அறைக்குத் திரும்புனதும் முதல் வேலை, ஷூவைக் கழட்டிப் பார்த்ததுதான். பாவம்...... ஏற்கெனவே உயிர் போனதை, வதைச்சு வச்சுருக்கேன். சட்னு ஒரு காஃபி போட்டுக்குடிச்சுட்டு, செருப்புக்கடைக்கு வலை வீசுனோம்.
'எத்தனை தடவை சொன்னேன், எனக்கு இந்த ஷூ வாங்கும்போது, உனக்கும் வாங்கிக்கோன்னு'.......... ஆரம்பம் ஆச்சு :-)
Skechers , கனமே இல்லாமத்தான் இருக்கு. வலைவீசியவர், இதே ஏரியாவில் இருக்கும் ஒரு மாலில் இந்த ஷூக்கடை இருக்காம். கிளம்பு போயிட்டு வந்துறலாமுன்னார். வழக்கமாப் போட்டுக்கும் ட்ரெஸ் ஷூஸ் போட்டுக்கிட்டுக் கிளம்பினேன். வாசலுக்கு வந்தவுடன், டாக்ஸி எடுத்துக்கலாம்ன்னார். இருக்கும் காலி வலியில் டாக்ஸி ஓக்கேதானே ?
இந்த ஹொட்டேல் வாசலில் எப்பவும் ரெண்டுமூணு டாக்ஸிகள் இருந்துக்கிட்டே இருக்கு. சவுத் & நார்த் டவர்ஸ்னு ரெண்டு தனித்தனிக் கட்டடங்களும், கிட்டத்தட்ட ஆயிரம் அறைகளுமா இருக்குமிடத்தில் 24 மணிநேரமும் யாராவது எங்கியாவது போய்க்கிட்டே இருக்கமாட்டாங்களா என்ன ?
டாக்ஸியில் ஏறி இடம் சொல்லிட்டு ஸீட் பெல்ட் போட்டுக்கறதுக்குள்ளே..... வண்டியை பாதசாரிகள் கடக்குமிடத்தில் ஓரங்கட்டுன பஞ்சாபி ட்ரைவர், எதிர்சாரியைக் கைநீட்டிக்காமிச்சு அதுதான் மால்னு சொன்னார். மூணரை டாலர் காமிக்குது மீட்டர்.
ஙேன்னு முழிச்சபடிச் சாலையைக் கடந்து அந்தாண்டை போனால்....பெரிய வாசல். உள்ளே எஸ்கலேட்டர் மட்டுமே ! இன்னொரு ஙே.......... ஒரு நாலைஞ்சுபேர் உள்ளேயிருந்து மேலே வர்றாங்க. ஓஹோ... இதுதான் வழின்னு இறங்கி வலதுபக்கம் திரும்பினால்..... அட ! மால்தான் ! ரெண்டு செருப்புக்கடைகளை கடந்து போறோம். ஷோ விண்டோ முழுக்க ஹைஹீல்ஸ், பலநிறங்களிலும் டிசைன்களிலும். நமக்கானதல்ல........ மூணாவதா கண்ணில் பட்டக் கடையில் விசாரிச்சால்.... நாலு கடைகளுக்கு அப்புறம் ஸ்கெச்சர்ஸ் கடையே இருக்குன்னாங்க.
அஞ்சே நிமிட்லே பர்ச்சேஸ் முடிஞ்சது. Wide fit என்பதால் விரல்களுக்கும் வலி இல்லை. நியூஸியைவிட விலை கொஞ்சம் மலிவே ! கொஞ்சநேரம் மற்ற கடைகளிலும் மாடியிலும் வேடிக்கை பார்த்துட்டு..... வெளியே போனால்.... வேறொரு புது இடத்தில் இருக்கோம். ஆர்ட் கேலரி இருக்குமிடம். ஆனால் மூடியிருக்கேன்னு பார்த்தால் மணி எட்டு ! ஸ்ப்ரிங் ஸீஸன் என்பதால் பகல் வெளிச்சம் இருக்கு.
இங்கெதான் எங்கியோ ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. அங்கே போய் டின்னரை முடிச்சுக்கலாமுன்னு நம்மவர் சொன்னதும் தேடல் ஆரம்பிச்சது. எந்தத் தெருவில் இருக்குன்னா.... ஞாபகமில்லை என்கிறார். இந்தத் தெருமுனையில் ஸ்ட்ரீட் மேப் ஒன்னு இருக்கு. அதை முறைச்சுப் பார்த்துத் தேடியதில் தெருப்பெயர் ஞாபகம் வந்துருக்கு. ராப்ஸன் தெரு. குறுக்கே போகும் தெருவில் ஒரு ப்ளாக் போனால் வருமாம்.
