Monday, October 19, 2015

தாள் திறவாய்.... மணிக் கதவே....

சும்மா சொல்லக்கூடாது....எங்கூர் ஆட்களை எவ்ளோ பாராட்டினாலும் தகும். எந்த ஒரு விசேஷத்துக்கும் தகவல் சொன்னாப் போதும்.  அதுகூட தனித்தனியாப் போய்ப் பார்த்து சொல்லத் தேவையே இல்லை. வீட்டு வாசலில் ஒரு அறிவிப்பு போட்டு வச்சால் போதுமே.

நம்ம பேட்டை சர்ச்  வாசலில்....  17க்கு ப்ளான்ட்  ஸேல்னு  ஒரு பலகை சொல்லிக்கிட்டு இருக்கு. மெயின்ரோடுலே போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டுக்கிட்டே இருந்துச்சு.  எப்ப இதுமாதிரி ஸேல் போட்டாலும் நாம் ஆடி அசைஞ்சு பத்தரை பதினொரு மணிக்கு (சிலசமயம் பனிரெண்டு கூட ஆகிரும்) போய்ப் பார்த்தால்  ஹாலைக் கழுவிக் காய வச்சுருப்பாங்க. அப்படி என்னதான் செடிகளை வித்தாங்க என்பது அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.

இந்த முறை கட்டாயம் போகணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டு வச்சுக்கிட்டார் நம்ம கோபால். அதெப்படி?  இப்பதான் செடி வளர்ப்பதில் ஒரு ஆர்வம் வந்துருக்கே! தினமும் வேலையில் இருந்து வந்ததும் தோட்டத்துச் செடிகளுக்குத்  தண்ணி காட்டறதும் அவர்தான்னு சொன்னால் நீங்க நம்பணும், ஆமா!

இதுக்கிடையில் பக்கத்துப்பேட்டையில் ட்வைலைட் ஃபேர், அங்கத்து சர்ச்சில் நடக்கும். கட்டாயம் வாங்க. எதாவது ஒன்னு கிடைக்காமப் போகாதுன்ற அறிவிப்புடன், நம்ம தபால் பொட்டியில் நோட்டீஸ் ஒன்னு.

இங்கெல்லாம்  செகண்ட்ஹேண்ட் சாமான்களுக்கு நல்ல மதிப்பு இருக்கு.  பழைய துணிமணிகளும் போட்டுக்கக்கூடிய நல்ல நிலையில் இருந்தால் மக்கள் வாங்கத் தயங்கவே மாட்டாங்க. பலசமயங்களில் புத்தம்புதுசாக் கூட பழைய துணிகளின் கும்பலில் கிடைக்கும்.  வாங்கி வச்சு, போட மறந்தோ, அப்புறம் போட்டுக்கலாமுன்னு இருந்தோகூட கருக்கழியாமல் இப்படி  வந்துருது!  என்ன ஒன்னு....  நம்ம ஸ்டைலுக்கு ஒத்துவராது என்பதுதான்.  நானும் நம்ம ஜன்னுவுக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கினேன், குளிர்காலத்து உடைக்காக.  ஸ்கார்ஃப் மட்டும் நான் பின்னினேன் என்பதையும் சொல்லிக்கிறேன். பின்னே நிட்டிங் கூடக் கொஞ்சம் தெரியும்னு எப்படிச் சொல்லிக்கிறதாம்:-)

நம்மூர்லே பழைய துணிகளைச் சும்மாக் கொடுத்தால் கூட  உடுத்துனவங்க தரித்திரம் தனக்கு வந்துருமுன்னு சொல்லி யாரும் வாங்கிக்க மாட்டாங்க. அவுங்களைக் குறை சொல்லி என்ன  பயன்? கொடுக்கற துணி உடுத்தும் தரத்தில் இருக்கணுமுல்லெ? இப்ப வர்றதெல்லாம்  நாலுமுறை துவைச்சு உடுத்துனதும் சாயம்போய் பல்லைக் காட்டிருது இல்லே?

