Friday, June 14, 2024

மதிப்பெண் ஒன்னும் தேறாது போல....... ( அலாஸ்கா பயணத்தொடர். பாகம் 2 )

ஜன்னலோர இருக்கையில் போய் உக்கார்ந்ததும் ஆசையா எட்டிப்பார்த்தால்.... ரெக்கை !   இது கொஞ்சம் பரவாயில்லை..... நம்மூரில் இருந்து வரும்போது முழு ரெக்கையும் எனக்கே எனக்கு :-( கிளம்புனதும் சண்டையை ஆரம்பிக்க வேணாமுன்னு அப்போ இருந்தேன்.  எப்படியும் இன்றைக்கான மூன்றில் இன்னும் ரெண்டும், எட்டுமணி நேரமும் பாக்கி இருக்கு! 
"ராத்திரி நேர ஃப்ளைட். எப்படியும் இருட்டிலே ஒன்னுமே தெரியாது. நாம் ஸ்கைகௌச்  ( Sky Couch ) வாங்கியிருக்கோம். அதுக்கு இப்படித்தான்"

எந்த சமாதானமும் என் காதுக்கு ஏறலை. கொஞ்சம் மூஞ்சைத் தூக்கி வச்சுக்கிட்டேன், மறக்காமல்.

இந்த ஸ்கைகௌச் பற்றி, நிறைய உயர்வகுப்பில் போறவங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். தெரியாதவங்களுக்கு(மட்டும்) கொஞ்சம் விவரமாச் சொல்லிடறேன், ப்ளீஸ்!
நம்ம ஏர்நியூஸிலேண்டில் ரெண்டுவகை விமானங்களுக்குத்தான் இப்படி இருக்கு.போயிங் 777 & 787 க்கு மட்டும்தான்.  இதுவுமே 2011 இல்  தொடங்க இருந்து, இருக்கைகளில் கால் பக்கம் இருப்பதை மேலே சமமாக ஏத்தும் வகையில் அமைக்கவே கொஞ்சம் தாமதமாகி 2014 இல்தான் பயனுக்கு வந்துருக்காம். நாம்தான் ஏர்நியூஸிலேண்டில் நெடுந்தொலைவுப் பயணம் போனதே இல்லையே! 





எகானமி வகுப்பில் குறைஞ்ச விலைக்கு இதைக் கொடுக்கறாங்களாம்.  மூணு ஸீட்ஸ் இருக்கும் வரிசை முழுசும் நமக்கு ஒதுக்கிருவாங்க.  நாம் இருவர்தானே ? காலியாக இருக்கும் ஸீட்டுக்கு ஒரு தொகை நாம் அடைக்கணும். அந்தவரிசை நமக்கே நமக்கு.  அதுக்கான கூடுதல் நீளமுள்ள பெல்ட், சின்னதா ஒரு மெத்தை, தலையணை, கம்பளி எல்லாம் தனிப்பொதியாகத் தந்துருவாங்க.  அதை எப்படிப் பயன்படுத்தணுமுன்னு ஒரு FA நமக்குச் சொல்லுவார். மேலும் விவரங்களுக்கு  அச்சடிச்ச அட்டையும் இருக்கு. 

பெல்ட்டை முதலில் நமக்கு முன்னால் இருக்கும் ஸீட்டின் அடியில் இருக்கும் கம்பியில் மாட்டிட்டு, நம்ம  ஸீட்டின் கால்பகுதியை மேலேத்திக்கிட்டால் போதும்.  மூணு ஸீட்டுகளின் கால்பகுதியை ஏத்திவிட்டால்  சமநிலையில் ஒரு கட்டில் பலகை போல் ஆகிருது.  மெத்தையை விரிச்சுட்டு, தலையணையை வச்சுக்கிட்டுப் படுக்க வேண்டியதுதான் ! ஏற்கெனவே இருக்கும் நம்ம ஸீட் பெல்ட்டில் இந்த எக்ஸ்ட்ரா பெல்ட்டை மாட்டிக்கணும். ஸிம்பிள் இல்லே ? 
என்ன ஒன்னு, பழைய உடம்பா இருந்தால் ரெண்டுபேருமே கொஞ்சம் ஒருக்களிச்சுப் படுக்க முடியும். ஆனால்  இப்போ..... ப்ச்.... 

என்ன ஒரு வசதின்னா.... மூணு ஸீட்டும் நமக்கே என்பதால், யாரையும் தொந்திரவு செய்யாமல்  நாம் இஷ்டப்பட்ட நேரம்  எழுந்து போகலாம், வரலாம். 

 அடுத்து இப்பெல்லாம்  இன்ஃப்ளைட் வைஃபை கிடைக்குது.  ஏற்கெனவே நாம் வழக்கமாப்போற சிங்கப்பூர் ஏர்லைன்ஸில்  போனபயணத்தில் (2022)க்ளப் மெம்பர்களுக்கு  ஒவ்வொரு செக்டருக்கும் ரெண்டுமணிநேரம் ஃப்ரீ வைஃபை கிடைச்சது.  இப்ப இன்னும் கொஞ்சம்  கூடுதல் வசதி இருக்கலாம்.  

