Wednesday, June 12, 2024

அலாஸ்கா பயணத்தொடர் ....... பாகம் 1


ரொம்ப நாளாச்சு இல்லே..... பயணம் போயே.... இதுவரை போகாத, ஆசைப்பட்ட இடங்களின்  பெயர்களை எழுதிப் போட்டு வச்சுருக்கும் வாளிக்குள்  துழாவினால்  வந்தது  அலாஸ்கா. 
நினைச்சால் உடனே கிளம்பிப்போக இது என்ன நம்ம தாய்மண்ணா ?  காலநிலை, காசு, நம்ம உடல்நிலைன்னுன் பல சமாச்சாரங்களையும்  அலசிப்பார்த்துத்தானே முடிவு செய்யணும், இல்லையோ ?

ஏற்கெனவே ரெண்டு முறை திட்டம் போட்டும் கடைசி நிமிட்டில் போகவிடாம நிறுத்தியதில் இந்த சனியன் கோவிட்டும் உண்டு. 

இது நம்ம பொன்விழா ஆண்டு என்பதால்  இந்தமுறை தவறவிடக்கூடாதுன்னு இருந்தோம்.

 ஒரு ரெண்டு வாரம் போதும். போனோம் வந்தோம்னு இருக்கலாம்.  முதலில் நம்ம ரஜ்ஜுவுக்கு, ஹாஸ்டலில் இடம் இருக்கான்னு கேட்டு வச்சுக்கிட்டோம்.  
ட்ராவல் ஏஜண்டு யார்னு முடிவு பண்ணிட்டு, ஹௌஸ் ஆஃப் ட்ராவல் ஆஃபீஸுக்குப் போய் விவரம் வாங்கியாச். 

நியூஸியில் இருந்து வான்கூவர் (கனடா ) போய், அங்கிருந்து  அலாஸ்கா (அமெரிகா) போகும் க்ரூயிஸ் கப்பலில் போய், திரும்ப வான்கூவர் வந்து, அங்கிருந்து நியூஸி. நம்ம ஊரில் இருந்து நேரடி விமானம் இல்லை என்பதால்  ஆக்லேண்ட் போய் அங்கிருந்து வான்கூவர் போகணும். போகும்போது 13 மணி நேரப் பயணம். வரும்போது 14 மணி நேரம்.

ரெண்டு மாசமா, க்ரூயிஸ் கம்பெனி,   'செய்ய வேண்டாதது, செய்ய வேண்டியது,  அது இது'ன்னு ஏகப்பட்ட விவரங்களை அனுப்பிக்கிட்டே இருக்கு ! போட்டுக்கும் உடைகளின் பட்டியல்கூட !  நம்மவர் ஏறக்கொறைய மனப்பாடம் செஞ்சு வச்சுக்கிட்டு, 'குளிர் தாங்க முடியாமல் இருக்கும். அதுக்கு வேண்டிய லைஃப் ஸேவர்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ'ன்றார்.  புதுசா வாங்கிக்கணுமுன்னாலும் ஓக்கேவாம்.  நம்வீட்டு மொழியில் லைஃப் ஸேவர் என்றால் தெர்மல் உள்ளுடைகள்.  போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு DVT Stockings கூட.  நம்ம  ஃபிஜி பண்டிட், கனடா போய் வந்தவர், டிவிடி பாதிப்பால் ரெண்டு மாசம்வரை நடக்க முடியாமல், கஷ்டப்பட்டதைப் பார்த்ததும்.... அவ்ளோதான்.


குளிர் நடுக்கத்தில்  என்  விரல்கள் விரைச்சுப்போய் கெமெரா பட்டனை அமுக்க முடியாமல் போனால் படமெடுக்க முடியாதே.....  காட்சிகள் போனாப் போனதுதானே.... அப்புறம் ஐயோன்னா வருமா அம்மான்னா வருமா.... டச் ஸ்க்ரீன் க்ளௌவ் எங்கே கிடைக்குமுன்னு தேடித்தேடி, வலையை வீசி,  மலையேறும் (எவரெஸ்ட் ? ) மக்களுக்கான உடைகள் விற்கும் கடைக்கு ஓடி,  ஒரு ஜோடி வாங்கியாச். எனக்குத்தான் மனசாகலை..... இவ்ளோ விலையான்னு !  'உன் பதிவுக்கான படங்கள் இல்லைன்னா எப்படி'ன்னு என்னை சமாதானம்  செஞ்சார் !  பாவம். உங்கமேலே எவ்ளோ அக்கறை பாருங்க ! 