எனக்கு உள்ளூர ஒரு ஆசை இன்னும் இருக்கு. நிறையப்பேர், பட்டுப்புடவைகளை வாங்கி  ஒரு சிலமுறைகள்தான் உடுத்தறோம். அதுக்குள்ளே ஃபேஷன் மாறிப்போய் புதுசு புதுசா வந்துக்கிட்டே இருப்பதால்  பழசுக்குச் சான்ஸ் கிடைக்கறதில்லை. பழைய புடவையைத் தூக்கிப்போடவும் மனசு வராமல் பீரோவில் இடத்தை அடைச்சுக்கிட்டுச் சும்மா இருக்கு. இதைப் பார்த்துட்டுத்தான் ரங்க்ஸ்ங்க சொல்றாங்க  பீரோ நிறையப் புடவையா அடுக்கி வச்சுக்கிட்டு இன்னும் புதுசுபுதுசா வாங்கறோமுன்னு.... 

எத்தனையோ பேர்  பட்டுப்புடவை ஆசை இருந்தும் வாங்க வழி இல்லாமலும் இருக்காங்கதானே? இங்கே இருப்பதுபோல் (உடைகள் பேங்க் )  இனிமேல் உடுத்தச் சான்ஸ் இல்லை என்னும் வகையில் இருக்கும் நல்ல பட்டுப்புடவைகளை மக்கள்ஸ் தானமாக் கொடுத்தாங்கன்னா அதை சேகரிச்சு  ரொம்பக் குறைஞ்ச காசுக்கு விற்கலாமேன்னு.... அதில் கிடைக்கும் வருமானம் எதாவது தர்ம காரியங்களுக்கு அனுப்பிடலாம். வாங்கும் மக்களுக்கும், இது ஓசி இல்லை. நம்ம காசுலே வாங்குனதுன்னு  ஒரு நினைப்பு இருக்குமுல்லெ....  (ஆனால்  பழசுன்னா  தரித்திரம் என்ற எண்ணம் இருந்தால்....   கஷ்டம்தான்.......)  எல்லாம் நினைப்புதான்......

இது 16 ஆம்தேதி. வெள்ளிக்கிழமை. நம்மவரிடம் சொல்லிவச்சுச் சரியா  அஞ்சு அஞ்சுக்கு அங்கே போறோம். எதிரில் சிலர் வாங்கிய பொருட்களுடன் நடந்து போறாங்க. அதான் சொன்னேன்ல...  தகவல் தெரிஞ்சா வந்துருவாங்கன்னு....

வாசலில் செடிகள்  விற்பனை.  தக்காளிதான் அதிகம். வேணாம்.  நம்ம வீட்டுலே ஏற்கெனவே நட்டு, இப்பப் பூக்கள்கூட வந்தாச். ஹாலுக்குள்ளே போய்ப் பார்க்கலாமுன்னு போறோம்.  இந்தப் பக்கங்களில் எல்லா சர்ச்சுகளிலும் இதையொட்டியே ஒரு  ஹால் கட்டிவிடுவது உண்டு. சண்டே ஸ்கூல், மற்றும் சர்ச் சம்பந்தமுள்ள கூட்டங்கள் எல்லாம் நடத்திக்கத்தான்.  சர்ச்சில்  வெறும் வழிபாடுகளுக்காகக் கூடுவதுதான்.  இந்த  கூடங்களை தனியார் விழாக்களுக்காக வாடகைக்கும் எடுத்துக்கலாம்.  நம்முடைய ஓணம் திருவிழாகூட  ஒரு சர்ச் ஹாலில் தான் நடத்திக்கறோம்.  அது சமையலறை, மேடையுடன் கூடிய அரங்கம் சேர்ந்த பிரமாண்டமான ஹால்.  இதே பேட்டைதான்.  நம்மூர் புள்ளையார் கோவில்கள் போல முக்குக்கு முக்கு சர்ச்சுகள்தானாக்கும்,கேட்டோ!  பல சர்ச்சுகளும் எங்கூருக்கு வந்துபோன நிலநடுக்கத்தால்  இடிஞ்சு கிடக்கு என்பது உபரித்தகவல்.


