Wednesday, July 10, 2024

ராதே ராதே.... க்ருஷ்ணா க்ருஷ்ணா.... (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 13 )

உச்சிகால பூஜை ஆரம்பிக்கவும் நாம் கோவிலுக்குள் நுழையவும் சரியாக இருக்கு ! சந்நிதி திரை விலகி ஒரே பளிச் ! நல்ல நீளமான ஹால். உள்ளே நுழையும்போதே சந்நிதிக்கு நேரெதிரா ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா அவர்களின் உருவச் சிலை.
சந்நிதியில் நடுவில்  க்ருஷ்ணனும் ராதையும்  !   நமக்கு வலப்பக்கம் புரி ஜகந்நாத், பல்ராம் & சுபத்ரா. இடப்பக்கம் சைதன்யா மஹாப்ரபு & நித்யானந்தா !  மேடையில் தளதளன்னு நான் ! (ஹா .........என்னொரு அஹம்பாவம்)


சங்கநாதம் முழங்க,  பூஜை ஆரம்பிச்சது. இங்கே நம்மூர் ஹரே க்ருஷ்ணா கோவிலில் நடக்கும் அதே வகை & அதே வரிசையில்தான். உலகமெங்கும் இருக்கும் இஸ்கான் கோவில்களில்  வழிபாட்டு முறைகள் எல்லாம் ஒன்னுபோலத்தான், இல்லையோ ? 
ஆனால் சந்நிதியில் நடுநாயகமாக இருக்கும் மூலவர்கள்தான் நாட்டுக்குநாடு மாறுபடறாங்க போல !  நம்மூரில் கௌரவ்சந்தா என்னும் மஹாப்ரபு ஸ்ரீ சைதன்யாவும், நித்யானந்தரும்! இங்கேயோ  க்ருஷ்ணனும் ராதையும்  .
சந்நிதி மேடையில் ரெண்டு பித்தளைப் பசுக்கள்! கண்டதும் காதல் கொண்டேன். 







கோவிலின் விதானமும், தூண்களும்,  சுவர் ஓரமா ரெண்டு பக்கங்களிலும் இருக்கும் அலங்கார வேலைப்பாடும், ஜன்னல் கண்ணாடிகளில்  வரைஞ்சு வண்ணச் சித்திரங்களும்  சூப்பர் ! 


உச்சிகால ஆரத்தி முடிஞ்சதும் சடாரி ஸேவித்தோம்.  இது இப்போ சில வருஷங்களாத்தான் நம்மூரிலும் ஆரம்பிச்சுருக்கு.  ஒரு  பத்து நிமிட் போல உக்கார்ந்து தியானம் செஞ்சுட்டுக் கிளம்பினோம்.
கோவில் வாசலுக்கு எதுத்தாப்ல  சைதன்ய மஹாப்ரபுவின் ஒன்பது மீட்டர் உயரச்சிலை, ஆனந்தமான  நிலையில் தோட்டத்தில் !  1985 இல் நிர்மாணிச்சதாம். (நம்மூரில் சின்னதா ஒரு சிலை போனவருஷம் வச்சாங்க) இந்தக் கோவிலும் எங்க  ஹரேக்ருஷ்ணாவைவிட ஒன்பது வருஷம் மூத்தது. 1978 இல் கட்டியிருக்காங்க.  
இப்பப் புதுசா ஒரு கோவில் கட்டும் திட்டம் இருக்கு. போர்டு வச்சுருக்காங்க.  கோவிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன மோஹனா ன்னு பெயர்.  அஃபிஸியலா எட்டு, அதிலும் பட்டமகிஷி ருக்மிணி எல்லோரையும்  தள்ளி நிக்கவச்சுட்டாள் பாருங்க இந்த ராதை ! நம்ம மதுராவில் கூட  எங்கே பார்த்தாலும் ராதே ராதேதான், மரங்கள் உட்பட !
வளாகத்துக்குள்ளேயே கோவில் ரெஸ்ட்டாரண்ட் 'கோவிந்தா' இருக்கு.  இந்தாண்டை   ஸன்ரூஃப் போட்ட  இடத்தில் இன்றைய ப்ரஸாதங்கள் , பக்தர்களுக்காக வச்சுருக்காங்க.  நமக்குப் பசி இல்லை. இட்லி உக்கார்ந்துருக்கு.  சின்னத்துண்டு உருளை ரோஸ்ட் எடுத்து ரெண்டாப் பிய்ச்சு வாயில் போட்டுக்கிட்டோம். கோவில் ப்ரஸாதத்தைத் துளியாவது எடுத்துக்கணும்! ஆச்சு !