போறவழியில் ஆண்களுக்கான உடைகள் இருக்கும் கடைக்குள் நுழைஞ்சு, நம்ம வீட்டுக் குட்டி ஆணுக்கு ரெண்டு டி ஷர்ட் வாங்கினோம். நமக்கு இங்கே குளிர் காலம். அதுக்குத் தோதா ஒன்னும் கிடைக்கலை. அங்கே வஸந்தகாலம் ஆச்சே ! எனக்கென்னமோ அங்கத்து உடைகளின் நிறம், டிஸைன் எல்லாம் பாடாவதியாத் தெரிஞ்சது, உண்மை.
ராப்ஸன் தெரு மரங்களுக்கெல்லாம் விளக்குச்சர மாலைகள் போட்டு ஜெகஜோதியா வச்சுருக்கு சிட்டிக்கவுன்ஸில். இந்தத்தெருவில் எவ்வளவு தூரத்தில் ரெஸ்ட்டாரன்ட் இருக்குன்னு தெரியலையே......
நம்மைத்தாண்டிப்போன இந்திய ஜோடியிடம், இருக்கான்னு கேட்டதுக்கு, 'ஹாஞ்சி, பக்கத்துலே ஸ்பைஸ் 6 ன்னு ஒன்னு இருக்கு. நாங்க அங்கேதான் போறோம்'னு சொன்னாங்க. அப்பாடா......... இப்பப் பெயரும் ஞாபகம் வந்துருக்கு :-)
ஆனால் ஒன்னு.... அவுங்க கூடப்போனதால்தான் சுலபமா இடம் கண்டுபிடிக்க முடிஞ்சது. மாடியில் இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்குப் போகும் மாடிப்படி சட்னு கண்ணுக்குப் படாதவகையில் இருக்கே!
Spicy 6 னு பெயர். உள் அலங்காரம் சிம்பிளா நல்லாவே இருக்கு. இதுவரை பார்த்ததில் இது எவ்வளவோ மேல். கூட்டிப்போனவங்க வேறொரு பகுதியில் போய் உக்கார்ந்துட்டாங்க. வழக்கமா வர்றவங்க போல. நாம், வேறொரு பகுதியில் உட்காரவைக்கப்பட்டோம். ஓனர் வந்து அறிமுகப்படுத்திக்கிட்டு மெனு கார்டைக் கொடுத்தார். பார்த்துக்கிட்டு இருக்கும்போதே சின்னப்பேச்சு !
இன்றைக்கு 'பைங்கன் கா பர்த்தா' ஸ்பெஷலாப் பண்ணியிருக்காங்களாம். அதுவே இருக்கட்டும் ! நல்லாவே இருந்தது. டிஸ்ஸர்ட்க்கு குலோப்ஜாமூன். அங்கே இருக்கும்போதே கிடைச்ச வைஃபையில் திரும்ப எப்படி நம்ம ஹொட்டேலுக்குப் போறதுன்னு பார்த்தால் நடக்கிறதூரம்தான், 700 மீட்டராம் !
நம்ம தெருவுக்கு நடந்து வர்றோம்.... அக்கம்பக்கத்துக்கடைகள் எல்லாம் கொஞ்சம் மேல்வகுப்புகானது போலத்தான் இருக்கு. ஆனால் ஒன்னு.... வெள்ளைக்கார உடைகளில் எது டிஸைனர், ப்ராண்டட்னு, போட்டுருக்கும் மனிதர்களைப் பார்த்துச் சட்னு அடையாளம் கண்டுபிடிப்பது கஷ்டம். நியூஸி வந்த ஆரம்ப நாட்களில் பார்த்தால் மனுஷ்யர் எல்லாம் ஒன்னுபோலவே இருந்தார்கள். இப்பெல்லாம் ஒரு தெளிவு வந்துருச்சு. பார்க்க ரொம்பவே சாதாரணமான உடைன்னா... அது டிஸைனர், ப்ராண்டட் :-)
மணி ஒன்பதரை ஆனதால் எல்லாக் கடைகளுமே மூடித்தான் இருக்கு. ஜன்னல்களில் ஒரு நாக்குட்டி, விதவிதமான போஸ் & நிறங்களில் அங்கங்கே ! பார்க்க ரொம்பவே அழகு !