எனக்குக் கடலும் கப்பலும் பிடிக்கும் என்றாலும் ஒரு பயமும் உண்டு.  கடற்பயணம் ஆகறதில்லை..... இங்கே உள்நாட்டில்  சிலமுறை ஃபெர்ரியில் போய் வந்தப்ப..... ஒவ்வொரு முறையும் 'டேஷ்'தான்.  ஒருமுறை, மூணுமணிநேரப் பயணத்தில்  இடைவிடாமல், டேஷ் டேஷ்....   எல்லோரும் டெக்கில் நின்னு டால்ஃபின்களை ரசிக்கும் சமயம், நான் வாஷ்பேஸினைக் கட்டிப்பிடிச்சுக் கிடந்தேன்.  அதனால், நம்ம குடும்ப மருத்துவரிடம் சொல்லி டேஷுக்கான மாத்திரைகள்  வாங்கி வச்சதும் கொஞ்சம் நிம்மதியாச்சு.  மகளும் பயமில்லை என்றுதான் சொன்னாள். எனக்குக் கற்குடல் இல்லைன்னேன் !  தேன்நிலவுப்பயணமா  மகளும் மருமகனும் கரீபியன் க்ரூயிஸ் போய் வந்தாங்கதான். 

நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்று கப்பல்காரர் சொன்னதும், நம்ம வாக்கிங் ஷூக்களையெல்லாம் தூசுதட்டி எடுத்துச் சுத்தம் பண்ணி வச்சோம். இப்படி ஒவ்வொன்னாப் பார்த்துப்பார்த்து வாங்கி, பேக் பண்ணின்னு நாட்கள் ஓடியே போச்சு. 

கிளம்ப றதுக்கு ரெண்டு நாட்களுக்கு முன்னால் உள்ளுர்த் தோழியின் அம்மா, சாமிகிட்டே போயிட்டாங்க.  நேத்து,  ஃப்யூனரல் பார்லரில் அவுங்களைப் பார்க்கும் ஏற்பாடு இருந்ததாம்.  நான் மற்ற வேலைகளில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால்,   ஃபேஸ்புக் பார்க்கவே இல்லை. பேரனும் மகளும் வேற வந்துருந்தாங்க.  நம்ம வீட்டுச் செடிகளில்  எதைஎதை எப்படிக் கவனிச்சுத் தண்ணீர் ஊத்தணும் என்று சொல்லி, இப்போ குளிர்காலம் என்பதால் வாரம் ஒருநாள் கொஞ்சமா ஊத்தணும் என்ற விவரமெல்லாம் சொல்லவேண்டி இருந்தது. 

பயணத்துக்கு வேண்டிய துணிமணிகளைப் பெட்டியில் அடுக்கி முடிச்சுட்டு, ராத்திரிதான் ஃபேஸ்புக் பார்த்தேன்.  அடடா.....  பார்வை நேரம் எல்லாம் சாயங்காலமே முடிஞ்சு,  மறுநாள் எரியூட்டல்  என்ற அறிவிப்பு வந்துருந்துச்சு.   மதியம் பனிரெண்டரை முதல் மூணு மணிவரை. 




பிற்பகல் நாலு மணிக்குத்தான் நமக்கு ஆக்லேண்ட் ஃப்ளைட்.  ஒரு ரெண்டு மணிக்குக் கிளம்பினால்  போதும் என்றபடியால்.... வழக்கம்போல் நம்ம ரஜ்ஜுவை முதல் நாளன்றே ஹாஸ்டலில் விடாமல் கிளம்பும் நாளே கொண்டுபோய் விடலாமுன்னு முடிவு செஞ்சு அதே போல் ஆச்சு.  எப்பவும் போகும் பழக்கப்பட்ட இடம் என்பதால்  அங்கே போய் கூண்டைத் திறந்ததும்,  ஒரு விநாடி யோசிச்சவன், திறந்து வச்சுருக்கும் அறைக்குள் போய் சுத்திப்பார்த்தான்.  கண்ணைப்போல் பார்த்துக்குவேன்னு ஹாஸ்டலம்மா சொன்னாங்க.  ஏற்கெனவே அங்கே ரொம்ப நல்ல பெயர் வாங்கியிருக்கான் ! அழிசாட்டியம் காமிக்கிறதெல்லாம் நம்மாண்டைதான் ! 


