Monday, October 12, 2015

Lincoln Multi Cultural Festival என்ற திருவிழா!

மூணும் மூணும் ஆறுமாசம், 26 வார இறுதிகள்.! வசந்தமும் கோடையும்! இதுலேதான் எதுன்னாலும் நடத்திக்கணும் கல்யாணங்கள் உட்பட!


நம்மூருக்குப் பக்கத்து ஊருலே  மல்ட்டிக் கல்ச்சர் திருவிழா!  ரோட்டரி க்ளப் நடத்துது. நம்ம வீட்டுலே இருந்து ஒரு  பதினாறு கிமீ தூரத்தில் இருக்கு லிங்கன்.(Lincoln) இதுவும் பல்கலைக் கழகம் சார்ந்த ஒரு ஊர்தான்.  நம்மூர் விரிவடையும் போதே  இந்த ஊரும் கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு விரிவடையத் தொடங்குச்சு.

பெரிய நகரின் களேபரங்கள் இல்லாத அமைதியான கிராம வாழ்க்கைக்காக பலர் இங்கே குடியேறத் தொடங்குனாங்க. பலவிதமான இனங்களும் கூடி வாழும்  ஊராக இருக்கு, என்பதால் அவுங்க ஊரில் இந்த மாதிரி அனைத்து இனத்துக்குமான விழா கொண்டாடத் தொடங்கி இப்போ வருசம் ஒன்பதாச்சு.

இந்த வருச விழாவுக்குப் பொறுப்பு ஏத்துக்கிட்டவர் நம்ம நண்பர். இவர் நம்ம சிட்டிக் கவுன்ஸில் எத்னிக் சொஸைட்டியின் தலைவரும் கூட. அழைப்பு  அனுப்பி இருந்தார். நேத்து விழாவுக்குப் போனோம்.

லிங்கன் ஈவன்ட் சென்டரில்  விழா நடக்குது. பகல் ஒரு மணிக்குத் தொடங்கி மாலை அஞ்சு மணிக்கு  முடியுமாம். முதல் ஒன்னே முக்கால் மணி நேரம் கண்காட்சி. அப்புறம் கலை நிகழ்ச்சிகள், அஞ்சு மணிக்கு  லைட் ரெஃப்ரெஷ்மென்ட்ஸ் என்று ஒரு டீ பார்ட்டி.

கண்காட்சி ஒன்னும் பெருசா இருக்காது.  நாம் பகல் சாப்பாடு முடிச்சுக்கிட்டு நிதானமாகவே  போலாமுன்னு நம்மவர்  சொல்லிட்டார்.  ரெண்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

நல்ல பெரிய ஹாலில்  ஒரு புறம் இருந்த அரங்கில் கிடைச்ச மேடையை விடவேணாமேன்னு  ஆடை அலங்கார அணி வகுப்பு நடந்துக்கிட்டு இருந்துச்சு.  கண்காட்சிப்பகுதியில் இந்தப்பக்கம் ஒரு மூணு மேசைகள். கம்யூனிட்டி சமாச்சாரங்கள் சொல்பவை.  எதிர்சாரியில் இன்னும் கொஞ்சம் டிஸ்ப்ளேக்கள்.

நடுநாயகமா இருந்தது இந்தியா! ஓடிப்போய்ப் பார்த்தேன்.  கலைப்பொருட்களுக்கு நடுவில்  ஒரு கேரம் போர்டு! ஹைய்யோ!!!   எவ்ளோ நாளாச்சு பார்த்தே!

ஆமாம்... நம்ம வீட்டிலொன்னு இருந்ததேன்னால்... அது மகளுக்காக வாங்கியது. அவள் வீட்டுலே இருக்குன்றது நினைவுக்கு வந்தது.

சரி இங்கேயே ஒரு ஆட்டம் போடலாமுன்னு பார்த்தால்....  போர்டு ஒரே சொரசொரன்னு கிடக்கு.  அதுக்குள்ளே தோழி வந்து சேர்ந்தாங்க. 'நீங்களே இந்த ஏரியாவைப் பார்த்துக்குங்களேன்!  பார்த்துக்குவேன், பவுடர் இருந்தால்...'  என்றேன்.

இதோன்னு பையில் இருந்த போரிக் பவுடரை எடுத்துக்  கொடுத்தாங்க.

 ஹாலின் ஒரு பக்கம் பேண்டு கோஷ்டி ஒன்னும்  சங்கீதமழையை சின்னதா தூவிக்கிட்டு இருந்தது.  ரஷ்யன்  நடனங்கள் ஆடச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க.

நாங்க கேரம் விளையாட ஆரம்பிச்சோம்.  வந்திருந்த மக்களுக்கெல்லாம் இது மாதிரி ஒரு விளையாட்டு இருக்குன்னே தெரியாதாம்.  மெள்ளக் கூட்டம் சேர ஆரம்பிச்சது நம்ம விளையாட்டைப் பார்க்க. (பைத்தியத்தைச் சுத்திப் பத்து பேர்!) இது போதாதா.....  விளையாட்டின்  சட்டதிட்டங்களை விளக்கிச் சொல்லி இப்படி ஆடணுமுனுன்னு  காமிச்சாலும் யாருக்கும் தைரியம் வரலை!

நாங்க விளையாட்டைத் தொடரும்போது இன்னொரு இந்திய நண்பர் வந்து சேர்ந்தார். அவருக்கும் கேரம் போர்டு பார்த்ததும் கண்ணில் வியப்பு! எங்ககூட விளையாட்டில் கலந்துக்கிட்டு ரொம்ப நல்லாவே விளையாடினார். பாய்ண்ட் படி அவர்தான் ஜெயிச்சாருன்னும் சொல்லணுமில்லையா!!!!!




