Wednesday, July 31, 2024

ஐஸூ குட்டிபோட்டுக்கிட்டே இருக்காள் !!!! ......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 22 )

ஒரு காலநேரம் வேணாமா..... எப்பத்தோணுதோ அப்பெல்லாம் ப்ரஸவமே.....  சம்பவம் நடக்கும்போது, நாமும்  ஒரு படம் க்ளிக்கலாமுன்னா.... எங்கே ?  பதினோராயிரம் அடி (எத்தனை மாடி உயரமுன்னு சொன்னால் சட்னு புரியும்தான்! ) உயரமும். எழுபத்தியாறு (76)மைல் நீளமா நீண்டு நின்னா எங்கேன்னு எப்படி க்ளிக்க முடியும் ? 
காலையில் எழுந்ததுமே பால்கனிக்குப் போய்ப் பார்த்தால்......  அமைதியான கடல்தான். கப்பலும் ரொம்ப மெதுவாகவே போய்க்கிட்டு இருக்கு ! ஐஸி ஸ்ட்ரெய்ட் பாய்ன்ட்க்கு நேத்துப்போனோமே  அங்கே இருந்து (வடமேற்குன்னு சொல்லிக்கலாம்) மேலே இடப்பக்கமாப் போறோமுன்னு  நேவிகேஷன் பாத் படம் காமிக்குது ! 


Yakutat Bay என்ற இடத்தில் இருந்து பார்த்தால் நல்லாத் தெரியுமாம்! அங்கேதான் போய்க்கிட்டு இருக்கோம்.  நாம் பொதுவா மிருகங்கள் குட்டி ஈனுவதைத்தானே Calving னு சொல்றோம். க்ளேஸியர் ஐஸ் பாறைகள் உடைஞ்சு விழுவதையும்  Calving னே சொல்றாங்கன்னு இப்பதான் எனக்குத் தெரிஞ்சது !
பொதுவா க்ளேஸியர் ரெண்டு மலைகளுக்கிடையில் இருக்கும் இடை வெளியில் பனி விழுந்து விழுந்து அப்படியே கெட்டிப்பட்டு உறைஞ்சுபோய்க்கிடக்கும்.  ரெண்டு மலை உச்சிகளுமே கூட சிலசமயம் பனியில் மறைஞ்சு போய் ஒரே பெரிய ஐஸ் வெளியாகவும் இருக்கும். எங்க நியூஸி தெற்குத்தீவில்  ஏறக்கொறைய  மூவாயிரத்து நூறு க்ளேஸியர்கள் இருக்குன்னு கணக்கு சொல்றாங்க. எல்லாம் சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில்தான்.   இவற்றில்  ரொம்பப் பெருசுன்னா டாஸ்மன் க்ளேஸியர்தான்,  இருபத்திமூணு கிமீ !  ஆனால் இவைகளைப் பார்க்கணுமுன்னா  ஹெலிகாப்டரில் போய்ப் பார்க்கலாம்.


நம்மூர்கிட்டேயும் ரெண்டு க்ளேஸியர்ஸ் இருக்கு. ஃபாக்ஸ் , ஃப்ரான்ஸ் ஜோஸஃப்னு பெயர். ஃபாக்ஸ்  கொஞ்சம் பெருசு.  உள்ளே தள்ளி இருக்கு.  மற்றது சின்னது... ரோடுக்குப் பக்கமே இருந்தது.  இங்கே வந்த புதுசுலே ஊர் சுத்திப்பார்க்கப் போனப்ப.... சாலையில் இருந்து ஒரு ஒன்னரைக் கிமீ தூரத்துலேயே பார்த்துக் கிட்டக்கயும் நடந்து  போயிருக்கோம்.  இப்ப ஒரு ஏழரை வருஷத்துக்கு முன்னே. அண்ணனும் அண்ணியும் நியூஸி வந்தப்ப, அவுங்களைக் கூட்டிக்கிட்டுத் தெற்குத்தீவு சுத்தப்போனப்ப..... க்ளேஸியர் ரொம்பப் பின்னாலே போயிருந்துச்சு.  பக்கத்துலே இருக்கும் காட்டுக்குள்  ரொம்ப தூரம் நடந்தபிறகுதான் கண்ணுலேயே பட்டது.   பொதுவா ஐஸ் கரையக்கரைய  பின்வாங்கிப்போயிரும்.  Global Warming தான் காரணமுன்னு சொல்றாங்க.  

ஒரு முறை  ஒரு பயணத்தில் இப்படி நதியில் விழுந்திருந்த பெரிய பெரிய ஐஸ் கட்டிகள், மிதந்து போகும்போது,  எடுத்து  ஒரு பாத்திரத்தில் வச்சு, அது தானே உருகியதும் வடிகட்டிக் குடிச்சோம்.  நல்ல சுவையான நன்நீர் !


