Friday, July 12, 2024

நேருக்கு நேர் னு ஒரு விளையாட்டா ? (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 14

மாம்பழம் சாப்பிட்ட அசதியில் நல்ல தூக்கம் !  ஆறு மணிக்குத்தான் முழிப்பே வருது !  அடுத்துச் செய்யவேண்டியவைகளை சொல்லிக்கிட்டு இருந்தார் நம்மவர்.  எதாக இருந்தாலும் ஒரு காஃபிக்குப்பின்னால்தான் !  அதுவும் ஆச்சு.
நாம் இவ்ளோதூரம் வந்ததின் நோக்கம் நாளைய சமாச்சாரத்துக்குத்தான் ! அலாஸ்கா போகும் பயணம்.  க்ரூய்ஸ் கம்பெனி அனுப்பி இருந்த தகவல்களைச் சரிபார்த்துக்கிட்டு இருக்கார். 

 "கத்தி கூடாது "

"அப்டீன்னா ? "

"கொண்டுபோகக்கூடாது.  குப்பைக்கூடையில் எடுத்து போடு."

"அடராமா.....  செக்கின் லக்கேஜில் கத்தி கொண்டுபோகலாம்தானே ? "

'வேணாம். லக்கெஜ் ஸ்கேன் பண்ணும்போது,  திறந்து காமிக்கச் சொல்வாங்க. வீணா  நேரம் விரயம். இங்கே பாரு'ன்னு தகவல் குறிப்பைக் காமிக்கிறார். பெட்டியில் கூர்மையான வஸ்துகள் இருந்தால் கப்பலில் ஏற்ற மாட்டோம். (திரும்பி உங்க  ஊருக்குப்போ ) 

கடைசியாக் கத்திக்கு ஏதாவது வேலை இருக்கான்னு  பார்த்துட்டு,  நாலைஞ்சு பேப்பரில் சுத்திக் குப்பைக்கூடைக்குள் போட்டேன்(மனசில்லா மனத்தோடு ) 

திரும்பி வந்ததும் மாம்பழம் வாங்கினா..............?    அதான் கடை இருக்குமிடம் தெரியுமே... அங்கெ இன்னொன்னு வாங்கிக்கலாம்.


கப்பலின் ஒவ்வொரு  மாடிக்கும் ஒரு நேரம் கொடுத்துருக்காங்க. அந்த நேரத்தில் போய் செக்கின் லக்கேஜ்களைக் கொடுக்கணும். நமக்குப் பத்து மணிமுதல் பதினொன்னு வரை. கனடா ப்ளேஸில் கப்பல் ஏறணுமாம்!

'இப்பக் கிளம்பிப் போய் எந்த இடம்னு பார்த்து விசாரிச்சுட்டு வரலாம்'னார். 
நம்ம ஹொட்டேல் இருக்கும் ரோடுதான்.  1.4  கிமீ தூரம். கடலுக்குப்போய்ச் சேருது.  பொடிநடையாகக் கிளம்பினோம். ஹொட்டேல்  அலங்கார நீர் ஊற்றில் நிதானமா  நீந்தும் வாத்துகள். அழகு !
வலதுபக்க ப்ளாட்ஃபாரத்தில் போய்க்கிட்டே இருக்கோம். ஒரு சர்ச் பெயர் கண்ணில் பட்டது. க்றைஸ்ட்சர்ச் கதீட்ரல் ! ஊர்ப்பாசம் விடுமோ ? 







நம்ம ஊர் கதீட்ரலும்  இதே பிரிவைச் சேர்ந்ததுதான் ! படிகளேறிப்போனோம். சில க்ளிக்ஸ் ஆச்சு. ரொம்பப்பழைய சர்ச். பாரம்பரியக் கட்டங்களின் வரிசையில் இருக்கு. கட்டிமுடிக்க அஞ்சு வருஷம் ஆச்சாம். 1889 முதல் 1894 வரை.  



அங்கங்கே வேடிக்கை பார்த்துக்கிட்டே கனடா ப்ளேஸ் போய்ச் சேர்ந்தோம். துறைமுகம். ஒரு பெரிய கன்வென்ஷன் சென்ட்டர் கட்டிவிட்டுருக்காங்க. உள்ளே நல்ல கூட்டம்.  என்னன்னு பார்த்தால் ஃபேஸ் 2 ஃபேஸ்னு ஒரு விளையாட்டு இருக்காமே ! (எனக்கென்ன தெரியும் ?  நேக்குத் தெரிந்ததெல்லாம் இந்த ஃபேஸ்புக்கும், ப்ளொக்ஸ்பாட்டும்தானே ? )


கனடாவின் புகழ்பெற்ற விளையாட்டு. அதோட சுற்றுப்பயணத் திருவிழா. இது ஒரு கார்ட் கேம்தான். விதவிதமான படங்கள் இருக்கும் அட்டைகள், (இந்தச் சீட்டுக்கட்டுகள் போல?)   இவற்றை விற்பது, வாங்குவது, மாற்றிக் கொள்வதுன்னு ஒரு பக்கம். நினைவுப்பொருட்களா  மக்களுக்கான தொப்பி, டீஷர்ட், இத்யாதிகள் விற்பனை! 

