Friday, June 28, 2024

மீன் பண்ணையும், மீனவதாரம் எடுத்தவனும்...........(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 8 )

இன்றைக்குப் போகும் டூரில் நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்பதால்  அதுக்குப் பொருத்தமான காலணிகள் எல்லாம் போட்டுக்கிட்டு, டூர் கம்பெனி சொல்லியிருந்த நேரத்துக்கு ஹொட்டேல் வாசலுக்கு வந்துட்டோம்.
பகல்  பத்தரை மணி முதல் மாலை  அஞ்சரை மணி வரை சுத்தப்போறோம் ! ஒரு மலைப்பயணமும் இருப்பதால் குளிரை எதிர்கொள்ளும் வகையில் உடை இருக்கணுமாம். நான் கொண்டுவந்திருந்த  'லைஃப் ஸேவர்'  பேருதவி !   தெர்மல் உள்ளாடைகளுக்கு நான் வச்ச பெயர்தான் இது  :-)   


அதே லேண்ட் ஸீ டூர் கம்பெனிதான்.   பிக்கப் வண்டிகள் குறிப்பிட்ட ஹொட்டேல்களில் போய் பயணிகளைக் கூட்டிவந்துருது . நேத்துப் போலவே ஒரு இடத்தில் வேற வண்டிக்கு மாறினோம். முதலில் அறிமுகம், யார்யார் எந்த நாட்டில் இருந்து வந்துருக்கோமுன்னு......  நேற்றும் இன்றும் நாம் மட்டும்தான்  நியூஸிப் பயணிகள் !  நியூஸின்னதும் எல்லோரும் வியப்புடன் நம்மைப் பார்க்கறாங்க.  அவ்ளோ தூரமா..........  தென் துருவத்தில் இருந்து வடதுருவமா !!!!

வண்டி கிளம்பிப்போகும்போது....நேத்துப் பார்த்த அதே காட்சிகள்......   என்னடான்னு யோசனையா இருந்தது....  முதலில் போனது டோட்டம் போல்ஸ் பார்க் ! அடராமா.... நேத்துதானே வந்துருந்தோம்.... காமணி ஸ்டாப். எல்லோரும் இறங்கிப்போனார்கள், என்னைத்தவிர.  நானும் டூர் ட்ரைவர் & கைடு வேலையில் வந்த ஸ்டெல்லாவும் பேசிக்கிட்டு இருந்தோம். நியூஸியைப் பத்தி ஆர்வமா விசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க. 


படம்:  இங்கே நம்மூர்லே

அப்ப நான் சொன்னேன்..... எங்க நாட்டிலும் இப்படி டோட்டம் போல்ஸ் நிறைய ஏகப்பட்ட இடங்களில்  இருக்கு. எப்படி இந்த ஒத்துமை வந்துருக்கும்னு தெரியலை.  எங்க நாட்டில் முதலில் குடியேறுன மவோரி மக்கள்  கலாச்சாரம் இது. அவுங்க வந்து ஆயிரம் + ஆண்டுகள் ஆச்சு. 

இங்கேயும் இதைச் செதுக்கின மக்கள்  வந்து ஆயிரம் + வருஷங்கள் ஆச்சுதான். பாலிநேஷியாவிலிருந்து வந்த மக்கள்னு ஸ்டெல்லா சொன்னதும்..... "அட ! எங்க நாட்டிலும்தான்" !!!  கனூ என்னும் மரப்படகில் (மரத்தைக்குடைஞ்சு செய்த படகு )

 இப்போ 'அட !!! ' சொன்னது ஸ்டெல்லா !

"ஒருவேளை தங்கள் சொந்தத் தீவைவிட்டுப் படகுகளில் கிளம்பின மக்கள், கடலில் துடுப்புப்போட்டுப் பயணம் செய்யும்போது,  அலைகளின்   வேகத்தில் திசை மாறிப்போய் வடக்கும் தெற்குமா வேவ்வெற பக்கங்களில் பிரிஞ்சு போயிருக்கலாம்..... இல்லே ?"

