Monday, July 22, 2024

அளவான ஆட்டம் .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 18 )

ராத்ரி சரியாத் தூக்கமில்லை. தொண்டையில் ஏதோ வலி.   காலையில் கொஞ்சம் லேட்டாத்தான் எழுந்தேன். சீக்கிரம் எழுந்தால்தான் எங்கே போகப்போறோம் ?  கப்பலுக்குள்ளேயே சுத்திவரவேண்டியதுதானே ! கடலும் மசமசன்னு இருக்கு!
ப்ரேக்ஃபாஸ்ட் அறைக்கே வரவழைக்கும் வசதி இருக்காம். அதுக்குண்டான கார்ட் வச்சுட்டுப் போயிருக்காங்க.  நமக்கு எப்பவும் சிம்பிள் ப்ரேக்ஃபாஸ்ட் தானே?  டோஸ்ட், ஜூஸ், டீ, பழங்கள்னு எழுதியிருந்தாராம், காலை ஒன்பது மணிக்குக் கொண்டு வரணும் என்ற குறிப்போடு.  முதல் முறை இந்த சேவைக்கு சார்ஜ் இல்லை. அடுத்துவரும் நாட்களுக்குத் தினமும் பத்து டாலர் என்ற கணக்கு. 

குளிச்சு முடிச்சு ரெடியான சமயம். ப்ரேக்ஃபாஸ்ட் வந்துருச்சு.  சாப்பிட உக்கார்ந்தால்.....  இருவரை ஒருவர் ஆக்கிட்டாங்க. ரெண்டுபேருக்குன்னு டிக் பண்ணினேன்னு சொல்றார் நம்மவர்.  ஆனால்.....  ஈருயிர் ஓருடலா நினைச்சுட்டாங்க போல.  

தொலையட்டுமுன்னு  பகிர்ந்து சாப்பிட்டோம். பேசாம 'பதினாலுக்குப்போய்' சாப்பிட்டுருக்கலாம்.  நேத்து ப்ரேக்ஃபாஸ்ட் மெனு என்னன்னு கேட்டுவச்சப்ப 'பாஜி'ன்னாங்க. அது என்னன்னு பார்க்கவாவது போயிருக்கலாம் .ப்ச்...    தொண்டை வலிக்காக முன்ஜாக்கிரதையாக் கொண்டுவந்த  மருந்தை எடுத்துக்கிட்டேன்.  எல்லாம் அந்த ஐஸ்க்ரீம் காரணம்னு பழியை அதன் மீது போட்டேன். 

 இன்றைய நிகழ்ச்சிகளில்  காலையிலேயே ஃபிட்னஸ் க்ளாஸ், யோகான்னு  ஏழு முதல் எட்டுவரை, நீச்சல் குளம் இருக்கும் பனிரெண்டாவது மாடியில் ! பதினாலில் ஜாகிங் போறவங்களுக்கு ஒரு  நீள்வட்டமான ட்ராக். 
மொட்டைமாடியில் இருக்கும் ஹாலில் கண்ணாடி உருக்கி ஊதும் ஸ்டூடியோ , ஒன்பது முதல் பதினொன்னு வரை பயிற்சி வகுப்பு.  இந்தக் கண்ணாடி உருக்கும் உலை சமாச்சரமெல்லாம்  நம்ம வெனிஸ்  பயணத்திலும்,  நியூஸியில்   நெல்ஸன் என்ற ஊரில் இருக்கும் ஸ்டூடியோவிலும் பார்த்துருக்கோம் என்றதால் அவ்வளவாக விருப்பம் இல்லை. இப்ப நம்மூரிலேயே ஒரு ஸ்டூடியோ வந்துருக்கு.

கப்பல் சனத்தை பிஸியா வச்சுக்க ஒவ்வொரு மணிக்கும் ஏதாச்சும் நடந்துக்கிட்டே இருக்கு. அந்தந்த ஆர்வம் இருப்பவர்கள்  கலந்துக்கலாம் !
பத்தரைக்கப்புறம்தான் லேசா வெயில் வந்தது.  

