Wednesday, October 14, 2015

அண்ணனுக்குப் பரிவோடு உணவு பறிமாறும் அன்னபூரணி! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 86)

அஞ்சுக்கு அலார்ம் வச்சுருங்க.  எதுக்கு?  அஞ்சரைக்கு வச்சால் போதும்.  ஊஹூம்....  அப்புறம் லேட் ஆகிரும்.  அதெல்லாம் ஆகாது.....  நல்லா சுத்தி இருக்கே. நிம்மதியாத் தூங்கு. அஞ்சேகாலுக்கு எழுப்பறேன்னு ஒரு ஒப்பந்தம் ஆச்சு.

கடைசியில் நான் அஞ்சு இருவதுக்கு எழுந்து போய் குளிச்சுட்டு, வந்து இவரை எழுப்பினேன். இன்றைக்குக் கிருத்திகை.  பழனி கார்டன் முருகனுக்கு அபிஷேகம் முடிச்சு கோபால் சமர்ப்பித்தப் பட்டு சாத்தப்போறாங்க.

காலையில் ஆறுமணிக்கு வந்து கூட்டிப்போறேன்னு சொன்னாங்க சுசீலா.  அவுங்க வீடு பழனி கார்டன்ஸ் உள்ளேதான்.

எதுக்கு சிரமம்? இடம் தெரியுமே!  நாங்களே வந்துடறோமுன்னு சொல்லி இருந்தேன். விருந்தினர் மாளிகையில் அட்டகாசமான அடுக்களை இருக்கு.   ஃபுல்லி லோடட் கிச்சன். ஃப்ரிஜ்லே  பால், தயிர் எல்லாமே! சமைக்க விருப்பம் என்றால் சமைச்சுக்கலாம்.  காஃபி போட்டுக்கலாமான்னு   தோணுச்சு. முளையிலே கிள்ளி எறிந்தேன்.


முதலில் அபிஷேகம். மத்தது அப்புறம்!  பொடிநடையில் பழனி கார்டன் போய்ச் சேரும்போது மணி ஆறு பத்து. வாசலில் இருக்கும் புள்ளையாருக்குக் கும்பிடு.  குருக்கள் வந்து முருகன் கோவிலைத் திறந்ததும் உள்ளே போய்  உக்கார்ந்தோம்.


சுசீலா, கையில் ஃப்ளாஸ்க்கோடு ஆஜர். காஃபி.

நிர்மால்யம்! தரிசனம் முடிச்சுட்டு காஃபியைக் குடிச்சுக்கிட்டே  அபிஷேகம் அலங்காரம் எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கோம். புது அனுபவம்தான் ரெண்டுமே!


ஆரத்தி முடிஞ்சதும் கிளம்பி நேரா ராமராஜ்யத்துலே  இருக்கும் பூரணப்ரம்மம் கோவிலுக்குவந்தப்ப மணி ஏழேகால்.

இங்கேயும் அபிஷேகத்துக்குத் தயாரா இருக்காங்க. குட்டியூண்டு முருகனுக்கு டம்பளரில் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செஞ்சால், இங்கே அஞ்சே முக்காலடி சாமிக்கு அண்டாவில் தீர்த்தம்! சொம்புகளில் பால்!
பெருமாளின் மார்புப் பகுதியில் ஒரு ஒற்றை வஸ்த்திரம். மஹாலக்ஷ்மி குடி இருக்காள் என்பதுடன், பூரணப்ரம்மம் சிலை அர்த்தநாரியாகவும் இருக்கே! அதனால் வஸ்த்திரத்தோடுதான் அபிஷேகம் எப்போதும்!  பெண்மையை மதிப்பது போற்றுதும், போற்றுதும்!


அபிஷேகம் முடிச்சதும் துளசிமாலையுடன் ஸேவை சாதித்தார் எம்பெருமாள்! கற்பூர ஆரத்தி எடுத்தவுடன், அலங்காரம் ஆரம்பமாச்சு.  இன்றைக்கு சனிக்கிழமை என்பதால் விசேஷ அலங்காரம்.