நாங்க ரெண்டு கேம் விளையாடிட்டு எழுந்தபோது, கூட விளையாட வரலாமான்னு ஒரு குரல்.  'தாராளமா.... நீங்களே விளையாடுங்க'ன்னுட்டோம்.


கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகப்போகுது!  அங்கே போய் இடம் பிடிச்சோம்.  நண்பர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



மவொரிகளின் பிரதிநிதியாக ஸாலி பிடாமா அவர்கள்  மவோரி முறையில் வரவேற்பு கொடுத்தாங்க. செல்வின் மாவட்டம் டெபுடி  மேயர், ரோட்டரி சங்கத்தின் லிங்கன் கிளையின் தலைவர், நியூஸியின் எத்னிக் கவுன்ஸில் தலைவர் போன்ற முக்கியமானவர்களின்  பேச்சுக்குப்பின் கலை நிகழ்ச்ச்சிகள் ஆரம்பம். மொத்தம் 12 ஐட்டங்கள்.  தோழிதான்  மாஸ்டர் ஆஃப் த ஸெரிமனி.

 ஆரம்பமே பரதநாட்டியம்.  உள்ளூரில்  பரதநாட்டியப்பள்ளி நடத்தும் தோழி அனுராதா, தன்னுடைய வகுப்பு மாணவிகளுடன் ரெண்டு நடனநிகழ்ச்சி கொடுத்தாங்க.  அருமை!  ரசித்தோம்.

கொரியா, சீனா, லிங்கன்  பள்ளிக்கூட மாணவர்கள், ஸ்ரிலங்கா, பங்க்ளா தேஷ், இந்தியா, ரஷ்யா, நேபாள் நடனக்களும் பாடல்களுமா ரொம்பவே  நல்லா இருந்துச்சுன்னுதான் சொல்லணும்.  சீனர்கள் மூணு ஐட்டங்கள். இந்தியாவும் மூணு ஐட்டங்கள்.  முத்தாய்ப்பா கடைசியில் ஒரு பாங்க்ரா நடனம்.


இப்போதைய நிலவரப்படி, சீனர்களும், பஞ்சாபிகளும்தான்  ஊரில் பாதி இடத்தைப் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க!

இந்தியாவின் கலைகளில் இப்போ பாலிவுட் நடனம் இடம்  பிடிச்சு, நமக்குப் போதும்போதுமுன்னு ஆகிப்போச்சு. பாரம்பரிய நடனக்கலைகளைப் பின்னுக்குத் தள்ளிட்டு முன்னாலே வந்து நிக்குது  இப்போ:-(




எனக்குப் பொறுமை பறிபோனதால்.... கிளம்பிட்டோம்.


ஒரு பக்கம் நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டு இருந்தாலும்  ஸ்டால்கள்  பகுதியில் கேரம்போர்டைச்  சுத்தித்தான்  சின்ன கும்பல்:-) சின்னப்பசங்கள் கூட்டமே அதிகம் அங்கே!  புதுமை! புதுமை!

இலங்கை நடனம் ரொம்ப நல்லா இருந்துச்சு!  எல்லாம் சிறுவர் சிறுமிகள்!

அடுத்தவர்கள் கலாச்சாரத்தைத் தெரிஞ்சுக்க இப்படி நமக்கும் ஒரு சான்ஸ்!



8 comments:

said...

கேண்டி க்ரஷ் மாதிரி ஆன்லைன் விளையாட்டா ஆக்கினா கேரம் போர்டும் இளசுகள் மத்தியில் பிரபலமாகலாம். :-))

said...

ரசித்தேன். நல்ல விழா.

said...

//ஒரு பக்கம் நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டு இருந்தாலும் ஸ்டால்கள் பகுதியில் கேரம்போர்டைச் சுத்தித்தான் சின்ன கும்பல்:-) சின்னப்பசங்கள் கூட்டமே அதிகம் அங்கே! புதுமை! புதுமை!//

எங்க போனாலும் நாமதான் பெஸ்ட்டு :)))))))

said...

வாங்க சாந்தி.

ஆஹா... ஆன்லைன் கேம்! சூப்பர் ஐடியாப்பா!!!!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

இல்லையா பின்னே :-)))))

said...

அருமையான விழா...இல்லையா...படங்களும் அழகா இருந்துச்சு...

கேரம்போர்ட் நம்ம நாட்டு பாரம்பரியம்....கிழக்கு ஆசிய நாடுகளில் தான் இது அறியப்படுகின்றது குறிப்பாக நம்மூரு, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேபால், பங்களாதேஷ் இப்படி. அதனாலதான் அந்தூர்காரங்களுக்குத் தெரியலைபோல...எப்படியோ அதுவும் அங்க பரவினா நல்லாத்தான் இருக்கும் இல்ல....

நிறைய தெரிஞ்சுக்கறோம் உங்க பதிவுகள்ல இருந்து..சகோ

said...

வாங்க துளசிதரன்.

அப்ப பயனுள்ள பதிவுகள்தானா? ஆஹா ஆஹா!

முந்தாநாள் புதுசாத் திறந்த ஒரு இண்டியன் கடையில் கேரம்போர்டு விற்பனைக்கு வச்சுருக்காங்க!!!! விலைகூட 129 டாலர்தான்!