பத்தேகால் மணிக்கு,  இருந்த Wild life of Alaska & Pacific Northwest with Milo  என்ற நிகழ்ச்சி மட்டும்  ஏதோ காரணத்தால் பதினோரு மணிக்குத் தள்ளிவச்சுருந்தாங்க. அதுக்குப் போகணும்னு கிளம்பினோம்.

போற போக்கிலேயே ஆர்ட் கேலரியில் ஒரு பார்வை.  படங்கள் வாங்கினால் அவுங்களே  நம்ம வீட்டுக்கு அனுப்பிருவாங்களாம்.  அதுக்கு எவ்வளவு சார்ஜ்னு விசாரிக்கணும். 

தியேட்டரில்  சனம் கூடத்தொடங்கிருச்சு. நம்மைப்போல் எத்தனை இயற்கை உபாசிகள் பாருங்க ! Milos Radakovich . Science Educator & Coastal Biologist for more than 50 yrs. On-board Naturalist for Celebrity Cruises.   படங்களோடு விரிவுரை அருமை !  இதுலே எத்தனை நமக்குக் கொடுத்துவச்சுருக்கோ ?  












தியேட்டரில் இருந்து வெளியே வந்தால்  க்ராண்ட் ஃபோயரில் வில்வித்தை போட்டி நடக்குது :-) Safe Archery Challenge! Officers VS Guests.  எல்லோரும் அர்ஜுனன்களா என்ன ?  கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தோம்.

அப்படியே கெஸினோவில் கொஞ்சம் விளையாட்டு.  ஒரு காலத்தில் என்னுடைய லிமிட் 20 டாலர்தான். அப்புறம் பத்து ஆச்சு.  விளையாடும்போது வரவு வந்ததும்,  முதலில் போட்ட காசை எடுத்து வச்சுட்டு, மிச்சம் மீதியை ஆடிக்கழிப்பேன். ஒரு ஃபன்தானே ! கடைசியா விளையாண்டது லாஸ்வேகாஸ் பயணத்தில்தான். ஆச்சு ஏழு வருஷம்.  இனி அஞ்சுதான் லிமிட்னு வச்சுக்கிட்டேன்.  அதையும் ஒவ்வொரு டாலராத்தான்  போடுவேன்.  இப்படி ஆடி எல்லாம் பணம் சேர்க்க முடியாது. நம்ம  ஆசைக்கு விளையாடுவதுதான்.  ஸ்லாட் மெஷீனில் கூட ஏற்றவும் குறைஞ்ச பெட் இருக்கும் மெஷீன்தான் என் சாய்ஸ்.  நம்மவருக்கு  ஆரம்ப நாட்களில் இதெல்லாம் தெரியாது. ச்சும்மாப் பக்கத்துலே உக்கார்ந்து பார்த்துக்கிட்டு இருப்பார்.  சீக்கிரம் முடிச்சுட்டு வான்னு சொல்லிக்கிட்டே இருப்பார். சரி. கொஞ்ச நேரம் நீங்க ஆடுங்கன்னு சொன்னால்...... அஞ்சே நிமிட்லே எல்லா க்ரெடிட்டையும்  தீர்த்துருவார்.  பொறுமை அறவே கிடையாது. 'ஒரு வேடிக்கைக்கு ஆடறோம்' என்ற புரிதல் இல்லை. 
இந்த முறை அப்படிச் செய்யக்கூடாதுன்னு வகுப்பு எடுத்தேன் ! டீச்சரில்லையா ? ஹாஹா..... கொஞ்சநேரம் ஆடிட்டு, மீதிக்காசுக்கான வவுச்சரை எடுத்துக்கணும்.  போகவர ஒரு பத்து நிமிட் விளையாட்டு. அம்புட்டுதான் !  நல்லாவே தேறிட்டார்.  
லஞ்சுக்கு ஓஷன்வ்யூ போனோம்.  ஜன்னல்பக்கம் இடம் பிடிக்க ஒரு உபாயம் இருக்கு.  ரெண்டு பேரும் ஒரேடியாத் தட்டை எடுக்கப்போகாமல், முதலில்  ஒரு ஆள்,  இடம் தேடி உக்கார்ந்துக்கணும். மற்றவர் போய்த் தனக்குத் தேவையானதைக் கொண்டுவந்தபின், அடுத்தவர் போகலாம்.  அந்த ஆள் எப்பவும் நாந்தான். இண்டியன் டிலைட்ஸ்ஸில் ஏறக்கொறைய அதே வகைகள்.  நேத்து தால் Dhal  இருந்துச்சு. இன்றைக்கு 'தடுக்கா தால்  '  :-) பெயர்தான் மாற்றம்.  ருசி அதேதான்.  ஆனால் இந்தியரைத்தவிர மற்ற மக்கள்தான் இங்கே கூட்டமா வந்து தட்டுகளில் எடுத்துப்போறாங்க.  