ஒவ்வொன்னா பழுது பார்த்துக்கிட்டு வர்றாங்க. என்னதான் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள்  காப்புத்தொகை கொடுக்குதுன்னாலும், இப்ப ஏகத்துக்கும்  ஏறிப்போன விலைவாசிகளால் கூடுதல் நிதி  தேவை என்பதுதான் உண்மை. சர்ச்சுகள் நடத்தவும் நிதி தேவைப்படுதே!  அவ்வளவா மக்கள்  போறதுமில்லை. அதுக்காகவும் இப்படி எதாவது நடத்தி ஃபண்ட் ரெய்ஸ் பண்ணிக்கறதுதான்.

இப்பதான் குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் நடக்குது. வீடுகளில் ஸ்ப்ரிங் க்ளீனிங் நடக்கும் சமயம். இனி நமக்குத் தேவையில்லைன்னு நினைக்கும் பொருட்களை, வேறயாருக்காவது தேவைப்படுமேன்னு  இப்படிப்பட்ட இடங்களில் தானம் கொடுத்துடலாம்.  கொஞ்சநாள் கழிச்சு  அதே மாதிரி சாமான்கள் நமக்குத் தேவையா இருக்கும்போது  வேற இடத்தில் நடக்கும் ஃபேர்களில் போய் வாங்கி வர்றதுதான் :-)

குச் காம் கோ ஆயேகான்னு எடுத்து வைப்பதுதான் என் பழக்கம். நம்மவர் கத்திக்கிட்டே இருப்பார், வீட்டுலே குப்பையாச் சேர்த்து வச்சுருக்கேன்னு. அதுக்கும் பதில் ரெடியா வச்சுருக்கேன்.... 'நான் மண்டையைப் போட்டதும் தானமாக் கொடுத்துருங்க. இல்லைன்னா கராஜ் ஸேல் போட்டீங்கன்னா.... உங்களுக்கும் டைம் பாஸ்.'



ஹாலுக்குப் பக்கத்துலே போனி ரைட்! சின்னச்சின்னக் குதிரைகள்!  பார்க்கவே ஆசையா இருக்கு.

பக்கத்துலெ ரெண்டு ஆட்டுக்குட்டிகளைப் பார்வைக்கு வச்சுருக்காங்க.  குட்டிப்பசங்க! ஒரே துள்ளல்.  ஆட்டுக்கார  அலமேலுகள்  ரெண்டுபேர். பசங்களுக்குத் தாகமா இருக்குமுன்னு தண்ணீர், ஃபீடிங் பாட்டிலில் புகட்டுவது ஜோர். கிட்டப்போய்ப் பார்த்த எனக்கும், நீங்க குடிப்பாட்டறீங்களான்னு கேட்டு  ஒரு பாட்டில் கிடைச்சது. செல்லம் எவ்ளோ ஆசையாத் தண்ணீர் குடிச்சதுங்கறீங்க!


ஹாலுக்குள்ளே  பலரகச்சாமான்கள். துணிக்கடை கட் பீஸ்களில்  மூணு சாட்டின் ஸில்க்ஸ் கட்டிங் ஆப்ட்டது. எதாவது தைக்கலாமுன்னு வாங்கினேன். விலை குறிப்பிடலை. நாமே ஒரு மதிப்பு போட்டுக் கொடுக்கலாம்.  மேக் அன் ஆஃபர்!

நம்மவர் அடுத்த பகுதிக்குப் போய்  கார்டன் லைட்ஸ் வாங்கிக்கிட்டார் (என்னைக் கேக்காமலேயே!) புது செட். வாங்குன பெட்டியிலேயே  கிடக்கு. அஸெம்பிள் பண்ண முயற்சித்து விட்டுட்டாங்க போல!  'எனக்கு இது ஜூஜுபி'ன்னு நினைச்சிருக்கார் இவர்:-)

நான் ஒரு பாத்திரம் ஒரு டாலருக்கு வாங்கினேன். இதுவும் புதுசுதான்.  குட்டியா  மூடியுடன் இருக்கும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்.  அப்புறம் அம்பது சென்டுக்கு ஒரு நீல பாட்டில் வாஸ்.

எல்லாம் இது போதும்.நாளைக்கு  நம்ம சர்ச்சில் செடிகளுக்கு மறக்காமல்போகணும்.

