இருக்குது. இன்னும் இப்படிப்பட்ட விஷயங்களே எழுதுங்க. ஸ்வாரசியமா இருக்கு1
என்னாங்க துளசி,
அடுத்த வார ஸ்டார் நான்தான்னு சின்னதா ஒரு கோடு காட்டியிருக்க கூடாது. ஊர்ல இல்லாம உங்க ஸ்டார் பதிவையெல்லாம் இப்பத்தான் படிக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சது.
நீங்க சின்ன வயசுல ( இப்ப மட்டும் என்ன?) பெரீரீரீரீய குறும்பி(குறும்பனின் பெண்பால்!)யா இருந்திருப்பீங்க போல.
ஸ்டாருக்கு வாழ்த்துக்கள். இனி மீதி இருக்கற பதிவுகளையும் படிக்கணும். டாட்டா.
உஷா,
நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்.... ... (அந்தநாள் ஞாபகம்..)
மணியன்,
//மற்றவர்களை imitate செய்யும் பழக்கத்தினால்தான் உங்களுக்கு
எல்லா மொழிகளும்....//
ஆமாங்க. என் கிட்டே யார் பேசறாங்களோ, அவுங்ககூடப் பேசறப்ப அதேமாதிரிப்
பேசிருவேன், ( தமிழ்லேதான்)
ராகவன்,
முதுகுலே குத்தாம ஓட்டுப் பெட்டியிலே குத்துனதுக்கு நன்றி.
டி பி ஆர் ஜோ,
ஆஹா வந்துட்டீங்களா. நன்றி. நிதானமாவே படிங்க. எங்கெ ஓடிறப்போறேன்/போகுது?
தாணு,
'ரசிகப்பெருமக்களின் ஏகோபித்த ஆதரவை முன்னிட்டு' ன்னு போட்டுக்கிட்டு பழசையும்
அப்பப்ப எடுத்து வுட்டுறணும். இந்தமாதிரி ச்சான்ஸ் போனா வராது பொழுதுபோனா....
துளசி அக்கா சிரிச்சி சிரிச்சி வயிறு ஒரு பக்கம் இறங்கி போயிடிச்சி. மலரும் நினைவுகள் மழலை பயணங்கள் சுகம்தான்! .சும்மா சொல்ல கூடாது .அக்கா பெரிய குரும்பியாதான் இருந்திருக்காக!பயணங்கள் தொடரட்டும்!
மிகவும் அருமையாக ரசிக்கும்படி எழுதி இருக்கிறீங்க.
// ராகவன்,முதுகுலே குத்தாம ஓட்டுப் பெட்டியிலே குத்துனதுக்கு நன்றி. //
அத நீங்க இன்னமும் கத்துக் குடுக்கலையே டீச்சர். குடுத்தப்புறமா பயிற்சி எடுக்கிறேன். :-)
சரி. விசயத்துக்கு வருவோம். நல்ல நினைவலை.
சின்ன வயசுல என்ன மொத மொதலா ஸ்கூல்ல விட்ட நினைவு இன்னும் நல்லா இருக்கு. கையில ரெண்டு கடலை உருண்டைகள். பெருசா....இருந்துச்சு...அழுது அழுது...கடைசி வரைக்கும் திங்காம....அந்தக் கடலை மிட்டாய் எங்க போச்சோ!
அழுகையெல்லாம் ஒரு நாளைக்குத்தான். அப்புறம் பிரச்சனையில்லை.
ஜவ்வூஊஊ மிட்டாய்......தூத்துக்குடில கலர் கலரா உருண்டை உருண்டையா கெடைக்கும். செயிண்ட் சேவியர்ஸ் ஸ்கூல் பக்கத்துலதான் ரயில்வே ஸ்டேஷன். வாசல்ல வெச்சி விப்பாங்க. ஆனா வாங்கித் திங்க காசுதான் இருக்காது. என்னைக்காவது காசு இருந்தா முழு நெல்லிக்காய் வாங்கித் தின்னுருக்கேன். அது மேல அப்படி ஒரு ஈர்ப்பு. அதுவுமில்லாம வீட்டுல பக்கத்துக் கடைல வாங்கித்தர்ர போண்டாவுலயே நான் உலகத்தைக் கண்டு கொண்டிருந்தேன்.
ஊர்ப்பக்கமா போனாத்தான் கைல வாச்சு, வாத்து, கிளி எல்லாம் வெக்கிற சவ்வு மிட்டாய் பார்க்கலாம். அது ரொம்பப் பிடிக்கும். ஆனா வீட்டுல திட்டு விழுகும். பாட்டி கொஞ்சம் பருத்தியக் கொடுப்பாங்க. அதக் கடைல எடைல போட்டு கெழங்கு, பலாக்கொட்டை.....அது இதுன்னு வாங்கித் திம்போம்.
ஆஹா.. சூப்பர் பதிவு..
இந்த சவ்வு மிட்டாய், ஒரு ரூபா மாதிரி வெள்ளையா இருக்குமே.. சூடமிட்டாய்.. அதெல்லாம் பக்கத்து சேட்டு கடைல சாப்டதுக்கு கொசுவத்தி கொளுத்தவச்சுட்டீங்க.
எல்லாம் சொன்னீங்க.. ஆனா, ஈர்க்குச்சியில ஜிவ்வுன்னு சுத்தித்தர பஞ்சு மிட்டாய விட்டுட்டீங்களே?
நல்லா எழுதி இருக்கீங்க.
தேன் முட்டாயி ய யாரும் அடிச்சுக்க முடியாது.
சிங் செயகுமார், கலை, ராகவன்,ராமநாதன், கார்த்திக்
வருகைக்கும், பராட்டுக்கும் நன்றிங்க.
ராமநாதன்- பஞ்சுமிட்டாயெல்லாம் திர்விளா( திருவிழா)க்குதான் வரும். தினப்படி இருக்காதுல்லெ?
ராகவன் -மொத நா ஸ்க்கோலை ஞாபகப்படுத்திட்டீங்க. இருங்க ஒரு நாளு, உங்களை:-)
கார்த்திக்- அதென்ன தேன் முட்டாயி? அப்படி ஒண்ணு இருந்திருக்கா? தெரியாமப்போச்சே(-:
:D : D ஹ ய்யோ துளசி கடைசி வரி ...... கடவுளே !! முடில .... சிரிச்சு சிரிச்சு இன்னும் கண்ல தண்ணி நிக்குது சிரிப்பு அடக்கவே முடில போங்க .
வாங்க சசி கலா.
புத்துயிர் கொடுத்தமைக்கு நன்றி:-)))))
Post a Comment