Friday, October 23, 2015

அழகையும் அன்பையும் பாக்கி வைக்கும்படியாத்தான் இருக்கு ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 89)

அஞ்சு மணிக்கு எழுந்து அரக்கப்பரக்கக் குளிக்க ஓடினால்  பாத்ரூமில் தண்ணீர்  வரலை. அடுக்களையில் இருந்த குழாயில் தண்ணீர் பிடிச்சுக்கிட்டுப்போய்  ஒருவழியாக் குளிச்சோம்.  பெரிய கோவில்நோக்கிப் போகும்போது பசுக்கொட்டிலைக் கழுவிக்கிட்டு இருக்காங்க. பால் கறந்து பாட்டிலில் ரெடியா இருக்கு. மாடுகளும் பாப்பாக்களும் கூட குளிச்சுட்டாங்க. ஆறடிக்கலை இன்னும்!

யானையாருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டுக் கோவிலுக்குள் நுழைஞ்சோம். பெருமாள் ராத்திரி நாம் பார்த்த நிலையில் அப்படியே நிக்கறார். கும்பிடு போட்டுட்டு அவருக்கு நேரெதிரா இருந்த யாகசாலைக்குள் போறோம்.


கோவில் பூஜை, யாகம்  போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் பரபரன்னு வந்து சட்னு வேலைகளை ஆரம்பிச்சாங்க. யாகசாலையில் இருந்தே பெருமாளையும் ஒரு கண்ணால் பார்த்துக்கிட்டே இருந்தேன்.  அபிஷேகத்துக்கு ரெடி ஆகிட்டார்.

இங்கே ராமராஜ்யத்தில் தினமும் அதிகாலை ஹோமம் நடத்தறாங்க.  துர்கை, புள்ளையார், பூரணபிரம்மத்தின் முன் இருக்கும் யாகசாலை இப்படி  மூன்று  சந்நிதிகளிலும். சின்ன அளவில்தான். ஆனால் தினமும் உண்டு. பெரிய குண்டத்தில் சின்ன அளவில் செய்யும்போது பயன்படுத்திக்க  ஒரு  தனி அமைப்பும் உண்டு.  அதில் தீ வளர ஆரம்பிச்சது.
அப்ப சுசீலா உள்ளே வந்தாங்க. கையில் காஃபி.  நாங்க  ஒரு பக்கம் உட்காந்து  ஹோமத்தைக் கவனிச்சுக்கிட்டே காஃபியை முடிச்சோம். சரியா ஏழுமணிக்கு ஹோமம் முடிஞ்சது.  மண்டபத்தின் அடுத்த பக்கம் கோவில் கொடிமரமும், பெருமாளை நோக்கி இருக்கும் பெரிய திருவடியும்!



அந்தப்பக்க கேட்டில் பசு ஒன்னு வந்து நின்னது. கோபூஜை நடக்கப்போகுது.  இதுவும் தினசரி வழக்கம்தான். கோமாதா, நான் வந்துட்டேன்னு சொல்லிக் கூப்பிட்டாள். கோமாதா.....  எங்கள் குலமாதா.....
கோ பூஜையை முடிச்சு  உள்ளே திரும்பி வந்தால்  பெருமாளின் அலங்காரங்கள்  எல்லாம் பளிச்! அவருக்கும் ப்ரேக்ஃபாஸ்ட் நைவேத்யங்கள்   வந்து சேர்ந்ததும்,  அம்சி செய்து, மற்ற சந்நிதிகளுக்கும் கொண்டு போனாங்க. நாங்களும் தொடர்ந்து போனோம்.

நெற்றிக்கண் சிவனிடம் போய்ச்சேந்தோம்.  ரொம்பவே அழகா இருக்கார் சிவன்! முக்கிய சந்நிதிகளுக்குப்போய் திரும்பி வந்ததும் பிரசாத விநியோகம். பிஸிபேளாஹூளியன்னா! முதல் போணி நம்மவர்!