இருக்கை வரிசைகளில் எதிரும் புதிருமாக உக்கார்ந்து, தீவிர கவனத்துடன் விளையாடறாங்க. எல்லோரும். நம்மவருக்கு உடனே மருமகனுக்கு இந்தக் கார்டுகள் வாங்கிப்போகணுமுன்னு ஒரு வேகம். ஃப்ரீ  வைஃபை வேற இங்கே !  கேக்கணுமா ? மகளுக்கு  வாட்ஸ்ஸப்  மெஸேஜ் அனுப்பறார். 'என்னென்ன கார்டு இல்லைன்னு சொல்லு வாங்கிவர்றேன்'.
இங்கே வெள்ளிக்கிழமை மாலை ஏழரை. அங்கே சனிக்கிழமை மதியம் ரெண்டரை. பதில் வரும்வரை அங்கேயேதான் சுத்திக்கிட்டு இருக்கணும். வைஃபையே போற்றி போற்றி !

நான் ச்சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு,  கார்டு படங்களை க்ளிக்கிக்கிட்டு இருந்தேன். என்னமோ விளக்கம் எல்லாம் போட்டுருக்கு. எல்லாம் வேற்றுகிரகவாசிகள் போல !




எதுக்கு? அதெல்லாம் வேணாம். இந்த விளையாட்டெல்லாம் ஜோஷ் விளையாடறதில்லை... மகள் பதில்

(ஹப்பா.... எனக்கு மனநிம்மதி !)

வெளிஹாலில் அங்கங்கே குலச்சின்னக்கம்பங்கள் !  
தகவல் சொல்லும் இடத்தில் இருந்தவங்களிடம், க்ரூய்ஸ் ஷிப் பற்றி விசாரிச்சோம்.  கீழ்தளத்துலேதான் க்ரூய்ஸ் டெர்மினலாம். "வண்டிகளை நேரே அங்கேயே கொண்டுபோய் லக்கேஜ்களை ஒப்படைக்கணும். நாளைக்கு மூணு கப்பல்கள் இங்கிருந்து  கிளம்பும். ரொம்பவே பிஸியா இருக்கும். டாக்ஸி கிடைக்கக் கொஞ்சம் காத்திருக்கணும். பயணம் சிறப்பாக இருக்கட்டும்."
நன்றி சொல்லிட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.  இந்த க்ரூய்ஸ் கப்பல்களால் இந்த ஊருக்கே நல்ல வருமானம். பயணிகள் உலகெங்கிலும் இருந்து  கப்பல் ஏற இங்கே வர்றாங்க. வந்த கையோடு நாலைஞ்சு நாள் ஊரைச் சுத்திப் பார்த்துட்டும் போகணும்தானே ? அதான் ஊர் மு ழுக்க ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் எக்கச் சக்கம் !

கன்வென்ஷன் சென்டர் கட்டடத்தின் பக்கவாட்டுப் பகுதியில்  கப்பல்கள் வந்து நிறுத்திக்கும் வசதியும்,  பயணம் போற மக்களை வரவேற்க ஒரு அலங்கார சதுரமுமா........ இதில் அங்கங்கே சிலபல தகவல்கள்.




இந்தப்பயணத்தொடரின் ஆரம்பத்தில்  ரெட்டைத்தலை பாம்புன்னு சொல்லி இருந்தது நினைவிருக்கா ?  அது சம்பந்தமான சமாச்சாரம் ஒன்னு  கைப்பிடிக் குழாயில் மாட்டிவச்சுருக்காங்க.

ஞாபகம் இல்லைன்னா கீழே பாருங்க. நாலு வாரங்களுக்கு முன்னால்.....