அதுவரை கொஞ்சம் அக்கம்பக்கம் சுத்திப்பார்க்கலாமேன்னு சுசீலாவுடன் போனோம்.  அம்மாடி.... நெற்றிக்கண்ணோடு ஒரு சிவலிங்கம்!  ரொம்பவே பெரூசு! லிங்கத்துக்குப்பின்னால் ஒரு பனிமலை! நல்லா கவனிச்சுப் பார்த்தால்...... உச்சியில்  பார்வதி பரமேஸ்வர்!

நெற்றிக்கண்ணூடாகப் பார்த்தால் அட!  நம்ம தும்பிக்கை ஆழ்வார்!  வம்பு வேணாமுன்னோ என்னவோ  நெற்றியில் பட்டையும் நாமமுமா இருக்கார். பட்டை நாமம்!!!!


திரும்பி வந்து  பூரணப்ரம்மத்தின் எதிரே இருக்கும் யாகசாலை மண்டபத்துக்குள் போனோம்.  யாக குண்டத்தையொட்டியே  எம்பெருமாள் தன் தேவியருடன்.  இங்கே தினமும் காலை யாகம் நடக்குது!



சாதாரணநாட்களில்  சின்ன அளவில் நடத்தறாங்க.  அதுக்காக சின்னதா ஒரு அமைப்பு அந்த பெரிய குண்டத்தில்!  எல்லாம் பார்த்துப் பார்த்துக் கவனமா செஞ்சுருப்பதே நம்மை ஒரு சபாஷ் போட வைக்குதே!

இதே மண்டபத்தில் கோட்டி ஸ்வாமிகள் என்னும் சித்தர் சந்நிதி (இவர்  நம்ம சிவசங்கர் பாபாவின் குருக்களில் ஒருவர்!) ரதம் போன்ற  அமைப்பில்!
அங்கிருந்து  பூரணப்ரம்மத்தைத் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தால்....

பத்தாறு உடுத்தப் போறாங்க. மனசுக்கு ஹைய்யோன்னு இருந்தது உண்மை!  மாம்பழக்கலரும் நீலம், அழுத்தமான ரோஜா நிற பார்டர்களுமா அட்டகாசமா  இருக்கு!   வாங்கும்போது பிரிச்சே பார்க்கலை.


பூமாலைகளுடன் அலங்காரம் முடிஞ்சதும்  பெரிய நிலைக்கண்ணாடியில் ' நல்லா இருக்கான்னு பார்த்துக்கோப்பா'ன்னு காண்பிக்கிறார் பட்டர்!!


மணி இப்போ எட்டேமுக்கால்.  பக்தர்கள் வர ஆரம்பிச்சுருந்தாங்க. சனிக்கிழமைகளில் விசேஷமுன்னு சொன்னேன் பாருங்க......
மங்கல மணியோசையுடன்,  இரு பெண்மணிகள்  பதாகை ஏந்திவர்றாங்க.



அவுங்களுக்குப் பின்னே  தூபம் ஏந்தியபடி ஒருவர். அவருக்குப்பின்னே...  பல்லக்கில் பவனி வருவது  அன்னபூரணி!  வரிசையாக  தளிகைக்கான  உணவுகளைச் சுமந்த வரும் மகளிர் வரிசை! அண்ணனுக்கு அமுது படைக்க அன்னபூரணியே நேரில் வந்து விளம்புறாள்!

எம்பெருமாளுக்கு  (அம்சி பண்ணிட்டு) அமுது கண்டருளப் பண்ணுதல்!    பெண்கள் என்று தள்ளி வைக்காமல் சம உரிமை!  எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. ஊர்வலமாகப்போய் மற்ற சந்நிதிகளில் இருக்கும்  சாமிகளுக்குச் சாப்பாட்டைக் காண்பிச்சு முடிச்சு, மறுபடியும் மெயின் சந்நிதி (பூரணப்ரம்மம்) வந்து பூஜையை முடிச்சதும், நம்மைக் கூப்பிட்டு ரோஜா சரம் ஒன்றை நம்மவர் கழுத்தில் போட்டு, எனக்கொடு மல்லிகைச்சரத்தைக் கையில் கொடுத்து ஆசி வழங்கினார் பட்டர்.

