பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு 'யோசிச்சு' அந்த தோசைக்கடைக்கே போகலாமுன்னு சொன்னார் நம்மவர். அதான் மூணுவேளையும் தோசை மட்டுமில்லாம மற்ற ஐட்டங்களும் சமைச்சுக் கொடுக்கறாங்களாமே !
றையை விட்டுக்கிளம்புமுன் நம்ம சக்கரைக்குட்டிகளை க்ளிக்கிட்டு, கத்தி ஜெபம் பண்ணிக்கிட்டே கிளம்பினேன்.நேத்துப் போனமாதிரி சுத்தாமல்.... ஒரு லெஃப்ட் அப்புறம் ரைட்தான். டூர் கம்பெனி பஸ் ஒன்னு ..... பார்க்க நல்லாவே இல்லை. என்ன டிஸைனோ ?
பகல் நேர டேவீத்தெருவில் கலகலப்பு கம்மி. ஒரு கடைக்குள் நுழைஞ்சு சின்னதாக் கத்தி ஒன்னு வாங்கியாச். அப்படியே ஒரு தட்டும்! மாம்பழம் வச்சுத் திங்கணுமா இல்லையா !
தோசைக்கடையில் கூட்டமொன்னும் இல்லை. பகல் ரெண்டு மணி இப்போ ! லஞ்சு நேரம் முடிவுக்கு வருது போல ! கடைப்பணியாளர்கள் ஓடிவந்து உபசரிச்சாங்க. மொதலாளி சொல்லியிருந்தாராம், நாம் வருவோம்னு !!!! (நெசமாவா ? )
சரவணன் வரலையான்னு கேட்டேன். வேற ஒரு வேலையா இப்போதான் கிளம்பிப்போனார். நான் சரவணனின் மனைவின்னு அறிமுகப்படுத்திக்கிட்டாங்க, மொதலாளியம்மா ! அட !
நம்மவர் மட்டர் பனிர், ரைஸ் & சப்பாத்திக்கு சொன்னார். எனக்கு அவ்வளவாப் பசி இல்லை. ப்ரேக்ஃபாஸ்ட் மெனுவைப் பார்த்துக்கிட்டு இருந்தவள், புனுகுலு இப்ப இருக்கா, இல்லை காலையில் மட்டும்தானான்னு கேட்டதுக்கு, செஞ்சு தர்றோமுன்னு சொன்னாங்க. இது நம்ம போண்டா மாதிரிதான். திருநெல்வேலி தர்மராஜ், இன்றைக்கு சமயலறையில் ! வந்து நம்மைக் கண்டுக்கிட்டுப்போனார் !
இங்கே ப்ரேக்ஃபாஸ்டுக்கு இட்லி உண்டுன்னு சொன்னதை 'நம்மவர்' மனசில் குறிச்சுக்கிட்டார்.
மொதலாளியம்மா, ரொம்ப ஸ்வீட்.
நாங்க சாப்பாடு முடிச்சுக்கிளம்பும்போது மணி மூணு. நிதானமா நடந்து , வழியில் இருக்கும் அழகை க்ளிக்கிக்கிட்டே போறோம். நம்ம தெரு திருப்பத்தில் ஒரு கம்யூனிட்டி கார்டன் ! நம்மூரிலேயும் சில இடங்களில் இது இருக்குன்னாலும், இங்கே இடம் ரொம்பவே பெருசு. பொதுவா காலி மனையொன்னை இப்படி தோட்டம் வைக்க விட்டுவைப்பாங்க. அக்கம்பக்க வீட்டுக்காரர்களும், தோட்டவேலை ஆர்வம் உள்ள மக்களும் சேர்ந்து காய்கறிகள், பூச்செடிகள் இப்படி வச்சுப் பராமரிப்பாங்க. இதெல்லாம் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும். இங்கே என்னன்னா.... நகர மையத்தில்! ப்ரைம் லொகேஷன் இல்லையோ !!!!