மாடிக்குப்போய்  அங்குள்ள முருகனையும் ஸேவித்தோம்.  ஜெயந்திமாலா மாமி  அவுங்க கடமையைச் செஞ்சு பளிச்ன்னு இடத்தை வச்சுருக்காங்க. அங்கிருந்து  பெருமாளைப் பார்ப்பது  மனசுக்கு ரொம்பவே திருப்தியா இருக்கு எனக்கு!



சுசீலா நம்மை ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ரெஸ்ட்டாரண்டுக்குக் கூட்டிப்போனாங்க.   எங்களுக்கு இட்லி  கிடைச்சது.  கோபாலுக்கு ஒரு தோசை. அங்கே ஆஸி சுசீலாவும்  வந்தாங்க.  சாப்பிட்டுக்கிட்டே கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.


அடுத்த நிகழ்ச்சி காயத்திரி மண்டபத்தில் யாகம். நம்ம துர்கை சந்நிதிக்கு எதிரில் இருக்கு இந்த  மண்டபம். போகும் வழியில் ஒரு தேவி.  இண்டு இடுக்கு கிடைச்சாலும் அங்கொரு அழகுச் சிலை!  கண்களுக்கு விருந்து, மனசுக்கு மகிழ்ச்சி!

துர்கை வழக்கம்போல் கம்பீரமா, கனிவோடு  புன்னகைக்கிறாள்! கும்பிடு போட்டுட்டு எதிரில் இருக்கும்  மண்டபத்துக்குள் போனோம். யாகத்துக்கான ஏற்பாடுகளுடன், காயத்ரி தேவிக்கும், சிவனுக்கும்  அபிஷேகம் முடிச்சு அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பெண்மணிகள்.

நாகாபரணம் பளிச்!
பத்தேகால் மணிக்கு யாகம் தொடங்கும் என்பதால் இன்னும் ஒன்னேகால் மணி நேரம் இருக்கேன்னு விருந்தினர் மாளிகைக்குப் போறோம்.
காலையில் அவசரமாக் கிளம்புனதுலே அங்கே இங்கேன்னு கிடந்த துணிமணிகளை எல்லாம் எடுத்து மடிச்சுப் பெட்டிகளில் அடுக்கிட்டு அறையை ஓரளவுக்கு  நீட்டாக்கினோம். பாத்ரூமில் விட்ட  டாய்லெட்ரிகளை எடுத்து அதுக்குண்டான பையில் வச்சாச்சு.  இன்றைக்கு இங்கிருந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகள்.

கோகுலத்தைக் கடக்கும்போது  மாடுபாப்பா எப்படி புல்லை மேயுதுன்னு  வேடிக்கை பார்க்கும் நாரைகள்!  ஆளுக்கு ஒரு மாடுபாப்பான்னு கணக்கு போல :-)
காயத்ரி மண்டபத்தில் எல்லாம் ரெடியா இருக்காங்க.  யாகம் ஆரம்பிச்சது. நாங்க உக்கார்ந்து கவனிக்க ஆரம்பிச்சோம். பொதுவா நம்ம வீடுகளில் எதாவது சுபகாரியங்கள் நடக்கும்போது கணபதி ஹோமம்  செய்யறோம் தானே. அப்புறம் எங்க ஊரில் ஆர்ய சமாஜ் சேர்ந்த நண்பர்களின் வீடுகளில் நடக்கும்  ஹோமங்களுக்குச் சிலமுறை போனதுண்டு. இதெல்லாம்  கொஞ்சம் சின்ன அளவில் நடக்கும்.