நம்ம தெருவில் நுழைஞ்சுட்டோம். இப்போ இடமா வலமா ? குனிஞ்சு தரையைப் பார்த்தேன். வலது ! எப்படி ? இடது கொஞ்சம் சரிவா இறங்குது........இப்படிப்போனால் கடலாண்டை போவோம். ( ஹாஹா.... ரெண்டுபக்கமும் தலைதூக்கிப் பார்த்தால் வலது பக்கம் ஹொட்டேல் உசரமாத் தெரிஞ்சது )
வலது திரும்பினால் ஒரு சர்ச். விளக்கெல்லாம் போட்டு ஜகஜ்ஜோதியா இருக்கு. முன்புற காம்பவுண்ட் சுவரில் பெருசா பேனர் ஒன்னு கட்டி விட்டுருக்காங்க. அதுலே சில படங்கள். முதல் பாப்டிஸ்ட் சர்ச்சாம். அட ! வெவ்வேற வருஷங்களின் படங்கள்தான் அவை.
நேத்துப்போன அரைநாள் டூர்லே பார்த்தமே கேஸ்டௌன், அதுதான் ஊரின் ஆரம்பகாலம். 1867 வது ஆண்டு. கொஞ்சம் கொஞ்சமா வெள்ளையர் வரத்தொடங்கியிருக்காங்க.1886 இல் ஒரு குடிக்கடையில் (Bar )கூடியிருந்து, குடிச்சுக்கிட்டு இருந்தசமயம்.... அஞ்சாயிரம் பேர் இந்த ஊருக்கு வந்துட்டோம். நமக்கு ஒரு சர்ச் கட்டிக்கலாமான்னு யாரோ ஆரம்பிக்க, ஆஹா... ஐடியா சூப்பர். நம்ம புள்ளைகுட்டிகளுக்கு நல்லதாப் போச்சு. உடனே ஆரம்பிச்சுடலாமேன்னுஎல்லோரும் ஒத்து ஊதப்போய், வர்ற ஞாயித்துக்கிழமை (ஜூன் மாசம் 6 ஆம் தேதி ) சண்டே ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னார் ஒருத்தர்! அப்போ இடம் ? இங்கேதான். அடுத்த ரூம் கொஞ்சம் பெருசா சின்ன ஹாலாட்டம் இருக்கே அது போதும்.
ஞாயித்துக்கிழமை, ஒரு முப்பது பிள்ளைகள் வந்து சேர்ந்தாங்க. ஆரம்பம் ஆச்சு. உள்ளுர் மக்களில் தீயணைப்பு அதிகாரியா இருந்தவர்தான் பள்ளிக்கூடத் தலைவர். அடுத்த ஞாயித்துக்கிழமை ஜூன் 13 இல் பள்ளிக்கூடம் நடந்துச்சா ? இல்லையே..... ஊரில் அன்றைக்கு நடந்த தீவிபத்தில் இந்தக் குடிக்கடையும் எரிஞ்சே போச்சு ! அடடடா....
அந்த அஞ்சாயிரம் பேரில் ஒரு பாதிரியாரும் இருந்துருக்கார். தீ விபத்துக்குப்பின்..... மெயின் ரோடில் கனடியன் பஸிஃபிக் ரயில்வே நிலத்தில் கொஞ்சம் இடத்தைப் பிடிச்சுக்கிட்டார். சர்ச் கட்டறோமுன்னு எல்லோருமாச் சேர்ந்து இந்த இடத்தில் சின்னதா ஒரு கட்டடம் கட்டிக்கிட்டாங்க. 24 X 35 அடி தான். நம்மூர்க் கணக்கில் அரை க்ரௌண்டுக்குக் கொஞ்சூண்டு அதிகம். கட்டடம் கட்டும் செலவு 700 டாலர். மக்கள் எல்லோரையும் கூப்ட்டுப்பேசி இதுக்கு ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச்ன்னு பெயர் சூட்டியாச்சு !
சியாட்டில் நகரத்தில் இருந்து வந்த ஒருவர் முதல் Pastor ஆனார். இந்தச் சொல்லுக்குத் தமிழில் என்னன்னு கூகுளாரிடம் கேட்டதுக்கு , 'ஆடு மேய்ப்பவர்'னு ஸிம்பிளா சொல்லிட்டார் !
மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாப் பெருக ஆரம்பிச்சதும், இந்தச் சின்னக் கட்டடம் போதலை. வேறொரு இடத்தில் 800 பேர் கூடும் வசதியுள்ள ஒரு கட்டடத்தை கட்டுனாங்க.1887 ஆம் வருஷம் செப்டம்பர் 15 இல் திறப்புவிழா ஆச்சு. ( பாருங்க.... சட் சட்னு சர்ச் கட்டடம் கட்டிக்கிட்டே இருந்துருக்காங்க அப்போ !) இந்த இடமும் பத்தாமப்போனப்ப, இப்ப நாம் நிக்கும் இந்த இடத்தை 1904 லே நாலாயிரம் டாலர் கொடுத்து வாங்கியிருக்காங்க. பக்தர் ஒருவர் ஆயிரம் டாலர் நன்கொடையாகக் கொடுத்துருக்கார். சர்ச்சும் கட்டத் திட்டம் தயாராச்சு. அதே சமயம் என்னமோ துரதிஷ்டம்.......... சண்டே ஸ்கூல் நடத்தும் அறையில் தீப்பிடிச்சு கூரை எரிஞ்சு போச்சு. ரிப்பேர் பண்ணும் வரை வாடகை இடத்தில் இருந்தாங்க.
புதுசு கட்டுவதில் சுணக்கம். 1910 லே மூலைக்கல் நட்டு 1911 லே கட்டிமுடிச்சாங்க.ஒரு இருவது வருஷம் நிம்மதி. 1931 லே இன்னொரு தீ விபத்து. அதையும் எப்படியோ சரிசெஞ்சாங்க. அப்புறமும் ஒருக்கா.... சர்ச் ஆர்கனுக்குப் பின்னால் தீ பத்தியிருக்கு ! முழுக்கூரையும் காலி. அதையும் ரிப்பேர் செஞ்சாங்க. (அதென்னமோ அக்னிக்கு அவ்ளோ பசி !) அதுக்குப்பிறகு இன்றைக்கு வரை ஒரு ஆபத்தும் இல்லை டச் வுட் !
இதுக்குள்ளே அங்கே வெவ்வேற சர்ச் குழுக்கள் அவுங்கவுங்க பிரிவுக்கான சர்ச்சைக் கட்டியிருப்பாங்கல்லே ! கும்பிடுவது ஒரே சாமின்னாலும், எத்தனைவிதமான குழுக்கள் !!!
இப்ப சமூகத்துக்குப் பயனாகும் வகையில் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தை, சர்ச் வளாகத்துலே கட்டிக்கிட்டு இருக்காங்க. 57 மாடிகள். பட்டர்ஃப்ளை பில்டிங்னு பெயர். இன்னும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வருஷக் கடைசிக்குள் முடிச்சுருவாங்களாம் ! விருப்பம் இருந்தால் இந்தச் சுட்டியில் விவரங்கள் பார்க்கலாம். பிரமிப்பாத்தான் இருக்கு எனக்கு !
https://www.canadianarchitect.com/the-butterfly-and-fbc-first-baptist-church-complex/
ஹொட்டேல் வளாகத்துக்குள் இருக்கும் அழகை ரசிச்சுட்டு, ஹொட்டேலின் நார்த் டவர் லாபியை எட்டிப் பார்த்துட்டு வந்தோம்.
நம்ம அறை இருப்பது சௌத் டவர். அடுத்தமுறை வரும்போது நார்த்தில் அறை தருவதாகச் சொல்லி இருக்காங்க ரிஸப்ஷனில். பார்க்கலாம் !
தொடரும்......... :-)
10 comments:
குட்டி ஆணுக்கு 2 டிஷர்ட்ஸ் வாங்கறது சுலபமாப் போச்சு
முன்னெல்லாம் வாட்சப்பில் படம் அனுப்பி, மகள் பார்த்த பின், அப்ரூவ் ஆனால் அவங்களுக்கு வாங்குவது என்று ப்ராசஸே ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்.
அருமை நன்றி
காட்சிகளைக் கண் முன் நிறுத்தும் படங்கள் அருமை!
பயணம் சிறப்பு. புதிய காலணி வாங்கியாச்சு! :)
அப்படிச் சென்றதிலும் அனுபவங்கள். தொடரட்டும் பயணம்.
வாங்க நெல்லைத் தமிழன்,
இனி மகளுக்கு துணிமணிகள் இந்தியாவில் இருந்து வாங்குவதை நிறுத்தப்போறேன். நேரமும் காசும் விரயம்தான். ஒன்னுரெண்டைத்தவிர மற்ற எதுவும் போடாமலே வச்சுருக்காள். நாந்தான் ஆல்டர் பண்ணிப்போட்டுக்கணும் !
இனி எல்லாம் குட்டிக்கே !!!!!
வாங்க வெங்கட் நாகராஜ்,
வாழ்க்கை பூராவும் அனுபவங்களின் சேர்க்கைதானே !
புதுக்காலணி நல்ல வசதியாக இருக்கு !
வாங்க வலிதாங்கி,
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி !
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
பயணத்தில் வருகிறோம்.
வாங்க மாதேவி,
மிகவும் நன்றிப்பா !
Post a Comment