இந்த ராமராஜ்யம், ஒரு Gகேட்டட் Cகம்யூனிட்டியாக இருந்தாலும், சனிக்கிழமைக் காலை பெருமாள் தளிகை நிகழ்வுக்கு அனைவரையும் வருக என்று அனுமதிக்கிறார்கள். அக்கம்பக்க கிராமத்து பக்தர்களுக்கும் கோவிலுக்கு வந்து செல்ல இது ஒரு வாய்ப்பு.  மேலும் விசேஷ தினங்களிலும் அனைத்து மக்களுக்கும் அனுமதி உண்டு! இதில் ஜாதி, மதம், பொருளாதாரம் என்ற எந்த ஒரு குழப்ப சமாச்சாரங்களும் குறுக்கிடுவதில்லை!

நம்ம சிவசங்கர் பாபா ஒரு சித்தயோகி. சித்தர்களுக்கு தெய்வங்களின் தரிசனம் கிடைக்கும் என்பதால் ஒருமுறை  அன்னபூரணி இவரிடம் 'உனக்கு என்ன வேணும் கேள்' என்றதும், தன்னலம் கருதாமல், 'ஆஸ்ரமத்துக்கு வரும் அனைவருக்கும் இல்லை எனாமல்   அன்னம் கிடைக்க வழி செய்யணுமு'ன்னு  கேட்டுக்கிட்டாராம்.

அதே போலத்தான் இன்றுவரை அதிதிகளுக்கு உபசரிப்பு நடந்துக்கிட்டே இருக்கு!


பூஜை முடிஞ்சதும் விருந்து!  பதினொரு ஐட்டங்கள்! வரிசையில் போய் உணவை வாங்கிக்கலாம். நாம் போறதுக்குள் நம்ம சுசீலா நமக்கு வாங்கி வந்து கொடுத்துட்டாங்க.  அதிதி உபசாரம்! நல்லா இருக்கணும்!


சாப்பிட்டு முடிச்சதும்,  மாடிக்குப்போனோம். சுற்றிவர மண்டபங்களுடன் கட்டிடமும், நடுவில் மெயின் கோவிலுமாக  இருக்கு.  மேலே இருந்து பார்க்கும்போது, பெருமாளுக்கு வைரக் கிரீடம் சார்த்தியது போல கோவில் விமானம்! கோவிலைச்சுற்றி ஒரு  பெரிய முற்றம்போல் திறந்தவெளி பிரகாரம். பிரகாரத்தையொட்டிய மண்டபத்துக்குப்போகும் வழியில்  இருக்கும் நீண்டு போகும் படிகளின் வரிசை, பக்தர்கள்  அமரும் வகையில்!  சுருக்கமாச் சொன்னால்  சின்ன அளவில்  ஆம்ஃபி தியேட்டர் வகை!


இங்கே வந்தவுடன், சட்னு கண்ணில் படுவது சுத்தம்தான். சென்னையில் சாலைகளில் பயணம்  செய்யும்போது  அங்கிங்கெனாதபடி நிறைந்து கிடைக்கும் குப்பைகளைப் பார்த்துச் சோர்ந்துபோயிருக்கும் கண்களுக்கு இந்த பளிச் ஒரு பெரிய விருந்துன்னு தனியாச் சொல்லணுமா என்ன?



மாடியிலும் கண்ணாடி அறையில் கடவுளர்களின் அழகான விக்கிரகங்கள்! இந்தச் சந்நிதியைப் பார்த்துக்கொள்ளும் திருமதி  ஜயந்தி மாலாவின் அர்ப்பணிப்பு அபாரம். பெரும்பாலான நாட்களில்  மாடிச்சந்நிதிக்கு யாருமே வர்றதில்லையாம். அதுக்காக? நித்யப்படி வழிபாடுகள் முடங்குமோ?  நெவர்!  இவுங்க இனிஷியல் வி என்பதால் வைஜயந்திமாலாவா ஆகிட்டாங்க:-)


அப்ப இன்னொரு சுசீலா வந்து சேர்ந்தாங்க. அஸ்ட்ராலியாவில் இருந்து வந்துருக்காங்க. பாபா ஊரில் இல்லை என்பது இவுங்களுக்கும் ஏமாற்றமே :-(
  அஸ்ட்ராலியன் சுசீலா, துளசி,  ராமராஜ்ய சுசீலா....

