Tuesday, October 27, 2015

தோளில் துண்டு போட்டாத் தமிழன். இல்லைன்னா.........

உங்க பக்கத்துக் கல்யாண மாப்பிள்ளை வேணுமுன்னு  வட இந்தியத்தோழி கேட்டாங்க. அதுக்கென்ன  ஏற்பாடு செஞ்சால் போச்சுன்னு  சொன்னேன். விவரம் கேட்டப்ப, நம்மூர் திவாலி (தீபாவளி)திருவிழாவுக்கு கல்யாணப்பொண்ணு மாப்பிள்ளை உடையலங்காரம் டிஸ்ப்ளே செய்யறாங்களாம். ஆளுக்கு ஒரு பொறுப்பு எடுத்து நடத்துவதுதான் இங்கே!  ஊர் கூடி தேர் இழுக்கத்தானே வேணும்?

ஆனால் எங்க பக்கங்களில் ஜாதி, குடும்ப வழக்கம் இப்படி பலவிதமான அலங்காரங்கள் இருக்கே!  அதுவுமில்லாமல் எங்க வீட்டுலே தாலி கட்டும் சமயம் பட்டு உடுத்திக்கமாட்டோம். வெள்ளைப் புடவையையும் வேஷ்டி அங்கவஸ்த்திரம் எல்லாம்  மஞ்சள் நீரில் முக்கிஎடுத்து  அதை உலர்த்திக் கட்டுவோம். அதுவும் கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு நலுங்கு முடிஞ்சதும் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி உண்டு. அந்தப்பொடியைத்தான்  நீரில் கலக்கித் துணிகளை நனைச்சு எடுத்து அப்பவே கொடிகட்டிக் காயவைப்பதுதான். சில குடும்பங்களில் சின்னதா சிகப்புக் கட்டம் போட்ட புடவையைக் கட்டுவதுண்டு.

சரி பொதுவா ஒரு அலங்காரம் செஞ்சுக்கலாம். பொண்ணுக்குப் பட்டு கட்டி விடலாமுன்னு சொன்னதும், 'காஞ்சீபூரம்'தானே கட்டுவீங்க. என்னிடம் ஒரு 'காஞ்சீபூரம்' இருக்குன்னு சொல்லி என் வயிற்றில் பால் வார்த்தாங்க.

ரங்கோலி, கோலம் பிரிவுக்கு என்னிடம் கேட்டாங்க. ஏற்கெனவே நடத்துன அனுபவம் இருக்குதான்.  ஆனால் அப்ப (போனமாசம்) ஃப்ளூ அட்டாக்கில் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட  ஒரு மாசம் பேசமுடியாமல் கிடந்தேன். குணமாக எவ்ளோ நாள் ஆகுமுன்னு தெரியாததால்  முடியாதுன்னு 'தலையை ஆட்டினேன்' !

எங்க நாட்டுத் தொழிலாளர் தினம் ஊர் உலகத்துக்கு இருக்கும் மே மாசம் ஒன்றாம்தேதி இல்லையாக்கும். அக்டோபர் மாதம் நாலாம் திங்கட்கிழமைதான். நியூஸியில் எட்டுமணி நேர வேலை என்ற சட்டம் கொண்டுவந்த நாள் இது!

இது திங்கட்கிழமை என்பதால் இதுக்கு முன்னால்வரும் சனி ஞாயிறோடு சேர்த்து லாங்க் வீக் எண்ட் நமக்குக் கிடைக்கும். அந்த வார இறுதியின் சனிக்கிழமை தீபாவளி கொண்டாடிக்குவோம் அது நவராத்ரி காலமாக இருந்தாலும் சரி!  எங்கூர் சிட்டிக்கவுன்ஸில் இதுக்குக் கொஞ்சம் நிதி உதவி கொடுப்பாங்க. திருவிழா கொண்டாட்டம் நடத்துவது  உள்ளூர் இண்டியன் ஸோஸியல் அன்ட் கல்ச்சுரல் க்ளப். இதை ஆரம்பிச்சவர் நம்ம  கோபால். உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சவர்தான்.

