பத்தாவது மாடியில் நூலகம் இருக்குன்னு போய் எட்டிப்பார்த்தோம். இருக்கு ! இதுக்கு நேர் கீழே ஒன்பதாவது மாடியில் கார்ட் ரூம். எனக்குக் கார்ட் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை. எங்க அம்மம்மாவின் வளர்ப்பில் சீட்டு விளையாடுவது மகா மட்டம் !
கொஞ்ச நேரம் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை மேலாக நோட்டம் விட்டதும் நாலு க்ளிக்ஸ் ஆச்சு. (அதானே நமக்கு புத்தகம் முக்கியமா இல்லை ஃபொட்டோ முக்கியமா ? )அப்புறம் நாலாவது மாடியில் கெஸீனோ ! ஆஹா.... ரொம்ப நாளாச்சுல்லெ விளையாடி? விடப்டாது. (அம்மம்மா காலத்தில் கெஸீனோ எல்லாம் கேள்விப்பட்டுருக்கவே மாட்டாங்க தானே ? ) எந்த மெஷீனுமே வேலை செய்யாதபடி நிப்பாட்டிவச்சுருக்காங்க. கப்பல் நிக்கும்போது மெஷீனும் நின்னுரும் போல ! ச்சும்மா உள்ளே போய் நாலைஞ்சு க்ளிக்ஸ்.
அதைத்தாண்டிப்போனால் கடைத்தெரு !!!! என்ன விக்கறாங்கன்னு தெரியலை. எல்லாம் மூடியிருக்கு. அப்புறம் ஒரு பெரிய ஹால் Quasar னு பெயராம். இந்தப்பெயருக்கு என்ன பொருள்ன்னா ரொம்ப விஞ்ஞான விளக்கம் எல்லாம் இல்லாம அண்டவெளியில் இருக்கும் ஒளிமிகுந்த இடமுன்னு சொல்லலாம். இங்கே ஏகப்பட்ட விளக்குகளோடு ஜொலிக்குது இந்த இடம்.
ஒரு பக்கத்துலே பெரிய கப் போல ஒன்னு. டிஸ்னிலேண்ட்லே கப் & சாஸர் போல இருக்கும் ரைடில் போவோமே அந்தமாதிரி. இதுக்குள்ளே DJ உக்காந்து பாட்டுகள் போட சனம் ஆடும் டான்ஸ் ஃப்ளோர் ! இளவயசுக்காரர்களுக்கான retro-chic nightclub. ஒரு பக்கமா இருக்கைகள் வேற ! பார் மட்டுமில்லாம கப்பல் பூரா எல்லா மாடிகளிலும் அங்கங்கே பணியாளர்கள் குடிக்குன்னே இருக்காங்க. ஓடி ஓடி உபசாரம்! கையிலே காசு கூட உடனடித்தேவை இல்லை. நம்ம அறைச்சாவியான கார்டு மட்டும் போதும். எது வேணுமுன்னாலும் எங்கே வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம். கடைசி நாள் கணக்குத் தீர்த்தால் போதும்! நல்லவேளை, ராத்ரி 12 மணிக்கு மேல்தான் இதெல்லாம். ஆனாலும் நம்மவரை ஒரு ஆட்டம் போடச் சொன்னேன் :-)
கட்டக் கடைசியில் தியேட்டர். மேடையைச் சுத்தி அரை வட்டமா இருக்கைகள் ! ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் இங்கே நடக்குமாம். இன்றைக்கு மேஜிக் ஷோ இருக்குன்னாங்க. தியேட்டருக்கு ரெண்டு மாடி & ஒவ்வொரு மாடிக்கும் ரெண்டு வாசல்கள் !
இப்ப இதே மாடியில் எதிர்ப்புறம் போறோம். Quasar க்கு நேரெதிரா இந்தப்பக்கம் செலிப்ரட்டி சென்ட்ரல் னு சினிமா தியேட்டர். ஒருநாள் படம் பார்க்கணும். இதைக்கடந்து வர கெஸீனோக்குள்ளேதான் போகணும். அப்புறம் ரெண்டு பக்கங்களும் குடிக்கு நேர்ந்துவிட்டுருக்காங்க. ரொம்ப ரிலாக்ஸா உக்கார்ந்து மதுப்ரியர்கள் மகிழலாம்.
அஞ்சாவது மாடியிலும் கடைகள்தான். நகை, நட்டு, ஆர்ட். வாட்ச், துணிமணிகள் இத்யாதி. கடைகள் எல்லாமே மூடித்தான் இருக்கு. கண்ணாடிக் கதவு மூலம் பளிச் ! மணி மூணேகாலாச்சுன்னு திரும்ப நம்ம வீட்டுக்குப் போனோம். இனி எட்டுநாளைக்கு இதுதான் நம்ம வீடு ! செக்கின் செஞ்ச பெட்டிகள் வந்துருந்தன. நம்ம அறைக்குண்டான சேவை செய்யும் பணியாளர் வந்து அறிமுகப்படுத்திக்கிட்டார். அவருடைய ஃபோன் நம்பருள்ள கார்டு கொடுத்து, தேவைப்படும்போது கூப்பிடச் சொன்னார்.