இவுங்க  பலவருசங்களா வந்து போறவங்க. நாம் ஊர் திரும்பறதுக்குள்ளே பாபா வந்துருவார் பாருங்கன்னாங்க. நம்பணும். நம்பிக்கைதான் சாமி!
கீழே பார்த்தப்ப, அன்னபூரணி மடைப்பள்ளிக்குப் பல்லக்கில் போக ரெடி ஆகிட்டாள். இவளோட மேற்பார்வையில்தான்  சமையல் வேலைகள் அத்தனையும்!


இவ்வளவு சமையல்  நடந்த சுவடே இல்லாமல் பளிச்னு  இருக்கு சமையல் கூடம்!  அண்டாக்களைக் கழுவிக் கமர்த்தியாச்!

தொடரும்........:-)



18 comments:

said...

நீலாங்கரை சிவ சங்கர் பாபாவின் இடமா. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை போய் இருக்கிறோம்

said...

இந்தக் கோவிலு எங்கன இருக்குது ?
சென்னையிலா?

எங்களுக்கு எதுனாச்சும் வேலை கிடைக்குமா அப்படின்னு
பார்க்கலாம் இல்லையா...

வேலை கிடைக்கிறதோ இல்லயோ வேளா வேளைக்கு வேலவனைத் தரிசிக்கலாம். வேண்டியதைச் சாப்பிடலாம்.

சுப்பு தாத்தா.

said...

நேர்ல கூட்டிட்டு போய் காமிச்சுட்டீங்க. நல்ல தரிசனம் . படங்கள் அருமை !!

said...

mam pl give me the websight or mail id for this place

said...

அனுபவங்கள் பலவிதம். நீங்க மனநிறைவோட போயிட்டு வந்தது பதிவுல தெரியுது. முருகன் அழகோ அழகு. பெருமாளுக்கு ஓராடையோடு அபிஷேகமும் அருமை.

said...

படங்களும் கட்டுரையும் மிக அருமை.

தில்லியில் நான் முன்பு இருந்த இடத்தின் அருகில் இருந்த இவரது பக்தர் ஒருவர் வீட்டிற்கு வருவார்.... அந்த பக்தர் கூட இப்போது சென்னையில் தான்...

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நீலாங்கரை ஆஸ்ரமம் சில சமூக விரோதிகளால் நெருப்புக்கு இரையாகிருச்சு. அதுக்குப்பின் இங்கே கேளம்பாக்கத்தில் உருவான இடம் இது. பழைய மஹாபலிபுரம் சாலையில் இருக்கு.

நீலாங்கரையில் இப்போ முதியோர் இல்லம் ஒன்னு இருப்பதாக தோழி சொன்னாங்க. நான் சரியா விசாரிக்கலை. அடுத்தமுறை போகும்போது கேட்கிறேன்.

said...

வாங்க சுப்பு ஐயா.

இந்த ஆஸ்ரமம், கேளம்பாக்கத்தில்! மெயின் ரோடில் இருந்து ஆஸ்ரமத்து ஒரு ரெண்டு கிமீ தூரம் இருக்கலாம்.

திருச்செந்தூர் முருகனும் இங்கே இருக்கான்!

said...

வாங்க சசி கலா.


கோவில்கள் கண்ணிலே ஒத்திக்கலாம் போல அருமையா இருக்குப்பா!

said...

வாங்க மீரா.

ராமராஜ்யான்னு கூகுளிச்சுப் பாருங்க!

said...

வாங்க ஜிரா.

பெருமாளை எவ்ளோ நேரமுன்னாலும் பார்க்கலாம். ஒரு ஜருகு, ஒரு தள்ளு முள்ளு, கையை இழுத்துக் கடாசுவது ஏதும் இல்லை. தீபாராதனைத் தட்டுலே காசு கூடப் போடவேணாம். சந்நிதியில் இருந்தே நம்ம பக்கம் நீட்டும் ஆரத்தியை நாம் இருந்த இடத்தில் இருந்தே மனதில் தொட்டுக் கும்பிடலாம்!

