Monday, July 15, 2024

கப்பலேறியாச் ! (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 15 )

காலையில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் சுறுசுறுப்பு ! குளிச்சு முடிச்சுத்  தயாராகி, 'சின்னமன் பன்'னும் காஃபியுமா ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.   கூடவே அக்கம்பக்கம் நாலைஞ்சு க்ளிக்ஸூம்.  
அஞ்சு நிமிட் ரிலாக்ஸா உக்கார்ந்துட்டுக்  இப்போதைக்குக் கடைசி முறையா மொபைல் ஃபோன் கடமைகளை ஆற்றிட்டு, நேற்றே  அடுக்கி முடிச்சு, Tag போட்டுவச்சப் பொட்டிகளையும் நம்ம கேபின் பைகளையும்  எடுத்துக்கிட்டு அறையில் நம்ம பொருட்கள் ஏதாவது விட்டுப்போச்சான்னு செக் பண்ணிட்டுக் கிளம்பிக் கீழே வந்தாச்சு.
செக்கவுட் ஆனதும் வாசலில்  காத்திருக்கும் டாக்ஸியில் ஏறி  'க்ரூய்ஸ் டெர்மினல்' என்றதும்  ஆறாவது நிமிட்,  கனடா ப்ளேஸின் பேஸ்மென்டுக்குப் போய் நம்ம கப்பலுக்கான இடத்தில்  நிறுத்திட்டார் ஓட்டுநர்.  அங்கங்கே எந்தக் கப்பலுக்குன்னு பெயர் போட்டு  வச்சுருக்காங்க. அந்தந்தக் கப்பலுக்கான பணியாளர்கள் உடனுக்குடனே  நம்ம செக்கின் பெட்டிகளை எடுத்துக் கம்பிக்கூண்டில்  அடுக்கறாங்க.


நாம்  நாலாம் மாடி ஹாலுக்குப் போகணும்.  அங்கே  மெரிடைம் ம்யூஸியம் போல  ஒன்னு இருக்கு.  துறைமுகத்தின் ஏற்பாடு. கொஞ்சமா வேடிக்கை பார்த்துட்டு அடுத்த ஹாலுக்குப் போறோம்.  ஹாலா அது ?  அதுபாட்டுக்கு  நீண்டு போய்க்கிட்டே இருக்கு.  அங்கங்கே   பணியாளர்கள் நமக்கு வழிகாட்டிக்கிட்டே இருக்காங்க.




இன்றைக்கு ஒரே நாளில் மூணு கப்பல்கள் கிளம்புது. நம்ம கப்பல் கொஞ்சம் சின்னது.  மற்ற ரெண்டும் அஞ்சாயிரத்துக்கும் அதிகமான பயணிகளை  ஏத்திக்கும். பெரிய கூட்டம் வேணாமுன்னு நாம்தான் இதைத் தேர்வு செஞ்சோம். டிக்கெட், டாக்குமெண்ட் எல்லாம் பார்த்துட்டு, நம்ம கப்பல் பெயருள்ள துண்டுச்சீட்டு தந்தாங்க.  அங்கே  அடுத்த பகுதியில் போட்டு வச்சுருக்கும் இருக்கைகளில் காத்திருப்பு.  வெளிவராந்தாவில் பார்த்தால் ஒரு கப்பல் நிக்குது. ச்சும்மாப்போய் நாலு க்ளிக்ஸ்.


இப்ப இன்னொரு இடத்துக்கு நம்மைக் கூட்டிப்போறாங்க,  நம்ம கப்பலின் பெயர் போட்ட யூனிஃபார்ம் போட்டவங்க.  இப்பப் போற இடம் இமிகிரேஷன் பகுதி.  நாம் கனடாவிலிருந்து அமெரிகா போறோமே! பாஸ்போர்ட் விஸா எல்லாம் செக்பண்ணிட்டு ஸ்டாம்ப் அடிச்சுக் கொடுத்தவுடன், இன்னொரு ஹாலுக்குப்போறோம்.  கேபின் பைகள் எல்லாம் ஸ்கேன் பண்ணுமிடம். இங்கேயும்  ஒவ்வொரு கப்பல் பயணிகளுக்கும்  தனித்தனிப்பகுதி. கூட்டமான கூட்டம். கிட்டத்தட்ட பதிமூணாயிரம் சனம் பயணம் போகுது !

சடங்குகள் எல்லாம் பரபரன்னு ஒரு நாப்பது நிமிட்டில் முடிஞ்சுருச்சு. ச்சும்மாச் சொல்லக்கூடாது.....   ஏகப்பட்ட பணியாளர்கள்.....  90 %   மாணவர்கள். அதிலும் மாணவிகளே அதிகம்.  முக்கால் வாசியும்  இந்திய முகங்கள் !   இன்றைக்கு ஞாயிறுதானே..... பகுதி நேர வேலை செய்யறாங்களாம். 