எல்லாஞ்சரி, இப்ப  இங்கிருந்து எப்படிப் போகப்போறோம் ? இதுவரை இருந்த ஆனந்தம் எல்லாம் சட்னு போயே போயிருச்சு. அங்கிருந்த ஒருவரிடம் விசாரிச்சால், தெருவிலே பஸ்  ஸ்டாப் இருக்குன்னார்.  மெல்ல ஏற்றத்தில்  மூச்சு வாங்க ஏறினேன்.   தெருவில் எந்தப்பக்கத்து பஸ் ஸ்டாப்னு தெரியலையேன்னு  பார்க்கும்போது,  நாம் வழி விசாரிச்ச இளைஞரே  வந்துட்டார். கையில் ரெண்டு பேக் பிரஸாதம்.  நானும் ஸ்டேஷந்தான் போறேன். எங்கூட வாங்கன்னார்.  

கொஞ்ச நேரத்தில் பஸ் வந்துருச்சு. டிக்கெட் வாங்கக் காசை நீட்டினால்..... டிக்கெட் இல்லைன்னார் ஓட்டுநர்.  அட !!!! ரெயில்வேயே பஸ் விடுதாமே!  பஸ்ஸில் நல்ல கூட்டம்.  இளைஞரும் நம் பக்கத்துலே  உக்கார்ந்தார். 

சின்னப்பேச்சில் தெரிஞ்சது, ஹரியானா மாநிலமாம். படிக்க வந்துருக்காராம். பக்கத்து ஊரில் ஜாகை.  இங்கே வான்கூவரில் உடன்பிறப்பு வேலையில் இருக்கார். அதனால் வாரா வாரம் இங்கே வந்து போறாராம். லஞ்சு பேக் கொண்டுபோய் அண்ணனுடன் சாப்பிடணுமாம்.  சாயந்திரமா பஸ் பிடிச்சுத் தன் இடத்துக்குப் போவாராம். ரெண்டு மணி நேரம் பஸ் பயணமாம் !    ஸப் பாத், ஹிந்திமே ஹுவா தா               (சின்னப்பேச்சா இது ? !!!)


ஒரு இடத்தில் வண்டி நின்னதும்  எல்லோருமே இறங்கினாங்க. நாங்களும்தான். ட்ரெய்னுக்குப் போற மக்களாம். நாங்களும் கூட்டத்தைப் பின் தொடந்தோம்..... கட்டட ஃபோயருக்குள் நுழைஞ்சதும்  கூடவே வந்த ஹரியானாக்காரரைக் காணோம். பக்கத்துலே இருக்கும் படிகளில் தாவிப்போய்க்கிட்டு இருக்கார்.

டிக்கெட்டிங் மெஷீன் இருக்கேன்னு அங்கே போய், நின்னு எந்த இடத்துக்கு  டிக்கெட் எடுக்கணுமுன்னு தெரியாம  முழிக்கறோம்.  வாயிலே இருக்கு வழி இல்லையோ ?  ஆனால் இங்கே  வாய் மட்டும்தான்...... ரெண்டு மூணுபேரைக் கேட்டால்  டிக்கெட் இல்லைன்னு கையை ஆட்டிட்டுப் படிகளில் ஏறிப்போறாங்க. 

என்னடா க்ருஷ்ணா... இப்படி நிக்க வச்சுட்டேயே.....  குறுகலான படிகளில் ஏறி மேலே போனால் ப்ளாட்ஃபார்ம்.  எதிரில் இன்னொன்னு.   வரப்போகும் ரயில்களுக்கு   ரெண்டு பக்கமும் கூட்டம். 


டிக்கெட் எடுக்க முடியலையே.... 'நாமும்' வித்தௌட் லே  போறோமோ.... அதுவும் எந்தப்பக்கத்துலே போகணும்னு தெரியலையேன்னு ஒரே யோசனை..... என்னடா க்ருஷ்ணா....

அங்கே இருந்த  சின்னச் சின்னக்கூட்டத்தில் இருந்த ஒரு பொண்ணு,  'ஆண்ட்டி, ஆப் கஹாங் ஜானாச் சாஹியே ? ' ன்னு கேட்டதும், அந்த விநாடி உண்டான மகிழ்ச்சியை எப்படிச் சொல்றதுன்னே தெரியலை ! 