இதையெல்லாம் முன்னால் நின்னு நடத்திக் கொடுப்பது அந்தந்த சர்ச் வாலண்டியர்கள்தான்.  இது இல்லாம நாலைஞ்சு மாசமா செடிகள் கட்டிங்ஸ் எடுத்து வீட்டில் வச்சு வளர்த்து அவைகளைத் தானமாக் கொண்டு வந்து கொடுத்துடுவாங்க.  சிலபல  கார்டன்  சென்ட்டர்களும்  கொஞ்சம் செடிகளைத் தானமாக் கொடுத்துருவாங்க.

வீகெண்ட், லேட்டாத்தான் எந்திரிப்பேன், ப்ரேக்ஃபாஸ்ட் சாப்புட்டபிறகுதான்  வெளியே கிளம்புவேன் இப்படி நொரநாட்டியமெல்லாம்  பண்ணிக்கிட்டு இருக்காமல், காலையில் ஒரு டீ குடிச்சுட்டுக் கிளம்பறோம்.  அதிகாலை 9 மணிக்கு செடிகள் ஸேல் ஆரம்பம்.  எட்டு அம்பதுக்குக் கிளம்பி மூணு நிமிசமாச்சுப் போய்ச்சேர.  பார்க்கிங்  கிடைச்சதேன்னு  சந்தோஷம்!  பார்த்தால்   சனம்வரிசையில் நிக்குது.  வாலில் போய் சேர்ந்துக்கிட்டோம்.  இப்பவும் கேமெரா கொண்டு போகலை. கோபாலின் செல்லை வாங்கிக்கிட்டேன். வளைஞ்சு போகும் வரிசை மூடி இருக்கும் கதவாண்டை முடியுது!  கையில் பையும், செடிகளைக் கொண்டுபோகக் கூடையுமா நிக்குது சனம்.



ஆங்...  சொல்லமறந்துட்டேனே....   நம்மவர் கையில் கேஷ் இல்லை(யாம்!) பதினைஞ்சுதான் இருக்கு. அதுக்கு மேலேயா வாங்கிடப் போறோமுன்னார். நானாச்சும் கைப்பை கொண்டு போயிருக்கலாம்.  வழக்கம்போல் வீட்டுலே விட்டுட்டுப் போனேன்.


இந்த சர்ச் இருப்பதால் ஆதிகாலத்தில் இருந்தே இந்த இடத்துக்கு சர்ச் கார்னர் என்ற பெயர்தான். கொஞ்சம் சரித்திரப்புகழ் வாய்ந்தது. ஊரின் மூத்தோர் பலர் இன்னும் இங்கே மீளா உறக்கத்தில். ரொம்பநாளைக்கு முன்னே வந்து கல்லறைகளைப் படம் எடுத்துக்கிட்டுப்போனேன். எழுத இன்னும் வேளை வரலை. தலைப்பு மட்டும் எழுதி வச்சுருக்கேன். "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்..."  நல்லா இருக்கா?


எங்க  மாட்சிமை தாங்கிய மஹாராணியின் மைந்தர் ப்ரின்ஸ் சார்லஸ்  நம்மூருக்கு முந்தி ஒருக்கா வந்தப்ப நட்ட மரக்கன்று ஒன்னு பிரமாண்டமா வளர்ந்து   நிக்கறதும்  இங்கே இதே சர்ச்சில்தான். (நல்லவேளை நிலநடுக்கத்தில் தப்பிச்சது! ஆனால் சர்ச்சின் சிலபகுதிகள் இடிஞ்சு கிடக்கு.  இப்பதான் ரிப்பேர் வேலைகள் தொடங்கப் போகுது.)

டான்னு  ஒன்பதுக்குக் கதவு திறந்து வரிசை  நகர்ந்து நாம் உள்ளே போகும்போதே  பாதிச்செடிகளை தேர்ந்தெடுத்துருச்சு சனம்.  ஹாலின் ஒரு மூலையில் காலி அட்டைப்பெட்டிகளை மலைபோலக் குவிச்சு வச்சுருக்காங்க செடிகளை அள்ளிக்கிட்டுப் போக!  ரொம்ப முன்யோசனை இல்லே!





