Tuesday, July 09, 2024

Rasam on the house ! (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 12 )

சனிக்கிழமை காலை. எதாவதொரு கோவிலுக்குப் போகணும். அது நாம் சனிகளில் போகும் ஹரே க்ருஷ்ணாவாகவே இருக்கட்டுமேன்னு கிளம்பினோம்.  மணி இப்பவே ஒன்பதேகால்.  காலநிலை கண்ணாடியில் ! ஏதும் டூர் எடுக்காததால் நிதானமான நாள். டோஸாவில் போய் இட்லி சாப்பிடலாமுன்னு  ரெண்டு மூணுநாளா ஜெபிச்சுச்சுக்கிட்டே இருக்காரேன்னு  மெதுநடையில்  டேவீ தெருவுக்குப் போறோம்.  
நம்ம ஹொட்டேலில் இருந்து இடப்பக்கம் ஒரு நாலைஞ்சு நிமிட் நடந்தால் டேவீ  வந்துரும்.  அந்த முனையில் ஏதோ பழுது பார்த்துக்கிட்டு இருக்காங்க. வந்தநாளாக் கவனிச்சதுதான்.  சக்கரநாற்காலியில் இருந்த ஒரு நோயாளி.... இக்கட்டான இடத்தில் நகரமுடியாமல் நிற்பதைப் பார்த்து, 'நம்மவர்' ஓடிப்போய் நாற்காலியைத் தள்ளி தெருமுனையில் அவர் திரும்பவேண்டிய இடத்துக்குக் கொண்டுவிட்டார். 'இவரிடம்' எனக்குப் பிடிச்ச விஷயங்களில் இதுவும் ஒன்னு. உதவி தேவைப்படுமிடத்தில் சட்னு போய் உதவுவார். 
அவர் இடதுபக்கம் போகணுமாம். நாம் வலது பக்கம். டேவீ டோஸா போய்ச் சேர்ந்தோம்.  ரெண்டு ப்ளேட் இட்லி, ஒரு புனுகுலு, ஒரு தோசைக்குச் சொன்னார்.  இன்றைக்கு ட்யூட்டியில் இருந்தவர்கள்  ஹைதராபாத் ப்ரீதம்,  உள்ளூர் குஜராத்தி குடும்பத்து வர்ணி ! ப்ரீதமுடைய ஐடியாதான் அந்தப் புனுகுலுன்னு சொல்லவே வேணாம்.

ஓடிப்போய் ஒரு கிண்ணத்துலே ரசம் கொண்டுவந்து வச்சார் ப்ரீதம். 'ஆன் த ஹௌஸாம்' !  சரி. ஆனால் காலங்கார்த்தாலே வெறும் வயத்துலே ரசமா ? டேஞ்சர் இல்லையோ !  நம்மவர்தான் ரசப்ரேமி என்பதால் ஒரு ஸ்பூன் எடுத்து சுவைத்துப்பார்த்தார்.  முகம் போன போக்கை பார்க்கணுமே....புளியான புளியாம் .  இப்படி நாலு இடத்துலே போய் சாப்பிட்டால்தான்  நம்ம வீட்டு சமையலின் அருமை தெரியும் ! (மனசுக்குள்ளே கருவிக்கிட்டேன் )
இட்லி கூட ரொம்பவே சுமார்தான். கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இதே கஷ்டம் 'எதிராளி'க்கும் இருந்ததைப் பார்க்கப் பரமதிருப்தி ! மக்கள் துன்பத்தை மறக்க, டிவியில் தற்போதைய இந்திய தேசியவிளையாட்டு.....
தோசையும் வந்தது. நான் தப்பிச்சேன். அதில் பாதிகூட சாப்பிட முடியலையாம்.....  மொத்தத்தில் அந்தப் புனுகுலுதான் பெட்டர். வடை மாவுதானே ! அதையும்  பங்குவச்சுக்கிட்டதால் வேலை முடிஞ்சது.  இந்த அழகில் லஞ்சுக்கு வருவீங்களான்னு கேள்வி வேற !  கண்டிப்பாச் சொல்ல முடியாது.... பார்க்கலாம் என்று முந்திக்கொண்டேன்.
வர்ணியிடம் ஒரு டாக்ஸி கூப்பிடச் சொல்லி, அது வந்ததும்  இஸ்கான் கோவிலை நோக்கிப்போறோம். கிட்டத்தட்ட முப்பத்தியஞ்சு நிமிட், போய்க்கிட்டே இருந்தோம் !  இத்தனைக்கும் பதினாறே கிமீதான் !கோவில் வளாகத்தின் முகப்பில்  இறங்கியதும் பார்த்தால்.... கோவில் கட்டடம் அதோ........... அங்கே ரொம்ப தூரத்தில் இருக்கு. ஒரு நூற்றியிருபது மீட்டர் இருக்கலாம். சரிவாக இறங்கும் பாதை.  தெரிஞ்சுருந்தால் வண்டியை உள்ளே போகச் சொல்லியிருக்கலாம்....  கோவிலாண்டை போனால் ஸ்வாமி தரிசனம் 11. 10 வரை தான்.   நாம் முக்கால் நிமிட் இருக்கும்போது வந்துருக்கோம்.


