Monday, July 01, 2024

நீ வீரன்/ வீரி ! (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 9 )

கொஞ்சமா இந்த இடத்தைப் பற்றிச் சொல்லிட்டு, 'இப்ப மணி பனிரெண்டரை. உங்களுக்கு ரெண்டு மணி நேரம் தர்றேன். உள்ளே போய் நல்லாச் சுத்திப்பார்த்திட்டு ரெண்டேகால், ரெண்டரைக்குள்ளே வந்துருங்க. சீக்கிரம் வந்துட்டால் நாம் இன்னொரு சுவாரஸ்யமான  இடத்துக்குப் போகலாம்'னாங்க கைடு ! ஃபோட்டொ பாய்ன்ட் இருக்கே.... விடமுடியுமோ ?
உள்ளே போகும் ஆரம்பத்துலேயே பாலத்தின் வரலாறு இருக்கு. நின்னு அஞ்சு நிமிட் வாசிச்சதோடு , நாலு க்ளிக்கும் ஆச்சு.


இப்ப இந்தப் பாலத்துக்கு வயசு 135 ! 1888 லே ஸ்காட்டிஷ் ஸிவில் எஞ்சிநீயர் ஒருத்தர்  (George Grant Mackay, a Scottish civil engineer and land developer,  இந்தக் காட்டுப்பகுதியில்  ஆற்றையொட்டி ரெண்டு கரைகளையும்  சேர்ந்தாப்போல இருக்கும்  இடத்தில் ஒரு ஆறாயிரம் ஏக்கர் வாங்கிப்போட்டார்.    ஒரு பக்கம்  சின்னதா ஒரு மரவீடு கட்டிக்கிட்டார். ரெண்டு  பகுதி நிலத்துக்கும் நடுவில்  ஆறு நல்ல பாதாளத்தில் ஓடுது ! அக்கரைக்குப் போகணுமுன்னா  ......  வழி ?   
தண்ணீரில் இறங்கி ஆற்றைக் கடக்காமல், ஒரு  பாலம் கட்ட ஐடியா வந்ததும்  
  Hemp  என்ற செடிகளைப் பறிச்சுக் கயிறு திரிக்கிறார். இந்த ஹெம்ப்.... Marijuanaவோட சொந்தக்காரர். கூட்டுக்குடும்பத்தில் ஒரு அங்கம்.  உண்மையில் இந்தச் செடி ஆதியில் ஏராளமா விளைஞ்சது சீனத்தில்தானாம்.  சுமார் பனிரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயே சீனாவில் இதைவச்சுக் கயிறு திரிச்சுருக்காங்களாமே ! (எல்லாத்துலேயும் முன்னோடி இல்லே ?கொரோனா உட்பட.... )
Cedar மரத்துப் பலகைகளையும் ( இது நம்ம தேவதாரு மரம்தான். ஓங்குதாங்கா உசரமா வளரும் மரம்!) திரிச்ச கயிறுகளையும் வச்சு நூலேணி மாதிரி நீளமாத் தயாரிச்சு, அந்த ஏணியின் ஒரு பக்கத்தை மரவீடு கட்டுன பகுதியில் கட்டி விட்டுட்டு, மறு பகுதியை,  பள்ளத்துலே கீழே இறக்கி, அங்கிருந்து  குதிரைகள் மேலே  வச்சு ஆற்றைக் கடந்துபோய்த் திரும்ப அந்தப்பக்கம் மேலே ஏத்தி, அங்கிருந்து இழுத்துக் கட்டியிருக்கார். ஸிவில் எஞ்சிநீயர் ஆச்சே ! நிறையப்பேர் உதவியிருப்பாங்கதான்  !  இந்த வேலை முடிய ஒரு வருஷம் ஆகி இருக்கு ! 
பாலத்தின் புகழ், பரவாமலா இருந்துருக்கும் ! இந்தப் பாலமே ஒரு பதினாலு வருஷம் தாக்குப்பிடிச்சுருக்கு. 1903 இல் கயிறுக்குப் பதிலா இரும்புக் கம்பி மாத்தியிருக்காங்க. வேடிக்கை பார்க்க நிறைய மக்கள் வரத் தொடங்கியிருக்காங்க. 1911 இல் இந்த இடத்தை வாங்கியவர் (Edward Mahon ) வந்துபோற சனத்துக்காக ஒரு டீக்கடை (Tea House)ஆரம்பிச்சுருக்கார்.  டீன்னா வெறும் டீ மட்டுமா ? மசால் வடைக்குப் பதிலாக பன், ரொட்டி, பிஸ்கெட்ன்னு இருந்துருக்கும், இல்லே ? 
ஒரு மூணு வருஷம் ஆனதும் பாலம் இன்னும் கொஞ்சம் உறுதியா இருக்கட்டுமேன்னு  கூடுதல் இரும்புக்கம்பிகள் சேர்த்துக் கட்டியிருக்கார். அடுத்த இருவது வருஷத்தில் திரும்ப இடம் கைமாறியிருக்கு !  இப்ப வாங்குனவர் ஒரு முன்னாள் ஃபாரஸ்ட் ரேஞ்சர் (“Mac” MacEachran, a former forest ranger. ) காடு சமாச்சாரமெல்லாம் அத்துபடி ஆகிருக்கும்தானே ! 