இடத்தைச் சொன்னதும், நீங்க எதிர் ப்ளாட்ஃபார்முக்குப் போகணும் என்றதும், டிக்கெட் எங்கே வாங்கணும்னு கேட்டேன். என்னோடு வாங்கன்னு கிடுகிடுன்னு  படி இறங்கிப்போனாங்க. கூடவே நாங்களும் ஒட்டிக்கிட்டோம்.  அதே டிக்கெட் மெஷீந்தான்.  ரெண்டு டிக்கெட் எடுக்க உதவி செஞ்சாங்க.  அப்புறம்  எதிர்ப்பக்கம் போக அந்தாண்டை லிஃப்ட் இருக்குன்னு கூட்டிப்போனாங்க. 
நன்றி நன்றின்னு மனமாரச் சொல்லிட்டு, அப்பதான் அவுங்க பெயரை விசாரிச்சேன். புருவி !  (அப்படித்தான் நினைவு. ) மும்பைப்பொண்ணு. இங்கே படிக்க வந்துருக்காங்க. உடனே ஒரு க்ளிக். லிஃப்ட்லே நுழைஞ்சதும் பட்டனையும் தட்டிவிட்டுட்டு பை பை சொல்லிட்டு ஓடுனாங்க.  நாங்கே மேலே ப்ளாட்ஃபார்ம் போனதும் பார்த்தால்  அவுங்க போகும் வண்டி  நுழையுது !
க்ருஷ்ணா...........  கூப்பிட்ட குரலுக்கு ஆள் அனுப்பிட்டயேடா...... நல்லா இரு !



சில நிமிட்டில் நம்ம ரயிலும் வந்துருச்சு.  ஒரு இருபத்தியொரு நிமிட் பயணத்துலே  Burrard Station வந்திறங்கிட்டோம். நிம்மதி..... பொடிநடையில் ஹொட்டேலுக்குப் போறோம். வழியில் ஒரு சூப்பர்மார்கெட். தயிர் ஒன்னு வாங்கிக்கலாமுன்னு பார்த்தால்  விலையைப் பார்த்துட்டு நடுங்கிப்போனேன். ரொம்பச் சின்ன டப்பா.... !   பக்கத்து ஷெல்ஃபில்  500 கிராம்  வறுத்த முந்திரிப்பருப்பு  இதே விலையில் !  ( 50% டிஸ்கவுன்ட்  ) இதென்னடா இங்கே தயிருக்கு வந்த வாழ்வு ? முந்திரியே இருக்கட்டும் ! 
நெருங்கிய  தோழி, காலையில்தான் 'சின்னமன் பன்'  சாப்பிட்டயான்னு  கேட்டாங்க. அடடா....  அவுங்க திருப்தி முக்கியமில்லையோ !!  ரெண்டு பன்  வாங்கியாச்.  

அறைக்குப்போய் சேர்ந்ததும்  இன்றைக்கு நடந்தவைகளை அசைபோட்டு முடிச்சு, இங்கே வந்த முதல் நாள் வாங்கின மாம்பழத்தை உள்ளே தள்ளினோம்.     


அப்படியாவது கல் கரையாதா ? 

தொடரும்........ :-)


8 comments:

said...

படங்கள் சிறப்பு. நித்யானந்தா நித்யானந்தா என்றால் 'இங்கே எங்கே அவர்?' என்று பக்கென்றாகிறது!!!


கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது.. யார் வந்தது... குழந்தை வடிவிலே யார் வந்தது...

said...

அருமை நன்றி

said...

கோயில் வெகு அழகு. அனுபவங்கள் சிறப்பு. தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கடையில் ஆளே இல்லையேன்னு நினைச்சேன். கிருஷ்ணனே உங்களை அனுப்பிட்டான்.

said...

கிருஷ்ணர் ராதே, அழகாக இருக்கிறார்கள்.
வெங்கலப் பசு நல்ல உருவாக்கம் எனக்கும் பிடித்திருந்தது .

உதவிக்கு வந்த பெண் நன்றாக இருக்கட்டும்.
சிஷ்சை அழைத்த குரலுக்கு பெருமாள் வந்துவிடுகிறார். இப்படியே ஆகட்டும்.. வாழ்க நலமுடன்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

புதுக்கோவிலில் இன்னும் அழகான சிலைகள் இருக்கும் போல !!


சின்னச்சின்ன தேவைகளுக்கு மட்டும்தான் உடனடி உதவி !! பெருசுன்னா கண்டுக்கவே மாட்டார் :-)

said...

வாங்க ஸ்ரீராம்,

இவர் கைலாசத்துலே இருக்கார்னு கேள்வி. சீக்கிரம் விஸா கிடைச்சால் போய்ப் பார்க்கணும்.

அததுக்கு ரெடியா, கூப்பிட்டவுடன் ஆள் அனுப்பிடறான். கூடவே வந்துக்கிட்டு இருக்கான்தான், இல்லே ?