 அடடா..... ஸ்வாமி க்கு நைவேத்யம் படைக்கும் நேரம் இது. திரை போட்டுருப்பார்கள். திரும்ப 11.45க்குத் திரை விலகும்.

ஸ்வாமி சாப்பிடட்டும். அதுவரை  தோட்டம் பார்க்கலாம்.   அப்பதான் பக்கத்து மனையில் இன்னொரு பெரிய கட்டடம் இருப்பதைக் கவனிச்சோம். முகப்பில் 'ஓம்' அதுவும் ஒரு கோவில்தான்.  இந்த வேலி வழியாப் போறதுக்கு ஒரு கேட் வச்சுருக்கப்டாதோ ? 

அரைமணி நேரம் இருக்கே... அங்கே போயிட்டு வந்துறலாமுன்னு திரும்ப மேலே தெருவுக்கு வந்து அடுத்த வளாகத்து வாசலில் நின்னால்.... அதுவும் ரொம்ப தூரத்துலே  .... ப்ச்.

முன்வாசலுக்குப் போய்ச் சேர்ந்தோம். ப்ரமாண்டமா இருக்கு கட்டடம்.   2018 இல் கட்டி முடிச்சுருக்காங்க.    வாசலில் செருப்பைவிட இடம் இல்லை. ஒரு ஓரமா விட்டுட்டு, உள்ளே நுழைஞ்சால் பெரிய ஃபோயர் . மேலே இருந்து ஷாண்டிலியர் தொங்குது !  ரெண்டு பக்கங்களிலும் வளைவாகப்போகும் மாடிப்படிகள்.  கண்ணுக்கு நேரா  பெரிய கதவு ! எட்டிப் பார்த்தால்  ரஸோயி !  அடுக்களைதாங்க. கமர்ஸியல் கிச்சன் ! பெரிய அளவில் !
சந்நிதி மாடியில் இருக்கும் விவரம் ஒட்டி வச்சுருக்காங்க.

மாடிக்குப்போனால்...  பெரிய ஹாலில் நுழைவதற்குமுன் நமக்கிருபக்கங்களிலும் காலணி வைக்கும் அறைகள். பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக ! அங்கேயே கை அலம்பிக்கொள்ள வாஷ் பேஸினும் சோப்பும் ! ஹா.... என்ன ஒரு நல்ல ஐடியா !இதுகூடாதே.... டாய்லெட் வசதிகளும் உண்டு !


தூண்களே இல்லாத பெரிய ஹாலின் எதிர்ப்புறம்  அஞ்சு சந்நிதிகள்.  நடுவில் ராதா & க்ருஷ்ணா,  ராதைக்கு இடப்பக்கம் லக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிக்கு இடதுபக்கம் துர்கை.  க்ருஷ்ணனுக்கு வலதுபக்கம் ராமர், லக்ஷ்மணன், சீதை & ஆஞ்சு. லக்ஷ்மணனுக்கு வலப்பக்கம்  சிவன் குடும்பம் , மனைவியும் மகன்களுமாக ! 


சந்நிதிகளுக்கு வலப்பக்கம் சிவலிங்கம். நாமே அபிஷேகம் பண்ணும் வகையில் குழாய் அமைப்பும் செம்புகளும்.  நாங்கள் சிவன் மனம் குளிர அபிஷேகம் செஞ்சோம். இங்கே நம்ம புள்ளையார் கோவிலில் அபிஷேகம் செய்த பழக்கம்  இருந்ததால் ரொம்ப  எளிதாப் போச்சு. இந்த அமைப்பும் அருமையாக இருந்ததால் மனசில் குறிச்சு வச்சேன். நம்மூர் கோவிலிலும்,  இந்தியாவிலிருந்து ஸ்வாமி சிலைகள் வந்திறங்கி இருக்கு. இனிமேல்தான்  பிரதிஷ்டை செய்ய வேணும்.  

சந்நிதிக்கு இடப்பக்கம்  பிரசங்கம்  செய்யும் மேடை அமைப்பு.  எல்லாமே அழகோ அழகு !
இடதுவலது பக்கச் சுவர்களில்  சின்ன மாடங்கள் அமைப்பில்   ஆஞ்சநேயர், புள்ளையார், பாபா பாலக்நாத் (நம்ம முருகன் தான் )சரஸ்வதி, காயத்ரி மாதா, காளி,  நவக்ரஹங்கள் இப்படி வரிசைகட்டி இருக்காங்க! மொத்தத்தில் யாரையும் விடலை ! 