இந்த ஃப்ரேஸர் நதி வழித்தடம் கூட ஒரு ரெட்டைத்தலை பாம்பு ஊர்ந்து போய்  ஏற்படுத்தியதாம் ! மஹா மோசமான விஷம் உள்ள பாம்பு. அதன் மூச்சுக் காத்துப் பட்டாலே அக்கம்பக்கம் எல்லாம் கருகி அழிஞ்சுருமாம். குழந்தைகளை  அந்தப் பக்கம் போகவிடாமல் பார்த்துக்கணும் என்பதே முக்கியம்.  (நம்ம காளிங்கனோட சொந்தக்காரனோ ??)
 பாம்பு போகும்போது,  அதன்   கழிவு விழுந்த இடங்களில் ஒரு விதமான பூச்செடிகள் முளைச்சு வளந்ததாம். அந்தப் பூக்களுக்கு  Musqueam என்ற பெயர். அந்தப்பெயெரில் இருந்துதான் இவுங்க இனத்துக்கும் பெயர்  வந்துருக்கு !

Winnie-the-Pooh ன்னு டிஸ்னி பொம்மைகள்/ சினிமாக்கள்/ குழந்தைகளுக்கான புத்தகங்களில் பார்த்துருக்கோமே... அதோட  ஒரிஜினல் எதுன்னு சுவையான தகவல் ஒன்னும் இருக்கு ! அட ! அப்ப அது கற்பனை கதாப்பாத்திரமில்லையா !!!!
இது நம்ம வீட்டுப்  பூ. நாப்பது வயசாச்சு.

இந்தக் கட்டடம் தவிர  அக்கம்பக்கத்துக் கட்டடங்களுமே கப்பல் போலவேக் கடலையொட்டியேக்  கட்டியிருக்காங்க.  நாம் ரெண்டுமூணுநாளா பார்த்துக்கிட்டு இருந்த பாய்மரங்கள் எல்லாம் இந்தக்கட்டடத்தின் மாடியில்தான் ! 
அடுத்தடுத்த கட்டடங்களில் கடைகள், ரெஸ்ட்டாரண்டுகள் இப்படி.....   வெளியூர் மக்களைத்தவிர உள்ளூர் மக்களும் குழந்தைகுட்டிகளோடு டைம்பாஸுக்கு வந்து கூடறாங்க. 

Bon Voyage Plaza ன்னு ஒன்னு. கப்பல்கள் கிளம்பும் சமயம், நல்லபடி பயணம் அமையட்டுமுன்னு வாழ்த்தி வழியனுப்பறதுக்கு !  நமக்குத்தான் 'யாவரும் கேளிர்' இருக்கே ! கையாட்டாம இருப்போமா ? ஆனா... என்ன ஒன்னு... இப்போதைக்குக் கப்பல் ஒன்னும் இல்லை. நாளைக்குக் கையாட்டியே தீரணும் :-)    
இங்கே  இந்த ஊரில் பப்ளிக் ஆர்ட் என்று ஏராளமான  நவீன சிற்பங்களை அங்கங்கே  வச்சுருக்கு ஸிட்டிக்கவுன்ஸில்.  எல்லாமே ஒவ்வொரு வகையில் அழகுதான். இந்த இடத்தில் ஒரு துளி என்னும் பெரிய சிற்பம்,   The Drop ! ஸ்டீல் சமாச்சாரம். ஆனால் பார்க்கக் கண்ணாடிபோல் இருக்கு. ஜெர்மனி சிற்பக்கலைஞர்கள் செஞ்சு 2019 இல் இங்கே கொண்டுவந்து வச்சுருக்காங்க.
கடலையொட்டியே  டெக்கில் நடந்து போனால்...... ஸீப்ளேன்களுக்கான ஏர்போர்ட் !!!!  ஸினிக் டூர்னு மேலே போய் இயற்கை அழகை ரசிக்கலாம். 

 அங்கங்கெ சில சரித்திரக்குறிப்புகளை வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு.... 'உங்களை யாரும் வெத்தலைபாக்கு வச்சுக் கூப்புடலை' ! நாட் வெல்கம்  NOT WELCOME.
ஜப்பான்காரனுக்கு ஏன் இந்த வீண்வேலை ? 1914 லே  Komagta Maru என்ற நீராவிக்கப்பல், 376 இந்தியர்களை ஏத்திக்கிட்டு, ஹாங்காங், ஷாங்காய்  வழியா இங்கே வந்துருக்கு. இந்தியர்னு பொதுவாச் சொன்னாலும் எல்லோரும் பஞ்சாப் மாநிலத்து மக்களே !  ப்ரிட்டனின் குடிகள் ! பிரிவினை இல்லாத இந்திய நாடு அப்போ!  இங்கேயே யாரையும் இறங்கவிடலை.  கப்பலிலேயே ரெண்டு மாசம் காத்திருந்தும் பயன் இல்லை.... திரும்பிப்போ.....  ஆர்மி & நேவியை வச்சுத் துரத்திட்டாங்க.  