இங்கே என்னன்னா....  க்ளேஸியர் வளர்ந்துக்கிட்டே இருக்காம். கடலை ஒட்டியே இருப்பதால் ஓரளவுக்குமேல் கனம் தாங்காமல் பெயர்ந்து தொப் தொப்புன்னு  தண்ணீரில் விழுந்துக்கிட்டே இருக்குதுங்க 'குட்டிகள்!'

நேத்து ராத்ரி நியூஸ்லெட்டெர் வந்தப்பவே மறுநாள் க்ளேஸியர்னு தெரிஞ்சுருச்சு. ஹப்பர்ட் க்ளேஸியர்னு பெயர். Habbard Glacier .  ராத்ரி ஒன்பதுக்குக் கிளம்பி, மறுநாள் காலை ஒரு ஒன்பது, ஒன்பதரை மணிக்கு  Yakutat Bay வந்துருவோமாம். 

காலை எட்டு முதலே நம்ம நேச்சுரலிஸ்ட் Milos Radakovich (ரெண்டு நாட்கள் தியேட்டரில் ஃபயர் & ஐஸ், அலாஸ்கா அனிமல்ஸ்னு லெக்ச்சர் கொடுத்தாரே அவர்தான் ) ப்ரிட்ஜ்லே இருந்து அக்கம்பக்க இயற்கைச் சூழலைப் பற்றி நேரடியாக காமென்ட்ரி கொடுப்பாராம். நாம்  கப்பல் டிவி மூலம்   & கப்பலுக்குள்ளே இருக்கும் பொதுவான இடங்களில்  ஸ்பீக்கர் மூலம் கேட்டுக்கணும். காட்டுப்பகுதிகளில்  US Forest Service Noise Regulations இருப்பதால் மொட்டை மாடியில்  & பால்கனி ஏரியாவில்  ஒலிபரப்ப மாட்டாங்க.

கடல் & ஐஸ்  நிலமையைப் பொறுத்து, நம்ம கப்பலே அப்ரதிக்ஷணம் பண்ணி 360 டிகிரி சுத்துமாம். நாம் எல்லோரும் கப்பலுக்குள்ளே இருந்தே  க்ளேஸியரைக் கண்டு களிக்க முடியும்னு கப்பல் கேப்டன்  நியூஸ் லெட்டரில் குறிப்பிட்டு இருந்தார். 



சீக்கிரமா ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டால்  மொட்டை மாடியில் நின்னு ரஸிக்கலாமுன்னு  ஓஷன்வ்யூ கேஃபேக்குப் போனோம்.  இன்றைய ஸ்பெஷலா waffle , pan cake,  Maple Syrup னு இருந்துச்சு. நான் கஞ்சியை மறக்கலை. நம்மவர், போய் டீ போட்டுக் கொண்டுவந்தார். க்ரான்பெர்ரி டீயாம்.... ப்ச்..... கையில் எடுத்துக்கிட்டுப்போய்,   நம்ம பால்கனியிலே உக்கார்ந்து குடிச்சோம். மகளுடைய நேயர் விருப்பம் டெக்கில் உக்கார்ந்து டீ குடிக்கணுமாம். ஆச்சு !

திரும்ப மொட்டைமாடி, கப்பலுக்குள்ளேயே கொஞ்சம் நடை, பால்கனின்னே பொழுது போனது.  மழைவேற வந்துட்டதால்..... மொட்டை மாடி போதுமுன்னு கீழே வந்துட்டோம். 


கப்பல் ஃபொட்டாக்ராஃபர், அங்கங்கே எல்லா பயணிகளையும்  க்ளிக்கிட்டு இருக்கார்.  நல்ல படங்களை நமக்கு மெயிலில் அனுப்புவாங்களாம். நாம் ப்ரிண்ட் போட்டு வாங்கிக்கலாமாம்.  என்னோட செல்லையும் கொடுத்து  நாலு க்ளிக் எடுக்கச் சொன்னேன்.  மும்பை இளைஞர்தான்.  பச்சை ஸ்க்ரீன் போட்ட  ஸ்டூடியோவும்  இருக்கு. அங்கே நமக்கு  விருப்பமுள்ள அட்வெஞ்சர்  ஆக்டிவிடி படங்களும் எடுத்துக்கலாமாம். எத்தனையெத்தனை சின்னச் சின்ன பிஸினஸ் பாருங்க ! 

க்ளேஸியரைக் கிட்டக்கப்போய்ப் பார்க்க Yakutat Bay யில் இருந்து  தனிப்பட்ட படகுகள் இயங்குவதால்  பயணிகள்  படகுகள் நடமாட்டம்  இருக்கு !  


பெரிய பெரிய ஐஸ் பாறைகள் மிதந்து போய்க்கிட்டே இருக்கு. அங்கங்கே கடலில் இருக்கும் பாறைகளில் ஒட்டிப்பிடிச்சு உக்கார்ந்தும் இருக்கு. நம் கண்ணுக்குத் தெரிவதைப்போல் மூணு மடங்கு  அளவில் பெருசு தண்ணீருக்கடியில் இருக்குமாம்!  