சரிவுப்பாதையில் ஏறிப்போறோம். இப்பதான் நம்ம கப்பல் கண்ணில் படுது.  எனக்குக் கொஞ்சம் ப்ரமிப்பா இருந்தது உண்மை.  உள்ளே போகும் வரிசையில் சேர்ந்தாச். இங்கேயும் வழிகாட்டிகள் நிறைய!   நம்ம முறை வந்ததும் Seapass Cards தனித்தனியா இருவருக்கும் கொடுத்தாங்க .  நம்ம அறையைத் தேடிப்போனோம். எட்டாவது மாடி.  லிஃப்டில் போகும்போது  எதிர்ப்புறம் பார்த்தால்  கப்பலின் உள்ளே அந்தரத்தில் தொங்கும்  நிஜ மரம் !



அறை நல்லா நீட்டாவே(!) இருக்கு.அகலம் குறைவே தவிர நல்ல நீளமான அறைதான் 183 சதுர அடியாம்.  ஓடிப்போய் பால்கனி கதவைத்திறந்தேன். எதிரில்  எதுத்த  பில்டிங் (கப்பல்தான்) பார்க்கவே அட்டகாசமா இருக்கு !
இருக்கட்டும். நம்ம வீட்டைப் பார்க்கலாம். அறையின்  உள்ளே எப்படி இருக்குன்னு காமிக்க,  சில க்ளிக்ஸ் ஆனதும், நமக்காக அறையில் வச்சுருந்த தகவல்களைப் பார்த்தோம். கப்பலின் உள் நிலவரங்கள் &  இன்றைய நிகழ்ச்சிநிரல் ! 

எல்லாம் இருக்கட்டும். முதலில் நெட் கனெக்ஷன் கொடுக்கணும்.  இதுக்கு பயணம் முழுசும் பயன்படுத்த 200 யூ எஸ் டாலர் கட்டணும்.  நம்மூரிலேயே  டிக்கெட் புக் பண்ணும்போதே வாங்கினால் நம்மூர்க்காசு 200 டாலர். உடனே என்னுடைய மொபைல் ஃபோனுக்கு வாங்கினார் நம்மவர்.  ஐயோ.... ஒரு வாரத்துக்கு  இருநூறான்னு வழக்கம் போல் கூவ ஆரம்பிச்சேன்.  'உனக்கு வலை இல்லேன்னா  தாங்கமாட்டே....    நம்ம டாலரில் கட்டினால் கொஞ்சம் மலிவு'ன்னதும் கப்சுப்.  
இப்ப வைஃபை தேடினால்  கிடைக்கலை.  ஃபோனில்  பேசுனதும் நாலாவது மாடிக்குப்போகச் சொன்னாங்க. போனால்  சரிபண்ணிக் கொடுத்தாங்க.  ஃப்ளைட் மோட் போட்டுக்கணுமாம் ! அட ராமா..........   திரும்ப அறைக்கு வந்து உற்றார் உறவினருக்குக் கப்பல் ஏறியாச் என்ற சேதியைச் சொல்லிட்டு, அறையை மூடிட்டு சுத்திப்பார்க்கக் கிளம்பினோம்.  அப்படித்தான் சொல்லியிருக்கு.  ! முதலில்  மேலே கடைசி மாடி வரை போயிட்டு, அங்கிருந்து ஒவ்வொரு மாடியிலும் என்னன்னு பார்த்துக்கிட்டே வரலாம்தானே !
செலிப்ரிடி கம்பெனி நடத்தும் ஒன்பது கப்பல்களில் இது ஒன்னு. ஒவ்வொரு கப்பலுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருக்கு. நம்மது Celebrity Solstice .  வயசு பதினாறு !  ஆஹா.... ஸ்வீட் ஸிக்ஸ்டீனான்னு நினைக்கப்டாது. கப்பல்  மிடில் ஏஜ்லே இருக்கு.   கொஞ்சம் பழசு என்பதால்  எட்டு வருசத்துக்கு முன்னே  புதுப்பிச்சாங்களாம்.  2850 பயணிகளுக்கான  வசதிகளுடன் இருக்கு. மற்ற கப்பல்களில் அஞ்சாயிரத்துச் சொச்சம் பயணிகளாம்.  அதனால்தான்  இதை நாம் தெரிவு செஞ்சோம்.   இதில்  கப்பல் பணியில் மட்டும் 1250 பேர்.
பதினாலாவது வரைதான் லிஃப்ட் போகுது.  பதினைஞ்சு & பதினாறுக்குத் தனி லிஃப்ட். அங்கே போனால்   பாதி அளவில் மொட்டை மாடி. அங்கிருந்து படியேறி இன்னும் மேல்மாடிக்குப் போகலாம். 
மொட்டை மாடியில் இருந்து பார்க்கும்போது காட்சிகள் அபாரம். சுற்றுவட்டமும் சரி, கீழ்தளமும் சரி.
மேல்மாடிக்குப் படியேறிப்போனால் இயற்கைப்புல் தரை ! ஓய்வா உக்கார்ந்து பேசக் கூடாரங்கள் !  