ரஜ்ஜுவை விட்டுட்டு வந்ததும்,  பயணத்துக்கான பெட்டிகளை ஹாலில் கொண்டு வச்ச நம்மவர்,  அவருடைய பெட்டியை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து அடுக்கிட்டுப் பூட்டைப் பூட்டினவர்,  வேறெதற்கோ திரும்பத்திறக்கப்போய் பூட்டின் நம்பர் லாக்கில்  என்னவோ  ஆகிப் பூட்டைத் திறக்கவே முடியலை.  அது அந்த TSA Lock என்றபடியால்.....   பூட்டு ரிப்பேர் கடையைத் தேடிப் போறேன்னு  பெட்டியைத் தூக்கிட்டு போனார். 

கடைசி நிமிட் வேலைகள் எல்லாம் செஞ்சுக்கிட்டே ,  போனவரைக் காணலையேன்னு கொஞ்சம் கவலைப்பட்டேன்..... சுமார் ஒரு மணி நேரம் கழிச்சுத் திரும்பினவர்,   பூட்டைத் திறக்க வழி இல்லைன்னு தெரிஞ்சதும், வேறொரு பூட்டுக் கடைக்குப்போய்,  பூட்டை வெட்டி எடுத்துட்டுப் புதுப்பூட்டு வாங்கிப் போட்டதாச் சொன்னார். 

மனசுலே ஒரு பக்கம், தோழியின் அம்மாவின் நினைவு வந்துக்கிட்டே இருக்கு.  நம்மிடம் நல்ல பிரியமா இருப்பாங்க. ஒரு பத்து நிமிட் போயிட்டு வந்துறலாமேன்னு சட்னு கிளம்பிப்போனோம்.  பார்லரில் நல்ல கூட்டம். நெருங்கிய நண்பர்கள்  இரங்கல் செய்திகளைச் சொல்லிக்கிட்டு இருக்காங்க. மேடையில் பெட்டியில் இருக்கும் அம்மாவாண்டை போய், கொஞ்சம் பூக்கள் எடுத்துப் பாதங்களில் இட்டு வணங்கினோம்.  நற்கதி அடையணுமுன்னு எம்பெருமாளை வேண்டிக்கிட்டேன்.  கண்ணில் பட்ட நண்பர்களுக்கு ஒரு தலையசைப்பு.  ஒரு பத்து நிமிட்போல ஓரமா நின்னுட்டு,  வீட்டுக்கு ஓடி வந்தோம்.  வீட்டுக்கதவைப் பூட்டும்வரையில் வேலைகள் அடங்குதா என்ன ? 

கடைசியில் ஏர்ப்போர்ட் போய்ச் சேரும்போது மணி ரெண்டரை.  பெட்டிகளை  நேரா அனுப்பச் சொல்லிட்டு, ரெண்டு  ஃப்ளைட்டுக்குமான  போர்டிங்பாஸ் வாங்கியாச்.  முதல் முறையா  ஏர்நியூஸிலேண்டில் தொலைதூரப் பயணம் போறோம்.  ஒவ்வொரு ஏர்லைன்ஸுக்கும் ஒவ்வொரு சட்டதிட்டம் இருக்கே. இதுலே  ஆளுக்கு ஒரே ஒரு பெட்டிதான் அனுமதி.  அதுவும் 23 கிலோ எடைக்குள்தான் இருக்கணும்.  கையில் கொண்டு போகும் சின்னப்பெட்டி  எல்லோரையும் போல் 7 கிலோ.  நம்ம பெட்டிகளை எடை போட்டப்ப  எங்க  ரெண்டு பெட்டிகளுக்கும் சேர்த்தே 24 கிலோதான் இருந்தது. 

 கைப்பெட்டியையும் தனியா எடைபோட்டு ஒரு ஸ்டிக்கர் போட்டாங்க.  அதுவுமே ஏழு கிலோ இல்லை. நம்மவர் ஒரு Bபேக்Pபேக் மட்டும்தான்.  நாலு கிலோ இருந்தது.
சாயங்காலம் அஞ்சரைக்கு ஆக்லேண்ட் போய்ச் சேர்ந்தாச்சு.   இங்கிருந்து  இன்ட்டர்நேஷனல் டெர்மினல் போகணும். ஷட்டில் சர்வீஸ் இருக்கு.  அங்கே போனால்  பஸ்  நம்மை இறக்கிவிட்ட இடத்திலிருந்து   டெர்மினல் வாசலுக்குப்போக  சுத்த வேண்டியதாப் போச்சு.  விரிவாக்க வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. உள்ளே போனதும் பார்த்தா ஏகப்பட்ட மாறுதல்கள். 