பண்டிட் தீபக் அவர்கள் தீர்த்தமும் பிரசாதமும் தந்து, நம்மைப்பற்றி விசாரித்தார். கோவிலின் அழகைப் பாராட்டி, நம்மூர் கோவிலில் ஸ்வாமி சிலைகள்  வந்த விவரத்தைச் சொன்னேன். சிவனுக்கான அபிஷேக அமைப்பு சிறப்பாக இருக்கிறது என்றேன். நிறைய  படங்கள் எடுத்துக்கொண்டு போகச் சொன்னார். (கேக்கணுமா ? ஹிஹி )ஒரு ஐடியா கிடைக்கும் என்றார்.
இந்தக்கோவில்  வந்த விவரங்களையும் கொஞ்சம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். கோவில் வலைப்பக்கத்தில் முழுவிவரமும் இருக்குன்னார். 

வெளிநாட்டு வழக்கம்போல, முதலில் சிலபல ஆன்மிக வேட்கை இருக்கும்  நம் மக்கள் ஒன்னாச் சேர்ந்து, ஒரு கோவில் கட்டிக்கலாமேன்னு  ஆரம்பிக்கறதுதான். இங்கேயும் 1972 மே மாசம் 15 ஆம் தேதி, கோவில் ட்ரஸ்ட் ஒன்னு பதிவு செய்யறாங்க. ஒரு சின்ன இடத்தில் கூடி, பஜனை, சத்சங்கம் இப்படி நடக்க ஆரம்பிச்சது. 

இதுக்கிடையில் கோவில் கட்ட நிதி சேகரிப்பும்தான். மக்கள் கூட்டம் பெருகப்பெருக கோவில் கமிட்டி தீவிரமா வேலை செஞ்சாங்க. பர்னபி என்ற இடத்தில் நிலம் வாங்கிக் கோவில் கட்டடம் எழுப்பியாச்சு.  முப்பதியோராயிரம் சதுர அடியில் ஹிந்துக்கோவில் !  மூணுநிலையில்  நடுவில் சந்நிதிகள்,  நூற்றறுபதுபேர் ஒன்றுகூடி தரிசிக்கும் வகையில்! மேல்தளத்தில் குடும்பத்தின் விசேஷ நிகழ்ச்சிகள் கல்யாணம், பிறந்தநாள், வளைகாப்பு இத்யாதிகள், கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் எல்லாம் நடத்திக்கும் வகையில்  பிரமாண்டமான ஹால், கீழ்த்தளத்தில்  பெரிய அடுக்களை !

தினமும் கோவில் பூஜை, புனஸ்காரங்களை நடத்தி வைக்கப் பண்டிட் வேணும்தானே ? அதுவும் ஏற்பாடாச்சு.  பிள்ளைகளுக்காக  ஹிந்தி மொழி சொல்லித்தரும் பள்ளிக்கூடம், பெரியவர்களுக்கு கீதை வகுப்பு, அனைவருக்கும் யோகா வகுப்புன்னு எல்லாமே நல்லமுறையில் நடந்துவருதாம் !
ரொம்பவே மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பி,  மேலே கேட் கடந்து பக்கத்து வளாகத்துக்குள் நுழையறோம். 

தொடரும்.......... :-)












6 comments:

said...

கோவில் அழகாக இருக்கிறது.
வகுப்புகள் சிறப்பாக நடப்பது மகிழ்ச்சி தருகிறது.

said...

என்னுடைய கமெண்ட்ஸ் வெளியிடப்படாததின் மர்மம் என்னவோ...  ஒவ்வொரு பதிவிலும் கமெண்ட் போட்டுக் கொண்டிருந்தேன்.  ஸ்பாமில் ஒளிந்திருக்கலாம்.  இதுவும் என்ன ஆகுமோ...

said...

கோயில் வளாகமும் கோயிலும் அழகு. பராமரிப்பு வெகு ஜோர்.

ரசம் - ஹாஹா... நல்ல அனுபவம் தான்! :)

said...

வாங்க மாதேவி,

எல்லாத்துலேயும் ஒரு ஒழுங்குமுறை இருக்குப்பா !

said...

வாங்க ஸ்ரீராம்,

இன்றைக்குத் தற்செயலா ப்ளாக்கர் பக்கம் பார்த்தால் awaiting moderation section இல் ஏகப்பட்ட பின்னூட்டங்கள் , உங்கள் பதில்களையும் சேர்த்து வரிசை கட்டி நிற்கின்றன !

இப்பதான் எல்லாவற்றையும் சேர்த்தேன். மன்னிக்கணும்.

எப்படி இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை. நாலு வருஷக் கமெண்ட்ஸ் காமிக்கிறது !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நல்ல பராமரிப்புதான் !

ரஸம்............. ஹாஹா