சண்டிகர் வாழ்க்கையில் நம்ம முருகன் கோவிலில் கொஞ்சம் பெரிய அளவில் ஹோமங்கள் செய்வாங்க. நானும் உக்கார்ந்து பார்த்துருக்கேன்.  அதைப் போலவேதான் இங்கேயும் விஸ்தரிச்சு  ஹோமம்  செஞ்சாங்க. பார்க்க ஒரு நல்ல அனுபவம். மனசுக்கும் மகிழ்ச்சி. ஒரு பெரிய தட்டில் பூக்கள் கொண்டுவந்து எல்லோரும் தந்தப்போது எனக்கு ஒரு வெள்ளைப்பூ !  உலக சமாதானத்துக்கு  வேண்டிக்கிட்டேன்.
தரையில் கட்டாயம்  உக்காரணுமுன்னு இல்லாம அவரவர் சௌகரியத்துக்கு நாற்காலி போட்டு உக்கார்ந்து  யாகத்தில் பங்கெடுத்தது மனசுக்குப் பிடிச்சுப்போச்சு. வயசான காலத்தில் எல்லோரும் எதாவது உடல்நலப் பிரச்சனை இருக்கத்தானே செய்யுது, இல்லையா? வலியோடு உக்காந்து சாமி கும்பிட்டால் மனம் கடவுளில் லயிக்குமா? எப்படா எழுந்து போகலாமுன்னு இருக்காது? எனக்கு அப்படித்தான்  இருக்கும்!

ஆஸ்ரமவாசிகள்  சிலர் பூக்களை அடுக்குவதும், சிலர் புத்தகத்தைக் கையில் வச்சுக்கிட்டு ஸ்லோகம், மந்திரங்களைக்  கூடவே சொல்வதும், பிரஸாதம்  சமைக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அவைகளைக் கொண்டு வந்து வைப்பதுமா ஒரு ஒழுங்கில் எல்லா வேலைகளும் நடந்துக்கிட்டு இருந்துச்சு.


கடைசியில் அனைவரும்  ஹோமகுண்டத்தை வலம் வந்து காயத்ரி தேவிக்குக் கையில் உள்ள மலர்களைச் சமர்ப்பித்து, தீபாராதனையைக் கண்ணில் ஒத்திக்கிட்டு நிமிரும்போது ஒன்னேமுக்கால் மணி நேரம் போயிருந்துச்சு!

எல்லோருமாக் கிளம்பி துர்கை கோவில் மண்டபத்துக்கு வந்தோம். பிரஸாத விநியோகம் இப்போ!  நாங்க ஒரு  துளி சக்கரைப்பொங்கல் மட்டும் எடுத்துக்கிட்டுக் கிளம்பினோம்.

ஏற்கெனவே செய்த ஏற்பாட்டின்படி சீனிவாசன் வண்டியைக் கொண்டுவந்துட்டார்.ரெண்டு நாளா அவருக்கும் கொஞ்சம் ரெஸ்ட். ஆனால் ஆன்காலில் இருக்கணுமுன்னு  சொல்லி இருந்தோம்.

சுசீலாவிடம்  சொல்லிட்டு  அறைக்குப்போய்  நம்ம பெட்டிகளை எடுத்துக்கிட்டு ராமராஜ்ய அலுவலகத்துப்போய்  பொறுப்பாளரிடம் நன்றி சொல்லிட்டு, பாபா வந்துட்டாருன்னா தகவல் சொல்லுங்க. நாங்க வந்து பார்க்கறோமுன்னு கேட்டுக்கிட்டேன்.

'சுசீலாவின் உபசரிப்பு பிரமாதம்!  நல்லா கவனிச்சுக்கிட்டாங்க'ன்னும் சொன்னேன்.  சுசீலாவிடமும் பாபா வந்ததும் தகவல் தெரிவிக்கச் சொல்லிட்டுக் கிளம்பும் சமயம்தான் என் ஹேண்ட்பேகை யாக மண்டபத்தில் விட்டுட்டு வந்தது நினைவுக்கு வருது :-(