நான் எப்பவும் இனிப்புப்பிசாசு என்பதால்............ இது எனக்கு !

அறைக்கு வந்து கொஞ்சம் தூங்கினேன்.  லேசா ஒரு தள்ளாட்டம். அஞ்சு மினிட்லே நின்னுருச்சு.  நாலே முக்காலுக்கு டீக்கடை விஸிட்.  டீயும் ஒரு மஃபின்னும்  ஆச்சு.   கடலில் கொஞ்சம் டால்பின்ஸ் ஆட்டம் ! அழகுதான் ! பிரமிப்பு இல்லை. நம்மூரில் நிறையப் பார்த்தாச் ! 

அஞ்சரைக்கு டின்னர் ஆரம்பம். ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு ! எல்லாம் கொண்டுவந்து அடுக்கி வைக்கறாங்க.




கப்பல் திறந்த வெளியில் (ஓப்பன் ஸீ) போகும்போதுதான்  ஆட்டம் அதிகம்.  'டேஷ்' அந்த சமயம்தான். இப்போ நம்ம கப்பல் இன்ஸைட் பாஸேஜ் என்ற நிலையில்  கரையோரப்பகுதியில் இருக்கும் சின்னச் சின்னத் தீவுகள் வழியாகத்தான்  போகுது. வேகமும் குறைவுதான்.
 ஃப்ளைட்டுலே   'ஃப்ளைட்பாத்'தான் என் பொழுதுபோக்கு.  சினிமாவெல்லாம் பார்க்க மாட்டேன்.  இங்கே கப்பலில் 'நேவிகேஷன் பாத்' னு டிவியில்  ஒரு சானலில் காமிச்சுக்கிட்டு இருக்காங்க.    இப்ப 19.5 Knots  (Nautical Miles)வேகத்தில்  போகுது.  நம்ம  கணக்கில்  36.114 கிமீதான். 
அதுலே ஒரு கண்ணும், வெராந்தாக் காட்சிகளில் ஒரு கண்ணுமா இருந்தேன்.  வெளியில் போய் நிக்க விடலை. 'குளிர் காத்து அடிக்குது, உள்ளே வந்து கண்ணாடி வழியாப் பார்'னு சொல்றார் நம்மவர்.