வியட்நாம்காரராம். கப்பல் எப்போ புறப்படும்னு கேட்டேன். நாலரைக்காம். மூணரை வரை பயணிகள் வந்து சேர அனுமதி உண்டு. சிலர் அப்படிக் கடைசி நேரத்தில் வருவதும் உண்டாம். (நாம்தான் ஊருக்கு முந்தி வந்துருக்கோம்! )
வெளியே போகும்போது வெராந்தாக் கதவை பூட்டிட்டு போகணும் என்றார். கப்பல் திருடன் இருக்கான் போல ! பால்கனியை, இங்கே வெராந்தான்னு சொல்றாங்க. அங்கே உக்கார்ந்து வலைமேய்வதும் வேடிக்கை பார்ப்பதுமாப் பொழுதுபோச்சு. கப்பலையும் வேடிக்கை பார்க்க வந்துருக்கும் மக்களும் பரபரப்பா இருக்காங்க கனடா ப்ளேஸ் கட்டடத்தின் பின்பக்கம்.
நாலேகாலுக்கு ஊதிட்டான் சங்கு ! வெராந்தாவில் போய் நின்னோம். எஞ்சின் ஓடுதுபோல..... தண்ணீருக்குள்ளே வட்டவட்டமாக் கோலம் போடுது. ப்ரொப்பல்லர் சுத்துதோ ! சரியா நாலரைக்கு மெதுவாக நகருது ..... எதுத்த கப்பலில் இருந்து வேடிக்கை பார்க்கும் மக்களுக்குக் கையாட்டி பை பை சொன்னதுதான் மனநிறைவு!
ரிவர்ஸ்லே போகுதோன்னு பார்த்தால் இல்லை. ரிவர்ஸ்லேதான் வந்து நின்னுருக்கு. எனக்குத்தான் தலையும் காலும் புரியலை. உண்மையான துறைமுகம் இப்பத்தெரியுது. மஞ்சள் குவியல்கள் அப்படியே திறந்துகிடக்கு. ஸல்ஃபர் பவுடரோ ? அடடா... காத்தடிக்கும்போது பறந்துறாதா ? மழை வந்தால் கரைஞ்சு போகாதா ? என் கவலை எனக்கு . வரவர எதுக்குத்தான் கவலைப்படறதுன்னு போச்சு.
இது பவுடர் இல்லையாம். முக்கியமாத் தண்ணீரில் கரையாதாம் ! இங்கிருந்து ஏற்றுமதியாகுது ! பல்க் லோடிங் செய்வாங்களா என்ன ?
கரையில் சின்னதாக் கோவில் மாதிரி ஒன்னு....கடலம்மாவாக இருக்குமோ ?
லயன் ப்ரிட்ஜைத் தாண்டிப்போகணும். இன்னொரு கவலை வந்துச்சு இப்போ..... ப்ரிஜ்லே இடிக்குமோ ? அதெல்லாம் இருக்காது. எவ்ளோ வருஷமா கப்பல் போய்வருது. இன்னிக்கு இடிச்சுருமா என்ன ? ஆனாலும் பாலத்தைக் கடந்து அந்தாண்டை போறவரை அண்ணாந்து பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன்.
ரெகுலர் பீச் கண்ணில் பட்டது. சனம் ஞாயித்துக்கிழமையை அனுபவிக்குது !
ஆச்சு இனி கரை எல்லாம் இல்லை.... வழியனுப்ப வந்த துறைமுகப்படகு, டாட்டா சொல்லிட்டுத் திரும்பிருச்சு.
தொடரும்......... :-)
8 comments:
என்ன ஆச்சர்யம்... உங்களிடமிருந்து இவ்வளவு சுருக்கமாக ஒரு பதிவா?
அருமை நன்றி
பதிவு செவ்வாக்கிழமை வந்திருக்கு ...
வாங்க ஸ்ரீராம்,
ஹாஹா.... ரெண்டு வீடியோ க்ளிப்ஸ் போட்டதால் பதிவின் நீளம் குறைஞ்சுபோச்சு :-)
வாங்க விஸ்வநாத்,
செவ்வாய்க்கிழமை, நம்ம யூ ட்யூப் கணக்குலே போய் ஒரு க்ளிப் போட்டு சரியா வருதான்னு பார்த்தேன்.
அவுங்களுக்கும் எனக்கும் வாய்க்காத்தகராறு ஆகிப்போச்சு. 2017 உலகக்கோப்பை க்ரிக்கெட் நம்மூர்லே நடந்துச்சே அப்ப திறப்புவிழா வீடியோ க்ளிப் நான் எடுத்தது போட்டுருந்தேன். அது காப்பிரைட் வயலண்ட்ன்னு குற்றம் சாட்டுனாங்க. இத்தனைக்கும் நானே அங்கே போய், நம்ம கெமராவில் எடுத்தது. இது அநியாயக் குற்றச்சாட்டுதானே ?
அதை அவுங்களே டிலீட் செஞ்சுட்டு என்னாண்டை, இன்னும் ரெண்டு குற்றம் ஆச்சுன்னா உன் அக்கவுண்டை மூடுவோம்னு சொன்னது எனக்கு எரிச்சல். போடா போன்னு அதுக்கப்புறம் ஒன்னுமே போடலை. ஆச்சு ஏழு வருஷம்.
இப்ப என்னவோ தோணிப்போய், நம்ம அக்கவுண்ட் என்னாச்சுன்னு போட்டுப் பார்த்ததுதான். அது வேலை செஞ்சதுன்னு புதன் பதிவை அதுலேயே சேர்த்தேன். அதான் செவ்வாக்கிழமை காமிக்குது.
படங்களும் காணொளிகளும் நன்று. பயணம் - கப்பல் பயணம் தொடங்கிவிட்டது. சிறப்பு. தொடர்கிறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
இனி ஏழு நாட்களுக்குக் கப்பல்தான். விடுவதில்லை உங்களையெல்லாம் :-)
கப்பல் புறப்பட்டாகிவிட்டது
.காணொளிகள் நன்றாக உள்ளன.
வாங்க மாதேவி,
ரசனைக்கு நன்றி !
Post a Comment