நான் சொன்னதை ஸ்டெல்லா முழுவதுமா ஆமோதிச்சாங்க. ச்சும்மா ஒரு  சொந்தத்  தியரிதான். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.  ஆராய்ச்சியாளர்கள்தான் இன்னும் விரிவா  ஆராய்ந்து சொல்லணும் !


இதுக்குள்ளே திரும்பி வந்த நம்மவர்,'ஒரு படத்தைக் காமிச்சார்'.... நேத்து நான் பார்க்காதது.  'டோட்டம் போல்' வாசலுக்கு அந்தாண்டை பஸ் நிப்பாட்டுன இடத்தில் இருக்காம் !  அட ராமா...... அப்போ போர்ச்சுகீஸியர்களும் இங்கே குடியேறியிருக்காங்களா !  ஃபர்ஸ்ட் நேஷன் பீப்பிள்னு சொல்றது முதலில்  வந்த பாலிநேஷியா மக்களைத்தானே ?

கிளம்பி அதே லயன்ஸ்கேட் ப்ரிட்ஜ் வழியா  கபிலானோ நதிக்கரைக்குப் போறோம். ஒரு அரைமணி நேரம் ஆகியிருக்கும்.  இங்கே சால்மன்  மீன்கள் பண்ணை இருக்கு.  Capilano River Salmon Hatchery.
சின்னக்காடு போல இருக்கு.  நதிக்கரையில் தீயணைப்பு வண்டி நிக்குது.  எனக்கு 'திக்'னு ஆச்சு!   எங்கே தீ பத்துச்சோ ?  இப்பக் குழாய்களைச் சுருட்டிக்கிட்டு இருக்காங்க.  நம்மவர் போய் விசாரிச்சதில் இது பயிற்சி வகுப்புன்னு சொன்னாங்களாம். அப்பாடா....  

கைடு காட்டிய பாதையில் காட்டுக்குள் போறோம்.   அந்த 'நிறையநடை'யின் ஆரம்பம்!  நல்லவேளை வாக்கிங் ஷூ போட்டுருக்கேன்......  
ஒரு ஷெட் போல் இருக்கும்  கட்டடத்துக்குள் போறோம்.  இந்த மீன்களில்  நிறைய  வகைகள் இருக்கு போல ! வெவ்வேற பெயர்களில் இவைகளின் வளர்ச்சி, வாழ்க்கைன்னு விவரங்கள்  வச்சுருக்காங்க. கைடும் கொஞ்சம் விளக்கம் சொன்னாங்க. இதெல்லாம்  ஆத்தோரத்துலே முட்டையிட்டுப் போகுமாம்.  குஞ்சுகள்  வெளிவந்து ஆத்துலேயே வளர்ந்து   பெரிசானதும்  கடலுக்குப் போயிருதுங்க. கடல் மீன்களா வளர்ந்து பருவம் வந்ததும்,  திரும்ப ஆத்துக்கே வந்து முட்டையிட்டுட்டு போகுதுங்களாம் ! பிறந்த இடத்துக்குத் திரும்பி வருதுன்றது எவ்வளவு ஆச்சரியமான சமாச்சாரம் பாருங்க !!!!







இந்த நதியில் கொஞ்சதூரத்தில் ஒரு அணை கட்டப்போய், மீன்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு எண்ணிக்கை குறைஞ்சு போனப்ப..... 1971 இல் இந்தப் பண்ணையை ஆரம்பிச்சு, பசங்களை இங்கே வளர்த்து, கொஞ்சம் பெருசானதும் ஆத்துலே விடறாங்க.  இந்தப் பாதையை நாம் கண்ணாடித்திரைக்குப் பின்னால் பார்க்கும் வகையில் அமைச்சுருக்காங்க. பிலுபிலுன்னு மேயுதுங்க !
நல்லா காசு  சம்பாரிச்சுக்கொடுக்குதுங்களாம் இந்த சால்மன் மீன்கள். ச்சினூக் வகை சால்மன் மீன்கள் கிட்டத்தட்ட அஞ்சடி நீளமும் 61.4 கிலோ எடையிலும் இருக்குமாம்!  ஹைய்யோ !!!