பெரிய கட்டட நிறுவனங்கள் இப்படி இடத்தை வாங்கிப்போட்டுட்டு, சில வருஷங்களுக்கு கம்யூனிட்டி கார்டனுக்கு விடுவாங்கன்னும், இப்படிச் செய்வதால், நிலத்துக்கு உண்டான வரியின் தொகையில் நல்ல கழிவு கிடைக்குமுன்னும் ஒரு பேச்சு ! இந்த இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் முதலில் இருந்ததுன்னும் ஒரு தகவல் கிடைச்சது.
அட ! இப்ப இதே இடத்துக்கு முன் எதிர்வாடையில் ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருக்கே !
கிட்டப்போய்ப் பார்த்தால்..... இங்கே புதுசா அடுக்குமாடிக் கட்டடம் வரப்போகுதுன்னு அறிவிப்பு ! இவ்ளோ செடிகளின் கதி என்ன ஆகும் ? ப்ச்....
இந்த தோட்டத்தாண்டை இருந்து பார்த்தால் நம்ம ஹொட்டேல் தெரியுது !
அறைக்குத் திரும்பியதும் சக்கரைக்குட்டி காத்திருக்கு ! பொறு ! இப்பதான் கத்தி வந்துருச்சே ! ச்சும்மாச் சொல்லக்கூடாது...... அப்படி ஒரு இனிப்பு !!!!
வேறெங்கே போகலாமுன்னு பார்த்ததில், ஒரு கோவிலுக்குப்போனால் தேவலைன்னு தோணுச்சு. வலைவீசுனதில் ஒரு பத்துப்பனிரெண்டு கோவில்கள் இருக்குன்னு தெரிஞ்சது. கோவில்கள் திறந்திருக்கும் நேரம்தான் ஒவ்வொன்னும் ஒருவிதம் தவிர ஒவ்வொன்னும் ஒரு ஏரியாவில். நம்ம ஹொட்டேலில் இருந்து சுமார் 26 - 30 கிமீ தூரம் வேற ! கூகுள் மேப் சொல்ற டைமிங் எல்லாம் நடைமுறைக்குப் பக்கம் இல்லவே இல்லை.....
கோவில்னு நினைச்சுட்டதால் ஒரு கோவிலுக்குப் போயே ஆகணும் போல இருக்குன்னு ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவிலுக்குக் கிளம்பினோம். மாலை ஆறரைக்குத்தான் கோவில் திறக்குறாங்க.
இங்கே நம்மூரிலும் மாலை ஆறரைக்கு பெரிய பிள்ளையார் கோவிலும், ஏழு மணிக்கு இன்னொரு பிள்ளையார் கோவிலும் திறப்பாங்க. வேலை முடிஞ்சு வர எப்படியும் அஞ்சரை ஆறு ஆகிருதுல்லே ? அதனால் இந்த டைமிங் நமக்குப் பழகிப்போச்சுதான்.
டாக்ஸி பிடிச்சுக் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி ஏழுக்குச் சமீபம். வழியில் பயங்கர ட்ராஃபிக். டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி. இங்கே இதுவரை நாம் பயணம் செஞ்ச டாக்ஸி ஓட்டுநர்கள் எல்லோரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இங்கேயே பிறந்து வளர்ந்த பஞ்சாபி மக்களும் ஹிந்தி நல்லாவே பேசறாங்க. இப்போ இந்த டாக்ஸி ஓட்டும் இளைஞர் பெயர் அர்பித். கோவில் வாசலில் இறக்கிவிட்டவர், காத்திருக்கவான்னு கேட்டதுக்கு, வேணாமுன்னு சொன்னது நாம் செய்த தவறு. கோவிலில் எவ்வளவு நேரம் ஆகுமுன்னு நமக்குத் தெரியாதில்லையா ?