இந்திய சுதந்திர தினம் பொன்விழா(1997) நடந்த சமயம்தான்  இங்கேயும் முதல் மேடை நிகழ்ச்சி நடத்தினோம். அப்புறம் அதே வருசம் தீபாவளிக் கொண்டாட்டம் உறுப்பினர்களுக்கு மட்டும் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமா இது பெருசா வளர்ந்து  இப்போ பத்தாயிரம் பேர் கலந்துகொள்ளும் விழாவா மாறி இருக்கு.

எங்க நாட்டுப் பாராளுமன்றத்திலும் கடந்த சில வருசங்களா  தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம இண்டியன்  கம்யூனிட்டிக்கு  இதுவே ஒரு வெற்றி (மாதிரி)தான். நாட்டின் பெரிய நகரங்களில்  தீவாலி கொண்டாடுவது ஒரே நாளில் கிடையாது.   எதுக்கெடுத்தாலும் வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் உள்ளதால்  அந்தந்த நகருக்கு ஒவ்வொருநாள்ன்னு ஒதுக்கியாச்சு.  நமக்கு எப்பவும்  லேபர்டே வீக் எண்ட் முதல்நாள், சனிக்கிழமை.  இதுக்கு முதல் சனியில் ஆக்லாந்தில் கொண்டாட்டம் இருக்கும். வெலிங்டன் நகரில் அக்டோபர் 26 (நேத்துதான்), டனேடின் நகரில் வரும் நவம்பர் 15 இப்படி .  அசல் தீபாவளின்னு ஒன்னு இருக்கு பாருங்க அதை நம்ம வீட்டில் கொண்டாடிக்குவோம். சொல்ல மறந்துட்டேனே....   பட்டாஸ் வெடிப்பது  தீபாவளி  ஐட்டத்தில் ஒரு முக்கிய அங்கம் என்பதால் திருவிழாக் கொண்டாடத்தின் இறுதியில் கொஞ்சம் சின்ன அளவில் நடத்தவும் அனுமதி கிடைச்சிருக்கு.

இதையெல்லாம் அரசு அங்கீகரிக்காத  காலத்தில்  கை ஃபாக்ஸ் டே சமயத்தில் மட்டுமே அஞ்சு நாட்களுக்கு பட்டாஸ் விற்பனை இருக்கும். அது நவம்பர் அஞ்சாம் தேதி. கை ஃபாக்ஸ் தான் இங்கிலாந்தின் நரகாசூரன்!
இதைப்பற்றி எழுதியது இங்கே.

நமக்கோ தீபாவளி(அக்டோபர்-நவம்பர்)ஐப்பசி மாசத்தில் எப்போ வருதுன்னு தெரியாததால்  பட்டாஸ் விற்பனை நடக்கும் அந்த அஞ்சு நாட்களில் கொஞ்சம் வாங்கி ஸ்டாக் பண்ணிக்குவோம். வீட்டு தீபாவளிக்குக் கொஞ்சம் கொளுத்திக்கறதுதான்.

போன செவ்வாய்க்கிழமை 'அரை ஆளை' வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தாங்க தோழி. கோபால் வந்ததும் சமாச்சாரம் சொல்லி உடைகளைக் கடன் கேட்டேன். அப்புறம் அலங்காரம் ஆரம்பிச்சது.  பொது இடத்தில் வேட்டி நழுவி விட்டால்..... உடுக்கை இழந்தான் ஆகிருவானோன்னு  இறுக்கமா இடுப்பில் கயிறு கட்டி கெட்டிப்படுத்தினோம். முழுக்கை சட்டை ஒன்னு போட்டுவிட்டதும் அண்டை மாநில மாப்பிள்ளையாத் தெரிஞ்சார்.  போடு ஒரு துண்டை தோளிலே!  இப்பத் தமிழ்நாட்டு மாப்பிள்ளையா ஆனார்(என்று நினைக்கிறேன்!)

வியாழனன்று வந்து கொண்டுபோறேன்னு சொன்ன தோழி வந்து பார்த்துட்டு, ரொம்ப நல்லா இருக்குன்னாங்க. நாங்க நல்ல உயரத்தில் உயர்த்தி வச்சதால் அவுங்க வண்டிக்குள்  அடங்கமாட்டார் என்பதால் மறுநாள் பெரிய வண்டி கொண்டு வந்து நேரா ஹாலுக்கே கொண்டு போறேன்னு சொல்லிப்போனாங்க.