நம்மவர் போய்ப் பார்த்துட்டு, கேட் மூடி இருக்குன்னு வந்து சொல்றார்.
பாவம் சுசீலா,  ஓடிப்போய் துர்கை கோவில் பொறுப்பாளரிடம் சாவி வாங்கி  கதவைத் திறந்து எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தாங்க. ஒவ்வொருவருக்கும் ஒரு  ட்யூட்டி. வேலை முடிஞ்சதும்  பொறுப்பாப் பூட்டிக்கிட்டுப் போயிடறாங்க. எல்லாம் ஒரு ஒழுங்கிலே போய்க்கிட்டு இருக்கு! ஏத்துக்கிட்ட  பணியை ஒரு கடமையாச் செய்யாமல்,  அதை ஆர்வத்துடன் விரும்பிச்செய்வதுபோல்தான் எனக்குத் தோணுது.  தன்னார்வலர்கள் என்ற  சொல் ரொம்பச்சரி!

எனக்கு என்ன ஆச்சரியமுன்னா....   இந்த மூணு நாட்களா நாம்  கலந்துக்கிட்ட பூஜைகளில் பகவதி சேவை, பௌர்ணமி பூஜை, கிருத்திகை, காயத்ரி ஹோமம் எல்லாம் மாசத்தில் ஒருமுறை நடக்கும் விசேஷமாம். இதைப் பற்றிய விவரம் ஒன்னுமே தெரியாமல் நாம் வந்துருக்கோம்.  எல்லா  விசேஷங்களும் என்னமோ சொல்லி வச்சாப்போல  அடுத்தடுத்த இந்த மூணு நாட்களிலுமே அமைஞ்சு போச்சு! இது ஒரு பாக்கியம். பெருமாள் காண்பிச்ச கருணைன்னு நினைச்சு நினைச்சு கண்ணுலே குபுக்! போன ஜென்மத்துலே எதோ கொஞ்சம் புண்ணியம் செஞ்சுருக்கோமோ என்னவோ!

ராமராஜ்யத்தில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்களை பாக்கி வச்சுட்டுத்தான் கிளம்பி இருக்கோம்.  மீதியை அடுத்த பயணத்தில் பார்த்துக்கணும். அதுக்குள்ளே புதுசு புதுசா இன்னும் வந்துரும்!  அழகுக்கும், அன்புக்கும் குறைவே இல்லாத இடம்!

இவ்வளவு சொல்றேனே தவிர பாபாவை சந்திக்கலைன்னு மனக்குறை இருக்கத்தான் செஞ்சது அப்போ :-(

இப்பக் கிளம்பி நேரா வேளச்சேரி மைத்துனர் வீட்டுக்குப் போறோம். இன்றைக்கு  நவம்பர் 9. மாமனார் இறந்த நாள். அதனால் அங்கே வீட்டில் வந்து  படையல் போட்டு பூஜை செய்யணுமுன்னு  அண்ணனை கேட்டுக்கிட்டார். வீட்டுக்கு மூத்தவர் இல்லையோ, நம்மவர்!

நாங்க போய்ச் சேரும்போது  சமையல் அநேகமா முடியும் சமயம். நாத்தனார் எல்லாம்  காலையிலே வந்துட்டாங்க. படையல்  போட்டதும் பூஜை செஞ்சுட்டு  அங்கேயே சாப்பிட்டுட்டுக் கொஞ்சநேரம் பேசிட்டு, கிளம்பி லோட்டஸ் வந்து சேரும்போது  மணி ரெண்டரை.

நாலு மணிக்கு இன்னொரு சுவாரஸியமான இடத்துக்குப் போகலாம். அதுவரை கொஞ்சம் ஓய்வு எடுத்துக்குங்க.

தொடரும்.......:-)

8 comments:

said...

படங்கள் ஒவ்வொன்றும் அழகு.

தொடர்கிறேன்.

said...

இந்த ஹோமங்கள், யாகங்கள், சிவன், பெருமாள் சன்னதிகள் யாவற்றிக்கும் உங்களுடனேயே கூட வருவது போல் ஒரு பிரமை ஏற்படுத்திவிட்டீர்கள்.
அருமை.
அது சரி.
பெருமாளுக்கு ஏன் ஜீன்ஸ் உடை போட்டு இருக்கிரார்கள் ? இல்லை, அங்கவஸ்திரமா!!