ஒருதடவைச் சுத்திப் பார்த்துட்டு அப்புறம் செடிகளைத் தேர்ந்தெடுக்கலாமுன்னு நினைச்சதுலே மண்!  போறபோக்கிலேயே டக்டக்ன்னு  எடுத்து பெட்டிகளில் வச்சுக்கிட்டு இருக்கு சனம். கரைஞ்சு போன மலையில் இருந்து  நானும் போய் ஒரு பொட்டி எடுத்தாந்தேன்.
அதிகம் ஒன்னும் வாங்கலை.  முழு பூண்டுச் செடி. நாம் அதைப் பிரிச்சுத் தனித்தனியா நட்டுக்கணும். பான்ஸி என்னும் நாய் மூஞ்சு (நான் வச்ச பெயர்) செடி,  பிரியாணி இலைன்னு சொல்றோம் பாருங்க அந்த Bay leaves  செடி, ஒரு ஹோஸ்டா, Callas Lily Bulb 3,  அப்புறம் ஒரு மௌஸ் ப்ளான்ட்.  இதோட பூ பார்க்க எலி போல இருக்குமாம். பெயரே ரொம்பக் கவர்ச்சியாத் தெரிஞ்சது. நம்ம ரஜ்ஜுவுக்கும் மகிழ்ச்சியா இருக்குமேன்னு  எடுத்துப் பெட்டியில் வச்சேன்.



கல்லாவுலே செமக்கூட்டம். கோபால் வரிசையில் போய்க்கிட்டு இருக்கும்போது நான் இன்னும் எதாவது  கிடைக்குமான்னு பார்க்கப்போய் வந்தேன். .  இங்கே எல்லாமே கேஷ் பிஸினஸ். கார்ட் எடுக்கமாட்டாங்க. கோபாலின் முறை வந்தவுடன் போய் பக்கத்துலே நின்னேன். பதினைஞ்சுக்கு மேலே ஆச்சுன்னா சட்னு கம்மலைக் கழட்டிக் கொடுக்கலாமேன்னு.  ஆனால்....  பதினாலுதான் ஆச்சு.

வெளியே வரும்போது Church Vicar வாசலில் நின்னு  'சர்ச்சுக்கு சாமி கும்பிட வாங்க'ன்னு சொல்லி சர்வீஸ் நேரங்கள் அச்சடிச்ச நோட்டீஸ் கொடுத்தார். சரின்னு வாங்கிக்கிட்டேன்.

வீட்டுக்கு வந்தோம். எல்லாம் பேபி ப்ளாண்ட் என்பதால் மறுநாள்தான் செடிகளை பெரிய தொட்டிகளில் மாற்றி வச்சோம்.


(கீழே  ரெண்டு படங்களும் கூகுளாண்டவர் அருளியது.  படத்தின் ஓனருக்கு நன்றீஸ்  )

'எலிச்செடியை ஒழுங்காப் பார்த்து நட்டு வை'னு ஆர்டர் கொடுத்துட்டு மேற்பார்வை பார்த்தார் எங்க  ரஜ்ஜு ஸார்!


முப்பத்தியொன்னாம் தேதி  இங்கே புக் ஸேல்.  வந்து பார்க்கணும்.

7 comments:

said...

/பதினைஞ்சுக்கு மேலே ஆச்சுன்னா சட்னு கம்மலைக் கழட்டிக் கொடுக்கலாமேன்னு//

:))
முல்லைக்குத் தேர் குடுத்தான் பாரி!
'பிளாண்டு'க்குக் கம்மல் குடுத்தாள் துளசி!
நாளைய வரலாறு பேசட்டும் டீச்சர்:)))

பட்டுப் புடைவை யோசனை செம!
/உடுத்துனவங்க தரித்திரம் உனக்கு வந்துரும்/ ல்லாம் ச்சும்மா, இவனுங்களா கெளப்பி விட்டது:)

ஒரு யோசனை சொல்லட்டுமா?
கூச்சமே பார்க்க, துவைச்ச பட்டுப் புடைவையை, லேசா முருகன்/பெருமாள் பொம்மைகள் மேல சார்த்தி, பொது இடத்துல ஏலம் விட்டுருங்க! சாமிப் புடைவை-ன்னு பிச்சிக்கிட்டுப் போவும்:)))

என்ன முருகன், Cross Dressing பண்ண வேண்டியிருக்கும்:) நல்லதுக்குத் தானே? ஒன்னும் கொறைஞ்சிப் போயீற மாட்டான் அந்த லூசு:)

Hey Muru, I order u, Go & wear the saree what teacher gives u for a minute & put it in the ஏலம், okay?:)

said...