கீழிறங்கி இடப்பகுதிக்குப்போனால் அது Oceanview Cafe !  நடுவில்  அங்கங்கே  தனித்தனி குடில்? ஸ்டால்கள் போல  இருக்கு. ரெண்டு பக்கங்களிலும் நீளமான டைனிங் ஹால்.  சொல்லிவச்சாப்போல கண் போனது இந்திய வகைக்கே ! 

சாதம், பருப்பு, இன்னும் சில கறி வகைகள்,  நீராவியில் வேகவச்சக்காய்கறிகள், பப்படம் இப்படி...ரைஸ், தால்னு இருக்கு எனக்கு இதுவே போதும்!

டிஸ்ஸர்ட் குடிலில்  கலர்க்கலரா என்னென்னவோ.....  ஐஸ்க்ரீம் குடிலில் ஏராளமான வகைகள்.

பஃபே வகை ரெஸ்ட்டாரண்ட் என்பதால் நமக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு நாமே 'இடம்புடிச்சு' உக்கார்ந்துக்கணும்.  விண்டோ ஸீட் வேணுமே !!!!

இதைத்தவிர இன்னுமொரு நாலைஞ்சு ரெஸ்ட்டாரண்டுகளும் உண்டு. அவை கொஞ்சம் ஹைக்ளாஸ் வகைகள். இடம் ரிஸர்வ் செஞ்சுக்கணும். ட்ரெஸ் கோட் அனுசரிக்கணும் இப்படி சில.....  முக்கியமா  தீர்த்தம், நான் வெஜ் ..... அதெல்லாம் எனக்குச் சரிப்படாது.  ஒரு நாள் போய்ப் பார்க்கணும்.

லஞ்சு முடிச்சுட்டு, திரும்ப மொட்டை மாடிக்குப்போய்  கொஞ்ச நேரம் வேடிக்கை.  கீழிறங்கி வரும்போது 'நமஸ்தே' ன்னு கைகூப்பினார் ஒருவர். பெயர் சஞ்சயா.  பாலித்தீவுக்காரர். தினமும் மூணுவேளை காயத்ரி சொல்லிப் பூஜை பண்ணுவாராம்.  
இங்கே வேலையில் நிறைய இந்தோநேஷியர்கள். வியட்நாமியர், பிலிப்பைன்ஸ்ஸர் இருக்காங்களாம். நல்லதுன்னோம்.  ஆனால் சீனர்கள் யாரும் இல்லைன்னு நினைக்கிறேன்.  பார்க்கலாம். இதுவரை கண்ணில் படலை.  இன்னைக்குத்தானே வந்துருக்கோம்.         

தொடரும்...... :-)

8 comments:

said...

சுவாரஸ்யமான தகவல்கள், படங்கள்.  பிரமிப்பாக இருக்கு.  உங்கள் சாக்கில் நானும் கப்பலில் வருவது போல...

said...

கப்பல் பயணம் தகவல்கள் அசத்தல்! எத்தனை வசதிகள் ஒரு கப்பலுக்குள்! பிரமிப்பு தான்.

படங்கள் - குறிப்பாக மேல் தளத்திலிருந்து எடுத்த படங்கள் செம!

said...

ஆஹா, அருமை நன்றி

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உள்ளேயே ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கு இன்னும் ! கொஞ்சம் கொஞ்சமா எடுத்துப் போடணும் !

எனக்கும் பிரமிப்புதான். பலமுறை ஃபெர்ரியில் போயிருந்தாலும் அதிகபட்சம் ஸ்நாக்ஸ் & ட்ரிங்ஸ் கவுன்ட்டர்ஸ்தான்.

ஒருமுறை ஹோவர்க்ராஃப்ட் லே இங்லாண்ட் டோவரில் இருந்து France Calais வரை போனோம். சுமார் 2 மணி நேரம்.

இப்போ ஏழு முழுநாட்கள் !

said...

வாங்க விஸ்வநாத்,

மிகவும் நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

நீங்க சொன்னதும் போய்ப்பார்த்தால் 511 கமெண்ட்ஸ் அவெய்ட்டிங்லே இருக்கு, பல வருஷங்களாக !!!! எப்படி இப்படின்னு தெரியலை.... மாப்பு ப்ளீஸ்

said...

கப்பல் பயணம் நன்றாக இருக்கிறது. கப்பலும் வசதியாக இருக்கிறது என்பதை படங்களும் உங்கள் எழுத்துகளும் காட்டுகிறது.
கப்பல் பயணம் சிறிய அளவில் போய் இருக்கிறேன். இதுவரை நீண்ட கப்பல் பயணம் போனதில்லை.

said...

வாங்க மாதேவி,

ஒரு நீண்டபயணம் கப்பலில் போய் வரத்தான் வேணும். வித்தியாசமான அனுபவமே !