இங்கே ஏர்நியூஸிலேண்டில் லோகல் ஃப்ளைட்டுக்கும் ஃப்ரீ வைஃபை எல்லோருக்கும் இருக்கு.  நம்மூரில் இருந்து ஆக்லேண்ட் வரும்போது, ஃபேஸ்புக், ஜிமெயில் எல்லாம் பார்த்துக்கிட்டுத்தான் வந்தேன். இப்பவும்  கிடைச்சது.   இருக்கட்டும்,  என் பொழுதுபோக்கான ஃப்ளைட்பாத் கூடவே இதுவும்  கிடைச்சது மகிழ்ச்சியே ! வசதிகள்  இருந்தாலும் சாப்பாடு எப்படி இருக்குன்னு பார்த்துத்தான்  மதிப்பீடு செய்யணும்.


டின்னர் வந்தது.  உங்களுக்கெல்லாம்  ரொம்பவே விருப்பமான 'உப்புமா'  !!!!! கூடவே ரெண்டு கறிகளாம்.  நூத்துலே,  எழுபத்தியஞ்சு மைனஸ் !  

பசி ருசியறியாதுன்னு சொல்றதெல்லாம்.... உண்மையா ? ஊஹூம்.......
களைப்பா இருக்கே தவிரத் தூக்கம் வரலை. கொஞ்சநேரம் ஃபேஸ்புக் பார்க்கலாமுன்னா  அது அப்டேட்டே ஆகாம, இதுவரை பார்த்ததையேதான் காமிக்குது. ஃப்ளைட் பாத், டேட்லைனைத் தாண்டறோமுன்னு காமிச்சது. திரும்ப பதினைஞ்சாந்தேதி  புதன் கிழமைக்கு வந்துட்டோம். ஆளுக்குக் கொஞ்சநேரமுன்னு படுத்துத் தூக்கமும் ஆச்சு.

தரையிறங்க இன்னும் ரெண்டரை மணி  இருக்கும்போது, பொழுது விடிஞ்சுருச்சுன்னு ப்ரேக்ஃபாஸ்ட் கொண்டாந்து கொடுத்தாங்க.  அட்டகாசமான ப்ரேக்ஃபாஸ்ட் ஐட்டங்களை  ஒலிபரப்பிக்கிட்டு இருக்காங்க மற்ற மக்களுக்கு !   ஸ்பெஷல் மீல் என்பதால் ஊருக்கு முன்னால் நமக்கு வந்துருது.  அரைகுறை தூக்கக் களைப்புடன் அலுமினியம் ஃபாயிலைத் திறந்து பார்த்தால் சோறு !  
காலங்கார்த்தாலே எப்படி சோத்தைத் தின்னுவாங்கன்னு  ஒரு யோசனைகூட இல்லை..... சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் சோத்துக்குப் பதிலா குல்ச்சா.  ஆமாம்.... இந்த ஏர்லைன்ஸ்   Food Service Managers யாருக்குமே  ஸ்பெஷல்மீல்ஸ் வெஜிடேரியன் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு என்ன கொடுக்கணுமுன்னு தெரியாதா ? இட்லி தோசையா கேட்டோம் ?   வெறும்  ப்ரெட் டோஸ்ட் & காஃபி கூடப்போதுமே.... அப்படியே திருப்பி அனுப்பிட்டோம்.  அப்புறம் ஒரு சாயா மட்டும் குடிச்சோம்.  நூறும்  மைனஸ். 

இன்னும் ஒரு மணி நேரத்தில் தரைன்னு இருக்கும்போது  FA ஒருத்தர் வாழ்த்துஅட்டையும், சாக்லெட்டும்,  பழத்தட்டுமா வந்து  Happy Golden Anniversary ன்னு வந்து கைலுக்கிட்டு வாழ்த்தினார் !  வாழ்த்து அட்டையில்  மொத்த க்ரூ மெம்பெர்ஸும் கையெழுத்துப் போட்டுருக்காங்க.  


நமக்கோ இன்ப அதிர்ச்சி !  தகவல் நம்ம ட்ராவல் ஏஜண்ட் சொல்லியிருக்கணும் !  போகட்டும், ஸீரோ மார்க்குக்குப் பதிலா ஒரு இருபது கொடுக்கலாம் !  வெற்றியான மணவாழ்வின் ரகசியம் என்ன? ன்னு கேட்டவருக்கு,  என் பதில் 'ஒரு நாளுக்கு மூன்று'!  நமக்கு அப்ப ஒன்னு இப்ப ஒன்னுன்னு எப்பவுமே இல்லை ! 

நம்ம பொன்விழாக் கொண்டாட்டம் தொடங்கிருச்சு :-)     

வான்கூவரில் இறங்கும்போது அந்த ஊர் மணி பகல் மூணு!   அங்கங்கே நல்ல மரவேலைப்பாடுகள், தூண்கள்னு வரவேற்பில் வச்சுருக்காங்க.  The Musqueum Welcome னு பெயர் !  