மறுநாள்  மாப்பிள்ளை அழைப்பு:-) கொண்டு வந்த வண்டி நேத்து  வந்த அதே கார்! மாப்பிள்ளையை அபூர்வசகோதரர்கள் கமல் போல் குள்ளமாக்கிக் கூட்டிப்போனாங்க.  சட்டை மடிப்பு கலைஞ்சுருமேன்னால்.... நாங்கள் அங்கே அயர்ன் பண்ணிப் போடுவோம் என்றதும் ஓக்கேன்னுட்டேன்.

மறுநாள் விழா.  மூணு முதல் அஞ்சு வரை க்ராஃப்ட் ஷோ, கோலம் வரைதல், இத்தியாதிகள். அதே மணி மூணுமுதல் இரவு பத்துவரை சாப்பாடு வகைகளுக்கான ஸ்டால்கள். அஞ்சு மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம். நாங்க ஒரு மூணேமுக்காலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  போன முறைகளைப்போல கார்பார்க்கிங் காசு வசூல் செய்யலை. நல்லதாப்போச்சு.  ஆனால் கடந்து போனவருசங்களில் நுழைவுக்கட்டணம் அஞ்சு டாலர்தான். இந்த வருசம் அது ரெட்டிப்பு! நல்ல லாபம்தான். பதினைஞ்சுக்குப் பதிலா இப்ப இருபது  கிடைக்கும்படி செஞ்சுட்டாங்க! கில்லாடிங்கப்பா!

உள்ளே நுழையும்போதே இப்போதைய துணைத்தலைவர்  வாங்கன்னார்.
 அனைவரையும் வரவேற்க பூமுகத்தில் புள்ளையார். அவரைச் சுத்திப் புடவைகளோ புடவைகள். வண்ணமயம்தான்!

அப்புறம்  கடைகள். முக்கியமா மெஹெந்தி, ஆடை , அலங்காரம் வகைகள்.
குளுகுளான்னு ஒரு  பதார்த்தம். இது ஃபிஜி இந்தியர்களின் பலகாரவகை. இதைப் பற்றிய மேல்விவரம் இங்கே.


நமக்கான ஸ்பெஷலா ஒன்னு கிடைச்சது.  ஆனால் ஒரே எண்ணெய். என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மான்னு அந்த ஃபிஜித் தோழியிடம் சொன்னேன்.
 நியூஸி காவல்துறை, நம்ம சமூகத்தில் குற்றங்களைக் குறைக்க என்னென்ன செய்யலாமுன்னு சொல்ல ஒரு கடை போட்டுருந்தாங்க! 'இக்கடச்சூடு'ன்னேன்:-)
அப்புறம் கடைகளை வேடிக்கை பார்த்துட்டுக்கிட்டுக் கண்ணில் பட்ட தோழியருடன் படங்களைக் கிளிக்கிக்கிட்டுப் போறோம்.
நம்ம ஜன்னுவுக்கு ஒரு நெக்லேஸ் வாங்கினோம். கோபால் செலக்‌ஷன்.  எனெக்கென்னமோ சுமாரா இருந்துச்சு. அதை இப்போ நம்ம க்ருஷ்ணாப் பாப்பா போட்டுக்கிட்டு இருக்கான்:-)


கல்யாண அலங்காரத்திற்காக  ஒரு மேசையில் நிறைய தலைப்பாகைகள்  வச்சுருந்தாங்க. அப்பவாவது நான்  கொஞ்சம்  கவனமா மாப்பிள்ளை  அங்கே நிற்பதைப் பார்த்து இருந்துருக்கலாம். ஒரு வெள்ளைக்காரம்மா, என்ன விலைன்னு கேட்டாங்க. இது சும்மா டிஸ்ப்ளேதான்னு சொல்லி,  இங்கே புதுசா ஆரம்பிச்சு இருக்கும் ஆடை அலங்காரக்கடை 'ஜல்ஸா' பற்றிச் சொன்னேன்.
புதுக் கல்யாண ஜோடி அலங்காரத்தை ஒரு இளம்ஜோடிக்குச் செஞ்சுவிட்டாங்க ஜல்ஸா கடைக்காரம்மா.  நல்லத்தேன் இருக்கு!   பொதுவா க்ளிக்கினதோடு சரி. இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு வேடிக்கை பார்த்துட்டு அரங்கத்துக்குள் நுழைஞ்சோம்.இந்தமுறை அரங்கத்தில் அமைப்பு  ரொம்பநல்லா இருந்துச்சு.  முந்தியெல்லாம்  நடுவில் தடுப்பு வச்சதுபோல் ரெண்டாப்பிரிச்சு ஒரு பக்கம் மேடை நிகழ்ச்சிகளுக்கும், இன்னொரு பக்கம் ஸ்டால்ஸ், சாப்பாட்டுக் கடைகள்னு வச்சுருப்பாங்க. நாங்கெல்லாம் ஸ்டால்ஸைடில் மாட்டிக்கிட்டு அங்கே என்ன நடக்குதுன்னு தெரியாமல் முழிப்போம்.  இந்த முறை எல்லா க்ராஃப்ட் கடைகளையும்  வெளிப்புறம் சுத்திவர இருக்கும்  முன்பகுதியில் வச்சுருந்தாங்க.  உள்ளே நுழைஞ்சதும் மேடைக்கு எதிர்ப்புறமா  அரைவட்ட வடிவில் உணவுக்கடைகள். தடுப்புகள் ஒன்னும் இல்லை.  எல்லா இடத்தில் இருந்தும் மேடை தெரியும்படியா இருந்தது எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்தது!

 இதுக்கு இடையில் ஒரு தாற்காலிக மேடை அமைப்பில் ரெண்டு 'லேடீஸ் இன் ரெட்'  ஆடிக்கிட்டு இருந்தாங்க.  பாவாடையில் ஓரத்தில் கம்பி வச்ச  உடுப்பானதால்  அதைப் பிடிச்சுக்கிட்டே  வெறும் அசைவுகள்!  பார்க்க ஏதோ ஷோ கேஸ் பொம்மைகள்  ஆடுவதைப்போலத்தான்!

இது நடக்குமிடம் எங்கூர்  ஹார்ன்காஸில் ஸ்டேடியம்.  பாஸ்கெட் பால் ஆட்டத்துக்கான இண்டோர் அமைப்பு.  விளையாட்டுகள்தவிர, ஹோம் ஷோ, இசை நிகழ்ச்சிகள், இன்னும் சிலபல கண்காட்சிகள் இங்கேதான் நடத்துவாங்க. ரொம்ப விசாலமான இடம்.  கட்டி முடிச்சு  இப்போ பதினேழு வருசங்களாச்சு. (1998)

நெட்பால் நடக்கும் சமயம் 7200 பேர்  உக்காரும் வசதியும், இசை நிகழ்ச்சி நடக்கும்போது 8888 பேருக்கான இருக்கை வசதிகளும் உண்டு! இதுக்குப் பக்கத்துலேயே  ரக்பி ஆட்டத்துக்கான புது ஸ்டேடியமும் (2012) கட்டிட்டாங்க. இதுலே 18,000 பேர்  உக்காரும் வசதி இருக்கு.  இப்படி  ரெண்டு பெரிய விளையாட்டு அரங்கங்கள் ஒரே வளாகத்தில்   இருப்பதால் பார்க்கிங் ஏரியாவும் ரொம்பவே பெருசுதான்! எங்க பழைய ஸ்டேடியம் நிலநடுக்கத்தில் பாழாப்போச்சு:-(

உணவுக்கடைகளில் முதலா இருந்தது நம்ம  தமிழ்ச்சங்கத்தின் கடைதான். எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு மசால்வடையும், ஒரு உளுந்துவடையும் வாங்கிப் பையில் போட்டோம்!
அடுத்த ஸ்டாலில் தண்ணி விக்கறாங்க. திவாலின்னு பெயர் போட்டது.  விலை  மூணு டாலர்!

கடைகளையும் நண்பர்களையும் பார்த்துக்கிட்டே போனதில் ஒரு பஞ்சாபி கடையில் (முக்கால்வாசி பஞ்சாபிகள் கடைகளே என்பது வேற விஷயம்!) 'ஜலேபி' சுடச்சுட ரொம்பநல்லா இருக்கு. சமோஸா சூப்பர்'ன்னு சொல்லி ஒரு பஞ்சாபி தோழி கடைவரைக்கும் இழுத்துக்கிட்டுப்போய், பஞ்சாபியில் பேசி நம்மைக் கவனிக்கச் சொல்லிட்டாங்க. பேய்முழி முழிச்சுக்கிட்டு நிற்கும் விநாடியில்  சுடச்சுட சமோஸா ரெண்டு நம்மை நோக்கி  நீட்டப்பட்டன. அடுத்து 'ஜலேபி'.

வேற வழியில்லாமல்  வாங்கி முழுங்க வேண்டியதாப் போச்சு.  இனிமேல் தாங்காதுன்னு நாங்க மாடிக்குப்போய் இடம் பார்த்து உட்காந்தோம்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க  இன்னும் நாலு சொச்ச நிமிசம்தானாம்!

பதிவின் நீளம் கருதி பாக்கி......

தொடரும்.........:-)13 comments:

said...

பதிவின் நீளம் அதிகம் என்றால் தொடரும் என்று போடலாம்.

வேட்டியின் அகலம் அதிகம் என்றால் என்ன செய்வது ?/

1968ல் எனக்கும் பெருமாளுக்குச் சாத்துவதைப் போல், எனக்கும்
ஒரு வேட்டியைக் கட்டி, அதை ஒரு இரண்டு மணி நேரம்
சுமப்பதுக்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

பஞ்ச கச்சமாம் !!
ஆனா, அந்த நாளுக்குப் பிறகு படும்
பான்ச் கஷ்டங்களுக்கு அது தேவலை.

அது என்ன பாஞ்ச் கஷ்டங்கள் என்கிறீர்களா ?

தொடரும்..

சுப்பு தாத்தா.

said...

ஹார்ன்காஸில் ஸ்டேடியம் பிரமிக்க வைத்தது அம்மா...

இனி தொடர்கிறேன்...

said...

அற்புதமான காட்சிப் புகைப்படங்களுடன்
அருமையான விளக்கத்துடன்
தீபாவளிக்கு கட்டியம் கூறும் அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

ஆஹா ..அழகான கொண்டாட்டம் ...

said...

அட்டகாசம்..

said...

நியூசிலாந்தின் தீபாவளி திருநாள் பற்றிய பதிவும் படங்களும் அருமை!

said...

நம்ம சௌகரியம் போல் விழாக்கள் கொண்டாடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. எல்லாப் பண்டிகையும் ஒரு கம்யூனிடி பண்டிகை ஆகி விடுகிறது

said...

அழகான கொண்டாட்டம்....

தில்லியிலும் பெரும்பாலான கொண்டாட்டங்கள் வார இறுதியில் தான். தீபாவளி அன்று என்றால் பெரும்பாலும் யாரும் வருவதில்லை. விழா நடத்துபவர்கள் மட்டுமே அங்கிருக்கும் சூழல்!

பொங்கல் சமயத்தில் இப்படி “பொங்கல் விழா” கொண்டாடுவோம். மூன்று வருடங்கள் தொடர்ந்து நடத்தினோம்.... அதன் பிறகு விட்டுவிட்டோம்....

படங்கள் அனைத்தும் அருமை.

said...

நமக்கான ஸ்பெஷலா ஒன்னு கிடைச்சது# எங்களுக்கும்

said...

கூடவே அழைத்துப்போவது போன்ற எழுத்துதான் உங்களுடைய சிறப்பம்சம்.. இங்கும் அப்படியே. ரசித்தேன்.. ரசிப்பேன். நன்றி டீச்சர்.

said...

சார்...எங்கயோ போய்ட்டீங்க,...எங்களையும் இழுத்துக்கொண்டு....

said...

என்னமோ நானும் உங்களோட சந்திப்புகளில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்

said...

என்னமோ நானும் உங்களோட சந்திப்பில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.