ஆஹா.... எத்தனை விஷயங்கள் அங்கே....

இங்கே இப்படியெல்லாம் நடந்தாலும் எல்லா நிகழ்வுகளுக்கும் செல்ல முடிவதில்லை. சென்ற வார இறுதியில் கூட CP Central Park-ல் மாலை நடன நிகழ்ச்சிகள் இருந்தன. மாலை 07.00 மணிக்கு ஆரம்பம் - நான் அலுவலகத்தை விட்டு புறப்படும் நேரம்! :(

உங்கள் மூலம் இப்படி பல நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.

said...

http://www.tamilcomedy.info/view/1214/yagava-muni-vivek-samiyar-comedy/

Vivek's spoof of Yagava Muni and his televised spat with Sivashankar Baba.

வீடியோ பாருங்கள்..
சிவசங்கர் பாபா .............!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

இங்கே பட்டுப்புடவை ஏலமா? ஊஹூம்.... யார் வாங்குவா? இந்தியாவில் ஒருவேளை... ஊஹூம்.... நடக்குமுன்னு தோணலை :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எங்களுக்கு 26 வாரம் வருசத்துக்கு விழாக்களுக்குன்னே நேர்ந்துவிட்டாச். வெயில் முடிஞ்சதும் கூடு அடைஞ்சுருவோமே!

நமக்கு வீக் எண்டுகளில் மட்டுமே என்பதால் போய்வர முடியுது. வர்ற சனிக்கிழமை எங்களுக்கு தீபாவளி!!!! ஊரே கூடப்போகுது!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

//வீடியோ பாருங்கள்..//

பார்த்தேன்!

இது சினிமாவிலா? எந்தப் படம்?

said...

/இங்கே பட்டுப்புடவை ஏலமா? ஊஹூம்.... யார் வாங்குவா? இந்தியாவில் ஒருவேளை... ஊஹூம்.... நடக்குமுன்னு தோணலை :-(/

haiyo.. டீச்சர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலு, மயிலை கற்பகாம்பாள் கோயிலு.. புடைவை ஏலம் அன்னிக்கு போய்ப் பாருங்க; கூட்டம் அம்முது:)))
அம்பாள்/ தாயாருக்குச் சாத்துன Used புடைவைக்கு ஒரு Rate! சும்மா மேலாக்கா சாத்தி எடுத்த புதுப் புடைவைக்கு ஒரு Rate!:))

புதுசுக்குத் தான் டபுள் விலை:)
என்னடா, அம்பாள் திருமேனியில் பல நாள் பட்ட புடைவைப் பிரசாதமாச்சே-னுல்லாம் பொண்ணுங்க பாக்குறதில்லை:) ஆகமொத்தம் அது used saree தான்:)

கோயில்களும், வேண்டுதல்கள்/ நேர்ச்சைக்கு வரும் புதுப் புடைவைகளை வச்சிக்க இடம் இல்லாம,
சும்மா மேலாக்கா சாத்தி எடுத்து, ஏலம் விட்டுடறாங்க:) Ubidsaamisaree dot com தான் இன்னும் துவங்கலை:))

எதுவுமே கேட்காத அம்மா வற்புறுத்திக் கேட்டாங்களே-ன்னு சென்ற முறை வாங்கிக் குடுத்தேன்!
அம்மா கேட்டது பழைய மக்கின புடைவை தான்:)
கற்பகாம்பாள் பச்சை + கபாலிச் சிவபெருமான் நீள வஸ்திரம்; பத்திரமா பூசை மாடத்து ஓலைப்பெட்டியில் வச்சிருக்காங்க:)