எதுக்கும் இருக்கட்டுமுன்னு அவர் மொபைல் நம்பரை வாங்கி வச்சுக்கிட்டோம். தேவைப்படும்போது கூப்பிடுங்கன்னு சொல்லிட்டுப்போனார்.
குடியிருப்புப் பகுதியில் வீடுகளோடு வீடாக இருக்குக் கோவில். வாசல் அலங்காரமும் கதவும்தான் வித்தியாசப்படுத்துது! அலங்காரக்கதவைத் திறந்து உள்ளே போறோம்.
சின்னதாக இருக்கும் முன்னறையில் ஒருபக்கம் சின்ன மேடையில் புள்ளையார். நமக்கெதிரே இன்னொரு ஜோடிக்கதவுகள். நமக்கிடப்பக்கம் ஒரு சின்ன அறை, கோவில் அலுவலகம். நம் வலப்பக்கம் கீழே பேஸ்மென்ட்டுக்குப் போகும் படிகள். அங்கேதான் காலணிகளுக்கான ஷெல்ஃப் வச்சுருக்காங்க.
காலணிகளை அங்கே விட்டுட்டுப் படியேறி மேலே வந்து புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு மற்ற கதவுகளைத் திறந்து உள்ளே போறோம். நல்ல பெரிய ஹால். எதிர்ப்பக்கம் கடைசியில் மூலவர் சந்நிதி ! திருவாச்சி எல்லாம் வச்சு அலங்கரிச்ச மேடையில் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் படம் ! சின்னக்கூட்டமாக் கொஞ்சம் பக்தர்கள் உக்கார்ந்து ஏதோ ஸ்லோகம், புத்தகம் பார்த்துச் சொல்லிக்கிட்டு இருக்காங்க.
சந்நிதிக்கு வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் அயோத்யா ராம்லல்லாவுமாகப் படங்கள் !
இடப்பக்கச் சுவரில் சின்ன மாடங்களில் ஹனுமன், சிவலிங்கம், ஸ்ரீராமர். வலப்பக்க மாடங்களில் ஸ்ரீக்ருஷ்ணரும், புள்ளையாரும்.
சிலைகள் வருமுன் படங்களாக வைத்துப் பூஜை நடத்தியிருப்பார்கள் போல ! ஒவ்வொரு சிலையாக வந்துகொண்டு இருப்பதாகத் தோணுது !
ஸ்ரீ மஹாலக்ஷ்மி சிலை விரைவில் வரும் என்று நம்பறேன். நல்லா அலங்கரிச்ச ஒரு கலசத்தில் ஸ்ரீலக்ஷ்மியை ஆவாஹனம் செஞ்சுருக்காங்க. சந்நிதிக்குமுன் இருக்கும் கலச உண்டியல் அழகு !
வாசலுக்கருகில் ஆரத்தி சமயம் ஒலிக்கும் வாத்தியங்கள் !
கோவிலுக்கு வயசு 34 ! 467 E 11th Ave E, Vancouver, BC V5T 2C8, Canada என்பது விலாசம். வெளிநாடுகளில் இருக்கும் கோவில்களில் எல்லாம் தரிசன நேரங்கள், உள்ளூர் பக்தர்களின் வசதிகளைப் பொறுத்துதான் இருக்கும். வாரநாட்களில் காலை, மாலைன்னு திறந்து வைக்க முடியாதே. எல்லோரும் வேலைக்குப் போகும் மக்களில்லையோ !!!
கொஞ்சநேரம் உக்கார்ந்திருந்து மனதுக்குள் தெரிஞ்ச நாலு ஸ்லோகம் சொல்லிக் கும்பிட்டபின் கிளம்பினோம். பக்தர்களோடு உக்கார்ந்து ஸ்லோகம் சொல்லிக்கிட்டு இருந்தவர்களில் ஒரு பெண் எழுந்துவந்து ஸ்வாமி ப்ரஸாதமாக ரெண்டு பேரீச்சம்பழம் கொடுத்தாங்க.