கோபால் சார் ஒரு இடத்திலே அமைதியா உட்கார்ந்து இருக்கிறார் பாருங்கள். !! எனக்கு ரொம்ப பிடித்து இருந்த போட்டோ.

பவ்யம் னா அப்படி ஒரு பவ்யம் !! நீங்களும் இருக்கிறீர்களே !! என்று
இந்தக்கிழவி என்னை இடிக்கிறாள். பக்கத்திலே காபி ஆறிப்போய்க்கொண்டெ இருக்கிறது. சீக்கிரம் குடிக்கமாட்டாரோ !!

அது இருக்கட்டும். அந்த அம்மா, சக்கரை பொங்கலை எடுத்து தொன்னை லே போடுவதற்கு இன்னும் எத்தனை நேரமாகும் ? நானும் அப்பலேந்து கையை நீட்டிட்டு காத்துகிட்டு இருக்கேன். சீக்கிரம் போடச்சொல்லுங்க.

சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com

said...

Me the 1sttttu, Teacher:)

//ஹோமத்தைக் கவனிச்சுக்கிட்டே காஃபியை முடிச்சோம்//

இது!
சம்பிரதாயமான ஆலயங்களில் இப்படீல்லாம் செய்ய முடியாது:) புனிதம்/ ஆச்சாரம்/ ஆகமம் என்கிற பேரில், வயதானவர்களைக் கூடத் தரையில் உட்கார்த்திக் கொடுமைப்படுத்துவார்கள்:(

ஆனா..
500 ரூ.. முருகன் கிட்டக்க
300 ரூ.. 10 அடித் தொலைவில்
100 ரூ.. 20 அடித் தொலைவில்
தர்ம தரிசனம்.. 30 அடித் தொலைவில், எக்கி எக்கி!:(
இதுக்கு மட்டும் ஆகம நியதி இருக்கா?:)) எதைக் கேளு, ஆகம மீறல், ஆட்சிக்கு ஆபத்துன்னு பயங் காட்டிக் காட்டியே..
--

டீச்சர்,
எனக்கு பெருசா தனி மனிதச் சாமியார்கள் மேலெல்லாம் நம்பிக்கை இல்லை, அவர்களில் சிலரே சிலர் நல்லவர்களாகவே இருப்பினும்!
ஆனா, ஒங்க காலை வருத்தி, அழுத்தி, ஒடைக்காம, கையப் புடிச்சிக் கடாசாம.. ஒங்களுக்கு மன நிறைவுத் தரிசனத்துக்கு வழி செஞ்சதுக்காக.. சிவசங்கர் பாபாவுக்கு வாழ்த்துக்கள்:)) | என் கொள்கையும் மீறி, ஒங்க பொருட்டு இதைச் சொல்றேன்!

said...

யாகத்துல புடைவை-ல்லாம் போட்டு எரிக்கலை போலயே? Very Good!
அழகா மலர்ந்த பூக்களைத் தீயில் போடும் போது கூட, பார்க்க என்னவோ போல் இருக்கும்:(

பெருமாள் அழகு!
பேசாம, அவரை இப்புடியே விட்டுறலாம், "ரொம்ப அலங்காரம்" இல்லாம!
"கலன் அணியாது" அங்கங்கள் அழகு மாறி-ன்னு ஆழ்வார் பாசுரம்; ஆனா கேப்பாளோ? சும்மா வாயில் பேசுறதோடு சரி:))

உங்க பெருமாள் படம், அழகோ அழகு!
மார்பில் அவளுக்காக ஒரு பதக்கம்
சங்கு சக்கரம், ரெட்டை மாலை, துளசி = போதாதோ?
அந்த ஒடம்புக் கருப்பு தெரியணும்! அப்ப தான் அழகே!:)))
---

சிவ பெருமான், லிங்க ரூபம் தான் என்றாலும், இங்கிட்டு ரொம்ப அழகா இருக்காரு.. குறிப்பா அந்தக் கண்ணு!