மீன்களை ஆற்றில் விடும்பகுதி கட்டடத்துக்கு வெளியில்  இருக்கு. குனிஞ்சால்  க்ரில் வழியாகப் பார்க்க முடியும்.  கரடுமுரடா சரிவான பாதை அமைப்பு. அதுலே கொஞ்சம் பாலன்ஸ் பண்ணி நடக்கும்போது.... ஒரு காலில் வித்தியாசமா ஒரு ஃபீலிங்....  

சமதரைக்கு வர்றதே கஷ்டமா இருக்கு. காலை இழுத்துவச்சு ஒரு வழியா வந்தேன். பார்த்தால்......   the Soul left my Sole............. பெருமாளே......

முன்பாதத்தில் பாதி, அடியில் மடங்குது.  இந்த ஷூவுக்கும் ஒரு 'கதை' இருக்கே!   இந்தியாவில்போய்க்  கொஞ்ச காலம் இருக்கும்படியாச்சு.  அங்கே போய் தினமும் காலையில் நடக்கணும். நடந்து நடந்து உடல் பாதியாக இளைக்கணும், இளைக்கும் என்றெல்லாம் கனவுகளைக் கண்டபடியே.... வாக்கிங்  ஷூ ஒன்னு சென்னையில்  வாங்கினேன். நார்த் ஸ்டார் !  லைட் வெயிட் !(கதைக்கு வயசு 15 , கேட்டோ !)

வழக்கம்போல் புதுத்துடைப்பம் ரொம்ப நல்லா ஒரு வாரம் பெருக்குனதோடு சரி ! அப்படியே புதுசாவே இத்தனை வருஷம் குந்தியிருந்தது.  இப்போ  இந்தப் பயணத்தில் நடை அதிகம்னு தெரிஞ்சதும்,  உள்ளூரில் போடும் ஷூ கனமா இருக்கேன்னு இதை எடுத்துப் போட்டுப் பார்த்துட்டுப் பொட்டியில் வச்சேன்.  இன்னைக்குக் காலையில் இருந்து இதுவரை நல்லாத்தானே இருந்துச்சு ! இப்ப என்னவாம்.....

டூரிலிருந்து விலகி ஹொட்டேலுக்குப்போயிடலாமான்னா....   ரொம்ப தூரம் வந்துருக்கோம். இந்தக் காட்டிலிருந்து போக  வண்டி  ஏது ? நைலான் ஸோல் கழண்டு வந்துருக்கு.  கொஞ்சம் பிசின் போட்டு ஒட்டிக்கலாமுன்னு பார்த்தால்..... சூப்பர் க்ளூ, காட்டில் கிடைக்குமா ?  நம்ம விஞ்ஞான மூளையைக் கசக்கி, ச்சூயிங் கம் இருந்தால் தாற்காலிகமா ஒட்டிக்கும், இல்லே ?  ஆனால் ச்சூயிங்க் கம் வாங்கப் பொட்டிக்கடை இங்கெ ஏது ? 

விசாரங்கள்..... விசாரங்கள்..... நம்ம விஞ்ஞானி, ஒரு கயிறு போட்டுக்  கட்டிடலாமேன்னார். கயிறு ? தன்னுடைய  கைகுட்டையைச் சுருட்டிக் கட்டிவிட்டார்.  பாலத்தின் நின்னு மக்களை ஃபோட்டோ எடுத்துக் கொடுக்கறாங்க கைடு.  அப்படியே  உதட்டில் சிரிப்போடு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தாச்சு. 


 கிளம்பி பஸ்ஸுக்குப் போறோம். அதா... கைகுட்டையைக் காணோம்..... ஒரு காலை உதறி நடந்தாக் கொஞ்சம் சமாளிக்கலாம்.  எனக்கு அந்தமாதிரி நடக்க வரும்.....  ஆ.... அப்படியா ? எப்புடி ?
எப்பிடீன்னா இப்புடீ..... கீழே இருக்கும் சுட்டியில் பாருங்க!