கோவிலைவிட்டு வெளிவந்தப்பதான் எப்படி திரும்பிப்போகப்போறோம் என்ற நினைப்பு வந்துச்சு. அதான் அர்பித் கொடுத்த நம்பர் இருக்கேன்னு பார்த்தால்....... நெட் கனெக்ஷன் இல்லாமல் எப்படிக்கூப்பிடுவது ?
முதல் தவறுக்கு முன்னால் செய்த பெருந்தவறு என்னன்னா.... நம்மவர் ஃபோனில் ரோமிங் வசதியைச் சேர்க்காமல் விட்டது. நம்ம நியூஸி டெலிகாம் சர்வீஸ், கனடா மண்ணில் கால் வச்சவுடன், ரோமிங் போடவான்னு கேட்டப்ப , சரின்னு ஒரு சொல் சொல்லாமல் விட்டது. அதான் ஹொட்டேலில் வைஃபை இருக்கு, வெளியே நகரின் மத்தியில் எல்லாம் இலவச வைஃபை இருக்கு. மூணு நாளுக்கு இது வேணுமான்னவர், உனக்கு அலாஸ்கா பயணத்துக்கு நெட் கனெக்ஷனுக்குப் பணம் கட்டியிருக்குன்னு கூடுதல் தகவல் சொல்லி என் மனதில் பாயஸம் வார்த்தார் !
இப்ப என்ன செய்யறது ? ஙேன்னு கோவிலுக்கு வெளியில் நின்னுக்கிட்டு இருக்கோம். அப்ப அந்தப்பக்கமா வந்த ஒரு இந்தியரிடம் , அர்பித்தின் எண்ணைக் காமிச்சு, அதுக்குக் கூப்பிடணும் என்றதும் அவர் ஃபோன் போட்டுக் கொடுத்தார். ரிங் போகுது. யாரும் எடுக்கலையேன்னால் மெஸேஜ் விடச் சொல்லுச்சு.... நம்ம எண்ணைச் சொல்லிக் கூப்பிடுங்கன்னுட்டு ஃபோனைத் திருப்பிக்கொடுத்து நன்றியும் சொன்னோம்.
கொஞ்ச நேரத்தில் அர்பித் கூப்பிட்டு, வேறொரு பயணியை இறக்கிவிடரொம்ப தூரம் போய்க்கொண்டு இருக்கேன். திரும்பிவர ஒன்னரை ரெண்டு மணி நேரம் ஆகலாமுன்னு சொன்னார். சட்னு இன்னொரு டாக்ஸியை இந்தக் கோவிலுக்கு அனுப்புங்கன்னு சொல்லி இருக்கலாம், இல்லே.............. சொன்னோமா ? ஊஹூம்.....
கோவிலுக்குள்ளே போய் யாரையாவது கேட்கலாமுன்னு போனார். அங்கே ஒரு புண்ணியவான், ஒரு டாக்ஸி கம்பெனியைக் கூப்பிட்டு வரச் சொல்லிட்டார். கோவிலில் இருந்து வெளிவந்த இன்னொரு தம்பதியர், தனியா வாசலில் (அடுத்த வீட்டு பெஞ்சு ) உக்கார்ந்திருந்த என்னிடம், 'உங்களை எங்கியாவது கொண்டு விடணுமா'ன்னு கேட்டதுக்கு, நன்றி சொல்லி, டாக்ஸி வருதுன்னேன். ஒரு நெட் கனெக்ஷன் இல்லாம எவ்ளோ கஷ்டம் பாருங்க..... அப்படி இப்படின்னு மணி எட்டேகாலாயிருக்கு ! அங்கே வசந்தகாலம் என்பதால் இன்னும் வெளிச்சம் இருக்கு.