உள்ளூரில் இடப்பெயற்சியில் வந்துருந்த ஃபர்ஸ்ட் நேஷன் குழுவிடம்,  உங்களுக்கு விருப்பம் என்றால் உங்க  குலச்சின்ன அடையாளமான டோடம்போல்(TotemPole)இங்கே வைக்கறீங்களான்னு கேட்டுருக்கார்.  கரும்பு தின்னக்கூலியா?  விதவிதமான கதைகள் சொல்லும் தூண்களைச் செஞ்சு கொண்டுவந்து வச்சுட்டாங்க !  இது நடந்தது 1935 இல்.  












மறுபடி பத்தே வருஷத்தில்  இடம் விற்பனைக்குப்போய்,  வாங்குனவர்,  எட்டே வருஷத்தில் Rae Mitchell என்பவருக்கு 1953 இல் வித்துட்டுப்போனார். 
Rae Mitchell , எப்படியாவது இந்த இடத்தை பொழுதுபோக்குக்கான  வசதிகளுடன்  மாத்தணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டார் போல !  சுற்றுலா வரும் மக்களைக் கவரும் விததில் கடைகண்ணிகள்,  விருந்து நடத்திக்கும் பெரிய  ஹால்கள், உணவு விடுதிகள் இப்படி நிறைய புதுமாற்றங்களைக் கொண்டுவந்ததுடன்,  ஒரு மூணு வருஷம் கழிச்சு அஞ்சுநாள் பாலத்துக்கு லீவு விட்டுட்டார்.  லீவா ? எதுக்கு ?   பாலத்தின் ரெண்டு முனைகளிலும் பதிமூணு டன் காங்க்ரீட் சேர்த்து,  ஸ்டீல்கம்பிகளை இணைச்சு  ரொம்பவே உறுதியான பாலமா மாற்றிவிடறதுக்குத்தான் !  இப்போ ஏழு யானை நடந்தாலும் ஒன்னுமே ஆகாதாமே !
அவருடைய மகள் நான்ஸி, 1983 முதல் இந்த  இடத்துக்கு உரிமையாளரா இருக்காங்க.  இடம் இப்போ அட்டகாசமான சுற்றுலாப்பயணிகள் நாள் முழுசும் பொழுதுபோக்கும் வகையில் இருக்கு.  Canadian Tourism Hall of Fame in 2000. அவார்ட் கிடைச்சுருக்கு !  இப்ப ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால்.... வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுத்துருக்காங்க. 
(அஞ்சு நிமிட்  வாசிச்சுட்டு இவ்வளவா ?   ஹிஹி.....மேற்படி சமாச்சாரங்களை வலைவீசிப்பிடித்தேன்.  கொஞ்சமா துல்ஸீ'ஸ் மசாலா சேர்த்து உங்களுக்கு விளம்பி இருக்கேன். எல்லோரும் பாலத்தை வித்தாங்க, பாலத்தை வித்தாங்கன்னு குறிப்பிட்டுருக்காங்க. பாலத்தை மட்டும் எப்படி விற்கமுடியும் ?  அந்த ஆறாயிரம் ஏக்கர் இடத்தையும்தானே ?  என்னவோ போங்க..... )

பாலத்துக்குப்போகுமுன் ,  செய்யக்கூடாதவை பட்டியல் போர்டு.  ஒருசில அபகடங்கள் நடந்தபிறகு.... வச்சுருக்காங்க போல ! 
பாலத்துக்குப்போய் நடந்துட்டு, அப்படியே சில வீடியோ க்ளிப்ஸ், க்ளிக்ஸ் எல்லாம்  ஆனதும், கடைகளில் ஒரு சுத்தும் ஆச்சு. செருப்புக்கடை ஒன்னும் இல்லை.  நினைவுப்பரிசுகள்தான் நிறைஞ்சுருக்கு.  எனக்கு வாழ்நாள் முழுசும் நினைவு வச்சுக்கும் சம்பவம் இருப்பதால் ஒன்னும் வாங்கிக்கலை.


ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு.  நம்மவருக்கு ரைஸ் & சப்பாத்தி ப்ளஸ் கறி. எனக்கு  ச்சீஸ் ச்சிப்ஸ்.  கூப்பானைக் கொடுத்துக் கூடக்கொஞ்சம்தான் ! 


வண்டி இருக்கும் இடத்துக்கு வந்தால்.... நம்ம கைடு பாலத்தில் நடந்துபோன வீரத்துக்கான சான்றிதழ் கொடுத்தாங்க.  பாலத்தின் நீளம் 450 அடி. கீழே தண்ணீரில் இருந்து 230 அடி உயரம். 


எனக்கு இந்த தொங்குபாலத்தின் த்ரில் இல்லாமப்போனதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னாவது இங்கே எங்கூரிலேயே ஒரு அளவில் சின்ன தொங்குபாலம் இருக்கு. பலமுறை போய்வந்துருக்கோம். நீளம்தான் ஒரு நூத்தியம்பது அடி இருக்கலாம்.  கால்பதிக்கும் இடத்தில்கூடக் கம்பிகள்தான் !
ரெண்டாவது, இதே 450 அடி நீளப்பாலத்தில் ரிஷிகேஷில் போயிருக்கோம்.  லக்ஷ்மணஜூலான்னு பெயர்.  பாரதத்தில் வெள்ளையர் ஆட்சி நடந்த காலத்தில் கட்டுனது. 1930 வது வருஷம்.

இதே ரிஷிகேஷில் ராம்ஜூலா என்னும் சிவானந்தா பாலம், 750 அடி நீளம் &  கங்கைக்கு மேல் 450 அடி உயரம்.  கொஞ்சம் அகலமான பாலமும்கூட.  உள்ளூர் சனம்  மோட்டர்பைக்கிலும், மாடுகள் நடராஜா சர்வீஸிலும் பயணிக்கிறாங்க.  நாமும் ஒரு ஓரமா நடந்து போறோம் !  ( அதானே...  யாருகிட்டே ! )


நம்மூர் படங்களை உங்களுக்காகச் சேர்த்திருக்கேன் :-)

நேரம் இருந்தால் பார்க்க ரெண்டு சுட்டிகள் உமக்கு !

நம்ம ராம் ஜூலா பதிவு

https://thulasidhalam.blogspot.com/2011/02/blog-post_18.html

நம்ம லக்ஷ்மண் ஜூலா பதிவு

https://thulasidhalam.blogspot.com/2011/03/blog-post.html

அடுத்த இடம், நம்ம  கைடு சொன்னதைப்போல் சுவாரஸ்யமானதுதான் !  வாங்க போகலாம்.....


தொடரும்.... :-)


6 comments:

said...

தொங்கு பாலம் - நம் ஊரிலேயே இப்படி பார்த்து இருக்கோமே என்று நினைவுக்கு வந்தது. நீங்களும் சொல்லி இருக்கீங்க! :)

மலைப்பிரதேசங்களில் - குறிப்பாக உத்திராகண்ட், ஹிமாச்சலில் இப்படியான நிறைய தொங்குபாலங்கள் இருக்கு. மரப்பாலங்களில் நடப்பது கொஞ்சம் த்ரில் தான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பாலத்துலே போகும்போது கங்கையில் மீன்கள் கூடப் பார்க்கலாம் !

said...

பாலம் பற்றிய விவரங்களும் படங்களும் ரொம்ப சுவாரஸ்யம். விளிம்பு இல்லாத பழைய பாலத்தில் நடந்தவர்கள் தீரர்கள்!

said...

இந்த இடம் நன்றாகவே இருக்கிறது. அந்த தூண்கள் எல்லாம் அழகு.

தொங்கு பாலத்தில் சென்றதற்கு சாட்டிபிக்கட் சூப்பர்.

நாங்கள் சில மாதம்முன் இங்கு மாத்தளையில் பம்பரகிரி எல்ல என்ற இடத்தில் நீர்வீழ்ச்சி பார்க்க சிறிய தொங்கு பாலத்தில் பாதுகாப்பானது அல்ல .கயிறு கட்டப்பட்டு கீழே நடப்பதற்கு மரப் பலகை சென்று பார்த்து வந்தோம் மழையும் கொட்டியதில் திகில் அனுபவம்தான் இருந்தும் ரசிக்கும் இடம். பாலத்தின் கீழாக நீர்வீழ்ச்சியின் நீர் பாய்ந்து ஓடுகிறது.

பிரசித்தி பெற்ற மாத்தளை முத்துமாரி அம்மன் தரிசனம் செய்தோம்.
நாலந்தகெட்டிகே புராதனச் சரித்திரம் வாய்ந்த கட்டிடம் பார்த்து வந்தோம்.

said...

வாங்க மாதேவி,

நம்ம இலங்கைப்பயணத்தில் யாழ்பாணம் பக்கமெல்லாம் போகவில்லை. இன்னொரு பயணம் கட்டாயம் போக வேண்டும்தான்.

நம்ம பக்கங்களைவிட, வெள்ளையர் நாடுகளில் சின்ன விஷயத்தைக்கூடப் பெருசாக் கொண்டாடி மார்கெட் பண்ணிடறாங்க. டூரிஸத்தின் மதிப்பு தெரிஞ்சுருக்கு.

நாம் ரொம்பவே பின் தங்கி இருக்கோமேப்பா....

said...

வாங்க ஸ்ரீராம்,

எதுநடந்தாலும் நல்லபடியாப் பதிவு செஞ்சு வைக்கும் பழக்கம் இருப்பதால்..... நம்மால் எளிதாக நடந்ததைத் தெரிஞ்சுக்க முடியுது. அதுவே சுவாரஸ்யம்தான்.

ஆர்வக்கோளாறில் பயம் தோணியிருக்காது போல ! அதுவும் அப்போதைய பெண்கள் உடைகள் பார்த்தால்..... சுமை அதிகம்தான்!