இங்கே வந்தே ஒரு பதிமூணு வருஷமாச்சு.  அதுவும்  அப்போ நாம் வந்த  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  விமானம்  நம்மூரில் இறங்க முடியாமல்  ஏர்ப்போர்ட்டை மூடி வச்சுருந்ததால்.....  பனிமழையில் ரன்வேக்கெல்லாம் கடும்பாதிப்பு.  அதனால் ஆக்லேண்ட்க்குத் திருப்பி விட்டு அங்கே போய் ஒரு நாள் இருந்துட்டு, மறுநாள்  நம்மூருக்குக் கூட்டிவந்து இறக்கிவிட்டாங்க. 


நமக்கு எட்டுமணிக்குதான் ஃப்ளைட்.  கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துட்டு,  மூச்சுப் பயிற்சி (யோகா )செஞ்சுட்டு, இமிக்ரேஷன், செக்யூரிட்டி செக் எல்லாம் முடிஞ்சு, ப்ளேனுக்குள் போகும்போது மணி ஏழே முக்கால். 

ஆங்........ சொல்ல மறந்துட்டேனே............   இன்னிக்குக் காலையில் என்ன ஆச்சுன்னா.... நம்மவர் ஷேவ் செஞ்சுக்கும்போது மீசையை ட்ரிம் செய்யப்போய் எல்லாம் சரிவராம , மீசையை முழுசா எடுத்துருக்கார்.   பார்த்துட்டு எனக்கு 'திக்'னு ஆச்சு!  யாரோ வேற ஆள் போல..... யக் .
நம்ம வழக்கப்படி அப்பப்போ ஒரு க்ளிக் எடுக்கும்போதெல்லாம் கண் கடி....... ஈ யாள் யாரா ?    
 தொடரும்............ :-)





8 comments:

said...

ரஜ்ஜு அவ்வளவு சமர்த்தா....   அது முன்னாலேயே உணர்ந்திருக்கும், 'கிளம்பிட்டாங்கையா...  கிளம்பிட்டாங்க'ன்னு!

said...

கடைசி நிமிட தவிர்க்க முடியாத வேலைகள் திக்திக் நிமிடங்கள்தான் போல...  மூன்று மணி நேரத்தில் ஆக்லேண்ட் வந்தாச்சா?

said...

மீசை இல்லாமல் ஸார் அழகாகத்தான் இருக்கார்.  வித்தியாசமா இருக்கார்.

said...

அலாஸ்கா பயணம் தொடக்கம் - மகிழ்ச்சி. உங்கள் வழி நாங்களும் பயணம் தொடங்கி இடங்களைக் காணக் காத்திருக்கிறோம்.

ரஜ்ஜு - சில நாட்கள் வீட்டிலிருந்து வெளியே - சோகம் தான்.

மீசையில்லாமல் கோபால் சார் - இதுவும் நல்லாதான் இருக்கு!

தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்.

said...

வாங்க ஸ்ரீராம்,

ரஜ்ஜு ரொம்பவே புத்திசாலி ! என்ன ஒன்னு ரொம்ப வயசாகி மெலிஞ்சுட்டான். அதுதான் பயணம் போகவே எனக்குக் கொஞ்சம் யோசனையா இருக்கு.

க்றிஸ்ட்சர்ச் - ஆக்லேண்ட் ஒன்னரை மணி நேர ஃப்ளைட்தான். கொஞ்சம் பெரிய ப்ளேன் என்றால் ஒன்னேகால் மணி.

மீசை..... ஆஹா.... பார்த்தே பழக்கப்பட்டுட்டதால் இல்லைன்னா அந்நியமாத் தெரியுது.
இப்ப பழையபடி ஆகிட்டார் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரஜ்ஜுவை விட்டுட்டுப் போறதுதான் கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. வேற வழி இல்லையே... ப்ச்.... பாவம், குழந்தை.....

தொடர் போரடிக்காமல் இருக்குமுன்னு நினைக்கிறேன். உடன் பயணிப்பதற்கு நன்றி !

said...

அலாஸ்கா பயணத்தில் நாமும் வந்துவிட்டோம் .

ரஜ்ஜு சமத்து.

said...

வாங்க மாதேவி,

அலாஸ்கா உங்களுக்குப் பிடிக்குமுன்னு நினைக்கிறேன்.


பூனை ஹாஸ்டலில் ரஜ்ஜுவுக்கு வார்டனிடம் ரொம்பநல்ல பெயர் !