எழுபத்தியாறு மைல் நீளப் பனிச்சுவர் இருந்தாலும், நடுவிலே ஒரு ஆறுமைலில் தான்  Calving கூடுதலாம்.  லேபர் வார்டு :-)  திடீர்னு பெரிய சப்தம் கேட்டதும், எங்கேன்னு பார்வையை ஓட்டினாலும்....   ஐஸ் பாறை விழுந்த வேகத்தில்  கடல் தண்ணீர் மேல்நோக்கித் தெறிப்பதுதான் புகை போலத்  தெரியுது. ஆறு மைல் நீளத்தில் , சம்பவம்  எங்கே எப்போன்னு பார்த்துக் கெமெராவைத் தயார் நிலையில் வைப்பது மஹாகஷ்டம் !
எப்படித்தான் குட்டி பொறக்குதுன்னு பார்க்க யூட்யூபை தஞ்சம் அடைந்தேன்.  ஒரு புண்ணியவான் பதிவு செஞ்சுருக்கார். அவருக்கு நம் நன்றி !

https://youtube.com/shorts/w4KYjzWQKw4?si=VzNY04KeCjZuPDKC

இவ்ளோ பெரிய க்ளேஸியரான்னு மலைப்பு வந்தது உண்மை. ஆனால் இதுக்கும் மேலே இன்னும்  உலகிலேயே பெருசா ஒன்னும் இருக்கு என்பதும், அது அண்ட்டார்ட்டிக்காவில் (நம்ம ஊட்டாண்டைதான் ! ) இருக்கும் Lambert Glacier, 250 மைல் நீளம்  என்பதையும் ஒரு தகவலாச் சொல்லிக்கறேன். 

 இப்ப அன்ட்டார்ட்டிக்கா க்ரூய்ஸ் கூட இருக்கு. முந்தியெல்லாம்  அந்தப்பக்கம் போக ஹெல்த் & ஃபிட்னெஸ்  கண்டிஷன் எல்லாம் சரியா இருக்கான்னு பார்ப்பாங்க.  இப்ப க்ரூய்ஸ் என்பதால்  கப்பலுக்குள் இருந்தே பார்க்க முடியுமுன்னு நினைக்கறேன். பேசாம நம்ம பக்கெட் லிஸ்ட்லே சேர்த்துறவேண்டியதுதான் !
கடல் தண்ணி முழுக்கக் கட்டிகட்டியா ஐஸ் மிதக்குது .  


பகல் ஒன்னரை ஆனதும் லஞ்சு. உருளை சிப்ஸ் கிடைச்சது. கூடவே  பழங்களும் !   பழக்கடையில்  இன்றைக்கு லைச்சி பழங்கள் வச்சுருந்தாங்க. 






பீட்ஸாவுக்கான மாவு ரெடியா இருக்கு, இன்னொரு ஸ்டாலில் !  

ரெண்டரை மணிக்குக் கப்பல் கிளம்பிருச்சு.      

தொடரும்........... :-)

8 comments:

said...

அந்தாட்டிக்காவில் 250 மைல் நீளமானது என்பது ஆச்சரியம் தருகிறது.

மலை போன்ற இரு பனிப்பாறைகள் பின்னணியில் இருக்க நீங்கள் நின்று எடுத்த படம் சூப்பர் .

பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்து வருவது நேரடியாக காண த்ரில்லாக இருந்திருக்கும். படத்திலும் அழகாக இருக்கிறது.

said...

நல்ல தகவல். பதிவும் சுவையாக இருந்தது. ஆமாம் இவ்வளவு பழமா தர்றாங்க?

said...

ஆஹா.... படங்கள் மனதை மயக்குகின்றன. மிதக்கும் பெரிய பெரிய ஐஸ் கட்டிகள் - மலைப்பு.

தகவல்கள் அனைத்தும் நன்று. தொடர்கிறேன்.

said...

வாங்க மாதேவி,

ரசித்தமைக்கு நன்றிப்பா!

இயற்கை அழகுக்கு மிஞ்சியது வேறுண்டோ !!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

எந்த உணவுக்குமே லிமிட் எல்லாம் கிடையாது. எவ்வளவு வேணுமோ எடுத்துக்கலாம். ஆனாலும் பலர் ஏராளமானவைகளை அள்ளிக்கொண்டு வந்து, முக்கால்வாசியையும் மீதம் வைத்துவிட்டுப்போய் வேறு தட்டெடுத்து வேறு வகைகளைக் கொண்டு வந்து வீணாக்கறதைப் பார்த்தால் எனக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கும். தேவைப்படும் அளவைமட்டும் கொண்டுவந்தால் ஆகாதா ? ப்ச்.....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பனிப்பாறைகள் என்றுதான் சொல்ல வேணும்..... !!! பிரமிப்புதான் எனக்கும் !

said...

கப்பல்ல பூ எப்படி கிடைச்சது?

said...

வாங்க Jayakumar Chandrasekaran,

கப்பலில் பெரியமரமே இருக்கே ! ஆனால் பூ நான் கொண்டுபோனேன் .