தினமும் காலை யாகம் உண்டு. அமைதியா உக்கார்ந்து பார்க்கலாம். கூட உக்கார்ந்தும் பூஜிக்கலாம். யாரும் யாரையும் ஒன்னும் சொல்றதில்லை!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உலகின் பலபாகங்களிலும் பக்தர்கள் இருக்காங்க. முழுதுமா நம்பி சரணாகதி செஞ்சவங்களுக்கு அப்படி ஒரு மனநிறைவு இருப்பதைக் கண்கூடாகப் பார்த்தேன்!

said...

படங்கள் அற்புதம். அடுத்த முறை பார்த்துவிட வேண்டியதுதான்.

said...

ரொம்ப மனசு நிறைவோடு எழுதி இருக்கீங்க-ன்னு தெரியுது டீச்சர்!
அப்படித் தானே?:)

அனுபவம் பலவிதம்!
அவரவர் தமதம அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்..

பொதுவா, மனித குருக்கள்/ சாமியார்கள் நடத்தும் கோயில்களுக்கு நான் செல்வதில்லை; அவர்களைப் பின் தொடர்வதும் இல்லை!
ஆனா, உங்களுக்கு நல்ல அனுபவமே ஏற்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி:)

பெருமாளின் ஒற்றையாடைத் திருமஞ்சனம் அழகு!
ஈரவாடைத் தீர்த்தம் கெடைச்சுதா டீச்சர்?:)

முருகனும் அழகு தான்!
ஒங்க கையில் இருக்கும் பால் டம்ப்ளர் 'சைசு'க்குத் தான் இருக்கான்! வளருடா, டேய்:))

அம்சி= அமுது செய்வி
ஏளப் பண்ணு= எழுந்தருளப் பண்ணு
Short forms of அக்ரஹாரத் தமிழ்:)

பூரணப் பிரம்மம்= நிறைதரு இறைவன்
--

சிவலிங்கம் தான் பேரழகு!
குறிப்பா அந்தக் கண்ணு!

உணவு ஏந்தி வரும் உமை அன்னை!
அண்ணன் - தங்கச்சிப் பாசம்:) பாசமலர் சிவாஜி-சாவித்திரி மாதிரி இருக்கு, பதிவு படிக்க:) என்னடா தலைப்பே வித்தியாசமா இருக்கே-ன்னு பார்த்தேன்:)

//பத்தாறு உடுத்தப் போறாங்க. மனசுக்கு ஹைய்யோன்னு இருந்தது உண்மை! மாம்பழக்கலரும் நீலம், அழுத்தமான ரோஜா நிற பார்டர்களுமா அட்டகாசமா இருக்கு! வாங்கும்போது பிரிச்சே பார்க்கலை//

ஓ நீங்க எடுத்துக் குடுத்ததா டீச்சர்?
ஒங்க முன்னாடியே சார்த்தினாங்களா?

What is the meaning of பத்தாறு?


said...

என்ன அழகு படங்கள்....அத்தனை இடமும் பளிச்....சுத்தம் கண்ணை நிறைக்குது..பளிச்சென்று...

அதுவும் இயற்கை அழகுடன்

அந்தத் தும்பிக்கை ஆழ்வார் படத்துல உங்களைப் பார்க்க முடியுதே.நிழலாய்...அப்படியே இறைவனின் அருளோடு கலந்து இருப்பது போல அழகா இருக்கு ...நீங்கதானே அது!! அந்த பளிங்குல உங்க நிழல் ஃபோட்டோல அப்படியே வந்துருச்சு போல ஆனாலும் அதுவும் அழகாத்தான் மீனின்ஃபுல்லா இருக்கு

said...

வாங்க மோகன்ஜி.

சந்தர்ப்பம் அமைஞ்சால் விட்டுடாதீங்க!

said...

வாங்க கே ஆர் எஸ்.


பத்து முழம் நீள வேஷ்டி, ஆறுமுழம் நீள அங்க வஸ்த்ரம் என்ற கணக்கு. பழைய காலத்துலே ரொம்பவே விசேஷமாம். மரியாதைப்பட்டவர்களுக்குத் தரும் கௌரவச்சின்னம்!

said...

வாங்க துளசிதரன்.

அட... நானும் இறைவனோடு கலந்துட்டேனா!!!! இல்லை இறைவன் கண்ணுக்குள்ளே வச்சுக் காப்பாத்தறாரா!!!!