ஃப்ரீ சார்ம் கலெக்ஷன் , ஒவ்வொரு நாளுக்கும் வெவ்வேற நேரங்களில்.  அப்படியாவது கடைக்கு ஆள்  வரமாட்டாங்களான்னு...... ஹாஹா.   ஆரம்பிச்ச விளையாட்டை நிறுத்த வேணாமுன்னு அதையும் போய் வாங்கியாச்.
க்ராண்ட் ஃபோயரில் பாட்டுக் கச்சேரி.  ஜோடிகள் அப்பப்ப வந்து ஆடறாங்க.  அதுலே ஒரு ஜோடி எனக்குப் பிடிச்சுப்போச்சு !  ரெண்டுமாடி உயரத்துலே இருந்து பார்க்கிறோம். இன்றைக்கு 'சிக் ட்ரெஸ்' ( Chic attire ) னு நியூஸ் லெட்டரில் போட்டுருக்கு ! க்ரூய்ஸ் புக் பண்ண நாளில் இருந்து அப்பப்ப என்ன செய்யணும், எதை எதைக் கொண்டுவரணும், கொண்டுவரக்கூடாதுன்ற சமாச்சாரங்களையெல்லாம் அனுப்பிக்கிட்டேதான் இருந்துச்சு க்ரூய்ஸ் கம்பெனி.ச்சிக் ச்சிக்ன்னா நானென்ன செய்ய ? அதான்  sick கா இருக்கேனே !
திரும்ப ஒரு காமணி கெஸீனோ.  வவுச்சர் ப்ரிண்ட் பண்ண பேப்பரே தீர்ந்து போச்சுப்பா !  அப்புறம் வந்து மாத்திக்கொடுத்தாங்க.
அதானே.... இப்படிப் பத்து பத்து நிமிட் மட்டும் ஆடிட்டு வவுச்சர் எடுத்துக்கிட்டே இருந்தால் பேப்பர் தீராதோ    
டின்னருக்குப் போயிட்டு வந்தோம்.  அவரவருக்கு வேண்டியது அவரவருக்கு ! 

மழை வேற ஆரம்பிச்சது.  கொஞ்சநேரம் நேவிகேஷன் பாத் பார்த்துட்டு, மருந்து மாத்திரைகள் எல்லாம் மறக்காமல்  எடுத்துக்கிட்டுச் சீக்கிரமே தூங்கிட்டேன்.             

தொடரும்.......... :-)


8 comments:

said...

விஞ்ஞானம் எவ்வளோ முன்னேறி இருக்கு?  மூலைக்கு மூலை கடை வைக்கும் சரவணபவன், சங்கீதாக்கள்  ஏன் கப்பல்களிலும் வைக்காமல் இருக்கிறார்கள்?!!  அந்தக் காணொளியில் டால்பின் என் கண்ணுக்கு சிக்கவில்லை!

said...

வாங்க ஸ்ரீராம்,

தெற்கே இருக்கும் கப்பல்களில் வச்சுருப்பாங்களோ என்னவோ ? இங்கே பிஸினஸ் அவ்வளவா இருக்காதுன்னு நினைக்கிறேன். அரை மில்லியன் கூட்டம் இருக்கும் எங்கூரில் கூட சரவணனும் சங்கீதாவும் கிடையாது. இருப்பது ஒரே ஒரு துல்ஸி விலாஸ் மட்டுமே :-)

செல்ஃபோனில் பார்த்தால் கண்டுபிடிப்பது கஷ்டமோ என்னவோ..... ஆரம்பிச்ச 8 விநாடிகளில் இருந்து டால்ஃபின்ஸ் தெரிகிறதே !!!

said...

விதம் விதமான அனுபவங்கள். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

டால்ஃபின் - பெரிய திரையிலும் தெரியவில்லை. காணொளியை முழு ஸ்க்ரீனில் (Full Screen) வைத்து பார்க்க முயற்சிக்கிறேன்.

said...

// நல்லாவே தேறிட்டார். // தேறாம, யாரு குடுத்த ட்ரைனிங்.

// நான் எப்பவும் இனிப்புப்பிசாசு // நானும்.


said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

காணொளி, கைப்பேசியில் சரியாகத்தெரியலை. ஃபுல்ஸ்க்ரீனில், குறுக்கே வச்சுப் பார்த்தால் கொஞ்சம் தெரிகிறது. ஆனால் லேப்டாப்தான் பெஸ்ட்!

said...

வாங்க விஸ்வநாத்,

ட்யூஷன் எடுத்துச் சரியாக்க 50 வருஷம் தேவைப்பட்டுருக்கு !

இனிப்பில்லாத வாழ்க்கை சுகப்படாது !

said...

கப்பல்பயணமும் அனுபவங்களும் நன்றாகவே போகிறது.

said...

வாங்க மாதேவி,

பயணத்தில் கூட வருவதற்கு நன்றியும் மகிழ்ச்சியும் !