சட்டாம்பிள்ளை........

 https://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_17.html

யாரும் கவனிக்காத அளவில் மெல்லக் கால் உதறி ஒருவழியா பஸ்ஸுக்குள் போயிட்டேன்.  கழட்டிக்கொடு என்னன்னு பார்க்கலாம்னு இவர் கேட்டுக்கிட்டே இருக்கார். அக்கம்பக்கம் பார்க்கவா ?

'பெருமாளே  இப்படிப் பண்ணிட்டயேடா.... இக்கட்டில் இருந்து காப்பாத்து'ன்னு மனசுக்குள்ளே  முணங்கிக்கிட்டே இருக்கேன். ஓடும் பஸ்ஸில் தெரியும் அக்கம்பக்கத்துக்குக் காட்சிகள் கண்ணில் படுதுதான்.ஆனால் மனசில் ஒன்னுமே பதியலை..... இன்னும் அஞ்சு, அஞ்சரை மணி நேரம் எப்படி சமாளிக்கப்போறேன்...... பெருமாளே.... கைவிட்டுடாதே....

பஸ் ஓரிடத்தில் நின்னதும்,  'எல்லோரும் இறங்கி என் கூட வாங்க'ன்னுட்டு கைடு முன்னால் போறாங்க.  கட்டக்கடைசியா நான் மெல்ல நடந்து சாலையைக் கடந்து எதிர்சாரிக்குப் போறேன்.  கவலைபடிந்த முகத்துடன் இவர் கூடவே வந்துக்கிட்டு இருக்கார். 
மொத்த குழுவிற்குமாக டிக்கெட்ஸ் வாங்கிவந்து எல்லோருக்கும் பிரிச்சுக்கொடுத்தாங்க, கைடு. கூடவே ஆளுக்குப் பதினைஞ்சு டாலர் டிஸ்கவுன்ட் கூப்பானும் ! ஆஹா.... உள்ளே செருப்புக்கடை இருந்தால் தேவலைன்னு மனசு கணக்குப்போடுது....

அப்போ மற்ற காலில்  ஏதோ  வித்யாசமான உணர்வு..... வலதுகாலைத் தூக்கி  ஸோல் எப்படி இருக்குன்னு தொட்டுப் பார்த்தால் கையோட வந்துருச்சு !   இப்ப இடதுகாலில் கொஞ்சூண்டு ஒட்டிப்பிடிச்சிருக்கும் ஸோலை லேசா இழுத்தவுடன்  ட்டடா.....

பெருமாளே பெருமாளேன்னு அரற்றினால் அவருக்கும் பேஜாரா இருந்திருக்காதா  ? ஆனாலும் அவர் ஷூ ரிப்பேர்காரரா என்ன ?  இப்போதைக்கு உனக்கு உடனடி உதவி இதுதான்னுட்டார் !

"பெருமாளே,  யூ ஆர் க்ரேட் "! 

எனி ப்ராப்லம் ?  நோ ! ப்ராப்லம் ஸால்வ்டு :-)

இப்ப ரெண்டு காலும் ஒரே மாதிரி ! கழண்டுவந்த ரெண்டும் குப்பைத் தொட்டிக்குப் போச்சு ! என் உயரம் சடார்னு ஒரு செமீ குறைஞ்சது.....................
ஆங்..... இப்ப எங்கே இருக்கோம்னு மூளை கேட்டதுக்கு பதில்.... தொங்குபாலம் !

தொடரும்...........:-)


3 comments:

said...

மீன் பண்ணை - நன்று.

கழன்று கொள்ளும் சோல் - பிரச்சனை தான். அதற்கும் ஒரு வழி கிடைத்ததே! :)

தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தானாக் கழண்டு பிரச்சனை பண்ணியதும் ...... ஸால்வ் பண்றேன்னு கழட்டிவிட்டுட்டது சூப்பர் !

எல்லாம் அவன் செயல் !

said...

ஹஹஹ
ஹோஹோஹோ
ஹிஹிஹி