டாக்ஸியில் ஹொட்டேலுக்குத் திரும்பும்போது, நேரா அறைக்குப் போகாமல் எங்கியாவது டின்னரை முடிச்சுக்கிட்டே போயிடலாமுன்னு அந்த டாக்ஸிக்காரரிடம் ( பஞ்சாபிதான்), நல்ல இண்டியன் ரெஸ்ட்டாரண்டில் இறக்கிவிடுங்கன்னதும், அதே போல் இறக்கிவிட்டுட்டுப் போனார்.
அங்கேயும் குறுகலான இடம்தான். கூடவே ஒரு Bபாரும். அதுலேதான் காசுன்னார் நம்மவர். மலாய் கொஃப்தா & கார்லிக் நான் ஆச்சு. பில்லுக்குப் பணம் அடைக்கும்போது, ஒரு டாக்ஸியைக் கூப்பிடுங்கன்னு கேட்டுக்கிட்டு, ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம்.
மணி பத்தைத்தாண்டியிருக்கு. வாசல் மரங்களில் விளக்கலங்காரம் !
லாபியின் அடுத்த பக்கம் ஒரு வின்டேஜ் வண்டி. க்ளிக் க்ளிக் !
நாளைக்கும் ஒரு டூர் ஏற்பாடாகி இருக்கு. ரெடியா இருங்க. போகலாம்.
வலை இல்லாமல் வாழ்வது கஷ்டம் என்று பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட நாள் இது !
தொடரும்........:-)
7 comments:
டூரிஸ்ட் பஸ்ஸுக்கு பின்னால் இருக்கும் கட்டிடம் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை மூணா முடிச்ச மாதிரி இருக்கு!
கோவில் - சர்ச்ல சங்கரனை வச்சா மாதிரி இருக்கு!
வலையில்லாமல் வாழ்வது கஷ்டம் - உண்மை. ஆனால் அப்படியும் சில நாள் தேவையாக இருக்கு! எனது சில பயணங்களில் நெட் ஒர்க் கிடைக்காது! குறிப்பாக மலைப் பிரதேசங்களில் :) நீண்ட நேரம் வலையில்லாமல் அப்படி ஒரு அமைதி!
பயணம் சிறப்பாகத் தொடர்கிறது. மேலும் தொடரட்டும்.
// மூணா முடிச்ச மாதிரி இருக்கு! //
மூணா மடிச்ச மாதிரி இருக்கு!
வாங்க ஸ்ரீராம்,
ஹாஹா ஹாஹா
அது அந்த ஆஸ்பத்ரிதான் !ரெண்டுமே பிரிட்டிஷ்காரன் வேலை இல்லையோ !!!
சர்ச்..... உண்மையிலேயே பழைய சர்ச் விற்பனைக்கு வந்தால் நாங்க வாங்கிருவோம், கோவிலாக மாற்றுவது சுலபம்.ரிஸோர்ஸ் கன்சென்ட், பார்க்கிங் ஸ்பேஸ் னு கஷ்டப்படவேணாம் !!!!
வாங்க வெங்கட் நாகராஜ்.
மலைப்பகுதி அமைதியை நாமாகக் கெடுக்கவேணாம்தானே !
எப்படி இப்படியெல்லாம் காலப்போக்கில் மாறியிருக்கோம் பாருங்க....
கோவில் அழகாக இருக்கிறது. "சிலைகள் ஒவ்வொன்றாக வந்துகொண்டு இருக்கிறது" அப்படித்தான் தோன்றுகிறது.
வலையில்லாமல் சிரமம்தான்.
வாங்க மாதேவி,
விஞ்ஞான வளர்ச்சி, சனத்தை ரொம்பவே கெடுத்துவச்சுருக்குப்பா !
இப்பெல்லாம் குழந்தைகள் பிறக்கும்போதே ரிமோட்டைத் தேடுதுங்க!!!!
நம்ம பேரன், எந்த ரிமோட் எதுக்குன்னு கூடத் தெரிஞ்சுவச்சுருக்கான். ஒன்னேகால் வயசு :-)
Post a Comment