இது  இவுங்க சரித்திரத்துலே  ஒரு கரும்புள்ளியா நின்னுருச்சு. சகிப்புத்தன்மை இல்லாத சனம்னு ! கிட்டத்தட்ட நூறு வருஷம் (94) கழிச்சு 2008 லே,  செஞ்சது தப்புன்னு  ' நடந்த ' சம்பவத்துக்குப் பொதுமன்னிப்பு கேட்டுச்சு அரசு. இனி இப்படி நேராதுன்னு வாக்குறுதி வேற ! 

 (ஆஹா.... எங்கே பார்த்தாலும்  எப்படி பஞ்சாபியர்கள் என்பதற்கு விடை இதுதான் போல ! பழி வாங்கிட்டாங்கப்பா......  )

இன்னொரு ஷாப்பிங் ஏரியாவுக்கு Burrard Landing னு பெயர் .  இதுவழியாத்தான்  Seaplane terminal  போகணும்.   

இப்படி ஒன்னு அங்கே....  கம்பியும் கண்ணாடியுமா.....என்ன சொல்லுதுன்னு தெரியலை....

மணி எட்டரை ஆகுது. எங்கியாவது  போய் சாப்பாட்டை முடிச்சுக்கலாமுன்னார் 'நம்மவர்' .  கொஞ்சம் பொட்டி அடுக்கும் வேலை இருக்காம்.  (ரொம்பவே  விரும்பி ஆர்வத்தோடு செய்யும் வேலை இது என்பதால்....  அடுக்கட்டுமுன்னு  இருப்பேன். எனக்கும் சண்டைக்கான கன்டென்ட் கிடைக்கும் )

ஒரு டாக்ஸி எடுத்து ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்டுக்குப் போகச் சொன்னோம். நாலு தெரு தாண்டி ' மாடர்ன் ஹண்டி' யில் கொண்டுவிட்டார் பஞ்சாபி ஓட்டுநர். மஹாராஜா தாலி இருக்காம். ஃபுல் மீல்ஸ் சாப்பிட வயித்துலே இடமில்லை.   வெண்டைக்காய் கறி (Bபிண்டி மசாலா)& வெள்ளைச்சோறு போதும்.  ( எனக்கு இது பிடிக்காது. கோபாலுக்குப் பிடிச்சது எதுவும் எனக்குப்பிடிக்காது )




அங்கேயே டாக்ஸிக்குச் சொல்லி வரவழைச்சு,  அறைக்குத் திரும்பியாச்.

இனி சந்தோஷமாப் பொட்டி அடுக்கட்டும் !

தொடரும்........... :-)




9 comments:

said...

அருமை நன்றி

said...

'நேருக்கு நேர்" எப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறார்கள் புது ஜெனரேஷன் எல்லாத்திலும் அத்துபடி.

"துளி" பார்வைக்கு கண்ணாடிப் நன்றாக இருக்கிறது.

"சந்தோசமா பெட்டி அடுக்கட்டும்" ஹா...ஹா... குறும்பு சண்டை இல்லையோ? :)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

விளையாட்டுன்னாலும் எல்லாத்துலேயும் காசே முன்னிலையில் இல்லையா ???


உண்மையிலேயே மழைத்துளி இவ்ளோ பெருசா இருந்தா நம் கதி ? ஹாஹா

சண்டையில் குறும்பே இல்லையாக்கும். கத்திச் சண்டைதான் எப்பவும் :-)

said...

சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....

said...

வழக்கம் போல சிறப்பான பதிவு. ஆனாலும் சற்று வித்தியாசமாக.

said...

துளி - ரொம்ப அழகு.

நேருக்கு நேர் - எப்படியெல்லாம் விளையாட்டு.

படங்களும் தகவல்களும் நன்று. தொடரட்டும் பயணம்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

முதலில் உங்கள் நூல்களின் வெற்றிக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எப்பவுமே அபுனைவு நூல்களுக்கு நிறையப் பாடுபடவேண்டும்தான் ! கற்பனையாக எல்லாவற்றையும் அளந்துவிட முடியாது, இல்லையோ !!!

நெடுநாட்களுக்குப் பின் மீண்டும் உங்களை இங்கே பார்த்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

மிகவும் நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இங்கே ஊர் முழுவதும் விதவிதமான நவீன சிற்பங்கள்தான் !

மனுஷனுக்குப் புதுப்புது விளையாட்டு கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகமாகுது. இல்லையென்றால் எப்படி இளைஞர் கூட்டத்தைக் கட்டிப்போடுவதாம் ?