//பிஸிபேளாஹூளியன்னா//
பிசிபேளே தெரியும்; பிசி= சூடான, பேளே= பருப்பு; அதென்ன ஹூளி?

நாகாபரணம், அழகோ அழகு! நாகர்கள் வழிபாடு.. பண்டைத் தமிழ்! இன்னிக்கும் கர்நாடகா சுப்ரமண்யாவில் உண்டு, ஆனா சம்ஸ்கிருத மயம் ஆக்கப்பட்டு!

மாமனார் நினைவு நாளுக்கு, நீங்க ஒத்துழைச்சது.. மிகவும் நல்லது! பெருமைப் படுறேன்; Hats off to u teacher:)
--

ஆமா, அந்த முருகப் பய புள்ளைக்கு, எப்பமே மாடி தான் புடிக்குமாமா?:)
பதிவுலயே ரொம்பப் புடிச்ச வாக்கியம்= /தன்னார்வலர்கள் என்ற சொல் ரொம்பச் சரி/:)
இப்படிக்கு,
ஒரு தன்னார்வலன்:)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க சுப்பு ஐயா.

ஆஹா.... பெருமாளுக்கென்ன கொடுத்து வச்சவர் ஜீன்ஸ் பேண்ட் போட்டுண்டாலும் அழகாத்தான் இருப்பார். ஆனால் இது பட்டை ஜரிகை போட்ட வேஷ்டி! ரெண்டு பக்கக் கரையும் வெவ்வேற நிறம்! ஜமாய்க்கிறார்!

காலங்கார்த்தாலே சக்கரைப்பொங்கல் வேணாமாம். இன்றைக்கு சாம்பார் சாதம்!

said...

வாங்க கே ஆர் எஸ்.

திருச்செந்தூரில் முன்னால் கொண்டுபோய் உக்காரவச்சுட்டாங்க ஆகமவிதிப்படி! முருகனுக்கும் நமக்கும் இடையில் எட்டே அடி! ஆனால் சூப்பர் தரிசனம் என்பதையும் சொல்லணும்தானே:-)

எனக்கும் சாமியார்கள் என்றாலே அலர்ஜிதான். ஆனால் இவரோட சிலபல பண்புகளும் பேச்சுகளும் கொள்கைகளும் எப்படியோ பிடிச்சுப்போச்சு. லவ் ஆல், லவ் ஈஸ் ஆல்னு சொன்னார் பாருங்க.... அதுதான் இழுத்துருச்சு போல!

நல்லவேளை, இவர் சாமியார் யூனிஃபார்ம் போட்டு மிரட்டலை. நம்மோடு நாமாய் இருக்கார். முக்கியமா தன்னைச்சுத்தி வட்டம் போட்டு நிக்கும் நாட்டாமைகளை வச்சுக்கலை. எளிமையான குணம். எல்லோரையுமே சரிசமானமா நடத்துதல் இதெல்லாமும் என்னைக் கவர்ந்தவைகள்.

அதுசரி.... யாகம் என்றால் புடவையை ஆஹூதியில் போடாமலா? எனக்கும் இது பிடிக்காத விஷயம்தான். யாராவது ஏழைக்குத் தானம் செஞ்சால் கட்டிப்பாங்களேன்னு நினைப்பேன். அதான் இங்கே படம் கைவசம் இருந்தும் போடலை.

முருகப்பயல் எப்போதும் மலைஏறுபவன் இல்லையோ... அதான் இங்கே மாடி ஏறி உக்காந்து, கீழே இருக்கும் மாமனோடு பேசிக்கிட்டே இருக்கார் போல!

பிஸி பேளா ஹூளி அன்னா.... சூடா பருப்பு புளி சேர்ந்த சாதம் !

said...

மிக அழகான இடம் ....

பெருமாள், அம்மன் ,நாகாபரணம் .... எல்லாரும் பளிச்சுன்னு சூப்பரா இருக்காங்க...வசீகரமான அழகு