Musqueum என்றால் நதிக்கரைப்புல் மக்கள்னு  சொல்லலாம். "People Of The River Grass"  இவுங்க இங்கே இருக்கும் ஃப்ரேஸர் நதி முகத்துவாரத்தருகில் ஒரு தனிக் குழுவாகவே வசிக்கறாங்க. ப்ரிட்டிஷ் கொலம்பியாவின் ஆதி குடிகளாகவும் இருக்காங்க போல ! தனி கலாச்சாரம், தனி மொழி, தனிக்கல்வி (ஏட்டுப்படிப்பெல்லாம் கிடையாது. வாழ்க்கைக் கல்விதான்!) ன்னு இருந்தவங்களை  வெள்ளையரின் ஆக்ரமிப்பு ஒருவழியா ஆக்கி வச்சுருக்கு.  போற இடத்தில் எல்லாம்  பாரம்பரியமா இருக்கும் பழக்கவழக்கத்தைக் கெடுத்துவைக்கிறதுக்கு இவுங்களுக்குச் சொல்லியாத்தரணும் ?  இப்பவும் ஒரு ஆயிரத்து முன்னூறுபேர் இந்தவகை 'இனம்' னு இருக்காங்கன்னு சொல்றாங்க.  
அமெரிக்க ஆதிகுடிகளை  இந்தியர்கள்னு நினைச்சுக்கிட்டு இருந்ததைப்போல இவுங்களையும் நினைச்சுருக்காங்க.  Musqueam Indian Reserve பெயர் வேற வச்சாச்சு ! 
இந்த ஃப்ரேஸர் நதி வழித்தடம் கூட ஒரு ரெட்டைத்தலை பாம்பு ஊர்ந்து போய்  ஏற்படுத்தியதாம் ! மஹா மோசமான விஷம் உள்ள பாம்பு. அதன் மூச்சுக் காத்துப் பட்டாலே அக்கம்பக்கம் எல்லாம் கருகி அழிஞ்சுருமாம். குழந்தைகளை  அந்தப் பக்கம் போகவிடாமல் பார்த்துக்கணும் என்பதே முக்கியம்.  (நம்ம காளிங்கனோட சொந்தக்காரனோ ??)  


 பாம்பு போகும்போது,  அதன்   கழிவு விழுந்த இடங்களில் ஒரு விதமான பூச்செடிகள் முளைச்சு வளந்ததாம். அந்தப் பூக்களுக்கு  Musqueam என்ற பெயர். அந்தப்பெயெரில் இருந்துதான் இவுங்க இனத்துக்கும் பெயர்  வந்துருக்கு !

உள்ளே புகுந்து பார்த்தால் சுவாரஸ்யமா இருக்குமுன்னு தோணுது. பார்க்கலாம் அதுக்கான நேரம் அமையணும். எல்லாம் கர்ணபரம்பரைக் கதைகள்தான் !!!!  ஒரு சின்ன க்ளிப் கிடைச்சது.  1.40 நிமிட். லிங்க் இதுதான். முடிஞ்சால் பாருங்க ! 
   

 https://sakiart.com/portfolio/the-double-headed-serpent/

Today, we are a strong, growing community of over 1,300 members. Many of our members live on a small portion of our traditional territory, known as the Musqueam Indian Reserve, located south of Marine Drive near the mouth of the Fraser River.
 Musqueam's ancestors have lived throughout and stewarded the Fraser River estuary for thousands of years. Today, portions of Musqueam's territory are called Vancouver, Burnaby, Richmond, New Westminster, Delta, North Vancouver, West Vancouver, Surrey, UBC Endowment Lands, YVR Airport and Coquitlam. 

 சம்ப்ரதாயங்களை முடிச்சுப் பெட்டிகளை எடுத்துகிட்டு வெளியே வந்து டாக்ஸி பிடிக்கும்போது மணி நாலு !  ஹொட்டேல் போய்ச் சேர  நாப்பது நிமிட் ஆச்சு. இத்தனைக்கும் தூரம்  பனிரெண்டு கிமீதான்.
வழியெங்கும் பசுமை ! இதுவும் எங்க ஊரைப்போலவே கார்டன் ஸிட்டி !

 
 


தொடரும் ....... :-)























6 comments:

said...

இங்கேயும் உப்புமா! ஹாஹா...

பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இரயில்/விமானப் பயணங்களில் கிடைக்கும் உணவு - சொல்லும்படியாக இருப்பதில்லை என்பது வேதனையான உண்மை.

மேலும் பயணம் குறித்து அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

said...

வாழ்த்து ஒரு இனிய ஆச்சர்யம்..  தகவல்கள் சுவாரஸ்யம்.

said...

அருமை அற்புதம் நன்றி

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரயில் பயணங்களில் குறைந்தபட்சம் நாம் வீட்டிலிருந்தும் உணவைக் கொண்டு போகலாம். விமானத்தில் அதற்கும் வழி இல்லையே......

said...

வாங்க ஸ்ரீராம்,

ஆச்சர்யம் எங்களுக்கும்தான் ! ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !