Friday, October 09, 2015

பெருமாளே.... இதெல்லாமும் எனக்கே.... எனக்கா.... ? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 85)

ராமராஜ்யத்தின் வாசலில் வண்டி போய் நிற்கும்போது சரியா மணி மூணு!  யானைகள் வரவேற்றன!  நாம் வந்து சேர்ந்த விவரத்தை செல்பேசியால் உள்ளே அனுப்பினதும்,  அலுவலகப் பொறுப்பாளர் தாமே  வந்து வரவேற்றார்.  நம்மை உபசரித்துக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இன்னொரு இனிய தோழியிடம் ஒப்படைத்தார்.

சுசீலா....   பெயருக்கேற்ற சுபாவம்.  விருந்தினர்கள் தங்கும் பகுதி  த லார்ட்'ஸ் இன்! (இறைவனின் இல்லம்? ) நமக்கான அறையைத்  திறந்து விட்டார்.  உள்ளே நுழைஞ்சதும் எனக்கோர் இன்ப அதிர்ச்சி.  நியூஸிக்குப் போயிட்டேன்!   சுவரில் இருக்கும் படம்............  ஆஹா....

கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்குங்க. நாலரைக்கு  வரேன்னு சுசீலா போனாங்க.

பாபா ஊரில் இல்லையாம். ஆனால் நாம் வரும் தேதியைக் குறிப்பிட்டு ஆவன செய்யணுமுன்னு சொல்லிப் போனதுடன் நிற்காமல் முதல் நாள் ஞாபகப்படுத்தியும் இருக்கார் என்று அவுங்க சொன்னதும்...  மனசு குழைஞ்சுதான் போச்சு.  இதுதான்.... எந்த ஒரு ஆன்மிகவாதிகளையும் விட  இவரை பிடிச்சுப் போனதுக்கு  மிகவும்  முக்கிய காரணம்.  சித்த யோகி சிவசங்கர் பாபாவைப் போல் இப்படி down to earth person உண்டோ?

  நான் யார்?  ரொம்ப சாதாரணமானவள். இவரோ....  ஒரு ஆஸ்ரமத்துக்கு அதிபதி!  என்னைச் சரியாகக்கூடத் தெரியாது.  வெறும்  மின்மடல் தொடர்புதான்.  ரெண்டு  வருசத்துக்குள்ளேதான்... சரியாச் சொன்னால் நமக்கு 2014 வது  வருசப்பொறப்பு கொண்டாட்டம் அங்கேதான். முதல்நாள் மாலை அங்கே போய்ச்சேர்ந்து, கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு வருசம் பொறந்ததும் ஆசிகள்  வாங்கிட்டுக் கிளம்பிட்டோம்.


அப்போதைய அனுபவம் இங்கே.  ரெண்டு பதிவா எழுதி இருந்தேன். ஒரு எட்டு அங்கே போய் பார்த்துட்டால்......  உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது:-)))))

1.  அனைத்தும் அன்பே. அனைவரையும் நேசி2.  கணினியுகத்துக் கடவுளுடன் பேசமுடியுமா?


பெருமாளுக்கும், முருகனுக்கும் சாத்துவதற்காகக்  பத்தாறு ஒன்னும்,  பட்டுத்துணி ஒன்னுமாக் கொண்டு போயிருந்தோம்.  கூடவே பாபாவுக்காக, துளசி கோபாலின்  மூணு புத்தகங்களும். என்ன கொண்டு போகலாமுன்னு யோசனையா இருந்தப்ப, உள்ளூர் தோழிதான் சொன்னங்க.... 'அவருக்கு வாசிப்பில் ஆர்வம் அதிகம். உங்க புத்தகங்களைக் கொண்டுபோய்க் கொடுங்க'ன்னு. இதையெல்லாம் கொண்டுபோய் அலுவலகப் பொறுப்பாளரிடம் சேர்த்தேன்.

உடனே  அந்தந்தப் பிரிவுக்கான நபர்களைக் கூப்பிட்டு  மறுநாள்  அவைகளைப் பெருமாளுக்கும் முருகனுக்கும் அணிவிக்கச் சொல்லிட்டாங்க.

திரும்ப அறைக்கு வந்ததும் கொஞ்ச நேர  ஓய்வுன்னு  இவர் தூங்கிட்டார். நாலரை மணிக்கு  டான்னு ஆஜரானாங்க நம்ம  சுசீலா.  கையோடு  ஃப்ளாஸ்க்கில் காஃபி!  நல்லா இருக்கணும் பெண்ணேன்னு  மனசு சொன்னது.


சுத்திக் காமிக்கக் கூட்டிப் போறாங்க. முதலில் கடவுள் வழிபாடுன்னு கற்பகவிநாயகரை தரிசிக்கப் போகலாமேன்னேன். விருந்தினர் மாளிகையையொட்டியே நந்தவனம்.  உள்ளே போனால் புள்ளையார்.  புள்ளையார்பட்டி புள்ளையார்!   அருமையான தோட்டத்துக்குள்ளே ஹாயா இருக்கார்!  கொடுத்து வச்சவர்!  அப்பழுக்கு இல்லாத  தூய்மை!

 அஞ்சரைக்குத் தான்  கோவிலில் சந்நிதி திறந்து  சாயங்காலப் பூஜைகள் ஆரம்பிக்கும். அதுக்குள்ளே பக்கத்தில் இருக்கும்  நர்ஸரிப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துட்டு வரலாமுன்னு சொன்னாங்க சுசீலா.

 அப்படியே  ஆகட்டும்.  குழந்தையும் தெய்வமும் ஒன்னுல்லையோ!  புள்ளையாரைக் கும்பிட்டதும், பள்ளிக்கூட வளாகத்துக்குப் போனோம். முதலில் மழலையர் பள்ளி.


விஜயமாருதி வித்யாலயா!   பெரிய ஆஞ்சநேயர்   உயரத்தில் நின்னு  பள்ளி வளாகம் முழுசையும் கவனிச்சுக்கிட்டு இருக்கார்!  குழந்தைகள் விளையாட பெரிய திடல் ஒன்னு!  இப்பெல்லாம் ப்ளே க்ரவுண்ட் இருக்கும் பள்ளிக்கூடங்கள் அரிதாகிக்கிட்டே  வரும்போது  இங்கே விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்துருப்பது மனசுக்கு  மகிழ்ச்சி.  உடல் ஆரோக்கியமா இருந்தால்தான் மனமும் ஆரோக்கியமா இருக்கும்!

ரொம்பவே நேர்த்தியான  வகுப்பறைகள்.  பிள்ளைகளின் கை வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கு!

இதுக்கு அடுத்ததா ஆரம்பப் பள்ளிக்கூடம்.  இங்கே படிக்கும் பிள்ளைகள்    பாக்யசாலிகள் என்ற நினைப்பை உண்டாக்குனது நிஜம்.  எனக்குள்ளே இருந்த உண்மை டீச்சர் முழிச்சுக்கிட்டாள்!

ஆஸ்ரமத்தில்  ஒரு குழந்தையை நர்ஸரியில் சேர்த்தோமுன்னால் ப்ளஸ் 2 வரை நிம்மதியாக ஒரே இடத்துலேயே படிக்கலாம். அரசு  நிர்ணயித்த  மிகக் குறைந்த அளவு கட்டணம்தான் வாங்கறாங்க. பள்ளிக்கூட  அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் வாங்கணுமுன்னு முதல்நாள் ராத்திரியே போல் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமெல்லாம் இல்லை.   பள்ளிக்கூட  வலைத் தளத்திலேயே  டௌன்லோட் செஞ்சுக்கலாம்.


பாபாவின் பக்தர்களில் ஒருவர் கொடுத்த நன்கொடையில் இந்தக் கல்வி நிறுவனம் ஆரம்பிச்சதோடு மட்டுமில்லாமல், நன்கொடை கொடுத்தவரின் பெயரையே  பள்ளிக்கூடத்துக்கும் வச்ச பரந்த மனசை  என்ன சொல்வது?

SushilHari International Residential School  தமிழ்நாட்டின் தலைசிறந்த, பத்து பள்ளிக்கூடங்களில் ஒன்னு! பள்ளிக்கூட விவரங்கள் இங்கே.  ஆர்வம் இருப்பவர்கள் பார்க்கலாம்.


ராமராஜ்யா வளாகம் முழுசும் பச்சை பசேர்னு மரங்களும் செடிகளும், சின்னத் தோட்டங்களும், புல்வெளிகளுமா இருக்குன்னாலும் இன்னும் அங்கங்கே சீரமைக்கும் வேலைகள் நடந்துக்கிட்டே இருக்கு.

பாபாவுக்குச் செடிகள் என்றால் கொள்ளை ஆசையாம்.  அவற்றை வைப்பதோடு நின்னுடாமல் பராமரிப்பதில் கவனம் வேணுமுன்னு ராமராஜ்ய மக்களுக்குச் சொல்வாராம். அதேபோல எதையும் வீணாக வீசி  எறியும்  எண்ணமும் கூடாதுன்னுவாராம்.  சொல்வது மட்டுமா?  ஆஸ்ரமம் முழுசும்  அங்கங்கே  ஒரு பொருளில் இருந்து மறு பொருள் என்ற ஐடியாக்கள் எக்கச்சக்கம்.  ரோல்மாடல் பாபாவேதான்!  காய்ஞ்சு போன தென்னை மரங்களின் அடிப்பாகம் கூட  , தோட்டத்தில் பிள்ளைகள் உட்காரும் இருக்கைகளாக இருக்கே!

வளாகத்தில் அங்கங்கே மூடியுடன் இருக்கும் குப்பைத் தொட்டிகள். பாபா நடந்து  வரும்போது கண்ணில் பட்ட குப்பைகளைச் சட்னு குனிஞ்சு எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போவாராம். இதைப் பார்த்த எவரும் இனி குப்பைகளை உதாசீனம் செஞ்சுட்டுப் போவாங்களா?  மக்கள் எப்படி இருக்கணுமுன்னு தலைவர்  வாயால் பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கக்கூடாது. தலைவர் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேணும், தன் செய்கைகளால்!

பேசிக்கிட்டே.... மாட்டுத் தொழுவத்துப் பக்கம் வந்திருந்தோம்.  ஆஸ்ரமத்துக்குத் தேவையான பால் முழுசும் இங்கேயே கிடைச்சுருது.  நல்ல பராமரிப்பில் மாடுகளும் மகிழ்ச்சியாகவே இருக்குதுகள்!

இங்கிருந்து ஒரு  ரெண்டு நிமிட் நடையில் துர்கை கோவில் வந்துருந்தோம். அஷ்டபுஜ துர்கை!  கருணை பொழியும் முகம். கம்பீரமான உருவம். பதினெட்டு கைகளும் பத்தரை அடி உசரமுமா....   ஹைய்யோ!

இன்றைக்கு அங்கே ஸ்பெஷல் பூஜை. பகவதி சேவை! மாதம் ஒருமுறை குறிப்பிட்ட நாளில்  நடக்குமாம். அடிச்சோம் ப்ரைஸ்ன்னு  இருந்துச்சு. மாலை ஆறரைக்குப் பூஜை ஆரம்பமாம். அதுவரை  அருகில் இருக்கும் பழனி கார்டன்ஸ் முருகனை தரிசனம் செஞ்சுக்கலாமேன்னு  சுசீலா அங்கே கூட்டிப்போனாங்க.  இது  இந்த ஆஸ்ரமத்தைச் சேர்ந்த இன்னொரு வளாகம்.   ஒரு அஞ்சாறு நிமிச நடையில் போகக்கூடிய தூரம்தான்.  அதுக்குள்ளே  அங்கே  அந்தப்பக்கம் காரில் வந்த ஒரு ஆஸ்ரமவாசி, நமக்கு லிஃப்ட் கொடுத்துப் பழனி கார்டனில் கொண்டு விட்டார்.

இது குடியிருப்புப் பகுதி. நிறைய குடும்பங்கள் வசிக்கிறாங்க.  சின்னவயதுப் பிள்ளைகள்  எல்லோரும் விளையாட்டில் மும்முரம்.  வளாகத்தின் ஒரு கோடியில் அழகான சின்ன குடில்.  போகும் வழியிலேயே புள்ளையார்!  மரகதமேனி!


கற்பகவிநாயகர் சிலைக்கு மோல்ட் செஞ்சாங்க  பாருங்க. அதைக்கூட வீணாக்காமல் புள்ளையார் சிலை ஒன்னும் கிடைச்சுருச்சு!  சும்மாச் சொல்லக்கூடாது.... அப்படி ஒரு அம்சமான சிலை!  தம்பிக்குப் பக்கத்தில் இருக்கணுமுன்னு சொல்லிட்டார் போல!

முருகன் சந்நிதியில் சின்னப்பிள்ளையா   சின்ன உருவமா இருக்கார்.  ஒரு அடி உயரச்சிலைதான்.  ஆனால் அழகோ அழகு! உள்ளே போய் வலம் வந்து கும்பிட்டோம். இவரால்தான் இந்த இடத்துக்குப் பழனி கார்டன்ஸ் என்ற பெயரே வந்துருக்கு! குடியிருப்பு வாசிகள் சிலர்  கோவிலுக்கு வந்தாங்க.  ஒரு அஞ்சு நிமிசம் குசலவிசாரிப்பும் அறிமுகங்களும்!

திரும்பிப்போக வண்டி தேடிக் கிளம்பின சுசீலாவை நிறுத்தி,  அஞ்சாறு நிமிசம் நடக்கமாட்டோமான்னு நடந்தோம்.  துர்கை கோவிலுக்கு வந்தப்ப, பூஜை ஆரம்பிக்கும் சமயம். விஸ்தாரமான பூஜை முறைகள். ஒன்னரை மணி நேரம் போனதே தெரியலை. கூடி இருந்த மக்கள்ஸ் அனைவரும், அவரவருக்குத் தோதான  வகையில் அங்கங்கே உக்கார்ந்துருந்தாங்க. இப்படி இங்கே உக்காரணும், அப்படி உக்காரணுமுன்னு  கோவில்களில்  கெடுபிடி பண்ணும் நாட்டாமைகள் யாரும் இல்லை.  ரொம்பவே ரிலாக்ஸா உக்கார்ந்து  பூஜை பார்த்தோம்.

பூஜை முடிஞ்சு பிரசாதம் கிடைச்சது.  நம்ம வயிறு சின்னதுன்றதால் இதுவே  நமக்கு ராச்சாப்பாடு.  ஏற்கெனவே  நமக்கு இரவு உணவுக்கு என்ன வேணும்... சாதமா இல்லை சப்பாத்தியான்னு கேட்ட சுசீலாவிடம் சப்பாத்தின்னு சொல்லி இருந்தோம்.  இப்ப அதுக்கு வயிறு ஏது?  தயவு செஞ்சு  சப்பாத்தி வேணாமுன்னு சொல்ல வேண்டியதாப் போச்சு!

இன்றைக்குப்  பவுர்ணமி  என்பதால்  பெரிய கோவிலில்  (ராமராஜ்யத்தில் இதுதான் பெருசு. பூரணப்ரம்மம் திருக்கோவில்) சத்தியநாராயணா பூஜையும் நடைபெறுவது வழக்கமாம்.  இதெல்லாம் தெரியாமலேயே நாம் அன்றைக்கு அங்கே போயிருக்கோம்.

அரைமணி நேர ஓய்வுக்குப் பிறகு அங்கே போகலாமுன்னு சொன்னதால் அறைக்கு வந்து கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுப் போனோம்.  முழு நிலா காயுது!

பூரணபிரம்மம் தசாவதாரமும் அடங்கிய சிலை. போனமுறை  பதிவுகள் சுட்டியில் க்ளிக்கினால்  எல்லா விவரங்களும் இருக்கு!   ஹரியும் சிவனும் ஒன்று என்பது போல இன்றைக்கு இவர் சிவனாக இருந்தார்.


வெள்ளிக்கிழமை ஸ்பெஷல். பெருமாள் பல்லக்கில் ஊர்வலம் வந்தபின், ஊஞ்சலில் சேவை சாதிக்கிறார்.   சின்னதா ஒரு ரதம், தங்கயானை வாகனத்துடன் தயாராக இருந்துச்சு.  பெருமாள் யானை  மேல் ஏறி அமர்ந்தார்.  நாங்க இதையெல்லாம் முதல்முறை பார்க்கும் ஆர்வத்தில்  கவனமாக இருக்கோம். கூடி இருக்கும் பக்தர்கள் ஒரு ஒழுங்குமுறையோடு ரதத்தின் பின்னால் அணி வகுக்க இதோ ரதம் கிளம்பப் போகுது.

 நம்மவரைக் கூட்டிட்டுப் போனாங்க. நான் கேமெராவை தயாரா வைக்கும் விநாடி,  நீங்களும் வாங்க. நீங்க ரெண்டு பேரும்தான் இன்றைக்குத் தேர் இழுக்கணும் என்றதும், எனக்குக் கண்ணில் குபுக்ன்னு தண்ணீர் வந்துருச்சு.    பெருமாளே.... இவ்ளவும் நமக்கா?

இருந்த மனநிலையில் கையிலிருக்கும் கேமெராவை யாரிடமாவது கொடுத்து க்ளிக்கச் சொல்லி இருக்கலாம் என்பதுகூட நினைவுக்கு வரலை :-(

இருவருமாக சின்னத்தேரை இழுத்துப் பிரகாரத்தில்  வலம் வர்றோம். (கூடவே நமக்கு உதவியா தேரைப் பின்னால் இருந்து தள்ளி வர்றாங்க சிலர். அதானே பார்த்தேன்.... எப்படி  நம்மால் இவ்ளோ சுலபமா இழுக்க வருதேன்னு!  மூணு சுத்துன்னு நினைக்கிறேன்.  எதோ  ட்ரான்ஸ்லே இருந்துருக்கேன். எத்தனை சுத்துன்னு கூட இப்போ நினைவுக்கு வரலை!

தேர் நிலைக்கு வந்ததும் பூஜைகளைப் பார்த்துட்டு, ஒன்பதரைக்குக் கிளம்பி அறைக்கு வந்தோம்.

இங்கே கோவில் காரியங்கள், பூஜைகளையெல்லாம் நடப்பது தன்னார்வலர்களால்தான்.  அநேகமாக எல்லோரும்  வெளியிடங்களில் பணி புரிபவர்கள் என்பதால் வாரநாட்களில்  காலை நேரப் பூஜைகள் ஆறு மணி முதல் எட்டு வரையிலும், மாலை நேரப் பூஜைகள்  இரவு  எட்டு மணிக்கு ஆரம்பிச்சு  பத்து வரையிலும் நடப்பதே வழக்கம்.


என்னாலே நம்பமுடியலை.....  எப்படி  ஒரு விவரமும் இல்லாமலேயே சரியான நாளில் அங்கிருந்துருக்கோமுன்னு.....

பெருமாளே.... எல்லாம் உன்  கிருபை!

தொடரும்.............:-)


16 comments:

said...

உண்மையிலேயே ராம ராஜ்யம் தான். முடிந்தால் போய்ப் பார்க்கிறேன் துளசி ம. மிக அழகும் சான்னித்யமும் நிறைவா இருக்கு.

said...

ஆஹா புகைப்படங்கள் அனைத்தும் எடுத்த விதம் அழகோ அழகு மிகவும் ரசித்தேன் மேடம்

said...

யாகவா முஇவருடன் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி கொடுத்து கலகல்ப்பாக்கிய சிவசங்கர் பாபா.....~~~!!!

said...

அழகிய புகைப்படங்கள். தகவல்களும் நன்று.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

இப்படியெல்லாம் இடங்கள் இருக்கா! குடும்பங்கள் அங்கயே தங்கியிருக்கா? வீடு வாடகைக்கு எடுத்தா? இல்ல விலைக்கு வாங்கியா? கான்செப்ட் புரியலையே டீச்சர். இல்ல.. old age home மாதிரியா?

படங்கள்ளாம் பாத்தா பளிச்சின்னு இருக்கு.

சிவசங்கரபாபாங்குறவரு முந்தி டிவில யாவாகா முனிவரோட சண்டை போட்டாரே. அவரா?

said...

Do you have the photos of Bhagavathy Seva?

said...

வாங்க வல்லி.

ரொம்ப அழகான, அமைதியான ஆஸ்ரமம். உங்களுக்கும் பிடிக்கும்!

said...

வாங்க கில்லர்ஜி.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.


அந்த பேட்டியை நான் பார்க்கலையேங்க :-( சுட்டிகள் ஏதும் உண்டா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றீஸ்.

said...

வாங்க ஜிரா.

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். அடுத்தமுறை பாபாவிடமே கேட்டால் ஆச்சு.

இங்கே 200 குடும்பங்கள் சொந்தமாக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருக்காங்க. பல வருசங்களுக்கு முன்னே இந்த இடத்தை மொத்தமாக வாங்கி அவரவருக்கு வேண்டியவகையில் கட்டிக்கிட்ட வீடுகள்தான்.

எல்லோரும் பாபாவின் பக்தர்கள் என்பதால் ஒற்றுமையோடு இருக்காங்க. ஆஸ்ரம வேலைகளைத் தாங்களே பங்கிட்டுச் செஞ்சுக்கறாங்க. ராமராஜ்யம், முதியோர் இல்லம் இல்லை!

சுத்தம் பளிச்சிடுவது எனக்குக்கூடுதல் கவர்ச்சி!

said...

வாங்க Strada Roseville.

அன்றைக்கு அங்கே லலிதா சகஸ்ரநாமம் சொல்லி விளக்குகள் வச்சு பூஜை செய்ததுதான். முந்தியெல்லாம் படி பூஜை போல செய்வாங்களாம். அதை முன்னின்று நடத்திய பக்தர், இறைவனடி சேர்ந்துட்டார்னு சொன்னாங்க.

நான் ரொம்பக்கிட்டப்போய் படங்கள் எடுக்கலை :-(

said...

இப்படியொரு இடமா ஆச்சரியமாக இருக்கு...இந்த ஆசிரம் ஸ்கூல் வழியாகப் போயிருக்கோம் கேளம்பாக்கம் டு வண்டலூர் ரோடு...இந்த ஆசிரமம் பக்கத்தில் ஒரு சின்ன மலை மலைக்கு மேல ஆஞ்சு...இருக்கார்...

படங்கள் அத்தனையும் அருமை அழகு...ரசித்தோம்..

said...

வாங்க துளசிதரன்.

அட! சின்ன மலைமேலே ஆஞ்சி இருக்காரா!!!! அடுத்தமுறை பார்த்துடலாம்! தகவலுக்கு நன்றி.

said...

Have you seen kerala bhagavathi sevai? We chant Devi Mahatmyam, do the avahanam of Ambal, Ganapathy in 2 lamps. The lamps will be placed on a yanthram (padmam - similar to kolam). We chant Lalitha Sahasra Namam, Astotharam and Trisathi.

said...

@Strada Roseville.

தகவலுக்கு நன்றி. கேரளாவில் பகவதி சேவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலை :-(

இங்கேயும் விளக்குகள் கோலம் எல்லாம் இருந்தன. வாழைக்குலைகள் வச்சும் பூஜை செய்வாங்களாம்.